16 February 2022

சீனாவின் லாந்தர் திருவிழா

 


 லாந்தர் விளக்கை சின்ன வயதில் மின்சாரம் இல்லாத வீடுகளில் வசித்தபோது  பார்த்திருக்கிறேன். அரிக்கேன் விளக்கு என்றும் சொல்வார்கள்(HURRICANE விளக்கு என்று பின்னாளில் புரிந்தது).  கொல்லைக்கு, தோட்டத்துக்கு, தொழுவத்துக்கு  இரவுநேரத்தில் போகும்போது கையில் எடுத்துப் போவார்கள்.  எவ்வளவு காற்றடித்தாலும் அணையாமல் எரியும். இரவுப் பயணத்தின்போது மாட்டுவண்டிக்கு அடியில் கட்டியிருப்பார்கள். வண்டியின் ஆட்டத்துக்கேற்ப அதுவும் ஆடிக்கொண்டே போகும். நமக்குத் தெரிந்த  லாந்தர் அதுதான். 

சீனாவில் பாரம்பரிய சிவப்பு லாந்தர் விளக்குகள் மிகவும் பிரசித்தம். இன்று கூகுள் இந்த சிவப்பு லாந்தர் விளக்கு படத்துடன் lantern festival என்று குறிப்பிட்டு சிறப்பித்துள்ளது. அதைப் பார்த்தவுடன் அட, நாமும் சிட்னியில் உள்ள சீனப் பூங்காவிலும், கான்பெராவின் மலர்க்காட்சியிலும் ஒளித்திருவிழாவிலும்  இதுபோல லாந்தர்களின் படங்களை எடுத்திருக்கிறோமே என்று நினைவுக்கு வந்தது. வெறுமனே படங்களைப் போடாமல் லாந்தர் திருவிழா பற்றியும் எழுதினால் என்ன என்று தோன்றவே அதைப்பற்றிய தகவல்களைத் திரட்டி பதிவாக்கிவிட்டேன்.  

நாம் திருக்கார்த்திகை தினத்தன்று கொண்டாடும் தீப விளக்குத் திருவிழா போல சீனர்களுக்கு லாந்தர் விளக்குத் திருவிழா. சீனாவில் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலும் வாழும் சீனர்கள் இந்த ஒளித்திருவிழா அன்று சீனாவின் பாரம்பரிய லாந்தர் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடுகின்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப, பழைய கவலைகள், பிரச்சனைகளை விடுத்து, புத்துணர்வுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் அடையாளமாக லாந்தர் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

சீனாவின் சூரிய சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் வருடத்தின் முதல் பௌர்ணமி அன்று இந்த ஒளித் திருவிழா கொண்டாடப்படுகிறது. சீனப் பாரம்பரியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்திருவிழா சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தும் ஒரு சங்கேதக் கொண்டாட்டமும் கூட. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறதாம்.


விதவிதமான லாந்தர்கள்
விதவிதமான லாந்தர்கள் (கான்பெரா மலர்க்காட்சி)

சீனக் கலாச்சாரத்தில் அதிர்ஷ்டத்தின் அடையாளமென கருதப்படும் சிவப்பு வண்ணத்தில்தான் முற்காலத்தில் லாந்தர்கள் ஏற்றப்பட்டு வந்தன. ஆனால் தற்போது விதவிதமான வடிவங்களில், வசீகரிக்கும் வண்ணங்களில், உலோகம், கண்ணாடி, காகிதம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டு கண்ணைப் பறிக்கும் அழகுடன் அலங்கரிக்கப்பட்ட லாந்தர் விளக்குகளை நாம் காணமுடியும்.    

சீனத்தோட்டத்தில் எடுத்த சில படங்கள் 

(சிட்னியில் உள்ள இத்தோட்டத்தைப் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்)







இந்த லாந்தர் திருவிழா கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இது கொண்டாடப்படும் தினமானது, புத்த மதத்தைப் பின்பற்றுவோர் மனதையும் உடலையும் சுத்திகரிக்கும் பொருட்டு, உபவாசம் இருந்து புத்தரின் எட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் புனித நோன்பு தினமாகும். அதனால் புத்த மதத்தோடு பெரிதும் தொடர்புடைய விழாவாக பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

பண்டைய சீனக் கலாச்சார நம்பிக்கையின்படி, சொர்க்கத்தின் கடவுள் வசம் பசி, பஞ்சம், வறட்சி, வெள்ளம், கொள்ளை நோய் போன்று பல டிராகன்கள் இருப்பதாகவும், கடவுளுக்குக் கோபம் வந்தால் அவற்றை மனிதர்களின் மேல் ஏவிவிடுவதாகவும் நம்பினர். அதனால் ஒவ்வொரு ஆண்டும் கடவுளைக் குளிர்வித்து, நல்ல பருவநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தைத் தர வேண்டி, லாந்தர் திருவிழா கொண்டாடப்பட்டது என்கிறது ஒரு தகவல்.  

சங்க கால இந்திர விழா போல... இன்றைய காதலர் தினக் கொண்டாட்டத்தைப் போல அந்தக் காலத்தில் இளைஞர்களும் இளம்பெண்களும் அழகழகான லாந்தர்களை ஏந்தியபடி  தங்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டறிந்து கவரும் நாளாகவும் இத்திருவிழா இருந்திருக்கிறது. இப்போதும் கூட இளம் தலைமுறையினரிடையே இது மிகுந்த உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மாளிகைகள், வீடுகள், வளாகங்கள், தெருக்கள், பூங்காக்கள் என அனைத்து இடங்களும் பிரகாசிக்கும் லாந்தர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. டிராகன் நடனம், சிங்க நடனம், படகு நடனம், விடுகதை விளையாட்டுகள், வாணவேடிக்கை என்று ஊரே களைகட்டுகிறது. லாந்தர்கள் கூடவே புதிர்கள் அடங்கிய தாள்களும் தொங்கவிடப்படுகின்றன. புதிரை விடுவிப்பவர்களுக்குத் தக்க சன்மானங்களும் வழங்கப்படுகின்றன. 

கான்பெரா மலர்க்காட்சியிலும் ஒளித்திருவிழாவிலும் எடுத்தவை













இந்தத் திருவிழாவில் முக்கிய உணவாக நம்முடைய மோதகக் கொழுக்கட்டை போன்றதொரு பாரம்பரியப் பலகாரம் இடம்பெறுகிறது. Tangyuan எனப்படும் இது, அரிசிமாவால் செய்யப்பட்ட மேல்மாவுக்குள் எள், கொழுப்பு, சர்க்கரை கலந்த பூரணம் வைத்து செய்யப்படுகிறது. நீராவியில் வேகவைப்பதற்கு பதிலாக கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கப்பட்டு, பிறகு குலாப் ஜாமூன் போல சர்க்கரைப்பாகுடன் பரிமாறப்படுகிறது. 

இந்த லாந்தர் திருவிழா, நம்முடைய தீபத்திருவிழா (விளக்கு), இந்திரவிழா (இளைஞர் கொண்டாட்டம்), போகி (பழையன கழிதல்), விநாயகர் சதுர்த்தி (கொழுக்கட்டை), தீபாவளி (வாணவேடிக்கை) என எத்தனை விழாக்களை நினைவுபடுத்துகிறது!