27 December 2015

சந்திரமதி (4)
நறுமணமிக்க மலர்களையும் வாசனைமிக்க சாந்துப் பூச்சுகளையும், அழகையும், ஒளிமிக்க மணிகளாலான ஆபரணங்களையும் சுமக்க முடியாமல் சுமந்து பூத்துக்குலுங்கும் மலர்க்கொடிபோல் அசைந்தும் துவண்டும் நிலத்தில் பாதங்களை ஊன்றுவதற்கே பயந்து பயந்து அவள் நடப்பதைப் பார்க்கும்போது, ஆண்யானையின் பின்னே நாணத்தோடு நடந்துசெல்லும் பெண்யானையைப் போலவும் மென்னடைபோடும் அன்னப்பேட்டைப் போலவும் இருக்கும்.. பாதங்களைத் தரையில் ஊன்றுவதற்கே அஞ்சி அடியெடுத்துவைப்பாளெனில் அவள் பாதங்களின் மென்மையும் தன்மையும் புரிகிறதல்லவா?

கடிகமழ் மலரும் கலவையும் அழகும்
கதிர்மணிப் பணிகளும் சுமந்து
கொடியென இசைந்து நிறைவுறப் பூத்த
கொம்பென அசைந்து அசைந்து ஒல்கி
அடியிணை படியிற் படப்பொறாது அஞ்சி
அன்புறு கடகரிப் பின்போம்
பிடியெனக் கன்னி நடைபயில் அன்னப்
பெடையென மடநடை பெயர்வாள்.
(பாடல் இடம்பெற்றத் திரைப்படம் - பூவும் பொட்டும்

பாடியவர் - பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்
பாடலாசிரியர் - கவிஞர் கண்ணதாசன்)

இதுவரை நாங்கள் வர்ணித்த இனிய தன்மையளுக்கு, அமிர்தத்தில் பிறந்தாற்போன்ற அருஞ்சிறப்பு கொண்ட பெண்ணவளுக்கு, இன்னுமொரு சிறப்பு இருக்கிறது. அது என்ன தெரியுமா? சந்திரமதி சிவபெருமானின் அருளால் பிறந்தவள் அல்லவா? அவளுடைய மணவாளன் இன்னார் என்பது இறைவனின் அருளால் மாத்திரமே தெரியவருமாம். எனவேதான் அவளை மணம் பேச வந்த மன்னர்களுக்கெல்லாம் அவளைக் கொடுக்காமல் உரிய மணாளனுக்காகக் காத்திருப்பதாகவும் தாங்கள் கேள்விப்பட்டதாக அம்முனிவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமா? இத்தனை அழகும் அம்சமும் பொருந்திய சந்திரமதி உன்னைச் சேர்வதற்கே உரியவள் என்றும் சொல்லி அரிச்சந்திரனுக்கு சந்திரமதியின் மீதான மோகத்தைத் தலைக்கேற்றுகின்றனர்.

அன்ன தன்மையளைஅமிர்தினில் பிறந்த
அணங்கு அபிடேகத்தைஅனந்த
மன்னர் தம் தமக்கு மணம்செயக் கருதி
மணம் மொழிந் தவர்க்கெலாம் கொடாது
முன்னம் எம் பெருமான் மொழிந்தவர்க் கன்றி
முடிக்கிலேன் கடிமணம் என்னச்
சொன்னதோர் மொழியும் கேட்டனம் அவள் நின்
தோள்களுக்கு இசைந்தவள் என்றார்.


(பாடல் இடம்பெற்றத் திரைப்படம் - பாவமன்னிப்பு
பாடியவர் - பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்
பாடலாசிரியர் - கவிஞர் கண்ணதாசன்)


காதல் பித்தம் தலைக்கேறிய அரிச்சந்திரன் தன்னிடம் சந்திரமதியை வர்ணித்த முனிவர்களையே தனக்காக தூது அனுப்பியதும், சுயம்வரத்தில் கலந்துகொண்டதும், சந்திரமதியின் கழுத்தில் முன்பே ஒரு மாங்கல்யம் இருக்க, மறுதிருமணத்துக்கு ஏன் இந்த ஏற்பாடு என்று கேட்டதும், அவள் சிவபெருமான் அருளால் பிறந்தவள் என்றும் பிறக்கும்போதே மங்கல அணியுடன்பிறந்தவள் என்றும் அது யார் கண்களுக்குத் தெரிகிறதோ அவரே அவளை மணக்கும் தகுதியுடைய மணாளன் என்றும் அவளுடைய தந்தை சொல்லக்கேட்டு மகிழ்ந்து அவளை மணமுடித்ததும் அடுத்தடுத்துத் தொடரும் கதைகள். உண்மைக்கு உதாரண புருஷனாய் வாழ்ந்து அவன் பட்ட அவதிகள் ஒருபக்கம் எனில் உத்தம புருஷனான அவனை மணமுடித்தக் காரணமாய் சந்திரமதியும் அவள் மகனும் பட்ட துயரங்கள் அளவிலாதவைஅறிவோமல்லவா?

(சந்திரமதி குறித்த வர்ணனைப் பாடல்கள் நிறைவுற்றன. ரசித்த அனைவருக்கும் அன்பான நன்றி.)


14 December 2015

தாங்குமா இத்தாயாடு?ஆசையாய் உனை வளர்த்த நல்லதம்பி
முட்டி அழுதுகொண்டிருக்கிறான்
மூன்றுநாளாய்த் தேம்பித்தேம்பி!
அண்ணன் எங்கே எங்கே என்று
அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்கிறான்
முட்டிப்பாலருந்துமுன் உன் குட்டித்தம்பி.

மண்சட்டியில் துண்டுகளாகி..
வெந்த குழம்பின் வாசத்திலும்
உப்புத்தூவிய கண்டங்களாகி..
வெய்யிலில் காயும் மீதத்திலும்
வீசும் உன் பிணவாடையை
தாங்குமா இத்தாயாடு?

கறியுணவாய்ப்போன கண்மணியின்
கரியுருவை முகர்ந்து முகர்ந்து
கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு
வல்லமை மின்னிதழின் இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் என்னுடைய கவிதை சிறந்த கவிதையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதறிந்து  மகிழ்ச்சி. அனைத்துக் கவிதைகளையும் அலசி ஆய்ந்து விமர்சனங்களோடு சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கிய மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் வாய்ப்பளித்த வல்லமை குழுவுக்கும் மிகவும் நன்றி. சிந்திக்கத்தூண்டும் படத்தை வழங்கிய புகைப்படக்கலைஞர் வெங்கட் சிவா அவர்களுக்கும் படத்தைத் தேர்ந்தெடுத்த தோழி சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

10 December 2015

அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்.எத்தனை முகங்களின் சாயங்களை
வெளுக்கச்செய்திருக்கிறது இப்பெருமழை..
எத்தனைத் தூய உள்ளங்களைத்
அடையாளங்காட்டியிருக்கிறது இந்த அடைமழை!

கர்ப்பக்கிரகத்திலும் கட்-அவுட்டிலும்
அரசியல்வாதிகளின் காலடிமண்ணிலும்
கடவுளர்களைத் தேடியவர் கண்களுக்கு
மனிதர்களைக் காட்டியிருக்கிறது இம்மாமழை..

பணமே பிரதானமென்று முன்தினம்வரை 
பரபரத்து ஓடிய மனங்களுக்குப்
பணத்தால் ஆவதொன்றுமில்லையென 
பாடம்புகட்டியிருக்கிறது இந்தத் தொடர்மழை..
நில்லென்று மழைநிறுத்தி சுள்ளென்று ஆதவன் ஒளிரட்டும்..
சொல்லொணா துயரிலிருந்து மெல்ல நம் வாழ்வு மலரட்டும்..
அழைக்கும் திக்கெல்லாம் ஓடிக்களைத்த கால்களும்
உதவிக்களைத்த கரங்களும் சற்றே ஓய்வு கொள்ளட்டும்…

நசிந்துகிடக்கும் நிகழ்வாழ்விலிருந்து எதிர்காலம் மீட்கச்செய்யும்
நம்பிக்கையும் ஆன்மபலமும் நம்மைவிட்டு நீங்காதிருக்கட்டும்…
இடர்ப்பாடு களைந்து இயல்புக்குத் திரும்பியபின்னும் நம்
அகத்திலெரியும் அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்.. 

இயற்கையின் மொழியை இப்போதாவது புரிந்துகொள்வோம்..
நீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம்..
இனிவரும் சந்ததியேனும் இதுபோல் உணவுக்காய்
இருகையேந்தாவண்ணம் இன்றேயொரு வகைசெய்வோம்.
ஆழி முகந்துவந்த அளவிலா நீரெல்லாம்
ஊழிப்பெருவெள்ளமென ஊரெல்லாம் சூழ
அல்லாடிக்கிடக்கும் நெஞ்சங்களை
அன்பால் தேற்றிடும் அனைவருக்கும் நன்றி

திக்கற்றுத் திகைத்துநிற்கும் மக்களை
பக்குவமாய் மீட்டெடுக்கும் தாயுள்ளங்களுக்கு நன்றி
சாணக்கிய அரசியல்வாதிகளை எதிர்பாராது
சனம் ஒன்றுகூடி நீட்டும் உதவிக்கரங்களுக்கு நன்றி..

மகத்தான உதவிகளை காலத்தே செய்யும்
மனிதம் இன்னும் துறக்கா மனங்களுக்கு நன்றி
சாதிமத இனவேறுபாடுகளை மறந்தும் துறந்தும்
சங்கமித்துதவும் சகோதர உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இயல்புவாழ்வு மீள நம்மிரு கரங்களையும் தந்துதவுவோம்
இயன்றவழியிலெல்லாம் இடர்ப்பாடு களைய முன்வருவோம்
அன்புவெள்ளத்தின்முன் ஆழிவெள்ளம் காணாமற்போகட்டும்
சின்னாபின்னமான வாழ்வனைத்தும் சீர்பெற்று மீண்டுவரட்டும்.


(படங்கள்: நன்றி இணையம்)

2 December 2015

தி.தமிழ் இளங்கோ ஐயாவின் எண்ணத்தில் என்றாவது ஒருநாள்...

என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பதிவர்களுள் ஒருவரும் என் பிறந்தகமான திருச்சியைச் சார்ந்தவருமான தமிழ் இளங்கோ ஐயா அவர்களைப் பற்றி அறியாதவர்கள் பதிவுலகில் இருக்கமுடியாது. தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், அரசு வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவர்தம் பதிவுகளில் இலக்கியமும் அனுபவ அறிவும், சமூகநலன் சார்ந்த பதிவுகளும் பிரதானமாய் இடம்பெறும். அவர் எனது எண்ணங்கள்’ என்னும் தன்னுடைய வலைப்பூவில், என்னுடைய மொழிபெயர்ப்பு நூலான ‘என்றாவது ஒருநாள்’ குறித்த விமர்சனத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின்போது என்னுடைய நூலை தமிழ் இளங்கோ ஐயா விலை கொடுத்து வாங்கிய செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். வாசித்து முடித்த கையோடு அதற்கான விமர்சனமும் எழுதிப் பதிவிட்டுள்ளமை என்னை இரட்டிப்பு மகிழ்வடையச் செய்துள்ளது. மொழிபெயர்ப்பின் வகைகள் குறித்தும் இந்நூலில் நான் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு குறித்தும் கருத்துரைத்துள்ள அவர், நூலிலுள்ள கதைகள் தொடர்பான தன்னுடைய கருத்துகளையும் பகிர்ந்துள்ளமை சிறப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததைப் போன்று தமிழிலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திடல் வேண்டுமென்ற வேண்டுகோளை தற்போதைக்கு மறுக்கும் நிலையில் இருப்பதற்காக மிகவும் வருந்துகிறேன். அவருடைய கருத்துரைக்கான என் பதில் இது...

என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பதிவரான தங்களிடமிருந்துஎன்றாவது ஒருநாள்நூலுக்கான விமர்சனம் கிடைத்திருப்பதை என்னுடைய பேறாகவே கருதுகிறேன். மிகுந்த மகிழ்வும் நன்றியும் ஐயா. இந்த நூலில் நான் மேற்கொண்டிருப்பது தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நேரடி மொழிபெயர்ப்புதான். அப்போதுதான் நுணுக்கமான விஷயங்களிலும் நான் வியந்து ரசித்த மூல ஆசிரியருடைய எழுத்து பற்றி தமிழ் வாசகர்களுக்கு அறியத்தரமுடியும் என்று நம்பினேன்.

கதைகள் குறித்த சிறு அறிமுகமும் வாசகரை வாசிக்கத் தூண்டும்வண்ணம் தாங்கள் இங்கு அவற்றைக் குறிப்பிட்டிருப்பதற்கு மிகவும் நன்றி. ஒற்றை சக்கரவண்டி கதையின் தலைப்போடு கவியரசரின் வரிகளையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. கதைகளையும் கதைகளின் பின்னணியையும் மிக அழகாக உள்வாங்கி எழுதப்பட்ட விமர்சனத்துக்கு மனமார்ந்த நன்றி.

ஆங்கிலத்தில் எனக்குப் போதுமான புலமை இல்லாதபோதும், நான் ரசித்தவற்றைத் தமிழில் தரவேண்டும் என்னும் முனைப்பே மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தூண்டியது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றும் அளவுக்கு ஆங்கிலப்புலமை இல்லையென்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். பின்னாளில் என்றேனும் நான் அந்த முயற்சியில் ஈடுபட முடியுமானால் அந்தப் பெருமை தங்களுக்கே உரித்தாகும். நன்றி ஐயா.
இறுதியில் நான் குறிப்பிட்டுள்ள வரிகள் 
என்றாவது ஒருநாள் மெய்ப்படலாம்.. 
அதற்கான விதை இங்குதான் விதைக்கப்பட்டது என்பதை 
அப்போதும் மகிழ்வுடன் நினைவுகூர்வேன்.
மிக்க நன்றி ஐயா. 

26 November 2015

பயமாய் இருக்குதடி சிங்கி...


தன் காதல்மனைவி சிங்கியை சில நாட்களாகக் காணாமல் தேடியலைந்த சிங்கன், அவளை சந்தித்தவுடன் முதலில் மகிழ்ந்து ஆனந்தக்கூத்தாடுகிறான். அவளை உள்ளங்கால் முதல் உச்சிவரை பார்த்து ரசிக்கிறான். உடனே அதிர்கிறான். பயப்படுகிறான். அவன் அதிர்ச்சிக்கும் பயத்துக்கும் காரணம்அவள் உடலில் புதிது புதிதாய் என்னென்னவோ கிடக்கிறதேஅவள் கால்களைப் பார்த்தால் அதிலே விரியன்பாம்பு, நாக்குப்பூச்சி, செத்துப்போன தவளை, குண்டலப்பூச்சி போன்று ஏதேதோ தெரிகிறது.. இடுப்பிலொரு சாரைப்பாம்பு சுற்றிக்கிடக்கிறது.. அவளுடைய புடைத்த மார்பில் ஏதோ கொப்புளங்கள் தெரிகின்றன. அவள் கழுத்திலோ பத்தெட்டுப் பாம்புகள் பின்னிக்கிடக்கின்றன.. பயம் வராதா பின்னே? சிங்கனின் கேள்விகளைக் கேட்டு சிரிக்கிறாள் சிங்கிபல ஊர்களுக்கும் சென்று குறிசொன்ன அவளுடைய திறமைக்குக் கிடைத்த பரிசுகள் இவை என்றும் ஒவ்வொன்றும் என்னவென்றும் சிங்கனுக்கு விளக்குகிறாள்.. நமக்கு விளக்கம் தேவைப்படாத அந்த எளியப் பாடலை இப்போது பார்ப்போமா?
இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி!
கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனனடா சிங்கா!

பார்க்கில் அதிசயந்தோணுது சொல்லப்
பயமாய் இருக்குதடி சிங்கி!
ஆர்க்கும் பயமில்லைத் தோணின காரியம்
அஞ்சாமற் சொல்லடா சிங்கா!

காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்துக் கிடப்பானேன் சிங்கி!
சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா!

சேலத்தார் இட்டசிலம்புக்கு மேலே
திருகு முறுகென்னடி சிங்கி!
கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை
கொடுத்த வரிசையடா சிங்கா!

நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல
நெளிந்த நெளிவென்னடி சிங்கி!
பாண்டிய னார்மகள் வேண்டும் குறிக்காகப்
பாடக மிட்டதடா சிங்கா!

மாண்ட தவளைஉள் காலிலே கட்டிய
மார்க்கமதேது பெண்ணே சிங்கி!
ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப்பெண்கள்
அணிமணிக் கெச்சமடா சிங்கா!

சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி
சுருண்டு கிடப்பானேன் சிங்கி!
கண்டிய தேசத்திற் பண்டுநான் பெற்ற
காலாழி பீலி அடா சிங்கா!

மெல்லிய பூந்தொடை வாழைக்குருத்தை
விரிந்து மடித்ததார் சிங்கி!
நெல்வேலியார்தந்த சல்லாச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா!

ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே
சாரைப் பாம்பேது பெண்ணே சிங்கி!
சீர்பெற்ற சோழன் குமாரத்தி யார்தந்த
செம்பொன் அரைஞாணடா சிங்கா!

மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில்
கொப்புளம் கொள்வானேன் சிங்கி!
பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த
பாரமுத் தாரமடா சிங்கா!

எட்டுப் பறவை குமுறும் கமுகிலே
பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி!
குட்டத்து நாட்டாரும் காயங் குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா!(சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குற்றாலக்குறவஞ்சியில் இடம்பெறும் இப்பாடல் வழியே அந்நாளையப் பெண்டிர் அணிகலன்களான சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம், காலாழி, பீலி, பொன்னரைஞாண், முத்தாரம், சவடி போன்றவற்றைப் பற்றி சிங்கனோடு நாமும் அறிந்துகொண்டோம் அல்லவா?)

(படம் உதவி: இணையம்)

19 November 2015

சந்திரமதி (3)பெண்களின் முகத்தைப் பொதுவாக தாமரை மலருக்கு ஒப்பிடுதல் இயல்புதிருமகள் உறையும் செவ்விதழ்கள் கொண்ட அழகிய தாமரையும், காக்கும் கடவுளான திருமாலின் உந்தியில் மலர்ந்ததும் படைப்புக்கடவுளான பிரம்மன் அமர்ந்திருப்பதுமான செந்தாமரையும்தான் தாமரை மலர்களுள் சிறப்பு வாய்ந்த மலர்களாம். அத்தகைய சிறப்புடைய மலர்களும் கூட மற்றொரு தாமரை மலரைப் பார்த்து நாணுகின்றனவாம். அப்படி நாணக்கூடிய அளவுக்கு அந்தத் தாமரையில் என்ன சிறப்பு இருக்கிறது? அந்தத் தாமரைக் கொடியில் தாமரையோடு முருக்கம்பூவும், ஆம்பலும், குவளைப்பூவும், குமிழம்பூவும் முல்லை அரும்பும் ஒன்றாக மலர்ந்து காணப்படுகிறதாம். வேறெந்த தாமரையிலும் இல்லாத சிறப்பல்லவா இது? அந்த அதிசயத்தாமரை எதுவென்றுதானே கேட்கிறீர்கள்? வேறொன்றுமில்லைஅது சந்திரமதியின் அழகிய முகம்தான். அவளுடைய இதழுக்கு முருக்கம்பூவும் இதழ் நறுமணத்துக்கு ஆம்பலும், கண்களுக்கு குவளையும், மூக்கிற்கு குமிழம்பூவும், பற்களுக்கு முல்லை அரும்புகளும் அவள் உடலுக்கு வள்ளைக்கொடியும் உவமைகளாகக் காட்டுகின்றார் புலவர்.. அவளுடைய முகம் பூத்த வியர்வைத் துளிகள் கூட தாமரையின் நறுந்தேன் போன்று மணம் கமழ்கிறதாம். என்னவொரு செறிவான கவிநயம்.. கற்பனை வளம்!

செருக்கும் மோகனச்செந் திருமகள் உறையும்
சேயிதழ்த் தாமரை மலரும்
பெருக்கும் மா மறைநூல் உரைத்த நான்முகத்தோன்
பிறந்த செங்கமலமும் வெள்க
முருக்கும் ஆம்பலும் மென்காவியும் குமிழும்
முல்லையும் வள்ளையும் மலர்ந்து
திருக்கிளர் கமலம் இதுவெனச் செவ்வி
திகழ் வெயர் செறி திரு முகத்தாள்.முனிவர்கள் சந்திரமதியின் கொங்கைகளை வர்ணிக்கும் அழகைக் கேட்டால் அவர்களென்ன முற்றும் துறந்த முனிவர்கள்தானா என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டுவிடும். அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறக்கிறதல்லவா? ஒரு கடினமான வேலையை செய்வதற்குமுன் அதைப் பற்றிய சிந்தனையே நம்முள் ஓடிக்கொண்டிருக்கும் அல்லவா? அப்படியொரு சிந்தனைதான் ஓடிக்கொண்டிருந்ததாம் படைப்புக்கடவுளான பிரம்மனுக்கும். எந்தக் கடின வேலையை முடித்தற்பொருட்டாம்?

சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாகி எரிந்துபோன மன்மதன் மீண்டுவந்தபோது அவனுக்குச் சூட்டுவதற்காக ஒரு கிரீடத்தைப் படைக்கப் போகிறார் பிரம்மன். அதற்காக தன் இருக்கையான தாமரை மலரை விட்டுச்சென்று நெடுநாள் தவமிருந்து தன்னிரு கைகளும் மனமும் வருந்தும்படியாக மன்மதனுக்கு கிரீடம் தயாரிக்கும் வேலையில் முனைகிறார். முதலில் யானையின் தந்தங்களையும் தொடர்ந்து கும்பத்தையும், சக்கரவாள மலையையும், வடக்கே உள்ள பொன்னாலான மலையையும் படைத்துத் தெளிந்தபின் படைத்ததாம் சந்திரமதியின் கொங்கைகள்அதாவது மன்மதனின் கிரீடத்துக்கு அவையே பொருத்தமாம்அந்த அளவுக்கு பூரணத்துவமும் வசீகரமும் நிறைந்தவையாம் அவைஅடேயப்பா.. என்னவொரு வர்ணனை!

இருப்பை விட்டு அயனார் நெடிதுநாள் தவம்செய்து
இரு கையும் சிந்தையும் வருந்திச்
செருப்பையின்று இறந்த மதனனைச் சூட்டத்
திருமுடி வேண்டுமென்று யானை
மருப்பையும் கும்பத் தலத்தையும் சக்ர
வாகத்தையும் வட கனகப்
பொருப்பையும் படைத்துத் தெளிந்தபின் படைத்த
புளகித பூரண முலையாள்.சந்திரமதியைப் பற்றி புலவர்கள் அரிச்சந்திரனிடம் வர்ணிக்கும் அழகினை இதுவரை ரசித்துவந்தோம் அல்லவா? சந்திரமதியின் மார்பழகை வர்ணித்தாயிற்று.. அப்படியே இடைக்கு வந்தால் அடடா இடையழகை என்னவென்று சொல்வது? சந்திரமதிக்கு இடையென்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தில் குழம்பிப்போயிருக்கிறார்கள் முனிவர்கள். அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் பாருங்களேன். இவ்வளவு அழகு நிறைந்த சந்திரமதிக்கு இடை இருந்துவிட்டால் அந்த அழகால் அறமும், தவமும் ஏன் இந்த உலகமுமே நெறிதவறிப் போய்விடுமோ என்ற பயத்தால் பிரம்மன் அவளுக்கு இடையைப் படைக்கவில்லையோ என்று எண்ணும்படியாக உள்ளதாம். ஒருவேளை அவளுடைய அழகான வேல் விழியைப் படைத்த மாத்திரத்திலேயே கைகள் சோர்ந்து இடையைப் படைக்காமல் விட்டுவிட்டானோ? அல்லது அவளது அழகில் தானே திகைத்துத் தடுமாறி மதிமயங்கி இடையைப் படைக்க மறந்துவிட்டானோ? வெளிப்பார்வைக்குத் தெரியாமல் மறைவாய் வைத்திருக்கிறானோ? அல்லது சந்தனக்குழம்பு பூசிய அவளது கொங்கைகளின் பாரம் தாங்காமல் இடையானது உருகிக்கரைந்துபோயிற்றோ? இடையென்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? அல்லது இனிமேல்தான் படைக்கவேண்டுமோ? என்றெல்லாம் அவளுடைய இடையைப் பற்றிய ஆராய்ச்சிக் கேள்விகளோடு மன்னன் மனத்தில் மையலை ஏற்றுகின்றனர் முனிவர்பெருமக்கள்.

அறம் திகழ் தவமும் அகிலமும் இதனால்
அழியுமென்று அயன்படைத் திலனோ
சிறந்தவேல் விழியை முன்படைத்து அயர்ந்து
செங்கரம் சோர்ந்ததோ திகைத்து
மறந்ததோ கரந்து வைத்ததோ களப
வனமுலைப் பொறை சுமந் துருகி
இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல்
எய்துமோ அறியொணாது இடையே.

இதைத்தான் நம் கவியரசர் தன் வரிகளில் சொல்கிறார். உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா என்று.
(தொடரும்)