தன் காதல்மனைவி சிங்கியை சில நாட்களாகக் காணாமல்
தேடியலைந்த சிங்கன், அவளை சந்தித்தவுடன் முதலில்
மகிழ்ந்து ஆனந்தக்கூத்தாடுகிறான். அவளை உள்ளங்கால் முதல்
உச்சிவரை பார்த்து ரசிக்கிறான். உடனே அதிர்கிறான். பயப்படுகிறான்.
அவன் அதிர்ச்சிக்கும் பயத்துக்கும் காரணம்… அவள் உடலில்
புதிது புதிதாய் என்னென்னவோ கிடக்கிறதே… அவள் கால்களைப் பார்த்தால்
அதிலே விரியன்பாம்பு, நாக்குப்பூச்சி, செத்துப்போன தவளை, குண்டலப்பூச்சி போன்று
ஏதேதோ தெரிகிறது.. இடுப்பிலொரு சாரைப்பாம்பு சுற்றிக்கிடக்கிறது.. அவளுடைய புடைத்த மார்பில்
ஏதோ கொப்புளங்கள் தெரிகின்றன. அவள் கழுத்திலோ பத்தெட்டுப்
பாம்புகள் பின்னிக்கிடக்கின்றன.. பயம் வராதா பின்னே?
சிங்கனின் கேள்விகளைக் கேட்டு சிரிக்கிறாள் சிங்கி…
பல ஊர்களுக்கும் சென்று குறிசொன்ன அவளுடைய
திறமைக்குக் கிடைத்த பரிசுகள் இவை
என்றும் ஒவ்வொன்றும் என்னவென்றும் சிங்கனுக்கு விளக்குகிறாள்.. நமக்கு விளக்கம் தேவைப்படாத
அந்த எளியப் பாடலை இப்போது
பார்ப்போமா?
இத்தனை
நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி!
கொத்தார்
குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப்
போனனடா சிங்கா!
பார்க்கில்
அதிசயந்தோணுது சொல்லப்
பயமாய்
இருக்குதடி சிங்கி!
ஆர்க்கும்
பயமில்லைத் தோணின காரியம்
அஞ்சாமற்
சொல்லடா சிங்கா!
காலுக்கு
மேலே பெரிய விரியன்
கடித்துக்
கிடப்பானேன் சிங்கி!
சேலத்து
நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு
கிடக்குதடா சிங்கா!
சேலத்தார்
இட்டசிலம்புக்கு மேலே
திருகு
முறுகென்னடி சிங்கி!
கோலத்து
நாட்டார் முறுக்கிட்ட தண்டை
கொடுத்த
வரிசையடா சிங்கா!
நீண்டு
குறுகியும் நாங்கூழுப் போல
நெளிந்த
நெளிவென்னடி சிங்கி!
பாண்டிய
னார்மகள் வேண்டும் குறிக்காகப்
பாடக மிட்டதடா சிங்கா!
மாண்ட தவளைஉள் காலிலே கட்டிய
மார்க்கமதேது
பெண்ணே சிங்கி!
ஆண்டவர்
குற்றாலர் சந்நிதிப்பெண்கள்
அணிமணிக்
கெச்சமடா சிங்கா!
சுண்டு
விரலிலே குண்டலப்பூச்சி
சுருண்டு
கிடப்பானேன் சிங்கி!
கண்டிய
தேசத்திற் பண்டுநான் பெற்ற
காலாழி
பீலி அடா சிங்கா!
மெல்லிய
பூந்தொடை வாழைக்குருத்தை
விரிந்து
மடித்ததார் சிங்கி!
நெல்வேலியார்தந்த
சல்லாச் சேலை
நெறிபிடித்
துடுத்தினேன் சிங்கா!
ஊருக்கு
மேக்கே உயர்ந்த அரசிலே
சாரைப்
பாம்பேது பெண்ணே சிங்கி!
சீர்பெற்ற
சோழன் குமாரத்தி யார்தந்த
செம்பொன்
அரைஞாணடா சிங்கா!
மார்பிற்கு
மேலே புடைத்த சிலந்தியில்
கொப்புளம்
கொள்வானேன் சிங்கி!
பாருக்குள்
ஏற்றமாம் காயலார் தந்த
பாரமுத்
தாரமடா சிங்கா!
எட்டுப்
பறவை குமுறும் கமுகிலே
பத்தெட்டுப்
பாம்பேதடி சிங்கி!
குட்டத்து
நாட்டாரும் காயங் குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா!
(சுமார்
இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் திரிகூடராசப்பக் கவிராயரால்
இயற்றப்பட்ட திருக்குற்றாலக்குறவஞ்சியில் இடம்பெறும் இப்பாடல் வழியே அந்நாளையப் பெண்டிர்
அணிகலன்களான சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம்,
காலாழி, பீலி, பொன்னரைஞாண், முத்தாரம்,
சவடி போன்றவற்றைப் பற்றி சிங்கனோடு நாமும்
அறிந்துகொண்டோம் அல்லவா?)
(படம் உதவி: இணையம்)
சிங்கனின் கேள்விகளும் சிங்கியின் பதில்களும் ஓரளவுக்குப் புரிவதாய் இருப்பதற்குத் தங்களின் முன்னுரையும் ஓர் காரணம். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார். எளிய வரிகளாலான பாடல் என்பதால் விளக்கம் தரவில்லை. முன்னுரை உதவியது என்றறிய மகிழ்ச்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி.
Deleteசிங்கா ... சிங்கி என்றதும், ஜெமினி கணேசன் + கே. ஆர். விஜயா நடித்துள்ள 1972ல் வெளிவந்த ’குறத்தி மகன்’ என்ற திரைப்படமும், எம்.ஜி.ஆர். + ’ஜெ’ நடித்துள்ள 1968ல் வெளிவந்த ‘ஒளி விளக்கு’ என்ற திரைப்படமும் தான் என் நினைவினில் நிழலாடின. :)
Deleteநீங்கள் நினைப்பது சரிதான் கோபு சார். இந்த உரையாடல் குறவர் இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவருக்கிடையில் நடைபெறுகிறது. திரையில் காட்டப்படுவது நரிக்குறவர் இனம். குற்றாலக்குறவஞ்சியில் குறிப்பிடப்படுவது மலைக்குறவர் இனம்.
Deleteவைகோ சார் சொன்னதைப் போல
ReplyDeleteதங்கள் முன்னுரையும் பின்னுரையும்
இல்லையெனில் புரிந்து இரசிப்பது சிரமமே
பகிர்வுக்கும் தொடாவும் நல்வாழ்த்துக்கள்
எளிய வரிகள் என்பதால் அனைவருக்கும் புரியும் என்று நினைத்தேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Deleteநாட்டுப்பாடல்போல் தோற்றமளிக்கும் வரிகளூடே அன்றைய அணிகலன்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறதுசிங்கன் கண்ணோட்டத்தில் பாம்புகளாகவும் பூச்சிகளாகவும் தெரிபவை அணிகலன்கள் தானே
ReplyDeleteஆமாம் ஐயா.. குறவனான சிங்கன் இந்த அணிகலன்களையெல்லாம் முன்னர் பார்த்திராத காரணத்தால் அவற்றுக்கு உவமையாக பாம்பு புழு என்றெல்லாம் குறிப்பிடுகிறான். குறத்தி குறி சொல்வதற்காக பல ஊர்களுக்கும் செல்பவள் என்பதால் அவளுக்கு நகைகளின் பெயர்கள் தெரிந்துள்ளன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteவணக்கம் சகோ..
ReplyDeleteமுன்னுரையில் விளக்கம் தந்து விட்டு பாடலை தந்தது நன்று புரிந்து கொள்வதற்க்கு சுலபமாக இருந்தது
ஒரு சந்தேகம் அந்தக்காலப் பாடல்களிலே.. காதலனை ஒருமையில் விளிக்கும் பண்பாடு இருந்ததா ? காரணம் இன்றைய திரைப்படங்களில், பாடல்களில் எடுத்துவுடனேயே நாயகி நாயகனை போடா, வாடா, பொட்டக்கண்ணா என்பது போலத்தான் அழைக்கின்றார்கள் ஆகவே கேட்டேன்..
தமிழ் மணம் 2
குறவஞ்சி என்பது குறத்தியினத்தைச் சார்ந்த பெண்ணையே குறிக்கிறது. குற்றால மலையில் வாழும் குறத்திப்பெண் அவள். அதனால் இவ்விலக்கியத்தின் பெயர் குற்றாலக்குறவஞ்சி. மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவியிடையே நடைபெறும் உரையாடல் பாடலில் இப்படிதான் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி.
Deleteபொட்டக்கண்ணா எல்லாம் இல்ல சகோ,
Deleteவானரங்கள் கனிகொடுத்து
ReplyDeleteமந்தியோடு கொஞ்சும்,
மந்திசிந்தும் கனிகளுக்கு
வான்கவிகள் கெஞ்சும்..
......
மலர்ப்பங்கய மங்கை
வசந்தசவுந்தரி
பந்து பயின்றாளே...
திரிகூடராசப்ப கவி எங்ச்ள் கவியே...
...
எத்தனையோ பாடல்கள் படித்திருந்தாலும் இன்னும் இன்னும் நெஞ்சுக்குள்..
நினைவு மீட்டமைக்கும், பதிவுக்கும் ..நன்றிகளும்
வாழ்த்துக்களும்...
குற்றாலக்குறவஞ்சி என்றதுமே பள்ளியில் பாடமாய்ப் படித்த மேலே உள்ள பாடல்கள்தாம் நினைவுக்கு வருகின்றன. எவ்வளவு ரசனையோடு படித்தோம். உண்மையே.. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Deleteகுறி சொல்லப்போன குறத்திக்கு கிடைத்த பரிசில்கள் கண்டு சிங்கன் கேட்கும் கேள்வியும் சிங்கி சொல்லும் பதில்களுமாய் பாடல்கள் அருமை அக்கா.
ReplyDelete250 வருடங்கள் முன் திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குற்றாலக்குறவஞ்சியில் வரும் இப்பாடல்கள் இணையத்தில் வேறெங்கும் கண்ட நினைவிலில்லை அக்கா.. உங்கள் தேடல்கள் இன்னும் தொடரட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஷா... தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்திலிருந்துதான் நானும் இப்பாடல்களைப் பெற்றேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. :)))
Deleteஆகா...! அருமை சகோதரி...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன்.
Deleteமறுமொழியில் நரிக்குறவர், மலைக்குறவர் வேறுபாடு அறிந்தேன். நன்றி.
ReplyDeleteநம்மைப் போல பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கலாம். தெளிவுபடுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்தமைக்காக மகிழ்கிறேன். நன்றி ஐயா.
Deleteசிங்கா சிங்கி/குற்றாலக் குறவஞ்சி என்றாலே திரிகூட ராசப்பரும், வானரங்கள் கனி கொடித்து மந்தியோடு கொஞ்சும்...மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் என்ற பள்ளியில் படித்த பாடலும்தான் உடனடியாக நினைவுக்கு வருகின்றது. மிகவும் ரசித்துப் படித்த பாடல் ஏனென்றால் சற்று எளிதாகப் புரியும் நடையில் எழுதப்பட்டப் பாடல்கள் என்பதால் என்று நினைக்கின்றோம். இந்தப் பாடல் கூட அப்படித்தான் வாசிக்கும் போதே அர்த்தம் புரிந்து விடுகின்றது.
ReplyDeleteதங்கள் முன்னுரையும் அருமை ...சகோ..
தங்களது பழைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிக்க வேண்டும் என்று நினைத்துள்ளோம்...
மிக்க நன்றி சகோ..
உண்மைதான். ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கியம் என்பதால் புரிதல் எளிதாக உள்ளது. சங்கப் பாடல்களைப் போன்று தெளிவுரை தேவைப்படவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
Deleteகல்லூரிக் காலத்தில் படித்த பாடல்... மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள் கீதா :)
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் சுந்தரா.
Deleteவணக்கம் சகோ !
ReplyDeleteஇனிமையான பாடலை எல்லோரும் இரசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி
சிங்கனும் சிங்கியும் சிக்கிய காதலின் சிறப்புக்கள் பாடலை அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தம +1
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகுந்த நன்றி சீராளன்.
Deleteதிருக்குற்றால குறவஞ்சி என்றாலே பள்ளியில் படித்த வானரங்கள் கனி கொடுத்து என்ற பாடல் தான் நினைவுக்கு வரும். அதைத் தவிர்த்து வேறு எந்தப் பாடலையும் இதுவரை நான் படித்ததில்லை. மலைக்குறவர்களுக்கிடையேயான பாடலையும் அப்போதைய நங்கையர் அணிந்த நகைகள் பற்றியும் தெரிவிக்கும் இப்பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. எளிதில் புரியும் படி இருந்தாலும் துவக்கத்தில் கொடுத்த முன்னுரை எளிதில் விளங்க வைக்கிறது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.. பாடல் எளிய வரிகளால் இருப்பதால் அனைவருக்கும் புரியும் என்று நினைத்தே பகிர்ந்தேன்.
Deleteவணக்கம் சகோ,
ReplyDeleteமுதலில் வாழ்த்துக்கள்.
கல்லூரிக் காலங்கள் நினைவில் வந்துப்போகின்றன. இன்றும் கல்லூரி தான் ஆனால் ,,,,,,,
அருமையாக இருக்கு சகோ உங்கள் நடை,
தொடருங்கள்.
ஊக்கம் தரும் தங்கள் கருத்துக்கு நன்றி மகேஸ்வரி.
Deleteதங்கள் நடையழகில் சொல்ல வந்து மறந்துப் போனேன்.
ReplyDeleteபம்படம் முதலிய அணிகலன் அணிந்த கதை ,,,,,,,, அருமைமா,
சேலை,, சல்லா மெல்லிய,,, எத்துனை அழகு மிகு வர்ணனை பாருங்கள்.
நன்றி.
வர்ணனையும் பொருத்தமான உவமைகளும் என்னவொரு அழகு.. உண்மைதான். ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி மகேஸ்வரி.
Deleteஅணிகலன்கள் அறிந்தோம். நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
Deleteஇது போன்ற இலக்கியங்களின் வாயிலாக நடைச்சுவை மட்டுமல்லாமல், அணிகலன்களின் பெயர்கள், பொருத்தமான உவமைகளின் வழியாக அவற்றின் தோற்றங்கள் பற்றிய செய்திகளை அறிய முடிவது கூடுதல் இன்பம்.
ReplyDeleteஒரு பழங்கால கோயில் சிலையை எடுத்துக் கொண்டால் இவ்வுவமையைப் பொருத்திப்பார்த்து, அந்த ஆபரணங்களின் பெயர்களை எளிதாக நம்மால் கூற இயலும்.
இது போன்ற இலக்கியங்களை இப்படிச் சுவைபடச் சொல்லும் தேவையும் அவசியமும் அதிகம் இருக்கிறது.
தொடருங்கள் சகோ.
நன்றி.
ஆமாம்.. கோவில் சிலைகளில் இந்த அணிகலன்கள் செதுக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம். அடுத்தமுறை இந்தியா வரும்போது நிச்சயம் கோவில்சிலைகளைக் கூர்ந்துகவனித்து அறியவேண்டும். வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜி சார்.
Delete