15 October 2019

குகனொடும் ஐவரானோம்


கடந்த வருடம் கம்பன் விழாவில் வாய் தந்தன கூறுதியோ என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை கேட்டு நடுவர் திரு. பிரசாந்தன் அவர்கள் அம்மேடையிலேயே “வருவாயா உன்தமிழை வருடந்தோறும் வந்தெமக்குத் தருவாயா” என வேண்டுகோள் விடுத்தார். நானும் மகிழ்வோடு ஆமோதித்தேன். இந்த வருடம் அழைப்பும் வந்தது. தலைப்பும் கொடுக்கப்பட்டது.

கவிதையுள் கிடக்கும் கவிதைகள் என்ற பெருந்தலைப்பில் ஒருவனைத் தந்திடுதி, ஏய வரங்கள் இரண்டு, மும்மைசால் உலகு, நாலு வேதமும், குகனொடு ஐவரானோம் எனத் தரப்பட்ட உப தலைப்புகள் ஐந்தினுள் குகனொடு ஐவரானோம் என் தெரிவு. 

கம்பராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் மத்தியில் அவ்வப்போது தொட்டு நா தடவி சப்புக்கொட்டும் எனக்கு இக்கவியரங்கம் மிகப்பெரிய சவால். மிகுந்த பிரயாசையோடு, வாசிக்கவேண்டிய கவிதையைத் தயார் செய்தேன். வாசிக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில் எதிர்பாராத உடல்நலக்குறைவு. நெஞ்சு சளியும் கடுமையான இருமலும் காய்ச்சலும் வாட்ட வேறுவழியில்லாமல் பங்கேற்கவியலாமற்போயிற்று. பெருத்த வருத்தத்தோடு கவிதையை மட்டும் (ஒருவேளை வேறு எவரைக் கொண்டேனும் அரங்கில் வாசிக்க வைக்கக்கூடும் என்றெண்ணி) அமைப்பாளர்களுக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் வாசிக்கப்படவில்லை. எழுதிய அதை ஏன் வீணாக்க வேண்டும், ஒரு பதிவாக்கிவிடலாம் என்ற எண்ணத்துடனும் ஆவணப்படுத்தவும் வேண்டி இங்கே பகிர்கிறேன்.


குகனொடும் ஐவரானோம்




ஆழிமூழ்கி மூச்சடக்கி முக்குளித்து
தாழிநிறைக் கொணர்ந்து தரைகுவித்த
பாழிமுத்துக்களாம் பைந்தமிழ்ப்பாக்களால்
கேழில் பெருங்காப்பியந்தனைப்
கேடின்றிப் படைத்த… 
ஏழில் முதல்வனை எழிலுடை ஐயனை
மையோ மரகதமோ மறிகடலோ
மழை முகிலோவென்று
மயக்கும் அழியா அழகுடையானை
ஏத்தித் துதித்த
பாழில் கவி கம்பநாடனை
பார் புகழும் கவிப்பெம்மானை
வாழியென்று வாழ்த்தி வணங்கி
சூழ்சான்றோர் தாள்பணிந்திவள்
அரங்கேற்றும் சிறு கவி இது.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று
ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று
இக்காசில் கொற்றத்து இராமன் கதைஅரோ என
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் பணிவாய்
ராமகாவியப் பாற்கடலை தன் நாவால்
நக்கப்புகுந்த பூனையென தன் பாவால்
தருக்கின்றி செருக்கின்றி செப்பிடும்போழ்
ஒற்றைத் துளியும் உயர்பாற்கடலாகும்
சிற்றெறும்பினும் சிறியாள் அகம்
கற்றவர் முன் கவி புனையப் புகும்
பெரும்பேராசையை என் சொலத் தகும்?
எண்ணிப்பார்க்கின் என்மனம் தன்னுள் நகும்.

எனினும் விட விரும்பா உள்ளம்
எந்நாளும் விடம் விரும்பாதுள்ளம்
அமிழ்ந்திடினும் பருகிடலாம்
அமிழ்தில் ஒரு துளியேனும் என்று
அவை முன் எழுந்தேன்
அடியேன் துணிவோடு இன்று.

கம்பன் எமக்களித்த காப்பியக் கருவூலத்தில்
கண்கள் பறிக்கின்றன கோடிக்கவி முத்துக்கள்
இதையோ அதையோ உதையோவென்று
அலையும் நெஞ்சை ஆசுவாசங்கொள்ளென்று
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்தென்று
எண்களால் சுட்டியது தானே கவிமன்று.
எட்டியெடுக்க எம் கையிலே கிட்டியது
ஆங்கு கொட்டிவைத்த ஐந்திலே ஒன்று. 

அஞ்சிலே ஒன்றைத் தோண்டவில்லை
புவி அகழ்ந்து புதையுண்டதைப் பெறவில்லை    
அஞ்சிலே ஒன்றைத் தாண்டவில்லை
கடல் கடந்து உடல் வருத்திப் பெறவில்லை
அஞ்சிலே ஒன்றைத் தீண்டவில்லை
அனல் புகுந்து தணல் வெந்து அடையவில்லை
அஞ்சிலே ஒன்றை வேண்டவில்லை
ஆகாயம் பாய்ந்து அரும்பாடுபட்டுப் பெறவில்லை
அஞ்சிலே ஒன்றை சீண்டவில்லை
காற்றைத் துரத்திக் கடிந்து கையிற் பெறவில்லை

எனினும்
அஞ்சிலே ஒன்றைப் பெற்றேன்
அஞ்சலிலே அதனைப் பெற்றேன் அதனால்
குகனோடும் ஐவரானோம் என்னும் குளிர்முத்து
என் குவிந்த கரங்களுக்குள் வசமாயிற்று இன்று.

அண்ணல் வாய்மொழி கூறும் கன்னல் கவிமொழியிது
அன்பை வழிமொழியும் அழகுக் கவிதை இது.
பத்தெழுத்தில் வடித்த பைந்தமிழ்ப் பாவரி இது.
உத்தம நற்குணங்காட்டும் உயரிய குறும்பா இது.

குகனொடும் ஐவரானோம் முன்பு
பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம்
எம்முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவரானோம்
புகலரும் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை என்று
புகழ்கிறான் அன்பின் உரு அண்ணல்.

சகலரும் தம் சகோதரம் என்று
பகிர்கிறான் பாசத்தின் பெரும் விள்ளல்.
இகமதில் இவனை சரணடைந்தோர்க்கு
இதந்தருகிறான் பரிவில் உயர் வள்ளல்.

உடன்பிறந்தவன் உயர் அறம்பிறழ்ந்து
பிறன்மனை கவர்ந்து பிழைத்தமை கண்டு
போதித்தும் வாதித்தும் உபதேசித்தும்
சாதிக்க ஏலாது சங்கடம் மிகக்கொண்டு 
அடங்கொண்டானை விட்டகன்று
அறங்கொண்டானை அண்டிநின்றபோழ்
உரங்கொண்ட உருவாய் நின்றவன்
திறங்கொண்ட திருவாய் மலர்ந்து
உனையும் ஏற்றேன் உடன்பிறந்தானென்ற கணமே
உந்தையென உரிமையும் தந்து உயர்கிறான் மனமே

அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று
ஓர் உதரம் தோன்றியோர்க்குள்ளும் உருவாகும்
உயிரிற் பிணக்கம் உறவிற் சுணக்கம்
குறையும் இணக்கம் உறையும் நுணக்கம்

ஒத்திசையும் நல் உள்ளங்களும்
ஒத்திசையா பல் இல்லுள்ளும்
அழுதாலும் தொழுதாலும்
அணையேனென்று ஆணையிடும்
விழுந்து மடிந்தாலும் நின்முகத்தில்
விழியேனென்று சூளுரைக்கும்

ஆத்ம நண்பனென நயக்கும் நெஞ்சும்
அண்ணன் தம்பியென ஏற்க அஞ்சும்
ஒத்த உணர்வால் ஒருமிக்கும் உள்ளம்
உறவென்கையில் ஓரடி பின்செல்லும்

சொத்திற் பங்கு குறையுமோவென்று
சொந்தங்கொள்ளத் தயங்கும் வையம்
மடியிலிடங்கொடுத்தால் பையத்
தலையேறிவிடுமோ என்னும் ஐயம்.

உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
உள்ளது ஒன்று ஈயான் ஆயின்
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்
அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?
எனும் ராமனின் வாய்மொழி வழியே
அன்பும் கருணையும் கைப்பொருள் ஈதலும்
பண்பும் அறமும் ஆண்மையுமென்றே
கம்பன் காட்டிய வாழ்வியல் வழியே
சத்திய தர்மத்துக்கு சான்றானவன்
சகோதரத்துவத்துக்கும் சாட்சியானான்.

மாற்றாந்தாய்களும் மெச்சும் தனயனானவன்
அவர்தம் மக்களுக்கு உயிரொக்கும் தமையனானவன்
இளவல் மூவரையும் இளவலெனாது
புதல்வரெனவே போற்றிப் பொலிந்தனன்
அருள்தரு கமலக் கண்ணன் வானின்
திரள்மேகமென கனிவைப் பொழிந்தனன்

போதும் போதுமெனும் மனமிலாது
காணும் உயிர்க்கெலாம் கருணை வார்த்தனன்
பாதம் பற்றிய கரங்களை பேதமிலாது
ஆரத்தழுவி அன்பைப் போர்த்தினன்.

கங்கைத்துறை விடும் தொன்மையான்
கற்காணும் திண்மையான்
குகனென்னும் நல்லானின்
குணம் மெச்சி மனம் கொண்டான்
நாவாய் வேட்டுவன் நாயடியேன் என்றோனை
யாதினும் இனிய நண்பென பிரேமை கொண்டான்.
நான் உளதனையும் நீ இனிதிரு என்றோனை
என் உயிரனையாய் நீயென்று தயை கொண்டான்
நொடியும் உம்மைப் பிரிகிலேன் ஐயனென
அடிபணிந்தானோடு ஐவரென உருக்கொண்டான்.

வாலியின் பின்னால் வந்துதித்தவன்
சுக்ரீவன் எனும் வானரத்தலைவன்
சரண் என புகுந்தான் திருவடி தஞ்சம்
அரண் எனக் காக்க
ஐயனவன் கொண்டான் நெஞ்சம்
அரண்ட வானரத்தின் விசனம் போக்கி
செற்றாரும் உற்றாரும் பொதுவென்றாக்கி
இன்னுயிர்த் துணைவன் நீ எனும் உறவாக்கி
ஆறாம் பிறப்பாய் ஆற்றினான் அன்பைத்தேக்கி.

ஆறோடு ஆறாத அன்புமனம் அது
ஆரோடும் அன்புறவாட ஏங்கும் குணம் அது.
பாசறையிலும் பாசங்காட்டும் நற்பண்பு அது
எதிரியானாலும் இரங்கியருளும் உயர்மாண்பு அது.

அறவினை இறையும் இல்லா
அறிவிலா அரக்கர் குல வீடணனோடு
எழில்நம்பியும் உடன்பிறந்தார்
எழுவரென்று ஏம்பலுற்றான்.

தாம் ஏற்றோம் தம்மவராய் ஏற்றோம்
தம்பிகள் ஏற்பரோ தந்தைக்கு ஏற்போவென்று
ஐயங்கொள்ளவில்லை ஐயன்
மாறாய் புதல்வரால் பொலிந்தான் நுந்தை
என கவிமொழியால் கவர்கிறான் நம் சிந்தை

பரமன் என்றாலும் பாதம் பற்றிய கரங்களைத்
தானும் பற்றிக் கொள்கிறான் பாசமாய்.
அரசன் என்றாலும் அடி பணிந்த தலைகளை
கரமேந்திக் கொள்கிறான் பிரியமாய்.

மனமொப்பி அணைத்துக்கொள்ளும் அவ்வாதுரம்
மனுதர்மம் மீறிய மானுடத்தின் பேரறம்.
சினந்தப்பியோரைச் சேர்த்தணைக்கும் சீர்குணம்
இனங்காக்கும் சீர்மை செப்பும் சிறப்பறம்

ஆள் ஐயா..
உனக்கு அமைந்தன
மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை..
இன்று போய் போர்க்கு நாளை வா என
அன்று அவன் நல்கிய நன்மொழியை
நன்றென உணர்ந்து இலங்கைவேந்தன்
ஒருவேளை
ஒருவேளை

தாள்பணிந்து தண்டனிட்டு சரணடைந்திருந்தால்
விழிதிறந்து வேற்றுமனையாளை விட்டிருந்தால்
பழியுணர்ந்து பாவத்தினின்று மீண்டிருந்தால்
பிழையுணர்ந்து பரிகாரம் கோரியிருந்தால்

நின்னோடு நாம் எண்மரானோமென்று
இன்னகையோடு இயம்பியிருப்பான்
தன்னிகரில்லா தமையனென்று
பொன்வரிகளைப் பொறித்திருப்பானோ
கவிப்பெருமானும் பெருங்கருணை கொண்டு.

&&&&&&


14 comments:

  1. அருமையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் தோழி.

      Delete
  2. மிக நன்றாக இருக்கிறது கீதமஞ்சரி.
    வாழ்த்துக்கள்.

    கடைசி வரிகள் பொன்வரிகள்தான்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  3. பல முறை வாசிக்க செய்யும் இனிய வரிகள் ...

    ஒவ்வொன்றும் முத்துக்கள் ...

    இதை வாசிக்கவே சில பல மணித்துளிகள் ஆகிறது எனக்கு ..

    இதை படைத்த உங்களை நினைக்கும் போது வியப்பே ...

    மிக அருமை வாழ்த்துக்கள் ...மேலும் பல கவிகள் படைக்க

    ReplyDelete
    Replies
    1. ஒன்பது நிமிடங்களுக்கான கவிதை என்பதால் சற்று நீளமாக உள்ளது. எனினும் வாசித்துக் கருத்திட்ட உங்களுக்கு அன்பும் நன்றியும் அனு.

      Delete
  4. வாழ்த்துக்கள் கீதா.
    மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீங்க. இங்கே பதிவு செய்யதமை மிக நல்லது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். வலையில் இருந்தால் பின்னாளில் நினைவுகூர எளிதாயிருக்கும். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா.

      Delete
  5. மிக அற்புதம்.

    நிகழ்வில் கலந்து கொள்ள இயலாமல் போனது வருத்தம் அளிக்கிறது. எழுதியவர்களே வாசிப்பதுதான் சிறப்பாக இருக்கும் என அமைப்பாளர்கள் கருதியிருக்கக் கூடும். அடுத்த வருட விழாவில் வாய்ப்பு நன்றாக அமைந்திடட்டும்.

    படைப்பை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. \\எழுதியவர்களே வாசிப்பதுதான் சிறப்பாக இருக்கும் என அமைப்பாளர்கள் கருதியிருக்கக் கூடும்.\\ மிகச்சரி ராமலக்ஷ்மி. எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கவேண்டும். எந்தெந்த இடங்களில் ஏற்ற இறக்கங்கள் வரவேண்டும் என்பதையெல்லாம் உணர்ந்து எழுதியவரே வாசித்தால்தான் சோபிக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. பிரமாதம் ; சொல்லாட்சிகளும் கற்பனையும் பாராட்டுக்கு உரியவை . விழாவிற் கலந்து வாசிக்க வாய்ப்பு கிட்டியிருந்தால் யாவரும் வியந்து போற்றியிருப்பர் . கம்பருடைய கவிதை யடிகள் அங்கங்கு மிளிர்கின்றன .

    ReplyDelete
    Replies
    1. தங்களிடமிருந்து கிடைத்துள்ள இப்பாராட்டு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது அரங்கில் வாசித்திருந்தால் என்ன உணர்வு பெற்றிருப்பேனோ அதே உணர்வை தற்போது பெறுகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  7. அற்புதம் வாழ்துகள். இனிவரும் விழாக்களில் சிறப்புறட்டும் கவிதைகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மாதேவி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.