26 April 2017

பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ - 2

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்


21. மஞ்சள் லில்லி மலர் (daylily - Hemerocallis)


22. crape myrtle flowers

23. தேவதையின் ஊதுகொம்பாம் (Angel's trumpet - Brugmansia)


24. மஞ்சள் செம்பருத்தி  (yellow hibiscus)


25. Hemerocallis red velvet daylily

26. இலவம்பூ வகையுள் ஒன்று  (silk floss flower - Ceiba speciosa)

27. சிலந்திப்பூ (spider flower - grevillea)

28. துலிப் மலர்கள் (Tulips)


29. பெயர் அறியாப்பூ


30. பெகோனியா (begonia)


31. (Brillantaisia)

32.  (star cluster)


33. நித்திய கல்யாணிப்பூக்கள் (rosy periwinkle)


34. pink abutilon


35. வெட்சியில் ஒரு வகை (ixora)


36. ரோஜாக்கள்  (roses)


37. கொலம்பைன் மலர்கள் (columbine flowers)


38. ஆந்திரியம் பூக்கள் (Purple Arc Anthurium)


39. சிலந்திப்பூ -  (white grevillea)


40. அடுக்கு செம்பருத்தி (layered hibiscus)

பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ - 1


14 April 2017

வருகிறாள் சித்திரைப் பெண்ணாள்

அனைவருக்கும் 
இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்து

ATBC வானொலியில் இன்றைய சங்கீத ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் சித்திரைப் பெண்ணாள் என்ற தலைப்பில் நான் எழுதி வாசித்த கவிதை..





உச்சியிலே உக்கிரத்தீயெரிய
அங்கமெல்லாம் அனல்பரவ..
பார்வையிலே பெருஞ்சுவாலையோடு
அக்னியை துணைக்கொண்டு
ஆங்காரமாய் வருகின்றாள்
ஆண்டுதோறும் சித்திரைப்பெண்ணாள்..

கழனிகள் வெடித்துக்கிடக்க....
ஆறுகுளம் வறண்டுகிடக்க.…
காடெல்லாம் கருகிப்போக
பொட்டலும் பொசுங்கிப்போக..
போடுபோடென்று வருகிறாள்
புயலென சித்திரைப்பெண்ணாள்..

பச்சை இலைகள் பழுத்துதிர..
பச்சிளம்சிசுக்கள் அழுதரற்ற
பாயோடு நோயாளி பரிதவிக்க
பாலகரெல்லாம் பயந்தொளிய..
பாய்ந்துபுறப்பட்டு வருகிறாள்
பொல்லாத சித்திரைப்பெண்ணாள்

வெக்கையால் மேனி வியர்த்தொழுக
கக்கங்கள் அரித்து வெந்து சிவக்க..
சக்கையென உடல் சக்தியிழந்துபோக
சாமான்யர் வாழ்வு சரிந்து துவள
சாகசங்கள் காட்ட வருகிறாள்..
செருக்குமிகு சித்திரப்பெண்ணாள்..

உச்சிவெயில் மண்டைக்குள் ஊடுருவ
உன்மத்தம் கொண்டு உயிர்கள் உலாவ..
தார்ச்சாலைகள் உருகிப் பிசுபிசுக்க
தரைதொடும் பாதங்கள் பொசுங்கிட
வேகமாய்ப் புறப்பட்டு வருகிறாள்
வீறுகொண்ட சித்திரைப்பெண்ணாள்

வருகிறாள் சித்திரைப்பெண்ணாள்..
வருடந்தோறும் தவறாமல்..
வருகிறாள்.. இத்தரைமீதில்..
அவள் உக்கிரம் அறிந்தும்
எச்சரிக்கை உணர்வு கொண்டோமா..
ஏரி குளம் நிரப்பி அவள்
எரிச்சலை.. தகிப்பைத்..  தவிர்த்தோமா

கடல் புகுந்திடும் வெள்ளத்தை
தடுத்துத் தேக்கி வைத்தோமா
வெட்டிய மரங்களுக்கீடாய்
ஒரு வித்தேனும் விதைத்தோமா

அனுபவங்கள் ஆயிரம் கண்டோம்
ஆயினும் ஒரு பாடம் கற்றோமா
அவளருமை துளியும் அறிந்தோமா..
அவள் பெருமை ஏதும் உணர்ந்தோமா..

இப்படியொரு இரக்கமிலாப் பெண்ணா....
இவளே தமிழ்மாதங்களில் முதற்கண்ணா என
சித்திரையைப் பழித்தல் வேண்டா..
அந்நாளில் அவள் இப்படியா இருந்தாள்..
  
விடுமுறைச் சிறார்களின் கொண்டாட்டமாய்
வீதிதோறும் விளையாடிக்கிடந்தாள்..
வெம்மையின் பாதைகளில் நிழலூட்டினாள்
அம்மையின் பரிவோடு அமுதூட்டினாள்..

வேம்பூவின் வாசமும் மாம்பூவின் வாசமுமாய்
மண்ணையும் மனத்தையும் நிறைத்திருந்தாள்..
தயிரிலும் மோரிலும் தண்ணீர்ப்பானையிலும்
பதனீரிலும் பானகத்திலும் பழச்சாற்றிலும்
தெங்கிலும் நுங்கிலும் என எங்கணும் இருந்தாள்..

வெட்டிவேரும் வெள்ளரியும்
வேப்பமரக்குயிலும் வீசுதென்றலுமென
இளவேனிற்கால எழில்களால்
இளநெஞ்சங்களைக் கவர்ந்திருந்தாள்...
இல்லங்களைக் குளிர்வித்திருந்தாள்..
பூமிக்குப் புத்தாடை அணிவித்துப்
புதுப்புன்னகையோடு பார்த்திருந்தாள்..
பூஞ்சிட்டுகளோடு களித்திருந்தாள்..

தடதடக்கும் கோடைமழையால்
தகித்த நெஞ்சங்களைத் தணிவித்திருந்தாள்..
நதியிலே புதுப்புனலாய் குதித்தோடினாள்..
நம்முள் ஒருத்தியாய் நம்மோடு வாழ்ந்தாள்..
அக்காலம் இனிமேல் திரும்புமா..
வேனிற்கால இன்பம் அரும்புமா
பொற்காலம் போன்றது மீளுமா
புவிவாழ் உயிர்களின் வேதனை தீருமா..

இப்போதும் இல்லை பாதகம்..
இனிவரும் காலங்கள் சாதகம்..
இயற்கையில் இருக்கிறது சூட்சுமம்
உணர்ந்தால் புரிந்துவிடும் சூத்திரம்..

மரங்காத்து மழைபெருக்கி
நிலங்காத்து வளம்பெருக்கி
நீர்காத்து ஆறுகுளம் நிறைத்து
பேர்காத்து பெருமைகொள்ள
சீர்மிகு சித்திரையை 
சிறப்பாக வரவேற்போம்..




சித்திரைத்திருநாளை முன்னிட்டு 
கவிதை வாசிக்க வாய்ப்பளித்த
தோழி சாந்தி நாகராஜ் அவர்களுக்கும் 
ஏடிபிசி வானொலிக்கும் 
என் அன்பும் நன்றியும்..


4 April 2017

கமலாம்பாள் சரித்திரம்




கமலாம்பாள் சரித்திரம் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம் என்ற தலைப்பில் விவேக சிந்தாமணி இதழில் தொடர்கதையாக வெளியான இந்நாவல் தமிழில் வெளியான இரண்டாவது நாவலென்ற பெருமையையும் (மூன்றாவது என்பர் சிலர்) முதல் தொடர்கதை என்ற பெருமையையும் ஒருசேரக்கொண்டது. இதை எழுதிய பி.ஆர்.ராஜம் அய்யரின் வயது அப்போது 21 தான் என்பது விசேடத்தகவல்.

பல பதிப்புகளைக் கண்ட இந்நூலின் பதிப்புரையில் கூறப்பட்டிருப்பதாவது.. \\ தமிழ் பாஷையில் அவசியம் படித்தாக வேண்டும் என்று சில புஸ்தகங்களைப் பொறுக்கி எடுத்தால் அதில் கட்டாயம், ஏன்- முதன்மையாகவே இடம்பெறத் தகுதியுடையது இப்புஸ்தகம். இன்னும் நூறு வருஷங்கள் கழித்துப் படித்தாலும் புதுப்புது அழகைக் காட்டும் அற்புதமான நாவல்.\\

இதோ இந்நாவலை எழுதி நூறென்ன அதற்கு மேலும் கால்நூற்றாண்டாகப் போகிறது. இப்போதும் கூட சுவை குன்றாமல் வாசிக்க எளிய தமிழில் அன்றைய மக்களின் வாழ்க்கையையும், வாழ்க்கை முறையையும்வாழ்ந்த காலத்தின் சிக்கல்களையும்தனிப்பட்ட மனிதர்களின் குணாதிசயங்களையும்.. ஒட்டுமொத்த சமூகப் பிரச்சனைகளையும் சுவைபட விவரிக்கும் அதியற்புதமான நூல் என்றே இந்நூலைக் குறிப்பிடலாம்.

கமலாம்பாள் சரித்திரம் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் முழுக்க முழுக்க கமலாம்பாளை மையமாகக் கொண்டது என்று சொல்லிவிட முடியாது. கமலாம்பாளோடு தொடர்புடைய ஏனைய கதாமாந்தர்களையும் மையப்படுத்தியே கதை நகர்கிறது.

பொறுமையும் பதிபக்தியும் பிறரை அனுசரித்துப் போகும் தன்மையும் உடையவளாய் கமலாம்பாள்..

ஊருக்குதவும் நல்ல குணமும் பெருந்தன்மையும், கொஞ்சம் கர்வப்பிரியரும் அதே சமயம் முன்கோபியும் மனைவியின் சிறுகுறையையும் பொறுக்கமாட்டா தன்மையுடையவராகவும் முத்துஸ்வாமி அய்யர்

அண்ணனிடம் மதிப்பும் மனைவி பொன்னம்மாவிடம் பயமும் கொண்டு இரண்டு பக்கமும் இழுபறியில் தவிக்கும் சுப்பிரமணிய அய்யர்.

பொறாமையும் அகங்காரமும் கொண்ட பொன்னம்மா.. அவளுக்கு துர் உபதேசம் பண்ணித் தூண்டிவிடும் வம்பர் மகாசபையும் அதன் அங்கத்துப் பெண்மணிகளும்..

ஆசிரியராய் வரும் அம்மையப்பப்பிள்ளை பாத்திரப்படைப்பு சுவாரசியமும் அங்கதச்சுவையும் கூடியது. அவருடைய முழநீளத் திருப்பெயரை அவர் வாயாலேயே அடிக்கடி சொல்லவைத்து மாணவர்கள் அவரறியாமல் கேலி செய்வதும், வகுப்பில் நளவெண்பாப் பாடலை நடத்திமுடிப்பதற்குள் மாணவர்களின் கேள்விகளில் சிக்கி அவர்படும் பாடும்.. சீதா கல்யாணத்தை காலட்சேபம் செய்யும்போது ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தைப் பார்த்த வழிப்போக்கன் யுத்தகாண்டமென எண்ணி பிறகு சுதாரித்து ராமன் சீதையைத் திருமணம் செய்தால் இவருக்கேன் இவ்வளவு கோபம் வருகிறது என்று பாய்ந்து இவரை அடிக்கப்போனதும், தாசி வீட்டில் பாட்டுக்கேட்பதற்காக ஒளிந்தபோது திருடனென அகப்பட்ட நிலையிலும் விடாப்படியாய் கவிபாடி இன்னுங்கொஞ்சம் அடிவாங்கியதும் என அவர் நடமாடும் களமெல்லாம் ஆசிரியரின் நகைச்சுவை நையாண்டிக்குக் குறைவில்லை.

பதினான்கு வயது சிறுவன் ஸ்ரீனிவாசனுக்கும் பத்து வயது சிறுமி லட்சுமிக்குமான திருமணத்தில் தான் கதை ஆரம்பிக்கிறது. அந்நாளைய பால்ய திருமணத்தைக் கண்முன் கொண்டுவரும் விவரணைகள். பால்யமும் அல்லாத பதின்மமும் அல்லாத இரண்டுங்கெட்டானாய் சிறுவர்கள் இருவரும் திருமணத்தின்போது நடந்துகொள்ளும் முறைகளில் குழந்தைத்தனமே விஞ்சிநிற்கிறது. மாப்பிள்ளை ஸ்ரீனிவாசன் தன்னை கேலிசெய்யும் லட்சுமியின் தோழிகளோடு ஓடித்துரத்தியும் பதிலுக்கு கேலிபேசியும் விளையாடும் குறும்புகளே சான்று.

மாப்பிள்ளையாக அமர்ந்திருக்கும் ஸ்ரீனிவாசன் கொண்ட பெருமையை ஆசிரியர் எழுத்தில் வடித்திருக்கும் அழகைப் பாருங்களேன்..

\\அவன் தன் ஆசனத்தில் கொஞ்சம்கூட முதுகை வளைக்காமல் கம்பீரமாய் நிமிர்ந்தபடியே உட்கார்ந்தான். அங்கவஸ்திரத்தை இழுத்து இழுத்து அடிக்கடி சீர்திருத்திக்கொண்டான். தன் வலது கையால் முகவாய்க்கட்டையை பலமுறை தடவினான். அடிக்கடி தொண்டையைத் திருத்திக் கொள்பவனைப் போல கர்ச்சித்து இருமினான். சில வேளை தன் இரண்டு கைகளாலும முழந்தாளைக் கட்டிக்கொண்டு யானை ஆடுவது போல மெதுவாக ஆடினான். சில வேளை தன் விரல்களால் கீழே வெகு விரைவாய் இங்கிலீஷில் எழுதினான். ஒவ்வொரு வேளை தன் முகத்தைத் தன்னருகில் இருந்த சுப்பராயனை நோக்கி அழகாய்த் திருப்பிக்கொண்டு சில வார்த்தைகளை இங்கிலீஷில் பேசினான். ஹோமம் செய்யும்போது புகையுடன் பழகாத தன் கண்களில் ஜலம் வர அதை அங்கவஸ்திரத்தால் துடைக்காமல் தன் விரலால் சுண்டி எறிந்துகொண்டு சுப்பராயனை நோக்கி தன் பெண்டாட்டி காதுபடஆனந்தபாஷ்யம்என்று சொல்லிக்கொண்டான். ஏதோ புதுமையைக் கண்டவன் போல அடிக்கடி புன்சிரிப்புச் சிரித்தான். நேற்று வரையில் வேஷ்டி கூட செவ்வையாய் உடுத்தத் தெரியாத பையன் இன்று பாராட்டிக்கொண்ட பெருமையைப் பாருங்கள்! ஒருவேளை நாமும் நம்முடைய கல்யாணத்தில் இப்படிதான் இருந்திருப்போம். மேலும் ஸ்ரீனிவாசன் சிறுவன்தானே! \\

சகலவித சம்பத்துகளும் கொண்ட முத்துஸ்வாமிகமலாம்பாள் குடும்பம், பேராசையும் பொறாமையும் கொண்ட பொன்னம்மாவாலும் மனைவிசொல் தட்டாத சுப்பிரமணிய அய்யராலும் கெட்டுச் சீரழிகிறது. உறவின்மீது கொண்ட பற்றால் சிக்கல்களுக்கு ஆளாகி, திருடன் பேயாண்டித்தேவனுக்குப் பகையாகி, குழந்தை நடராஜனை இழந்து புத்திரசோகத்தில் அழுந்தி, வியாபாரத்தில் பங்குதாரர்களால் வஞ்சிக்கப்பட்டு, ஊராரால் மனைவி மீது பழிசுமத்தப்பட்டு, வாழ்வின் மீதான நம்பிக்கை தொலைத்து, தற்கொலைக்கு முயன்று என ஒரு மனிதன் வாழ்ந்துகெட்ட வரலாற்றையும் பக்திமார்க்கத்தில் ஈடுபட்டபிறகான அவன் மனமாற்றத்தையும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் நொடித்தவன் மீண்டும் தலைநிமிர்ந்து வாழும் அதிசயத்தையும் தொட்டலசி இறுதியில் கமலாம்பாள்-முத்துஸ்வாமி அய்யரின் இல்லறத்துறவோடு கதை சுபமாய் முடிகிறது..

பெண்ணுரிமை பேசும் சில புரட்சிக் கருத்துகளை கமலாம்பாள் மற்றும் லட்சுமி வாயிலாக நகைச்சுவை போல ஆசிரியர் வெளிப்படுத்துமிடங்கள் கவனிக்கத்தக்கவை.  

கணவர் முத்துஸ்வாமி அய்யர் அறையிலிருந்தபடி கூடத்திலிருக்கும் மனைவி கமலாம்பாளை அடியே அடியே என்று அழைக்கிறார். காதில் வாங்காததுபோல் மனைவி ரவிக்கை தைத்துக்கொண்டிருக்கிறாள்.. அவர் மறுபடியும் உரக்க அடியே உன்னைத்தானடி அடியே என்கிறார். அப்போது வேடிக்கை போல் நடக்கும் கணவன் மனைவி உரையாடல் இது.. 

\\ மனைவி கோபித்தவள் போல பாவனை செய்துகொண்டு, ‘இங்கே அடியையும் காணோம்.. நுனியையும் காணோம்.. அடியாம். அடிக்க வேண்டியதுதான். காசு கொடுத்து சந்தையில் வாங்கினாற்போலத்தான்.. இனிமேல் அப்படி சொல்லுங்கள் வழிசொல்கிறேன்என்று பரிகாசமாகச் சொன்னாள்.

அவர் துரைமகளானாலும் பாரி உரியவனுக்கவள் ஊழியக்காரி என்று சங்கீதம் பாடித்தொடங்கினார்.

மனைவி. ‘உங்களைப் போல அவன் ஒரு புருஷன்தானே.. வேதநாயகம்பிள்ளையாம்.. கரியாவான். இனி வெள்ளைக்காரச்சிகளைப் போல ஆரம்பிக்கவேண்டியதுதான் என்கிறாள்.

உரையாடலின் நீட்சியாக ஒரு சமயம் கணவர் சொல்கிறார். ‘ஸ்திரீகள்தான் உலகத்தில் கலகத்திற்கெல்லாம் காரணம். சீதையில்லாவிட்டால் ராமாயணம் ஏது?’

ஆமாம் ஸ்திரீகள் பேரில் ஆசை வைத்துப் புருஷர்கள் கெட்டலைந்தால் அதற்கு ஸ்திரீகள்தான் காரணம்.. ராவணன் கெட்டது சீதையினாலா.. அல்லது தன் கொழுப்பினாலா என்கிறாள் கமலாம்பாள்.

பத்து நாரதர் சேர்ந்தால் ஒரு சூர்ப்பனகை ஆகாது என்ற கணவனின் வாதத்துக்கு மனைவியின் எதிர்வாதம் இது..

அப்படியே இருக்கட்டும். உலகத்தில் புருஷர்கள் எல்லாம் ராவணனையும் கும்பகர்ணனையும் போலிருந்தால் ஸ்திரீகள் எல்லாம் சூர்ப்பனகைகளாக இருக்கட்டுமே..’

என்று கணவர் வாயை அடைத்துவிட, அதற்குமேல் அய்யருக்கு சமாதானம் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையாம். \\

கதைக்களம் மதுரை ஜில்லாவில் உள்ள சிறுகுளம் என்ற கிராமம் என்பதால் நாவலின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு பற்றிய விவரிப்பும் காட்சிவர்ணனையும் இடம்பெறுகிறது. நின்றுகுத்திக்காளை என்ற உவமை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனைகள் நம்மை நேரடியாகவே களத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றன. அக்காட்சி வர்ணனை இன்பத்தை தனிப்பதிவாகவே ரசிக்கத் தருகிறேன். என்னிடமுள்ள பதிப்பின் அட்டையிலும் ஜல்லிக்கட்டு காட்சி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.   

அன்றைய சிறுவர் விளையாடும் விளையாட்டுகளாக பலீஞ்சடுகுடு, கண் பொத்துதல், மாது மாது, கிட்டி அடித்தல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. படிப்பு படிப்பு என்று சிறுவர்களை ஒரு கட்டத்துக்குள் முடக்கும் அநியாயம் அக்காலத்திலேயே வந்துவிட்டது என்பதை இப்பத்தி உணர்த்துகிறது.

\\ இங்கிலீஷ் படிப்பு வர வர, நம்முடையை விளையாட்டுகளைக்கூட நாம் மறந்துவிட்டோம். சூரியன் பட்டுப்போல் ஒளி வீசி மறைய, இளவரசுபோல் காத்துக்கொண்டிருக்கும் சந்திரன் அரசாட்சித் துவக்கி காதல் மயமாக உலகத்தைக் களிப்பிக்க, நட்சத்திரங்கள் பளீர் பளீர் என்று வெடித்து ஆகாயத்தில் நர்த்தனம் செய்யும் அரம்பை மாதர்களைப் போல் ஆனந்தமாய் விளங்க, வெப்பந்தணிந்து வானம் பசந்து குளிர்ச்சி மிகுந்து, தென்றல் வீச, பகவத் பக்தியால் பூரித்த யோகிகள் மனம்போல் சாந்தஸ்வரூபமாய் விளங்கும் அந்திப்பொழுதில் வீசுகின்ற தென்றலைப் போலவும் பாடுகின்ற பட்சிகளைப் போலவும், தங்களுடைய கவலைகளை மறந்து, பஞ்சு மெத்தைகளைப் போன்ற மணற்படுக்கைகளின் மீது உல்லாசமாய் ஓடி விளையாடுவதை விட்டு இக்காலத்திய சிறுவர்கள் பலர் பாம்பின் வாயிலகப்பட்ட தவளைகளைப்போல் புஸ்தகங்களுடன் கட்டியழுது பொழுதுபோக்குகிறார்கள். \\

இன்னொரு இடத்தில் பட்டணத்தில் துக்க வீடு குறித்துக் குறிப்பிடும்போது..

\\ஒரே குடும்பத்தில் யாராவது இறந்து போனால் இங்கேயிருந்து அழக்கூடாது என்று மற்றொரு குடும்பத்தாரும் வீட்டுக்காரனும் சேர்ந்து சொல்லுகிற நாகரீகமான பட்டணவாசத்திய வழக்கம் பட்டிக்காட்டு ஜனங்களுக்குத் தெரியாது. \\ என்கிறார். எவ்வளவு சத்தியமான வரிகள்.

பி.ஆர்.ராஜம் அய்யர் அவர்கள் எழுதிய ஒரே நாவல் இது என்ற பெருமையைக் கொண்ட கமலாம்பாள் சரித்திரம் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டிருந்தாலும் நீலவானின் நட்சத்திரங்களாய் இப்புதினம் முழுவதும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் இலக்கிய மேற்கோள்கள் தமிழின் சுவைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. கம்பராமாயணம், திருக்குறள், அரிச்சந்திரபுராணம், நளவெண்பா, பட்டினப்பாலை, நந்தனார் சரித்திரம், தேவாரம், தாயுமானவர் பாடல், பட்டினத்தார் பாடல், நீதி நெறிவிளக்கம் என பலதரப்பட்ட இலக்கியங்களிலிருந்தும் பாடல்களையும் மேற்கோள்களையும் காட்டியிருப்பதோடு ஷேக்ஸ்பியரின் நடுவேனிற்கனவு (midsummer night's dream) நாடகத்தில் வரும் பக் என்னும் குட்டிப்பேய் பற்றியும் குறிப்பிட்டிருப்பது நூலாசிரியரின் இலக்கிய ஆர்வத்துக்கும் ஆளுமைக்குமான சான்றுகள்.

1872-ல் மதுரை மாவட்டத்தில் வத்தலகுண்டு கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த பி.ஆர்.ராஜம் அய்யர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.. முடித்து சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல் பயின்றார். ஆனால் இறுதித்தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்று புகழ்பெறவேண்டும் என்ற அவரது கனவு கரைந்துவிட விரக்தி மேலீட்டால், தனது சிந்தனையை பக்திமார்க்கத்தில் திருப்பினார். அப்போது எழுதப்பட்டதுதான் கமலாம்பாள் சரித்திரம்.

விவேகானந்தர் சென்னையில் தொடங்கிய பிரபுத்த பாரதா அல்லது விழித்துக்கொண்ட இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் முதல் ஆசிரியராக விவேகானந்தரால் நியமிக்கப்பட்டார். அப்போது அவர் எழுதிய தத்துவக் கட்டுரைகள் பின்னாளில் வேதாந்த சஞ்சாரம் (ஆங்கிலத்தில் Rambles in Vedanta) என்று 900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது.

ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன் (Stuart Blackburn) என்பவர், பல ஆண்டுகள் கமலாம்பாள் சரித்திரம் என்னும் இந்த நாவலை ஆராய்ந்துஅடிக்குறிப்புகளும் சிறப்பு அகராதியும் இணைத்து 1999-ல் ஆங்கிலத்தில் The Fatal Rumour என்ற பெயரில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தால் வெளியிடச் செய்தார். இந்த மொழிபெயர்ப்பு, 2000-ஆம் ஆண்டின் ஏ. கே. ராமானுஜன் மொழிமாற்றப் படைப்புக்கான விருதினைப் பெற்றிருக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் மிக்க பி.ஆர். ராஜம் அய்யர் தமது 26-வது வயதிலேயே குடற்சிக்கல் நோய் காரணமாக உயிரிழந்தது பெருஞ்சோகம். அவர் இறந்து இரண்டு நாள் கழித்து பிரபந்த பாரதத்தில்வெளிவந்த வேதாந்தம்’ ‘ராஜாதி ராஜன்என்னும் கட்டுரைகளுக்காக அவர்மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாம். ஆனால் பிடிபட அங்கே அய்யர் அவர்கள் உயிருடன் இல்லை.

தன் பல வருடகால சேமிப்பிலிருந்து இந்நூலை எனக்குப் பரிசாக அளித்த என் மாமனார் திரு. சொ. ஞானசம்பந்தன் அவர்களுக்கு நன்றி.

இந்நூலை வாசிக்க விரும்புவோர் இங்கு  சென்று வாசிக்கலாம்.