எனக்கும்
மேரிக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து ஜிம் பிறந்தான். அப்போது நாங்கள் ஒரு பழைய மரவீட்டில் வசித்துவந்தோம். எனக்கு நிலையான வேலை இல்லை,
ஆட்டுரோமம் கத்தரிப்பது, தச்சுவேலை, வேலியடைக்கும் வேலை, தரைக்குள் தண்ணீர்த்தொட்டி இறக்கும் வேலை… இப்படி கிடைக்கும் வேலையை செய்துகொண்டு வீட்டில்
தினமும் அடுப்பு எரியும்படி பார்த்துக்கொண்டேன்.
ஒருவயது
முடியும்போது ஜிம்முக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வு எங்களைப் வெகுவாகப் புரட்டிப்போட்டது. ஒரு குழந்தை வலிப்பு வந்து துடிப்பதை எப்போதாவது
பார்த்திருக்கிறீர்களா?
பார்த்திருந்தால் மீண்டும்
அதைக்காண விரும்பமாட்டீர்கள்.
நரம்புகளுக்குள் சாத்தான்
புகுந்து விளையாடும் தருணம் அது.
நான் படுக்கைகளைத்
தயார் செய்துவிட்டு,
அடுப்பில் கெட்டிலை
வைத்தேன். தேநீர் தயாரித்துவிட்டு கொஞ்சம்
மாட்டிறைச்சியை இரவுமுழுவதும் தணலில்
வேகப்போடலாம் என்று
நினைத்தேன். நாள் முழுவதும் மிகவும் உற்சாகத்தோடு
வளைய வந்த ஜிம்மை அவன் அம்மா தூங்க வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தாள். ஜிம் திடீரென்று இரண்டு முறை வீறிட்டான். நான் பெருங்களைப்புடனும், ஒருவரிடமிருந்து வரவேண்டிய பணம் வராமையால்
மன உளைச்சலுடனும் இருந்தேன்.
மேரி கூச்சலிடும் வரை
நான் திரும்பிப் பார்க்கவும் இல்லை.
“ஜோ… இங்கே பார்.. பார்.. ஐயோ கடவுளே.. குழந்தைக்கு வலிப்பு .. குளியல்தொட்டியைக் கொண்டுவா… சீக்கிரம்.. சீக்கிரம்…”
ஜிம்மின்
உடல் அவன் தாயின் கரங்களில் ஒரு வில்லைப் போல் விறைப்புடன் பின்புறமாய் வளைந்திருந்தது. அவனுடைய கருவிழிகள் மேலே சொருகிவிட்டிருந்தன. என் வாழ்வில் மீண்டும் காணவிரும்பாத காட்சி அது.
வழியிலிருந்த
பொருட்களின் மேல் விழுந்து தடுமாறி ஓடி குளியல் தொட்டியையும் வெந்நீரையும் எடுத்துவந்தேன். பக்கத்துவீட்டுப் பெண்மணி உதவிக்கு ஓடிவந்தார். அவரது கணவர் மருத்துவரை அழைத்துவந்தார். மருத்துவர் வருவதற்குள்ளாகவே மேரியும்
அப்பெண்ணும் ஜிம்முக்கு வெந்நீர்க்குளியல் கொடுத்து சற்று சீராக்கியிருந்தார்கள். அந்த அலறல் சத்தம் வெகுநேரம் என் மண்டையைக்
குடைந்துகொண்டிருந்தது.
பின் மெதுவாக உறங்கிப்போனேன். அதன்பிறகு இரவுகளில் படுப்பதற்கு முன் தணலை மூட்டி, அதில் ஒரு வாளி வெந்நீரை வைப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன்.
ஒரு குழந்தை
வலிப்பு வந்து துடிப்பதை நீங்கள் பார்த்ததே இல்லையா? நல்லது. பார்க்க விரும்பாதீர்கள். அது சில நொடிகளில் நடந்துவிடும் விஷயம் என்றாலும்
பல மணிநேரம் நீடிப்பதைப் போன்று தோன்றும். அரைமணி நேரம் கழித்து அந்தக் குழந்தை உங்களுடன்
சிரித்து விளையாடிக்கொண்டிருக்கலாம் அல்லது இறந்து கிடக்கலாம்.
அந்த நிகழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
இரவுகளில் அவன் புரளும்போதும், நீட்டி நெளியும்போதும் தாவிக்குதித்து ஓடுவேன். அடிக்கடி ஜிம் மூச்சுவிடுவதை சோதித்துவிட்டு, அடுப்பில் தீயும் தண்ணீரும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு உறங்க முயல்வேன். பல இரவுகள் இப்படித்தான் கழிந்தன. விடியலைக் கண்டபிறகுதான் மனம் நிம்மதியாகும்.
எனக்கும்
ஜிம்முக்குமிடையில் நல்ல
பிணைப்பு இருந்தது.
இரண்டு வயதில் தனக்குமொரு
புகைக்குழாய் கேட்டான்.
நான் அவனுக்காக புதிய களிமண் குழாய் வாங்கித்தந்தேன். மாலை நேரங்களில் வராந்தாவின் ஓரத்திலோ, விறகுக்குவியலின் மீதோ என் பக்கத்தில் அமர்ந்து
தானும் என்னைப் போலவே தன் புகைக்குழாயை உறிஞ்சி எச்சிலை வெளியில் துப்புவான். வெறும் புகைக்குழாயால் ஆவது ஏதுமில்லை என்று புரிந்துகொண்டான். ஆனால் புகைக்குழாயை உடைத்துவிட்டால் புதிதாய்
வேறொன்று கிடைக்காது என்பதையும் பழைய குழாயே மீண்டும் கயிறு அல்லது கம்பியால் கட்டித்தரப்படும்
என்பதையும் அறிந்துகொண்டான்.
நான் தலைமயிரை
வெட்டினால் தானும் வெட்டிக்கொள்ள வேண்டுமென்பான். நான் சவரம் செய்தால் தானும் செய்யவேண்டும்
என்பான். ஒருநாள் அவன் முகத்தில் சோப்புநுரை பூசி சவரம் செய்வதுபோல்
நடித்தேன். ஒரு ஆந்தையைப் போல் முழித்துக்கொண்டு ஆடாமல் அசங்காமல் அமர்ந்திருந்தான். முகத்திலிருந்து சோப்புநுரையை வழித்தெடுத்ததும்
அவன் தேம்பியபடி சொன்னான்,
“ரத்தமே வரலப்பா!” சவரத்தின்போது எப்போதும் எனக்குக் காயங்கள்
உண்டாவது வழக்கம்.
ஏனெனில் சவரம் செய்யும்போது
எனக்குப் பொறுமையிருக்காது.
வேலியடைக்கும்
வேலையொன்றில் ஓரளவு
வருமானம் கிட்டியதும் ஒரு பழைய குதிரை வண்டியை வாங்கி
செப்பனிட்டேன். குல்காங்கிலிருந்து முப்பது மைல் தூரத்தில் லாஹே ஓடைக்கரையில் வேலிகள் அடைத்து பண்படுத்தப்பட்ட நிலமொன்றை என்
நண்பன் கைவிடவிருந்தான். அதில் குதிரைப்பண்ணை
நடத்தலாம் என்றும் கொஞ்சம் தீவனச்சாகுபடியும் செய்யலாம் என்றும் யோசித்தேன். அக்கம்பக்கத்தில் யாருமில்லாத அந்த இடத்துக்கு மேரியையும் மூன்றுவயது குழந்தையையும் கொண்டுபோய்க் குடியமர்த்துவதை நினைத்தாலே எனக்குள் கிலி பரவியது. மேரியின் உதவாக்கரைத் தம்பி ஜேம்ஸ் அங்குதான் இருந்தான். அவனுக்கு மேரியை மிகவும் பிடிக்கும்.
அவனுடைய பாதுகாப்பில் மேரியையும் ஜிம்மையும் விட்டுவிட்டு நான் வேலைக்குப் போகமுடியும்
என்று எண்ணினேன்.
நாங்கள்
புதிய இடத்துக்குக் குடிபோய் நிலைகொள்ளும்வரை ஜிம்மை குல்காங்கிலிருந்த மேரியின் தங்கை
வீட்டில் விட்டிருந்தோம். ஒரு மாதம் கழித்து அவனைத் திரும்ப அழைத்துவர எண்ணியிருந்தபோது,
மாவுமூட்டைகளை ஏற்றிக்கொண்டு
குல்காங் வழியாக வரவேண்டிய வேலையொன்று வந்தது. வண்டியில் பாரம் அதிகமில்லை, வானிலையும் சாதகமாக இருந்தது. ஒரு இரவு மட்டும் வழியில் எங்காவது தங்கவேண்டியிருக்கும். அதனால் ஜிம்மை அவன் சித்தி வீட்டிலிருந்து குதிரைவண்டியில்
என்னுடனேயே அழைத்துவந்தேன். மாவு மூட்டைகளின் மேல் அமர்ந்தபடி அவன்
அங்கே என்னென்ன சாகசங்கள்
செய்தான் என்பதை சொல்லிக்கொண்டு வந்தான்.
“அவங்க எனக்கு ரொம்பத்தான் செல்லம் குடுக்குறாங்கப்பா...” நெஞ்சு
நிமிர்த்தி கம்பீரத்தோடு
சொன்னான். ஒரு குழந்தை அதன் பெற்றோரிடத்தில்தானே எப்போதுமிருக்க
விரும்பும்.
ஒரு மந்தையோட்டிக்காக நாய்க்குட்டி ஒன்றை என்னோடு கொண்டுவந்திருந்தேன். அது ஜிம்முக்கு பெரியதொரு பொழுதுபோக்காக
அமைந்துபோனது.
ஜிம்மின்
பேச்சு சில சமயங்களில்
அதிரவைக்கும், சில
சமயங்களில் சிரிப்பு வரவழைக்கும். அம்மாதிரியான தருணங்களில் சிரிப்பை அடக்கியபடி, முகத்தைத் திருப்பிக்கொண்டு இருமுவது போலவோ, குதிரைகளை விரட்டுவது போலவோ பாவனை செய்வேன். ஒருமுறை நான் அப்படிச் செய்யும்போது அவன்
கேட்டான். “ஏம்ப்பா, நீங்க நான் என்ன சொன்னாலும் தோளைக்
குலுக்கிட்டு, இருமிட்டும், கனைச்சிட்டும் இடத்தை விட்டுப் போயிடறீங்க? ஏன் எங்கிட்ட
எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க?”
“என்ன சொல்லணும், ஜிம்?”
“ஏதாவது சொல்லுங்க.”
அதன்பிறகு
நான் என்னவெல்லாம் நினைக்கிறேனோ அத்தனையையும் அவனிடம் சொல்லத்தொடங்கினேன். உண்மையைச் சொன்னால் என் கற்பனைகள் அவனிடத்தில் எடுபடவில்லை. சந்தேகம் வந்துவிட்டால் குறுக்கு விசாரணை
செய்வதில் கெட்டிக்காரன்.
அபத்தம் என்று தெரிந்தால்
யோசிக்காமல் அதை என்னிடம்
சொல்லிவிடுவான். “உங்க கூட வீட்டுக்குப் போறது
சந்தோஷமா இருக்குப்பா.. நீங்க என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிப்பீங்க.”
“எனக்குதான்
உன்னைப் பத்தி நல்லா தெரியுமே ஜிம்…”
“இல்லப்பா. நான் வீட்டிலிருக்கும்போது எப்படியிருப்பேன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க பார்த்ததே
இல்லையே.”
அவன் சொன்னது
அப்பட்டமான உண்மை.
அது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால்
ஜிம்மிடமிருந்து அது ஒரு அம்பு போலப் புறப்பட்டுவந்தது அதிர்ச்சி தந்தது. கடந்த சில வருடங்களாகவே வாழ்க்கை, போராட்டங்களுடன்தான் போய்க்கொண்டிருக்கிறது. வீட்டிலேயே இருப்பதில்லை. இருந்தாலும்
களைப்புடனும் கவலையுடனுமோ, அல்லது எதிர்காலம் பற்றிய சிந்தனையுடனோ இருப்பேனே அன்றி ஜிம்மைக்
கவனித்ததே இல்லை.
மேரியும் பல சமயங்களில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாள்.
“நீங்க ஜிம்முக்காக கொஞ்ச நேரமாவது ஒதுக்கணும். கவலைகளை அடைகாத்துக்கொண்டிருப்பதால் யாருக்கு என்ன லாபம்? சொடுக்குப் போட்டாற்போல் ஒருநாள் முழிச்சிப்பீங்க, நீங்க இழந்திருப்பது என்னன்னு அப்போதுதான் உங்களுக்குப் புரியும். உங்களுக்கு ஒரு குழந்தை இருந்ததுங்கறதை நினைச்சிப் பார்க்கிறதுக்குள்ளாகவே
அவன் வளர்ந்து வாலிபனாகி நிப்பான். உங்களுக்கும் வயசாகியிருக்கும். எடுத்துக் கொஞ்சற
காலம் கடந்துபோயிருக்கும்.”
மேரியின்
பேச்சுகள் எனக்கும்
சலிப்பும் எரிச்சலும் ஏற்படுத்தின. ஏனெனில்
இதையெல்லாம் நான்
நன்றாகவே அறிந்திருந்தேன். எல்லாப்
பிரச்சனைகளும் முடிந்தபிறகு அவர்களுக்காக
நேரம் செலவழிக்க நினைத்திருந்தேன். ஆனால் நாட்கள் வாரங்களாகி.. மாதங்களாகி.. வருடங்களாக நீண்டுகொண்டே போயின.
ஆளரவமற்றக்
காட்டுப்பாதையிலும் மலைமுகடுகளிலும் நானும் ஜிம்மும் மட்டும் பயணித்து பதினைந்து
மைல்களைக் கடந்தோம். சூரியன் மறைவதற்கு முன்னர் சாண்டி நீரோடைப் பகுதியை அடைந்து ரையான் சந்திக்கருகில் அன்றிரவைக் கழிக்க முடிவுசெய்து முகாம் அமைத்தேன். குதிரைகளை வண்டியினின்று விடுவித்து கடிவாளங்களைக் களைந்தேன். தீவனப்பையில் கூளமும் சோளமும் நிரப்பினேன். குதிரைகள், வாலைச் சுழற்றியபடி
தீவனத்தை அசைபோட்டுக் கொண்டிருந்தன.
தார்ப்பாயை
வண்டியின் ஒருபக்கமாகத் தொங்கவிட்டு கீழே விரித்தேன். தரையின் ஈரத்திலிருந்தும்
குளிர்காற்றிலிருந்தும் பாதுகாப்பாய் ஒரு படுக்கை தயாராகிவிட்டது. போர்வைகளையும்
போஸம் ரோமத்தாலான விரிப்பையும் எடுத்து சக்கரத்தையொட்டிப் போட்டேன். இப்போது ஜிம்முக்கும் நாய்க்குட்டிக்கும்
வசதியாக ஒரு கூடாரம் அமைந்துவிட்டது. வண்டியிலிருந்து வாணலி, கெட்டில்
போன்றவற்றை இறக்கினேன். பக்கத்திலிருந்த சில சுள்ளிகளையும் கட்டைகளையும் பொறுக்கி, தீ மூட்டினேன்.
இப்போது எல்லாம் வசதியாகத் தயாராகிவிட்டது.
நான் என்னுடன்
கொண்டுவந்திருந்த பன்றியிறைச்சியையும் முட்டைகளையும் சமைத்தேன். வண்டியிலிருந்து ஜிம் கத்தினான்.
“அப்பா,
நிறைய சமைக்காதீங்க. எனக்கு
பசிக்கலை.”
“உடம்பு
சரியில்லையா, ஜிம்?”
“இல்லப்பா, நல்லா இருக்கேன்.”
“கொஞ்சம் தேநீர் குடிக்கிறியா, கண்ணா?”
“சரிப்பா.”
ஒன்றிரண்டு
மிடறுகள் குடித்துவிட்டு வைத்துவிட்டான்.
“தூக்கம் வருதுப்பா.”
அவனைத்
தூக்கச் சென்றபோது அரைத்தூக்கமும் மயக்கமுமாக நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்நிலை எனக்கு அச்சத்தைத் தந்தது. எப்போதெல்லாம் ஜிம்மின் நடவடிக்கையில் முதிர்ச்சி
தென்படுகிறதோ அப்போதெல்லாம் ஏதோ ஆபத்தின் அறிகுறியைக் காண்கிறேன்.
“இப்போ எப்படியிருக்கு,
கண்ணா?”
அவன் நட்சத்திரங்களிடமிருந்து
பார்வையைத் திருப்ப ஒருநிமிடம் ஆனது.
“நல்லாயிருக்கேன் அப்பா” சொல்லிவிட்டு சொன்னான், “நட்சத்திரங்கள் எல்லாம் என்னையே பாக்குது,” அவன் தூக்கக் கலக்கத்தில் பேசுவதாக
நினைத்தேன்.
“உனக்கு எங்கே என்ன செய்யுது, கண்ணா?”
தூக்கத்திலேயே சொன்னான், “என்னுடைய பூட்ஸ்களைப் போட்டுவிடுங்க அப்பா, நான் வீட்டுக்கு அம்மாகிட்டே போவணும்.”
நான் அவன்
கரங்களைப் பற்றி ஆசுவாசப்படுத்தினேன். நிலைகொள்ளாத
சிறு அசௌகரியத்துடனே தூங்கிவிட்டிருந்தான்.
குதிரைகளுக்குத்
தண்ணீர்வைக்க உதவும் வாளியை தீக்குமேல் கட்டித் தொங்கவிட்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று ஓடிப்போய் ஒரு
பெரிய மண்ணெண்ணெய் உருளையில் ஓடைத்தண்ணீரை எடுத்து வைத்துக்கொண்டேன். மழைக்காலங்களில் வண்டிச்சக்கரம் சேற்றில்
சிக்கிக்கொண்டால் அதை விடுவிப்பதற்கென்று எப்போதும் கைவசம் மண்வெட்டி இருக்கும். அதைக் கொண்டு வண்டிக்கருகில் ஒரு பெரிய பள்ளம்
வெட்டி அதில் தார்ப்பாயைப் போட்டு வைத்தேன். நிலைமை மோசமானால் ஜிம்மைக் குளிக்கவைக்க
அது உதவும். கடுகெண்ணெய் ஒரு டப்பா இருந்தது. ஜிம்மை மரணம் அழைக்கவந்தால் அதனுடன் கடுமையாகப்
போராடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.
வண்டிக்குக்
கீழே குனிந்து சென்று ஜிம்மைத் தொட்டுப்பார்த்தேன். அவனுடைய நெற்றி கொதித்துக்கொண்டிருந்தது. அவனுடைய தேகம் உலர்ந்து வறண்டு எலும்பைப்
போன்றிருந்தது.
பதற்றத்துடன்
வண்டியிருக்குமிடத்துக்கும் தீயெரியும் இடத்துக்கும் இடையில்
நடைபோட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு மருத்துவர்களிடம் அவ்வளவாக நம்பிக்கையில்லை
என்றாலும் இப்போது அவர்களுள் ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். அவரோ, பதினைந்து மைல்களுக்கு அப்பாலிருந்தார்.
நான்
விரக்தியுடன் அண்ணாந்து மரக்கிளைகளைப் பார்த்தேன். முதிய காடுறை மனிதர்கள்
இரவுநேரங்களில் காடு காட்டும் சமிக்ஞைகளின்பால் நன்மதிப்பும் நம்பிக்கையும்
கொண்டிருப்பார்கள். இப்போது நான் முற்றிலும் தளர்வுற்றிருந்தமையாய் இருக்கலாம் அல்லது மெல்ல அசையும்
கிளைகளினூடே காட்சியளிக்கும் வானப்பரப்பாயிருக்கலாம் அல்லது எரியும் தீயினின்று
புறப்பட்டு மேலெழும்பும் புகைப்படலமாக இருக்கலாம்… எதனாலென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் ஒரு பெண்ணின் உருவத்தைப் பார்த்தேன்.
முற்றிலும் வெண்ணிறத்தில் மெல்ல இறங்கி மரக்கிளைகளின் பக்கம் வந்தாள். பிரதான
சாலையை சுட்டிக்காட்டினாள். பின் மெல்ல மிதந்து மேலே சென்றாள்… மெதுவாய் மறைந்துபோனாள். யாரது? மேரியா? முதலில் மேரிதான் இறந்துவிட்டாளோ என்று நினைத்தேன்.
அப்புறம்தான்
ஒருவிஷயம் என் எண்ணத்தில் மின்னலாய்ப் பளிச்சிட்டது. பிரதான சாலையில் நான்கைந்து
மைல் தூரத்தில் பழைய கொட்டகை ஒன்று இருந்தது. பிரைட்டன் என்பவரும் அவர் மனைவியும் அங்கு
வசித்துவந்தனர். பிரைட்டன் கொஞ்சம் விவசாயமும் நிறைய கள்ளச்சாராய விற்பனையும்
செய்துகொண்டிருந்தார். அது அவர் மனைவியாக இருக்குமோவென்று நினைத்தேன். மனத்தளவில்
மிகவும் நைந்துபோனவள். எந்தப் பிடிப்புமற்று வாழ்ந்துகொண்டிருப்பவள். வாழ்க்கைப்
போராட்டமும் தனிமையும் அவர்களை கடினமானவர்களாக மாற்றியிருந்தது. அவர்களால் இப்போது
எனக்கு எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை என்று நினைத்தபோது, இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது.
பிரைட்டனின்
மைத்துனியைப் பற்றி குல்காங்கின் பெண்மணிகள்
சிலர் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். சமீபகாலமாக அவள் அக்காவுடன் தங்கியிருப்பதாக அறிந்திருந்தேன். அவள்
நகரத்து மருத்துவமனை ஒன்றில் செவிலியாகப்
பணியாற்றிக்கொண்டிருந்தாள். அவளைப் பற்றி நிறைய வதந்திகள் இருந்தன. அவள்
மருத்துவர்களின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தியதாலோ, அவர்கள் மீது அவதூறு பரப்பியதாலோ என்ன
காரணம் என்று எனக்கு சரியாக நினைவில்லை, ஆனால்
அவள் வேலையை விட்டு நீக்கப்பட்டாள் என்று பேசிக்கொண்டார்கள். ஒரு நகரப் பெண்மணி
நகரத்தை விட்டு இருபது மைல் தள்ளியுள்ள இதுபோன்ற ஒரு இடத்தில், இதுபோன்ற மக்களோடு வாழ்வதொன்றே
பெண்களுக்கு ஊர்வம்பு பேசப் போதுமானது. காடுறை ஆண்கள் மத்தியில் அவளைப் பற்றிய
எந்தப் பேச்சும் இல்லாமையும் அவளிடத்தில் இன்னும் கூடுதல் ரகசியம் ஏதோ இருப்பதாகப்
பட்டது. அப்படிப்பட்ட அசாதாரணமானப் பெண்மணியின் உதவி இப்போது எனக்கு தேவைப்பட்டது.
இந்த எண்ணம் மின்னலாய் மனத்தில் உதித்ததும் நான் வண்டியின்
பின்சக்கரங்களுக்கிடையில் மண்டியிட்டு ஜிம்மைப் பார்த்தேன்.
என்
குதிரைகளுள் ஒன்று வயதான
பந்தயக்குதிரை.
அதற்கு அவசரமாக சேணமும்
கடிவாளமும் பூட்டினேன். தவிட்டுப்பையை எடுத்து ஒரு மூட்டை போல் இறுக்கிக்கட்டினேன்.
அதைக் குலுக்கி சமமாக நிரவி சேண இருக்கையின்மீது வைத்து ஜிம்முக்கு ஒரு மெத்தை
தயார் செய்தேன். அவனை ஒரு போர்வையால் சுற்றியெடுத்து என்னுடன் வைத்துக்கொண்டு
புறப்பட்டேன்.
அடுத்த
நிமிடம் ஓடைக்கரையின் செங்குத்தான சரிவுகளில் ஓடைநீரை விசிறியடித்தபடி கண்மண்
தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தோம். பந்தயக்குதிரை
என்றாலும் சுவாசக்கோளாறுள்ள
குதிரை. ஆனால் பந்தய உணர்வு அதன் உள்ளத்தில் ஊறியிருந்தது. காலில் சக்கரத்தைக் கட்டியது போல் சீராகவும் மெல்லிய
அதிர்வுகளுடனும்,
ஒரு ரயிலைப் போன்று ஓடக்கூடியது.
மலைச்சரிவில்
தவிட்டுப்பை நழுவுவது போல் உணர்ந்தேன். கடிவாளக்கயிற்றை விட்டுவிட்டு ஜிம்மை ஒரு
குழந்தை போல அள்ளி அணைத்துக்கொண்டேன். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் முன்பின் பழக்கமில்லாத
வகையில் ஒரு குழந்தையை ஐந்து நிமிடங்களுக்கு ஒரே நிலையில் வைத்திருப்பதென்பது அசாத்தியம். ஜிம் சற்று கனமாகவும்
இருந்தான். ஆனால் அன்றிரவு எனக்கு கைவலிக்கவே இல்லை. அந்த வலியை நான் உணர்வதற்கு முன்பே வலி மறைந்திருக்கவேண்டும்.
வீட்டில் என்னிடம் குழந்தையைக் கொஞ்சநேரம் வைத்துக்கொள்ளும்படி கேட்டாலே சீறுவேன்.
அது
ஒரு திகிலூட்டும் நிலாக்கால இரவு. பகலாகட்டும், இரவாகட்டும், ஆஸ்திரேலியக்
காடுகளைப் போன்று திகிலூட்டும் காடுகள் உலகில் வேறெங்கும் இருக்க முடியாது.
மரப்பட்டைகள் உரிந்து தொங்கும்,
வளைந்த
மரக்கிளைகளினூடே நிலவொளி உருவாக்கும் வடிவங்கள், முடிச்சுகள் நிறைந்த யூகலிப்டஸ்
மரங்களில் பூதாகரமாய்க் காட்சியளிக்கும் வெளிர்நீலப்பட்டைகள், பட்டையுரிந்து பளபளவென்று வீழ்ந்துகிடக்கும் மரங்கள், அல்லது விழத்தயாராய் ஆங்காங்கே நிற்கும்
பட்டுப்போன மரங்கள்,
இருளும் ஒளியும்
கலந்துவிழும் சாலைகளில் தென்பட்டு இரத்தம் உறையவைக்கும் எதுவும்… அது ஒரு காளையாகவும் இருக்கலாம்.. நிர்வாணமாய்க்
கிடக்கும் ஒரு பிரேதமாகவும் இருக்கலாம். காட்டுவழிப் பாதைகளும் சாலைகளும்
நிலவொளியில்… இல்லாத ஒன்றை இருப்பதாகக்
காட்டலாம். இருப்பதை இல்லாமல் மறைக்கலாம். அப்போது குதிரையைத்தான் முழுக்க
நம்பியாகவேண்டும்.
சில
வேளைகளில் பட்டைகள் உரிக்கப்பட்ட யூகலிப்டஸ் மரங்களைப் பார்த்தால் இருண்ட வனத்தில் பிசாசுகள் நிற்பதைப் போலவே இருக்கும். சாலையின்
மத்தியில் வளர்ந்திருக்கும் புற்களை உண்டுகொண்டிருக்கும் பெரிய சாம்பல் வண்ண
கங்காரு, தப் தப் என்ற ஒலியோடு முன்னால்
பாய்ந்து புதர்களுக்குள் மறையும்.
அன்றிரவும்
நான் போகும் காட்டு வழி நெடுக வழக்கம்போல் பேய் பிசாசுகள் நிறைந்திருந்தன. ஆனால்
அவை யாவும் குதிரையால் வேகமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தன. ஜிம்முக்கு காய்ச்சல் நெருப்பாய்க்
கொதித்துக்கொண்டிருந்தது.
“ஜிம் இன்னமும் தொய்வுடன்தான்
இருக்கிறான்… விறைத்துப் போகவில்லை. ஜிம் இன்னமும் தொய்வுடன்தான்
இருக்கிறான்.” நான் சத்தமாகச்
சொல்லிக்கொண்டிருந்தேன். குதிரையின் வேகத்தால் அவ்வார்த்தைகள் குதித்துக் குதித்து
வெளிப்பட்டுக்கொண்டிருந்தன.
குதிரை
தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தமாத்திரத்தில்
அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன். கேபிள்களின் உதவியால் ஓடும் ஒரு டிராம் வண்டியைப்
போல் ஒரு விறைப்பு சட்டென்று அதன் உடலில் பரவ முன்னோக்கிப் பாய்ந்தது. தனியாகப்
போய்க்கொண்டிருக்கையில் பின்னாலிருந்து வரும் ஏதாவது ஒரு குதிரை அதை முந்துவதைப்
போல் தோன்றினால் அதன் பந்தயக்குணம் விழித்துக்கொள்ளும். சட்டென்று முறுக்கெடுத்து
வேகமாகப் பாயும். இப்போது நானும் அதை உணர்ந்தேன். ஒரு விசித்திரமான
மாயக்குதிரையொன்று கூடவே ஓடிவருவதைப் போன்று உணர்ந்தேன்.
திடீரென்று
என்னையறியாமலேயே வார்த்தைகள் வெளியாயின. “மரணம் துரத்திக்கொண்டிருக்கிறது. மரணம்
துரத்திக்கொண்டிருக்கிறது.”
குதிரையின்
குளம்புகள் அதைப் பற்றிக்கொள்ளும்வரை விடாது சொல்லிக் கொண்டிருந்தேன். தன்
பக்கத்தில் ஓடிவந்துகொண்டிருக்கும் ஒரு கரிய குதிரையை என் குதிரை
கண்டுகொண்டுவிட்டதாக நம்பினேன். இது அதைத் தோற்கடிக்குமா அல்லது தான் தோற்று மனமுடைந்துபோகுமா?
பயத்தாலும்
பதற்றத்தாலும் நான் பித்துப்பிடித்தவன் போலானேன். குதிரை எப்போது தன்
முரட்டுவேகத்தைத் தளர்த்தியது என்று தெரியவில்லை. நான் ஜிம்மைக் கைகளில் ஏந்தியபடி
சேணத்தை முழங்கால்களால் இறுகப் பற்றியிருந்தேன். குதிரையின் அதிவேகப் பாய்ச்சலுக்கு
அவ்வப்போது சேணம் அதிரும்போதெல்லாம் சேணப்பட்டையின் இறுக்குவார் அறுந்துவிட்டதோ
என்று நினைத்தேன். பார்வைக்கு அச்சமுண்டாக்கிய சமவெளிக்குப் பின்னால் தொலைவில்
தென்பட்டது நான் தேடிவந்த மரக்கட்டடம். அதன் முகப்புச்
சுவரிலிருந்த கண்ணாடிகள் உடைந்திருந்தன. சிறையிலிருந்து தப்பிய கைதியொருவன் தன்
தொப்பியால் தன்
கண்களை
மறைத்திருப்பதைப் போன்று வராந்தாவின் மேற்கூரை சரிந்து சன்னல் விளிம்பு வரை
மறைத்திருந்தது. பார்த்தவுடன் உள்ளுக்குள் ஏனோ பயம் பரவியது. அந்த இடம் வெறுமையும்
திகிலும் ஊட்டுவதாயிருந்தது. வீட்டில் வெளிச்சம் தென்படவில்லை. எங்கும் நிலவொளி பரவியிருந்தது.
“அந்த வீடு காலியாக உள்ளது.
அங்கிருந்தவர்கள் வேறெங்கோ சென்றுவிட்டார்கள். அது வெற்றிடமாக உள்ளது.” என் மனம் அடித்துக்கொண்டது. குதிரை
கட்டிடத்தை அடைந்து பின்புறக்கதவுக்கும் சமையலறைக்கும் இடைப்பட்டப் பகுதியில் நின்றது.
“யாரது?” யாரோ உள்ளிருந்து குரலெழுப்பினார்கள்.
“நான்தான் ஜோ வில்சன். நான்
உங்கள் மைத்துனியைத் தேடிவந்திருக்கிறேன். உயிருக்குப் போராடும் என் மகனைத் தூக்கிக்கொண்டு
வந்திருக்கிறேன்..”
பிரைட்டன்
வெளியில் வந்தார். “என்னப்பா?”
“இவனைக்
கொஞ்சம் பிடிங்க, நான்
இறங்கிக்கொள்கிறேன்.”
“என்னாச்சு இவனுக்கு?” அவர் தயங்கும் காரணம் புரிந்தது.
சேணத்திலிருந்து என்
கால்களை விடுவிக்குமுன்பு ஜிம்மின் தலை என் கைகளை மீறிப் பின்னால் வளைந்தது. அவன்
உடலில் விறைப்புத்தன்மை உண்டானது. அவனுடைய கண்கள் செருகிப் பளபளப்பதை அந்த
நிலவொளியில் நான் பார்த்தேன்.
என்
உடல் முழுவதும் ஜில்லிட்டுப் போனது. அடிவயிற்றைப் பிசைந்தது. ஆனால் மூளை
நிச்சலனத்துடன் வாளாவிருந்தது. நான் பயந்த அந்த மோசமான விஷயம் நடந்துவிட்டது, எல்லாம் முடிந்துவிட்டது என்று தோன்றியது. ஈமச்சடங்கைப் பற்றிக் கூட நினைக்கத் தொடங்கியிருந்தேன்.
பார்வைக்கு
முரடாகத் தோன்றிய பெண்ணொருத்தி போர்த்தியபடி வீட்டுக்குள்ளிருந்து வெறுங்காலுடன் ஓடிவந்தாள். அவள் ஜிம்மைப்
பார்த்தாள். சட்டென்று அவனை என்னிடமிருந்து பறித்துக்கொண்டு அடுக்களைக்குள்
ஓடினாள். நான் இறங்கி அவள் பின்னால் ஓடினேன். அதை ஒரு பெரிய அதிர்ஷ்டம் என்றுதான்
சொல்லவேண்டும். அடுப்பு
கனன்று கொண்டிருந்தது. அடுப்புக்கு
மேலே கொக்கியில் மாட்டப்பட்டிருந்த தகரடப்பாவில் சில அழுக்குத்துணிகள் கொதித்துக்கொண்டிருந்தன.
பிரைட்டனின்
மைத்துனி மேசைக்கடியிலிருந்து ஒரு பெரிய கொப்பறையை இழுத்தாள். கொக்கியிலிருந்த
வாளியைத் திருகி அதிலிருந்த நீரை அழுக்குத்துணி உட்பட தொட்டியில் ஊற்றினாள்.
அறையின் ஒரு மூலையில் குளிர்ந்த நீரிருந்த குவளையைப் பற்றியிழுத்து அதையும் தொட்டியில் ஊற்றினாள்.
தண்ணீரின் சூட்டைக் கையால் பதம்பார்த்தாள். இவ்வளவையும் அவள் ஜிம்மைத் தன்
இடுப்பிலேந்தியபடியேதான் செய்தாள். அப்போது ஜிம் எப்படியிருந்தான் என்பதை என்
வாயால் விவரிக்க இயலாது. அவள் அவனை தொட்டிக்குள் நிற்கச் செய்து தண்ணீரை வாரி வாரி
இறைத்தாள். அவன் உடைகளைக் கிழித்துக் களைந்தாள்.
“அதோ… அந்த கடுகெண்ணெய் டப்பாவை எடுங்கள்… அதோ அந்தப் பலகைத்தட்டில்!” அவள் என்னைப் பார்த்துக் கத்தினாள்.
டப்பாவின்
மூடியை தொட்டியின் விளிம்பில் வைத்துத் தட்டித் திறந்தாள். ஆனாலும் தொடர்ந்து
ஜிம்மின் மேல் நீரை இறைத்துக்கொண்டும் அவனை பட்பட்டென்று புட்டத்தில்
தட்டியெழுப்பிக்கொண்டுமிருந்தாள்.
அது
ஒரு யுகம்போல் கழிந்தது. நான்?
நான் அன்று போல்
என்றுமே எந்த சிந்தனையுமின்றி வெறுமையாயிருந்ததே இல்லை. நான் உணர்வற்று
உறைந்திருந்தேன். கொஞ்சநேரம்
அவகாசம் பெற்றுக்கொண்டு
வெளியில் சென்று எல்லாம் முடிந்தபின்னர் திரும்பிவரவேண்டும்போல் இருந்தது.
நினைத்தபடி எல்லாமே ஒருநொடியில் நடந்துமுடிந்துவிட்டால்...? அப்படி நடப்பது எனக்கு எவ்வளவு பெரிய
நிம்மதியைத் தந்திருக்கும். ஈமச்சடங்கு நடந்து சில மாதங்களும்
ஆகிவிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நான் ஒரு சுயநலவாதியாய்
மாறியிருந்தேன். என்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
பிரைட்டனின்
மைத்துனி, ஜிம்மின் மேல் தொடர்ந்து
வெந்நீரை வாரியடித்துக்கொண்டும்,
புட்டத்தில்
பலமாகத் தட்டிக்கொண்டுமிருந்தாள். அவனுடைய முதுகை அவள் ஒடித்துவிடுவாள் என்று
எனக்குத் தோன்றியது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்குப் பிறகு ஜிம்மின் கைகால்கள்
தளர்ந்தன. அவன் தொட்டிக்குள் சரிந்து விழுந்தான். அவனுடைய கருவிழிகள் கீழிறங்கின. ஜிம்
இந்த உலகத்துக்கு மீண்டும் வந்துவிட்டான்.
“எல்லாம் சரியாகிவிட்டது, இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.
இப்போது சரியானாலும் திரும்பவும் வரக்கூடும். வரக்கூடாது என்றுதான் விரும்புகிறேன்..” அவள் களைப்போடு சொன்னாள்.
அவள்
தன் தமக்கையை அழைத்தாள். அப்பேதை இதுகாறும்
ஏதும் செய்யத் தெரியாமல்,
ஏதும் செய்யவும்
தோன்றாமல் அழுதுகொண்டு உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தாள்.
“ஜெஸ்ஸி, என் படுக்கையிலிருக்கும் புதிய வெள்ளைப்
போர்வையை எடுத்துவா. பிரைட்டன்,
அடுப்பிலிருந்து
விறகை எடுத்துவிட்டு எதையாவது கொண்டுவந்து அந்த துவாரத்தை அடைத்து வெப்பம் வெளியே
போகாமல் செய்ங்க.”
இரவுணவோ காலையுணவோ ஏதோவொன்றை திருமதி பிரைட்டன் தயார்
செய்திருந்தாள். மேசையின் மேல் சுத்தமான துணி விரிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த எல்லா
டப்பாக்களும் பளிச்சிட்டுக்கொண்டிருந்தன.
பழைய தகர டப்பாக்களை,
நம் கண்கள்
கூசுமளவுக்குத் தேய்த்துப் பளிச்சிட வைப்பதிலேயே
தன் ஆயுளை செலவழித்து, உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன ஒரு
பெண்மணியை அன்று அறிந்துகொண்டேன்.
பரிமாறப்பட்ட
ரொட்டி, மாட்டிறைச்சி, தேநீர் எதிலும் என் மனம் செல்லவில்லை.
நான் அமர்ந்து, பிரைட்டனின் மைத்துனியை அவள்
கவனியாதபோது ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் வாட்டசாட்டமாக இருந்தாள். வசீகரமாகவும் இருந்தாள். வயது நாற்பதிருக்கலாம். சதுர வடிவத் தாடையும் கோடு போன்ற மெல்லிய
உதடுகளையும் கொண்டிருந்தாள். அவள் என்னோடு எதுவும் பேசவில்லை. எந்த விவரமும் கேட்கவில்லை.
அவள் தன்
முன்னாலிருக்கும் வெற்றிடத்தைப் பார்த்தபடி நேராக நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.
அவள் முழங்கால்களுக்கிடையில் போர்வையால் சுற்றப்பட்டு ஜிம்
படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவள் ஒரு கையை ஜிம்மின் கழுத்துக்குக் கீழும் மற்றதை
அவன் மேலும் வைத்து மெல்ல அவனை முன்னும்பின்னுமாக ஆட்டிக்கொண்டிருந்தாள். தைத்துத் தைத்துக் களைத்த ஒருத்தி,
தன் தையல்வேலையை
மடியில் வைத்துக்கொண்டு கடந்தகால நினைவுகளில் மூழ்கியிருப்பதைப் போன்றிருந்தது
அக்காட்சி. ஜிம்தான் அந்த தையல்வேலைப்பாடு. அவள் அவனைப்பற்றிதான்
யோசித்துக்கொண்டிருப்பாள். அவ்வப்போது அவள் புருவத்தில் முடிச்சுகள் விழுந்தன.
கண்கள் இமைத்தன.
நான்
கொஞ்சம் தேநீரைப் பருகிவிட்டு மீண்டும் அவளை ஓரப்பார்வை பார்த்தேன். நான்
இயல்புநிலைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தேன். ஜிம்மை மீண்டும் பெறவிரும்பினேன்.
அவனுடைய முகத்தில் பழைய நிறம் வந்துவிட்டிருந்தது. விறைத்து நீட்டிய பிணத்தைப் போன்றில்லை. நான் அவளுக்கு
என் நன்றியைத் தெரிவிக்க விரும்பினேன். என் தொண்டையை எதுவோ அடைத்தது. நான் அவள்
பக்கம் மீண்டும் ஒரு கள்ளப்பார்வையை வீசினேன்.
ஒரு
பெண்ணின் கண்களில் இவ்வளவு விரக்தியும் அவநம்பிக்கையும் தென்பட்டு நான் பார்த்ததே
இல்லை. தோற்றுப்போன குதிரையைப் போல ஒரு நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து எழுந்தது. அவளுடைய பெரிய மார்பு இருமுறை
உயர்ந்தடங்கியது. ஒரு பாறையில் விழும் மழைத்துளி போல அவளுடைய பெரிய கண்களிலிருந்து
இரு பெரிய துளிகள் திரண்டு அவள் கன்னத்தில் விழுந்தன. நெருப்பின் ஒளியில் அவை
இரத்தத்துளிகளைப் போன்றிருந்தன.
“போய் படுத்துக்கொள்ளுங்க”
“மன்னிக்கணும். என்ன சொன்னீங்க?”
“படுக்கைக்குப் போங்க.
வீட்டுக்குள் ஸோஃபாவில் உங்களுக்கான படுக்கை போடப்பட்டிருக்கிறது.”
“ஆனால்… என் குதிரைகள்… “என் குதிரைகளும் வண்டியும். அங்கே முகாமில்
விட்டுவந்திருக்கிறேன்.”
“கவலைப்படாதீங்க.
பிரைட்டன்
வேலைக்காரனை அனுப்பி
ஓட்டிவரச் செய்வார்.
இப்போது நீங்க படுக்கைக்குப் போய் நன்றாக ஓய்வெடுங்க. குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன்.”
நான்
வெளியே வந்தேன். வெளியில் வந்ததே பெரிய நிம்மதியாக இருந்தது. ஓட்டிவந்த குதிரையைப்
பார்த்தேன். பிரைட்டன் அதற்கு தீவனம்
வைத்திருந்தார்.
ஆனால் அது தின்னாமல் பின்னங்கால்களில் மாறி மாறி நின்றுகொண்டிருந்தது. நான் என்
கைகளை அதன் கழுத்தைச் சுற்றிக் கோர்த்துக்கொண்டு என் முகத்தை அதன் பிடரியில்
புதைத்தபடி அழுதேன்.
குழந்தைப்
பருவத்துக்குப் பிறகான என் வாழ்க்கையில் இரண்டாவது அழுகை அது.
மலைகளுக்குப்
பின்னால் நிலா மறைந்துகொண்டிருந்தது. நான் படுக்கைக்குப் போனேன். மறுநாள் பிற்பகல்
வரை உறங்கினேன். எனக்கு விழிப்பு வந்தபோது ஜிம் பிரைட்டனின் மைத்துனியை எங்கள் வீட்டுக்கு
அழைத்துக்கொண்டிருந்தான். அவள் வருவதாக உறுதியளித்தாள்.
மாலையில் நான்
பார்த்தபோது, அவள் முற்றிலும் புதியவளாயிருந்தாள். பத்து வயது குறைந்தவளைப் போல் மிகுந்த
உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருந்தாள். ஜிம்மை தூக்கிக்கொண்டும் அவனுடன்
சிரித்து விளையாடிக்கொண்டுமிருந்தாள்.
சிட்னியைப்
பற்றியும் சிட்னி வாழ்க்கையைப் பற்றியும் வர்ணித்து இதுவரை நான் கேட்டறியாத பல
விவரங்களைச் சொன்னாள். கிட்டத்தட்ட நள்ளிரவு வரை அவள் பேசிக்கொண்டிருந்தாள்.
நானும் பிரைட்டனும் ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தோம். அவள் நான் சொல்லும்
எதையும் சட்டென்று புரிந்துகொள்பவளாயிருந்தாள். அவள் சொல்ல வருவதை ‘வந்து.. வந்து..’ போன்ற
இழுவைகளில்லாமலும் தயக்கமில்லாமலும் தலையிலடித்தாற்போல் ஒரே தடவையில்
சொல்லிமுடித்தாள்.
ஆனால் மறுநாள்
காலையில் மறுபடி அவள் மௌனமானாள். நான் என் வண்டியில் குதிரைகளைப் பூட்டி தயார்
செய்தேன். அவள் ஜிம்முக்கு உடை உடுத்தி, காலை உணவை உண்ணச்செய்தாள். போஸம் ரோமவிரிப்பொன்றையும் உபரித்
தலையணையும் கொடுத்தாள்.
இதோ, அந்த தர்மசங்கடமான
தருணம் வந்துவிட்டது. நான் அவளிடம் பேச முயன்று தயங்கி, மீண்டும் குதிரைகளை சரிபார்க்க திரும்பிவிட்டேன்.
மீண்டும் அவளிடம் விடைபெற முயன்று தோற்றேன். கடைசியில் அவளே முன்வந்து ஜிம்மைத்
தூக்கி முத்தமிட்டுவிட்டு வண்டியில் ஏற்றினாள். ஜிம் அவள் கழுத்தை இறுக்கிக்
கட்டிக்கொண்டு அவளை முத்தமிட்டான். அவன் தாயைத் தவிர வேறு யார்க்கும், எனக்கும் கூட
அபூர்வமாகவே முத்தமிடுவான். அவன் மற்றவர்களிடத்தில் அவ்வளவு பற்றுதலுள்ள குழந்தை
கிடையாது.
நான் இறங்கி
வண்டியைச் சுற்றிக்கொண்டு அவளிடம் சென்றேன். அவளிடம் கையைக் குலுக்கி எதையோ சொல்ல
முயன்றேன். ஆனால் என் குரல், எண்ணெயிடப்படாத வண்டிச்சக்கரம் போல் ஒலித்தது.
எனவே பேசும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு சிறு அழுத்தத்துடன் கைகுலுக்கி
விடைபெற்றேன்.
அவள் கண்களில்
கண்ணீர் திரண்டு வழிந்தது. சட்டென்று என் தோளைத் தொட்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.
“நீங்க
புறப்படுங்க. நீங்களே ஒரு குழந்தை போல இருக்கீங்க. பையனை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்க. உங்க
மனைவியிடம் அன்பாக இருங்க. உங்கள் நலனையும்
கவனித்துக்கொள்ளுங்க.”
“நீங்க எங்களைப் பார்க்க வருவீங்களா?”
“வருவேன், என்றைக்காவது…” அவள் சொன்னாள்.
நான் வண்டியைக்
கிளப்பினேன். அவள் ஜிம்மைப் பார்த்தபடியே நின்றிருந்தாள். ஜிம் மாவு மூட்டைகளின்
மேல் அமர்ந்தபடி அவளை நோக்கி கைகளை ஆட்டியபடியே வந்தான். இப்போது கண்ணீருக்கு
பதில் அவள் முகத்தில் விரக்தியும் வெறுமையும் வந்தமர்ந்துகொண்டதை கவனித்தேன்.
நடந்த நிகழ்வுகளை
மேரியிடம் மேலோட்டமாக சொன்னேன். நான் அவளைக் கலவரப்படுத்த விரும்பவில்லை. குல்காங்கிலிருந்து
வந்தபிறகு சில நாட்களுக்கு நான் வீட்டிலிருந்து குதிரைகளைக்
கவனித்துக்கொண்டிருந்தேன். ஆனால் மேரி பிரைட்டனின் வீட்டுக்குச் சென்று
பிரைட்டனின் மைத்துனியைப் பார்க்கவேண்டுமென்று நச்சரித்துக்கொண்டிருந்தாள். பன்றி
சேற்றில் உழல்வது போல் நான் எனக்கான வேலைகளில் மட்டும் உழன்றுகொண்டிருப்பதாக மேரி புலம்பியபடி இருந்தாள்.
ஒருநாள்
காலை அவள் தம்பியுடன் வில்வண்டியில் பிரைட்டனின்
வீட்டுக்குப் போனாள். நெடுந்தூரப்பயணம் என்பதால் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டு
மறுநாள் பிற்பகலில்தான் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் திரும்பிவந்தபோது நான் நன்றாகத்
தூங்கிவிட்டிருந்தேன். யாரோ என் தலையைக் கோதி கன்னத்தில் முத்தமிடுவதைப் போல்
உணர்ந்தேன்.
“பாவம்
என் செல்லப்பிள்ளை… பாவம் என் சின்னப்பிள்ளை.” மேரி சொன்னதைக் கேட்டேன்.
சடக்கென்று
துள்ளியமர்ந்தேன். ஜிம்முக்கு மறுபடியும்
ஏதோ நடந்துவிட்டதென்று நினைத்தேன். ஆனால் மேரி என்னைத்தான் குறிப்பிடுகிறாளென்று
பிறகு புரிந்தது. அவள் என் தலையிலிருந்து நரைமுடிகளைப் பிடுங்க ஆரம்பித்தாள். ஒரு
தீப்பெட்டிக்குள் இதுவரை சேகரித்திருந்தவற்றை எடுத்துப் பார்த்தாள். அவள் என்னிடம் பிரியமாயிருக்கும் வேளைகளில் இப்படிச் செய்வதை வழக்கமாக்கியிருந்தாள்.
மேரி, பிரைட்டனின்
மைத்துனியிடம் என்ன சொன்னாள் என்றோ, பிரைட்டனின் மைத்துனி மேரியிடம் என்ன சொன்னாள்
என்றோ எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன்பின்னான நாட்களில் மேரி என்னிடம் அளவுக்கு மீறிய
அன்பையும் அதீதப் பரிவையும் காட்டக் கண்டேன்.
@@@@@@@@@@@@
மூலக்கதை
– Brighten’s sister-in-law
மூலக்கதை
ஆசிரியர் – ஹென்றி லாஸன் (1867 – 1922)
தமிழாக்கம்
– கீதா மதிவாணன்