பார்ப்பதற்கு
எலி போலவே இருப்பதாலும் இவற்றின் உடலிலிருந்து கஸ்தூரியின் மணம் வீசுவதாலும் இவை கஸ்தூரி எலிக்கங்காரு (Musky rat-kangaroo) எனப்படுகின்றன. இதன் உயிரியல் பெயர் Hypsiprymnodon
moschatus என்பதாகும். Moschatus என்றால் லத்தீன்
மொழியில் கஸ்தூரி என்று பொருள். கங்காரு இனத்திலேயே
மிகச்சிறிய கங்காருகள் இவைதான். வால் உள்ளிட்ட உடலின் நீளம் 40 - 50 செ.மீ. தான் இருக்கும். எடை அதிகபட்சம் 680 கிராம். Hypsiprymnodontidae குடும்பத்தின்
ஒரே உறுப்பினர் என்பதோடு சுமார்
20 மில்லியன் ஆண்டுகாலமாய் ஆஸ்திரேலிய மண்ணில் வாழ்ந்துவரும் தொன்மப் பெருமையும் இவற்றுக்கு உண்டு.
மற்ற
கங்காருகளிடமிருந்து
வேறுபடுத்தும்
மேலும் பல சிறப்பியல்புகள் இவற்றுக்கு உண்டு. முக்கியமாய் இவை பகல்விலங்குகள். பகலில் இரைதேடி உண்டு இரவில் உறங்கி ஓய்வெடுக்கும். இவற்றால் எளிதில் மரமேற முடியும். இவற்றின் பாதங்களின் பின்புறம் அமைந்திருக்கும் பெருவிரல்கள் அதற்கு உதவுகின்றன. கோரைப்பற்களும் தாடை அமைப்பும் மட்டுமல்ல, பிற கங்காருகளைப் போல பின்னங்கால்களை மட்டும் ஊன்றித் தாவிப் போகாமல் முயல் போல நான்கு கால்களாலும் தத்திப்போகும் இயல்பிலும் மற்ற கங்காருகளிடமிருந்து வேறுபடுகின்றன.
இவை
ஒரு ஈட்டுக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனக்கூடியவை. பிற கங்காருகள் ஒரு குட்டிதான் ஈனும் என்பது குறிப்பிடத்தக்கது. 19 நாள் கர்ப்பத்துக்குப் பிறகு பிறக்கும் குட்டிகள் தாமே ஊர்ந்து சென்று தாயின் வயிற்றுப்பையை அடைகின்றன. அங்கே ஆறு மாதங்கள் பாலைக் குடித்து வளர்ந்து முழு வளர்ச்சி அடைகின்றன. பிற கங்காரு இனத்தைப் போல அடுத்தக் கருவை கருப்பையில் உறைநிலையில் பத்திரப்படுத்திவைக்கும் தன்மை இவற்றுக்குக் கிடையாது. அதனால் குட்டிகள் பையை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிறகே அடுத்த ஈட்டுக்கான இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. குட்டிகள் ஒரு வருடத்தில் பருவ முதிர்ச்சி அடைகின்றன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் நான்கு வருடங்கள்.
இவை மழைக்காட்டுப் பகுதிகளில் அடர்த்தியான
புதரில் காய்ந்த இலைகளைக் கொண்டு கூடு கட்டி அதில் வசிக்கின்றன. கூடுகட்டத்
தேவையான பொருட்களை போஸம்களைப் போலவே இவையும் வாலால் சுருட்டி எடுத்து வருகின்றன. கீழே விழுந்து கிடக்கும் பழங்கள், கொட்டைகள், பூஞ்சைகள் மற்றும் புழு பூச்சி போன்ற சிற்றுயிர்கள்தான் இதன் உணவு.
அதிகமாய்ப் பழங்கள் பழுத்துதிரும் காலங்களில் தேவைக்குப்போக எஞ்சிய பழங்களையும் கொட்டைகளையும் எடுத்துக் கொண்டுபோய் ஆங்காங்கே மண்ணில் குழிதோண்டிப் புதைத்து வைப்பதோடு வேறு யாரும் கவர்ந்து செல்லாதிருக்க, மேலே, இலைதழைகளைப் போட்டு மூடிவிடுகின்றன. கண்டுகொள்ளப்படாத பல, காலப்போக்கில் முளைவிட்டு வளர்ந்து பெருமரங்களாகி வனத்தை வளப்படுத்துகின்றன. மழைக்காடுகளின் தோட்டக்காரர்கள் என்று காஸோவரி பறவையையும் கஸ்தூரி எலிக்கங்காருவையும் தாராளமாகச் சொல்லலாம்.
படம் உதவி - விக்கிபீடியா
சுவாரஸ்யமான தகவல்கள். தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteமுகநூலில் இந்த படத்தை பார்த்ததும் எலின்னுதான் நினைச்சேன். புது தகவல்களை தெரிஞ்சுக்கிட்டேன் கீதாக்கா
ReplyDeleteஆமாம். எலி மாதிரிதான் இருக்கிறது. சட்டென்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினம்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.
Deleteஅரிய தகவல்கள்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Delete