31 August 2021

மிதக்கும் சொற்களுள் எனதும்

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள், ஃபேஸ்புக்கில் படக்கவிதைப் போட்டி ஒன்று கவிஞரும் கல்கியின் தலைமை உதவியாசிரியருமான அமிர்தம் சூர்யா அவர்களால் நடத்தப்பட்டது. 

கவிதை எழுதுவதற்காகக் கொடுக்கப்பட்டிருந்த ஓவியம் குறித்து அவர் தந்திருந்த குறிப்பு - \\ கல்பட்டா நாராயணன் மலையாளத்தில் எழுதி தமிழில் சைலஜா மொழிபெயர்த்த சுமித்ரா என்ற நாவலுக்கு ஓவியர் சீனிவாசன் நடராஜன் மத்தியப் பிரதேசப் பழங்குடிகளை நேரில் சென்று பார்த்து வரைந்த ஓவியம் இது. அந்தப் பழங்குடி பெண்கள் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதம்தான் இது. இதைத்தான் தரையில் நட்டு அலங்கரித்து கடவுளாக வழிபடுவார்கள். இதற்கு பலியும் தருவார்கள். அதுவும் முழுக்க பெண்கள் கட்டுபாட்டில் நடத்துவதுதான்.\\

படத்தையும் படம் சொல்லும் குறிப்பையும் வைத்து நான் எழுதியது கீழே:


  

வனமாள்பவளிடம் வாலாட்டாதீர்கள்

அங்குசமின்றி ஆனை பழக்குவோர் யாம்

பெண்ணுக்கெது அழகென்று பிதற்றாதீர்கள்

பிணமாகிப் பெருங்கழுகுக்கு இரையாவீர்கள்


அவள் இவள் உவள் என

உங்கள் நாட்டுப்பெண்டிர் கதைகளை

எம் காதுகளில் ஓதாதீர்கள்.

எம் உக்கிரத்தின் ஒரு பிடிபோதும்

உலையரிசியென உலகவிக்க.


நினைவில் கொள்ளுங்கள்..

காலங்காலமாய் 

காடணைந்துகிடக்கும் எம் கார்மேனியை

காவுகொள்ள நீளும் கொடுங்கரங்களைத்

துண்டாடும் ஆயுதங்கள் இம்மண்ணில் அல்ல

எம் இளமார்பின் மத்தியில் 

இறுக்கி நடப்பட்டிருக்கிறது.

உங்கள் அடிவயிற்றில் சொருகியுருவ 

அரைநொடியும் அதிகம்.

&&&

எழுதினேனே ஒழிய பிறகு மறந்தேபோய்விட்டேன். சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கவிதைகளும் தொகுப்பாக நூலாக்கம் பெற்றுள்ளன என்பதே அது. நா.கோகிலன் அவர்களின் தேநீர் பதிப்பகம் வாயிலாக நூல் வெளியாகியுள்ளது. 

நூலின் அட்டைப்படம் கீழே. 





கொசுறுத் தகவல்:

2014-ஆம் ஆண்டு அமிர்தம் சூர்யா அவர்கள் நடத்திய படக்கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு அசோகவனத்து ராமனாட்டம் என்ற கவிதையை எழுதியிருந்தேன். போட்டிக்கு வந்திருந்த கவிதைகளுள் அவருடைய ரசனை சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கவிதைகளுள் என்னுடையதும் ஒன்று. பரிசாக தேவதச்சன் கவிதைகள் புத்தகத்தைப் பெற்றேன். இம்முறை என் கவிதையும் ஒரு  புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அளப்பரிய மகிழ்ச்சி. 

&&&&

26 August 2021

தோட்டத்தின் துட்டர்கள்

 தோட்டத்துப் பிரதாபம் - 23


நாம் கஷ்டப்பட்டுப் பார்த்துப் பார்த்து வளர்க்கும் தோட்டத்துச் செடிகளையும் மரங்களையும் ஈவு இரக்கமே இல்லாமல் தாக்கி அழிக்கும் பூச்சிகளைப் பற்றியும் அவற்றைக் கட்டுப்படுத்தும் இயற்கைமுறையிலான வழிகளைப் பற்றியும் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறேன். அசுவினிப் பூச்சிகள் பற்றி முந்தைய பதிவொன்றில் பார்த்தோம். இந்தப் பதிவில் இலை துளைப்பான்  செதில் பூச்சி மற்றும் புடைப்புக் குளவி பற்றிப் பார்ப்போம்.

  

இலை துளைப்பான் புழு

 2. இலை துளைப்பான்சிட்ரஸ் வகை மரங்களைத் தாக்கும் பூச்சுகளிள் Leaf miner என்ற அந்துப்பூச்சிகள் பெரிய தலைவலி. பெயரைப் பார்த்தவுடனேயே தெரிந்திருக்குமே. ஆமாம், இந்த அந்துப்பூச்சிகள் இரவுநேரங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு மரங்களின் இலைகளில் முட்டையிட்டுச் சென்றுவிடும். முட்டையிலிருந்து பொரிந்துவரும் லார்வாக்கள் இலைகளைத் துளைத்து இலையில் மேல் சவ்வுக்கும் கீழ் சவ்வுக்கும் இடையில் சுரங்கம் அமைப்பது போல வழி அமைத்துப் பயணித்து இலையின் சதைப்பற்றான பகுதிகளைத் தின்று கொழுக்கின்றன. இலைகள் நோய் தாக்கினாற்போல் சுருண்டு சருகாகி மரத்தைத் திரங்கச் செய்துவிடுகின்றன. இப்புழுக்களை எளிதில் பார்க்க இயலாது. அவ்வளவு நுண்ணியவை. ஆனால் கோடு இழுத்தாற்போல இவை தின்றுகொண்டே போன வழித்தடத்தை வெகு எளிதில் பார்க்கமுடியும். பார்ப்பதற்கு வெகு அழகாக வரைந்து வைத்த ஓவியம் போல, ஒரு printed circuit board போல அவ்வளவு அழகாக இருக்கும். உள்ளே இருப்பதோ ஆபத்து.

இலை துளைப்பான் புழு தடம்
 

 இதற்கு என்ன தீர்வு என்று பார்த்தால் அந்துப்பூச்சிகளை இலைகளில் முட்டையிடாமல் தடுப்பதொன்றே வழி. எப்படித் தடுப்பது? முட்டையிட வருபவற்றைத் தடுக்க முடியாது. ஆனால் முட்டையிடுமுன் தடுக்கமுடியும். இதற்கெனவே பிரத்தியேகமாய் தயாரிக்கப்பட்ட, இரு பக்கமும் பசையுடன் கூடிய மஞ்சள் துண்டுத்தாள்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை சிட்ரஸ் மரங்களில் கட்டித்தொங்கவிட்டால் இரவு நேரத்தில் இலைகளில் முட்டையிட வரும் பெண் அந்துப்பூச்சிகள் அதில் ஒட்டிக்கொள்ளும். இது வருமுன் காக்கும் வழி. வந்தபின் காக்கும் வழியொன்றும் உண்டு. அது லீஃப் மைனரால் பாதிக்கப்பட்ட துளிர்ப்பகுதிகளை ஒட்டுமொத்தமாக வெட்டி அப்புறப்படுத்துவது. வெட்டிய பகுதிகளை மக்கும் உரத்தில் சேர்க்காமல் எரித்துவிடவேண்டும் அல்லது அப்புறப்படுத்திவிட வேண்டும்.

 

எலுமிச்சை மரத்தில் புடைப்பு

3. Gall wasps - இவற்றிற்கு தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை. இவை மரங்களின் இளம் கிளைகளைத் துளைத்து முட்டையிட்டுச் செல்லும். முட்டைகள் உள்ளே வளர்ந்து லார்வாக்கள் உள்ளுக்குள்ளேயே தின்று கிளைகளில் பாதிப்பை உண்டாக்குகின்றன. இவற்றை எளிதில் கண்டறிய இயலும். இளம் கிளைகளில் ஆங்காங்கே முட்டு முட்டாகக் காணப்படும். ஆரம்பத்தில் இவை என்னவென்று தெரியாமல் அலட்சியமாய் விட்டுவிட்டேன். இவற்றின் பாதிப்பு குறித்து அறிந்தபிறகு உடனடியாக செயல்பட்டு நீக்கினேன். பெரிதாய் ஒன்றுமில்லை. எங்கெல்லாம் புடைப்பாக இருக்கிறதோ அந்தக் கிளைகளை அந்த புடைப்புகளுடன் அப்படியே வெட்டி எடுத்துவிடவேண்டும். வெட்டும்போது புடைப்பை ஒட்டி வெட்டாமல்  இரண்டு அங்குலமாவது தள்ளி வெட்ட வேண்டும். ஒருவேளை உள்ளே லார்வாக்கள் குடைந்துகொண்டே சென்றிருந்தால் அவற்றையும் சேர்த்து அப்புறப்படுத்த இந்த வழி. வெட்டியப் பகுதிகளை அப்படியே வீசிவிடாமல் எரித்துவிடவேண்டுமாம். இல்லையென்றால் மீண்டும் அவை வளர்ந்து பெருகிவிடுமாம். 

கிளையை வெட்டாமல் இந்தக் குளவிகளிடமிருந்து மரத்தைப் பாதுகாக்க இன்னொரு வழியை சமீபத்தில் அறிந்துகொண்டேன். அது குளவிகளின் லார்வாக்கள் இருக்கும் புடைப்பான இடத்தை மெல்லிய பேனாக்கத்தி அல்லது காய்கறியின் தோல் சீவும் peeler கொண்டு மேற்புறத்தை சீவிவிடுவது. காற்றும் வெப்பமும் படுவதால் உள்ளிருக்கும் லார்வாக்கள் செத்துவிடும். புடைப்பில் ஊசி துவாரங்கள் போல ஓட்டைகள் காணப்பட்டால் லார்வாக்கள் குளவிகளாக மாறிப் பறந்துவிட்டன என்று அர்த்தம். எனவே மரத்தை அவ்வப்போது கண்காணித்து புதிய புடைப்புகளைக் கண்டுபிடித்து உடனடியாக செயல்பட்டு நீக்கவேண்டும். 

 

செதில் பூச்சிகள்
செதில் பூச்சிகள்

 4. Scale insectsஇவை செதில் போல இருப்பதால் செதில் பூச்சிகள் எனப்படுகின்றன. இவற்றின் இருப்பை மரத்தில் ஊறும் எறும்புகளைக் கொண்டு அறிந்துகொள்ளமுடியும். அசுவினிகள் இருந்தாலும் எறும்புகள் ஊறிக்கொண்டிருக்கும். எறும்புகளைப் பின்தொடர்ந்துபோய் கவனித்தால் இந்தப் பூச்சிகளின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியும். எறும்புகள் என்ன செய்கின்றன என்று பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். இந்த செதில் பூச்சி மற்றும் அசுவினிப் பூச்சிகளுக்கு எறும்புகள்தான் பாதுகாவலர்கள். இந்தப் பூச்சிகள் தங்கள் உடலிலிருந்து வெளியேற்றும் honeydew எனப்படும் இனிப்பு திரவத்துக்கு பிரதிபலனாக அவற்றை எறும்புகள் பாதுகாக்கின்றன. நாம் பண்ணை வைத்து கால்நடைகளைப் பராமரிப்பது போலவே எறும்புகள் செதில் பூச்சி, அசுவினிப் பூச்சி போன்றவற்றைப் பராமரிக்கின்றன. இது Ant farming என்று குறிப்பிடப்படுகிறது. பால்காரர்கள் பால் கறப்பதற்குமுன் பசுவின் மடியைத் தட்டி, பாலைச் சுரக்கத் தூண்டுவது போல, எறும்புகள் தங்கள் முன்னங்கால்களால் பூச்சிகளைத் தட்டித் தூண்டி honeydew-வை சுரக்கச் செய்கின்றன. திரவம் வெளியேற்றப்பட்டவுடன் உறிஞ்சிக்கொண்டு தங்கள் இருப்பிடம் திரும்புகின்றன. இச்செயலை ஆங்கிலத்தில் milking என்றே சொல்கிறார்கள்.

 

செதில் பூச்சிகள்

செதில் பூச்சிகள் குறைந்த அளவில் தென்பட்டால் கையாலேயே அப்புறப்படுத்திவிட முடியும். கொஞ்சம் அதிகமாக இருந்தால் பழைய டூத் பிரஷ் வைத்துத் தேய்த்து சாகடித்துவிடலாம். கையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போய்விட்டால் வேப்பெண்ணெய்க் கரைசல், சோப்புக் கரைசல், தேமோர்க் கரைசல் போன்ற சுலபமான, இயற்கை முறையிலான வீட்டுத் தயாரிப்புகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். இக்கரைசல்களைத் தயாரிப்பதும் எளிதுதான். 


வேப்பெண்ணெய்க் கரைசல் செய்யத் தேவையானவை

தண்ணீர் - 1 லிட்டர்

வேப்பெண்ணெய் – 15 மி.லி.

dishwashing liquid – ஒன்றிரண்டு சொட்டு

பாத்திரம் துலக்கப் ப யன்படுத்தும் லிக்விட் சோப்புக்கு பதிலாக ஷாம்பூ கூட பயன்படுத்தலாம். மேலே சொன்ன மூன்றையும் ஒரு பாட்டிலில் நன்கு குலுக்கிக் கலந்தால் எல்லாம் ஒன்றாகி, பார்ப்பதற்கு பால் போல இருக்கும். அதை அப்படியே ஸ்ப்ரேயர் மூலம் செடிகளில், இலைகளின் மேல்,கீழ் என எல்லாப் பகுதிகளிலும் தெளிக்கவேண்டும்.  

 

சோப்புக் கரைசல் - இது white oil என்று சொல்லப்படுகிறது. இதை செய்வது இன்னும் எளிது. தேவையானவை

சமையல் எண்ணெய் – 2 கப்

பாத்திரம் துலக்கும் லிக்விட் சோப் – அரை கப்.

ஒரு பாட்டிலில் இவற்றை ஊற்றி மூடி போட்டு நன்கு குலுக்கிக் கலக்கினால் வெள்ளை நிறத்தில் எண்ணெய் போல ஆகிவிடும். அதனால்தான் இதை white oil என்கிறார்கள். இதை வெயில் படாத குளிர்ந்த இடத்தில் ஒரு மாதம் வரை store பண்ணி வைக்கலாம். தேவைப்படும்போது ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மேசைக்கரண்டி அளவு (20 மிலி) என்ற கணக்கில் இந்த எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கி ஸ்ப்ரேயர் மூலம் பூச்சிகள் தாக்கியுள்ள செடி மற்றும் மரங்களின் இலை, காம்பு என பரவலாக தெளிக்கவேண்டும். இலையின் மேல்பகுதி, கீழ்ப்பகுதி என எல்லா இடத்திலும் இந்தக் கரைசல் படுமாறு தெளிக்கவேண்டும். வீரியம் அதிகம் என்பதால் இதை வெயில் நேரத்தில் தெளிக்கக்கூடாது. வெப்பம் தணிவாக இருக்கும் காலையிலோ மாலையிலோ தான் தெளிக்கவேண்டும். அசுவினி, செதில் பூச்சி, மாவுப்பூச்சி, இலைத்துளைப்பான், பச்சைப்புழு, கம்பளிப்புழு என சகல விதமான பூச்சிகளிடமிருந்தும் நிவாரணம் தரக்கூடியது  இந்த எளிய ஆனால் வீரியமிக்க சோப்புக் கரைசல்.

 

தேமோர்க் கரைசல் – ஏற்கனவே இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தாலும் இப்போதும் சொல்லிவிடுகிறேன். இதற்கும் நாம் பெரிய அளவில் மெனக்கெடத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கலாம். தேமோர்க் கரைசல் என்பது தேங்காய்ப்பால் மற்றும் மோர் இவற்றைப் புளிக்கவைத்து தயாரிக்கும் கரைசல் தான். நல்ல பயிர் ஊக்கியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் இதன் பயன்பாடு மிக அதிகம். பூப்பிடிக்கும் காலத்தில் தெளித்தால் பூக்கள் எக்கச்சக்கமாகப் பூக்கும். இதற்குத் தேவையானவை

புளித்த மோர் - 1 லிட்டர்

தேங்காய்ப்பால் - 1 லிட்டர்

இரண்டையும் நன்கு கலக்கி அகலமான வாயுள்ள பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் ஊற்றி நன்கு மூடி தோட்டத்திலேயே ஒரு பக்கம் நிழலில் இருக்குமாறு வைக்கவேண்டும். ஒரு வாரத்தில் கலவை நன்கு புளித்திருக்கும். அதைக் கலக்கி விட்டு 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து ஸ்ப்ரேயர் மூலம் செடிகளுக்குத் தெளிக்கலாம். சிலர் மண்பானையில் ஊற்றி துணியால் வேடு கட்டி வைக்கிறார்கள். ஆனால் அதில் புழுக்கள் வர வாய்ப்பிருப்பதால் இறுக்கமான மூடி போட்ட பாட்டிலில் வைப்பது நல்லது. நான் அப்படிதான் வைக்கிறேன். 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள கரைசல்களைத்தான் மாற்றி மாற்றி அவ்வப்போது பயன்படுத்துகிறேன். இரசாயனப் பூச்சிக்கொல்லிகளை ஒருகாலத்திலும் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். பூச்சிக்கொல்லி என்ற கருத்தியலே தவறானது என்கிறார்கள் வேளாண் அறிஞர்கள்.  பூச்சிகளை விரட்டலாமே தவிர கொல்லக்கூடாது என்கிறார்கள். 

பூச்சிகள் இல்லாத உலகம் இல்லை. பூச்சிகள் இல்லாவிடில் உலகமே இல்லை. ஆனால் நாம் எப்போதும் நம்மைப் பற்றி மட்டும்தானே சிந்திக்கிறோம்.  நமக்கு நன்மை செய்பவற்றை நல்ல பூச்சிகள் என்றும் கெடுதல் செய்பவற்றை கெட்ட பூச்சிகள் என்றும் வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். இயற்கையின் சமநிலையைப் பேணுவதில் தங்கள் இருப்பின் முக்கியத்துவம் பற்றிய பிரக்ஞை எதுவும் இன்றி அவை அவற்றின் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நாம்தான் புரிந்துகொள்வதில்லை.      

பயிரழிக்கும்  பூச்சிகளை ஸ்வாகா செய்து தோட்டத்துக்கு நன்மை செய்யும்  தோட்டத்து நண்பர்கள் பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம். 


 &&&&&

பிரதாபங்கள் தொடரும்