தோட்டத்துப் பிரதாபம் - 20
பொறிவண்டு |
தோட்டம் என்றாலே பூச்சிகள் தொல்லை இருக்கும். இருக்கவும் வேண்டும். ஏனெனில் தோட்டத்துப் பயிரைத் தின்னும் பூச்சிகள் (pests) இருந்தால்தான் அவற்றைத் தின்றுவாழும் நன்மை செய்யும் பூச்சிகளும் (beneficial insects) வாழ முடியும். இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது எவ்வளவுக்கு எவ்வளவு தீமை செய்யும் பூச்சிகள் அழியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை செய்யும் பூச்சிகளும் அதனால் அழிவது உறுதி. அதனால்தான் இரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டியது அவசியமாகிறது. சரி, இரசாயனப் பூச்சிக்கொல்லி இல்லையென்றால் எப்படிதான் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது? என்னுடைய சில அனுபவங்களைப் பார்ப்போம்.
எலுமிச்சை இலையில் அசுவினிகள் |
1.முதல் தலைவலி அசுவினிகள் (aphids). இலைகளில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சாற்றை உறிஞ்சி வாழ்பவை. இவற்றின் இனப்பெருக்கம் கற்பனைக்கே எட்டாத அளவில் இருக்கும். இவை செடிகளில் இருந்தால் எறும்புகளின் நடமாட்டமும் இருக்கும். காரணம் என்ன தெரியுமா? எறும்புகள்தான் இவற்றைப் பேணி வளர்க்கின்றன. இவற்றின் உடலிலிருந்து வெளிவரும் இனிப்பான திரவத்தைப் பெறுவதற்காகவே எறும்புகள் இவற்றைப் பாதுகாக்கின்றன.
அசுவினியும் எறும்பும் |
எறும்புகள் தங்கள் முன்னங்கால்களால் அசுவினிகளின் உடல்களில் மெதுவாகத் தட்டுவதன் மூலம் அத்திரவத்தை வெளியேற்றச் செய்கின்றன. அதற்கு milking aphids என்று பெயர்.
ரோஜாவில் அசுவினிகள் |
எலுமிச்சையில் மட்டுமல்ல, ரோஜா, பரங்கி, கத்திரி, வெண்டை என தோட்டத்தின் எல்லாச் செடிகளிலும் அசுவினிகள் படையெடுக்கும். ஆனால் இவற்றை அழிக்க நான் பெரிய அளவில் எப்போதுமே மெனக்கெடுவதில்லை. காரணம், பொறிவண்டுகள்.
பொறிவண்டுகள் |
அசுவினியின் பாதிப்பு உண்டான இரண்டொரு நாளிலேயே பொறிவண்டுகள் (ladybugs or ladybirds) எங்கிருந்தோ அழைப்பு வைத்தாற்போல தோட்டத்துக்கு வந்துவிடும். ஒன்றிரண்டு வந்தாலும் உடனடியாக இனத்தைப் பெருக்கி இரண்டு மூன்று வாரங்களில் அசுவினிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடும்.
அசுவினியைத் தின்னும் பொறிவண்டு |
பொறிவண்டு லார்வாவைத் துரத்தும் எறும்புகள் |
பொறிவண்டுகள் மட்டுமல்ல, பொறிவண்டுகளின் லார்வாக்களும் அசுவினிகளைத் தின்பதால் விரைவிலேயே அசுவினிகள் இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்பட்டுவிடும்.
எலுமிச்சை மொட்டுவைத்த வேளையில் எக்கச்சக்கமாகப் பரவிய அசுவினிக் கூட்டத்தை ஒரே வாரத்தில் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டன பொறிவண்டுகள்.
ஹோவர்ஃப்ளை |
அசுவினிகளைக் கட்டுப்படுத்துவதில் hoverfly ஈக்களுக்கும் அவற்றின் லார்வாக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. எங்கள் தோட்டத்தில் அவை எக்கச்சக்கம்.
ஹோவர்ஃப்ளை லார்வா |
அசுவினிக்குளவிகள் (aphid wasps) என்றொரு குளவி வகை இருக்கிறது. மிகவும் நுண்ணிய அளவில்தான் இருக்கும். இவை அசுவினிகளில் உடலில்தான் முட்டையிடுகின்றன.
அசுவினிக்குளவி |
முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் உள்ளிருந்தபடியே அசுவினியைத் தின்றுவளர்ந்து கூட்டுப்புழுவாகிப் பின் குளவியாகி வெளிவருகின்றன. இயற்கை எப்படியெல்லாம் ஒன்றையொன்று கட்டுப்படுத்தும் வித்தையை அறிந்துவைத்திருக்கிறது.
படத்தில் மற்ற அசுவினிகளோடு பழுப்பு நிறத்தில் குண்டு குண்டாக இருப்பவை அசுவினிக்குளவிகள் முட்டையிட்ட அசுவினிகள். இவை தவிர lacewings எனப்படும் பூச்சிகளும் அசுவினியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. கீழே படத்தில் இருப்பது Blue eyes lacewing.
அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கையிலேயே இத்தனைப் பூச்சிக்கொல்லிகள் இருக்கும்போது இரசாயனப் பூச்சிக்கொல்லிக்கு என்ன வேலை, சொல்லுங்க?
எலுமிச்சையைத் தாக்கும் செதில் பூச்சி மற்றும் இலை துளைப்பான் பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
(பிரதாபங்கள் தொடரும்)
எத்தனை எத்தனை உயிரினங்கள் - இறைவனின் படைப்பில்.
ReplyDeleteதகவல்கள் வியக்க வைக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteவியக்க வைக்கும் செய்திகள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Delete