ஜாடிச்செடிப் பூ (1) |
மற்ற எல்லாப் பூக்கும் தாவரங்களையும் போல ஊனுண்ணித் தாவரங்களும் பூக்கும்; காய்க்கும்; விதைகளை உருவாக்கும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் மகரந்தச் சேர்க்கை எப்படி நடக்கும்? இவைதான் பூச்சித்தின்னிகளாச்சே! மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளை எல்லாம் தாவரமே பிடித்துத் தின்றுவிட்டால் பிறகு மகரந்தச் சேர்க்கை எப்படி நடக்கும் என்ற சந்தேகம் எழும். இவைதான் புத்திசாலியான தாவரங்களாயிற்றே! அதற்கும் தந்திரமாக ஏதேனும் உத்திகளைக் கையாளாமலா இருக்கும்?
மகரந்தச் சேர்க்கையைப் பொறுத்தவரை, ஊனுண்ணித் தாவரங்கள் மூன்று வகையான உத்திகளைச் செயல்படுத்துகின்றன.
உத்தி 1:
சில தாவரங்களில் பூச்சிகளைப் பிடிக்கும் இலைகள் தாழ்வாக இருக்கும். ஆனால் அவற்றின் பூக்களோ தங்களுக்கும் செடிக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நீளமான காம்புகளுடன் செங்குத்தாக வளர்ந்து உயரத்தில் பூக்கும். தேன் உண்ணப் பறந்து வரும் தேனீக்களும் வண்டுகளும் உயரத்தில் பூத்திருக்கும் பூக்களில் தேன் அருந்திவிட்டு அப்படியே பறந்துபோய்விடும். கீழே இருக்கும் இலைகளிடம் சிக்கிக்கொள்ளாது. இலைகளுக்கு இரையாக இருக்கவே இருக்கின்றன, தரையில் ஊர்ந்துவரும் எறும்புகளும் புழு பூச்சிகளும்.
உத்தி 2:
சில வகை ஊனுண்ணித் தாவரங்களின் உத்தி வேடிக்கையானது. பூக்களில் இனிய நறுமணத்தை உற்பத்தி செய்யும் அவை தமது இலைகளில் அழுகிய மாமிச வாடையை உற்பத்தி செய்யும். நறுமணத்தை விரும்பும் பூச்சிகள் மாமிச வாடையை விரும்பாது. எனவே இலைகளின் பக்கம் போகாது. மாமிச வாடையை விரும்பும் பூச்சிகள் நறுமணத்தை விரும்பாது. எனவே பூக்களின் பக்கம் போகாது. சைவத்துக்கும் அசைவத்துக்கும் தனித்தனியாக விருந்தழைப்பு கொடுக்கும் அவ்வகை தாவரங்கள், சைவப் பிரியர்களுக்கு விருந்தளிக்கும். அசைவப் பிரியர்களை அதுவே விருந்தாக்கிக் கொள்ளும்.
உத்தி 3:
‘காரியம் ஆகும் வரை காலைப்பிடி, காரியம் முடிந்ததும் கழுத்தைப் பிடி’ என்பது போல சில வகை ஊனுண்ணித் தாவரங்களின் உத்தி சற்று கயமையானது. பாரபட்சம் அற்றது. இலைகள் உருவாவதற்கு முன்பே பூக்களை மலரச் செய்யும் அவை, மகரந்தச் சேர்க்கைக் காலம் முடிந்த பிறகு, இலைகளை உருவாக்கும். அப்போது பிற பூச்சியினங்களோடு, முன்பு மகரந்தச் சேர்க்கைக்கு உதவிய பூச்சியினங்களையும் துளியும் ஈவு இரக்கம் இல்லாமல் தமக்கு இரையாக்கிக் கொள்ளும்.
ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து... |
பூக்கள் என்பதே தாவரங்களின் இனப்பெருக்கத்திற்காக உருவான பிரத்தியேக அம்சங்கள்தாம். மணம், நிறம், வடிவம், தேன், மகரந்தம் போன்ற ஈர்க்கும் உத்திகளால் பூச்சிகள், பறவைகள், விலங்குகள், வௌவால்கள் போன்ற உயிரினங்கள் மூலமாகவோ, காற்று, நீர், மழை போன்ற இயற்கைக் காரணிகள் வாயிலாகவோ மகரந்தச்சேர்க்கையை வெற்றிகரமாக நடத்தி விதைகளை உருவாக்கி தங்கள் சந்ததியை அழியவிடாமல் பாதுகாக்கின்றன. மலர்களுள் முழுமையான மலர், முழுமையற்ற மலர் என இருவகை உண்டு.
முழுமையான மலர் எனப்படுவது ஒரே பூவில் மகரந்தத்தாள் வட்டம் (ஆண் உறுப்பு) மற்றும் சூலக வட்டம் (பெண் உறுப்பு) இரண்டும் அமைந்திருக்கும். கத்தரி, வெண்டை, தென்னை இவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
சில பூக்கள் மகரந்தத்தாள் வட்டம் அல்லது சூலக வட்டம் இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் முழுமையற்றவையாக இருக்கும். உதாரணம் பறங்கி, பாகல், தர்ப்பூசணி போன்றவை. இவற்றில் ஒரே கொடியில் ஆண் பூக்கள் தனியாகவும் பெண் பூக்கள் தனியாகவும் பூக்கும்.
ஆண் & பெண் பறங்கிப்பூக்கள் |
பப்பாளி, பனை, சவுக்கு போன்றவற்றிலோ ஆண் மரம், பெண் மரம் என்று இரண்டு மரங்களும் தனித்தனியாக வளரும். ஆண் மரத்தில் ஆண் பூக்கள் பூக்கும். காய்க்காது. பெண் மரத்தில் பெண் பூக்கள் பூக்கும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு காய்கள் உருவாகும்.
பெண் சவுக்கு மரம் பெண் பூக்களுடன் |
ஆண் சவுக்கு மரம் ஆண் பூக்களுடன் |
இப்போது ஊனுண்ணித் தாவரங்களின் பூக்களைப் பார்ப்போம்.
கீழே படத்தில் இருப்பவை ஊதுகுழல் ஜாடிச்செடி (Pitcher plants) எனப்படும் Sarracenia வகை ஊனுண்ணித் தாவரத்தின் பூக்கள். இவை வேர்க்கிழங்கிலிருந்து நேரடியாக வெளிவரும் சுமார் இரண்டு அடி உயர இலையில்லாத் தண்டின் உச்சியில் மலர்கின்றன.
ஜாடிச்செடிப் பூ (2) |
ஜாடிச்செடிப் பூ (3) |
இவற்றில் தேனீக்கள் மற்றும் Bumblebees எனப்படும் வண்டுத்தேனீக்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. 'ஜாடிச்செடி ஈ' எனப்படும் குறிப்பிட்ட ஈக்களின் மூலமும் சிலவற்றில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
ஜாடிச்செடிப் பூ (4) |
ஜாடிச்செடிப் பூ (5) |
பூக்களுக்குள் நுழைந்து வெளியேறும் பூச்சிகளின் உடலில் மகரந்தம் ஒட்டிக்கொள்வதற்கு ஏதுவாக இப்பூக்கள் நேராக நிமிர்ந்து நிற்காமல் தரை பார்த்தபடி தலைகவிழ்ந்த நிலையில் பூக்கின்றன.
ஜாடிச்செடிப் பூ (6) |
ஜாடிச்செடிப் பூ (7) |
மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு காய்கள் உருவாகும். காய்கள் முற்றி வெடிப்பதன் மூலம் விதைபரவல் நடைபெறுகிறது.
கெண்டிச்செடி (நெபந்தஸ் வகை) |
Nepenthes வகை கெண்டி அல்லது குடுவைச்செடியில் ஆண் நெபந்தஸ் செடி, பெண் நெபந்தஸ் செடி என இரண்டும் தனித்தனி செடிகளாக உள்ளன. எனவே ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித்தனிச் செடிகளில் பூக்கின்றன. கீழே முதல் இரண்டு படங்களில் இருப்பவை ஆண் பூக்கள். அடுத்த இரண்டு படங்களில் இருப்பவை பெண் பூக்கள். மகரந்தச் சேர்க்கைக்கு இவை பூச்சிகளையே நம்பியுள்ளன. ஈ, கொசு, குளவி, அந்துப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி போன்றவை மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
நெபந்தஸ் ஆண் பூக்கள் close-up |
நெபந்தஸ் பெண் பூக்கள் |
நெபந்தஸ் பெண் பூக்கள் close-up |
யூட்ரிகுலாரியா பூ (1) |
யூட்ரிகுலாரியா பூ (2) |
பனித்துளி பசைச்செடி |
பனித்துளி பசைச்செடி பூ (1) |
பனித்துளி பசைச்செடி பூ (2) |
வெண்ணெய்ச்செடியின் பூக்களும் இலைகளும் |
வெண்ணெய்ச்செடியின் பூ |
ஊனுண்ணித் தாவரங்கள் எவ்வளவு சமயோசிதமாக தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன! இயற்கையின் அதிசயத்தை என்னவென்று சொல்வது? விலங்குகள், பறவைகளைப் போன்று நடந்தோ பறந்தோ இரைதேட இயலாத தாவரங்கள், தங்களுக்குத் தேவையான உணவையும் ஊட்டச்சத்துக்களையும் அவை வேரூன்றியிருக்கும் மண்ணில் கிடைக்காத நிலையில், தாங்களே தங்கள் முயற்சியால் அவற்றைப் பெறும் பொருட்டு எந்த அளவுக்கு வியக்கத்தக்க வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன!
இப்படியே இவை தங்கள் தகவமைப்பு உத்திகளைப் பெருக்கிக்கொண்டே போனால், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அம்புலி மாமா கதைகளில் வந்ததைப் போன்று மனிதர்களைப் பிடித்துத் தின்னக்கூடிய அளவில் பெரிய பெரிய ஊனுண்ணி மரங்கள் உருவானாலும் ஆச்சர்யமில்லை.
ஜாடிச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 1)
பனித்துளி பசைச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 2)
வெண்ணெய்ச்செடி (ஊனுண்ணித் தாவரங்கள் 3)
வீனஸ் வில்பொறி (ஊனுண்ணித் தாவரங்கள் 4)
தகவல்கள் அனைத்தும் சிறப்பு. வழமை போல, படங்கள் அசத்தல்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteசிறப்பு
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
Deleteஊனுண்ணித் தாவங்களின் உத்திகள் அதிசயிக்க வைக்கின்றன. ‘அம்புலி மாமா’ கதைகள் நினைவுக்கு வந்தது, நீங்களும் இறுதியில் சொல்லி விட்டீர்கள். படங்களும் பகிர்வும் மிக நன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. உண்மைதான். ஊனுண்ணித் தாவரங்கள் பற்றி இப்போதும் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் அதிசயத் தகவல்கள் வரக்கூடும். பார்ப்போம் :))
Deleteஊனுண்ணித்தாவரங்களை பற்றி படிக்க படிக்க வியப்பும் ஏற்படுகிறது.
ReplyDeleteஎப்படி எல்லாம் இயற்கை படைப்புகள் இருக்கிறது. ராட்சத கொடிகள் , பூக்கள் விட்டாலச்சரியார் படங்களில் பார்த்து வியந்து இருக்கிறேன் . அவை மனிதர்களை உண்டு விடும்.
உண்மையில் இப்படி நடக்கும் சாத்தியம் வந்தாலும் ஆச்சிர்யமில்லைதான்.
அசைவ, சைவ ப்ரியர்களுக்கு விருந்தழைப்பு வியக்க வைக்கிறது.
கெண்டி செடி, ஆண்பூக்கள், பெண் பூக்கள் எல்லாம் வியப்பு, இருந்த இடத்தில் இருந்தே உணவை சேகரித்து தங்கள் வாழ்க்கையை தக்க வித்து கொண்டும், பரிணம வளர்ச்சி அடைவது வியப்புதான்.
உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள். படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி கோமதி மேம். இங்குள்ள தாவரவியல் பூங்காவில் சுமார் ஒரு வருட காலம் ஊனுண்ணித் தாவரங்களை வளர்த்துக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஓரளவு கேள்விப்பட்டிருந்த அவற்றை நேரில் பார்த்தும் அவற்றின் உத்திகள் பற்றி மேலும் அறிந்தும் வியந்தேன். அதை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.
Deleteஇரண்டு மூன்று நாளாக உங்கள் பதிவை காட்ட மாட்டேன் என்றது, தேடும் பதிவு இல்லை என்றது.
ReplyDeleteபடங்களை சேர்ப்பதற்குள்ளாகவே தவறுதலாக பப்ளிஷ் ஆகிவிட்டது. அதனால் மறுபடியும் ட்ராஃப்டில் போட்டு பிறகு பப்ளிஷ் பண்ணினேன். அதனால் அப்படிக் காட்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.
Delete