17 May 2024

வீனஸ் வில் பொறி (ஊனுண்ணித் தாவரங்கள் 4)

 

 


வில் பொறி - எவ்வளவு அழகான பெயர்! வில்லைப் போன்ற அசுரவேகத்தில் பூச்சிகளைப் பொறிவைத்துப் பிடிக்கும் தாவரத்துக்கு இதைவிடவும் பொருத்தமான பெயர் இருக்கமுடியுமா? இதன் அறிவியல் பெயரும் ஆங்கிலப் பெயரும் கூட சுவாரசியமானவை. 

Dionaea muscipula என்பது வீனஸ் வில் பொறியின் அறிவியல் பெயர். Dionaea என்றால் ‘Daughter of Dione’ என்று பொருள். டயோன் என்னும் கிரேக்கப் பெண் கடவுளின் மகள்தான் காதல் தேவதையான வீனஸ். லத்தீன் மொழியில் musca என்றால் ஈ என்று அர்த்தம். ஆண்களை வசீகரித்து தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தும் அழகியான வீனஸைப் போன்று இந்தச் செடியும் தன்னுடைய நிறத்தாலும் மணத்தாலும் பூச்சிகளை தன் வசம் ஈர்த்து வீழ்த்துவதால்தான் இதற்கு ஆங்கிலத்தில் ‘Venus flytrap’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வட அமெரிக்க மாநிலங்களான வடக்கு கரோலினாதெற்கு கரோலினாஃப்ளோரிடாநியூ ஜெர்ஸி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.   



வீனஸ் வில் பொறி இலைகளின் வடிவமும் நிறமும் அவ்வளவு வசீகரமானவை. கொழுக்கட்டை அச்சு போன்று இரண்டாகப் பிளந்திருக்கும் அவற்றின் விளிம்பில் நீளமான முள் போன்ற பற்கள் காணப்படும். அது பூச்சிகளைப் பிடிக்கும் நுண்வேகம் நம்மை வியப்பிலாழ்த்தும்.  

எனக்கு இந்த வில் பொறி வேலை செய்வதைப் பார்க்கும்போது நாம் குழந்தைகளோடு விளையாடும் ‘அம்மா குத்து அப்பா குத்து’ விளையாட்டுதான் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கும் அந்த விளையாட்டு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைக்கு நேர் எதிரில் நாம் அமர்ந்துகொண்டு நம்முடைய இரண்டு கைகளையும் கிண்ணம் போல குவித்துவைக்க வேண்டும். குழந்தையிடம் அதற்குள் கையால் குத்தச் சொல்வோம். அம்மா குத்து, அப்பா குத்து என்று ஆரம்பித்து ஒவ்வொரு குத்துக்கும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர் பெயரைச் சொல்வோம். கடைசியாக ‘புள்ளையார் குத்து’ வரும். அதைச் சொன்னதும் குழந்தை உஷாராகிவிடும். ஏனென்றால் அடுத்தது ‘புடிச்சிக்கோ குத்து’தான். அதைச் சொல்லும்போது படக்கென்று குழந்தையின் கையை நம்மிரு கைகளால் மூடிப் பிடித்துக்கொள்ள வேண்டும். கையைப் பிடிக்க விடாமல் வேகமாகக் குத்திவிட்டு வெளியே எடுப்பதுதான் ஹைலைட்.

இந்த விளையாட்டுக்குள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான எவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. முதலில் குழந்தைக்கு குடும்ப உறுப்பினர்களை அவர்களுடைய உறவுமுறையோடு அறிமுகப்படுத்துகிறோம். இரண்டாவது கவனக் குவிப்பு. எப்போது ‘புள்ளையார் குத்து’ வரும் என்று குழந்தை கவனமாகப் பார்த்திருக்கும். மூன்றாவது, கைக்கும் மூளைக்குமான பிணைப்பை விரைந்து செயல்படுத்தும் செயல்திறன். எல்லாவற்றை விடவும் முக்கியமானது குழந்தையோடு நேருக்கு நேர் அமர்ந்து பேசிச் சிரித்து நாம் விளையாடும் தருணம்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன். அந்த விளையாட்டில் கடைசியாக வரும் ‘புடிச்சிக்கோ குத்து’தான் வீனஸ் பொறியின் உத்தி. விளையாட்டில் ‘புள்ளையார் குத்து’ என்று சிறு முன்னெச்சரிக்கை கிடைப்பது போல் வீனஸ் வில்பொறிக்கும் கிடைக்கும்.



எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? வீனஸ் வில்பொறியின் இரு பக்க இலைப்பரப்பினுள்ளும் தலா மூன்று உணர் முடிகள் இருக்கும்.  திறந்திருக்கும் இலைக்குள் ஊர்ந்துசெல்லும் பூச்சியின் உடல் முதல் உணர்முடியின் மேல் பட்டவுடன்  வில் பொறி உஷாராகிவிடும். (இது புள்ளையார் குத்து!) அடுத்த 20 நொடிக்குள் இரண்டாவது உணர்முடியின்மீது பூச்சியின் உடல் பட்டவுடன் விருட்டென்று இலை மூடிக்கொள்ளும். (இது புடிச்சிக்கோ குத்து!) விளிம்பில் உள்ள முள் பற்கள் கைவிரல்களைக் கோர்ப்பது போல ஒன்றை ஒன்று கவ்வி பூச்சியை உள்ளேயே சிறைவைத்துவிடுவதோடு இறுக்கவும் செய்யும். இலைச் சிறைக்குள் அடைபட்ட பூச்சிகள் வெளியே வர முடியாமல் இறந்துவிடும். இலைகளில் சுரக்கும் செரிமான நீரால் பூச்சிகள் செரிமானமாகி அதன் சத்துகள் இலையால் உறிஞ்சப்படும். ஒரு தடவை பூச்சியைப் பிடித்தால் அது செரித்து மறுபடி இலை திறப்பதற்கு பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். இலை திறந்தவுடன் இறக்கை, மேலோடு போன்ற பூச்சியின் செரிக்காத பாகங்கள் கீழே விழுந்துவிடும். 

முதல் உணர்முடியின் மீது பட்ட தொடுகை இரண்டாவது உணர்முடியின் மீது இருபது விநாடிக்குள் படவில்லையென்றால் இலை மூடாது. திறந்தே இருக்கும். உயிருள்ள இரை என்பதைக் கண்டறிந்துகொள்ளவே இந்த இருபது விநாடிக்குள் இரண்டு முறை தொடுகை உத்தி. எனவே வில் பொறி இலைகள் 24 மணி நேரமும் விழிப்போடு இருக்கவேண்டும். இல்லையென்றால் பூச்சிகள் பெப்பே காட்டிவிட்டுப் பறந்துவிடும். 


ஒரு வில்பொறி இலை தன் வாழ்நாளில் அதிகபட்சமாக நான்கு முறை பூச்சிகளைப் பிடிக்கும். நான்காவது பூச்சியைப் பிடிக்கும்போது இலை மூடியது மூடியதுதான். பிறகு திறக்காது. அப்படியே மெல்ல மடிந்துவிடும். பழைய இலைகள் மடிய மடிய செடியில் புதிய இலைகள் உருவாகிக் கொண்டிருக்கும். ஒரு வீனஸ் வில்பொறி செடியின் ஆயுட்காலம் சுமார் இருபது ஆண்டுகள்.

 வீனஸ் வில்பொறி பூச்சிகளைப் பிடிக்கும், இறுக்கிப் பிடிக்கும். தப்பிக்கவே முடியாது. அதில் நாம் விரலை வைத்தால் என்னாகும்? நம்முடைய விரலையும் பற்சக்கரம் போல இறுக்கிப் பிடித்துக் காயப்படுத்துமா என்று சந்தேகம் எழலாம்.  விரலுக்கெல்லாம் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.  இலைதான் பாதிக்கப்படும். ஏனெனில் வில்பொறி அளவில் சிறியது. இலையின் விட்டம் சுமார் 10 – 13 செ.மீ. அளவுதான் இருக்கும். அது பூச்சிகளைப் போன்ற சின்னஞ்சிறு உயிர்களை மாத்திரமே பிடிக்க வல்லது.



தற்போது அலங்காரத்துக்காக வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளோடு வீனஸ் வில்பொறி செடிகளும் சேர்ந்துவிட்டன. அழகுக்காகவும் ஆசைக்காகவும் மட்டுமல்ல, உள்ளலங்காரச் செடிகளைப் பாதிக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்னவும்தான். :)

(தொடரும்)

ஜாடிச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 1)

பனித்துளி பசைச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 2)

வெண்ணெய்ச்செடி (ஊனுண்ணித் தாவரங்கள் 3)

2 comments:

  1. அருமையான பதிவு. ஆ குத்து ,அம்மாகுத்து, பூகுத்து, பிள்ளையார் குத்து, பிடிகுத்து!
    என்று விளையாடியது நினைவுக்கு வருகிறது.
    படிபடியாக படங்கள் அருமையாக இருக்கிறது.
    நான்கு முறைதான் பூச்சியை பிடிக்கும் அதன் பின் இல்லை என்று படிக்கும் போது வியப்பாக இருக்கிறது. நமக்கு வாழ்நாள் முழுவதும் உணவு தயாரித்து உண்ண வேண்டி இருக்கே! என்று இருக்கிறது.
    வீனஸ் வில் பொறி மோதக அச்சு போல தான் இருக்கிறது.பதிவு அருமை .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி மேம். ஒரு இலைக்குதான் நான்கு முறை என்ற கணக்கு. ஒரு செடியில் தொடர்ந்து இலைகள் உருவாகிக் கொண்டே இருப்பதால் செடிக்குத் தொடர்ந்து உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும். :)

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.