22 May 2024

பெருங்களிற்றுச் செவியோ? சுளகோ?

தோட்டத்துப் பிரதாபம் - 29 


மொறுமொறுவென்று சிப்ஸ் போல வறுத்த சேப்பங்கிழங்கு என்றால் என் பிள்ளைகளுக்கு உயிர். சேப்பங்கிழங்கை தண்ணீர் விடாமல் குக்கரில் வேகவைத்துத் தோலுரித்து மெல்லிசாய் வட்டவட்டமாக வெட்டி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, சோம்புத்தூள், கொஞ்சமாய் க.மாவு அல்லது அரிசி மாவு தூவிப் பிசறி எண்ணெயில் shallow fry-ஆக பொரித்தெடுக்க வேண்டும். இது என் புகுந்த வீட்டுச் செய்முறை. 


என் அம்மாவுடைய செய்முறை வேறு.
சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துத் துண்டுகளாக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு இவற்றோடு தேங்காயும் சோம்பும் சேர்த்தரைத்த விழுதும் சேர்த்து  நிறைய எண்ணெய் விட்டு சுருள வதக்கி சாந்தோடு சற்று சொதசொதப்பாக இருக்கும் அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது.

சேப்பங்கிழங்கை என் அம்மா செய்வது போல ஒரு தடவை வறுத்து வைத்தபோது கணவர், பிள்ளைகள் யாருக்குமே இறங்கவில்லை. அதனாலென்ன? நானே எல்லாவற்றையும் ஒரு கட்டு கட்டிவிட்டேன். :)

சென்னையில் இருந்தவரை, பிள்ளைகளுக்குப் பிடிக்கும் என்று அடிக்கடி சேப்பங்கிழங்கு வறுவல் செய்வேன். ஆஸ்திரேலியா வந்த பிறகு சேப்பங்கிழங்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் யானை விலை குதிரை விலை இருந்தது. (குதிரைக் கொம்பு, குதிரை விலை... ஹாஹாஹா...) எனவே சின்ன வெங்காய லிஸ்டில் சேப்பங்கிழங்கும் சேர்ந்துவிட்டது. (சின்ன வெங்காயம் கிலோ $16 & சேப்பங்கிழங்கு கிலோ $18). 

சொந்த வீடு என்றானபின், நமக்குதான் கையகலத் தோட்டம் இருக்கிறதே காய்கறி விளைவிப்போம் என்ற முடிவுக்கு வந்த பிறகு சேப்பங்கிழங்கை நாமே விளைவித்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. கடையில் கால்கிலோ அளவுக்கு சேப்பங்கிழங்கு வாங்கிவந்தேன். கட்டைவிரல் சைஸில் குட்டிக் குட்டியாகப் பதினைந்து கிழங்குகள். தோட்டத்தில் ஒரு இடம் பார்த்து ஒரு சாண் இடைவெளியில் கிழங்குகளை நட்டுவைத்தேன். விளைந்தால் லாபம், போனால் ஐந்து டாலரோடு போகட்டும் என்று விட்டுவிட்டேன். கொஞ்ச நாளிலேயே கிழங்குகள் முளைவிடத் தொடங்கின. ஏழெட்டு முளைத்தன. விதைத்ததில் பாதி! வளர வளர எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. கிழங்குகள் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால் காற்றிலாடும் சேம்பின் இலைகளைக் காண்பதே பெருமகிழ்ச்சியாக இருந்தது. காற்றில் அசையும் சேம்பின் இலைகள் யானையின் காதுகளைப் போன்றிருப்பதான சங்க இலக்கிய உவமை நினைவுக்கு வந்து முறுவல் உண்டாக்கியது. 

சிலம்பிற் சேம்பினலங்கல் வள்ளிலை

பெருங்களிற்றுச் செவியின் மான

குறுந்தொகைப் பாடலொன்றில் மலைச்சேம்பின் பெரிய இலைகளை, பெரிய யானையின் காதுகளைப் போன்று தோன்றும்படி அசைக்கச்செய்யும் குளிர்ந்த வாடைக்காற்று வீசும் முன்பனிக்காலத்தில் என்னை பிரிவுத்துன்பத்தில் நடுங்கவைத்துவிட்டு என் தலைவன் என்னைப் பிரிந்து தன்னுடைய நாட்டுக்குப் போகப் போகிறானே என்று தலைவி தோழியிடம் புலம்புவதாக உரைக்கிறார் கிள்ளிமங்கலக் கிழார் என்னும் புலவர். 

சேம்பின் இலை ஒரு புலவருக்கு யானையின் காதுகளைப் போலத் தோன்றினால் இன்னொரு புலவருக்கு அவை சுளகுகளைப் போன்று தோன்றுகின்றன. சுளகா? அது என்ன என்பவர்களுக்கு முறத்தின் இன்னொரு வடிவம்தான் சுளகு. அடிப்புறம் அகன்றும் வாய்ப்புறம் குறுகியும் இருக்கும். பேச்சுவழக்கில் ‘சொலவு, சொளகு, சொலகு’ என்றெல்லாம் குறிப்பிடப்படும்.  

சுளகும் முறமும்


பாடுகம் வா வாழி தோழி வயக்களிற்றுக்

கோடுலக்கையாக நற்சேம்பினிலை சுளகா

வாடுகழை நெல்லை யறையுரலுட் பெய்திருவாம்

பாடுகம் வாவாழி தோழி நற்றோழி பாடுற்று

'தோழீ! வாழி! நாம் பாடுவோம் வா! அசைந்து உதிரும் மூங்கில் நெல்லை சேம்பின் இலையாகிய சுளகில் அள்ளி, பாறையாகிய உரலிலே இட்டு, வலிமை மிகுந்த யானைத்தந்தமாகிய உலக்கையால் குத்தி வள்ளைப்பாட்டுப் பாடுவோம் வா!' என்று தலைவி தோழியிடம் பாடுவதாக குறிஞ்சிக்கலியில் கபிலர் பாடியுள்ளார். 

வள்ளைப்பாட்டு என்பது இரண்டு பெண்கள் மாறி மாறி உரலில் உலக்கையால் தானியங்களைக் குத்தும்போது வளையல்கள் குலுங்கக் குலுங்க ஒத்திசைவோடு பாடும் பாட்டு. உலக்கையால் இடிக்கும்போது பாடும் பாட்டு என்றவுடன் பள்ளிக்காலத்தில் பயின்ற, பாரதியின் குயில்பாட்டு மனன வரிகள் மளமளவென்று நினைவுக்கு வருகின்றன. 

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்

கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

          சுண்ண மிடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்

          பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்

கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்

          வேயின் குழலொடு வீணைமுதலா மனிதர்

          வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி

நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.

சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்தான் வள்ளைப்பாட்டு. சுண்ணம் என்றால் நறுமணப்பொடி.

சேம்பு, சுளகு என்று ஆரம்பித்து வள்ளைப்பாட்டு, சுண்ணம் என்று போய்விட்டேன் பாருங்க.

பார்வையற்றவர்கள் யானையைத் தடவிப் பார்த்து யானையின் உருவம் எத்தகையது என்று சொல்வதாக ஒரு கதை உண்டு. அந்தக் கதையில் யானையின் காதுகளைத் தடவிப் பார்த்த ஒருவன் யானை முறத்தைப் போன்று இருக்கும் என்பான். யானையின் காதுகளுக்கு முறம் நல்ல உவமை. சுளகு இன்னும் எவ்வளவு அழகான பொருத்தமான உவமை. 

அடுத்து சேம்பின் அழகை வர்ணிக்கும் ஒரு அகநானூற்றுப் பாடலின் வரிகள்.

வயிரத்து அன்ன வையேந்து மருப்பின்

வெதிர்வேர் அன்ன பரூஉமயிர்ப் பன்றி

பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி

நீலத்து அன்ன அகலிலைச் சேம்பின்

பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி

வைரம் போன்ற கூரிய மேல்நோக்கிய பற்களையும் மூங்கில் வேரினை ஒத்த பருத்த மயிரினையும் உடைய பன்றி, நீலமணியை ஒத்த நீல நிறமுள்ள அகன்ற இலைகளையுடைய சேம்பின் உருண்டு திரண்ட கிழங்குகளை ஏராளமாய்த் தின்கிறது என்று பாடுகிறார் பரணர்.  


 

குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலை

என்கிறது மற்றொரு அகநானூற்றுப் பாடல். 

துளையுள்ள குழல் போன்ற தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் மடல் போன்ற அகன்ற இலையை உடைய சேம்பு’ என்று வர்ணிக்கிறார் பாவைக் கொட்டிலார் என்ற புலவர். 


இந்தப் புலவர்கள்தாம் எவ்வளவு கூர்நோக்காளர்கள்! இயற்கையின் நுட்பங்களை அழகாக ஊன்றிக் கவனித்து, ஒத்த இயல்நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி, இலக்கியநயத்தோடு கவிபாடி காலத்தால் அழியாதப் பொக்கிஷங்களாகத் தந்துள்ளார்களே. 

சேம்பின் கிழங்கையும் இலையையும் சங்கப்புலவர்கள் பாடியிருப்பதை வைத்தே அது தமிழகத்தில் பல காலமாக இருப்பது தெரிகிறது. ஆம், இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சேம்பு இந்தியத் துணைக்கண்டத்தையும் தென்கிழக்காசிய நாடுகளையும் பூர்வீகமாகக் கொண்டது. Colocasia esculenta என்ற தாவரப் பெயர் உடைய சேம்பு ஆங்கிலத்தில் Taro, Arvi என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. மிகப்பெரிய காட்டுச்சேம்பு வகைக்கு ‘Elephant’s ear’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. 

சேப்பங்கிழங்குக்கும் அதன் இலைக்கும் பற்பல மருத்துவக்குணங்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றிலும் உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக உணவுப்பயன்பாட்டில் சேம்பு இருந்துவருகிறது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியா வருடத்துக்கு 18 மில்லியன் டன் கிழங்குகளை விளைவித்து, இன்று உலகளவில் சேம்பு உற்பத்தியில் (46%) முதலிடம் வகிக்கிறது.ஃபிஜியில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி அன்று ‘சேம்பு தினம்’ கொண்டாடப்படுகிறது. ஹவாய் தீவு மக்களிடையே சேம்புக்கு கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் சேம்பு கட்டுப்படுத்தவேண்டிய களைப்பயிர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

சேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுத்தும் குழம்பில் சேர்த்தும் சாப்பிடுவோம். மற்ற நாடுகளில் வேகவைத்து மசித்தும், இறைச்சி அல்லது மீன் போன்ற அசைவ உணவுகளுடன் சமைக்கப்பட்டும், சூப், கூட்டு, கேக், கட்லெட் போன்றவையாகவும் உண்ணப்படுகிறது. சேம்பில் Calcium oxalate என்னும் வேதிப்பொருள் உள்ளது. இலையையோ கிழங்கையோ சமைக்காமல் தின்றால் அரிப்பும் நமைச்சலும் உண்டாக அதுவே காரணம். 

 


இப்போது தோட்டத்துக்கு வருகிறேன். ஒவ்வொரு இலையும் உண்மையிலேயே யானைக் காதை விஞ்சும் அளவுக்குப் பெரிது பெரிதாய் வளர்ந்து காற்றிலாடிக் களிப்பூட்டின. மழை நாட்களின்போது தாமரை இலை போல சேம்பின் இலைகளின் மீதும் நீர்த்திவலைகள் ஒட்டாமல் நின்றுகொண்டிருக்கும். காற்றில் இலைகள் அசையும்போது அவற்றின் கூடியிருக்கும் நீர்த்திவலைகள் பாதரசத்தைப் போல அங்குமிங்கும் உருள்வதும் குட்டிக் குட்டி முத்துக்களாகப் பிரிவதும் மீண்டும் ஒன்றுசேர்வதுமாக பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.  


கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் அறுவடைக்காலம் என்று அறிந்துகொண்டபோது அவ்வளவு காலம் காத்திருக்கவேண்டுமே என்று ஆரம்பத்தில் கவலையாக இருந்தாலும் சேம்பிலைகளின் அழகையும் ஆட்டத்தையும் ரசித்துக்கொண்டிருந்ததில் காலம் ஓடியதே தெரியவில்லை.

இதற்கிடையில் சேம்பிலைகளை சமைக்கவும் செய்யலாம் என்று அறிந்துகொண்டு அதையும் முயற்சி செய்வோமே என்று நினைத்தேன். இதுவரை சேம்பின் இலையைச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. சாப்பிடலாமா என்று சந்தேகமாகவும் இருந்தது. சில கிழங்குகள் சாப்பிட்ட பிறகு அரிக்கும். சில கிழங்குகளைக் கையால் தொட்டாலே அரிக்கும். அதுபோல சேப்பங்கிழங்கு இலைகளைச் சாப்பிட்டுவிட்டு நாக்கு அரிப்பெடுத்தால் என்ன செய்வது என்ற பயந்தேன். இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று துணிந்து பரிசோதனை முயற்சியில் இறங்கிவிட்டேன். சேம்பிலை உசிலி. எல்லாம் யூட்யூப் உபயம்தான். சும்மா சொல்லக்கூடாது. மிகவும் அருமையாக இருந்தது. சேப்பங்கிழங்கு இலையை வைத்து சைவ மீன் வறுவல் என்றுகூட ஒரு ரெசிப்பி இருந்தது. இன்னும் முயற்சி செய்யவில்லை. ஆனால் உசிலி பிரமாதம்!

 


சேம்பிலை உசிலி

சேம்பின் இலைகள் பழுக்கத் தொடங்குவதுதான் அறுவடைக்காலத்தின் அறிகுறி. அப்போது தோண்டிப் பார்த்தால் ஏராளமான கிழங்குகள். முதல் ஈட்டிலேயே நல்ல விளைச்சல்! தாய்க் கிழங்குகள் நன்கு பருத்துப் பெரிதாகவும் அவற்றைச் சுற்றிலும் சற்றுச் சிறிய அளவில் ஆனால் நட்டுவைத்த அளவை விடவும் பெரிதாக ஏராளமான கிழங்குகள். சுமார் ஒன்றரை கிலோ இருக்கலாம். ஆசை தீர, கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்துக் கொடுத்தேன்.

 


தாய்க்கிழங்குகளை எடுத்துவைத்திருந்தேன். அளவில் மிகவும் பெரியனவாக இருந்ததாலும் அடிக்கிழங்கு என்பதாலும் அரிக்குமோ என்று பயம். சரி, மீண்டும் அவை முளைக்கிறதா என்று பார்ப்போம் என மறுபடியும் ஊன்றி வைத்தேன். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. மளமளவென்று முளைத்து மறு ஆறு மாதத்தில் அடுத்த அறுவடை. இம்முறை நான்கு கிலோ. இதுவரை நான்கு முறை அறுவடை செய்திருக்கிறேன். போன தடவை ஐந்தாறு கிலோ இருக்கலாம். ஒவ்வொரு முறையும் விளைச்சலின் அளவு கூடிக்கொண்டே போகிறதே தவிர குறையவே இல்லை. இடப்பற்றாக்குறை காரணமாக, இந்த முறை இரண்டே இரண்டு கிழங்குகள்தான் விதைத்துள்ளேன். பார்ப்போம் எவ்வளவு கிடைக்கிறதென்று.

(பிரதாபங்கள் தொடரும்)2 comments:

 1. Anonymous22/5/24 13:11

  சேம்பும் இலக்கியமும் என்றுகளை கட்டியிருக்கிறது பதிவு. ஆமாம் சேம்பு இலைகள் மிக அழகு. யானையின் காதை விடப் பெரிது என்றே சொல்லலாம்

  சேம்பு இரு செய்முறையும் எனக்குப் பிடிக்கும்.

  சேம்பு இலையும் சமைப்பதுண்டு கிடைத்தால். ஆமாம் பருப்பு உசிலி நல்லாருக்கும். கூடவே பத்ரோடே என்று சேம்பு இலையில் கடலை மாவு மசாலா கலந்து கொஞ்சம் நீர்க்க செய்து இலையில் மெலிதாகத் தடவி/பூசி இலையைச் சுருட்டி ஆவியில் வேக வைத்து எடுத்து அதன் பின் வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு புரட்டி லைட்டாகப் பொரிப்பது. கிரிஸ்பாக. பத்ரே என்றும் சொல்லப்படுவதுண்டு.

  உங்கள் படங்கள், செம. நல்ல அறுவடை. வாழ்த்துக்ள் உங்கள் தோட்டக்கலை பிரியத்திற்கு! ஆர்வத்திற்கு.

  கீதா

  ReplyDelete
 2. பதிவு மிக அருமை . சேம்பின் சமையல் குறிப்பு, மற்றும் சங்கபாடல்கள் , பாரதியார் பாடல் என்று அனைத்தையும் படித்து ரசித்தேன். உங்கள் தோட்டத்தில் விளைந்த சேம்பு அருமை.
  இங்கு மகன் வீட்டில் நிறைய இடம் இருக்கிறது ஆனால் பாறையாக இருக்கிறது, அரளிகள், மாதுளை , முருங்கை, எலுமிச்சை தான். மற்றவைகளை தொட்டியில் மண் வாங்கி போட்டு தான் வளர்க்க வேண்டும்.

  கீதா சொன்னது போல சேம்பு இலையில் செய்வார்கள்.

  படங்கள் எல்லாம் அழகு. சேம்பின் இலைகளின் மேல் நீர்த்துளி நானும் ரசித்தேன். அதன் நடனம் அழகு. "சேம்பு தினம் " அறிந்து கொண்டேன்.

  சேம்பு செடியை என் தாத்தா வீட்டில் திருவனந்தபுரத்தில் அழகு செடியாக வாசலில் வைத்து இருப்பார்கள்.

  பதிவு அருமை.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.