5 October 2021

சிறுவருக்கான கதைப்போட்டி

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களா? 7 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களா? இதோ, அவர்களுடைய கற்பனைச் சிறகை விரிக்க களம் அமைத்துக்கொடுக்கிறது சுட்டி உலகம்.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டும் சுட்டி உலகம், எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகத்துடன் இணைந்து 7-15 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்க்கான கதைப்போட்டி ஒன்றை நடத்துகிறது.

 


கதையார்வமும் கற்பனைத்திறமும் மிக்க குழந்தைகள் அனைவரும் கலந்துகொள்ளுங்கள். பரிசுகளோடு இளம்கதாசிரியராய் சிறார் இலக்கிய உலகில் அடையாளம் காணப்படுவதற்கும் அற்புதமான வாய்ப்பு.

பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளின் கதை எழுதும் திறமையை வெளிக்கொணர உதவுங்கள். போட்டி குறித்த மேலதிக விவரங்களை சுட்டி உலகம் இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

போட்டிக்கான கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி

team@chuttiulagam.com

26 September 2021

வந்தது வசந்தகாலம்! பூமியில் புதிய கோலம்!

வசந்த காலம் வந்துவிட்டது என்று எப்படிதான் தெரியுமோ இந்த செடி கொடிகளுக்கும் மரங்களுக்கும். துளிர்த்து மொட்டுவிட்டுப் பூக்க ஆரம்பித்துவிட்டன. இதோ எங்கள் தோட்டத்துப் பூக்கள் நீங்கள் ரசிக்க...


1. ஜெரானியம் பூக்கள்

2. முள்ளங்கிப் பூவில் ஹோவர்ஃப்ளை

3. Pigface flowers 


4. காட்டுமுல்லை

5. கேலண்டுலா பூ

6. டாஃபோடில் பூக்கள்

7. கேலண்டுலா பூ

8. சால்வியா பூக்கள்

9. ரோஜா

10. ஸ்ட்ராபெர்ரி பூக்கள்

11. Brunfelsia flowers

12. தக்காளிப்பூவில் தேனீ

13. ஜெரானியம் பூக்கள்

14. வெள்ளை ரோஜா

15. வண்ண வண்ணப் பூக்கள்


16. பிச்சிப் பூக்கள்

17. காட்டு முல்லைப் பூக்கள்

18. டாஃபோடில் பூ

19. சால்வியா பூக்கள்

20. அசேலியா பூக்கள்31 August 2021

மிதக்கும் சொற்களுள் எனதும்

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள், ஃபேஸ்புக்கில் படக்கவிதைப் போட்டி ஒன்று கவிஞரும் கல்கியின் தலைமை உதவியாசிரியருமான அமிர்தம் சூர்யா அவர்களால் நடத்தப்பட்டது. 

கவிதை எழுதுவதற்காகக் கொடுக்கப்பட்டிருந்த ஓவியம் குறித்து அவர் தந்திருந்த குறிப்பு - \\ கல்பட்டா நாராயணன் மலையாளத்தில் எழுதி தமிழில் சைலஜா மொழிபெயர்த்த சுமித்ரா என்ற நாவலுக்கு ஓவியர் சீனிவாசன் நடராஜன் மத்தியப் பிரதேசப் பழங்குடிகளை நேரில் சென்று பார்த்து வரைந்த ஓவியம் இது. அந்தப் பழங்குடி பெண்கள் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதம்தான் இது. இதைத்தான் தரையில் நட்டு அலங்கரித்து கடவுளாக வழிபடுவார்கள். இதற்கு பலியும் தருவார்கள். அதுவும் முழுக்க பெண்கள் கட்டுபாட்டில் நடத்துவதுதான்.\\

படத்தையும் படம் சொல்லும் குறிப்பையும் வைத்து நான் எழுதியது கீழே:


  

வனமாள்பவளிடம் வாலாட்டாதீர்கள்

அங்குசமின்றி ஆனை பழக்குவோர் யாம்

பெண்ணுக்கெது அழகென்று பிதற்றாதீர்கள்

பிணமாகிப் பெருங்கழுகுக்கு இரையாவீர்கள்


அவள் இவள் உவள் என

உங்கள் நாட்டுப்பெண்டிர் கதைகளை

எம் காதுகளில் ஓதாதீர்கள்.

எம் உக்கிரத்தின் ஒரு பிடிபோதும்

உலையரிசியென உலகவிக்க.


நினைவில் கொள்ளுங்கள்..

காலங்காலமாய் 

காடணைந்துகிடக்கும் எம் கார்மேனியை

காவுகொள்ள நீளும் கொடுங்கரங்களைத்

துண்டாடும் ஆயுதங்கள் இம்மண்ணில் அல்ல

எம் இளமார்பின் மத்தியில் 

இறுக்கி நடப்பட்டிருக்கிறது.

உங்கள் அடிவயிற்றில் சொருகியுருவ 

அரைநொடியும் அதிகம்.

&&&

எழுதினேனே ஒழிய பிறகு மறந்தேபோய்விட்டேன். சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கவிதைகளும் தொகுப்பாக நூலாக்கம் பெற்றுள்ளன என்பதே அது. நா.கோகிலன் அவர்களின் தேநீர் பதிப்பகம் வாயிலாக நூல் வெளியாகியுள்ளது. 

நூலின் அட்டைப்படம் கீழே. 

கொசுறுத் தகவல்:

2014-ஆம் ஆண்டு அமிர்தம் சூர்யா அவர்கள் நடத்திய படக்கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு அசோகவனத்து ராமனாட்டம் என்ற கவிதையை எழுதியிருந்தேன். போட்டிக்கு வந்திருந்த கவிதைகளுள் அவருடைய ரசனை சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கவிதைகளுள் என்னுடையதும் ஒன்று. பரிசாக தேவதச்சன் கவிதைகள் புத்தகத்தைப் பெற்றேன். இம்முறை என் கவிதையும் ஒரு  புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அளப்பரிய மகிழ்ச்சி. 

&&&&

26 August 2021

தோட்டத்தின் துட்டர்கள்

 


நாம் கஷ்டப்பட்டுப் பார்த்துப் பார்த்து வளர்க்கும் தோட்டத்துச் செடிகளையும் மரங்களையும் ஈவு இரக்கமே இல்லாமல் தாக்கி அழிக்கும் பூச்சிகளைப் பற்றியும் அவற்றைக் கட்டுப்படுத்தும் இயற்கைமுறையிலான வழிகளைப் பற்றியும் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறேன். அசுவினிப் பூச்சிகள் பற்றி முந்தைய பதிவொன்றில் பார்த்தோம். இந்தப் பதிவில் இலை துளைப்பான்  செதில் பூச்சி மற்றும் புடைப்புக் குளவி பற்றிப் பார்ப்போம்.

 

 

இலை துளைப்பான் புழு

 2. இலை துளைப்பான்சிட்ரஸ் வகை மரங்களைத் தாக்கும் பூச்சுகளிள் Leaf miner என்ற அந்துப்பூச்சிகள் பெரிய தலைவலி. பெயரைப் பார்த்தவுடனேயே தெரிந்திருக்குமே. ஆமாம், இந்த அந்துப்பூச்சிகள் இரவுநேரங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு மரங்களின் இலைகளில் முட்டையிட்டுச் சென்றுவிடும். முட்டையிலிருந்து பொரிந்துவரும் லார்வாக்கள் இலைகளைத் துளைத்து இலையில் மேல் சவ்வுக்கும் கீழ் சவ்வுக்கும் இடையில் சுரங்கம் அமைப்பது போல வழி அமைத்துப் பயணித்து இலையின் சதைப்பற்றான பகுதிகளைத் தின்று கொழுக்கின்றன. இலைகள் நோய் தாக்கினாற்போல் சுருண்டு சருகாகி மரத்தைத் திரங்கச் செய்துவிடுகின்றன. இப்புழுக்களை எளிதில் பார்க்க இயலாது. அவ்வளவு நுண்ணியவை. ஆனால் கோடு இழுத்தாற்போல இவை தின்றுகொண்டே போன வழித்தடத்தை வெகு எளிதில் பார்க்கமுடியும். பார்ப்பதற்கு வெகு அழகாக வரைந்து வைத்த ஓவியம் போல, ஒரு printed circuit board போல அவ்வளவு அழகாக இருக்கும். உள்ளே இருப்பதோ ஆபத்து.

இலை துளைப்பான் புழு தடம்
 

 இதற்கு என்ன தீர்வு என்று பார்த்தால் அந்துப்பூச்சிகளை இலைகளில் முட்டையிடாமல் தடுப்பதொன்றே வழி. எப்படித் தடுப்பது? முட்டையிட வருபவற்றைத் தடுக்க முடியாது. ஆனால் முட்டையிடுமுன் தடுக்கமுடியும். இதற்கெனவே பிரத்தியேகமாய் தயாரிக்கப்பட்ட, இரு பக்கமும் பசையுடன் கூடிய மஞ்சள் துண்டுத்தாள்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை சிட்ரஸ் மரங்களில் கட்டித்தொங்கவிட்டால் இரவு நேரத்தில் இலைகளில் முட்டையிட வரும் பெண் அந்துப்பூச்சிகள் அதில் ஒட்டிக்கொள்ளும். இது வருமுன் காக்கும் வழி. வந்தபின் காக்கும் வழியொன்றும் உண்டு. அது லீஃப் மைனரால் பாதிக்கப்பட்ட துளிர்ப்பகுதிகளை ஒட்டுமொத்தமாக வெட்டி அப்புறப்படுத்துவது. வெட்டிய பகுதிகளை மக்கும் உரத்தில் சேர்க்காமல் எரித்துவிடவேண்டும் அல்லது அப்புறப்படுத்திவிட வேண்டும்.

 

எலுமிச்சை மரத்தில் புடைப்பு

3. Gall wasps - இவற்றிற்கு தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை. இவை மரங்களின் இளம் கிளைகளைத் துளைத்து முட்டையிட்டுச் செல்லும். முட்டைகள் உள்ளே வளர்ந்து லார்வாக்கள் உள்ளுக்குள்ளேயே தின்று கிளைகளில் பாதிப்பை உண்டாக்குகின்றன. இவற்றை எளிதில் கண்டறிய இயலும். இளம் கிளைகளில் ஆங்காங்கே முட்டு முட்டாகக் காணப்படும். ஆரம்பத்தில் இவை என்னவென்று தெரியாமல் அலட்சியமாய் விட்டுவிட்டேன். இவற்றின் பாதிப்பு குறித்து அறிந்தபிறகு உடனடியாக செயல்பட்டு நீக்கினேன். பெரிதாய் ஒன்றுமில்லை. எங்கெல்லாம் புடைப்பாக இருக்கிறதோ அந்தக் கிளைகளை அந்த புடைப்புகளுடன் அப்படியே வெட்டி எடுத்துவிடவேண்டும். வெட்டும்போது புடைப்பை ஒட்டி வெட்டாமல்  இரண்டு அங்குலமாவது தள்ளி வெட்ட வேண்டும். ஒருவேளை உள்ளே லார்வாக்கள் குடைந்துகொண்டே சென்றிருந்தால் அவற்றையும் சேர்த்து அப்புறப்படுத்த இந்த வழி. வெட்டியப் பகுதிகளை அப்படியே வீசிவிடாமல் எரித்துவிடவேண்டுமாம். இல்லையென்றால் மீண்டும் அவை வளர்ந்து பெருகிவிடுமாம். 

கிளையை வெட்டாமல் இந்தக் குளவிகளிடமிருந்து மரத்தைப் பாதுகாக்க இன்னொரு வழியை சமீபத்தில் அறிந்துகொண்டேன். அது குளவிகளின் லார்வாக்கள் இருக்கும் புடைப்பான இடத்தை மெல்லிய பேனாக்கத்தி அல்லது காய்கறியின் தோல் சீவும் peeler கொண்டு மேற்புறத்தை சீவிவிடுவது. காற்றும் வெப்பமும் படுவதால் உள்ளிருக்கும் லார்வாக்கள் செத்துவிடும். புடைப்பில் ஊசி துவாரங்கள் போல ஓட்டைகள் காணப்பட்டால் லார்வாக்கள் குளவிகளாக மாறிப் பறந்துவிட்டன என்று அர்த்தம். எனவே மரத்தை அவ்வப்போது கண்காணித்து புதிய புடைப்புகளைக் கண்டுபிடித்து உடனடியாக செயல்பட்டு நீக்கவேண்டும். 

 

செதில் பூச்சிகள்
செதில் பூச்சிகள்

 4. Scale insectsஇவை செதில் போல இருப்பதால் செதில் பூச்சிகள் எனப்படுகின்றன. இவற்றின் இருப்பை மரத்தில் ஊறும் எறும்புகளைக் கொண்டு அறிந்துகொள்ளமுடியும். அசுவினிகள் இருந்தாலும் எறும்புகள் ஊறிக்கொண்டிருக்கும். எறும்புகளைப் பின்தொடர்ந்துபோய் கவனித்தால் இந்தப் பூச்சிகளின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியும். எறும்புகள் என்ன செய்கின்றன என்று பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். இந்த செதில் பூச்சி மற்றும் அசுவினிப் பூச்சிகளுக்கு எறும்புகள்தான் பாதுகாவலர்கள். இந்தப் பூச்சிகள் தங்கள் உடலிலிருந்து வெளியேற்றும் honeydew எனப்படும் இனிப்பு திரவத்துக்கு பிரதிபலனாக அவற்றை எறும்புகள் பாதுகாக்கின்றன. நாம் பண்ணை வைத்து கால்நடைகளைப் பராமரிப்பது போலவே எறும்புகள் செதில் பூச்சி, அசுவினிப் பூச்சி போன்றவற்றைப் பராமரிக்கின்றன. இது Ant farming என்று குறிப்பிடப்படுகிறது. பால்காரர்கள் பால் கறப்பதற்குமுன் பசுவின் மடியைத் தட்டி, பாலைச் சுரக்கத் தூண்டுவது போல, எறும்புகள் தங்கள் முன்னங்கால்களால் பூச்சிகளைத் தட்டித் தூண்டி honeydew-வை சுரக்கச் செய்கின்றன. திரவம் வெளியேற்றப்பட்டவுடன் உறிஞ்சிக்கொண்டு தங்கள் இருப்பிடம் திரும்புகின்றன. இச்செயலை ஆங்கிலத்தில் milking என்றே சொல்கிறார்கள்.

 

செதில் பூச்சிகள்

செதில் பூச்சிகள் குறைந்த அளவில் தென்பட்டால் கையாலேயே அப்புறப்படுத்திவிட முடியும். கொஞ்சம் அதிகமாக இருந்தால் பழைய டூத் பிரஷ் வைத்துத் தேய்த்து சாகடித்துவிடலாம். கையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போய்விட்டால் வேப்பெண்ணெய்க் கரைசல், சோப்புக் கரைசல், தேமோர்க் கரைசல் போன்ற சுலபமான, இயற்கை முறையிலான வீட்டுத் தயாரிப்புகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். இக்கரைசல்களைத் தயாரிப்பதும் எளிதுதான். 


வேப்பெண்ணெய்க் கரைசல் செய்யத் தேவையானவை

தண்ணீர் - 1 லிட்டர்

வேப்பெண்ணெய் – 15 மி.லி.

dishwashing liquid – ஒன்றிரண்டு சொட்டு

பாத்திரம் துலக்கப் ப யன்படுத்தும் லிக்விட் சோப்புக்கு பதிலாக ஷாம்பூ கூட பயன்படுத்தலாம். மேலே சொன்ன மூன்றையும் ஒரு பாட்டிலில் நன்கு குலுக்கிக் கலந்தால் எல்லாம் ஒன்றாகி, பார்ப்பதற்கு பால் போல இருக்கும். அதை அப்படியே ஸ்ப்ரேயர் மூலம் செடிகளில், இலைகளின் மேல்,கீழ் என எல்லாப் பகுதிகளிலும் தெளிக்கவேண்டும்.  

 

சோப்புக் கரைசல் - இது white oil என்று சொல்லப்படுகிறது. இதை செய்வது இன்னும் எளிது. தேவையானவை

சமையல் எண்ணெய் – 2 கப்

பாத்திரம் துலக்கும் லிக்விட் சோப் – அரை கப்.

ஒரு பாட்டிலில் இவற்றை ஊற்றி மூடி போட்டு நன்கு குலுக்கிக் கலக்கினால் வெள்ளை நிறத்தில் எண்ணெய் போல ஆகிவிடும். அதனால்தான் இதை white oil என்கிறார்கள். இதை வெயில் படாத குளிர்ந்த இடத்தில் ஒரு மாதம் வரை store பண்ணி வைக்கலாம். தேவைப்படும்போது ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மேசைக்கரண்டி அளவு (20 மிலி) என்ற கணக்கில் இந்த எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கி ஸ்ப்ரேயர் மூலம் பூச்சிகள் தாக்கியுள்ள செடி மற்றும் மரங்களின் இலை, காம்பு என பரவலாக தெளிக்கவேண்டும். இலையின் மேல்பகுதி, கீழ்ப்பகுதி என எல்லா இடத்திலும் இந்தக் கரைசல் படுமாறு தெளிக்கவேண்டும். வீரியம் அதிகம் என்பதால் இதை வெயில் நேரத்தில் தெளிக்கக்கூடாது. வெப்பம் தணிவாக இருக்கும் காலையிலோ மாலையிலோ தான் தெளிக்கவேண்டும். அசுவினி, செதில் பூச்சி, மாவுப்பூச்சி, இலைத்துளைப்பான், பச்சைப்புழு, கம்பளிப்புழு என சகல விதமான பூச்சிகளிடமிருந்தும் நிவாரணம் தரக்கூடியது  இந்த எளிய ஆனால் வீரியமிக்க சோப்புக் கரைசல்.

 

தேமோர்க் கரைசல் – ஏற்கனவே இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தாலும் இப்போதும் சொல்லிவிடுகிறேன். இதற்கும் நாம் பெரிய அளவில் மெனக்கெடத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கலாம். தேமோர்க் கரைசல் என்பது தேங்காய்ப்பால் மற்றும் மோர் இவற்றைப் புளிக்கவைத்து தயாரிக்கும் கரைசல் தான். நல்ல பயிர் ஊக்கியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் இதன் பயன்பாடு மிக அதிகம். பூப்பிடிக்கும் காலத்தில் தெளித்தால் பூக்கள் எக்கச்சக்கமாகப் பூக்கும். இதற்குத் தேவையானவை

புளித்த மோர் - 1 லிட்டர்

தேங்காய்ப்பால் - 1 லிட்டர்

இரண்டையும் நன்கு கலக்கி அகலமான வாயுள்ள பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் ஊற்றி நன்கு மூடி தோட்டத்திலேயே ஒரு பக்கம் நிழலில் இருக்குமாறு வைக்கவேண்டும். ஒரு வாரத்தில் கலவை நன்கு புளித்திருக்கும். அதைக் கலக்கி விட்டு 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து ஸ்ப்ரேயர் மூலம் செடிகளுக்குத் தெளிக்கலாம். சிலர் மண்பானையில் ஊற்றி துணியால் வேடு கட்டி வைக்கிறார்கள். ஆனால் அதில் புழுக்கள் வர வாய்ப்பிருப்பதால் இறுக்கமான மூடி போட்ட பாட்டிலில் வைப்பது நல்லது. நான் அப்படிதான் வைக்கிறேன். 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள கரைசல்களைத்தான் மாற்றி மாற்றி அவ்வப்போது பயன்படுத்துகிறேன். இரசாயனப் பூச்சிக்கொல்லிகளை ஒருகாலத்திலும் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். பூச்சிக்கொல்லி என்ற கருத்தியலே தவறானது என்கிறார்கள் வேளாண் அறிஞர்கள்.  பூச்சிகளை விரட்டலாமே தவிர கொல்லக்கூடாது என்கிறார்கள். 

பூச்சிகள் இல்லாத உலகம் இல்லை. பூச்சிகள் இல்லாவிடில் உலகமே இல்லை. ஆனால் நாம் எப்போதும் நம்மைப் பற்றி மட்டும்தானே சிந்திக்கிறோம்.  நமக்கு நன்மை செய்பவற்றை நல்ல பூச்சிகள் என்றும் கெடுதல் செய்பவற்றை கெட்ட பூச்சிகள் என்றும் வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். இயற்கையின் சமநிலையைப் பேணுவதில் தங்கள் இருப்பின் முக்கியத்துவம் பற்றிய பிரக்ஞை எதுவும் இன்றி அவை அவற்றின் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நாம்தான் புரிந்துகொள்வதில்லை.      

பயிரழிக்கும்  பூச்சிகளை ஸ்வாகா செய்து தோட்டத்துக்கு நன்மை செய்யும்  தோட்டத்து நண்பர்கள் பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம். 


 &&&&&

பிரதாபங்கள் தொடரும்

 

19 July 2021

வண்ணமயமாகிறது வாழ்க்கை

 

ஓவியம் என்றாலே வண்ணங்களை brush-ல் தொட்டு கேன்வாஸ் அல்லது பேப்பரில் வரைவது என்ற அளவில் மட்டுமே புரிதலோடு இருந்த எனக்கு கேன்வாசில் வண்ணங்களை ஊற்றியும் கூட அழகிய ஓவியங்களை உருவாக்க முடியும் என்னும் மாறுபட்ட கலாரசனையின் கதவுகளைத் திறந்துவிட்டது இரண்டு மாதங்களுக்கு முன்பு என் பிறந்தநாள் பரிசாக அன்புத் தோழி ஏற்பாடு செய்திருந்த பிரத்தியேக ஓவியப் பயிற்சி வகுப்பு. வண்ணம் ஊற்று ஓவியக்கலை (Paint pouring art) அன்றுதான் எனக்கு அறிமுகமானது.  


வண்ணங்களை கேன்வாசில் ஊற்றி விரவ விரவ, வண்ணங்களின் அசைவுக்கும் எண்ணங்களின் இசைவுக்கும் ஏற்ப எப்படி எப்படி எல்லாம் நழுவிப் படர்ந்து விரிந்து உருவாகின்றன வித விதமான ஓவியங்கள்! இதிலேயே Balloon kissing, blowing with straw, marble rolling, string pulling, swiping என்று எண்ணற்ற நுணுக்கங்கள் உள்ளன என்பதை மேலதிகத் தேடலில் அறிந்து வியந்தேன். சிலவற்றைப் பயிற்சி செய்து பார்த்து மகிழ்ந்தேன். அறிமுகப்படுத்திய Art teacher-ஐயும் கலாரசனையோடு இப்படி ஒரு பிறந்தநாள் பரிசளித்த தோழியையும் நன்றியோடு நினைவுகூர்ந்து நெகிழ்கிறேன். 


இந்த வண்ணம் ஊற்று கலையில் உள்ள சூட்சுமம் என்னவென்றால் வெளியில் வழியும் அல்லது கொட்டும் வண்ணங்களைப் பற்றிய சிந்தனை அற்று கான்வாசில் உருவாகும் ஓவியத்தில் மட்டுமே கவனத்தைக் குவிக்க வேண்டும் என்பது. நாம்தான் சிக்கன சிகாமணிகளாச்சே… கொஞ்சமாக ஊற்றினால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதிகமாக ஊற்றினாலோ.. ஐயோ.. இவ்வளவு பெயிண்ட் வீணாகுதே என்று மனம் பதைக்கிறது. இருந்தாலும் செய்து முடித்த பிறகு வரும் ஆனந்தத்துக்கு அளவில்லை. இன்னொரு பிரச்சனை, கேன்வாஸ் முற்றிலும் காய்வதற்கு இரண்டு மூன்று நாட்களாவது தேவைப்படும். அதுவரையிலும் அதை ஆடாமல், அசங்காமல், தூசு படாமல் பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும்.

 

ஓவியக்கலை ஆர்வத்தின் தொடர்ச்சியாக மகளின் முயற்சியால் இன்னும் பல ஓவிய அட்டகாசங்கள் அரங்கேறின. 48 வண்ணங்களுடன் Acrylic Paint set, Brush set, palette, palette knives, Canvasses, Apron என்று ஒரு தேர்ந்த ஓவியக் கலைஞருக்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் மகள் தன் பரிசாக ஆன்லைனில் வாங்கி இறக்கிவிட்டாள். இதில் பெயிண்ட் வீணாகாது, உங்கள் விருப்பம் போல சிக்கனமாகத் தொட்டுத் தொட்டு செலவு செய்யுங்கள் என்று கூடவே கேலி வேறு. Youtube-ல் ஒரு படத்தைத் தெரிவு செய்து இருவரும் தனித்தனியாக வரையவேண்டும் என்ற சவாலோடு நானும் மகளும் சில படங்களை வரைந்தோம்.

 

சூழ்ந்திருக்கும் உறவுகளாலும் நட்புகளாலும் ஐம்பது கடந்த வாழ்க்கை அழகியலோடு வண்ணமயமாகிக் கொண்டிருக்கிறது. ஐம்பதிலும் ஆசை வருமாம்… எனக்கு வண்ணங்களின்பால் மோகமே வந்துவிட்டது. கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் அன்பின் வண்ணங்களை ஆழ்மனக் கேன்வாசில் அழகோவியமாக்கி!  

&&&&

23 June 2021

கம்பரும் தேமோர்க்கரைசலும்

  “தேங்காய்ப்பால் எதுக்கு? ஆப்பம் செய்யப்போறியா?”

கடையிலிருந்து வாங்கி வந்த வாராந்திர மளிகைப் பொருட்களை பைக்குள்ளிருந்து எடுத்து வெளியில் வைத்த போது கண்ணில் பட்ட இரண்டு தேங்காய்ப்பால் டின்களைப் பார்த்துவிட்டு கணவர் கேட்டார்.

இரு.. இரு… தேங்காய்ப்பால் டின்னா? ஏம்மா, தேங்காயை வாங்கி, உடைச்சி, துருவி, அரைச்சி, பால் புழிய முடியாத அளவுக்கு நீ அவ்வளவு பிசியா இல்ல சோம்பேறியா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆஸ்திரேலியாவில் சொந்தமாக தேங்காய் உற்பத்தி கிடையாது. ஒன்றிரண்டு சுற்றுலாத் தளங்களில் அழகுக்காக தென்னை வைத்திருக்கிறார்கள். மரத்திலிருந்து மட்டையோ தேங்காயோ சுற்றுலாப் பயணிகளின் தலையில் விழுந்தால் ஆபத்தாகிவிடுமே என்ற பயத்தில் குரும்பையாக இருக்கும்போதே பறித்து அப்புறப்படுத்திவிடுவார்களாம். னால் குடியேறிகளுக்கு சமையலில் சேர்க்க தேங்காய் வேண்டுமே. அதனால் ஃபிஜி, இந்தோனேஷியா போன்ற அக்கம்பக்கத்துத் தீவுகளிலிருந்து தேங்காய், இளநீர், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால், தேங்காய்ப் பவுடர் என அனைத்தும் இங்கு இறக்குமதி ஆகிறது. என் அதிர்ஷ்டமோ என்னவோ, என்னதான் தட்டிப் பார்த்து, ஆட்டிப் பார்த்து, உருட்டிப் பார்த்து வாங்கி வந்தாலும் வீட்டில் வந்து உடைத்துப் பார்த்தால் உள்ளே அழுகி இருந்து என்னை அழவைக்கும். கொடுத்த காசை திரும்பவும் பெற்றுவிடலாம் என்றாலும் எத்தனை தடவைதான் இப்படி ஏமாறுவது? தேங்காயே வாங்கக் கூடாது என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன். பிறகு தேங்காய் இல்லாமல் எப்படி சமைக்கிறேனா? அதற்குதான் ஆபத்பாந்தவனாக உலர்தேங்காய்ப்பூ இருக்கிறதே. சட்னி, குருமா எல்லாமே அதில்தான். சுவையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. மொத்தமாக வாங்கி வைத்துவிட்டால் தேவைப்படும்போது சட்டென்று எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். உடைக்கவேண்டிய, துருவ வேண்டிய அவசியம் இல்லை. இதில் இன்னொரு நன்மையும் உண்டு. ஃப்ரஷ் தேங்காய் போட்டு செய்த உணவுப் பதார்த்தம் போல அவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகாது. கடந்த பத்துப் பன்னிரண்டு வருடங்களாக இப்படிதான் ஓடிக்கொண்டிருக்கிறது தேங்காய்க்கும் எனக்குமான பந்தம்.

சரி, இப்போது தேங்காய்ப்பால் கதைக்கு வருவோம். ஆப்பத்துக்கா? என்ற கணவரின் கேள்விக்கு, உடனடியாக மறுத்து, “இல்ல..இல்ல.. செடிக்கு ஊத்த” என்றேன்.

என் பதிலைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்துபோனவர், நம்ப முடியாமல் “செடிக்கு ஊத்தப் போறியா? இதென்ன அநியாயம்?” என்றார்.

“இதிலென்ன அநியாயம் இருக்கு? வீட்டுத் தோட்டத்தில் விதவிதமான காய்களும் பழங்களும் கீரைகளும் இரசாயனம் கலக்காமல், இயற்கை முறையில் பார்த்துப் பார்த்து விளைவித்து குடும்பத்துக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்கிறேன். காய்கறிக்கான செலவை ஓரளவு மட்டுப்படுத்தி இருக்கிறேன். உங்க அலுவலக நண்பர்களுக்கு அவ்வப்போது கொடுத்து அவர்களுடைய அபிமானத்தை சம்பாதித்துக் கொடுக்கிறேன். இவ்வளவும் செய்கிற தோட்டத்துக்கு ரெண்டு டின் தேங்காய்ப்பால் ஊத்தக் கூடாதா?” என்று என் தரப்பு வாதத்தை முன்வைத்தேன்.

“அதுக்காக, தேங்காய்ப்பால் ஊத்தி செடி வளர்க்குறதெல்லாம் ரொம்பவே ஓவர்” என்றார் கிண்டலாய்.

“நான் கொஞ்சம் தேங்காய்ப்பால் ஊத்துறதுக்கே சொல்றீங்களே.. அந்தக் காலத்தில் பால் ஊத்தி விவசாயமே செஞ்சிருக்காங்க தெரியுமா?”

“என்னது? பால் ஊத்தி விவசாயமா?”

“ஆமா.. பாகப்பிரிவினை படம் பார்த்திருக்கீங்களா?”

“தேசிய விருது வாங்கின படமாச்சே.. எப்படி பார்க்காம இருப்பேன்.. ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ பாட்டு அதில்தானே?”

“ம்க்கும்.. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தாழையாம் பூ முடிச்சி, ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே..ன்னு அந்தப் படத்தில் எத்தனையோ அருமையான பாட்டெல்லாம் இருக்கு. உங்களுக்கு இது மட்டும்தான் சட்டுனு நினைவுக்கு வருது இல்லே?” என்று ஊடினேன்.

காரணம் இல்லாமல் இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பு மகன் குழந்தையாய் இருக்கும்போது தாலாட்டு பாடினால்தான் தூங்குவான். ஏணையில் ஒய்யாரமாய்ப் படுத்துக்கொண்டு ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு இருப்பான். ஏழெட்டு பாட்டாவது கேட்ட பிறகுதான் தூங்குவான். இவர் அருமையாகப் பாடுவார். ஏணையை ஆட்டிக்கொண்டே சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா, சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ, செல்லக்கிளிகளாம் பள்ளியிலே, கண்ணன் வருவான் கதை சொல்லுவான், செல்லக்கிளியே மெல்லப்பேசு, தூங்காதே தம்பி தூங்காதே, பூமாலை நீயே புழுதி மண்மேலே, ஏன் பிறந்தாய் மகனே என்று பட்டியல் நீளும். கடைசி இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள் என்றாலும், எனக்கு சென்டிமென்ட் குறுக்கிடும். இரண்டையும் தாலாட்டுப் பாட்டுப் பட்டியலிலிருந்து தூக்கிவிடச் சொல்லி எத்தனை முறை கெஞ்சினாலும் கேட்க மாட்டார். இவர் பாட மறந்தாலும் ஏணைக்குள்ளிருந்து பிள்ளை குதலைக் குரலில் எடுத்துக் கொடுப்பான். பேயே பேயே (சின்னப்பயலே) புத்தா (புத்தன் ஏசு காந்தி பிறந்தது), பூமாயை (பூமாலை நீயே) என்று நேயர் விருப்பம் போல் கேட்டுக் கேட்டு பாடவைப்பான். அந்த நினைவு வந்துவிட்டது எனக்கு.

“இப்ப ஏன் பாகப்பிரிவினை படம் பற்றிக் கேட்கிறே?” என்றார்.

“அதில் இன்னொரு பாட்டு - தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் - கேட்டிருக்கீங்களா?”

“ஆங். சுப்பரான பாட்டாச்சே அது?”

“அதோட ஆரம்ப வரிகள் தெரியுமா?”

“சரியா நினைவில்லையே..”

பாலூற்றி உழவு செய்வார், பனி போல் விதை நடுவார்

மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார்

தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே

கவிஞர் மருதகாசி எழுதிய பாட்டு.”

“ஓ.. அதைக் கேட்டுட்டுதான் நீயும் உன் தோட்டத்துக்கு பால் ஊத்தி வளர்க்கப் போறியா? அவர் ஊரைப் பத்திப் பெருமையாகப் பேசுறதுக்காக அப்படி எழுதியிருக்கார். அதைப் போய்…”

“சரி, அவரை விடுங்க, கம்ப ராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கு தெரியுமா?

“எது? கம்பர் எழுதிய கம்ப ராமாயணத்திலா?”

“ஹா…ஹா.. ஆமா.. கம்பர் எழுதிய கம்ப ராமாயணத்தில்தான்.”

“என்ன எழுதியிருக்கார்?”

ஈர நீர் படிந்து இந் நிலத்தே சில

கார்கள் என்ன வரும் கருமேதிகள்

ஊரில் நின்ற கன்று உள்ளிட மென்முலை

தாரை கொள்ளத் தழைப்பன சாலியே

“புரியற மாதிரி சொல்லு.”

“அதாவது வானத்துக் கருமேகங்களைப் போல் நிலத்தில் நடமாடும் எருமைகள், மேய்ச்சலுக்குப் போயிருக்கும் சமயத்தில், ஊரில் விட்டுவிட்டு வந்த தங்களுடைய கன்றுகளை நினைத்தவுடன், தானாகவே பால் சுரந்து தாரை தாரையாக வழியுமாம். அந்தப் பால் வெள்ளமாக வயலுக்கு ஓடுவதால் அங்கிருக்கும் நெற்பயிர் தழைத்து வளர்கிறதாம். எவ்வளவு அருமையா எழுதியிருக்கார், பாருங்க!”

“அட, ஆமாம். மிகைப்படுத்தல்தான் என்றாலும் ரசனையாகத்தான் இருக்கு.”

“இன்னொரு பாட்டும் இருக்கு. கோசல நாட்டின் செல்வச் செழிப்பு பற்றி சொல்லும் பாடல்.

முட்டில் அட்டில், முழங்குகிற வாக்கிய

நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம்தான்

பட்டமென் கமுகு ஓங்கு படப்பை போய்

நட்டசெந் நெலின் நாறு வளர்க்குமே

“அப்படின்னா?”

“கோசல நாட்டில் அப்போது வீடுகளின் சமையலறைகளில் உணவு சமைப்பதற்கானப் பொருட்கள் யாவும் குறைவில்லாமல் நிறைந்திருந்தனவாம். ஒவ்வொரு வீட்டிலும் பெரிய பெரிய தவலைகளில் உலை கொதிக்குமாம். அந்த உலையில் போடுவதற்காக அரிசியைக் கழுவி எடுத்த கழுநீர், வெள்ளமாகப் பெருகி, பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும் சோலை வழியாக நீரோடையைச் சேர்ந்து அங்கிருந்து வயலுக்குப் போய்ச்சேர்ந்து நாற்றுகளை வளர்க்குமாம்.”

“பாரேன், எப்படி எல்லாம் யோசிச்சிருக்கார்னு? மாம்பழத்து சாறெடுத்து உரமிடுவார்னு மருதகாசி பாட்டில் இருக்கே. அதுக்கும் ஏதாவது பாட்டு கம்ப ராமாயணத்தில் இருக்கா?

“தெரியலை, ஆனால் அரிச்சந்திரபுராணத்தில் இருக்கு.”

“ஓஹோ…”

“மாம்பழம் மட்டுமில்ல, வாழைப்பழம், பலாப்பழம் இன்னும் மற்றப் பழங்களெல்லாம் மக்கள் பறிக்க மறந்துபோனதால் அல்லது அளவுக்கு அதிகமாக காய்த்ததால் பறிக்காமல் விட்டுப்போய், மரத்திலேயே முற்றிக் கனிந்து, வெடித்து, பீறீட்டுப் பொழிகிற சாறும் கூடவே தேன்கூட்டிலிருந்து வழியற தேனுமா சேர்ந்து வயலில் பாய்ந்து நாற்றுகளை வளர்க்குதாம். கற்பனையே செமையா இருக்கில்ல?

இறவு பாய இருங்கத லிக்கனி

மறவி பாயவருக் கைக்கனி மாங்கனி

பிறவும் வாய்விண்டு பீறிப் பொழிந்திடு

நறவு பாய்ந்திட நாறு வளர்ந்தவே

“ஆக..அந்தக் காலத்தில் ஃப்ரூட் சாலட் போட்டெல்லாம் பயிர் வளர்த்திருக்காங்கன்னு சொல்லு.”

“எல்லாமே உயர்வு நவிற்சி அணிதான் என்றாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. கழுநீர் சத்து என்பதால் செடிக்கு ஊத்துறோம். இப்போவெல்லாம் பழங்களை காசு கொடுத்து வாங்குவதால் பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு தோலை உரமாக்குறோம். அப்படிதான் இதுவும்.

தோட்டத்தில் அசுவினிப் பூச்சிகள், செதில் பூச்சிகள், பூஞ்சைக்காளான் பிரச்சனை இருப்பதால் அதற்கு தீர்வு தேடியபோது கிடைத்ததுதான் தேமோர்க் கரைசல். தேங்காய்ப்பாலும் மோரும் சேர்த்து புளிக்கவைத்த  கலவைதான் அது. பூச்சிக்கொல்லி மட்டுமல்ல, நல்ல பயிர் ஊக்கியும் கூட. பூப்பிடிக்கும் காலத்தில் தெளித்தால் பூக்கள் எக்கச்சக்கமாகப் பூக்கும். புளித்த மோர் இரண்டையும் சம அளவு (இது ஒரு லிட்டர் என்றால் அதுவும் ஒரு லிட்டர்) எடுத்து நன்கு குலுக்கிக் கலக்கி, ஒரு பிளாஸ்டிக் அல்லது மண் பாத்திரத்தில் ஊற்றி சிறிதும் இடைவெளி இல்லாமல் மூடி போட்டு அல்லது வேடு கட்டி, தோட்டத்திலேயே ஒரு பக்கம் நிழலில் அல்லது ஈர மண்ணில் வைத்துவிடவேண்டும். ஒரு வாரத்தில் கலவை நன்கு புளித்திருக்கும். அதை மறுபடியும் நன்கு குலுக்கிக் கலக்கி, வடிகட்டி எடுத்து, 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து ஸ்ப்ரேயர் மூலம் தெளிக்கவேண்டும். செடியின் தண்டு, கிளை, இலைகளின் மேல் பகுதி, கீழ்ப்பகுதி என ஒரு இடம் விடாமல் பாதிக்கப்பட்ட செடியின் எல்லாப் பகுதியிலும் தெளித்தால், விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கும். அதுக்குதான் இந்த தேங்காய்ப்பால்.”

“இவ்வளவு இருக்கா இதில்? எது எப்படியோ, நீ இவ்வளவு தூரம் உன் செடிகொடிகளை அக்கறையா பார்த்துப் பார்த்து கவனிச்சி, வீட்டுக்குத் தேவையானதை எல்லாம் விளைவிக்கிறது பெரிய விஷயம்தான். பாலும் தயிரும் ஊத்தி வளர்க்கிறதில் தப்பே இல்ல!”

“அப்படி வாங்க வழிக்கு!”&&&

27 May 2021

சவ்சவ் பிரதாபம்

ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை என்ற விடுகதை நான் சின்ன வதில் அதிகம் ரசித்த ஒரு விடுகதை. விடை தெரியாமல் விழித்து பிறகு விடை தெரிந்தபிறகு, அட, ஆமாம்ல.. என்று தென்னையின் உதார குணத்தையும் அந்த விடுகதையை உருவாக்கிவரின் மதிநுட்பத்தையும் ஒருசேர ரசித்தேன். இப்போது ஏன் அந்த விடுகதையை சொல்கிறேன் என்று கேட்பீர்கள். தோட்டத்திலிருக்கும் சவ்சவ் கொடியைப் பார்க்கும்போதெல்லாம் இந்த விடுகதை தவறாமல் நினைவுக்கு வந்துவிடும். ஒரு அடி குழி தோண்டி இரண்டு முட்டை இட்டேன். அண்ணாந்து பார்ப்பதற்கு பதில், குனிந்து குனிந்து கொடியிடுக்கில் பார்த்துப் பார்த்து துவரை ஐம்பது அறுபது காய்கள் போல பறித்துவிட்டேன். இன்னும் கூட ஏராளமாய்ப் பூத்துக் காய்த்துக்கொண்டிருக்கிறது

சவ்சவ் காய்க்கு சீ(மை)மக் கத்திரிக்காய், பெங்களூர் கத்திரிக்காய், மேரக்காய் (மேலைநாட்டு சுரைக்காய் என்பதுதான் மருவி மேரக்காயாகி இருக்குமோ?) என்று தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் வெவ்வெறு பெயர்கள். ஆனால் கரீபியக் கடலிலிருக்கும் ஜமைக்காவிலும் இது சவ்சவ் தானாம். இருக்காதா பின்னே? இதன் பூர்வீகமே அதுதானே. ஆஸ்திரேலியாவில் இதன் பெயர் choko. வைட்டமின் B,C & E இவற்றோடு ஏராளமான சத்துக்களைக் கொண்டிருக்கும் சவ்சவ், நீரிழிவு நோயாளிகளுக்கும் இதயக் கோளாறு உள்ளவர்களுக்கும் அருமருந்தாகும். வீட்டுத் தோட்டத்தில் நம் பராமரிப்பில் இரசாயன உரங்களற்று விளைவிக்கப்பட்டு தினமும்  ஃப்ரஷ்ஷாகக் கிடைத்தால் அனுபவிக்காமல் இருப்போமா? சாம்பார், புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, குருமா, கூட்டு, பொரியல், சூப் என கொஞ்சநாளாகவே எங்கள் வீட்டு சமையலறையில் சவ்சவ் ராஜ்ஜியம்தான். 


சவ்சவ்வை வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கமுடியும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. ஃபேஸ்புக் தோழி உஷா ராமச்சந்திரன்தான் சவ்சவ் வளர்ப்பில் என்னுடைஇன்ஸ்பிரேஷன். முற்றிகாயை வாங்கி முளை வரவிட்டு பிறகு மண்ணில் நட்டுவைப்பது வரை அவரிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். இங்குள்ள கடைகளில் சவ்சவ் கிலோ 12 டாலர். அதுவும் வற்றி வதங்கி முற்றி முளைத்து சமைக்க இயலாதபடி இருக்கும். தோட்டத்தில் வளர்ப்பதற்கென்று கடையிலிருந்து முற்றிஇரண்டு காய்களை வாங்கி வந்தேன். அவற்றிலிருந்துதான் இப்போது இவ்வளவு சவ்சவ்களை அறுவடை செய்துகொண்டிருக்கிறேன். என்னுடைநட்புகளுடனும், அக்கம்பக்கத்தவர்களுடனும் கணவரின் அலுவலகத் தோழர்களுடனும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

 


சவ்சவ் வளர்ப்பது மிகவும் எளிது. (பராமரிப்பதுதான் பெரும் சவால்) ஒரு முற்றிய சவ்சவ் காய்தான் விதை. முன்பே சொன்னது போல ஒரு சவ்சவ் கொடியில் நூற்றுக்கணக்கான சவ்சவ் காய்கள் உருவாகின்றன. நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ஒரே ஒரு காய் நட்டுவைத்தாலே போதுமாம். (நான் தெரியாத்தனமாக இரண்டு காய்களை ஊன்றிவிட்டேன்.) ஒரு பெரிபாத்திரத்தில் கால்வாசி தண்ணீர் நிரப்பி அதற்கு சற்றே மேலே இருக்குமாறு ஒரு வடிகிண்ணத்தை வைத்து அதில் இந்த காயை வைத்து மேலே ஒரு பாலிதீன் கவரைப் போட்டு மூடி வைத்தேன். ஒரு வாரத்தில் நன்கு முளைவிட்டு, வேரும் விட்டிருந்தது. சவ்சவ் கொடியின் வளர்ச்சி முளையிலேயே பிரமிக்க வைத்தது. இரண்டுவாரம் கழித்து, முளைத்து மூன்று இலை விட்ட சவ்சவ்வை ஒரு அடிக்கும் குறைவான ஆழத்தில் நட்டுவைத்துவிட்டு என் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தண்ணீர் மட்டும் தினமும் ஊற்றினேன். ஒரே மாதத்தில் அசுர வளர்ச்சி. கிட்டத்தட்ட தோட்டத்தையே ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. அதே இடத்தில்தான் இதற்கு முன்பு வெள்ளரி, ஸ்நோ பீஸ், பத்தங்காய், எல்லாமும் போட்டேன். எதுவும் பந்தலை விட்டு அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. அழகாய்ப் பந்தலுக்குள்ளேயே வளர்ந்து காய்த்துப் பலன் கொடுத்தன. ஆனால் அடங்காப்பிடாரி சவ்சவ் கொடியோ பகாசுரனைப் போல பக்கத்தில் இருந்த செடிகளை எல்லாம் கபளீகரம் செய்துவிட்டு காடு போல வளர்ந்துவிட்டது. காம்பவுண்டுக்கு மேல் தலை நீட்டி, அடுத்த வீட்டை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த செம்பருத்திக் கிளைகள் எல்லாம் தோல்வியுற்ற மல்யுத்த வீரனைப் போல மண்ணைக் கவ்விக் கிடக்க, பாரிஜாதம் கண்ணுக்கே தெரியவில்லை. புதர் போல வளர்ந்து, கொத்துக் கொத்தாய்ப் பூத்து, தினமும் நூற்றுக்கணக்கில் படையெடுக்கும் தேனீக்களின் பசியாற்றிக் கொண்டிருந்த துளசியும், திருநீற்றுப் பச்சிலையும் கூட இதன் ஆக்கிரமிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. அடுத்த இலக்காக நான்கடி தூரத்திலிருக்கும் எலுமிச்சை, ஆரஞ்சு மரங்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தபோது, இனி பொறுப்பதற்கில்லை என்று பொங்கி எழுந்துவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பக்கத்துக் கொடிகளை கட்டுப்படுத்தி, மூச்சுவிடத் திணறிக்கொண்டிருந்த அக்கம்பக்கச் செடிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்திருக்கிறேன். சவ்சவ்வின் அபரிமிதமான வளர்ச்சி ஒரு பக்கம் பிரமிப்பு என்றால் அதன் பற்றிழைகளின் சாதுர்ம் இன்னொரு பக்கம் பிரமிப்பு. வழக்கமாக வெள்ளரி, ஸ்நோ பீஸ் போன்றவற்றின் கணுவில் ஒரே ஒரு பற்றிழை வரும். பக்கதிலிருக்கும் எதையாது பற்றிக்கொண்டு வளரும். ஆனால் சவ்சவ்வுக்கு ஒவ்வொரு கணுவிலும் கை போல ஒரு பற்றிழை அதிலிருந்து விரல்கள் போல ஐந்து பற்றிழைகள் வளர்கின்றன. அது மட்டுமா?  ஐந்தும் ஐந்து திசைகளில்.. ஐந்தும் ஐந்து அளவுகளில்… எப்படியும் எதையாது பிடித்துக்கொண்டு வளர்ந்துவிடும் துடிப்பும் வேகமும் அதில் தெரிகிறது


ஒரு தாவரம் எந்த அளவுக்கு தன்னைத் தக்கவைப்பதில் திறமைசாலியாக இருக்கிறது? ஆக்டோபஸ் போல பற்றிழைகளால் கிடைப்பதை எல்லாம் கெட்டியாகப் பற்றிக்கொண்டு வளர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இப்படி நூற்றுக்கணக்கில் காய்த்துத் தள்ளக்கூடிஒரு மெல்லிகொடி வளரத் தோதாக இத்தனை ஆதாரங்கள் கட்டாம் தேவைதான் அல்லவா? சவ்சவ் வளரத் தேவை நல்ல சூரியவெளிச்சம் மற்றும் தாராளமாகத் தண்ணீர். எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு செழிப்பான சதைப்பற்றுள்ள காய்களைப் பெறமுடியும். 

பூக்கள் மற்றொரு பிரமிப்பு. பிற கொடி வகைகளைப் போலவே சவ்சவ் கொடியிலும் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித்தனியாகப்பூக்கின்றன. பெண் பூவின் கீழே மிளகு சைஸில் குட்டியாய் சவ்சவ் இருப்பதைக் கொண்டு பெண் பூ என்று அறிலாம். ஒரு கணுவில் இலை அல்லாது சரமாக ஆண்பூக்களும், ஒரே ஒரு பெண் பூவும் ஒரு பற்றிழையும் புறப்படுகின்றன. ஆண்பூக்களை சரம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவை பார்ப்பதற்கு சரம் போல நீளமான காம்பில் பத்துப் பதினைந்து பூக்கள் பூக்கின்றன. ஆனால் பெண் பூ ஒன்றே ஒன்றுதான். தப்பித் தவறி இரண்டு பூக்கள் ஒரு காம்பில் வந்துவிட்டால் ஒன்று பிஞ்சிலேயே வெம்பி விழுந்துவிடுகிறது. ஒன்று மட்டுமே வளர்ந்து காயாகிறதுமிளகு சைஸில் பூக்கும் பூ கிட்டத்தட்ட அரைக்கிலோ அளவுக்கு காயாய் கிடைப்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்! காய்கள் அழுத்தமான பச்சை நிறத்திலும் லேசான பள்ளங்களோடும் இருக்கும்போது பறித்தால் இளசாக இருக்கும். தோல் சீவாமல், விதை எடுக்காமல் அப்படியே சமைக்கலாம். வெளிர் பச்சையாகவும் மொழுமொழுவென்றும் இருந்தால் முற்றிவிட்டது என்று அர்த்தம். முற்றிய காய்கள் கொடியில் இருக்கும்போதே கூட முளைவிட்டு வளர்ந்து அடுத்தத் தலைமுறையைத் தாங்க தயாராகிவிடுகின்றன. காய்க்கும் பருவம் முடிந்த பிறகு சவ்சவ் கொடியின் அடிக்கிளையில் ஒன்றிரண்டு கிளைகளை மட்டும் அளவாக வெட்டித் தக்க வைத்துக்கொண்டு மற்றவற்றை ஒட்ட வெட்டிவிட்டால்,  அடுத்தடுத்த வருடங்களின்போது காய்க்கும் பருவத்தில் கிளைகள் மறுபடியும் வளர்ந்து பலன் கொடுக்குமாம்.


அது சரி, இப்படி வளர்கிறதே, பூச்சித்தொல்லையே கிடையாதா என்ற சந்தேகம் வரக்கூடும். அது இல்லாமலா? வழக்கமாக மெலான் வகை தாவரங்களைத் தாக்கும் powdery mildew எனப்படும் நுண்துகள் பூஞ்சைக்காளான் இதையும் தாக்கியது. இலைகளில் வெள்ளையாக மாவு தெளித்தாற்போல் ஆங்காங்கே அல்லது இலை முழுவதும் படிந்து இலைகள் காய்ந்து கருக ஆரம்பித்தன. இதற்கொரு கைவைத்தியம் செய்தேன். தேமோர்க்கரைசல் கலந்து இரண்டு முறை தெளித்தேன். குணமாகிவிட்டது. தேமோர்க்கரைசல் பற்றி மற்றொரு பதிவில் எழுதுவேன்.  ஒவ்வொரு முறையும் சோதனை முற்சியாக தோட்டத்தில் எந்த செடியை நான் வளர்த்தாலும் அது அதன் முழுப்பலனையும் தராமல் ஓய்வதே இல்லை. கத்தரிக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பரங்கிக்காய், தக்காளி, மிளகாய், எலுமிச்சை, கொய்யா, வல்லாரை, புதினா, ஸ்நோ பீஸ், பயித்தங்காய் என என் தோட்டம் கொடுத்த பலன்களை சொல்லி மாளாது. அம்மாவைப் போல, மாமியைப் போல எனக்கும் தோட்ட ராசி இருக்கிறது போலும். ஆனால் என்ன, இந்த கறிவேப்பிலை மட்டும்தான் செல்லப்பிள்ளையாட்டம் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல தாஜா பண்ணிதான் வழிக்குக் கொண்டுவரவேண்டும்.

சவ்சவ்களை கொடியிலேயே முற்றவிடாமல் அவ்வப்போது பறித்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்கிறேன். தேவைப்பட்டால் ஃப்ரெஷ்ஷாகவும் பறித்து சமைத்துக் கொள்கிறேன். சுவை சூப்பராக உள்ளது. நம் தோட்டத்துக் காய் என்றாலே சிறப்பு. அதிலும் துளி இரசாயனம் பயன்படுத்தாமல், உரம் கூட எதுவும் இதற்கென்று ஸ்பெஷலாக போடாமல் இயற்கை முறையில் பராமரிக்கப்பட்டு அக்கறையோடு வளர்க்கப்பட்ட காய்கள் என்றால் சுவைக்கு சொல்லவேண்டுமா என்னஇந்தோனேஷியர்கள் சவ்சவ் கொடியின் இளந்தளிர்களை கீரை போல உணவில் சேர்த்துக்கொள்கிறார்களாம். அதையும் ஒருமுறை செய்து பார்த்துவிட எண்ணியிருக்கிறேன்.தினமும் குழம்பு கூட்டு என்று சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் போரடித்துவிடாதா? வேறு என்ன செய்யலாம் என்று தேடியபோது கண்ணில் பட்டது உலகளவில் பிரசித்தமான Sri Lankan Christmas cake. சவ்சவ்வை தோல் சீவி சின்னச்சின்னத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரைப்பாகில் வேகவைத்து ஜாம் போல பதப்படுத்தி அதைக் கொண்டு கேக் தயாரிக்கப்படுகிறது. செய்முறை பார்த்தேன். Very rich. பிராந்தி எல்லாம் சேர்க்கவேண்டுமாம். அடப் போங்கப்பா என்று விட்டுவிட்டேன். இருக்கவே இருக்கிறது நம்முடைய ஸ்பெஷல் அல்வா. அதனால் ஒருநாள் பரிசோதனை முயற்சியாக சவ்சவ் அல்வா செய்யலாம் என்று முடிவெடுத்தேன். பரங்கிக்காய் அல்வா, பூசணிக்காய் அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா ஏன் வாழையிலை அல்வா கூட செய்து பார்த்தாகிவிட்டது. சவ்சவ் அல்வாவையும் செய்துபார்த்துவிடலாமே! சும்மா சொல்லக்கூடாது. சுவை அள்ளுகிறது. மாங்காயாக இருந்தால் வெல்லப்பச்சடி செய்திருக்கலாம் என்றார் மாங்காய்ப் பிரியரான கணவர் ஏக்கத்துடன். சட்டென்று துளசி டீச்சரின் ஆப்பிள் மாங்காய்ப் பச்சடி நினைவுக்கு வந்தது. அதை மட்டும் ஏன் விட்டுவைக்கவேண்டும் என்று மனசுக்குள் டீச்சருக்கு நன்றி சொல்லிக்கொண்டு ஆம்சூர் பொடியும் வெல்லமும் போட்டு மாங்காய் இல்லாத ஸ்பெஷல் மாங்காய்ப் பச்சடியும் செய்து அசத்தியாகிவிட்டது. சுவை எப்படியா? சூப்பர் என்று மாங்காய்ப் பிரியரே மனம் திறந்து சொன்னபின் வேறு என்ன சான்றிதழ் வேண்டும்? 


&&&&&