தோட்டத்துப் பிரதாபம் - 22
“தேங்காய்ப்பால்
எதுக்கு? ஆப்பம் செய்யப்போறியா?”
கடையிலிருந்து
வாங்கி வந்த வாராந்திர மளிகைப் பொருட்களை பைக்குள்ளிருந்து எடுத்து வெளியில் வைத்த
போது கண்ணில் பட்ட இரண்டு தேங்காய்ப்பால் டின்களைப் பார்த்துவிட்டு கணவர் கேட்டார்.
இரு..
இரு… தேங்காய்ப்பால் டின்னா? ஏம்மா, தேங்காயை வாங்கி, உடைச்சி, துருவி, அரைச்சி, பால்
புழிய முடியாத அளவுக்கு நீ அவ்வளவு பிசியா இல்ல சோம்பேறியா? என்று நீங்கள் கேட்பது
புரிகிறது.
ஆஸ்திரேலியாவில்
சொந்தமாக தேங்காய் உற்பத்தி கிடையாது. ஒன்றிரண்டு சுற்றுலாத் தளங்களில் அழகுக்காக
தென்னை வைத்திருக்கிறார்கள். மரத்திலிருந்து மட்டையோ தேங்காயோ சுற்றுலாப் பயணிகளின் தலையில் விழுந்தால் ஆபத்தாகிவிடுமே என்ற பயத்தில் குரும்பையாக
இருக்கும்போதே பறித்து அப்புறப்படுத்திவிடுவார்களாம். ஆனால்
குடியேறிகளுக்கு சமையலில் சேர்க்க தேங்காய் வேண்டுமே. அதனால்
ஃபிஜி, இந்தோனேஷியா போன்ற அக்கம்பக்கத்துத்
தீவுகளிலிருந்து தேங்காய், இளநீர், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால், தேங்காய்ப் பவுடர் என அனைத்தும் இங்கு இறக்குமதி ஆகிறது. என்
அதிர்ஷ்டமோ என்னவோ, என்னதான் தட்டிப் பார்த்து, ஆட்டிப் பார்த்து, உருட்டிப்
பார்த்து வாங்கி வந்தாலும் வீட்டில் வந்து உடைத்துப்
பார்த்தால் உள்ளே அழுகி இருந்து என்னை அழவைக்கும். கொடுத்த
காசை திரும்பவும் பெற்றுவிடலாம் என்றாலும் எத்தனை தடவைதான்
இப்படி ஏமாறுவது? தேங்காயே வாங்கக்
கூடாது என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன். பிறகு தேங்காய் இல்லாமல் எப்படி சமைக்கிறேனா? அதற்குதான் ஆபத்பாந்தவனாக
உலர்தேங்காய்ப்பூ இருக்கிறதே. சட்னி, குருமா எல்லாமே
அதில்தான். சுவையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. மொத்தமாக வாங்கி வைத்துவிட்டால் தேவைப்படும்போது சட்டென்று எடுத்துப் பயன்படுத்திக்
கொள்ளலாம். உடைக்கவேண்டிய, துருவ வேண்டிய
அவசியம் இல்லை. இதில் இன்னொரு நன்மையும் உண்டு. ஃப்ரஷ் தேங்காய் போட்டு செய்த உணவுப் பதார்த்தம் போல அவ்வளவு சீக்கிரம்
கெட்டுப்போகாது. கடந்த பத்துப் பன்னிரண்டு வருடங்களாக
இப்படிதான் ஓடிக்கொண்டிருக்கிறது தேங்காய்க்கும் எனக்குமான பந்தம்.
சரி, இப்போது தேங்காய்ப்பால் கதைக்கு
வருவோம். ஆப்பத்துக்கா? என்ற கணவரின் கேள்விக்கு, உடனடியாக மறுத்து, “இல்ல..இல்ல..
செடிக்கு ஊத்த” என்றேன்.
என் பதிலைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்துபோனவர்,
நம்ப முடியாமல் “செடிக்கு ஊத்தப் போறியா? இதென்ன அநியாயம்?” என்றார்.
“இதிலென்ன
அநியாயம் இருக்கு? வீட்டுத் தோட்டத்தில் விதவிதமான காய்களும் பழங்களும் கீரைகளும் இரசாயனம்
கலக்காமல், இயற்கை முறையில் பார்த்துப் பார்த்து விளைவித்து குடும்பத்துக்கு ஆரோக்கியமான
உணவைக் கொடுக்கிறேன். காய்கறிக்கான செலவை ஓரளவு மட்டுப்படுத்தி இருக்கிறேன். உங்க அலுவலக
நண்பர்களுக்கு அவ்வப்போது கொடுத்து அவர்களுடைய அபிமானத்தை சம்பாதித்துக் கொடுக்கிறேன்.
இவ்வளவும் செய்கிற தோட்டத்துக்கு ரெண்டு டின் தேங்காய்ப்பால் ஊத்தக் கூடாதா?” என்று என்
தரப்பு வாதத்தை முன்வைத்தேன்.
“அதுக்காக, தேங்காய்ப்பால் ஊத்தி செடி வளர்க்குறதெல்லாம் ரொம்பவே ஓவர்” என்றார் கிண்டலாய்.
“நான்
கொஞ்சம் தேங்காய்ப்பால் ஊத்துறதுக்கே சொல்றீங்களே.. அந்தக் காலத்தில் பால் ஊத்தி விவசாயமே
செஞ்சிருக்காங்க தெரியுமா?”
“என்னது?
பால் ஊத்தி விவசாயமா?”
“ஆமா..
பாகப்பிரிவினை படம் பார்த்திருக்கீங்களா?”
“தேசிய
விருது வாங்கின படமாச்சே.. எப்படி பார்க்காம இருப்பேன்.. ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
பாட்டு அதில்தானே?”
“ம்க்கும்..
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தாழையாம் பூ முடிச்சி, ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு
நன்மையே..ன்னு அந்தப் படத்தில் எத்தனையோ அருமையான பாட்டெல்லாம் இருக்கு. உங்களுக்கு
இது மட்டும்தான் சட்டுனு நினைவுக்கு வருது இல்லே?” என்று ஊடினேன்.
காரணம்
இல்லாமல் இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பு மகன் குழந்தையாய் இருக்கும்போது தாலாட்டு
பாடினால்தான் தூங்குவான். ஏணையில் ஒய்யாரமாய்ப் படுத்துக்கொண்டு ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு
இருப்பான். ஏழெட்டு பாட்டாவது கேட்ட பிறகுதான் தூங்குவான். இவர் அருமையாகப் பாடுவார்.
ஏணையை ஆட்டிக்கொண்டே சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா, சின்னச்சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ, செல்லக்கிளிகளாம் பள்ளியிலே, கண்ணன் வருவான் கதை சொல்லுவான், செல்லக்கிளியே
மெல்லப்பேசு, தூங்காதே தம்பி தூங்காதே, பூமாலை நீயே புழுதி மண்மேலே, ஏன் பிறந்தாய்
மகனே என்று பட்டியல் நீளும். கடைசி இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள் என்றாலும்,
எனக்கு சென்டிமென்ட் குறுக்கிடும். இரண்டையும் தாலாட்டுப் பாட்டுப் பட்டியலிலிருந்து
தூக்கிவிடச் சொல்லி எத்தனை முறை கெஞ்சினாலும் கேட்க மாட்டார். இவர் பாட மறந்தாலும்
ஏணைக்குள்ளிருந்து பிள்ளை குதலைக் குரலில் எடுத்துக் கொடுப்பான். பேயே பேயே (சின்னப்பயலே)
புத்தா (புத்தன் ஏசு காந்தி பிறந்தது), பூமாயை (பூமாலை நீயே) என்று நேயர் விருப்பம்
போல் கேட்டுக் கேட்டு பாடவைப்பான். அந்த நினைவு வந்துவிட்டது எனக்கு.
“இப்ப
ஏன் பாகப்பிரிவினை படம் பற்றிக் கேட்கிறே?” என்றார்.
“அதில்
இன்னொரு பாட்டு - தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் -
கேட்டிருக்கீங்களா?”
“ஆங்.
சுப்பரான பாட்டாச்சே அது?”
“அதோட
ஆரம்ப வரிகள் தெரியுமா?”
“சரியா
நினைவில்லையே..”
“பாலூற்றி
உழவு செய்வார், பனி போல் விதை நடுவார்
மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே…
கவிஞர்
மருதகாசி எழுதிய பாட்டு.”
“ஓ..
அதைக் கேட்டுட்டுதான் நீயும் உன் தோட்டத்துக்கு பால் ஊத்தி வளர்க்கப் போறியா? அவர்
ஊரைப் பத்திப் பெருமையாகப் பேசுறதுக்காக அப்படி எழுதியிருக்கார். அதைப் போய்…”
“சரி,
அவரை விடுங்க, கம்ப ராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கு தெரியுமா?
“எது?
கம்பர் எழுதிய கம்ப ராமாயணத்திலா?”
“ஹா…ஹா..
ஆமா.. கம்பர் எழுதிய கம்ப ராமாயணத்தில்தான்.”
“என்ன
எழுதியிருக்கார்?”
“ஈர நீர் படிந்து இந் நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கருமேதிகள்
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென்முலை
தாரை கொள்ளத் தழைப்பன சாலியே”
“புரியற
மாதிரி சொல்லு.”
“அதாவது
வானத்துக் கருமேகங்களைப் போல் நிலத்தில் நடமாடும் எருமைகள், மேய்ச்சலுக்குப் போயிருக்கும்
சமயத்தில், ஊரில் விட்டுவிட்டு வந்த தங்களுடைய கன்றுகளை நினைத்தவுடன், தானாகவே பால்
சுரந்து தாரை தாரையாக வழியுமாம். அந்தப் பால் வெள்ளமாக வயலுக்கு ஓடுவதால் அங்கிருக்கும்
நெற்பயிர் தழைத்து வளர்கிறதாம். எவ்வளவு அருமையா எழுதியிருக்கார், பாருங்க!”
“அட,
ஆமாம். மிகைப்படுத்தல்தான் என்றாலும் ரசனையாகத்தான் இருக்கு.”
“இன்னொரு
பாட்டும் இருக்கு. கோசல நாட்டின் செல்வச் செழிப்பு பற்றி சொல்லும் பாடல்.
முட்டில் அட்டில், முழங்குகிற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம்தான்
பட்டமென் கமுகு ஓங்கு படப்பை போய்
நட்டசெந் நெலின் நாறு வளர்க்குமே”
“அப்படின்னா?”
“கோசல
நாட்டில் அப்போது வீடுகளின் சமையலறைகளில் உணவு சமைப்பதற்கானப் பொருட்கள் யாவும் குறைவில்லாமல்
நிறைந்திருந்தனவாம். ஒவ்வொரு வீட்டிலும் பெரிய பெரிய தவலைகளில் உலை கொதிக்குமாம். அந்த
உலையில் போடுவதற்காக அரிசியைக் கழுவி எடுத்த கழுநீர், வெள்ளமாகப் பெருகி, பாக்கு மரங்கள்
உயர்ந்து வளர்ந்திருக்கும் சோலை வழியாக நீரோடையைச் சேர்ந்து அங்கிருந்து வயலுக்குப்
போய்ச்சேர்ந்து நாற்றுகளை வளர்க்குமாம்.”
“பாரேன்,
எப்படி எல்லாம் யோசிச்சிருக்கார்னு? மாம்பழத்து சாறெடுத்து உரமிடுவார்னு மருதகாசி பாட்டில்
இருக்கே. அதுக்கும் ஏதாவது பாட்டு கம்ப ராமாயணத்தில் இருக்கா?
“தெரியலை,
ஆனால் அரிச்சந்திரபுராணத்தில் இருக்கு.”
“ஓஹோ…”
“மாம்பழம்
மட்டுமில்ல, வாழைப்பழம், பலாப்பழம் இன்னும் மற்றப் பழங்களெல்லாம் மக்கள்
பறிக்க மறந்துபோனதால் அல்லது அளவுக்கு அதிகமாக காய்த்ததால்
பறிக்காமல் விட்டுப்போய், மரத்திலேயே முற்றிக் கனிந்து,
வெடித்து, பீறீட்டுப் பொழிகிற சாறும் கூடவே தேன்கூட்டிலிருந்து வழியற தேனுமா சேர்ந்து
வயலில் பாய்ந்து நாற்றுகளை வளர்க்குதாம். கற்பனையே செமையா இருக்கில்ல?
இறவு பாய இருங்கத லிக்கனி
மறவி பாயவருக் கைக்கனி மாங்கனி
பிறவும் வாய்விண்டு பீறிப் பொழிந்திடு
நறவு பாய்ந்திட நாறு வளர்ந்தவே”
“ஆக..அந்தக்
காலத்தில் ஃப்ரூட் சாலட் போட்டெல்லாம் பயிர் வளர்த்திருக்காங்கன்னு சொல்லு.”
“எல்லாமே
உயர்வு நவிற்சி அணிதான் என்றாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. கழுநீர் சத்து என்பதால்
செடிக்கு ஊத்துறோம். இப்போவெல்லாம் பழங்களை காசு கொடுத்து வாங்குவதால் பழத்தை நாம்
சாப்பிட்டுவிட்டு தோலை உரமாக்குறோம். அப்படிதான் இதுவும்.
தோட்டத்தில்
அசுவினிப் பூச்சிகள், செதில் பூச்சிகள், பூஞ்சைக்காளான் பிரச்சனை இருப்பதால் அதற்கு
தீர்வு தேடியபோது கிடைத்ததுதான் தேமோர்க் கரைசல். தேங்காய்ப்பாலும் மோரும் சேர்த்து
புளிக்கவைத்த கலவைதான் அது.
பூச்சிக்கொல்லி மட்டுமல்ல, நல்ல பயிர் ஊக்கியும் கூட.
பூப்பிடிக்கும் காலத்தில் தெளித்தால் பூக்கள் எக்கச்சக்கமாகப்
பூக்கும். புளித்த மோர் இரண்டையும் சம அளவு (இது ஒரு லிட்டர் என்றால் அதுவும்
ஒரு லிட்டர்) எடுத்து நன்கு குலுக்கிக் கலக்கி,
ஒரு பிளாஸ்டிக் அல்லது மண் பாத்திரத்தில் ஊற்றி சிறிதும் இடைவெளி இல்லாமல் மூடி போட்டு அல்லது வேடு கட்டி, தோட்டத்திலேயே ஒரு
பக்கம் நிழலில் அல்லது ஈர மண்ணில் வைத்துவிடவேண்டும்.
ஒரு வாரத்தில் கலவை நன்கு புளித்திருக்கும். அதை மறுபடியும் நன்கு குலுக்கிக்
கலக்கி, வடிகட்டி எடுத்து, 1:10 என்ற
விகிதத்தில் தண்ணீர் கலந்து ஸ்ப்ரேயர் மூலம் தெளிக்கவேண்டும். செடியின் தண்டு,
கிளை, இலைகளின் மேல் பகுதி, கீழ்ப்பகுதி என ஒரு இடம் விடாமல் பாதிக்கப்பட்ட
செடியின் எல்லாப் பகுதியிலும் தெளித்தால்,
விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கும். அதுக்குதான் இந்த தேங்காய்ப்பால்.”
“இவ்வளவு
இருக்கா இதில்? எது எப்படியோ, நீ இவ்வளவு தூரம் உன் செடிகொடிகளை அக்கறையா பார்த்துப்
பார்த்து கவனிச்சி, வீட்டுக்குத் தேவையானதை எல்லாம் விளைவிக்கிறது பெரிய விஷயம்தான்.
பாலும் தயிரும் ஊத்தி வளர்க்கிறதில் தப்பே இல்ல!”
“அப்படி
வாங்க வழிக்கு!”
&&&
வித்தியாசமாக, அழகாக, விளக்கமாக, அருமையாக எழுதி உள்ளீர்கள்... ரசித்தேன்... தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்
Deleteமிக மிக ரசித்து வாசித்தேன். செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உண்டு என்பதால் தேமோர்க்கரைசல் பற்றியும் தெரிந்து கொண்டேன். குறித்தும் கொண்டேன்.
ReplyDeleteஅழகான விளக்கத்துடன் சொல்லியிருக்கீங்க. அதுவும் இலக்கியப் பாடல்களுடன் எல்லாம். உங்கள் தோட்டத்தைப் போலவே அழகான பதிவு
கீதா
இயற்கை மற்றும் செடிகள் மீதான உங்கள் ஆர்வத்தை அறிவேன் தோழி. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
Deleteமிகவும் ரசனையுடன் எழுதி இருக்கிறீர்கள். பதிவின் வழி சொன்ன விஷயங்கள் அனைத்தும் ஸ்வாரஸ்யம்.
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.
Deleteதேமோர் கரைசல் தயாரிப்பு ..ஓர் கதை மூலம் விள்ளக்கம் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன்.
Deleteஅரிசி, காய்கறிகள் கழுவிய நீர்தான் தோட்டதுச் செடிகளுக்கு எப்பவும்.
ReplyDeleteவீட்டினுள் உள்ள மணிப்ளாண்ட் இலைகள் சுருங்கியும் உதிர்ந்தும் போவதால் இணையத்தில் தீர்வு தேடியபோது, பால் ஊற்றச் சொல்லியிருந்தார்கள்!! வீட்டினுள் வாடை வரும் என்பதால் தவிர்த்துவிட்டு, முட்டைத் தோடு, வாழைப்பழத் தோல் ஊறவைத்த தண்ணீர் ஊற்றினேன். செழிக்க ஆரம்பித்து விட்டது.
தேமோர் கரைசல் டிப்ஸுக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா. அந்தக் காலத்தில் கறிவேப்பிலை மரத்துக்குக் கீழே என் பாட்டி ஒரு ஓட்டைப் பானையைப் புதைத்து வைத்திருப்பாங்களாம். அரிசி களையும் தண்ணீர், புளித்த மோர் எல்லாவற்றையும் அந்தப் பானையில்தான் ஊற்றுவாங்களாம். அது கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் இறங்கி மரம் நன்றாக செழித்து வளருமாம்.
Deleteஅந்தத் தாலாட்டுப் பாடல் லிஸ்ட் சூப்பர். சினிமாப பாடல்களிலிருந்து சங்கத்தமிழ் வரை பொருத்தமான, அருமையான திரட்டு.
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம். சங்கிலி போல ஒன்றைத் தொட்டு ஒன்றெனத் தொடரும் எண்ணங்களுக்கு முடிவுதான் ஏது? :))
Delete