சவ்சவ் காய்க்கு சீ(மை)மக் கத்திரிக்காய், பெங்களூர் கத்திரிக்காய், மேரக்காய் (மேலைநாட்டு சுரைக்காய் என்பதுதான் மருவி மேரக்காயாகி இருக்குமோ?) என்று தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் வெவ்வெறு பெயர்கள். ஆனால் கரீபியக் கடலிலிருக்கும் ஜமைக்காவிலும் இது சவ்சவ் தானாம். இருக்காதா பின்னே? இதன் பூர்வீகமே அதுதானே. ஆஸ்திரேலியாவில் இதன் பெயர் choko. வைட்டமின் B,C & E இவற்றோடு ஏராளமான சத்துக்களைக் கொண்டிருக்கும் சவ்சவ், நீரிழிவு நோயாளிகளுக்கும் இதயக் கோளாறு உள்ளவர்களுக்கும் அருமருந்தாகும். வீட்டுத் தோட்டத்தில் நம் பராமரிப்பில் இரசாயன உரங்களற்று விளைவிக்கப்பட்டு தினமும் ஃப்ரஷ்ஷாகக் கிடைத்தால் அனுபவிக்காமல் இருப்போமா? சாம்பார், புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, குருமா, கூட்டு, பொரியல், சூப் என கொஞ்சநாளாகவே எங்கள் வீட்டு சமையலறையில் சவ்சவ் ராஜ்ஜியம்தான்.
சவ்சவ்வை வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கமுடியும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. ஃபேஸ்புக் தோழி உஷா ராமச்சந்திரன்தான் சவ்சவ் வளர்ப்பில் என்னுடைய இன்ஸ்பிரேஷன். முற்றிய காயை வாங்கி முளை வரவிட்டு பிறகு மண்ணில் நட்டுவைப்பது வரை அவரிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். இங்குள்ள கடைகளில் சவ்சவ் கிலோ 12 டாலர். அதுவும் வற்றி வதங்கி முற்றி முளைத்து சமைக்க இயலாதபடி இருக்கும். தோட்டத்தில் வளர்ப்பதற்கென்று கடையிலிருந்து முற்றிய இரண்டு காய்களை வாங்கி வந்தேன். அவற்றிலிருந்துதான் இப்போது இவ்வளவு சவ்சவ்களை அறுவடை செய்துகொண்டிருக்கிறேன். என்னுடைய நட்புகளுடனும், அக்கம்பக்கத்தவர்களுடனும் கணவரின் அலுவலகத் தோழர்களுடனும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
சவ்சவ் வளர்ப்பது மிகவும் எளிது. (பராமரிப்பதுதான் பெரும் சவால்) ஒரு முற்றிய சவ்சவ் காய்தான் விதை. முன்பே சொன்னது போல ஒரு சவ்சவ் கொடியில் நூற்றுக்கணக்கான சவ்சவ் காய்கள் உருவாகின்றன. நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ஒரே ஒரு காய் நட்டுவைத்தாலே போதுமாம். (நான் தெரியாத்தனமாக இரண்டு காய்களை ஊன்றிவிட்டேன்.) ஒரு பெரிய பாத்திரத்தில் கால்வாசி தண்ணீர் நிரப்பி அதற்கு சற்றே மேலே இருக்குமாறு ஒரு வடிகிண்ணத்தை வைத்து அதில் இந்த காயை வைத்து மேலே ஒரு பாலிதீன் கவரைப் போட்டு மூடி வைத்தேன்.
ஒரு வாரத்தில் நன்கு முளைவிட்டு, வேரும் விட்டிருந்தது. சவ்சவ் கொடியின் வளர்ச்சி முளையிலேயே பிரமிக்க வைத்தது. இரண்டுவாரம் கழித்து, முளைத்து மூன்று இலை விட்ட சவ்சவ்வை ஒரு அடிக்கும் குறைவான ஆழத்தில் நட்டுவைத்துவிட்டு என் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தண்ணீர் மட்டும் தினமும் ஊற்றினேன்.
ஒரே மாதத்தில் அசுர வளர்ச்சி. கிட்டத்தட்ட தோட்டத்தையே ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. அதே இடத்தில்தான் இதற்கு முன்பு வெள்ளரி, ஸ்நோ பீஸ், பயத்தங்காய், எல்லாமும் போட்டேன். எதுவும் பந்தலை விட்டு
அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. அழகாய்ப் பந்தலுக்குள்ளேயே வளர்ந்து காய்த்துப் பலன் கொடுத்தன. ஆனால் அடங்காப்பிடாரி சவ்சவ் கொடியோ பகாசுரனைப் போல பக்கத்தில் இருந்த செடிகளை எல்லாம் கபளீகரம் செய்துவிட்டு காடு போல வளர்ந்துவிட்டது. காம்பவுண்டுக்கு மேல் தலை நீட்டி, அடுத்த வீட்டை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த செம்பருத்திக் கிளைகள் எல்லாம்
தோல்வியுற்ற மல்யுத்த வீரனைப் போல மண்ணைக் கவ்விக் கிடக்க, பாரிஜாதம் கண்ணுக்கே
தெரியவில்லை. புதர் போல வளர்ந்து, கொத்துக் கொத்தாய்ப் பூத்து, தினமும் நூற்றுக்கணக்கில் படையெடுக்கும் தேனீக்களின் பசியாற்றிக் கொண்டிருந்த
துளசியும், திருநீற்றுப் பச்சிலையும் கூட இதன் ஆக்கிரமிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. அடுத்த இலக்காக நான்கடி தூரத்திலிருக்கும் எலுமிச்சை,
ஆரஞ்சு மரங்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தபோது, இனி பொறுப்பதற்கில்லை என்று பொங்கி எழுந்துவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பக்கத்துக் கொடிகளை கட்டுப்படுத்தி, மூச்சுவிடத் திணறிக்கொண்டிருந்த அக்கம்பக்கச் செடிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்திருக்கிறேன்.
சவ்சவ்வின் அபரிமிதமான வளர்ச்சி ஒரு பக்கம் பிரமிப்பு என்றால் அதன் பற்றிழைகளின் சாதுர்யம் இன்னொரு பக்கம் பிரமிப்பு. வழக்கமாக வெள்ளரி, ஸ்நோ பீஸ் போன்றவற்றின் கணுவில் ஒரே ஒரு பற்றிழை வரும். பக்கதிலிருக்கும் எதையாவது பற்றிக்கொண்டு வளரும். ஆனால் சவ்சவ்வுக்கு ஒவ்வொரு கணுவிலும் கை போல ஒரு பற்றிழை அதிலிருந்து விரல்கள் போல ஐந்து பற்றிழைகள் வளர்கின்றன. அது மட்டுமா? ஐந்தும் ஐந்து திசைகளில்.. ஐந்தும் ஐந்து அளவுகளில்… எப்படியும் எதையாவது பிடித்துக்கொண்டு வளர்ந்துவிடும் துடிப்பும் வேகமும் அதில் தெரிகிறது.
ஒரு தாவரம் எந்த அளவுக்கு தன்னைத் தக்கவைப்பதில் திறமைசாலியாக இருக்கிறது? ஆக்டோபஸ் போல பற்றிழைகளால் கிடைப்பதை எல்லாம் கெட்டியாகப் பற்றிக்கொண்டு வளர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இப்படி நூற்றுக்கணக்கில் காய்த்துத் தள்ளக்கூடிய ஒரு மெல்லிய கொடி வளரத் தோதாக இத்தனை ஆதாரங்கள் கட்டாயம் தேவைதான் அல்லவா? சவ்சவ் வளரத் தேவை நல்ல சூரியவெளிச்சம் மற்றும் தாராளமாகத் தண்ணீர். எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு செழிப்பான சதைப்பற்றுள்ள காய்களைப் பெறமுடியும்.
பூக்கள் மற்றொரு பிரமிப்பு. பிற கொடி வகைகளைப் போலவே சவ்சவ் கொடியிலும் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித்தனியாகப்பூக்கின்றன. பெண் பூவின் கீழே மிளகு சைஸில் குட்டியாய் சவ்சவ் இருப்பதைக் கொண்டு பெண் பூ என்று அறியலாம். ஒரு கணுவில் இலை அல்லாது சரமாக ஆண்பூக்களும், ஒரே ஒரு பெண் பூவும் ஒரு பற்றிழையும் புறப்படுகின்றன. ஆண்பூக்களை சரம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவை பார்ப்பதற்கு சரம் போல நீளமான காம்பில் பத்துப் பதினைந்து பூக்கள் பூக்கின்றன. ஆனால் பெண் பூ ஒன்றே ஒன்றுதான். தப்பித் தவறி இரண்டு பூக்கள் ஒரு காம்பில் வந்துவிட்டால் ஒன்று பிஞ்சிலேயே வெம்பி விழுந்துவிடுகிறது. ஒன்று மட்டுமே வளர்ந்து காயாகிறது.
மிளகு சைஸில் பூக்கும் பூ கிட்டத்தட்ட அரைக்கிலோ அளவுக்கு காயாய் கிடைப்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்! காய்கள் அழுத்தமான பச்சை நிறத்திலும் லேசான பள்ளங்களோடும் இருக்கும்போது பறித்தால் இளசாக இருக்கும். தோல் சீவாமல், விதை எடுக்காமல் அப்படியே சமைக்கலாம். வெளிர் பச்சையாகவும் மொழுமொழுவென்றும் இருந்தால் முற்றிவிட்டது என்று அர்த்தம். முற்றிய காய்கள் கொடியில் இருக்கும்போதே கூட முளைவிட்டு வளர்ந்து அடுத்தத் தலைமுறையைத் தாங்க தயாராகிவிடுகின்றன. காய்க்கும் பருவம் முடிந்த பிறகு சவ்சவ் கொடியின் அடிக்கிளையில் ஒன்றிரண்டு கிளைகளை மட்டும் அளவாக வெட்டித் தக்க வைத்துக்கொண்டு மற்றவற்றை ஒட்ட வெட்டிவிட்டால், அடுத்தடுத்த வருடங்களின்போது காய்க்கும் பருவத்தில் கிளைகள் மறுபடியும் வளர்ந்து பலன் கொடுக்குமாம்.
ஒவ்வொரு முறையும் சோதனை முயற்சியாக தோட்டத்தில் எந்த செடியை நான் வளர்த்தாலும் அது அதன் முழுப்பலனையும் தராமல் ஓய்வதே இல்லை.
கத்தரிக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பரங்கிக்காய், தக்காளி, மிளகாய், எலுமிச்சை, கொய்யா, வல்லாரை, புதினா, ஸ்நோ பீஸ், பயித்தங்காய் என என் தோட்டம் கொடுத்த பலன்களை சொல்லி மாளாது. அம்மாவைப் போல, மாமியைப் போல எனக்கும் தோட்ட ராசி இருக்கிறது போலும். ஆனால் என்ன, இந்த கறிவேப்பிலை மட்டும்தான்
செல்லப்பிள்ளையாட்டம் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல தாஜா பண்ணிதான் வழிக்குக் கொண்டுவரவேண்டும்.
சவ்சவ்களை கொடியிலேயே முற்றவிடாமல் அவ்வப்போது பறித்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்கிறேன். தேவைப்பட்டால் ஃப்ரெஷ்ஷாகவும் பறித்து சமைத்துக் கொள்கிறேன். சுவை சூப்பராக உள்ளது. நம் தோட்டத்துக் காய் என்றாலே சிறப்பு. அதிலும் துளி இரசாயனம் பயன்படுத்தாமல், உரம் கூட எதுவும் இதற்கென்று ஸ்பெஷலாக போடாமல் இயற்கை முறையில் பராமரிக்கப்பட்டு அக்கறையோடு வளர்க்கப்பட்ட காய்கள் என்றால் சுவைக்கு சொல்லவேண்டுமா என்ன? இந்தோனேஷியர்கள் சவ்சவ் கொடியின் இளந்தளிர்களை கீரை போல உணவில் சேர்த்துக்கொள்கிறார்களாம். அதையும் ஒருமுறை செய்து பார்த்துவிட எண்ணியிருக்கிறேன்.
தினமும் குழம்பு கூட்டு என்று சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் போரடித்துவிடாதா? வேறு என்ன செய்யலாம் என்று தேடியபோது கண்ணில் பட்டது உலகளவில் பிரசித்தமான Sri Lankan Christmas cake. சவ்சவ்வை தோல் சீவி சின்னச்சின்னத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரைப்பாகில் வேகவைத்து ஜாம் போல பதப்படுத்தி அதைக் கொண்டு கேக் தயாரிக்கப்படுகிறது. செய்முறை பார்த்தேன். Very rich. பிராந்தி எல்லாம் சேர்க்கவேண்டுமாம். அடப் போங்கப்பா என்று விட்டுவிட்டேன். இருக்கவே இருக்கிறது நம்முடைய ஸ்பெஷல் அல்வா. அதனால் ஒருநாள் பரிசோதனை முயற்சியாக சவ்சவ் அல்வா செய்யலாம் என்று முடிவெடுத்தேன். பரங்கிக்காய் அல்வா, பூசணிக்காய் அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா ஏன் வாழையிலை அல்வா கூட செய்து பார்த்தாகிவிட்டது. சவ்சவ் அல்வாவையும் செய்துபார்த்துவிடலாமே! சும்மா சொல்லக்கூடாது. சுவை அள்ளுகிறது.
மாங்காயாக இருந்தால் வெல்லப்பச்சடி செய்திருக்கலாம் என்றார் மாங்காய்ப் பிரியரான கணவர் ஏக்கத்துடன். சட்டென்று துளசி டீச்சரின் ஆப்பிள் மாங்காய்ப் பச்சடி நினைவுக்கு வந்தது. அதை மட்டும் ஏன் விட்டுவைக்கவேண்டும் என்று மனசுக்குள் டீச்சருக்கு நன்றி சொல்லிக்கொண்டு ஆம்சூர் பொடியும் வெல்லமும் போட்டு மாங்காய் இல்லாத ஸ்பெஷல் மாங்காய்ப் பச்சடியும் செய்து அசத்தியாகிவிட்டது. சுவை எப்படியா? சூப்பர் என்று மாங்காய்ப் பிரியரே மனம் திறந்து சொன்னபின் வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?
சவ் சவ் மஹாத்மியம் அருமை. தோட்டம் அழகாக இருக்கிறது. உங்கள் உழைப்பும் தெரிகிறது. பதார்த்தங்களும் செய்கிறீர்கள். வாழ்த்துகள் சகோதரி
ReplyDeleteதுளசிதரன்
பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சார்.
Deleteகீதா வாவ்! சவ் சவ்..பங்களூர் கத்தரிக்காய்..என்ன செழிப்பாக இருக்கிறது அங்கு பூமி மண் வளம் நன்றாக இருக்கிறது..இல்லையா..பல வகைகள் செய்திருக்கிறீர்களே அல்வா வரை...வாழ்த்துகள்!
ReplyDeleteஎனக்குத் தோட்டம் என்றால் அத்தனைப் பிரியம். மிகவும் பிடிக்கும்..ஆனால் வீடு மாறி மாறிப் போனதால் எங்கும் மண்ணும் இல்லை தொட்டி வைப்பதில் சிரமம் இருந்தது.
இங்கு இப்போது நான் இருக்கும் வீட்டில் சிறியதாக கழிவறையும் குளியலறையும் சேர்ந்திருந்தால் இருக்கும் அளவில் ஒரு மண் பகுதி அதில் கறிவேப்பிலை ஏற்கனவே இருந்ததை நன்றாகப் பராமரித்து இப்போது செழிப்பு...போவோ வருவோர் எல்லாம் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள் ஒரு சிறிய பிடி..4, 5 ஆர்க்தான் இருக்குமாம் 5 ரூபாயாம் கடையில். அதனால் விலைக்கும் கேட்டார்கள் நமக்கு விற்று பழக்கமில்லை அதற்கான மனமும் கிடையாது ஆதலால் சும்மா எடுத்துச் செல்லச் சொல்கிறோம்...
இன்சுலின் செடியும் ஏற்க்னவே இருந்தது.
நான் சுண்டைக்காய் வைத்தேன் இப்போதுகாய்க்கத் தொடங்கி இருக்கிறது. தக்காளி போட்டேன் நிறைய காய்கள் வந்தது. கத்தரிக்காயும் காய்த்தது. பாலக் வளர்த்து இப்போது சீசன் இல்லை. ஓமவ்ல்லை இருக்கிறது நிறைய...மல்லி பூக்கிறது. மா இரண்டு வைத்தேன் வளர்ந்து வருகிறது. ஆனால் சிறிய் இடத்தில் நிறைய எனும் போது எல்லாம் சேர்ந்து வளர கஷ்டப்படும் என்பதாலும் பெருச்சாளி வேறு வ்வருகிறது..
உங்கள் தோட்டம் செழிப்பாக இருக்கு உங்கள் ஆர்வம் உழைப்பு எல்லாம் பலன் தருகிறது! படங்கள் அழகு
கீதா
உங்கள் தோட்ட முயற்சியும் வியப்பளிக்கிறது தோழி. இவ்வளவு சின்ன இடத்திலும் எவ்வளவு வளர்க்கிறீர்கள். வாழ்த்துகள். நம்முடைய முயற்சிக்கும் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும்போது எவ்வளவு மகிழ்வாக உள்ளது. பெருச்சாளி தொல்லைக்கு ஏதாவது முடிவு கட்டப் பாருங்க. இல்லை என்றால் எல்லா உழைப்பும் வீணாகிவிடும்.
Deleteவருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் அன்பும் நன்றியும் தோழி.
சௌசௌ - சவ்சவ் - எப்படி எழுதினாலும், சிறப்பான தகவல்களுடன் பகிர்ந்த அனுபவங்களும் சிறப்பு. படம் மட்டும் முகநூலில் பார்த்தேன். அழகாக எடுத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஹா..ஹா.. சௌசௌ என்றுதான் முதலில் எழுதினேன். சௌசௌ பற்றி அறியாதவர்களும் இருக்கிறார்கள். செ ள செ ள என்று வாசித்துவிட்டால் என்னாவது என்றுதான் மாற்றிவிட்டேன். :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteசவ் சவ் காயை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம் என்பதை இப்போதுதான் அறிகிறேன்..அந்த பூச்சி மருந்து பதிவையும் படித்தபின் நிச்சயம் பயிரிடுவோம்..பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்
ReplyDeleteநான் குறிப்பிட்டது போல வளர்ப்பது மிகவும் எளிது. பராமரிப்பதுதான் கடினம். ஒருமுறை வேரூன்றிவிட்டால் விடாது கருப்பு போல அதிலிருந்து பற்பல கிளைகள் புதிது புதிதாக வெடித்துக் கிளம்பி வளர்ந்துகொண்டே இருக்கும். தேமோர் கரைசல் பற்றி அடுத்த பதிவில் தருகிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Deleteஆகா...! மகிழ்ச்சி...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Deleteஅருமையான பதிவு ...தேமோர்கரைசல் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறோம்
ReplyDeleteஆஹா.. நிச்சயமாக அடுத்த பதிவு அதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன்.
Delete