(1)
கருப்பை
நெகிழ்த்தித் தலைகாட்டும்
பேறுகால சிசுவைப்
போல
மண் நெகிழ்த்தித்
தலைகாட்டும் வித்திலை
மெல்லச் சிமிட்டி
விழித்து
முளைக்கண்ணால்
எனைக் கண்ணுறும்போதெல்லாம்
பீறிடும்
தாய்மையின் மதர்ப்பு
மீண்டும்
மீண்டும் என்னுள்!
******
(2)
என் மேனியில்
இப்போது
பாய்வதெல்லாம் பச்சை ரத்தம்!
கிளிப்பச்சை
இலைப்பச்சை கரும்பச்சை
மாம்பச்சை
பாசிப்பச்சை மரகதப்பச்சையென
விரல்நகங்கள்தோறும்
விதவிதமாய்ப் பூச்சு!
வெடிப்புற்றப்
பாதங்களின் பக்கவாட்டில்
மெல்லக் கிளைத்து
அரும்புகின்றன
பூனை மீசையென
புத்திளம்வேர்கள்!
காலையும்
மாலையும் கதிரொளி வாங்கி
பச்சையம்
தயாரிக்க நித்தமும் பயிற்சி
வெயில் மழை
குளிர் தாங்கினால் போதும்
வெகுவிரைவில்
உருவாவேன் விருட்சமாய்
அடுத்த முறை
என்னைக் காணவரும்போது
இனிப்புகள்
வேண்டாம்
கொஞ்சம்
பறவைகளைக் கூட்டிவாருங்கள்
கிளைகளேந்திக்
காத்திருப்பேன்.
******
யூகலிப்டஸ்
மரக்கூட்டில் இசையோடு
இறைஞ்சிக்கொண்டிருக்கும்
மேக்பை
குஞ்சுகளின் பசியாற்றும்பொருட்டு
அவசர அவசரமாய்
மல்லிகையின் வேர்தின்று கொழுக்கிறது
பிடில்வண்டின் பிள்ளைக்கூட்டம்!
******
அரசமரத்தைச் சுற்றுபவளுக்கு நிகராய்
எலுமிச்சம்பூக்களின் வாசத்தில் கிறங்கி
எலுமிச்சை மரத்தைச் சுற்றிச்சுற்றி வருகிறாள்.
ஏற்கனவே எண்ணிய இருபதோடு
இன்னுமொரு இருபது…
நாற்பது… அறுபது…ஆயிரம் என
எண்ண எண்ணப் பெருகும் விந்தையோடு
அவசரமாய் பறித்துப் பிழிந்து
பருகிய கனவின் சாற்றில்
புளிப்பு சற்றே தூக்கல்.
*******
(5)
உண்டு பெருத்து
உருமாற்ற முனையும் வேளையில்
தரையில் அலகு வைத்து
புழுவின் அதிர்வுணரும்
தாய்ப்பறவையின் கூரலகில்
சிறைபடுகிறது
மண்ணுக்குள் நெளியும்
மலவண்டின் மகவு.
படங்களும் அதற்கேற்ப கவி வரிகளும் அருமை... வாழ்த்துகள்...
ReplyDeleteமிகவும் நன்றி தனபாலன்.
Deleteஅருமையான கவிதைகள் .
ReplyDeleteமிகவும் நன்றி தனிமரம்
Deleteபடங்களும், படங்களுக்கேற்ற கவிதை வரிகளும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன.
ReplyDeleteவாழ்த்துகளும் பாராட்டுகளும்.
மிகவும் நன்றி வெங்கட்
Deleteபடங்களும் அதற்கு தக்க வரிகளும் ஆஹா ....
ReplyDeleteபல வரிகள் மனதிற்குள் மத்தளம் வாசிக்கின்றன ...மிக சிறப்பு
ரசித்தமைக்கு மிக்க நன்றி அனு ப்ரேம்.
Delete