16 December 2019

கான்பெராவின் வசந்தகாலத் திருவிழா



வசந்தகாலம் என்றாலே காணுமிடமெல்லாம் களைகட்டிவிடும். வண்ணவண்ணப் பூக்கள் எங்கணும் மலர்ந்து கண்ணைக் கவரும். வாசம் பரப்பி மகிழ்விக்கும். சிந்தையை குளிர்விக்கும். தோட்டத்தின் ஒற்றைப்பூவே உளம் மயக்கும் என்னும்போது ஒரு மில்லியன் பூக்களை ஒரே இடத்தில் காணநேரிட்டால்? தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரிய மலர்க்காட்சி என்று சொல்லப்படுகிற கான்பராவின் Floriade திருவிழாவில்தான் அத்தகு அரிய காட்சியைக் காணமுடியும். ஆண்டுதோறும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஒருமாத காலத்துக்கு நடைபெறும் இந்த வசந்தகாலக் கொண்டாட்டம் எப்போது ஆரம்பித்தது?

ஆஸ்திரேலியாவின் தலைநகராக கான்பெரா உருவாக்கப்பட்டதன் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக ஏதேனும் புதுமை செய்ய எண்ணியபோது தோன்றியதுதான் இந்த மலர்க்காட்சி கருத்துப்படிவம். 

Burley Griffin ஏரிக்கரையில் அமைந்திருக்கும் காமன்வெல்த் பூங்காவில் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. நெதர்லாந்தின் உலகப்புகழ் வாய்ந்த Keukenhof மலர்த்தோட்டத்தை அடிப்படையாய்க் கொண்டு இங்கும் அது போலவே உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் செயல்பாட்டாளாரான நிலவடிவமைப்பு வல்லுநர் Christiaan Slotemaked de Bruine மேற்பார்வையில் சிற்பங்கள், ஒளிவிளக்குகள், பூப்படுகைகள், இசைமேடைகள் என ஒவ்வொன்றாய் உருவாக்கப்பட்டன. 1988-ல் முறையாய் துவங்கப்பட்ட மலர்த்திருவிழா ஆண்டுதோறும் புதிய புதிய மையக்கருக்களைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்துவருகிறது.      

32-வது மலர்த்திருவிழாவான நடப்பு ஆண்டின் (2019) theme அதாவது கருப்பொருள் world in Bloom. மையப்பொருளுக்கேற்றபடி Tulips, Poppies, Daffodils, Pansies, Chrysanthemum என வகைவகையாக வண்ணவண்ணப்பூக்கள் கண்ணைப் பறித்தாலும் மைய ஈர்ப்பென்னவோ துலிப் மலர்கள்தான். துலிப் மலர்களுள்ளும்தான் எத்தனை வகை… எத்தனை வண்ணம். 

சில பூக்களை ஒற்றையாய்ப் பார்த்தாலே வசீகரிக்கும். சில பூக்களைக் கொத்தாய்ப் பார்க்க அழகு. ஆனால் துலிப் பூக்களை வயலாய்ப் பார்ப்பதே பேரழகு. கருப்பு வண்ண பான்சி மலர்கள், அடுக்கிதழ் துலிப் மலர்கள், ஆஸ்திரேலியத் தேனீக்கள் போன்றவை இன்னபிற சிறப்பம்சங்கள். தோட்டத்துக் குள்ளர்கள் இன்னொரு சுவாரசியமான ஈர்ப்பு. வயதுவாரியாக குழந்தைகளும் பெரியவர்களும் வண்ணம் அடித்து அழகுபடுத்திய குள்ளர்கள் வரிசை கட்டி நின்று வசீகரிக்கிறார்கள்.    

Ferris wheel எனப்படும் ராட்சத ராட்டினம் தவிர்க்கவியலாத சிறப்பம்சம். சுமார் 32 மீ. உயரத்திலிருந்து பூங்காவின் மொத்தப் பரப்பையும் பூப்படுகைகளின் அழகையும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கான்பெராவையுமே பார்த்து உவக்கலாம். 

பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் இசை, நடனம், கலைகள், உடைகள், கலைப்பொருட்கள் மற்றும் தோட்ட உபகரணங்கள் விற்பனை நிலையங்கள், தோட்டக்கலைப் பயிற்சி வகுப்புகள், நாய்க் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு, மதுபானம் என பன்முனைக் கொண்டாட்டத்தின் உச்சம் இத்திருவிழா.   

பகல் பொழுதில் வண்ண வண்ணப் பூக்கள் கண்பறிக்கின்றன என்றால் இரவுப்பொழுதில் வண்ண வண்ண ஒளியலங்காரங்கள் வாய்பிளக்கவைக்கின்றன. பகலின் தோற்றத்தை முற்றிலுமாய் மாற்றி வேறொரு உலகைக் கண்முன் விரிக்கின்றது Nightfest எனப்படும் இரவொளித்திருவிழா. கிட்டத்தட்ட சிட்னியின் விவித் திருவிழாவை ஒத்து பூங்கா முழுவதும் வண்ண ஒளிவீச்சுகள் குழைந்தடிக்கின்றன.

ஆண்டுதோறும் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இத்திருவிழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கின்றனர். காணுமிடமெல்லாம் மலர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு மனிதத் தலைகள். புகைப்படக் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்றால் தற்படக் கலைஞர்களுக்கோ பெருங்கொண்டாட்டம்.

("எதிரொலி" நவம்பர் மாதப் பத்திரிகையில் வெளியான என் குறுங்கட்டுரை)

கான்பெரா மலர்த்திருவிழாவில் நான் எடுத்த ஒளிப்படங்களுள் சில கீழே. 


(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

(12)

(13)

(14)

(15)

(16)

(17)

(18)

(19)

(20)

(21)

(22)

(23)

(24)

(25)

(26)

(27)

(28)

(29)

(30)
மீதமுள்ள படங்கள் வேறொரு பதிவாக வெளியாகும். 
ரசித்த அனைவருக்கும் அன்பும் நன்றியும். 


5 December 2019

மீசைக்கரண்டி


மேசைக்கரண்டி தெரியும். இதென்ன மீசைக்கரண்டி? இரண்டில் ஏதாவது ஒன்றுதான் சாத்தியம் என்ற சூழலில் இரண்டுக்குமே ஆசைப்பட்டால், கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா என்ற சொலவடையைப் பயன்படுத்துவோம்.

உண்மையிலேயே ஒருவருக்கு கூழ் குடிக்கவும் ஆசையிருந்து மீசை வளர்க்கவும் ஆசையிருந்தால் என்ன செய்வார்? மீசையை இடக்கையால் லேசாக ஒதுக்கிவிட்டுக் குடிப்பார்.

கொஞ்சம் சோம்பேறிகளாகவோ அல்லது பெரும் செல்வர்களாகவோ அல்லது இரண்டுமாகவோ இருந்தால்? ஸ்பெஷலாக ஒரு ஸ்பூன் தயாரிக்கப்பட்டுவிடும், ஸ்பூனே மீசை மயிரை ஒதுக்கித் தந்துவிடும்படி.

19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் மீசை வளர்ப்பில் பெரு மோகம் உருவான காலகட்டத்தில், அரசர்கள் பிரபுக்கள் போன்ற உயர்மட்டத் தலைகள் சூப் குடிக்கும்போது ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதானாம் இந்த மீசைக்கரண்டி. 😄😄😄



இத்தகவல் இம்மாத 'காக்கைச் சிறகினிலே' இதழில் வெளிவந்துள்ளது. காக்கை குழுமத்துக்கு மனமார்ந்த நன்றி.