28 July 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (10)


வித்யாவை சந்திக்கும் வாய்ப்புகள் அதன்பின் தானாகவே அமைந்தன. அந்தச் சந்திப்புகள் இருவரிடையே ஒரு இணக்கத்தை உண்டாக்கியிருந்தன. வித்யாவின் சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும், எல்லோரிடமும் சகஜமாய்ப் பழகும் தன்மையும் விக்னேஷை வசீகரித்திருந்தன. அதற்கு நேரெதிராக இவனது கூச்ச சுபாவமும், பெண்களைக் கண்டால் ஒதுங்கிச் செல்லும் பாங்கும் வித்யாவை ஈர்த்தன.

வித்யா, விக்னேஷின் கரங்களைப் பற்றிக்கொண்டு நட்பின் எல்லையைத் தாண்டி காதல் தேசத்துக்குள் நுழைய பெருமுயற்சி மேற்கொண்டிருந்தாள். விக்னேஷுக்கும் அதில் பெருமளவு விருப்பமிருந்தாலும், அம்மாவை எண்ணி பயந்து, வித்யாவிடமிருந்து தன் கைகளை விடுவிக்கப் போராடிக்கொன்டிருந்தான்.

"விக்கி, உங்கம்மாகிட்ட என்னை அழைச்சிட்டுப்போங்க, அவங்க என்னை ஏத்துக்கிட்டா, உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைதானே?"

"அதில்லை..வித்யா...எங்கம்மாவுக்கு பொஸஸிவ்னஸ் அதிகம். அவங்க உன்னை எதாவது தவறாப் பேசிட்டா என்ன பண்றதுன்னுதான் பயப்படறேன்! அதுவுமில்லாம என்மேல் அவங்க வச்சிருக்கிற நம்பிக்கையும் பாழாயிடும்!

"விக்கி! உங்க அம்மா மேல் நீங்க வச்சிருக்கிற அன்பும் மதிப்பும்தான் என்னை உங்க பக்கம் திரும்பவச்சுது! எங்க அப்பாகிட்ட உங்களைப் பத்தி சொன்னேன்தன்னைப் பெத்தவளோட உணர்வுகளை மதிச்சு, அவகிட்ட அன்பா இருக்கிறவன், தன் பெண்டாட்டிகிட்டயும் அதே அளவு  அன்போடயும் புரிதலோடயும் இருப்பான்னு எங்க அப்பா சொன்னார். அவருக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுபோச்சு! உங்க அம்மாவைப் பார்த்து பேசவும் தயாரா இருக்கார். நீங்கதான் பிடிகொடுக்க மாட்டேங்கறீங்க!"

"என்னை மன்னிச்சிடு, வித்யா! என் அம்மாகிட்ட உன்னைப் பத்திப் பேசற துணிச்சல் எனக்கில்லை. இந்த விஷயத்தில் நான் ஒரு கோழைதான். எனக்கு என் அம்மாவின் சந்தோஷம்தான் முக்கியம்! அதற்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன், எதை வேணும்னாலும் இழப்பேன்!"

"விக்னேஷ்! முயற்சியே செய்யாமல், முடியாதுன்னு முடிவெடுத்தால் எப்படி?"

"ப்ளீஸ், வித்யா! என்னை வற்புறுத்தாதே! நீ உங்க வீட்டில் சொல்லி வேற நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ!"

"இல்லை, விக்னேஷ்! உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொன்னால் ஒத்துக்கறேன், இல்லே...உங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலைன்னாலும் ஒத்துக்கறேன். எதுவுமில்லாமல் இப்படி சொல்றது சரியாப்படலை! நல்லா யோசிச்சுப் பாருங்க!”

 "சாரி, வித்யா!"

"சரி! இனிமேல்  நான் இந்தப் பேச்சையே எடுக்கமாட்டேன்!"

வித்யா அதன்பின் விக்னேஷைப் பார்த்தாலும் பேச்சு பொதுவாகத்தான் இருக்கும். இவனும் தன் இயல்பான உணர்வுகளுக்கு ஒரு இரும்பு முகமூடியை வலியப் பொறுத்திக்கொண்டு அவளிடம் பேசுவான்.

எல்லாம் எதற்காக? அம்மாவின் நம்பிக்கையைக் கெடுத்துவிடக்கூடாது என்ற பயம்தானே? ஆனால்....ஆனால்.....இன்று அம்மா அவன் மேல் நம்பிக்கையில்லாமல் கையிலடித்து சத்தியம் செய் என்கிறார்.

சே! முதல் முறையாய் அம்மாவின் மேல் வெறுப்பு வந்தது. தாய்மை பிரதிபலன் பாராதது என்று சொல்வார்களே! ஆனால் அம்மா என் எதிர்காலத்தையே அல்லவா என்னிடமிருந்து பறித்துக்கொண்டார்? என்றாவது ஒருநாள் அம்மாவிடம் என் காதலைச் சொல்லி அனுமதி பெறலாம் என்று எண்ணியிருந்த எண்ணத்தில் இடி விழுந்துவிட்டதே!

தன் அன்பை புரிந்துகொள்ளாத அவருக்காக தான் ஏன் தன் சுகத்தை விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று தோன்றியது.
 இனியும் அவர் பேச்சை மதிக்கவேண்டிய அவசியம் என்ன? இத்தனைநாள் மதித்து நடந்ததற்கு கிடைத்த பலன் என்ன? நம்பிக்கையின்மை!

நீயும் ஒருநாள் உன் நண்பனைப்போல்தான் செய்வாய் என்கிற அவச்சொல்! நானும் அவனும் ஒன்றா உங்களுக்கு? நான் உங்கள்மீது என் உயிரையே வைத்திருக்கிறேனே!

நினைக்க நினைக்க நெஞ்சம் பொருமியது. தாயின் இறக்கைக்குள் அடைபட்ட கோழிக்குஞ்சாய் வாழ்ந்தது போதும்; பரந்து விரிந்த வானில் ஒரு பருந்தைப் போல் எவருக்கும் அஞ்சாமல் சிறகுகளை அகலவிரித்துப் பறக்கவேண்டும்! வட்டமிட்டுப் பறந்து வானில் வலம் வரவேண்டும்.

என் வாழ்க்கையை நான் வாழவேண்டும். என்மேல் காதல் கொண்டுள்ள வித்யா என்னும் அழகு தேவதையை, அன்பின் திருவுருவத்தை என் வாழ்க்கைத் துணையாய் ஏற்கவேண்டும். ஆனால்...ஆனால்......

அம்மாவிடம் செய்த சத்தியம் நினைவுக்கு வந்தது. என்மேலிருந்த நம்பிக்கை குலையுமளவுக்கு நான் நடந்திருந்தாலன்றி, அவர் மனதில் போராட்டம் உருவாக வாய்ப்பு இல்லை. அப்படியென்றால்....தவறு என்னுடையதுதானோ? அவரது உள்ளத்தில் இத்தனைநாள் என்ன இருக்கிறது என்று அறியமுடியாத பிள்ளையாய் இருந்திருக்கிறேனா?

அம்மாவே உலகம் என்று நான் வாழ்ந்ததுபோல்தானே அவரும் மகனே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். எனக்காவது அலுவலகம், வேலை என்று வெளியில் நாலுபேரைப் பார்த்துப் பேசமுடிகிறது. அவரோ, எந்நேரமும் வீட்டுக்குள் முடங்கி, தன் மகனுக்குப் பிடித்த உணவுவகைகளைச் செய்வதிலும், கை கால் வலிகளுக்கு மருத்துவம் செய்வதிலுமே காலத்தைக் கழித்துவிடுகிறார்.

பத்திரிகைகளும், புத்தகங்களும்  படிக்கும் வழக்கம் இருக்கிறதாலேயே ஒரளவு பொழுது கழிந்துவிடுகிறது. அதற்காகவே வாடகை புத்தகநிலையத்தில் ஆயுட்கால உறுப்பினராகிவிட்டார்.அதுவும் இல்லையென்றால் ....?

அம்மா வேறெதிலும் ஆர்வம் காட்டிப் பார்த்ததில்லை.ஒரு கோயிலுக்கும் செல்வதில்லை. அக்கம்பக்கம் யார் வீட்டு, விசேஷங்களுக்கும் போவதில்லை. எவரையும் வீட்டுக்கும் அழைப்பதில்லை. கிட்டத்தட்ட சிறை வாழ்க்கைதான். அவரின் நிலையை நினைத்து பரிதாபம் எழுந்தது.

அவர் என்னை நம்பினாலும், நம்பாவிட்டாலும் என் தாய்! அவர் தம் பாதையிலிருந்து விலகலாம். நான் விலகுவது எப்படி சரியாகும்? நான் நானாக இருப்பதே அவர் நம்பிக்கையை மீண்டும் பெற ஒரே வழி!

கடவுளே....எனக்கு மனோதிடத்தைக் கொடு! பொறுமையைக் கொடு!

என் அம்மாவின் மனம் மாறும்வரை என்னை பொறுமை காக்கவிடு!

மனம் லேசானதுபோல் தோன்ற நிம்மதியாய் உறங்கினான்.


தொடரும்...

********************************************************************

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

மு. உரை:
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
-------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு


19 July 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (9)



வித்யா!

வித்யாவை காலம் தன் கண்களில் காட்டிய பொழுதை நினைத்துப் பார்க்கையிலேயே அவன் இதயம் சிறகடித்துப் படபடத்தது.

பிரபுவின் திருமணத்துக்காக கோவிலுக்குச் சென்றானே, அப்போதுதான் அவளைக் கண்டான். பிரபுவின் மற்ற நண்பர்களுடன் வந்திருந்தாள். பிரபுவின் தயவால் அறிமுகப்படலம் இனிதே முடிந்தது.

சந்தன நிறத்தில் அரக்கு பார்டர் அமைந்த, மிக மெல்லிய சரிகையோடிய பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள்.ஒற்றைப் பின்னலிட்டு அதன் நீளத்துக்கு மல்லிகைச் சரத்தைத் தொங்கவிட்டிருந்தாள். அவளுடைய சந்தன நிறத்துக்கு முன் அப்புடவை எடுபடவே இல்லை. கண்களில் அளவோடு மை தீட்டியிருந்தாள். நெற்றியில் ஒரு சிறிய கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு ஒய்யாரமாய் வீற்றிருந்தது.

உதட்டுச்சாயம் போன்ற இதர ஒப்பனைகள் ஏதுமற்று இயல்பான அழகுடன் இருந்தாள். எனினும் அங்கிருந்த பார்வைகள் யாவும் அவள்மீதே படிந்திருந்தன. அர்ச்சகர் கூட, அவள்தான் மணப்பெண் என்று நினைத்து மாலையை அவள் கையில் கொடுக்கப்போய், பின் தவறுக்காக வருந்தினார்.

கோவில் சந்திப்புக்குப் பிறகு பதிவுத் திருமணத்தின்போது மறு சந்திப்பு நிகழ்ந்தது.விக்னேஷைப் பார்த்ததும் அவளே வந்து பேசினாள். விக்னேஷுக்கு இருந்த இயல்பான கூச்சத்தால் அவன் அவளுடன் பேசுவதைத் தவிர்க்க முயன்றபோதும், அவள் வலிய வந்து பேசியது அவனுள் கிளர்ச்சியை உண்டாக்கவே செய்தது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், சுந்தரிக்கு குழந்தை உண்டான செய்தி அறிந்து பிரபுவைப் பார்க்க, இனிப்பு வாங்கிக்கொண்டு அவன் அலுவலகத்துக்கு சென்றபோது நிகழ்ந்தது, அவர்களுக்கிடையேயான மூன்றாவது சந்திப்பு!

அலுவலகம் முடியும் நேரம் போனால் பிரபுவையும்பார்த்துவிட்டு, முடிந்தால் அவனுடன் அவன் வீட்டுக்குச் சென்று சுந்தரியைப் பார்த்து வாழ்த்திவரலாம் என்பது விக்னேஷின் திட்டம். அதன்படி பிரபுவின் அலுவலகம் சென்றபோது, இவன் உள்ளே நுழையவும், வித்யா வெளியில் வரவும் சரியாக இருந்தது.

இருவரும் "ஹாய்!" சொல்லிக்கொண்டனர்.

"என்ன திடீர்னு இந்தப்பக்கம்?" வித்யா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

விக்னேஷ் விபரம் சொன்னதும் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.

விக்னேஷ் நேரே பிரபுவின் இருப்பிடம் சென்றபோது அவன் மும்முரமாய் வேலையில் மூழ்கியிருந்தான்.

"என்னடா, வீட்டுக்குப் போற உத்தேசமில்லையா?"

பின்புறமாய்ச் சென்று முதுகில் தட்டினான்.

"ஏய்...விக்கி! என்னடா திடீர்னு?"

அவனும் ஆச்சர்யம் காட்டினான். ஸ்வீட் பாக்ஸை அவனிடம் கொடுத்துவிட்டு, சுந்தரியைப் பற்றி விசாரித்தான்.

"சுந்தரி எப்படி இருக்காங்க?"

"ம்! ரொம்ப நல்லா இருக்கிறாடா. அக்கம் பக்கம் எல்லார் கூடவும் நல்ல பழக்கம் வச்சுகிட்டா. நானே இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை. வீட்டுக்காரம்மாவும் தங்கம் தான். அதனால் இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை! இந்த உலகத்திலேயே இந்த நேரம் சந்தோஷமான மனிதன் யார்னா நான்தான்னு சொல்வேன்!"

"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடா!"

"எல்லாத்துக்கும் நீங்கதான் டா காரணம். நண்பர்கள் உதவி இல்லைனா இத்தனையும் சாத்தியமான்னு எனக்குத் தெரியலை! ரொம்ப தேங்க்ஸ்டா!"

"டேய்...நமக்குள்ள என்னடா...."

"ஆ….மா……ம்! நீ… நிஜமாவே என்னைப் பார்க்கதான் வந்தியா…....இல்லே……..வேற யாரையாவது…...."

"ஏய்...என்ன புதுசா கதை விடறே…...உன்னைத் தவிர வேற யாரைப் பார்க்க வருவேன்?"

"இல்லே...வித்யா கொஞ்சநாளா உன்னைப் பத்தி விசாரிச்சுகிட்டே இருந்தாள். அவள்தான் ஒருவேள…….உன்ன வரச்சொன்னாளோன்னு……...."

"ச்சீ! ஏதாவது உளறாதேடா! நீ பாட்டுக்கு எதையாவது சொல்லப்போய்..எங்கம்மா காதுக்குப் போனால்....அவ்வளவுதான்!

"சும்மா சொன்னேன். அதுக்கே இப்படி வேர்க்குது?"

"கலாட்டா  பண்ணாமல் வீட்டுக்கு கிளம்புற வழியைப் பாருப்பா!"

"சாரிடா, நண்பா! இன்னைக்குன்னு பாத்து கொஞ்சம் அர்ஜண்ட் வேலை வந்திடுச்சு! நான் முடிச்சுட்டு வர லேட்டாகும்னு சுந்தரிக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். நீ வேணும்னா வீட்டுக்குப் போய் அவளைப் பாத்துட்டுப் போயேன்!"

"பரவாயில்லைடா! இன்னொரு நாள் வரேன்! என் வாழ்த்துகளை அவங்ககிட்ட சொல்லிடு!"

விடைபெற்று வெளியில் வந்தான். வாசலில் வித்யாவைப் பார்த்து திடுக்கிட்டான்.

"என்னங்க, இங்கே நின்னுட்டிருக்கீங்க? அப்பவே புறப்பட்டீங்க, இன்னும் போகலையா?"

"உங்களுக்காகதான் காத்திட்டிருக்கிஏன்!"

"எனக்கா? எதுக்கு?" விக்னேஷுக்கு ஜிவ்வென்றிருந்தது.

"என் ஸ்கூட்டிக்கு மூடு சரியில்லை....கிளம்ப மாட்டேன்னு ஒரே அடம்! சரி, நீ இங்கேயே இரு, நான் போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆட்டோ பிடிக்கலாமா, பஸ் படிக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கும்போது பைக் பிடிக்கலாம்னு தோணவே நின்னுட்டேன்."

அவள் அபிநயத்துடன் சொல்லி முடிக்க, விக்னேஷ் சிரித்துவிட்டான்.

"என்னது, பைக் பிடிக்கப்போறீங்களா?"

"ஏன் பிடிக்கக்கூடாதா? என்னை எங்க வீட்டில் இறக்கிவிட்டுடு, ப்ளீஸ்னு கெஞ்சிக் கேட்டால் உங்க பைக் என்னை இறக்கிவிடாதா?"

"பெண் என்றால் பேயே இரங்குமாம். இவ்வளவு அழகான பெண் கேட்டால் என் பைக் இறங்காதா…….சாரி……..இறக்கிவிடாதா?"

"அப்பாடா! ரொம்ப தேங்க்ஸ்!"

"உட்காருங்க, உங்க வீடு எங்க இருக்கு?"

அவள் லாவகமாய் ஏறி அமர்ந்தாள். முதன் முதலாய் ஒரு பெண்ணை ஏற்றிப் புண்ணியம் தேடிக்கொண்ட பைக்கை பெருமையுடன் பார்த்தான். அம்மாகூட இதுவரை இதில் அமர்ந்ததில்லை. ஒருமுறை முயன்றாள். முடியவில்லை.

"என்னடா, இது? ஏறி உட்காரவே ரெண்டு ஆள் தேவைப்படுது! எனக்கு எப்பவும் போல ஆட்டோதான் லாயக்கு!" என்று அலுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

இத்தனை நெருக்கத்தில் ஒரு பெண்ணின் மணமும் ஸ்பரிசமும் அவனைக் கிறங்கடித்தது. ஆனாலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு ஓட்டிச் சென்று அவளது வீடிருக்கும் தெருவின் முனையில் நிறுத்தினான்.

"என்ன, நிறுத்திட்டிங்க?"

"இன்னும் நாலுவீடுதானே? நடந்து போயிடுங்க!"

"அதுசரி! நான் என்ன திருட்டுத்தனமாவா உங்களோட பைக்கில வரேன்? ஏறும்போது எங்க ஆபிஸ் வாட்ச்மேனை சாட்சியாவச்சு ஏறினேன். இறங்கும்போது எங்க அப்பாவை சாட்சியா வச்சு இறங்கப்போறேன். ஓட்டுங்க!" என்று கட்டளையிட்டாள்.

இந்தப் பெண்ணுக்கு எத்தனைத் துணிச்சல்! ஒரு புதியவனுடன், அவன் பைக்கில் அமர்ந்துபோய் வீட்டு வாசலில் இறங்கினால் வீட்டார் என்ன சொல்வார்கள் என்ற பயம் துளியும் இல்லாமல் பேசுகிறாளே! அதிசயித்தான்.

வீட்டு வாசலில் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

"என்னமா, உன் ஸ்கூட்டிக்கு என்னாச்சு?"

"என்னவோ கோளாறுப்பா! நாளைக்குதான் ஆபிஸ் வாட்ச்மேன்கிட்ட சொல்லி மெக்கானிக் ஷாப் அனுப்பணும்!"

"வாங்க, தம்பி, ஏன் வெளியிலயே நிக்கறீங்க?"

அவர் இவனை வரவேற்றார்.

"வாங்க, விக்னேஷ்!" வித்யாவும் அழைக்க, ஒருவித கலக்கத்துடனேயே உள்ளே போனான்.

"அப்பா! இவர் விக்னேஷ்! பிரபுவோட நண்பர். அவரைப் பார்க்க எப்பவாச்சும் எங்க ஆபிஸுக்கு வருவார். இன்னைக்கு வந்தப்போ எங்கிட்ட மாட்டிகிட்டார்!"

அவள் சிரித்தாள். விக்னேஷ் இன்னமும் பயம் தெளியாமல் அமர்ந்திருந்தான்.

எப்போது அவள் அப்பா, "டேய், உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா என் பொண்ணை பைக்கில ஏத்திகிட்டு சுத்தினதுமில்லாம, என் கண்முன்னாடியே அவளைக் கொண்டுவந்து இறக்கிவிடுவே! ஒரு பொண்ணு அழகா இருந்தாப்போதுமே! பின்னாலேயே அலைவீங்களே! இன்னொரு தடவ அவ கூப்பிட்டான்னு வந்தியோ.....தெரியும் சேதி!"
என்று மிரட்டப்போகிறாரோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

இவனை வரவேற்பறையில் உட்காரச் சொல்லிவிட்டு வித்யா உள்ளே போய்விட்டாள்.

அவர் இவனிடம், "வீடு வரைக்கும் கொண்டுவந்து விட்டதுக்கு ரொம்ப நன்றிங்க தம்பி!" என்றதுடன், " தம்பி, காபி குடிப்பீங்களா, டீ குடிப்பீங்களா?" என்று உபச்சாரம் செய்தார்.

அவன் பதில் சொல்லுமுன், வித்யா காபிக் கோப்பைகளுடன் அங்கு வந்தாள்.

"இந்தாங்க, எடுத்துக்கங்க, நீங்க காபிப் பிரியர்னு பிரபு சொல்லியிருக்கார்!"

அவள் தந்த காபியின் ருசி அவன் நாவுக்குப் பழக்கமான ருசியைக் கொண்டிருந்தது இன்னும் வியப்பைத் தந்தது.

பிரபு சொன்னது உண்மைதானோ? இவள் தன் விஷயத்தில் ஆர்வம் காட்டக் காரணம்? பிரமிப்பு மாறாதவனாய் காபியைக் குடித்து முடித்தான்.

விடைபெற்றவனிடம், வித்யாவின் அப்பா,

"தம்பி, அடிக்கடி வாங்க! பிரபுவுக்கு நண்பர்னா எங்களுக்கும் நண்பர்தான்! போயிட்டு வாங்க!" என்று வழியனுப்பினார்.

தொடரும்...

*********************************************************

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

மு. உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.