23 April 2024

வெண்ணெய்ச்செடி (ஊனுண்ணித் தாவரங்கள் 3)

பயிர்கள் நன்கு செழித்து வளர்வதற்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று இன்றியமையாத சத்துக்கள் தேவை என்று பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். தழைச்சத்து என்பது நைட்ரஜனையும், மணிச்சத்து என்பது பாஸ்பரஸையும் சாம்பல் சத்து என்பது பொட்டாசியத்தையும் குறிக்கும். இவை பயிர் வளர மட்டுமல்ல, பொதுவான தாவர வளர்ச்சிக்கே மிகவும் அடிப்படையான சத்துகள். மண்ணில் இருக்கும் கனிம வளம் காரணமாக பல தாவரங்கள் இயற்கையாக மண்ணிலிருந்தே அவற்றைப் பெற்று வளர்கின்றன. அல்லது இயற்கை மற்றும் செயற்கை உரங்களின் மூலம் அவற்றைப் பெற்று பயனடைகின்றன. ஆனால் எந்த வகையிலும் இச்சத்துக்களைப் பெற வழியில்லாத, எரிமலைக் குழம்பினால் உண்டான மண் போன்ற, துளியும் சத்துக்கள் இல்லாத மண்ணில் வளரும் செடிகள்தான் தேவையின் பொருட்டு ஊனுண்ணித் தாவரங்களாக பரிணாம மாற்றம் அடைந்துள்ளன.

வெண்ணெய்ச்செடி

ஊனுண்ணித் தாவர வரிசையில் முதலில் ஜாடிச்செடிகள் பற்றியும் இரண்டாவதாக பனித்துளி பசைச்செடிகள் பற்றியும் பார்த்தோம். பசையைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிக்கும் இன்னொரு ஊனுண்ணித் தாவரம் பிங்விகுலா (Pinguicula) பேரினத்தைச் சேர்ந்த Butterwort செடிகள். இவற்றின் இலைகள் மினுமினுப்புடனும் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் எண்ணெய்ப் பசையுடனும் காணப்படுவதால் ‘வெண்ணெய்ச்செடி’ என்று பொருள்படும் ‘பட்டர்வர்ட்’ என்ற பெயர் இடப்பட்டுள்ளது. Pinguis என்றால் லத்தீனில் ‘கொழுப்பு’ என்று பொருள்.  

பிங்விகுலா பேரினத்தில் 80-க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. பெரும்பாலானவை தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை.

பனித்துளி பசைச்செடி

பசையைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிப்பவை என்றாலும், பட்டர்வர்ட் செடிகளுக்கும் சென்ற பதிவில் பார்த்த sundew எனப்படும் ட்ரோசெரா இனத் தாவரங்களுக்கும் உருவ அமைப்பிலும் பூச்சிகளைப் பிடிக்கும் உத்தியிலும் வேறுபாடுகள் உள்ளன.

பனித்துளி பசைச்செடிகளின் உணர் இழைகளோடு ஒப்பிடும்போது வெண்ணெய்ச்செடி இலைகளின் உணர் இழைகள் உயரத்தில் மிகவும் சிறியவை. பனித்துளி பசைச்செடியில் உணர் இழைகள் அசையக்கூடியவையாகவும் நாணல் போல் நாலாபக்கமும் வளையக்கூடியவையாகவும் இருக்கும். ஆனால் வெண்ணெய்ச்செடியின் உணர் இழைகள் அந்த அளவுக்கு அசையும் தன்மை அற்றவை.

பட்டர்வர்ட் இனத்திலேயே பல வித்தியாசமான வகைகள் உள்ளன.

  • சில பட்டர்வர்ட் இனங்கள் கோடைக்காலத்தில் பூச்சித்தின்னி இலைகள், குளிர்காலத்தில் பூச்சித்தின்னா இலைகள் என பருவகாலத்துக்கு ஏற்ப மாறுபட்ட இலைகளை உருவாக்கும்.
  • சில பட்டர்வர்ட் இனங்கள் வசந்தகாலத்திலும் குளிர்காலத்திலும் வடிவத்திலும் அளவிலும் மாறுபட்ட இலைகளை உருவாக்கும்.
  • சில பட்டர்வர்ட் இனங்கள் மொக்கு போல சிறுத்து தரைக்குள் அமிழ்ந்து குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். அப்போது உணவுக்கான தேவை கிடையாது என்பதால் புதிய தளிரோ இலையோ எதுவும் உருவாகாது. கடுங்குளிர் முடிந்து பருவநிலை சாதகமான பிறகு தரையிலிருந்து மொக்கு கிளம்பி விரிந்து புதிய துளிர்களை உருவாக்கும்.
  • சில பட்டர்வர்ட் இனங்கள் எல்லாக் காலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியான இலைகளையே வளரச்செய்யும்.

 

வெண்ணெய்ச்செடியின் இலைகள்

பட்டர்வர்ட் செடியின் இலைகள் இரண்டு செ.மீ. முதல் முப்பது செ.மீ. வரை நீளம் இருக்கும். நெருக்கமான உணர் இழைகளின் நுனியில் சுரக்கும் பசைத்திரவத்தால் இலைகள் ஈரத்தின் மினுமினுப்போடு காணப்படும். தண்ணீர் என்று நினைத்து அதைக் குடிப்பதற்காக பூச்சிகள் இலையின் மீது அமரும். அப்போது உணர் இழைகளின் பசையில் ஒட்டிக்கொள்ளும். நைட்ரஜனின் இருப்பு அறியப்பட்ட உடனே செடிக்கு சமிக்ஞை கொடுக்கப்படும். இலையின் மேற்புறம், உணர் இழைகளின் கீழே இருக்கும் என்சைம் சுரப்பிகள் தூண்டப்படும். பூச்சியின் முழுச் சத்துகளும் உறியப்பட்ட பிறகு பூச்சியின் வெளியோடு மட்டுமே எஞ்சியிருக்கும்.  

பூச்சியைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டால் பனித்துளி பசைச்செடி போல அக்கம்பக்க உணர் இழைகள் வளைந்து பூச்சியை இறுகப் பற்ற உதவாது என்றாலும் பட்டர்வர்ட் செடிகளில் இலையே சில வேளைகளில் வளைந்து கொடுத்து பூச்சி தப்பிக்காமல் பலமாக ஒட்டிக்கொள்ள உதவும்.

பட்டர்வர்ட் செடிகள் குறித்த மற்றொரு சுவாரசிய விஷயம் என்ன தெரியுமா? இவை ஊனுண்ணி மட்டுமல்ல, தாவரவுண்ணியும் கூட. புரியவில்லையா? பூச்சிகளிலிருந்து சத்துக்களைப் பெறுவதைப் போன்றே பிற தாவரங்களிலிருந்தும் சத்துக்களைப் பெறுகின்றன. தேடிப்போய் பெறுவதில்லை என்றாலும் பட்டர்வர்ட் இலைகளின் மீது தற்செயலாக விழும் பிற தாவர இலைகள், பூக்கள், மகரந்தம் போன்றவற்றைக் கிரகித்து அவற்றிலிருந்து தங்களுக்குத் தேவையான புரதச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்கின்றன.

வெண்ணெய்ச்செடி பூக்களுடன்

பட்டர்வர்ட் செடிகள் வணிகநோக்கிலும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. ஆர்க்கிட் மலர்த்தோட்டங்களில் செடிகளையும் பூக்களையும் பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பட்டர்வர்ட் செடிகளும் கூடவே வளர்க்கப்படுகின்றன.

பூச்சிகளைச் செரித்து முடிப்பதற்குள் அவை அழுகிவிடாமல் இருப்பதற்காக பட்டர்வர்ட் இலைகள் வீரியமான நுண்ணுயிர்க்கொல்லியை உற்பத்தி செய்கின்றன. கால்நடைகளின் காயங்களை விரைவில் குணப்படுத்த, பட்டர்வர்ட் இலைகளை அரைத்து மருந்தாகக் கட்டும் வழக்கம் ஐரோப்பியர்களிடையே நெடுங்காலமாக உண்டு என்று குறிப்பிட்டவர் ஸ்வீடனைச் சேர்ந்த மருத்துவரும், தாவரவியலாளரும் விலங்கியலாளரும் ‘நவீன வகைப்பாட்டியலின் தந்தை’ என்று போற்றப்படுபவருமான கார்ல் லின்னேயஸ் (1707-1778).

கார்ல் லின்னேயஸ் (படம் உதவி - விக்கிபீடியா)

ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் பட்டர்வர்ட் இலைகளைப் பயன்படுத்தி பாலைத் திரித்தும் புளிக்கவைத்தும் தயிர், மோர், பாலாடைக்கட்டி போன்ற பால்பொருட்களை உருவாக்கினர் என்றும் தெரிகிறது.

வெண்ணெய்ச்செடி


வெண்ணெய்ச்செடியின் பூக்கள் மிக அழகானவை. அவை பார்ப்பதற்கு ஐந்து இதழ்களைப் போல தோற்றமளித்தாலும் உண்மையில் அவற்றுக்கு இரண்டே இதழ்கள்தான் உண்டு. மேல் இதழ் மூன்று பிரிவாகவும் கீழ் இதழ் இரண்டு பிரிவாகவும் பிரிந்திருக்கும். பூக்கள் காய்ந்து விதைகள் உருவாகும். விதைக்கூடு முற்றி வெடித்து காற்றின் மூலம் விதைபரவல் நடைபெறும்.

வெண்ணெய்ச்செடியின் ஈரிதழ்ப் பூ


ஊனுண்ணிச் செடிகளின் பூக்கள் காயாக வேண்டும் எனில் மகரந்தச் சேர்க்கை நடைபெறவேண்டும். மகரந்தச் சேர்க்கை நடைபெற பூச்சிகள் வேண்டும். பூச்சிகளை செடியே பிடித்துத் தின்றுவிட்டால் பிறகு மகரந்தச் சேர்க்கை எப்படி நடைபெறும்? இந்த சந்தேகம் எனக்கும் வந்தது. ஆனால் அதற்கும் பலவிதமான உத்திகளை ஊனுண்ணித் தாவரங்கள் கையாளுகின்றன என்று அறிந்து வியந்தேன். அவை என்னென்ன என்று அடுத்தப் பதிவில் பார்ப்போமா?

தொடரும்.

No comments:

Post a Comment

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.