நாற்பது வயதில்
நாய்க்குணம் என்பார்கள். இந்தக் கவிஞனுக்கோ நாற்பதில்தான் உண்மையான வாழ்க்கை
ஆரம்பமாகிறதாம். ஆஸ்திரேலியாவின் பிரபல சிறுகதை எழுத்தாளரும் கவிஞருமான ஹென்றி லாஸனின் '39' என்ற கவிதையின் தமிழாக்கம் இது.
அகவை
முப்பத்தொன்பது
----------------------------------------
இன்று காலை
கண்விழித்தபோதுதான்
இந்த உலகம்
எவ்வளவு அழகென்று புரிந்தது
சுருக்கங்கள்
காணா முகத்தோடு
அரிதாய் ஒற்றை
நரையோடு
நாற்பதாகப்
போகிறேன் நான்.
என் அத்தனைப்
பாவங்களுக்கும் மேலாய்
உண்மை வாழ்வு
துவங்கும்
நாற்பதுகளில்
வாழப்போகிறேன்.
உயிர்ப்புள்ள
நாற்பதுகள்
உன்னத வாழ்வின்
நாற்பதுகள்
இன்னும் பத்து
வருடங்கள்
இனி கவலையில்லாக்
காலங்கள்
பதின்மத்தில்
கிட்டியதெல்லாம்
இருளும் கசப்பும்
மட்டுமே.
பால்யத்தின்
புகைபடிந்த கல்லறைக்காலமது.
பண்ணைத்
தொழும்பனாய்
பட்டறையில்
அடிமையாய்
பசியும்
பட்டினியுமான பொழுதை ஏந்தியது.
தினவெடுத்த
இருபதுகளில்
தினம் தினம்
பற்பல பிரச்சனைகள்
பணியிலும்
குடியிலும்
பணம் பேர்
புகழுக்காகவும்
பொழுதெலாம் சண்டை
சச்சரவுகள்
திரைக்குப்
பின்னிருந்து
விதி விளையாடும்
முப்பதுகளோ
பதின்மத்தினும்
பன்மடங்கு
இருண்மையும்
குரூரமும் மிக்கவை
தள்ளிவிட
வழியில்லாது அனுபவித்தேன்
யாவும் மெல்ல
எனைவிட்டு விலகத்தொடங்கும்
இன்றென் அகவை
முப்பத்தொன்பது.
சுதந்திரமான
நாற்பதுகளில் காணலாம்
சொச்சமிருக்கும்
பால்யகாலங்கள்.
நாற்பதுகளில்
மீளக் கிடைக்கலாம்
கரடுமுரடான
இருபதின் இன்தருணங்கள்.
வலிமை மிக்க
நாற்பதுகள்
வாழ்க்கை
துவங்கும் நாற்பதுகள்
இன்னும் பத்து
வருடங்கள்
இனி கவலையில்லாக்
காலங்கள்.
&&&&&&
இம்மாத கனலியில் ஹென்றிலாஸனின் மேலும் சில கவிதைகளின் மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. நன்றி நண்பர் விக்னேஸ்வரன்.
சிறந்த மொழிபெயர்ப்பு.எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் முடித்திருக்கிறார்.பொழுதேந்தியது என்பது புரியவில்லை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பொழுதை ஏந்தியது என்று வரவேண்டும். தவறுதலாக பொழுது ஏந்தியது என்று தட்டச்சிருக்கிறேன்.
Deleteமொழிபெயர்ப்பும் நன்றாக உள்ளது...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteகவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteகனலியில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்.
Deleteபிரபல எழுத்தாளர் ஹென்றிலாசன் அவர்கள் எழுதிய கவிதையின் தமிழ் மொழியாக்கம் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Deleteநல்லதொரு கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteபாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் வெங்கட்.
Deleteஅருமையான தமிழாக்கம். நல்லதொரு கவிதை. வாழ்த்துகள் கீதா.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி.
Deleteஆகா .. எனக்காகவே எழுதப்பட்டது போலவே இருக்கிறது .. நானும் 39 ல் தான் இருக்கிறேன் .. நரை வந்த பிறகே புரியுது உலகை .. ஒரு பாடலின் வரி .. அருமைங்க அக்கா தங்களின் மொழிபெயர்ப்பு
ReplyDelete