அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்துதணிந்தது காடு –தழல் வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ
என்று பாடினான் பாரதி. இப்படியாகத்தானே ஆண்டுதோறும் காட்டிடை
மனிதர் தயவுடனோ தயவின்றியோ பொரிந்து வளர்ந்த அக்கினிக்குஞ்சுகளால் அழிந்தொழிகின்றன
ஆஸ்திரேலியக் காடுகள். எப்போதும் கோடையில்
தன் கோரம் காட்டும் bush fire எனப்படும் காட்டுத்தீ இவ்வருடம் (2019) வசந்தகாலத்தின்
ஆரம்பத்திலேயே வருகைப்பதிவு செய்துவிட்டது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் இதுவரை எரிந்த, எரிந்துகொண்டிருக்கும் நிலப்பரப்பு மட்டுமே சுமார் 2.5 மில்லியன் ஹெக்டேருக்கும்
மேல். செப்டம்பர் ஆறாம் தேதி நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் வடபகுதிகளில் ஆரம்பித்த காட்டுத்தீ அக்டோபர் இறுதி வரை எரிந்து இரு மனித உயிர்களையும் 43 வீடுகளையும் காவு கொண்டு அடங்கியது. 320,000 ஹெக்டேர் நிலப்பரப்புக்கும் மேல் எரிந்துபோயுள்ள வுல்லமி தேசியப் பூங்காவில். தற்போது காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நவம்பர் 13 அன்று கிரேட்டர் சிட்னி பகுதியில் பற்றிய
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட இயலாமல் வரலாற்றில் முதன் முறையாக அப்பகுதி பேரபாயப் பகுதி என அறிவிக்கப்பட்டது. நியூசௌத்வேல்ஸ், குவீன்ஸ்லாந்து உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின்
கிழக்குப் பகுதியில் பற்றிய அநேக காட்டுத்தீக்களால் கடந்த மூன்று மாதங்களில் 684 வீடுகளும், 2000-க்கு மேற்பட்ட கட்டடங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. 250 வீடுகளும் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், பண்ணை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற கால்நடைகள் மடிந்துள்ளன.
காட்டுயிர்களுக்கு கணக்கில்லை.
காட்டுத்தீக்களை அணைக்க தீயணைப்பு வீரர்களோடு ஏராளமான தன்னார்வலத்
தொண்டர்களும் களமிறங்கியுள்ளனர். விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து
மட்டுமல்லாது நியூசிலாந்து போன்ற அண்டை நாட்டிலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் நியூ சௌத்வேல்ஸ்
மாநில தீயணைப்புத் துறையோடு கைகோர்த்துள்ளனர். ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாக
இரவு பகல் பாராது தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களின் மூலம் தீ எரியும்
பகுதிகளில் தண்ணீர் பொழிவிக்கப்படுகிறது. தீப்பற்றுதலைத் தடுக்கும் இரசாயத்துகள் தூவப்படுகிறது.
தீப்பற்ற வாய்ப்புள்ள பல குடியிருப்புப் பகுதிகளிலும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பள்ளிகள்
மூடப்பட்டுள்ளன. திறந்தவெளி தீப்பயன்பாட்டுக்கான தடையுத்தரவு மாநிலம் முழுவதும் அமலில்
உள்ளது. மரம் அறுக்கும், புல் வெட்டும் இயந்திரங்கள் உருவாக்கும் சிறு தீப்பொறியும்
கூட காட்டுத்தீ உருவாக்கும் என்பதால் தீ உருவாக வாய்ப்புள்ள பகுதிகளில் இயந்திரப் பயன்பாடு,
பண்டிகைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறும் வானவேடிக்கைகள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.
காடுகளின் அழிவால் காட்டுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன
எனினும் யூகலிப்டஸ் காடுகளின் அழிவால் நேரடியாக
பாதிக்கப்பட்டுள்ளவை கோவாலாக்கள். பிற விலங்குகளுக்கு
தப்பியோடவாவது ஒரு வழி உண்டு. யூகலிப்டஸ் மரங்களின்
உச்சியில் வாழும் கோவாலாக்கள் மரங்களிலிருந்து இறங்கித் தப்பிப்பதற்குள் மிக எளிதாக
காட்டுத்தீக்கு இரையாகிவிடுகின்றன. மேலும்
இவை தப்பிக்கும் முயற்சியாக மரத்தின் உச்சிக்கிளைகளை தஞ்சமடைவதால் உயிரிழப்பு உறுதியாகிவிடுகிறது.
பல தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் முயற்சியால் தீக்காயங்களோடு பல கோவாலாக்கள்
காப்பாற்றப்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு
ஒரு பெண்மணி தீக்காயமுற்ற கோவாலா ஒன்றினை தன் மேலாடையைப் போர்த்துக் காப்பாற்றிக் கொண்டுவந்த
காணொளி பரவலானது. Ellenborough Lewis எனப் பெயரிடப்பட்ட அக்கோவாலாவைக் காப்பாற்ற இயலாமற்
போனது துரதிர்ஷ்டமே. அதைப் போல இன்னும் எத்தனை
எத்தனையோ கோவாலாக்கள் உயிரிழந்துள்ளன. அருகிவரும்
உயிரினங்கள் பட்டியலில் ஏற்கனவே இடம்பிடித்துள்ள கோவாலாக்களின் இன்றைய நிலைமை கவலைக்குரியதாக
இருப்பதால் அவற்றின் எண்ணிக்கை குறித்த மீள் கணக்கெடுப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளது. பாதிப்புக்காளான பிற காடு வாழ் உயிரிகள் குறித்த
ஆய்வும் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ உருவாகும் இடங்கள் காய்ந்த
புல்வெளிகளும், வறண்ட யூகலிப்டஸ் மரக்காடுகளும்தான். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் நிலவும் அதீத வெப்பமும்
குறைந்த ஈரப்பதமும் வறட்சியான சூழலும் காட்டுத்தீ உருவாவதற்குப் பெரிதும் ஏதுவான காரணிகள்.
புவி வெப்பமயமாதலும் தற்போது முக்கியக் காரணியாக உள்ளது. யூகலிப்டஸ் மரங்களின் தைலச்சாறு காட்டுத்தீக்கு
எரிசக்தியைக் கொடுப்பதும், பலத்த வெப்பக்காற்று வீசுவதும் காட்டுத்தீ பரவப் போதுமானவை.
சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட மின்னல்களும் நூற்றுக்கணக்கான புதிய காட்டுத்தீக்களை
உருவாக்கியுள்ளன.
காட்டுத்தீயினை உருவாக்கவும் பரப்பவும் இவ்வளவு காரணங்கள்
போதாதென்று வலிந்து வைக்கப்படும் கொள்ளிகள் ஒரு பக்கம் பெரிய அளவில் காட்டுத்தீ உருவாகக்
காரணமாக உள்ளன. ஆம். ஆஸ்திரேலியக் காட்டுத்தீக்களுள்
15% மட்டும்தான் இயற்கையாக உருவாகி எரிபவை என்றும் மற்றைய 85% மனிதர்களால் அறிந்தோ
அறியாமலோ உண்டாக்கப்பட்டவை என்றும் புலனாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொள்ளிக்கட்டையை
எடுத்து தன் தலையைத் தானே சொரிந்துகொள்வதைப் போல தங்கள் இனமழிய தாங்களே உலை வைத்துக்கொண்டுவிடுகின்றனர்
சில அறிவிலிகள். புகைத்துமுடித்தபின் அணைக்காமல் வீதியோரம் விட்டெறியப்படும் சிறு சிகரெட் துண்டுகளே பல வனத்தீக்களுக்கு ஆரம்பப்புள்ளிகளாம்.
குடிகாரர்கள், போதை மருந்து உபயோகிப்பவர்கள், தினவெடுத்த இளைஞர்கள், உறவுச்சிக்கல்,
குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் மனச்சிதைவுக்கு ஆளானோர், விளையாட்டுப்
பிள்ளைகள் என பலராலும் பல இடங்களில் காட்டுத்தீக்கள் உருவாகின்றன.
காடுகள்தானே எரிகின்றன, நமக்கென்ன என்று நகரவாசிகள் யாரும்
கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார முடியாதபடி நாடெங்கும், நகரமெங்கும் எதிரொலிக்கிறது அதன்
பாதிப்பு. கடந்த சில வாரங்களாக நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளும் புகையால் சூழப்பட்டிருக்கும்
சூழலில் தற்போது சில நாட்களாக சாம்பலும் கரித்துகள்களும் காற்றோடு கலந்து பெரும் சுவாசப் பிரச்சனைகளை உண்டுபண்ணிக்கொண்டிருக்கின்றன. ஐம்பது கி.மீ.க்கு அப்பால் எரிந்துகொண்டிருக்கும் ப்ளூ மவுண்டென்ஸ் எனப்படும் நீல மலைகளிலிருந்து பறந்து வந்து என் வீட்டு வாயிலைத் தஞ்சம் அடைந்திருக்கும்
எரிந்துகருகிய யூகலிப்டஸ் இலைகள் என்னிடம் சொல்ல வரும் சேதி என்னவாக இருக்கும்?
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் வீட்டுக்கு வெளியில் வெயில் 42 டிகிரியைத் தொட்டிருக்கிறது. பாலை போல் தகிக்கும் இந்த நண்பகலில் அண்டை வீடும் புலப்படாவண்ணம் காணுமிடமெல்லாம் சூழ்ந்திருக்கும் வெண்புகை மண்டலத்தை, கண்ணாடித்தடுப்பின் உள்ளிருந்து பார்க்கையில் மார்கழி மாதத்தின் அதிகாலைப் பனிமூட்டம் போல அப்படியொரு காட்சி மயக்கம்.
சுவாசப்பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் திரிவதென்பது சாத்தியமற்றுப் போய்விட்டது. காற்றில் கலந்திருக்கும் புகைமாசுவின் அளவு ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 35 முதல் 40 சிகரட்களை புகைப்பதற்கு சமம் என்று சுகாதார மையங்கள் எச்சரிக்கின்றன. சுவாசக்கோளாறு உண்டாக்கும் இப்புகை மாசு முற்றிலும் ஒழிவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகலாம். இக்கோடை கொண்டுவரக்கூடிய கனமழையே அனைத்துக்குமான தீர்வென்று நம்பி இருக்கையில் கோடை மழையின் அளவு இவ்வருடமும் குறையுமென்னும் வானிலை ஆய்வு மைய அறிவிப்புகள் கலக்கமூட்டுகின்றன.
தானே எரிந்து தானே அணைவது வனத்தின் இயல்பு. பழையன கழிதலும்
புதியன புகுதலும் என்பதற்கேற்ப காடுகள் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு ஒருமுறை தம்மைத்
தாமே அழித்துப் புத்துயிர் பெறுவது இயற்கை. ஆஸ்திரேலியக் காடுகளின் சிறப்பம்சம், காட்டுத்தீக்குப்
பிறகான சில மாதங்களிலேயே உயிர்க்கும் தன்மை. இன்னும் சொல்லப்போனால் பாங்சியா போன்ற
ஆஸ்திரேலியத் தாவரங்களின் கடின மேலோடு கொண்ட விதைகள் காட்டுத்தீயால் தூண்டப்பட்டு வெடிப்பதன்
மூலம் புதிய தாவரங்கள் தோன்றுகின்றன. புத்தம்புதியக் காட்டினை உருவாக்க முயலும் இயற்கையின்
உத்தி இது. எரிந்த காட்டின் சாம்பலுரம் புதிய காட்டின் அடியுரமாகும். ஆனால் பருவந்தவறிய
மழை, புவி வெப்பமயமாதல், மிகைக் கரியமிலவாயு வெளிப்பாடு போன்ற பல்வேறு புதிய காரணிகளால்
இயற்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. இப்போதும் கூட புவி வெப்பம் கூடுவது குறித்த ஆய்வுகள்
அனைத்தும் கண்கட்டென்று சொல்லி மறுப்பாரும் உண்டு. பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதென்று
எண்ணுமாம். பூனைகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கட்டும். நாம் விழித்துக்கொண்டு செயல்படுவோம்.
நாம் வாழும் இப்புவியைக் காப்போம். வரும் தலைமுறைகளும்
வாழ வழிசெய்வோம்.
(டிசம்பர் மாத 'எதிரொலி' பத்திரிகையில் வெளியான என் கட்டுரை)
மிக விளக்கமான கட்டுரை; பாராட்டு .
ReplyDelete//காடுகளின் அழிவால் காட்டுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன //
ReplyDeleteகாட்டுயிர்கள் பற்றி நீங்கல் எழுதி வந்ததை படித்ததால் காட்டில் தீ என்றவுடன் காட்டுயிர்கள் கவலைதான் எனக்கு முதலில் வந்தது.
//சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண்மணி தீக்காயமுற்ற கோவாலா ஒன்றினை தன் மேலாடையைப் போர்த்துக் காப்பாற்றிக் கொண்டுவந்த காணொளி பரவலானது. //
அந்த அம்மாவுக்கு நன்றி சொல்லவேண்டும்.
பலராலும் பல இடங்களில் காட்டுத்தீக்கள் உருவாகின்றன.//
இதை படித்து மனது மிகவும் வேதனை படுகிறது.
//சில வருடங்களுக்கு ஒருமுறை தம்மைத் தாமே அழித்துப் புத்துயிர் பெறுவது இயற்கை. ஆஸ்திரேலியக் காடுகளின் சிறப்பம்சம்,//
காடு தன்னை புதுபித்து கொள்ளட்டும் ஆனால் உயிர்கள் அழிவது வேதனையான விஷயமாக இருக்கிறது.
நெஞ்சை தகிக்க வைக்கும் நிகழ்வுகள்...
ReplyDeleteகாடுகள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் தகவலை அறிந்து கொண்டோம். இழப்புகளும் மக்களும் பிற உயிரினங்களும் படும் சிரமங்களும் வேதனைக்குரியது. பிரார்த்தனைகள்!
ReplyDeleteஇக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் வீட்டுக்கு வெளியில் வெயில் 42 டிகிரியைத் தொட்டிருக்கிறது. ...
ReplyDeleteஅசோ ..
மிக கடினமான நேரம் ..இயற்கை அன்னையின் பாச பார்வையில் விரைவில் அனைத்தும் நலம் பெறட்டும்
கொடுமையான விஷயம். இயற்கையாக தீப்பிடிப்பது தவிர சில அறிவிலிகளும் காரணமாக இருப்பது சோகம். நல்லதே நடக்க வேண்டும் என்ற வேண்டுதல்கள் மட்டுமே நம்மிடம்...
ReplyDeleteகருத்துரைத்த அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
ReplyDelete