8 February 2012

ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் 4நமது கல்விமுறையில் மாற்றம் வருவது இருக்கட்டும். முதலில் ஆசிரியர்களிடம் மாற்றம் வரவேண்டும். மாணவர்களிடம் நட்புறவுடன் பழகவேண்டும். தவறு செய்தால் மனம் நோகாமலும் மற்றவர் அறியாமலும் கண்டிக்கவேண்டும். எதற்குமே லாயக்கில்லாதவர்கள் என்று எவரையுமே சொல்ல இயலாது. உடல் குறைபாடு உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகளாய் மதிக்கும் நாம், மனக்குறைபாடு உள்ளவர்களை மனிதர்களாய்ப் பார்க்கவும் தவறிவிடுவது ஏனோ?

மனக்குறைபாடு என்பது தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையின்மை, அதீத தயக்கம், அடுத்தவருடன் பழகவும் பேசவும் கூச்சம், மறதி, கவனக்குறைவு, பதட்டத்தால் நினைவிழத்தல் போன்ற பல குணாதியங்களையும் குறிப்பிடலாம். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு அன்பும் அரவணைப்புமே தேவை. பள்ளிக்கூடங்கள் வாழும் கலையைக் கற்றுக்கொடுக்காவிடினும் சாகும் எண்ணத்தைத் தோற்றுவிக்கக்கூடாது.

ஏட்டுப்படிப்புடன் வாழ்க்கையைப் பற்றிய அறிவையும், பிரச்சனைகளை சிக்கல்களை துணிவுடன் எதிர்கொள்ளும் திறனையும் பள்ளிகள் போதிக்கவேண்டும். உண்மையில் ஆசிரியர்களுக்குள்ளும் இந்த ஆசைகள் இருக்கலாம். இந்தியக் கல்விமுறை அவர்களையும் அழுத்தத்துக்கு உட்படுத்தியிருக்கலாம். முழுமையான தேர்ச்சி சதவீதம் மட்டுமே ஒரு நல்ல பள்ளிக்கான அளவுகோலாக நம் நாட்டில் கொள்ளப்படுவது மிகவும் துர்பாக்கியமே.

ஏட்டுக்கல்வியையும் மீறிய வாழ்க்கை ஒன்று நம் கண்ணெதிரில் விரிவதை நாம் கவனிப்பதே இல்லை. மாணவர்களின் திறனை எடைபோட தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுதல் சரிதானா?   தங்கத்துக்கும் தக்காளிக்கும் ஒரே தராசைப் பயன்படுத்த இயலுமா? சமச்சீர் கல்விமுறை பற்றி நிறைய அலசப்பட்டது. அதில் இன்றும் எனக்கு இருக்கும் சந்தேகம் இதுதான். உணவு, உடை, இருப்பிடம், வாழ்க்கைத்தரம், சுகாதாரம், வருமானம், வசதி என்று பலவிதத்திலும் நகரவாழ்க்கையோடு சமச்சீர் நிலையை அடைந்திராத மக்களுக்கு வெறும் பாடப்புத்தகங்கள் மூலம் அளிக்கப்படும் கல்வி மட்டும் எப்படி சமச்சீர் நிலையை உருவாக்கும்? 

சமமான வசதி செய்து தரப்பட்டிருக்கும் ஒரு வீட்டுப் பிள்ளைகளிலேயே ஒரு பிள்ளை நன்றாகப் படிக்கிறது. ஒரு பிள்ளை படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறது. அப்படியிருக்கையில் மின்சார வசதியோ, சரியான உணவோ, கழிப்பிட வசதியோ, சுகாதாரமான சூழலோ, சந்தேகம் கேட்க வீட்டில் வேறு படித்த ஆட்களோ இல்லாத கிராமத்துப்பள்ளி  மாணவனை சகலவசதியும் இருக்கும் நகரப்பள்ளி மாணவனோடு ஒப்பிடுதல் எத்தனை அறியாமை?  அதிலும் அரசுப்பள்ளிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற அரசு அலுவலகங்களைப் போலவே அரசுப் பள்ளிகளில் பணிபுரிபவர்களிடம் காணப்படும் மெத்தனம் மிகவும் கண்டிக்கத்தக்கது. நேர்மையான அரசுப்பள்ளி ஆசிரியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

கல்வித்துறையானது தேர்ந்த கல்வியாளர்களால் நிர்வகிக்கப் பட்டால் ஒழிய அதிலுள்ள களைகள் களையப்படா. பாடத்திட்டங்களும் செயல்முறைகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். கல்வித்துறையில் அரசின் தலையீடு இருக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளின் தலையீடு முற்றிலுமாகத் தவிர்க்கப்படவேண்டும்.  ஆனால் நம் நாட்டில் கல்வியென்னும் பெயரால் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களில் பலர் அரசியல்வாதிகளே என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. சந்தைகளில் மாடுபிடிப்பது போல் கல்வியும் விலைபேசப்படுகிறது. பொருந்தி வருபவர்க்கு விற்கப்படுகிறது. அங்கு பொருளீட்டும் நோக்கம் மட்டுமே மேலோங்கிநிற்கிறது. தகுதியும் திறமையும் பின்தள்ளப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிலும் கொள்ளைக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அளவிடற்கரிய சொத்து, அதனால் உண்டாகும் பாதுகாப்புப் பிரச்சனை, அந்தஸ்து, ஆச்சாரத்தின்மேல் பற்று கொண்டவர்களுக்கு அப்பள்ளிகள் உகந்தவை. அதனால் அவற்றைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் கட்டணம் பற்றி சொல்லியே ஆகவேண்டும். எந்த அளவுக்கு என்றால், அங்கு ஒரு மாணவனுக்கு செலவழிக்கப்படும் தொகையைக் கொண்டு, ஐம்பது மாணவர்களை அரசுப்பள்ளிகளில் படிக்கவைத்துவிடலாம். அரசுப்பள்ளியா என்று முகம் சுளிக்கத்தேவையில்லை.

ஆஸ்திரேலியாவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வித்தரத்தைக் கொண்டுள்ளது நம்பமுடியாத ஒரு சிறப்பு அம்சம். என் பிள்ளைகள் இங்கு அரசுப்பள்ளிகளில்தான் படிக்கின்றனர். அப்பள்ளிகளின் நடைமுறை, கல்வி, மாணவர்கள்பால் அவர்கள் கொண்டுள்ள சிரத்தை, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அத்தனையையும் நேரில் கண்டதாலும் குழந்தைகள் மூலம் அறிந்ததாலும்  என்னால் ஆஸ்திரேலிய அரசின் கல்வி நிர்வாகத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் நேர்மைக்கு உதாரணமாய் சில நிகழ்வுகளை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

1.   2001 - 2006 ஆண்டுகளில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் முதல்வராய் இருந்தவர்  ஜெஃப் கேலோ (Geoff Gallop). இங்கிலாந்தின் அந்நாள் பிரதமர் டோனி பிளேயருடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவரது திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழனாயிருக்குமளவு நெருங்கிய நண்பர். 54 வயதான இவர் ஒருநாள் தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.


  தான் மனச்சிதைவு நோயின் பிடியில் அகப்பட்டிருப்பதாகவும், பதவியிலிருப்பதால் பலருக்கும் பாதிப்பு உண்டாகலாம் என்றும் பொதுநலன் கருதி இந்தமுடிவுக்கு வந்ததாகவும் பத்திரிகை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காரணம் தெரிவித்தார். மேலும் சொன்னதாவது, இது குணப்படுத்தக்கூடிய நோய் என்றபோதும், அதற்கான கால அவகாசம் தெரியா நிலையில் பதவியில் நீடித்திருப்பது பல சிக்கல்களை உருவாக்கலாம், தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டலாம் என்பதால் சிகிச்சை முடியும்வரை அரசியலில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் சொன்னார். எத்தனை அரசியல்வாதிகளிடம் இருக்கும் இப்படி ஒரு பெருந்தன்மையும் திறந்த மனமும்! நடக்கவோ, ஓடியாடி செயல்களில் ஈடுபடவோ முடியாத நிலையிலும் படுத்துக்கொண்டாவது பதவியில் நீடித்திருக்கத்தான் பலருக்கும் ஆசை நம் நாட்டில்.
   

2.  ஆஸ்திரேலியத் தொலைக்காட்சியொன்றில் குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாலான நிகழ்ச்சி அது. “Are you smarter than fifth grade?”  என்பது நிகழ்ச்சியின் பெயர். முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குள் உட்பட்ட பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஐந்தாம் வகுப்பு மாணவனோ மாணவியோ ஒரு பக்கம் பங்கேற்க மற்றொரு பக்கம் வயது முதிர்ந்தவர்கள் (குறைந்த பட்ச வயது 21) எவரேனும் பங்கேற்பர்.  பெரும்பாலானோரால் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாது. அப்படிப் பதில் சொல்ல இயலாதவர்கள்  “I am not smarter than fifth grade” என்று எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு வெளியேறிவிட வேண்டும் 

இன்றைய ஆஸ்திரேலியப் பிரதமர் மிஸ். ஜூலியா கில்லார்ட் (Julia Gillard) என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் அவர் துணைப்பிரதமராய் இருந்தபோது அவரும் இந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். பல கேள்விகளுக்கான பதில்கள் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் சற்றும் தயங்காமல் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு “I am not smarter than fifth grade” என்று புன்னகையுடன் சொல்லி வெளியேறினார். அடுத்தப் பிரதமராய் வருவார் என்று கணிப்பில் இருந்த அரசியல்வாதி அவர். ஆனாலும் நேர்மையாய் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறினார்.

இதை எழுதும்போது , சமீபத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து பதவியின் பெருமை குலைத்த முன்னாள் புதுவை கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஏனோ நினைவுக்கு வந்துபோகிறார்.இன்னும் சொல்வேன்

29 comments:

 1. நேர்மையான அரசியல்வாதிகள் குதிரைக் கொம்புகள் இங்கே. ஆஸ்திரேலியாவில் குதிரைக் கொம்புகள் இருப்பதில் மகிழ்ச்சி. சின்ன வயதில் நானும் ஏகத்துக்கு தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருந்தேன். அதிலிருந்து மீண்டுவர மிக கஷ்டப்பட்டேன். நீங்கள் சொன்னதுபோல் சரியான அரவணைப்பு படிக்கும் நாட்களில் கிடைத்தால் நன்றாயிருந்திருக்கும். இந்தத் தொடர் ஒரு பொக்கிஷம் போலும் அருமையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. உங்களின் எண்ண உதிர்வுகள் , அனுபவம் கலந்த பதிவுகளில் அவசிய செய்திகளை அடுக்காய்
  கூறிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோ .. தொடர்ந்து வழங்க வேண்டுகிறேன்

  ReplyDelete
 3. கட்டுரை பிரமாதமாய் விரிகிறது . புதுப் புதுச் செய்திகளை அறிகின்றோம் .நன்றி .

  ReplyDelete
 4. செக்கு மாடுகளை உருவாக்கும் கல்வி அமைப்புகளை சாட்டையடி கொடுத்தவிதம் அருமை.அரசியல் நேர்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.அருமை எழுத்தோட்டம் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. //ஏட்டுக்கல்வியையும் மீறிய வாழ்க்கை ஒன்று நம் கண்ணெதிரில் விரிவதை நாம் கவனிப்பதே இல்லை. மாணவர்களின் திறனை எடைபோட தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுதல் சரிதானா? தங்கத்துக்கும் தக்காளிக்கும் ஒரே தராசைப் பயன்படுத்த இயலுமா? //

  மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

  தனித்திறமைகளை எடைபோட தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே, உதவாது என்பதே என் கருத்தும்.

  ReplyDelete
 6. //
  ஆஸ்திரேலியாவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வித்தரத்தைக் கொண்டுள்ளது நம்பமுடியாத ஒரு சிறப்பு அம்சம். என் பிள்ளைகள் இங்கு அரசுப்பள்ளிகளில்தான் படிக்கின்றனர். அப்பள்ளிகளின் நடைமுறை, கல்வி, மாணவர்கள்பால் அவர்கள் கொண்டுள்ள சிரத்தை, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அத்தனையையும் நேரில் கண்டதாலும் குழந்தைகள் மூலம் அறிந்ததாலும் என்னால் ஆஸ்திரேலிய அரசின் கல்வி நிர்வாகத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.//

  இதைக்கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 7. அருமையான கண்ணோட்டம்.அதைக் கோர்க்கும் விதமும் அருமை கீதா.எங்கள் நாட்டில் இந்த வருட உயர்தரப் பரீட்சை முடிவுகளின் குழப்பம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.இது எங்கள் தேசம் என்று சொல்லிக்கொள்வோம் !

  ReplyDelete
 8. இந்த பதிவை இப்பதான் பார்த்தேன்.மீதி 3 பதிவுகளையும் நாளை படிக்கிறேன்.நீங்கள் தற்போழுது இருக்கும் நாடு,மற்றும் பகுதிகள் ,அங்குள்ள நடைமுறைகள் பற்றி எழுதுங்களேன்னு சொல்ல சில நாட்களுக்கு முன் நினைத்தேன்.இப்போ இந்த பதிவு ஒரு அட போட வைத்தது.அப்படியே அங்குள்ள புகைப்படங்களையும்,பதிவு சம்பந்த படங்களையும் போடுங்கள்.இங்கிருந்து பார்த்துக்கொள்கிறோம்.

  ReplyDelete
 9. உங்கள் தொடர்பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.நம் நாட்டிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளும் இருந்தால் பெரும்பாலான குழந்தைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிப்பர்.அங்குள்ள துணைப்பிரதமரே தோல்வியை ஒப்புக்கொள்கிறார். ஆனால் இங்கு? நல்ல சாடல்.

  ReplyDelete
 10. Anonymous9/2/12 15:10

  அரசுப் பள்ளிகளின் திறன் கண்டு வியப்புத் தான்.
  அரசியல் நேர்மை பெருமை ........ அவர்களுக்கு.
  அருமையான பகிர்விற்கு நன்றி !

  ReplyDelete
 11. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. என் வலையின் தொடர்பாளராகக் கண்டு மகிழ்ச்சி. என் கணினியில் ஒரு புதுப் பிரச்சினை. சாதாரணமாக நான் கூகுள் க்ரோம் ப்ரௌசரைத்தான் உபயோகிப்பேன். இப்போதெல்லாம் அதன் மூலம் பின்னூட்டம் சில வலைகளில் ஏற்கப் படுவதில்லை. இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் மூலம் வந்தால் சில வலைகளின் பதிவுகளே வருவதில்லை. என்ன நுட்பச் சிக்கலோ. பார்ப்போம். மீண்டும் நன்றி.

  ReplyDelete
 13. nalla karuthulla pathivu thanks for writing about few gentle politicians

  ReplyDelete
 14. @ கணேஷ் சார்,
  உங்களுடைய அனுபவம் இணைந்த பின்னூட்டம் பதிவுக்கு வலு சேர்க்கிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்.

  ReplyDelete
 15. @ அரசன் சே,
  தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி அரசன்.

  ReplyDelete
 16. @ சொ.ஞானசம்பந்தன்,
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 17. @ தனசேகரன்,

  தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 18. @ வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் வருகைக்கும், மனம் தொட்டக் கருத்துக்களைக் குறிப்பிட்டு சிலாகித்துப் பாராட்டியதற்கும் மனம் நிறைந்த நன்றி.

  ReplyDelete
 19. @ ஹேமா,
  வருகைக்கும் கருத்திட்டுப் பாராட்டியதற்கும் நன்றி ஹேமா.

  ReplyDelete
 20. @ ஆச்சி,
  உங்க பின்னூட்டம் பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போனேன் ஆச்சி. பொதுவாகவே எனக்கு கட்டுரைகள் அதிகம் எழுதிப் பழக்கமில்லை. பயத்துடன்தான் ஆரம்பித்தேன். உங்களைனவரின் ஊக்கமும் நிறைய எழுத வைக்கிறது. நன்றி ஆச்சி. படங்களையும் விரைவில் இணைக்கிறேன்.

  ReplyDelete
 21. @ விச்சு,
  நம் நாட்டு அரசுப்பள்ளிகள் பற்றிய ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு. தங்கள் தொடர் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி விச்சு.

  ReplyDelete
 22. @ ஸ்ரவாணி,
  தங்கள் வருகையும் ஊக்கமிகுப் பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஸ்ரவாணி.

  ReplyDelete
 23. @ விமலன்,

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விமலன்.

  ReplyDelete
 24. @ G.M Balasubramaniam

  தங்கள் வருகையும் இணைப்பும் கண்டு மிகவும் மகிழ்வடைந்தேன் ஐயா. முடியும்போது படித்துக் கருத்திடுங்கள். மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 25. @ அருள்,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. தொடர்ந்து வாங்க.

  ReplyDelete
 26. அற்புதமான கட்டுரை தோழி, இதன் தகவல்களை நான் வேலை செய்யும் பள்ளியின் தாளாளரிடம் பிரதி எடுத்து காண்பித்தேன் , சிலவற்றை வரும் கல்வி ஆண்டில் நமது பள்ளியிலும் நிறைவேற்றுவோம் என்றார். கதை தாண்டி கட்டுரையிலும் தங்கள் படைப்புகளின் ஆக்டோபஸ் வாசகர்களை கவர்ந்துவிடுகிறது, தொடர்ந்து சாதியுங்கள் ....

  ReplyDelete
 27. நீங்கள் சொல்லிப் போகிற விஷயங்கள்
  மிகவும் ஆச்சரியமாக உள்ளது
  அங்கிருக்கும் அரசியல் வாதிகளின்
  மன நிலைக்கும் இங்கிருக்கும் அரசியல்வாதிகளின்
  மன நிலைக்கும்தான் எத்தனை வித்தியாசம்
  உண்மையில் இது போன்ற ஒரு அருமையான
  கல்வி தொடர்பான சிந்தனையை தூண்டிப் போகும்
  கட்டுரையை பதிவுலகில் யாரும் பதிவு செய்யவே இல்லை
  மனம் கவரும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. சரியான பதிவு.. அருமை. கீதமஞ்சரி. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.

  ReplyDelete
 29. ஏட்டுக்கல்வியையும் மீறிய வாழ்க்கை ஒன்று நம் கண்ணெதிரில் விரிவதை நாம் கவனிப்பதே இல்லை. மாணவர்களின் திறனை எடைபோட தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுதல் சரிதானா?

  பயனுள்ள் எண்ணப்பகிர்வுகள்..

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.