மழைக்காடு என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது உலகிலேயே மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்துகிடக்கும் அமேசான் மழைக்காடுதான். ஆனால் உலகின் மிகப் பழமையான மழைக்காடு இருப்பது ஆஸ்திரேலியாவில்தான் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? சுமார் 180 மில்லியன் வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் டெயின்ட்ரீ மழைக்காட்டுடன் ஒப்பிடும்போது 55 மில்லியன் வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் அமேசான் எல்லாம் சிறுகுழந்தை எனலாம். அதிக அளவு மழை பொழிந்து வளம் சேர்த்திருக்கும் காட்டைத்தான் மழைக்காடு என்கிறோம். பொழிந்துகொண்டே இருப்பதால்தான் மழைக்காட்டுக்கு தமிழில் 'பொழில்' என்ற அழகிய பெயரிட்டுள்ளோம்.
மழைக்காடு |
கிரானைட் மலைகளாலும் பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்ட டெய்ன்ட்ரீ நதியும், அருவிகளும், நதியை ஒட்டிய அடர் மழைக்காடும் மழைக்காட்டை ஒட்டிய வெண்மணல் கடற்கரையும் கடற்கரையை ஒட்டிய தெள்ளிய கடற்பரப்பும், கடலுக்குள் வசீகரிக்கும் வண்ணத்தில் கரடுமுரடான பவளப்பாறைகளும் என உலகின் வேறு எங்கும் காணவியலாதபடி இயற்கையின் அழகும் அதிசயமும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு நம்மை அசரவைக்கும் இடம்தான் டெயின்ட்ரீ மழைக்காட்டுப்பகுதி. 2015-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இப்பகுதி சாகசப் பிரியர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் அற்புதமான விருந்தளிக்கும் இடமாகும்.
குவீன்ஸ்லாந்தின் வடகிழக்குக் கடற்கரையோரம் சுமார் 1200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது டெயின்ட்ரீ மழைக்காடு. உலகின் ஆதித் தாவரங்கள், விலங்குகள் பலவும் இன்றும் அவற்றின் ஆதிகால இயல்பு மாறாமல் அங்கு காணப்படுகின்றன. உலகின் மிகத்தொன்மையான பூக்கும் தாவரங்கள் பத்தொன்பதில் பன்னிரண்டு இந்த டெயின்ட்ரீ மழைக்காட்டில் காணப்படுவதிலிருந்தே இதன் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
தொன்மையான மழைக்காட்டுக்கு 'டெயின்ட்ரீ' என்ற பெயர் எப்படி வந்தது?
1873-வாக்கில் ஆற்றுவழியே மழைக்காட்டைக் கண்டடைந்த ஆய்வாளர் ஜார்ஜ் எல்ஃபின்ஸ்டோன் தன் நண்பரும் புவியியல் ஆய்வாளருமான டெய்ன்ட்ரீயின் பெயரை அம்மழைக்காட்டுக்குச் சூட்டினார். பின்னாளில் அந்நிலப்பகுதி முழுமைக்குமே அப்பெயர் அமைந்துபோனது.
டெய்ன்டிரீ மழைக்காட்டின் 'இடியட் ஃப்ரூட்' பற்றித் தெரியுமா உங்களுக்கு? அதென்ன 'முட்டாள் பழம்' என்று கேட்கிறீர்களா? உண்மையில் இடியோஸ்பெர்மம் (Idiospermum) என்ற அறிவியல் பெயரின் சுருக்கம்தான் அது. 120 மில்லியன் வரலாற்றைக் கொண்டிருக்கும் அதுவே இன்றைய பூக்கும் தாவரங்கள் பலவற்றின் ஆதித்தாய் என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு 'ரிப்பன்வார்ட்' மற்றும் 'பச்சை டைனோசார்' என்ற பெயர்களும் உண்டு. டைனோசார் வாழ்ந்த காலத்திலிருந்தே இவை வாழ்ந்துவருவதால் பச்சை டைனோசார் என்ற பெயராம். ஒரு வித்திலை, இரு வித்திலைத் தாவரங்கள் பற்றி அறிவோம். இது மூன்றிலிருந்து ஏழு வித்திலைகளைக் கொண்டு வளரும் தாவரம் என்பது பெரும் வியப்புக்குரியது. Idiospermum குடும்பத்தைச் சேர்ந்த ஒரே தாவரம் இதுதான். கடுமையான விஷத்தன்மை கொண்ட இதைத் தின்னும் கால்நடைகள் உயிரிழந்துவிடும். ஆனால் இப்பகுதியில் வாழ்ந்துவரும் musky rat-kangaroo போன்றவை அவற்றைத் தின்கின்றன என்பதும் அதனால் அவற்றுக்கு கெடுதல் எதுவும் நேர்வதில்லை என்பதும் ஆச்சர்யமே.
அருகிவரும்
இனமான காஸோவரி பறவைகளை இங்கே அவற்றின் வாழ்விடத்தில் இயல்நிலையில் காணமுடிவது ஒரு பெரும் பாக்கியம். பறக்கவியலாத பறவையினத்தில் தற்போது
உலகிலுள்ள மூன்றாவது பெரிய பறவை இது. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவில் உள்ள
ஆஸ்ட்ரிச் (Ostrich) எனப்படும்
தீக்கோழி, இரண்டாவது, ஆஸ்திரேலியப் பறவையான ஈமு (Emu). ஆனால் ஈமுவை விடவும்
உடல் எடை அதிகமுள்ள பறவையினம் காஸோவரி. இதன் தலையில் கொம்பு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். பறவைக்குக்
கொம்பா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். அதற்குக் காரணம் இருக்கிறது.
காஸோவரியின் பிரதான உணவு பழங்கள்தாம். இவை கிட்டத்தட்ட 26 வகையான பழங்களையும் 238 வகைத் தாவர
உணவுகளையும் உண்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்பறவை பெரும்பாலான நேரத்தை
பழமரங்களின் கீழேயே கழிக்கும். அதுவும் பழங்கள் பழுத்து உதிரும் காலமென்றால்
சொல்லவே வேண்டாம். முழுநேரமும் மரத்தின் அடியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும்.
கிட்டத்தட்ட முப்பது மீட்டர் உயர மரங்களிலிருந்து கீழே விழும் பெரிய பழங்கள் இதன்
தலையில் விழுந்தால் என்னாவது?
தலைக்கு சேதமுறா வண்ணம் இயற்கை அளித்தப் பாதுகாப்புத் தலைக்கவசம்தான் அதன்
கொம்பு என்பது விநோதம். ஆம். கொம்பின் உள்ளே எலும்புக்கு பதில் காற்றறைகள்
இருப்பதால் கொம்பு ஒரு அதிர்வுத்தாங்கியாகவும் (shock-absorber) செயல்படுகிறது. இந்த
காஸோவரி பறவைகளின் எச்சத்தின் மூலமே மழைக்காட்டின் பெருமரங்களின் விதைபரவல் எளிதாக
நடைபெறுகிறது.
டெயின்ட்ரீ மழைக்காட்டுப்பகுதியின் பூர்வகுடிகள் குக்கு யலாஞ்சி மக்கள். அவர்கள் இந்நிலத்தை தங்களது புனித மற்றும் கலாச்சார அடையாளமாக மதிக்கின்றனர். இந்நிலம் சார்ந்து வழிவழியாக பல பாடல்களையும் கதைகளையும் புனைந்து இன்றும் தொடர்ந்து தங்கள் தலைமுறைக்குக் கடத்திக்கொண்டிருக்கின்றனர். பலர் இப்பகுதியில் பயண வழிகாட்டிகளாகவும் பணிபுரிகின்றனர். பல சுற்றுலா ஏற்பாட்டு மையங்களும் இங்கே செயல்படுகின்றன. நடைப்பயணம், மலையேற்றம், படகு வலித்தல், காட்டுவழிப் பயணம், மழைக்காட்டில் இராத்தங்கல், இரவு நேரத்து காடனுபவம், கானுயிர் நோக்கல் எனப் பல்வேறு அனுபவங்களை அள்ளித்தருகின்றன சுற்றுலா ஏற்பாட்டு மையங்கள்.
டெயின்ட்ரீ மழைக்காட்டுப் பகுதிக்கு சுற்றுலா செல்வோரிடம் முன்வைக்கப்படும் வேண்டுகோள்கள் இவைதான்.
தயவுசெய்து மழைக்காட்டின் இயல்பை மாற்றிவிடாதீர்கள்.
குப்பைகளை வீசிவிட்டுப் போகாதீர்கள்,
ஆற்றுநீரை அசுத்தம் செய்யாதீர்கள்,
பறவை, விலங்குகளுக்கு
உணவு வழங்கி உங்கள் தயாள குணத்தைக் காட்டாதீர்கள். உங்கள் வருகைக்கு முன்னர் காடு
எப்படி இருந்ததோ அப்படியே நீங்கள் செல்லும்போது விட்டுச்செல்லுங்கள்.
முன்னொரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மத்திய நிலப்பரப்பு வரையிலும் பரவியிருந்த மழைக்காடு கொஞ்சம் கொஞ்சமாக பரப்பளவில் குறைந்து தற்போது குறிப்பிடத்தக்க அளவில்தான் எஞ்சியுள்ளது. ஆதிகால விலங்குகளின், தாவரங்களின் உறைவிடமாய் எஞ்சியிருப்பதும் இப்பகுதிதான். நொடியில் காடழிப்பதில் கைதேர்ந்த மானுட குலத்துக்கு காடு வளர ஆகும் காலம் பற்றிய துளி அறிதலாவது இருக்கிறதா என்பது ஐயம்தான்!
(இக்கட்டுரை SBS தமிழ் வானொலியில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'நம்ம ஆஸ்திரேலியா' தொடராக ஒலிபரப்பானது. இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்டவையே. டெயின்ட்ரீ மழைக்காட்டைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டாததால் உள்ளூர் மழைக்காட்டின் படத்தை இணைத்திருக்கிறேன்.)
நீங்கள் எடுத்த படங்களும், சேகரித்த விவரங்களும் மிக அருமை.
ReplyDeleteடெயின்ட்ரீ மழைக்காட்டை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது .
காஸோவரி பறவையை பற்றிய விவரம் அதற்கு உள்ள கொம்பின் பயன்பாடு இந்த பறவை மழை காட்டின் மரங்களை பெருக்கம் செய்வது எல்லாம் அருமை.
மழைக் காட்டின் இயல்பை மாற்ற வேண்டாம் என்ற வேண்டுகோள் அருமை.
படங்களும் தகவல்களும் வியப்பைத் தருகின்றன. மனிதர்கள் உண்டாக்கும் அழிவு - வேதனையான உண்மை. இந்தியாவின் பல பகுதிகளில் உலா வரும்போது சக மனிதர்கள் செய்திருக்கும் செயல்களை பார்க்கும்போது வருத்தமும் வேதனையும் உண்டாகியிருக்கிறது.
ReplyDelete