16 September 2012

அம்மா என்றொரு மனுஷி

 
 
புதிய திரைப்படமொன்றின்
திருட்டுப்பிரதியினைப் பார்வையிட
கூடத்தில் அனைவரும் கூடியிருக்கும் வேளையிலும்
உணவு தயாரிக்கும் உரிமை மட்டும்
எக்காரணம் கொண்டும் எவராலும் பறிக்கப்படாமல்
அவளிடமே அதீதமாய் விட்டுவைக்கப்படுகிறது.
 
முன்தினம்முதலாய் குளிர்சுரம் கண்டு
கம்பளிக்குள் முடங்கி நடுங்கி,
பினத்திக்கொண்டிருந்தவள்,
மாத்திரை முழுங்கிய மறுகணமே
பரவாயில்லை இப்போதென்று சொல்லி
பட்டென எழுந்துகொள்வாளென்று
எல்லோராலும் அனுமானிக்கப்படுகிறது.
 
குற்றாலத்துக்கு குடும்பத்துடன்போக
மகிழுந்து பேசி மற்றவரெல்லாம் ஏறியபின்
அவளொருத்திக்கு மட்டும் இடமில்லையென்பது
இறுதிகணத்தில் தெரியவர....
'நானிருக்கேனே வீட்டில்!'
வழக்கம்போலவே அந்த வாசகம் 
அவள் வாயிலிருந்தே வரவேண்டுமென்று
உளமாற வேண்டப்படுகிறது.
 
அவளது ஒப்புதலின்றி
எதுவும் செய்வதில்லையென்ற
அப்பாவின் பிரதாபப் பேச்சுக்குமுன்
ஊமையாகிப் போகின்றன,
பலவந்தமாய்ப் புறக்கணிக்கப்பட்ட
அவளது எதிர்ப்புகளும், மறுப்புகளும்.
 
இத்தனைக்குப் பின்னும்
இயந்திரமனுஷியாய் இல்லாமல்
புன்னகையுடனும் புத்துணர்வுடனும்
அன்றாடம் வலம்வரவேண்டுமென்று அனைவராலும்
அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படுகிறது.

86 comments:

  1. அம்மா என்றுமே அதிசயம். குடும்பம் தேர் போல் ஓட அவளே அச்சாணி... அச்சாணியை யார் பார்க்கிறார்கள்? அச்சாணிக்கு ஏது அலங்காரம்..

    அவள் இல்லாத வெற்றிடம் உணர்த்தும் அவள் யாரென...

    நன்றி கீதமஞ்சரி!

    ReplyDelete
  2. அம்மா என்றால் சும்மாவா? அனுபவித்துப் பார்த்தவர்களுக்கே அம்மாவின் பிரிவினில் உள்ள வலிகளை நன்கு உணரமுடியும்.

    பல்லாண்டுகளுக்குப் பிறகு நான் இன்றும் உணர்கிறேன் அந்த வலியினை.

    அம்மாவைப்பற்றி அழகாகவே எழுதியுள்ளீர்கள்.

    என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    அன்பான வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    VGK

    ReplyDelete
  3. முதலில் வலைவடிவமைப்புக்கு என் வாழ்த்துக்கள். மிக அழகாகவுள்ளது.

    ReplyDelete
  4. கவிதையின் தலைப்பு, படம்,கவிதை சொன்னவிதம் யாவும் அருமை..

    நம் சுயநலனை சீர்த்தூக்கிப்பார்க்கவும்
    அம்மாவின் அன்பைப் புரிந்துகொள்ளவும் செய்யும் வரிகள்...

    ReplyDelete
  5. அன்று
    பருவம் நினைவில்லை
    ஆனால் நிச்சயமாக சொல்கிறேன்
    இதுபோன்ற ஒரு அம்மாவை கண்டதாய் நினைவில்
    அதை தூசு தட்டியது உங்கள் கவிதை

    உயிர்ப்புள்ள கவிதை

    ReplyDelete
  6. அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படும் அச்சாணியின் அச்சு !

    ReplyDelete

  7. /அவளது ஒப்புதலின்றி
    எதுவும் செய்வதில்லையென்ற
    அப்பாவின் பிரதாபப் பேச்சுக்குமுன்/ இது என் வீட்டில் ஒரு அப்பாவான எனக்கும் பொருந்தும். எனக்கு என் அம்மாவைவிட என் மனைவியைத்தான் அம்மாவாகத் தெரியும். POOR அம்மாக்கள். they are taken for granted.
    நேற்று உங்கள் பதிவுக்கு வர முயன்றபோது I WAS SHOCKED.! YOU ARE NOT PERMITTED TO VIEW AS YOU ARE NOT AN INVITED VIEWER என்று வந்தது( அந்த அர்த்தத்தில் ).

    ReplyDelete
  8. மனம் நெகிழ வைத்த சிறப்பான பதிவு! நன்றி! என்னுடைய வலைப்பூவில் "இமைகள்",
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  9. நல்லதொரு படைப்பு! நன்றி!

    ReplyDelete
  10. ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படித்தான் அம்மா இருக்கிறார்கள்! நிதர்சன கவிதை! சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  11. அம்மா என்று சொல்லும்போதே மனம் நெகிழ்கிறதே.எதை எப்படிச் சொன்னாலும் சோர்வில்லா கண் முன்னால் நடமாடும் அன்புத் தெய்வம் !

    ReplyDelete
  12. உள்ளம் நெகிழ்ந்தேன். உருக்கும் கவிதை.

    ReplyDelete
  13. பொறுத்துக் கொள்வாள்
    எதையும் ஏற்றுக் கொள்வாளென
    நானும் அம்மாவுக்குச் செய்த
    இதுபோன்ற அலட்சியங்களை
    நினைவுறுத்தி மனம் கலங்கச் செய்து போகும்
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நினைவுகளை தூண்டி விட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. அம்மா-வைப் பற்றிய கவிதை....

    கவிதை பற்றிய கவிதை!

    ReplyDelete
  16. நாம அம்மாவா மாறின பின் தான் நம்ம அம்மாவோட அருமை நமக்கு தெரியுதுங்க சகோ

    ReplyDelete
  17. அம்மாவும் இரத்தமும் சதையுமாய் ஆன ஒரு மனுஷி தான் என்பதை நிறைய பேர்கள் உணர்வதில்லை! அவர்களுக்கு அதை உணர்த்துவதாய் அமைந்திருக்கிறது உங்களது அற்புதமான கவிதை!

    ஒரு குழந்தையைப் பெறுவதால் மட்டும் ஒரு பெண்ணுக்கு தாய்மை வந்து விடுவதில்லை! அந்தக்குழந்தையை வளர்ப்பதிலும் பிராயங்கள் பல ஆனபோதும் வழி நெடுக வலிகளை சுமந்து கொண்டே இன்முகம் காட்டுவதிலும் தான் அந்தத் தாய்மை சுமைதாங்கியாய் மிளிர்கிறது! அந்தப் பக்குவத்தை மிக அழகாய் படம் பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள் கீதமஞ்சரி!

    ReplyDelete
  18. இவை அனைத்தும் பெண்களுக்கு உரிய நற்பண்பு என்பதால் தான் அவர்களிடமே எதிர்பார்க்கப்படுகிறது!

    150 follower கடந்தமைக்கு வாழ்துக்கள் சகோ!

    ReplyDelete
  19. வணக்கம் சகோதரி...
    அன்னை என்றொரு சொல்லுக்கு
    ஆயிரமாயிரம் அருஞ்சொற்பொருள் ...
    தன் குடும்பத்திற்காய்
    அன்னையவள் தான்கொண்ட
    தியாகங்கள் தான் எத்தனை எத்தனை..
    கவியினைப் படிக்கையிலே என் அன்னை
    கண்முன்னே படலமாய்த் வந்து செல்கிறார்...

    ReplyDelete
  20. இத்தனைக்குப் பின்னும்



    இயந்திரமனுஷியாய் இல்லாமல்



    புன்னகையுடனும் புத்துணர்வுடனும்//

    அம்மாவின் சிற‌ப்பு எப்ப‌வும் ச‌ற்றே தூக்க‌ல் தான்! அக‌ழ்வாரைத் தாங்கும் நில‌ம் போல‌ அவ‌ர்!

    ReplyDelete
  21. மோகன் ஜியும், ம‌னோ மேம்‍மும், வெங்க‌ட் அண்ணாவும் பின்னூட்ட‌மாய் க‌சிவிக்கிறார்க‌ள் அம்மா ப‌ற்றிய‌ மேன்மைக‌ளை!

    ReplyDelete
  22. \\மோகன்ஜி said...
    அம்மா என்றுமே அதிசயம். குடும்பம் தேர் போல் ஓட அவளே அச்சாணி... அச்சாணியை யார் பார்க்கிறார்கள்? அச்சாணிக்கு ஏது அலங்காரம்..

    அவள் இல்லாத வெற்றிடம் உணர்த்தும் அவள் யாரென...\\

    அச்சாணியென்னும் ஒற்றை வார்த்தையால் அவளிருப்பின் அவசியத்தை அழகுற மொழிந்துவிட்டீர்கள். நன்றி மோகன்ஜி.

    ReplyDelete
  23. தங்கள் தாயின் பிரிவை நினைவுறுத்தி பல்லாண்டுகளுக்குப் பின் அந்த வலியுணரச் செய்தமைக்காக வருந்தினாலும் அவளன்பை நினைவுறுத்தும் வாய்ப்பாய் அமைந்தமைக்காக மகிழ்கிறேன். கருத்துக்கு நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  24. \\முனைவர்.இரா.குணசீலன் said...
    முதலில் வலைவடிவமைப்புக்கு என் வாழ்த்துக்கள். மிக அழகாகவுள்ளது.\\

    \\கவிதையின் தலைப்பு, படம்,கவிதை சொன்னவிதம் யாவும் அருமை..

    நம் சுயநலனை சீர்த்தூக்கிப்பார்க்கவும்
    அம்மாவின் அன்பைப் புரிந்துகொள்ளவும் செய்யும் வரிகள்... \\

    வலைப்பூ வடிவமைப்பு தங்களைக் கவர்ந்ததறிந்து மிக்க மகிழ்ச்சி. அதற்கும்,கவிதைக்குமான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி முனைவரே.

    ReplyDelete
  25. தூசுபடிந்திருந்த நினைவுகளைத் தட்டியெழுப்பி மீண்டும் நினைவுறுத்தியமை கண்டு நெகிழ்கிறேன். நன்றி நண்பர் செய்தாலி.

    ReplyDelete
  26. \\இராஜராஜேஸ்வரி said...
    அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படும் அச்சாணியின் அச்சு !\\

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  27. \\G.M Balasubramaniam said...

    /அவளது ஒப்புதலின்றி
    எதுவும் செய்வதில்லையென்ற
    அப்பாவின் பிரதாபப் பேச்சுக்குமுன்/ இது என் வீட்டில் ஒரு அப்பாவான எனக்கும் பொருந்தும். எனக்கு என் அம்மாவைவிட என் மனைவியைத்தான் அம்மாவாகத் தெரியும். POOR அம்மாக்கள். they are taken for granted. \\

    அனுபவசாலியான உங்கள் வரிகளில் தெறிக்கும் யதார்த்தம் கண்டு மகிழ்கிறேன். நன்றி ஜிஎம்பி ஐயா.

    வலைத்தோற்றத்தை மாற்ற முயன்றேன். நிறைய சிக்கலாகிவிட்டது. ஒன்றிரண்டுநாள் பூட்டி வைத்து சரிசெய்துவிட்டுத் திறந்தேன். ஆர்வத்துடன் வந்த தங்களை அதிரவைத்தமைக்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  28. \\Seshadri e.s. said...
    மனம் நெகிழ வைத்த சிறப்பான பதிவு! நன்றி! \\

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிங்க காரஞ்சன்.

    ReplyDelete
  29. \\இராமன் இ.சே. said...
    நல்லதொரு படைப்பு! நன்றி!\\

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  30. \\s suresh said...
    ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படித்தான் அம்மா இருக்கிறார்கள்! நிதர்சன கவிதை! சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ!\\

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  31. \\ஹேமா said...
    அம்மா என்று சொல்லும்போதே மனம் நெகிழ்கிறதே.எதை எப்படிச் சொன்னாலும் சோர்வில்லா கண் முன்னால் நடமாடும் அன்புத் தெய்வம் !\\

    அம்மாவைப் பற்றிய உங்கள் வரிகளிலும் நெகிழ்ந்தேன். நன்றி ஹேமா.

    ReplyDelete
  32. \\துரைடேனியல் said...
    உள்ளம் நெகிழ்ந்தேன். உருக்கும் கவிதை. \\

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரைடேனியல்.

    ReplyDelete
  33. \\Ramani said...
    பொறுத்துக் கொள்வாள்
    எதையும் ஏற்றுக் கொள்வாளென
    நானும் அம்மாவுக்குச் செய்த
    இதுபோன்ற அலட்சியங்களை
    நினைவுறுத்தி மனம் கலங்கச் செய்து போகும்
    அருமையான பதிவு\\

    நீங்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே அப்படித்தானே வளர்ந்திருக்கிறோம். அப்படித்தானே அவளும் வளர்த்தெடுக்கிறாள். வருகைக்கும் மனம் நிறுத்தும் பின்னூட்டத்துக்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  34. \\Kumaran said...
    நினைவுகளை தூண்டி விட்டமைக்கு நன்றி\\

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க குமரன்.

    ReplyDelete
  35. \\வெங்கட் நாகராஜ் said...
    அம்மா-வைப் பற்றிய கவிதை....

    கவிதை பற்றிய கவிதை! \\

    வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி வெங்கட்.

    ReplyDelete
  36. \\ராஜி said...
    நாம அம்மாவா மாறின பின் தான் நம்ம அம்மாவோட அருமை நமக்கு தெரியுதுங்க சகோ\\

    உண்மைதான் ராஜி. அம்மாவின் அருமையைக் காலம் கடந்தே அனைவரும் புரிந்துகொள்கிறோம். கருத்துக்கு நன்றி ராஜி..

    ReplyDelete
  37. \\மனோ சாமிநாதன் said...
    அம்மாவும் இரத்தமும் சதையுமாய் ஆன ஒரு மனுஷி தான் என்பதை நிறைய பேர்கள் உணர்வதில்லை! அவர்களுக்கு அதை உணர்த்துவதாய் அமைந்திருக்கிறது உங்களது அற்புதமான கவிதை!\\

    தங்கள் வருகைக்கும் மனந்தொட்டக் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  38. \\நிலாமகள் said...
    அம்மாவின் சிற‌ப்பு எப்ப‌வும் ச‌ற்றே தூக்க‌ல் தான்! அக‌ழ்வாரைத் தாங்கும் நில‌ம் போல‌ அவ‌ர்!\\

    அழகான ஆழமானக் கருத்துக்கு நன்றி நிலாமகள்.

    \\மோகன் ஜியும், ம‌னோ மேம்‍மும், வெங்க‌ட் அண்ணாவும் பின்னூட்ட‌மாய் க‌சிவிக்கிறார்க‌ள் அம்மா ப‌ற்றிய‌ மேன்மைக‌ளை!\\

    மற்றவரது பின்னூட்டங்களையும் கவனித்துக் குறிப்பிடும் தங்கள் பண்பினைப் பாராட்டுகிறேன். நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  39. \\வரலாற்று சுவடுகள் said...
    இவை அனைத்தும் பெண்களுக்கு உரிய நற்பண்பு என்பதால் தான் அவர்களிடமே எதிர்பார்க்கப்படுகிறது!

    150 follower கடந்தமைக்கு வாழ்துக்கள் சகோ!\\

    வருகைக்கும் அற்புதமானக் கருத்துக்கும் மிகவும் நன்றி வரலாற்று சுவடுகள்.

    வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  40. \\மகேந்திரன் said...
    வணக்கம் சகோதரி...
    அன்னை என்றொரு சொல்லுக்கு
    ஆயிரமாயிரம் அருஞ்சொற்பொருள் ...
    தன் குடும்பத்திற்காய்
    அன்னையவள் தான்கொண்ட
    தியாகங்கள் தான் எத்தனை எத்தனை..
    கவியினைப் படிக்கையிலே என் அன்னை
    கண்முன்னே படலமாய்த் வந்து செல்கிறார்...\\

    அன்னையைத் தங்கள் நினைவில் கொண்டுவர முயன்றமைக்காக மகிழ்கிறேன் மகேந்திரன். வருகைக்கும் அழகிய கவிதைக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  41. Anonymous17/9/12 12:40

    இந்த டெம்ளேட் மிக அழகாய் உள்ளது அக்கா.

    உங்கள் கவி செல்லவே தேவயில்ல அக்கா சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............

    ReplyDelete
  42. அம்மாவின் நினைவு கண் முன் நிழலாடுது புறக்கணிப்பின் வலிகளை உணரமுடிகிறது .....
    நமக்காக அவள் எத்தனை தியாகங்களை செய்கிறாள் நாம் என்ன செய்தாலும் ஈடுகட்ட இயலாத தியாகம் அது ...உங்கள் வரிகளை சுவாசித்தபின் கண்கள் கலங்கி நிற்கிறேன் தோழி .........

    ReplyDelete
  43. அம்மா அம்மா தான். ....

    அருமையான வரிகள். மனதை நெகிழ வைத்தது.

    ReplyDelete
  44. Anonymous17/9/12 17:10

    மிக வித்தியாச முறையில் எழுதப் பட்டது போல ஒரு உணர்வு!
    மிக நன்று வரிகள். நல்வாழ்த்து.
    வலையமைப்பும் கவருகிறது மனதை.
    ஏன் வருவதில்லை வேதாவின் வலைக்கு?
    பலரிடம் தங்கள் கருத்தை வாசித்தபடியே உள்ளேன்.
    ஓ.கே இது உங்கள் இஷ்டம்.
    வாழ்க வளமுடன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

  45. கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா... பகவான் கூட நாம் கேட்டால் தான் தருகிறார் நமக்கானவைகளை... ஆனால் தாய் மட்டும் நாம கேட்காமலேயே நமக்கான நல்லவைகளை தனக்கானவைகளை மறுத்து நமக்கு தருகிறார்... இந்த கவிதை வரிகளை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் கண்டிப்பா தன் தாயின் நினைவலைகளை பார்க்கும்படி அமைந்த கவிதை வரிகள் ஆர்பாட்டமில்லாத அழகு வரிகள்....

    தன்னலமில்லாதவர் மட்டுமில்லை.... எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகளாக பாவிப்பது மட்டுமில்லை.... தன் சிரமங்களை கூட சிறு புன்னகையால் மறைத்து நமக்கு சேவை செய்யும் அற்புத தேவதை நம் அம்மா.... அப்பாவில் தொடங்கி உடன் பிறந்தோரில் இருந்து நம் சுற்றம், ஏன் நாம் கூட சில சமயங்களில் பொறுமை இழந்துவிடுவதுண்டு..கோபத்தில் நிதானமிழந்து வார்த்தைகளை சிதறவிடுவதும் உண்டு... ஆனால் தாய் குடும்பத்தின் அத்தனை பேருடைய குணங்களை அறிந்து அதன்படி அவரவர் விருப்பப்படி சமைத்து கோபங்களை அப்பாவின் கோபங்களை தகர்க்கும் சக்தியில்லாத அன்னை அந்த கோபங்களை குழந்தைகள் மேல் தாவி விடாதபடி தான் தாங்கிக்கொண்டு நமக்கு அன்பினை பகிரும் பொறுமைக்கடல்....

    என்ன அழகா எழுதி இருக்கீங்கப்பா... இயல்பான நடை தான்.. ஆனால் அது சொல்லும் விஷயங்கள் ஏராளம்... அம்மா வாழ்வின் ஆதாரம் என்பதற்கு இதை விட அற்புதமா சொல்லமுடியாது... வீட்டில் நல்ல காரியங்கள் விஷேஷங்கள் எல்லாவற்றிற்கும் அம்மா தான் அல்லல்படனும்... அப்பா நல்லா ட்ரெஸ் பண்ணிப்பார்... பிள்ளைகளும் தயாராகிடும். அம்மா மட்டும் இன்னும் அடுக்களையிலேயே அடுத்த வேளை உணவு தயார் செய்யும் அவசரத்துடன்....

    வீட்டில் சந்தோஷங்கள் கொண்டாட்டங்கள் எதற்குமே குறைகள் இருப்பதில்லை... ஆனால் அந்த சந்தோஷத்தில் கொண்டாட்டத்தில் அம்மாவுக்கும் பங்கு இருக்குமா என்றால் விடையில்லாத கேள்வியாக அந்தரங்கத்தில் நிற்கும்....ஏன்னா யாருக்குமே அதை யோசிக்க கூட சமயம் இருக்காது....

    ReplyDelete
  46. உடல்நலம் சரியில்லாம மாத்திரைகளை முழுங்கிட்டு அடுத்த நாள் அன்னப்பூரணி அன்னம் சமைக்க ஆஜராகிவிடுவாள். எத்தனை நம்பிக்கை நமக்கு... நான் லீவுக்கு ஊருக்கு போயிருந்தபோது என் கண்ணால் கண்ட உண்மை இது... என் தங்கை மூன்று நாட்களாக உடல்நலம் சரியில்லாமலேயே வீட்டில் எல்லா வேலைகளும் செய்துக்கொண்டிருந்தாள். அடிக்கடி என்னிடம் வந்து மஞ்சு எனக்கு ஜுரம் அடிப்பது போலிருக்கு தொட்டுப்பாரு என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். நான் திட்டினேன். ஓய்வே இல்லாமல் இப்படி வேலைகள் செய்யாதே.. எல்லோரும் வேலைகளை பகிர்ந்து செய்யும்போது உனக்கு வேலையும் குறையும் ஓய்வும் கிடைக்கும். கேட்கவில்லை. அடுத்த நாள் ஒரேடியாக பிரக்ஞயின்றி விழுந்துவிட்டாள்... இந்நிலை வராமல் தடுக்க குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் தாயும் நம்மை போல ஒரு மனுஷி தானே என்று யோசித்து செயல்படவேண்டும்.

    ஆகமொத்தம் தியாகத்தின் பிரதிபிம்பமாக தாய் சித்தரிக்கப்படுகிறாள்... கடைசி பத்தி மனதை தொட்டது கீதமஞ்சரி. எல்லா சிரமங்களையும் பொறுத்துக்கொண்டும்... புன்னகையுடன் வலம் வரவேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம். எத்தனை கொடுமை.... ஆபிசுல வேலை செய்வோர் கூட இத்தனை மணி நேரம் தான் என்று ஒரு விதிமுறையோடு வேலை செய்கிறார்கள். ஆனால் நம் தாய்? விடுமுறை இல்லாது வேலைகள் செய்துக்கொண்டே இருக்கிறார்...

    அருமையான சிந்திக்கவைத்து எல்லோரையும் சுயம் பரிசோதிக்கவைத்த அற்புதமான கவிதை வரிகளுக்கு என் அன்பு நன்றிகள் கீதமஞ்சரி.

    ReplyDelete
  47. கன்றும் அழைக்கும் கனிந்த குரலிலே!
    தென்றல் வருடிடும் தேனிசை ஓசையோ!
    அம்மா வெனுஞ்சொல்! அதிசய ராகமோ!
    எம்முனத்தை ஈர்த்துவிட்டீர் இன்று!

    நன்றி கீதமஞ்சரி அக்கா.

    ReplyDelete
  48. மனிதினை நெகிழ்த்திப்போட்ட கவிதை வரிகள்

    ReplyDelete
  49. மனதை நெகிழ வைத்தன ஒவ்வொரு வரிகளும். கேட்டதைத் தருவான் கடவுள். கேட்காமலே தருவாள் அம்மா என்கிற மஞ்சுபாஷிணியின் வரிகள் மிகமிக உண்மை. (உங்கள் தளம் ஒவ்வொருமுறை வரும் போதும் புதுச் சட்டை போட்டிருக்கிறதே... நல்லாயிருக்கு தோழி)

    ReplyDelete


  50. // இத்தனைக்குப் பின்னும்இயந்திரமனுஷியாய் இல்லாமல்புன்னகையுடனும் புத்துணர்வுடனும்அன்றாடம் வலம்வரவேண்டுமென்று அனைவராலும்அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படுகிறது//

    ReplyDelete


  51. // இத்தனைக்குப் பின்னும்இயந்திரமனுஷியாய் இல்லாமல்புன்னகையுடனும் புத்துணர்வுடனும்அன்றாடம் வலம்வரவேண்டுமென்று அனைவராலும்அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படுகிறது//

    எத்தனை உண்மைகள்! மிக எளிமையாக சொல்லப் பட்டிருக்கிறது!ஆனால், படித்த பின் மனதில் இனமறியா ஒரு வலி வடுவாக நின்று விட்டது

    ReplyDelete
  52. ஆண்டாண்டு காலமாய் தொடரும் அவலம். சத்தியமாய் என் அம்மாவை இப்படித்தான் நடத்தினோம். நான் என் மனைவியை இப்படி நடத்துவதில்லை - ( என் மனைவியைக் கேட்டால் தான் தெரியும் என்கிறீர்களா?).
    உள்ளம் தொட்ட கவிதை

    ReplyDelete
  53. ரொம்ப வருத்தமாயிருக்கு மஞ்சு..... அம்மான்னா தியாகம், அம்மான்னா அன்பு அப்படில்லாம் சொல்லி அவளுக்குள்ள இருக்கிற ஒரு மனுஷிய அழிக்குது இந்த சமூகம். அதை அப்படியே அச்சு அசலா கவிதையாக்கி இருக்கீங்க.... நம்ம அம்மாவ நாமளும் அப்படித் தானே நடத்தறோம் அப்படின்னு நினைக்கும் போதே நாம அப்படி ஒரு அம்மாவா ஆயிடக் கூடாதுன்னும் ஒரு எச்சரிக்கை உணர்வு வருது மஞ்சு....
    அருமையான கவிதைக்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  54. அம்மா
    உலக பூவின் ஒட்டுமொத்த வாசம்
    உயிருக்குள் உயிர்சேர்க்கும் உன்னத நேசம்.

    அம்மாவின் அன்புக்கு ஈடில்லையே
    அவளில்லையேல் எனக்கேது நிழல்
    இப்பூமியிலே!


    கீதா மிக மிக
    அருமையாய் நெகிழ்வாய்
    அன்னையின் அன்புக்கு ஒரு பதிவு .

    ReplyDelete
  55. சிறப்பிற்கு மேலும் சிறப்பு செய்து விட்டீர்கள்... மிகவும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  56. அம்மா இல்லான இந்த வுலகில் நாம் இல்லை என்பதை மறந்து விடுகின்ரோம் நினைவுக்கு நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க நன்றி

    ReplyDelete
  57. Anonymous20/9/12 21:01

    நன்றாக எழுதப் பட்டிருக்கும் பத்தி.

    நன்றி.

    ReplyDelete
  58. அம்மாவை பற்றிய கவிதை அருமை.
    மனதை நெகிழவைத்த கவிதை.
    அம்மா என்ற மனுஷிக்கும் விருப்பு, வெறுப்பு இருக்கும் என எப்போது உணர்வார்கள்.

    ReplyDelete
  59. என்னுடைய வலைப்பக்கத்தில் "கழிவிரக்கம்" மற்றும் பிறைநிலா கவிதைகள்! நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  60. நிதர்சனம்...!இயல்பான கவிதை. எனது வலைபூவிற்கும் வருகை தாருங்கள். mayavarathanmgr.blogspot.in

    ReplyDelete
  61. சிறப்பான கவிதை வரிகள் .தாயில் சிறந்ததொரு கோவிலும் உண்டோ !!!:...என மனதை நெருடிச் செல்கின்றது .வாழ்த்துக்கள் தோழி மேலும் மேலும் தொடர .

    ReplyDelete
  62. ஹ்ம்ம்ம் ..அம்மா ...நீங்க பதிவிட்ட அன்றே படித்தேன் கீதா ..
    அதீத குற்ற உணர்வினால் பதிலளிக்க முடியாமல் போய் விட்டேன் ..
    என் வாழ்க்கையில் முக்கியமான கால கட்டங்களில் முடிவெடுக்க தயகியபோது ..ஊக்கப்படுத்தி எனக்கு உந்து சக்தியாக இருந்தது அம்மா ..
    எனக்கு மணமாகும்வரை சமையற்கட்டு நான் அறியேன் ,,,நான் சாப்பிட்ட தட்டை கூட அம்மாதான் கழுவினாங்க ,,,வீட்டில் ஒரு சிறு உதவி கூட நான் செய்ததில்லை .அம்மாவுக்கு ....எல்லாவற்றும் சேர்த்து செய்யனும்னு நினைக்கும்போது அம்மா இல்லை ((.
    மனதை உருக்கிய கவிதை


    ReplyDelete
  63. விட்டுக்கொடுப்பதன் உயிர் வடிவம்தான் அம்மா.
    கவிதை நன்று.

    ReplyDelete
  64. \\esther sabi said...
    இந்த டெம்ளேட் மிக அழகாய் உள்ளது அக்கா.

    உங்கள் கவி செல்லவே தேவயில்ல அக்கா சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............\\

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி எஸ்தர். டெம்ப்ளேட் உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி.

    ReplyDelete
  65. \\kovaikkavi said...
    மிக வித்தியாச முறையில் எழுதப் பட்டது போல ஒரு உணர்வு!
    மிக நன்று வரிகள். நல்வாழ்த்து.
    வலையமைப்பும் கவருகிறது மனதை.\\

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  66. \\கோவை மு சரளா said...
    அம்மாவின் நினைவு கண் முன் நிழலாடுது புறக்கணிப்பின் வலிகளை உணரமுடிகிறது .....
    நமக்காக அவள் எத்தனை தியாகங்களை செய்கிறாள் நாம் என்ன செய்தாலும் ஈடுகட்ட இயலாத தியாகம் அது ...உங்கள் வரிகளை சுவாசித்தபின் கண்கள் கலங்கி நிற்கிறேன் தோழி .........\\

    வருகைக்கும் மனம் நெகிழ்ந்த கருத்துக்கும் நன்றி சரளா.

    ReplyDelete
  67. \\மஞ்சுபாஷிணி said...

    கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா... பகவான் கூட நாம் கேட்டால் தான் தருகிறார் நமக்கானவைகளை... ஆனால் தாய் மட்டும் நாம கேட்காமலேயே நமக்கான நல்லவைகளை தனக்கானவைகளை மறுத்து நமக்கு தருகிறார்... இந்த கவிதை வரிகளை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் கண்டிப்பா தன் தாயின் நினைவலைகளை பார்க்கும்படி அமைந்த கவிதை வரிகள் ஆர்பாட்டமில்லாத அழகு வரிகள்....\\

    வருகைக்கும் மனம் நெகிழ்த்தும் நெடியப் பின்னூட்டத்துக்கும் நன்றி மஞ்சுபாஷிணி.

    ReplyDelete
  68. \\அருணா செல்வம் said...
    கன்றும் அழைக்கும் கனிந்த குரலிலே!
    தென்றல் வருடிடும் தேனிசை ஓசையோ!
    அம்மா வெனுஞ்சொல்! அதிசய ராகமோ!
    எம்மனத்தை ஈர்த்துவிட்டீர் இன்று!

    நன்றி கீதமஞ்சரி அக்கா.\\

    வருகைக்கும் கவிப்பின்னூட்டத்துக்கும் நன்றி அருணாசெல்வம்.

    ReplyDelete
  69. \\ஸாதிகா said...
    மனிதினை நெகிழ்த்திப்போட்ட கவிதை வரிகள்\\

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா.

    ReplyDelete
  70. \\பால கணேஷ் said...
    மனதை நெகிழ வைத்தன ஒவ்வொரு வரிகளும். கேட்டதைத் தருவான் கடவுள். கேட்காமலே தருவாள் அம்மா என்கிற மஞ்சுபாஷிணியின் வரிகள் மிகமிக உண்மை. (உங்கள் தளம் ஒவ்வொருமுறை வரும் போதும் புதுச் சட்டை போட்டிருக்கிறதே... நல்லாயிருக்கு தோழி)\\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ். மஞ்சுபாஷிணியின் கருத்துக்கள் அத்தனையும் மறுக்கமுடியா உண்மைகள்.

    தளத்தின் சட்டையை மாற்றவிரும்பி பல முயன்றேன். இறுதியில் இந்த சட்டைப் பிடித்துவிட்டது. இனி இப்போதைக்கு மாற்றமாட்டேன்.


    ReplyDelete
  71. \\புலவர் சா இராமாநுசம் said...

    எத்தனை உண்மைகள்! மிக எளிமையாக சொல்லப் பட்டிருக்கிறது!ஆனால், படித்த பின் மனதில் இனமறியா ஒரு வலி வடுவாக நின்று விட்டது\\

    தங்கள் வருகைக்கும் மனம் நெகிழ்த்தும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  72. \\சிவகுமாரன் said...
    ஆண்டாண்டு காலமாய் தொடரும் அவலம். சத்தியமாய் என் அம்மாவை இப்படித்தான் நடத்தினோம். நான் என் மனைவியை இப்படி நடத்துவதில்லை - ( என் மனைவியைக் கேட்டால் தான் தெரியும் என்கிறீர்களா?).
    உள்ளம் தொட்ட கவிதை \\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன்.

    ReplyDelete
  73. \\கிருஷ்ணப்ரியா said...
    ரொம்ப வருத்தமாயிருக்கு மஞ்சு..... அம்மான்னா தியாகம், அம்மான்னா அன்பு அப்படில்லாம் சொல்லி அவளுக்குள்ள இருக்கிற ஒரு மனுஷிய அழிக்குது இந்த சமூகம். அதை அப்படியே அச்சு அசலா கவிதையாக்கி இருக்கீங்க.... நம்ம அம்மாவ நாமளும் அப்படித் தானே நடத்தறோம் அப்படின்னு நினைக்கும் போதே நாம அப்படி ஒரு அம்மாவா ஆயிடக் கூடாதுன்னும் ஒரு எச்சரிக்கை உணர்வு வருது மஞ்சு....
    அருமையான கவிதைக்கு என் வாழ்த்துக்கள்...\\

    வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி கிருஷ்ணப்ரியா.

    ReplyDelete
  74. \\அன்புடன் மலிக்கா said...

    கீதா மிக மிக
    அருமையாய் நெகிழ்வாய்
    அன்னையின் அன்புக்கு ஒரு பதிவு .\\

    வருகைக்கும் அழகானக் கவியோடானக் கருத்துரைக்கும் நன்றி மலிக்கா.

    ReplyDelete
  75. \\திண்டுக்கல் தனபாலன் said...
    சிறப்பிற்கு மேலும் சிறப்பு செய்து விட்டீர்கள்... மிகவும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...\\

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  76. \\Mohan P said...
    அம்மா இல்லான இந்த வுலகில் நாம் இல்லை என்பதை மறந்து விடுகின்ரோம் நினைவுக்கு நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க நன்றி\\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன். விரைவில் தங்கள் தளம் வருவேன். அழைப்புக்கு நன்றி.

    ReplyDelete
  77. \\Anonymous said...
    நன்றாக எழுதப் பட்டிருக்கும் பத்தி.

    நன்றி.\\

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  78. \\கோமதி அரசு said...
    அம்மாவை பற்றிய கவிதை அருமை.
    மனதை நெகிழவைத்த கவிதை.
    அம்மா என்ற மனுஷிக்கும் விருப்பு, வெறுப்பு இருக்கும் என எப்போது உணர்வார்கள்.\\

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். உணர்கிறோம் எல்லோருமே, ஆனால் காலம் கடந்து. அதுதான் வருத்தத்துக்குரியது.

    ReplyDelete
  79. \\Seshadri e.s. said...
    என்னுடைய வலைப்பக்கத்தில் "கழிவிரக்கம்" மற்றும் பிறைநிலா கவிதைகள்! நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன்\\

    தங்கள் அழைப்புக்கு நன்றி. விரைவில் வருகிறேன்.

    ReplyDelete
  80. \\RAVIJI said...
    நிதர்சனம்...!இயல்பான கவிதை. எனது வலைபூவிற்கும் வருகை தாருங்கள். mayavarathanmgr.blogspot.in\\

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. விரைவில் தங்கள் தளம் வருவேன். நன்றி.

    ReplyDelete
  81. \\அம்பாளடியாள் said...
    சிறப்பான கவிதை வரிகள் .தாயில் சிறந்ததொரு கோவிலும் உண்டோ !!!:...என மனதை நெருடிச் செல்கின்றது .வாழ்த்துக்கள் தோழி மேலும் மேலும் தொடர .\\

    வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  82. \\angelin said...
    ஹ்ம்ம்ம் ..அம்மா ...நீங்க பதிவிட்ட அன்றே படித்தேன் கீதா ..
    அதீத குற்ற உணர்வினால் பதிலளிக்க முடியாமல் போய் விட்டேன் ..
    என் வாழ்க்கையில் முக்கியமான கால கட்டங்களில் முடிவெடுக்க தயகியபோது ..ஊக்கப்படுத்தி எனக்கு உந்து சக்தியாக இருந்தது அம்மா ..
    எனக்கு மணமாகும்வரை சமையற்கட்டு நான் அறியேன் ,,,நான் சாப்பிட்ட தட்டை கூட அம்மாதான் கழுவினாங்க ,,,வீட்டில் ஒரு சிறு உதவி கூட நான் செய்ததில்லை .அம்மாவுக்கு ....எல்லாவற்றும் சேர்த்து செய்யனும்னு நினைக்கும்போது அம்மா இல்லை ((.
    மனதை உருக்கிய கவிதை\\

    மனதை உருக்கிய கவிதை என்றிருக்கீங்க. ஆனால் மனதை உருக்கியப் பின்னூட்டம் உங்களுடையது ஏஞ்சலின். காலம் மருந்துபோடவேண்டிய காயம் அது.


    ReplyDelete
  83. \\T.N.MURALIDHARAN said...
    விட்டுக்கொடுப்பதன் உயிர் வடிவம்தான் அம்மா.
    கவிதை நன்று.\\

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளிதரன்.

    ReplyDelete
  84. அம்மாவை பற்றி அருமையான கவிதை
    எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம்.

    ReplyDelete
  85. அம்மா எனும் மூறேடுத்து மந்திரத்தை பேசாத வாயுண்டோ? அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
    நானும் இதுபோல் அம்மவைபற்றி எழுதியுள்ளேன் படியுங்களேன் http://kaviyazhi.blogspot.com
    மேலும் நான் புதிதாக ஒரு கவிதை புத்தகம் கூட வெளியிட விரைவில் உள்ளேன் அதன் தலைப்பே "அம்மா நீ வருவாயா! அன்பை மீதும் தருவாயா?"

    ReplyDelete
  86. வலைச்சரம் மூலம் மீண்டும் வந்தேன். எத்தனை முறை படித்தாலும் அலுக்குமா என்ன அம்மா பற்றிய கவிதை ?

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.