குறுகுறுக்கும்
பார்வையை அங்குமிங்கும் ஏவி,
குறைக்கேவலொன்றை
வெகு அமர்த்தலாய்க் கேவி
கூட்டுமூலையோரம்
மீண்டும் மீண்டும்
வந்து அமர்ந்துகொள்கிறது
அடைகோழி கருப்பி.
விரட்ட விரட்ட
போக்குக் காட்டி
மறுபடியும் அடைய வந்ததை
ஆத்திரத்துடன்
துரத்தியமுக்குகிறாள்
ஆச்சி.
படபடக்கும் இறக்கையினின்று ஒற்றை இறகு பிய்த்து
அலகில் அலகுக்குத்த முயல்பவளை,
ஆக்ரோஷம் காட்டி அலைக்கழிக்கிறது கருப்பி.
முட்டைகளை அபகரித்தாய், போதாதா?
மூக்குத்தியிட்டு என் மென்தவம் களைத்து
மறுகருத்தரிப்புக்கு விரட்டுகிறாயே
மனுஷியா நீயென்று மூர்க்கம்
காட்டுகிறது
தன் முரட்டுக்கேவலில்.
ஆச்சிக்கும் கருப்பிக்கும்
இடையில் நடக்கும்
போராட்டத்தைப்
பார்த்தபடி பாயில் கிடக்கிறாள்
பத்துநாளுக்குமுன்
பிள்ளைபெற்ற பாதகத்தி ஒருத்தி.
கண்மலரா
பச்சிளம்சிசுவின்
வாயில்
கள்ளிப்பால்
புகட்டப்பட்டக் கடைசித் தருணத்திலும்
கருப்பியின்
ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்
செவிவழி
நுழைந்து அவள் கருப்பையைக்
கொத்திக்குதறிக்
கிழிக்கிறது
கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!
கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!
ReplyDeleteகொத்திக்குதறிக் கிழிக்கிறது படிப்பவர் மனங்களையும் !
சாட்டையால் அடித்தது போல இருக்கிறது வலிகளின் வீரியம் கருப்பியோடு ஒப்பிடும் அளவிற்கு வீரமிள்ளதவள் தான் குழந்தையை காவு கொடுத்து நிற்கும் பெண் ..................பாராட்டுகள் கீதா என்ன ஒரு வரிகள் ஆச்சர்யத்தின் விளிம்பில் அகல கண் விரிக்கிறேன் நான்
ReplyDeleteஆதங்க உணர்வுகளின் வெளிப்பாடு.. ஏனோ கருப்பியின் கேவல் கேட்காதவரையும் ரணமாக்குகிறது!! ஒரு கோழியின் மனக்குமுறல் புதிய அணுகுமுறை...அழகான கவிதையாய் உருபெற்று இருக்கிறது.. அருமை!!
ReplyDeleteமனதை உலுக்குகிறது கவிதையின் கருப்பொருளும், வீரியமிக்க வார்த்தைகளும்!
ReplyDeleteஇறுதி
ReplyDeleteவரியை வாசித்ததுமே
சிலிருத்து விட்டது உள்ளமும் பின் உடலும்
அற்புதம் நல்ல சாடல் தோழி
எதிர்ப்பு காட்டினாலும் சினைப்படுவதையும் முட்டையை பறிகொடுப்பதையும் கறுப்பியும் தவிர்க்க முடியாது எனினும், தவிப்பெழுகிறது இறுதிப்பத்தி கவிதை வரிகளில்...
ReplyDeleteமுடிவில் கொந்தளிக்கும் வரிகள்...
ReplyDeleteகருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்
ReplyDeleteஒரு பெண்ணின் இயலாமையைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
உயிரோட்டமுள்ள கவிதை!
அருமை கீதமஞ்சரி அக்கா.
அருமை அருமை
ReplyDeleteஇறுதி வரிகள் படித்ததும்
அதிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரமானது
மனம் தொட்ட அருமையான பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
மனதை தொட்ட வரிகள். அருமை.
ReplyDeleteகருப்பிக்கு இருக்கும் வீரம் பெண்களுக்கும் வர வேண்டும்! நல்லதொரு படைப்பு!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html
//மூக்குத்தியிட்டு என் மென்தவம் களைத்து//
ReplyDeleteகருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறிய பாதகத்தி// சொல்லால் அடித்த வரிகள்
நிறையப்பேர் கோழியின் நாசிதுவாரத்தில் சிறு குச்சிபோல குத்துவார்கள் அப்பத்தான் அடைகாக்காமல் உடனே அடுத்த ஈடு முட்டை இட துவங்குமென :((
சிலர் சில் நீரால் அடித்தும் கழுவுவாங்க பாவம்
அப்பா... கருப்பியின் வீரம் மட்டும் நமது பெண்களுக்கு இருந்தால்....
ReplyDeleteநல்ல கவிதை சகோ....
வணக்கம் சகோதரி...
ReplyDeleteகவியின் வரிகளில்
கண்கள் நிலைத்துவிட்டது .....
பாய்ந்து வா தென்றலே
பாவிகளை கண்டறிந்தால்
புயலாக மாறிப்போ
அங்கே அவர்களை
புதைகொண்டு வந்துவிடு
ReplyDeleteமூக்குத்தி சமாச்சாரம் தெரியாது. நுட்பமான கவனிப்பு எழுத்துக்களில் . பாராட்டுக்கள்.
இறுதி வரிகளின் தாக்கம் வெகுநேரம் நின்றது என் நெஞ்சில்!
ReplyDeleteகருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்
ReplyDeleteசெவிவழி நுழைந்து அவள் கருப்பையைக்
கொத்திக்குதறிக் கிழிக்கிறது
கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!
-தாக்கம் விளைவிக்கும் வரிகள்! நன்றீ!
//கொத்திக்குதறிக் கிழிக்கிறது
ReplyDeleteகருப்பியின் கோரக் கொக்கரிப்பு!/// அருமை
மனத்தை நெருடுகிறது.
ReplyDeleteகருப்பியின் கோரக் கொக்கரிப்பு வேண்டும்.
''...கள்ளிப்பால் புகட்டப்பட்டக் கடைசித் தருணத்திலும்கருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்செவிவழி நுழைந்து அவள் கருப்பையைக்கொத்திக்குதறிக் கிழிக்கிறது கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!...''
ReplyDeleteஅருமையான ஆக்ரோசம், ஆத்திரம் கருப்பி போல. சபாஷ்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலககம்.