10 April 2013

பெரிய மனுஷியாகிவிட்டாளாம்...


 
பதினெட்டு வயது பூர்த்தியாகிவிட்டதாம்!
பெரிதாய்த்தான் அலட்டிக்கொள்கிறாள்!
 
நேற்றைய நமைச்சல்கள் காற்றோடு போயினவாம்!
இன்றுமுதல் அவள் வகுத்த சட்டங்களே
ஏகமனதாய் அமலாக்கம் பெறுகின்றனவாம்.
 
சட்டப்படி பெரியமனுஷியாகிவிட்டாளாம்,
இட்டப்படி எதையும் செய்யலாமாம்,
கட்டப்பட்டு கட்டுக்குள் கிடக்கவேண்டாமாம்,
திட்டமிட்ட வாழ்க்கை தினப்படி அவளுடையதாம்!
 
அறைக்குள் வர அன்னைக்கும் அனுமதியில்லையாம்,
குறைகள் சொல்ல ஒருவருக்கும் உரிமையில்லையாம்.
நியதி மீறினால் நீதிமன்றம் செல்லுவாளாம்,
தனிமனித உரிமை பறிக்கப்படுவதாய் முறையிடுவாளாம்!
 
எதிர்பார்த்திருக்கவில்லை அவளிடம்!
அதிர்ந்து நின்றேன் நான்!
 
என்னவென்று சொல்வது இதை?
என் வளர்ப்பில் எங்கோ குறை…
கர்மவினை
கலாச்சாரச் சீர்கேடு
காலத்தின் கோலம்
ஊழியின் கூத்து
தலையெழுத்து
பூர்வஜென்ம பலாபலன்
 
அரற்றும் மனத்தை அமைதிப்படுத்த
இத்தனைப் பெயர்களில் ஏதொன்றும் அமையாதா என்ன?
ஆதங்கத்துடன் அலசிய வேளை,
அசரீரீ போல் அழைக்கிறாள்,
 
கலங்கிவிட்டாயா அன்னையே?
கல்லாக்கிக் கொள் மனத்தை,
அத்தனை எளிதில் விட்டுவிடமாட்டேன் உன்னை,
வாழ்நாள் முழுக்க வழிநடத்தவேண்டும் என்னை!
 
முரண் புரியாமல் முழித்தவளிடம்
இன்று ஏப்ரல் ஒன்று என்று
வெடித்துச் சிரிக்கிறாள் நிலா!
 
அதிர்ச்சி மீளாது அமர்ந்திருக்கிறேன் நான்! 

51 comments:

  1. நிலாவின் குறும்புகளில் இப்படியும் ஒன்றா? உங்கள் வளர்ப்பு தப்புச் செய்யாது என்று தெரிந்திருந்தாலும் மனதுள் அதிர்ச்சி பரவிய கணங்கள்...! என்ன சொல்ல? குறும்புக்காரி நிலாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. நானும் என்னமோ நினைத்தேன்... ஏப்ரல் 1...

    குறும்பு நிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நானும் படித்துவரும் போது கலங்கிப்போனேன்.

    //கலங்கிவிட்டாயா அன்னையே?
    கல்லாக்கிக் கொள் மனத்தை,
    அத்தனை எளிதில் விட்டுவிடமாட்டேன் உன்னை,
    வாழ்நாள் முழுக்க வழிநடத்தவேண்டும் என்னை!//

    பிறகு தான் நிம்மதி ஆச்சு!

    எல்லோரையும் இப்படி முட்டாளாக்கி விட்டாளே [விட்டீர்களே] பாராட்டுக்கள். நல்ல படைப்பு.

    ReplyDelete
  4. ஏன் இப்படி நானும் பயந்தே போனேன்.

    ReplyDelete
  5. முரண் புரியாமல் முழித்தவளிடம்
    இன்று ஏப்ரல் ஒன்று என்று
    வெடித்துச் சிரிக்கிறாள் நிலா!//

    விளையாட்டு தான் அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்ததே என்று விருப்பமான விசனத்துடன் பார்த்திருக்க
    அந்த சிறகை சிங்காரிக்க உன்னை தவிர யார் இருக்கிறார் என்று கூறி
    நெஞ்சினில் பால் வார்த்த்தோ அன்று நெஞ்சினில் முட்டி பால் குடித்த கன்றுகுட்டி
    அழகு அழகு ............

    ReplyDelete
  7. அடடா! ஏமாற்றி விட்டாளே நிலா என்னையும். பொல்லாத சுட்டி தான்.நானும் ஒரு கணம் தாயாகிப் போனேன்.

    ReplyDelete
  8. ஆரம்பத்தில் நான் அதிர்ந்ததும்
    முடிவில் குறும்பை ரசித்து
    ஆனந்தப் பட்டதும் நிஜம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

  9. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார்கள். வயதுக்கு வந்த தோழியோ நிலா.. ! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கீதா நலமா இருக்கீங்களா ..நெடு நாட்களுக்குப்பின் உங்கபதிவு ..பக்கம் வருகிறேன்


    ............

    ஒரு நொடியில் நானும் கலங்கித்தான் போனேன் ....கவிதை முடிவு பார்த்ததும் தான் நிம்மதியாச்சு (ஆனா இன்னும் படபடப்பு அடங்கலை )
    எங்க வீட்டிலும் வளர் பிறை நிலா ஒன்று இருக்கே :))

    ReplyDelete
  11. நிலாவின் சீண்டலில் தான் எத்தனை தவிப்பு!

    ReplyDelete
  12. ஏபரல் ஒன்றுகள் வருடமெல்லாம் வந்து கொண்டே இருகிறதுதான்.

    ReplyDelete
  13. நல்ல குறும்பு! நலமா!

    ReplyDelete

  14. வணக்கம்!

    தோழி கீத மஞ்சரியார்
    துவண்ட கவிதை படித்திட்டேன்!
    ஊழி என்றும்! உலகென்றும்
    உழுது விளைத்த வினையென்றும்
    ஆழி கண்ணில் பொங்கிவர
    அமைந்த அடிகள்! கவிஞன்யான்
    வாழி என்று வாழ்த்துகிறேன்
    வளமாய்த் தமிழைப் படைத்திடுக!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  15. முரண் புரியாமல் முழித்தவளிடம்
    இன்று ஏப்ரல் ஒன்று என்று
    வெடித்துச் சிரிக்கிறாள் நிலா!//

    நிம்மதிப் பெருமூச்சு! இரசித்தேன்! அருமை! நன்றி!

    ReplyDelete
  16. அட ஏப்ரல் 1 அன்று இப்படி ஒரு அதிர்ச்சியா.....

    நிலாவின் குறும்பு ரசிக்க வைத்தது!

    ReplyDelete
  17. ஆஹா! நல்ல அதிர்ச்சி வைத்தியம்தான்!

    ReplyDelete
  18. நானே பதறிப்போய் விட்டேன்..உங்கள் தாயுள்ளத்தை நினைத்து..கடைசியில் நல்ல வேலை, குறும்பு என்று சொல்லி விட்டீர்கள்...வாழ்த்துக்கள், உங்களுக்கும் நிலாவுக்கும்!

    ReplyDelete
  19. முரண் புரியாமல் முழித்தவளிடம்
    இன்று ஏப்ரல் ஒன்று என்று
    வெடித்துச் சிரிக்கிறாள் நிலா!///
    இதுதான் இன்ப அதிர்ச்சியோ ?

    ReplyDelete
  20. @பால கணேஷ்

    நிலாவின் குறும்பை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
  21. @திண்டுக்கல் தனபாலன்

    குறும்பு நிலாவை ரசித்ததோடு வாழ்த்தியமைக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  22. @NADINARAYANAN MANI

    வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி மணி.

    ReplyDelete
  23. @வை.கோபாலகிருஷ்ணன்

    என்னை முட்டாளாக்கிவிட்டாளே... என்ற ஆதங்கத்தை அப்படியே உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டேன். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்.

    ReplyDelete
  24. @Sasi Kala

    பிள்ளைகள்! வேறென்ன சொல்வது? :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா.

    ReplyDelete
  25. @கோமதி அரசு

    வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  26. @poovizi

    தங்கள் ரசனையான மறுமொழியை மிகவும் ரசித்தேன். நன்றி பூவிழி.

    ReplyDelete
  27. @மணிமேகலா

    ஒரு தாயின் தவிப்பை அதே உணர்வோடு உணர்ந்தமைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  28. @Ramani S

    தங்கள் வருகைக்கும் என் உணர்வுகளை உள்வாங்கிய இனியப் பின்னூட்டத்துக்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  29. @G.M Balasubramaniam

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  30. @angelin

    நலமே ஏஞ்சலின். உங்க அன்பான விசாரிப்புக்கு நன்றிப்பா.

    வளர்பிறை நிலாவிடமும் இதுபோன்ற குறும்புகள் கொப்பளிக்குமே... எங்களுக்கும் அறியத் தாங்க.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  31. @கோவை2தில்லி

    அம்மாக்களை சீண்டுவதில்தான் அவங்களுக்கு எவ்வளவு ஆனந்தம். பாருங்க.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி.

    ReplyDelete
  32. @விமலன்

    ஏப்ரல் ஒன்று வருடந்தோறும் வந்தாலும் ஏமாற்றுவித்தைகள் ஒரே மாதிரி இருக்கிறதில்லையே... அதுதான் பிரச்சனை. :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலன்.

    ReplyDelete
  33. @புலவர் இராமாநுசம்

    தங்கள் கனிவான விசாரிப்புக்கு நன்றி ஐயா. நான் நலமே. இனி வலைப்பூவுக்கு தொடர்ந்துவருவேன் என்று நம்புகிறேன்.தங்கள் உடல்நிலை தற்போது எப்படியுள்ளது?

    தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  34. @கவிஞர் கி.பாரதிதாசன் கி.பாரதிதாசன்

    தங்கத் தமிழால் வாழ்த்தும் தங்கள் கவியால் மிகவும் மகிழ்ந்தேன். நன்றி ஐயா.

    ReplyDelete
  35. @Seshadri e.s.

    வருகைக்கும் ரசித்துப் பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றி சேஷாத்ரி.

    ReplyDelete
  36. @வெங்கட் நாகராஜ்

    எப்படியெல்லாம் திட்டம் போடறாங்க...

    வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

    ReplyDelete
  37. @T.N.MURALIDHARAN

    அதிர்ச்சி வைத்தியம்தான். இன்னும் என்னென்ன அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகிறாளோ?

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளிதரன்.

    ReplyDelete
  38. @கிரேஸ்

    இனி முட்டாள்கள் தினத்தன்று எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் போலும்.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  39. @கவியாழி கண்ணதாசன்

    ஆம் ஐயா. முதலில் அதிர்ச்சி பிறகு இன்பம். :)

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  40. அன்புள்ள கீதமஞ்சரி

    வணக்கம். ஏப்ரல் 1 கவிதையா இது,

    வெகு நாட்களாகப் பணி இறுக்கத்தினால் பல வலைப்பதிவுகளுக்கு செல்ல முடியாத இயலாமை. இன்று சற்று ஓய்வு என் பதிவிற்கான தங்கள் கருத்துரைக்கு நன்றி தெரிவிக்க வந்தவன் அதிர்ந்துபோய் நிற்கிறேன். அதே சமயம் பிரமித்துப்போய் நிற்கிறேன்.

    ஒரு ஆராய்ச்சியாளனாக இருபதாண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டிருப்பவன் என்பதால் கூறுகிறேன். இக்கவிதை ஒரு ஆராய்ச்சிக்கட்டுரைக்கு நிரம்பிய பொருளாக நிற்கக்கூடிய தகுதி பெற்றிருக்கிறது.

    எளிமையும் அழகும் நேர்த்தியும் நுட்பமும் கண்ணை உறுத்தாத வண்ணமும் யாரும் விழையும் மனத்துடன் தேர்ந்தெடுக்கும் நிலையில் பின்னப்படும் ஒரு சேலையைப்போல இக்கவிதை பின்னப்பட்டிருக்கிறது. உங்கள் கவிதைகளின் சிறப்பே எளிமையும் எளிமையான சொற்களுமே.

    சைக்கிள் என்றொரு வலைப்பதிவு முன்பிருந்தது. சகோதரி ஒருவர் அதில் தன்னுடைய மன எண்ணங்களைக் கவிதையாக வடித்திருப்பார். அத்துணை அருமையான காட்சிப் புதையல்கள் அவை. அவரின் திருமணத்திற்குப் பின் அது நின்றுபோய்விட்டது. நிரம்பிய வருத்தம் எனக்குண்டு அதை நினைக்குந்தோறும்.

    அடுத்து கவிராயர் கவிதைகள். என்னை எங்கேயும் செல்லவிடாமல் அன்புக்கட்டுப் போடுபவை,

    இப்படியான வரிசையில் உங்களுடைய கவிதைகள். குறிப்பாக பெண்ணிய நிலையில் மிகமிக நுட்பமான உணர்வுகளை எளிதில் எளிய சொற்களில் வெளிப்படுத்துகிற வித்தகம் என்னைக் கட்டிப்போடுகிறது சகோதரி.

    ஒரு பெண்ணின் சுதந்திர வெளியை மகளைக் கொண்டு மகளின் சொற்களில் வெளிப்படுத்தி அதேசமயம் அதற்கான கட்டுக்களை அவிழ்க்கும் பணி என்றைக்கும் தாயக்கே உண்டு என்பதையும் பூடகப்படுத்திய பண்பாட்டு மீறாத பண்பையும் கண்டு வியந்து நிற்கிறேன்.

    இருப்பினும் எனக்கான எல்லையில் என்னை வழி நடத்தாவிடில் எனது வழியினை நானே தெரிவுசெய்துஎகாள்ளவும்ன பக்குவ்ததையும் நான் அடைந்துவிட்டேன் என்பதையும் உணர்த்தும் கவிதை.

    ஏப்ரல் கவிதையா இது?

    சிந்தனைகளைக் கிளறிப்போகும் கவிதையிது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. தெரிவு செய்து கொள்ளவுமான,,, என்று திருத்தி வாசிக்கவும்.

    இன்னொன்றும் குறிப்பிடுகிறேன். இதுபோன்ற தளத்தில் எழுதிய கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு வர முயலுங்கள். நல்ல கவிதைநுர்ல் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்கும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. @ஹ ர ணி

    தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயிருக்கிறேன் ஹரணி சார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சிறு குழந்தையின் கிறுக்கலைப் பார்த்து பிரமாதமான ஓவியம் வரைந்திருக்கிறாய் என்று சொன்னால் எப்படி நாணி மகிழுமோ அப்படி மகிழ்கிறேன் நானும். இந்த அளவுக்கு மனத்தில் எண்ணங்களைத் தூண்டவல்ல கவிதை என்று தாங்கள் சொல்லித்தான் தெரிகிறது எனக்கு. கவிதைத் தொகுப்பு வெளியீடு பற்றிய தங்கள் உற்சாகமூட்டும் வரிகளால் எழுத்தின் மீதான என் பொறுப்புணர்வு இன்னும் பன்மடங்கு கூடுகிறது. எல்லாவற்றுக்குமாய் இதயம் நிறைந்த நன்றி நவில்வதைத் தவிர வேறொன்றும் அறியேன். நன்றி சார்.

    ReplyDelete
  43. குறும்பு நிலா :)

    ReplyDelete
  44. @ரிஷபன்

    நிலவின் குறும்பை ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ரிஷபன் சார்.

    ReplyDelete
  45. ஒளி வீசும் நிலவு மனதை மயக்கியது..

    வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  46. இது தான் தங்களின் வலைப்பூவுக்கு என்னுடைய முதல் வருகை.வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி.

    என்னடா... ! இது பிள்ளைகள் அமெரிக்கா பாணியில மாறி விட்டார்களா...? என ஒரு நிமிடம் பயந்து விட்டேன். நம்ம நிலா நம்ம நிலா தான். குறும்பு அழகோ அழகு...!

    ReplyDelete
  47. அன்பின் கீத மஞ்சரி - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - ஏப்ரல் முதல் தேதியினைப் பயனபடுத்தி -பல பெயர்களை ஒதுக்கித் தள்ள முயல்கிறாளே ! - கருத்து நன்று - முடிதத விதமும் நன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  48. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
  49. அன்பு தமிழ் உறவே!
    ஆருயிர் நல் வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 2"
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.