Showing posts with label நிலா பக்கம். Show all posts
Showing posts with label நிலா பக்கம். Show all posts

10 April 2013

பெரிய மனுஷியாகிவிட்டாளாம்...


 
பதினெட்டு வயது பூர்த்தியாகிவிட்டதாம்!
பெரிதாய்த்தான் அலட்டிக்கொள்கிறாள்!
 
நேற்றைய நமைச்சல்கள் காற்றோடு போயினவாம்!
இன்றுமுதல் அவள் வகுத்த சட்டங்களே
ஏகமனதாய் அமலாக்கம் பெறுகின்றனவாம்.
 
சட்டப்படி பெரியமனுஷியாகிவிட்டாளாம்,
இட்டப்படி எதையும் செய்யலாமாம்,
கட்டப்பட்டு கட்டுக்குள் கிடக்கவேண்டாமாம்,
திட்டமிட்ட வாழ்க்கை தினப்படி அவளுடையதாம்!
 
அறைக்குள் வர அன்னைக்கும் அனுமதியில்லையாம்,
குறைகள் சொல்ல ஒருவருக்கும் உரிமையில்லையாம்.
நியதி மீறினால் நீதிமன்றம் செல்லுவாளாம்,
தனிமனித உரிமை பறிக்கப்படுவதாய் முறையிடுவாளாம்!
 
எதிர்பார்த்திருக்கவில்லை அவளிடம்!
அதிர்ந்து நின்றேன் நான்!
 
என்னவென்று சொல்வது இதை?
என் வளர்ப்பில் எங்கோ குறை…
கர்மவினை
கலாச்சாரச் சீர்கேடு
காலத்தின் கோலம்
ஊழியின் கூத்து
தலையெழுத்து
பூர்வஜென்ம பலாபலன்
 
அரற்றும் மனத்தை அமைதிப்படுத்த
இத்தனைப் பெயர்களில் ஏதொன்றும் அமையாதா என்ன?
ஆதங்கத்துடன் அலசிய வேளை,
அசரீரீ போல் அழைக்கிறாள்,
 
கலங்கிவிட்டாயா அன்னையே?
கல்லாக்கிக் கொள் மனத்தை,
அத்தனை எளிதில் விட்டுவிடமாட்டேன் உன்னை,
வாழ்நாள் முழுக்க வழிநடத்தவேண்டும் என்னை!
 
முரண் புரியாமல் முழித்தவளிடம்
இன்று ஏப்ரல் ஒன்று என்று
வெடித்துச் சிரிக்கிறாள் நிலா!
 
அதிர்ச்சி மீளாது அமர்ந்திருக்கிறேன் நான்! 

19 July 2012

மடந்தை நிலா

 

நிலவென்றொரு பெயர்
தமிழுக்கு உண்டாம்;

நிலவின் தன்மையும்தமிழின் இனிமையும்,
நிழலாய் நல்லொழுக்கமும்,
நீங்காத நகையுணர்வும்
நிலைகொண்ட உனக்கிட்டேன்,
அப்பெயரினை, அன்பு மகளே!
வெண்ணிலா!
சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
உன் உள்ளமோ, பாசத்தின் வெள்ளமடி!

என்னைத் தாயாக்கிய பெண்ணே,
நீயும் தாயாகிறாய்,
என்னைத் தாலாட்டும் தருணங்களில்!

கணினிப்பாடம் கற்பிக்கிறாய் எனக்கு,
கண்டிப்பான ஆசிரியையாய்!

கணிதம் கற்றுக்கொள்கிறாய் என்னிடம்,
கவனம் சிதறா மாணவியாய்!
 தலைவலித்தைலம் தடவும்
தளிர்விரல்களில் காண்கிறேனடி,
உன்னை ஓர் தாதியாய்!

குழம்பிய மனநிலையிலும், குமுறி அழும்போதும்,
இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
இதுவும் கடந்துபோகுமென்றே
ஆறுதல் சொல்கிறாய்,
அனைத்தும் அறிந்த தோழிபோல்!

பிறர் என்னைப் பரிகசித்தாலும்
பொறுக்கமாட்டாமல் பாய்ந்தெழுகிறாய், என்
பாதுகாவலனென பதவியேற்று!

சுட்டித் தனம் செய்யும் குட்டித்தம்பியிடம்
அம்மாவை வருத்தாதேயடா என்று
அவ்வப்போது அறிவுரைக்கும்
ஆசானாகவும் ஆகிறாய்!

பள்ளியிலே சிறப்புற்று  பெற்றவரை முன்னிறுத்தி
பெருமிதத்தில் எனையாழ்த்தி
பெற்ற பலனைப் பெறச்செய்கிறாய்!

 'இவளல்லவோ பெண்!' என்று
அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
பெறுகிறேனடி  பெண்ணே, உன்னால் பேரின்பம்!
இத்தனையும் செய்துமுடித்தபின்
போனால் போகிறதென்று
ஒருநாளுக்கு ஓராயிரம் முறை
அம்மா, அம்மா என்றழைத்து,
என் செல்ல மகளுமாய் வலம் வருகிறாய்!

எங்கிருந்தோ வந்தான், பாரதிக்கோர் கண்ணன்;
என் வயிற்றில் வந்துதித்தாய்,
எனையாள்கிறாய் உன் அன்பால்!

பதினாறாம் ஆண்டில் பாதம் பதிக்கும் உனக்கு
பதினாறு பேறும் தவறாமல் சேரும் என்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே! பல்லாண்டு நீ வாழி!
******************

(இரண்டு வருடங்களுக்கு முன் நிலாவின் பதினாறாம்  பிறந்தநாளுக்கு அம்மாவின்  பரிசென  எழுதி  தமிழ்மன்றத்தில்  பதிவிட்ட கவிதை இது. )

படம் உதவி: இணையம். 

12 July 2012

மங்கை நிலா



'என்ன பெண் இவள்!'
என்ற அங்கலாய்ப்புடன்
ஆரவாரமாய் விடிகிறது,
என் ஒவ்வொரு காலைப்பொழுதும்!

தலைக்குமேல் வளர்ந்த பின்னும்,
தலைவாரத் தெரியவில்லை என்று
கடுகடுத்தால் போதும்;
தன் இடுப்பளவுக் கூந்தலை
இரண்டேகால் அங்குலமாய்க்
கத்தரித்துவிடுவேன் என்றே,
கலவரப்படுத்துகிறாள் என்னை!

வெந்நீர் கூட வைக்கத் தெரியவில்லையென
வேகமாய்ச் சாடினால்
சமையற்கலை அறிந்தவனை மணமுடிப்பேன் என்று
  சாவகாசமாய்ச் சொல்கிறாள்!

வாசல் தெளித்து, கோலமிடத்
தெரியவில்லையே உனக்கு! என்றால்,
'அடுக்குமாடிக் குடியிருப்புக்கு,
வாசற்கோலம் எதற்கு?' என்கிறாள்!

'எதிர்ப்பேச்சு பேசாதே!' என்றால்,
'ஏனம்மா பேசக்கூடாது?' என்று,
எதிர்க்கேள்வி கேட்கிறாள்!

கொந்தளிக்கும் கோபத்தோடு சொல்கிறேன்,
'நீ என் அம்மாவிடம் வளர்ந்திருக்கவேண்டும்;
அப்போது தெரிய வந்திருக்கும் அத்தனைக் கலைகளும்!'

ஆசையாய் என் தலைகோதிச் சொல்கிறாள்,
'பாவம் அம்மா, நீ! அன்பு மகளாய் வளராது,
அருமை மாணவியாய் வளர்ந்திருக்கிறாய்!
அன்னையின் வடிவில் ஓர்
ஆசிரியையைப் பெற்றிருக்கிறாய்!

நானோ,
அன்னையெனக் காண்பது, என்
அன்புத் தோழியை அன்றோ?'

தோழி மட்டுமா?
என் கழுத்தைக் கட்டிக்கொண்டு,
'என் செல்ல அம்மா! என் பட்டு அம்மா!' என்று
என்னைக் கொஞ்சும் தருணங்களில்
தன் மகவாயன்றோ மாற்றிவிடுகிறாள்,
இப்பொல்லாதப்பெண்!

'என் அருமை மகள் இவள்!'
என்ற இறுமாப்பு மேலோங்க,
அழகாய் விடைபெறுகிறது,
என் ஒவ்வொரு நாளும்!
 ******************

(பேதை, பெதும்பைப் பருவங்களில் நிலாவின் சேட்டையை ரசித்து மகிழ்ந்த அனைவரும் மங்கை, மடந்தைப் பருவங்களிலும் அவளை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். மங்கை என்பது பெண்களின் 12 முதல் 14 வயது வரையிலான பருவம்.)

படம் உதவி: இணையம்

13 June 2012

சின்ன நிலாவின் சேட்டைகள் 4



(படம் உதவி:இணையம்)


வேடிக்கை விளையாட்டுகள் வழியே
மழலை மனங்களை வசீகரிப்பது
மன்னை  மாமாவின் மனமுவந்த வாடிக்கை.


செப்படி வித்தை போல் சோடாமூடியொன்று
தொலைந்தும் மீண்டும் கைவரப்பெற்றும்
நிலாவைக் கவரும் முயற்சியிலிருந்தது அன்று.


சூ…. என வீசப்படும் சோடாமூடி
கண்மறைவாய் கக்கம் புகும் ரகசியம் அறியாதபோதும்,
கைவரும் அதிசயம் ஆராயப் புகுந்தாள்.
ஐந்து முறை அவதானித்தவள், ஆறாம் முறை
தானே பிடுங்கி எறிந்தாள் தப்படி தூரம். 
இப்போ வரவழைங்க, பார்ப்போம் 
கண்முன் கிடந்தும் கைக்கொணரவியலாத மாமா ,
காண்போரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார், 

இவள்மகா ஜாலக்காரி! 
 ஜாலம்? புரியாமல் சிரிக்கிறாள் நிலா. 
 *****************************************************




ஐ லவ் யூ....

 என ஆங்கிலத்தில் எழுதி,
இரண்டாம் வகுப்புச் சிறுமிக்கு
இரண்டாம் வகுப்புச் சிறுவனால்
கொடுக்கப்பட்ட ஒரு காகிதம்
காதல்கடிதமெனவே கருத்தில் கொள்ளப்பட்டு
கடுந்தண்டனைக்கு ஆளானது
கட்டுப்பாடு நிறைந்த பள்ளிநிர்வாகத்தால்!


சிறுமியின் தாயார் சீறியதில்
சிறுவனவன் சின்னாபின்னப்படுத்தப்பட்டான்.
சிறுவனின் அம்மாவிடம்
பிள்ளையின் லட்சணம் பரிகசிக்கப்பட,
முகம் கருத்து தலை கவிழ்ந்தாள்.

தண்டனைகளுக்கும், பிராயச்சித்தங்களுக்கும் பிறகு,
பள்ளியில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்காய்
பரிதாபங்கொண்டாள் நிலா.

 தோழியின் செயல் முட்டாள்தனமென்றாள்.
என்னிடத்தில் ஒருவன் இப்படிக்கொடுத்திருந்தால்
என்ன செய்திருப்பேன் தெரியுமா?


என்ன செய்திருப்பாய்?

பதைப்புடன் கேட்கப்படும் கேள்விக்கு
படுநிதானமாய் பதில் சொல்கிறாள்.

ஐ லவ் யூ என்றெழுதி ஒரு தாளை அவன் கொடுத்தால்,
ஐ டோன்ட் லவ் யூ என்றெழுதி 
இன்னொரு தாளை நான் கொடுத்திருப்பேன்.
காகிதத்துக்கா பஞ்சம்?
கவலைப்படலாமா அம்மா அப்பா நெஞ்சம்?

ஏழுவயதுக்காரியின் எண்ணமுதிர்ச்சி கண்டு
எதிர்காலக் கவலைகள் யாவும்
ஏறக்கட்டப்பட்டது அன்றே.

*******************************************

5 June 2012

சின்ன நிலாவின் சேட்டைகள் - 3



ஞானசம்பந்தம் சொல்
யான
இல்லம்மா, ஞான.. சொல்..
யான..
ஞ்ஞா.. ஞ்ஞாசொல்.
ய்யா.. ய்யா
ப்ச்!
அலுத்துப் போய் கைவிடப்பட்டது
அன்றொருநாள் கற்பித்தல் வகுப்பு.

பின்னொருநாள் யாரிடமோ
பெருமையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறாள் நிலா.
எனக்கு ரெண்டு தாத்தா.
ஒருத்தர் ஜேபால் தாத்தா.
இன்னொருத்தர் மறைமலை தாத்தா.

என்ன மறைமலை தாத்தாவா?

ஆமாம், அப்படிதான் நான் அவருக்குப் பேர் வச்சிருக்கேன்.

சிக்கலுக்கு வெகுவிரைவில் தீர்வு கண்டுவிட்டாள்.
மறைமலைநகரில் வசித்த தாத்தாவை
மறைமலை தாத்தாவாக்கிவிட்டாள்.
தமிழுக்குச் சேவை செய்யும் தாத்தாவுக்கு
சாலப் பொருந்திப் போனது பேத்திவைத்தப் பெயர்.

ஞகரம் வந்தபின்னும் ஞானம் வந்தபின்னும்
தனக்குரித்தானத் தாத்தாவின் பெயரை
மாற்றிச்சொல்வதில் உடன்பாடில்லை
நிலாவுக்கு இன்றுவரையிலும் கூட!
***************************** 


அஜய், காலையில் ஏண்டா அழுதே? 
ஒரு பையன் என்னை அடிச்சிட்டான், நிலா. 
எந்த க்ளாஸ்டா? 
என் க்ளாஸ்தான். 
நான் சொன்னேன்னு சொல்லி 
நாளைக்கு நீ போய்
ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டிலே உக்காந்துக்கோ! 
ம்!

விளையாட்டா? வினையா?
விளையாட்டினூடே விளைந்த பேச்சு கேட்டு
விதுக் என்றது மனம்.

அன்றுதான் எல்கேஜியில் சேர்ந்த
அரைநாள் அனுபவக்காரி,
அடுத்தவீட்டுப் பையன் அழுகை போக்க,
அடுத்த வகுப்புக்கனுப்பும் தெனாவெட்டுக் கண்டு
திடுக்கிடாமல் வேறென்ன செய்வது?

************************************
படங்கள் உதவி: இணையம்