17 September 2015

கான் ஊடுருவும் கயமை




நம்முடைய அடிப்படைத் தேவைகள் என்னவென்று கேட்டால் உணவு, உடை, உறைவிடம் என்போம். அந்த அடிப்படைத் தேவைகளுக்கு ஆதாரமான இந்தப் பூவுலகின் நலத்தில் அக்கறை செலுத்துகிறோமா? ஓசோன் படலத்தில் ஓட்டை, புவி வெப்பமயமாதல், நிலநடுக்கம், சுனாமி, சூறைக்காற்று, மிதமிஞ்சிய பனிப்பொழிவு என இயற்கை சீற்றங்கள், பருவந்தப்பிப்போதல் போன்ற சூழலியல் மாறுபாடுகளால் நாம் என்னென்னத் துயரங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்பதைக் கண்கூடாகக் கண்டறிந்தபிறகும் கூட சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நம்மிடத்தில் பெருகியதா என்றால் பெரும்பாலும் இல்லையென்பதையே பதிலாய்த் தரவேண்டியதொரு இழிநிலை. இப்படியான ஒரு சூழ்நிலையில் மழை தரும் காடுகளை  அழித்து நம் அழிவுக்கு நாமே குழிதோண்டிக்கொள்வதை  அறியாமை என்பதா? அலட்சியம் என்பதா? அசட்டுத்தனம் என்பதா?  அடிமுட்டாள்தனம் என்பதா?

பூமியின் மொத்த நிலப்பரப்பில் காடுகள் வெறும் முப்பது சதவீதம்தான். அதையும் விட்டுவைக்க மனமில்லாமல் வேரறுத்துக்கொண்டிருக்கிறோம் நாம். பூமிப்பரப்பில் வாழும் பல்லுயிர்களுள் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் காடுகளில்தான் வாழ்கின்றன. அதனால்தான் கானுயிர் வளத்தில் கருத்தை வைப்பது அவசியமாகிறது.  

ஒவ்வொரு வருடமும் சுமார் எழுபத்தைந்தாயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்படுகின்றன என்கிறது புள்ளிவிவரம். எளிதாகப் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் ஒரு நிமிடத்தில் அழிக்கப்படும் காடுகளின் பரப்பளவு இருபது கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவுக்கு சமம். இப்படியே போனால் எழுநூறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக உலக வரைபடத்திலிருந்து காடுகள் காணாமல் போய்விடும்.. மற்றக்காடுகளோடு ஒப்பிடுகையில் மழைக்காடுகளின் பரப்பு மிகவும் சொற்பம் என்பதால் அதையொழிக்க ஒற்றை நூற்றாண்டு போதும்.

காடுகளை அழிப்பதன்மூலம் இயற்கைச்சமன் சீர்குலைந்துபோவதைப் பற்றியோ, உணவுச்சங்கிலி அறுபட்டுப்போவது பற்றியோ சிந்தனைகள் நமக்குள் எழுந்ததுண்டா? கவலைகள் பிறந்ததுண்டா? சக மனிதவுயிர்களின் உரிமையையும் உணர்வையும் மதிக்கத் தெரிந்தவர்களே, மற்ற உயிரினங்கள் பற்றியும் அக்கறை கொள்வார்கள். சுயநலத்தின் பிடியில் சிக்கி சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் நாசகாரர்களுக்கோ புத்தி செயலிழந்து வெகுகாலமாகிவிட்டது. காட்டுவளம் எல்லாம் நாட்டுவளத்தை மேம்படுத்தும் நற்காரணிகள் என்ற எண்ணமெல்லாம் மறைந்து, காடுகள் யாவற்றையும் தனிமனிதச் சொத்துப்போல் பாவிக்கும் தன்னலப்போதையே தலைக்குள் வீற்றிருக்கிறது.  

வனங்களை அழிப்பதன் மூலம் வானுயர்ந்த மரங்களை மட்டுமல்ல, வனஞ்சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஜீவராசிகளையும் அழித்துக்கொண்டிருக்கிறோம். நாமறிந்த, அறியாத மற்றும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத பல்லுயிர்களையும் மெல்ல மெல்ல இழந்துகொண்டிருக்கிறோம். இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருபத்தெட்டாயிரம் உயிரினங்கள் அழிந்துபோகநேரிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி எல்லாவற்றையும் அழித்துவிட்டு மனிதன் மட்டும் ஏகபோகமாக வாழ்ந்துவிடமுடியும் என்று எவராவது கற்பனைக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தால் அதை முற்றிலும் தகர்த்துவிடவேண்டிய தருணம் இது.. காடுகளை இழந்தபின், மழையற்று, வளமற்று, விளையும் பயிரற்று, விலங்கற்று, பறவையற்று, பூச்சிகளும் புழுக்களுமற்று, மரமற்று, அண்ட நிழலற்று, பார்க்குமிடமெல்லாம் பாலையென வறண்டுகிடக்கும் பூமியின் வெம்மைத்தகிப்பில் உண்ணக் கவளச்சோறின்றி, தொண்டை நனைக்கத் துளி நீரின்றி, நாவறண்டு மரணிக்கப்போகும் மனிதகுலத்திற்கு, எலும்புகள்கூட எஞ்சப்போவதில்லை என்பதுதான் எதார்த்தம்.

வையம் வாழ, வையத்து உயிர்கள் வாழ்வாங்கு வாழ, கான் ஊடுருவலைத் தடுப்பதே நம் தலையாய கடமையாகும். கான் ஊடுருவும் கயமை எந்நாளும் மன்னிக்கத்தக்கதன்று, காரணம் எதுவாக இருப்பினும்! காடுவிட்டு விலங்குகள் வெளியேறக் காரணம் என்ன? யார்? யோசித்துப் பார்த்திருக்கிறோமா? நம்மைப்போல் நாடுபிடிக்கும் பேராசை விலங்குகளுக்கில்லை என்பது நாமறிந்ததே.

விளைநிலங்களை அழித்து வீடுகளையும், காடுகளை அழித்து விளைநிலங்களையும் உருவாக்கும் அபத்தங்களும், காட்டையொட்டிய பகுதிகளில் குடியிருப்புகளை விரித்துக்கொண்டே போவதும், வனப்பகுதிகளின் ஊடே சாலை அமைத்துப் வாகனப்போக்குவரத்தைப் பெருக்குவதும், அமைதியான இயற்கையான சூழலின் காற்றை வாகனப்புகைகளால் மாசுபடுத்துவதும், உரத்த சத்தமும் ஒலியும் எழுப்பி வனவிலங்குகளிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி அவற்றின் இயல்பு வாழ்க்கையைக்கெடுப்பதுமான நமது நியாயமற்ற செய்கைகளின் வெளிப்பாடுதான் காடுவாழ் விலங்குகளின் வெளிநடப்புகள்.

காட்டுயிரிகளின் வாழ்க்கையில் நாம் குறுக்கிடுகிறோம் என்ற எந்தக் குற்றவுணர்வுமில்லாது காட்டுக்குள் நாம் அத்துமீறி நுழையலாம்.. ஆடலாம், பாடலாம், ஆர்ப்பாட்டம் பண்ணலாம், குப்பைகளைப் போடலாம், நெகிழிப்பைகளை நெடுக எறியலாம், குடிக்கலாம், கும்மாளமிடலாம், மதுப்புட்டிகளை வீசியெறிந்து உடைக்கலாம், மரங்களை வெட்டலாம், மான்களை வேட்டையாடலாம். மனம்போல் எதுவும் செய்யலாம். ஆனால் ஒற்றை விலங்கு தப்பி ஊருக்குள் வந்தாலும், ஓட ஓட விரட்டி, அடித்து உதைத்து அதன் உயிரைப்பறித்து வெற்றுச்சடலஞ்சுமந்து வெற்றிச்செருக்கோடு ஊர்வலம் வருவது எந்த வகையில் நியாயம்? நாகரிகமடைந்த இனம் என்று சொல்லப்பட்டாலும் மனிதகுலத்தின் அடிமனத்தில் மிச்சசொச்சமிருக்கும் ஆதிகால வேட்டைவெறியும் குரூரமும், குருதிவேட்கையும் ஆவேசமாய்க் கிளம்பித் தங்களை வெளிப்படுத்தும் அநாகரிகத்தருணங்கள் அவை என்றுதான் சொல்லவேண்டும்.

காடுகளை அழிப்பதில் காட்டுத்தீக்குப் பெரும் பங்குண்டு. அந்தக் காட்டுத்தீயை உருவாக்குவதில் மனிதகுலத்துக்கு மாபெரும் பங்குண்டு. வனப்பகுதிகளுள் குடித்து கும்மாளமிட்டுவிட்டுக் கிளம்பும்போது மதுப்புட்டிகளை அங்கேயே வீசிவிட்டு வருவதைப் போன்ற ஆபத்தான, அராஜகமான, கீழ்மைத்தனமான செயல் வேறெதுவும் இருக்கமுடியாது. கடுமையான கோடையில் அந்தக் கண்ணாடிச் சில்லுகள் உருப்பெருக்கிகளைப் போல செயல்பட்டு, சூரிய வெப்பத்தை உள்வாங்கி காய்ந்த புற்களில் தீப்பொறியை உருவாக்குகின்றன. தழல் வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ எனப் பாரதி பாடியதைப் போன்று அந்த அக்கினிக்குஞ்சொன்று போதும்… அனலில் வெந்து தணிந்துவிடும் காடு.

அதுமட்டுமா, உடைந்த கண்ணாடிச்சில்லுகள், யானை, சிங்கம், புலி, சிறுத்தை போன்ற காடுவாழ் விலங்குகளின் மென்பாதங்களில் காயங்கள் உண்டாக்கி, சீழ் வைத்து, புழுக்கள் மொய்த்து, அழுகி கொஞ்சம் கொஞ்சமாய் நரகவேதனையோடு போராடிமடியும் வேதனையை நினைத்துப் பார்க்கவும் நெஞ்சம் வலிக்கிறது. யானைடாக்டர் சிறுகதையை வாசித்தவர்களால் யானை போன்ற பெரும் விலங்குகளுக்கு மனிதர்களின் சிறுமைப்பண்புகளால் உண்டாகும் ஆபத்துகளையும் அவதிகளையும் அறிந்துணரமுடியும்.

ஒரு கன்றை வளர்த்து செடியாக்கலாம், மரமாக்கலாம்.. ஒரு தோட்டத்தை உருவாக்கலாம்.. ஒரு தோப்பை உருவாக்கலாம். ஆனால் மனித முயற்சியால் ஒருபோதும் காடுகளை உருவாக்கமுடியாது. இந்த உண்மையை உணர்ந்தால் மாத்திரமே காடுகளை அழிப்பதைத் தவிர்க்கவும் தடுக்கவுமான முயற்சிகளில் நம்மால் ஈடுபடமுடியும்.

மரங்களை வெட்டி கானகங்களை அழிப்பவர்களுக்கு கிஞ்சித்தும் சளைத்தவர்களில்லை கான் ஊடுருவும் கயவர்கள். கானுயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும். கானும் கானுயிரும் அழிக்கப்படுவதன் பின்னணியில் உள்ள ஆபத்து குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பெருக்கவேண்டும். காடுகளின் அவசியத்தை உணர்த்தவேண்டும். காகிதங்களைப் பயன்பாட்டிலிருந்து குறைத்து மாற்று ஏற்பாட்டுக்கு மாறவேண்டும். நம்மாலியன்ற அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து சூழலை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும். குழந்தைகளுக்கு வளரும் பருவத்திலேயே சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சார்ந்த புரிதலை உண்டாக்கவேண்டும். நாம் ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்க ஆரம்பித்தாலே போதும்… இன்னலில்லா உலகம் இனிதாய் உருவாகும். 
 
*******

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து எழுதப்பட்ட இக்கட்டுரை, என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன். – கீதா மதிவாணன்

60 comments:

  1. நம் வாழ்வில் எவ்விதத்திலும் தலையிடாத வனவிலங்குகளின் வாழ்வில் தலையிட்டு அவற்றின் வாழ்நிலையை மாற்றுகிறோம். காட்டை நாம் அழிப்பதால், அவை நாட்டினுள் படையெடுக்கின்றன. அப்போதும், நாம் தான் அவற்றிற்கு எமனாகிறோம். கொடிய விலங்குகள் ஆறறிவு படைத்த நாமா ? அல்லது ஐந்தறிவு படைத்த வனவாழ் உயிரினங்களா ? சற்றே சிந்தித்து நாம் செயலாற்ற வேண்டும்.

    அருமையான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் விரிவான செழுமையான கருத்துகளுக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி தோழி தமிழ்முகில்.

      Delete
  2. அருமையான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையைப் பாராட்டியதற்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  3. அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  4. அருமை சகோதரி... மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள்...

    Updated...

    Visit : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தனபாலன். போட்டிப்பதிவுகளோடு இக்கட்டுரையும் இடம்பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.

      Delete
  5. கானகங்களை அழிப்பதால் விலங்கினத்துக்கு மட்டுமா அழிவு?..
    இயற்கை வளங்களும் மழைப் பொழிவுமே அற்றுப் போகுமே..
    அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை!

    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இளமதி.. அந்த ஆதங்கம்தான் எழுதத்தூண்டியது. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி தோழி.

      Delete
  6. மரமும் செடி கொடியும் பறவை விலங்கு இனங்களும் மறந்தும் மண்ணை நீரைக் காற்றைக் கெடுப்பதே இல்லை. தாவரத்தின் தயவால் வாழும் மனிதன் மட்டுமே தயக்கமின்றி இயற்கை அன்னையின் இதயம் கிழிக்கிறான். மாறிட நிலை மாற்றிட இதுபோல் சிந்தனை வரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா. தங்கள் வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      Delete
  7. //ஒரு நிமிடத்தில் அழிக்கப்படும் காடுகளின் பரப்பளவு இருபது கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவுக்கு சமம்.// மயக்கம் வருகிறது கீதமஞ்சரி.
    நன்றாக மனதைத் துளைக்கும் கேள்விகள்! துளைக்காவிட்டால்..
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. புள்ளிவிவரம் பார்த்து எனக்கும் மலைப்புதான். இந்த வேகத்தில் போனால் என்னாவது... எதிர்காலத்தில் நம் சந்ததிகளுக்கு எதை விட்டுவைத்துவிட்டுப் போகப்போகிறோம்? கவலைதான் மிஞ்சுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கிரேஸ்.

      Delete
  8. ஒவ்வொரு வருடமும் சுமார் எழுபத்தைந்தாயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்படுகின்றன///
    கேட்கவே பயமாக இருக்கிறது தோழி. நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. வாழ்த்துக்கள் கீதா.

    ReplyDelete
    Replies
    1. இக்கட்டுரையால் ஓரளவாவது மக்களிடத்தில் விழிப்புணர்வு உண்டானால் அது ஒன்றே போதும். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி சசி.

      Delete
  9. வழக்கம்போல் அசத்தல்...
    வெற்றிபெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மது.

      Delete
  10. வணக்கம் சகோ !

    அழகான வார்த்தைப் பிரயோகங்கள் ஆங்கிலம் கலக்காத வார்த்தைகள் அழகு தமிழ் மனம் பூரித்துப் போகின்றேன்..! கடந்த ஆண்டு '' காடு'' என்னும் ஒரு படம் பார்த்தேன் அந்தக் காட்சிகளும் கண்ணுக்குள் ஓடின உங்கள் கட்டுரை வாசிக்கையில் அத்தனையும் அருமை சகோ

    போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழக் வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலம் கலவாத தமிழ் என்று குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி சீராளன்.

      Delete
  11. காடுகளை இழந்தபின், மழையற்று, வளமற்று, விளையும் பயிரற்று, விலங்கற்று, பறவையற்று, பூச்சிகளும் புழுக்களுமற்று, மரமற்று, அண்ட நிழலற்று, பார்க்குமிடமெல்லாம் பாலையென வறண்டுகிடக்கும் பூமியின் வெம்மைத்தகிப்பில் உண்ணக் கவளச்சோறின்றி, தொண்டை நனைக்கத் துளி நீரின்றி, நாவறண்டு மரணிக்கப்போகும் மனிதகுலத்திற்கு, எலும்புகள்கூட எஞ்சப்போவதில்லை என்பதுதான் எதார்த்தம்.//

    உண்மை.
    காடுகளை அழிப்பதால் உண்டாகும் நீங்குகளை அருமையாக சொல்லிவிட்டீர்கள் கீதமஞ்சரி.
    விலங்குகளை எவ்வளவு கஷ்டபடுத்துகிறோம் என்பதை மக்கள் உணர வேண்டும். வாழ்த்துக்கள் அருமையான கட்டுரைக்கு.
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி கோமதி மேடம்.

      Delete
  12. தீங்குகளை என்று வாசிக்கவும்.

    ReplyDelete
  13. அவுஸ்ரேலியாவில் சில சட்டங்களை உருவாக்கி காட்டுவளங்களை பாதுகாக்கின்றார்கள் .அத்துடன் தேசிய மரங்கள் இரண்டு வீட்டு வளவில் வளர்க்க வேண்டும் என்ற சட்டமும் உண்டு .பதிவுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. வீட்டுக்கு வீடு மரம் வளர்த்தாற்போலவும் ஆச்சு. தேசிய மரங்கள் அழியாமல் காப்பது போலவும் ஆச்சு.. மக்களுக்கு விழிப்புணர்வு தானே வரவில்லையெனில் விதிமுறைகள் மூலம் உண்டாக்குவதும் நல்லதுதான். கருத்துக்கு மிகவும் நன்றி.

      Delete
  14. மழை தரும் காடுகளை அழித்து நம் அழிவுக்கு நாமே குழிதோண்டிக்கொள்வதை அறியாமை என்பதா? அலட்சியம் என்பதா? அசட்டுத்தனம் என்பதா? அடிமுட்டாள்தனம் என்பதா?
    சாட்டையடி கேள்விகள்! கானகத்தைக் காக்க வேண்டிய விழிப்புணர்வை ஊட்டும் அருமையான கட்டுரைக்குப் பாராட்டுக்கள் கீதா! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. கட்டுரை பற்றிய கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அக்கா.

      Delete
  15. அருமையான விழிப்புணர்வுப் பதிவு சுற்றுச் சூழலை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் குழந்தைகட்கு எத்தனை உண்மை நன்றி. வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி இனியா.

      Delete
  16. சிந்தனையைத் தூண்டும் அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை. வெற்றிக்கு என் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  17. விரிவாய்ச் சுற்றுச் சூழலுக்குக் கேடு பற்றி அலசிய கட்டுரை . மிக நன்று . ஆசிய ஆஃப்ரிக்கக் கண்டங்களில் வாழ்பவர்கள் தான் அறியாமை அலட்சியம் காரணமாக உலகத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கட்டுரை பற்றியக் கருத்துக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  18. மிக அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை கீதா. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள். :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தேனம்மை.

      Delete
  19. விழிப்புணர்வை ப்பற்றி மிக மிக அருமையாக ,செம்மையாக எழுதியுள்ளீர்கள்கீதா வெற்றி பெற வாழ்த்துக்கள்-=சரஸ்வதிராசேந்திரன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசித்துக் கருத்திட்டமைக்கும் மிகுந்த நன்றி மேடம்.

      Delete
  20. கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் வென்றமைக்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. சற்றுமுன்தான் முடிவுகளைப் பார்த்தேன். வருகைக்கும் வெற்றியறிவித்து வாழ்த்துகளை வழங்கியமைக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  21. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..மா,...

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றி கீதா.. கரும்பு தின்னக்கூலி போல் கட்டுரை எழுதும் வாய்ப்பும் கிட்டி பரிசும் கிட்டியிருப்பதை என்னவென்று சொல்ல? விழா ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரின் முயற்சிகளுக்கும் அன்பான வாழ்த்துகள் தோழி.

      Delete
  22. போட்டியில் இரண்டாமிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான நன்றி ஐயா.

      Delete
  23. அக்கா! வெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா மைதிலி. பங்கு கொண்டதே ஒரு பெரிய சந்தோஷம்.. பரிசு இரட்டை மகிழ்ச்சி. விழா சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துகள்மா.

      Delete
  24. வலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி மதுரைத்தமிழன்.

      Delete
  25. மின்-தமிழ் இலக்கியப்போட்டியில் பங்கு பெற்று பரிசினை வென்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி செந்தில். உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள். உங்களோடு நானும் பரிசுபெறுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

      Delete
  26. மிகுந்த மகிழ்ச்சி கீதமஞ்சரி :) வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி கிரேஸ். உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்.

      Delete
  27. கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டுக்கள்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றி ஐயா. முதல் பரிசினைப் பெற்றுள்ள தங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்.

      Delete
  28. தங்களின்வெற்றிக்குஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மாலதி.

      Delete
  29. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இனியா.

      Delete
  30. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இனிய நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள் தோழி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.