முருக்கு, கவிர் என்றெல்லாம் வழங்கப்படும் முருக்கமரம் erythrina எனப்படும் தாவரவினத்தைச் சார்ந்தது. கிட்டத்தட்ட 130 வகையைக் கொண்டுள்ள இந்த எரைத்ரினா இனத்துள்தான் முள்முருக்கு (அ) முள்முருங்கை எனப்படும் கல்யாண முருங்கையும் அடங்கும். சங்கப்பாடல்களில் கையாளப்பட்டுள்ள முருக்கம்பூக்களுக்கான உவமைகள் ரசிக்கவைக்கின்றன. பாடலாசிரியர்களின் கற்பனைத்திறத்தையும் இயற்கையோடியைந்த வாழ்வியலையும் காட்டும் அவ்வுவமைகள் என்னென்னவென்று அறிவோமா?
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப…
(அகநானூறு 41 – குன்றியனார்)
முருக்க
மரத்தின் கிளைகள்தோறும் பெரிய அரும்புகள் விரிந்து
மலர்ந்திருக்கும், நெருப்பை
ஒத்த மலர்களை கூட்டமாய் வண்டுகள்
மொய்த்து ரீங்கரிக்கின்றனவாம்.
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடைகரை –
Erythrina coralloides |
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடைகரை –
(பதிற்றுப்பத்து – பாலைக்கௌதமனார்)
தாழ வளர்ந்து தழைத்திருக்கும்
முருக்கமரத்தின் கிளைகள், பூக்களைச் சொரிந்துகொண்டிருக்கும் காட்சி, ஆற்றங்கரைதனில்
நெருப்பு எரிவதைப் போலத் தோன்றுகிறதாம்.
குவிமுகை முருக்கின் கூர்நுனை வையெயிற்று
நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும்
(அகநானூறு – 317 – வடமோதங்கிழார்)
முருக்கமரம் பூக்களும்
மொட்டுகளுமாகக் காட்சியளிக்கிறது. அந்த மொட்டுகளைப் பார்த்தால், கூரிய பற்களையும் ஒளிரும்
முகங்களையும் கொண்ட பெண்களின் செஞ்சாந்து பூசிய நகங்களைப் போல இருக்கின்றனவாம்.
கவிர் இதழ் அன்ன காண்பின் செவ்வாய் –
(அகநானூறு –3 எயினந்தை மகனார் இளங்கீரனார்)
முருக்கம்பூவினை ஒத்த, காண்பதற்கு இனிய செவ்விதழைக் கொண்டவளாம் தலைவி.
முருக்கும் ஆம்பலும் மென்காவியும் குமிழும் – என்று சந்திரமதியின் இதழுக்கு முருக்கம்பூவை உவமை காட்டுகிறார் அரிச்சந்திரபுராணத்தில் நல்லூர் வீரகவிராயர்.
Erythrina coralloides |
உதிரந் துவரிய வேங்கை உகிர்போல் எதிரி முருக்கரும்ப
(ஐந்திணை ஐம்பது – பாலை – மாறன் பொறையனார்)
வேட்டையாடியதால்
இரத்தக்கறை படிந்த புலியின் நகங்களைப் போன்ற மொட்டுகளை அரும்பி நிற்கிறதாம் முருக்கமரம்
பருவத்தில்.
வெண்கோட்டி யானை பொருத புண்கூர்ந்து
பைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய
முருக்கரும் பன்ன வள்ளுகிர் வயப்பிணவு
கடிகொள… (அகநானூறு 362 – வெள்ளிவீதியார்)
வெண்ணிறத் தந்தங்களை
உடைய யானையோடு சண்டையிட்டு, அத்தந்தங்கள் உடலில் பாய்ந்ததால் உண்டான புண் மிகுந்து,
பசிய கண்களையுடைய ஆண்புலி கற்குகையினுள்ளே ஒடுங்கியிருக்க, முருக்கின் அரும்பினை ஒத்த
கூரிய நகங்களையுடைய வலிய பெண்புலி அதற்கு காவல் இருக்கிறதாம்.
Erythrina crista-galli |
வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன
செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தாஅய்..
(அகநானூறு –99 பாலை பாடிய பெருங்கடுங்கோ)
வாள் போன்ற வரிகளையுடைய வலிய
புலியின் கொல்லுந்தன்மையுடைய பயங்கரமான நகங்களைப் போன்ற சிவந்த அரும்புகளைக்
கொண்ட முள்முருக்க மலர்களை, தேன் உண்ணும்பொருட்டு வண்டுகள்
சூழ்ந்தமையால் வாடி உதிர்ந்து எங்கணும்
பரந்துகிடந்தனவாம்.
குருதி படிந்த புலியின் நகத்துக்குப் பொருத்தமான உவமை முருக்கம்பூவென்னும் காரணத்தால் இம்மரத்துக்கு புலிநகக்கொன்றை என்ற பெயரிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் புலிநகக்கொன்றைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று சொல்லக் கேட்கிறேன். அதன் படம் கிடைத்தால் பதிவிடுகிறேன்.
Erythrina coralloides |
கூர்வாய் அழலகைந் தன்ன காமர் துதைமயிர்
மனையுறை கோழி மறனுடைச் சேவல்
போர்புரி யெருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் ஒண் குரல்…
(அகநானூறு 277 - கருவூர் நன்மார்பனார்)
கூரிய அலகையும்
தீ கொழுந்துவிட்டு எரிவதைப் போன்ற அழகிய செறிவான சிறகினையுடைய, மனையில் உறைந்திருக்கும்
கோழியின் வீரமிகு சேவலானது மற்ற சேவலுடன் சண்டையிடும்போது கிளர்ந்தெழும்பி நிற்கும்
அதன் கழுத்திறகுகளைப் போலக் காட்சியளிக்கின்றனவாம், முருக்க மரத்தில் தீப்போன்ற நிறத்துடன்
ஒளிர்ந்து மலர்ந்திருக்கும் மலர்க்கொத்துகள்.
Erythrina crista-galli |
எரியும் நெருப்பு,
பெண்ணின் செவ்விய இதழ், பெண்ணின் செஞ்சாந்து பூசப்பட்ட நகம், புலியின் குருதி படிந்த
கூரிய நகம், சேவலின் சிலிர்ப்பிய கழுத்திறகுகள் என எவ்வளவு அழகாக முருக்கம்பூவிதழின்
வண்ணமும் வடிவமும் உவமிக்கப்பட்டுள்ளன. இன்னுங்கூட இருக்கலாம். நானறிந்தவற்றை மட்டுமே
இங்கு சுட்டியுள்ளேன்.
மேலே காட்டப்பட்டிருக்கும் இரு வகை எரித்ரைனா பூக்களின் படங்களும் ஆஸியில் எடுக்கப்பட்டவை. பூக்களின் வடிவத்தையும் நிறத்தையும் கொண்டு, சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முருக்கம்பூக்களும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நம்புகிறேன்.
ஆம், மிக அருமையான உவமைகள். அழகான படங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கீதா.
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteபோட்டிக்கான கட்டுரைகள் இன்னும் தங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeleteபுதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
இன்னுமா? முயற்சி செய்கிறேன் தனபாலன். நன்றி.
Deleteஅருமையான புகைப்படங்கள். இலக்கியங்களிலிருந்து பாடல் மேற்கோள்கள். மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.
Deleteஅருமை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Deleteசங்க காலப் பாடல்களில் ஒரு ஆராய்ச்சியே செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்தப் பூக்களைப் படமெடுத்தவுடன் சங்கப்பாடல்களில் காட்டப்பட்ட உவமைகள் சில நினைவுக்கு வந்தன. அனைத்தையும் இங்கு தொகுத்தளித்தேன். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.
Deleteஆய்வு செய்து எங்களுக்கும் அள்ளிகொண்டுவந்து
ReplyDeleteஅழகிய பதிவாக உங்களுக்கே உரிய எழுத்துத் திறனோடு தரும்போது
இலக்கியத்தை ஏன் நான் ஊன்றிப் படிக்கவில்லை என ஏக்கம் வருகிறது.
அற்புதம் கீதமஞ்சரி! மிக அருமை!
வாழ்த்துக்கள்!
த ம+1
அற்புதமான மரபுக்கவிதைகளை அநாயாசமாக எழுதும் ஆற்றல் பெற்றவர் நீங்கள்.. நீங்கள் எழுத ஆரம்பித்தால் இலக்கியம் எல்லாம் எளிதாய் கைவராதா என்ன? :)
Deleteவருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி தோழி.
அம்மாடியோ,,,,, ஆஹா எத்துனைச் சான்று ,,
ReplyDeleteபாடல்கள் விளக்கம் நல்ல ஆய்வு ,,, திரும்ப திரும்ப படித்தேன்,,
மகிழ்ச்சியாக இருக்குமா,,,,,,
என்னமா எழுதியுள்ளீர்,,,,,,,
இதுபோல் இன்னும் தொடருங்கள் பரவட்டும் எங்கும் ,,,,,,,,
வாழ்த்துக்கள். நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் மனந்திறந்தபாராட்டுக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி. உங்களுடைய கட்டுரையில் திருத்தம் சொன்னதற்கு தவறாக நினைத்துக்கொள்வீர்களோ என்று பயந்திருந்தேன். புரிதலுக்கு மிகவும் நன்றி தோழி.
Deleteபடங்களும் சங்க இலக்கிய செய்யுள்களும் விளக்கங்களும் அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.
Deleteஇலக்கியச் சுவை சொட்டும்
ReplyDeleteஇனிய பதிவு இது!
தொடருங்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.
Deleteவாவ்! ......
ReplyDeleteஉங்களின் கைவண்ணத்தில் மலர்ந்த பூக்களின் படங்களோடு தமிழின் பழைமை வரை வேரோடி விடயங்களைக் கொணர்ந்து சொற்செட்டும் பொருட் செறிவுமாய் உங்களை மீண்டும் யார் என்று நிரூபித்திருக்கிறீர்கள் கீதா!
அருமை! அருமை!!
பெண்ணின் சாயம் பூசிய நகம், புலியில் குருதி தோய்ந்த நகம், பெண்ணின் உதடு, அதிலும் குறிப்பாக சிலுர்ப்பிய சேவலின் கழுத்துச் செட்டை... ஆஹா! என்ன ஒரு பார்வைத் திறன்! கற்பனை நயம்!! நம்மையும் சிலிர்க்க வைக்கிறது...
இப்படி ஒரு இலக்கியத் தொடரை பூக்களோடு தொடங்குங்களேன்.
வசந்த காலத்துக்கு வரவேற்புச் சொன்னாற் போல இருக்கும்! எத்தனையோ விதமான பூக்களை சங்கப் பாடல்கள் சொல்லுகின்றனவல்லவா? தந்தால் நமக்கு நீங்கள் தரும் இன்னொரு அருமையான விருந்தாய் அது அமைந்து விடாதா?!
பிளீஸ் கீதா.விருந்துண்ண மனம் அவாவுகிறது... பெரு விருப்போடு....
வருகைக்கும் விரிவான தொடர் கருத்துகளுக்கும் நன்றி மணிமேகலா..
Deleteஉங்கள் கருத்துரை மூலம் எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. தொடர்ந்து இதுபோன்று எனக்குத் தெரிந்தவற்றை எழுத ஆசைதான். ஆனால் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல மலர்களைப் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. இப்போது கூட பாருங்களேன்.. முருக்கம்பூவைப் பற்றிதான் பாடல்கள் சொல்கின்றன. இங்கு காட்டப்பட்டுள்ள பூ வகை அந்த இனம்தான் என்றாலும் அச்சொற்றாக அதே இனமா என்று தெரியவில்லை.. முருக்கம்பூவைப் பார்த்தவர்கள்தான் இரண்டும் ஒன்றுதானா என்று சொல்லவேண்டும்.
'சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை’ என மாணிக்க வாசகர் ( பெயரைக் கவனியுங்கள் மாணிக்க வாசகர் - இன்னொன்று நாவுக்கரசர்! இப்படியெல்லாம் இப்போ யார் அழகியலோடு பெயர் வைக்கிறார்கள்? ) திருவெம்பாவையில் ஒரு பாடலில் சொல்லுவார். மன அழகுள்ளவர்கள் பாட மாட்டார்களா? என்று ஏங்கும் பக்தி உள்ளம் அது...
ReplyDeleteஉங்கள் பதிவைப் பார்க்கும் போது இது தான் நினைவுக்கு வருகிறது.
மீண்டும் மீண்டும் உங்கள் பதிவை படிக்கத் தோன்றுகின்றது. பார்க்கும் தோறும் பார்க்கும் தோறும் தமிழ் தேனாய் சொட்டுகிறது!
இயற்கையையும் இலக்கியத்தையும் ரசிப்பவர்கள் தரவேண்டும் இப்படியான விருந்து. அதிலே இருக்கிறது ஒரு தனிச் சுவை!
பதிவை விட்டு நகர மனம் மறுக்கிறது. :)
crazy woman என நினைத்தாலும் பறவாயில்லை :)
உங்களுடைய கருத்துரைகள் தந்த உற்சாகமும் ஊக்கமும் போதாதென்று நேரிலும் கிடைத்த உற்சாக வார்த்தைகள் மனம் நிறைக்கின்றன. பதிவின் மீதான உங்கள் ஆர்வம் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. மிகவும் நன்றி மணிமேகலா. திருவெம்பாவை வரிகளை மேற்கோளிட்டப் பின்னூட்டம் நெகிழ்த்துகிறது.
Delete'குவி முகை முருக்கு’ என ஒரு இலக்கிய அழகியலோடு தலைப்பு வைத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது கீதா.
ReplyDeleteஇலக்கிய சான்றுகளோடு குறிப்பாக எங்கு எத்தனையாவது யார் பாடியது என்ற குறிப்புகளோடு அவற்றை நீங்கள் தந்திருப்பது மேலதிக பலமும் வலுவும் சேர்க்கிறது பதிவுக்கு.
பாராட்டுக்கள் கீதா.
வழக்கமாக மீண்டும் மீண்டும் வந்து இப்படியாகப் பின்னூட்டம் போடுவதில்லை. இது தான் முதல் முறை. உண்மையில் என்னால் நகர முடியவில்லை. :) நம்புவீர்கள் என நம்புகிறேன்.
இலக்கியம் என்றாலே பலருக்கும் இது நமக்கு விளங்காத விஷயம் என்ற எண்ணம் இருக்கும். அதனால் 'குவிமுகை முருக்கு' என்று இலக்கியப் பாடல் வரியைத் தலைப்பாக்கினால் உள்ளே என்ன இருக்கும் என்று பாராமலேயே பலரும் கடந்துவிடக்கூடும் என்பதால் எளிதில் ஈர்க்கும் தலைப்பாக வைத்தேன். மறுபடி மறுபடி வந்து பின்னூட்டமிட்டுப் பாராட்டியிருக்கும் உங்கள் அன்புக்கும் ஆர்வத்துக்கும் மனமார்ந்த நன்றி மணிமேகலா.
Deleteஅழகான ப்டங்கள்... புலிநகக்கொன்றை - ஆஹா.... என்னமாய் பேர் வைத்திருக்கிறார்கள்.....
ReplyDeleteதமிழமுது படைத்தமைக்கு நன்றி.
வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி வெங்கட்.
Deleteநல்ல பதிவு.
ReplyDeleteமுருக்குப் ப)பெ)ருத்தாலும் தூணுக்கு உதவாது என்று
ஒரு பழமொழி உண்டு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. உதயன் பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது என்ற பழமொழியைத்தான் கேட்டிருக்கிறேன். நீங்கள் பகிர்ந்திருப்பது புதியது எனக்கு.
Deleteஇதை முள்முருக்கு என ஈழத்தில் குறிப்பிடுவோம். இந்த இலையை முல்லையிலையுடன் கலந்து வறுவல், ஒடியல் பிட்டுடன் கலந்து அவித்துண்ணும் பழக்கம் என் வீட்டில் என் பாட்டி காலத்தில் இருந்தது.சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்!!!.
ReplyDeleteஅத்துடன் இந்த இலையை அரைத்து சிசுக்களுக்கு தலையில் வைத்து முழுகாட்டும் பழக்கமும் அன்றிருந்தது. நல்லெண்ணையுடன் இவ்விலையையும் செம்பருத்திப் பூவையும் இட்டுக்காச்சிய எண்ணையை சிசுக்களுக்குப் பூசி உடல் பிடித்து விடும் பழக்கமும் இருந்தது.
ஆடு குட்டியீன்றதும் முதல் ஒரு வாரம் இந்த இலையையே உண்ணக் கொடுக்கும் பழக்கமும் அன்று இருந்தது. ஆடுமாட்டுக்கு கழிச்சல் இருந்தால் இவ்விலை கொடுக்கும் பழக்கம் இருந்தது.
இது ஒரு மருத்துவக் குணம் கொண்ட மரமென்பதால் அன்று இது இல்லாத வீட்டு வேலியே! இல்லை.
பூக்கும் காலத்திலும் அழகாக இருக்கும்!
சூரிய கிரகணம் பார்க்க சிறப்புக் கண்ணாடியற்ற காலத்தில் , இதன் இலைச் சாற்றை ஒரு சட்டியில் விட்டு அதில் சூரிய விம்பம் விழவைத்து பார்க்கும்
படி வீட்டில் பெரியவர்கள் கூறிப் பார்த்துள்ளேன்.
இதற்கு இலக்கியத்திலும் இடமிருந்ததை உங்கள் பதிவிலறிந்தேன். மிக்க நன்றி!
அடேயப்பா... முள்முருக்கு பற்றி எவ்வளவு புதிய அறியாத தகவல்கள்.. மிகவும் நன்றி யோகன் ஐயா. ஒடியல் என்றால் பனங்கிழங்கு மாவு என்று நினைக்கிறேன். முல்லையிலை என்றால் முல்லைப்பூ மலரும் கொடியின் இலைகள்தாமா? அல்லது வேறா? முல்லையிலைகளை சமைக்கலாம் என்பது புதிய தகவல் எனக்கு.
Deleteசூரிய கிரகணம் பார்க்க அந்நாளைய செயல்முறை வியக்கவைக்கிறது. வருகைக்கும் சுவையான கருத்துகளின் பகிர்வுக்கு மிகவும் நன்றி.