21 November 2011

உருகிக்கொண்டிருக்கிறேன்...


இறுகிக்கிடக்கிறேன் என்பதாலேயே 
உணர்வற்றுக்கிடப்பதாய் உள்ளர்த்தம் கொள்கிறாய்!
முகமெதிர்கொள்ள விரும்பாது,
முன்னிலையில் நில்லாக்காரணத்தால்
முதுகெலும்பில்லாதவளென்றே
ஏறி மிதித்தென்னை  ஏளனம் செய்கிறாய்!

நினைவில் வைத்துக்கொள்,
ஆவியாய்ப் போனாலும் ஆயுள் நீடிக்கும்
நீரைப் போன்றவளே நானும்!
பனியாய் உறைந்திருக்கிறேன்  இன்று!
பாறையாய் அன்று!

உமிழும் சுடுசொற்களால்
பெரும் உக்கிரம் பெற்று
உருகிக்கொண்டிருக்கிறேன் உள்ளே!
வலிந்து உதைக்கும் பாதங்களை
வெடுக்கென்று பற்றியிழுத்து
உள்வாங்கும் நாளொன்று உருவாகுமுன்னே
தாக்குதல் விடுத்து
தற்காத்துக்கொண்டு ஓடிவிடு!

(நன்றி: வல்லமை)

21 comments:

  1. பதுங்குதல் போலே பொறுத்திருப்பதும் கூட
    ஒரு போர்த்தந்திரமே
    இறுகி இருத்தல் கூட இயலாமையினால் இல்லை
    எல்லை தொடும்வரை பொறுப்போம் என்கிற
    பெருந்தன்மையே
    ஆர்ப்பரித்துத் திரிவோருக்கு அது
    புரியப்போவதில்லை
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. "முகமெதிர்கொள்ள விரும்பாது,
    முன்னிலையில் நில்லாக்காரணத்தால்
    முதுகெலும்பில்லாதவன் என்றே
    ஏறி மிதித்தென்னை ஏளனம் செய்கிறாய்!"

    இப்படித்தான் பலர் நினைக்கிறார்கள். மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  3. பொறுமை என்பது இயலாமையின் இறுதி வடிவம் அல்ல என அற்புதமாக சொன்ன கவிதை, ரசித்தேன்

    ReplyDelete
  4. பொறுமை மதிக்கப்படாவிட்டால் ஆயுதமாக மாறி தாக்கும். உண்மைதான் கீதா. இதுபோன்ற எல்லையை புரிந்து கொள்ளும் அளவிடல்கள் தற்போதிய பெண்களுக்கு மிகக்குறைவாக உள்ளது. அதுவே ஒரு முடிவையும் எழுதி விடுகிறது. வலிமையான கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வலியமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  6. //நினைவில் வைத்துக்கொள்,
    ஆவியாய்ப் போனாலும் ஆயுள் நீடிக்கும்
    நீரைப் போன்றவனே நானும்!//

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  7. // நினைவில் வைத்துக்கொள்,
    ஆவியாய்ப் போனாலும் ஆயுள் நீடிக்கும்
    நீரைப் போன்றவனே நானும்!
    பனியாய் உறைந்திருக்கிறேன் இன்று!
    பாறையாய் அன்று!//


    கதை மட்டுமல்ல! கவிதையும் உங்களுக்கு
    கைவந்த கலை! என்பதை இக் கவிதையால் நான்
    உணர்ந்து கொண்டேன்
    பொறுமை என்பதை முன் வைத்து
    இயற்கையின் முக் காலங்களையும் மிக அருமையாக
    வடிவமைத்துள்ளீர்!
    மனிதம் உணர வேண்டிய மகத்தான
    அறிவுரை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. இயற்கையின் ஓர் அங்கமே “நான்”! புரிந்துக் கொண்டால் இயைந்துக் கொள்ளலாம்.

    சாமர்த்தியமான எச்சரிக்கை விடுக்கும் கவிதை.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. வரிகளின் வலிமையும் பொருளும் அருமை.
    அடுத்து தங்களின் தொடர் பதிவினை எதிர்பார்க்கிறேன்.நானும் உங்களை அழைத்திருந்தேன்.பிறகு சாகம்பரி அவர்களின் பதிவில் உங்களுக்கான அழைப்பு இருந்ததால் உங்களையும் சேர்த்து நால்வராக அழைத்திருந்த நான் உங்க பேரை எடுத்துவிட்டேன்,மன்னிக்கவும்.

    ReplyDelete
  10. இயற்கையை யாரும் புரிந்து கொள்ள முடியாது. நல்ல வரிகள். த.ம 4

    ReplyDelete
  11. @ Ramani

    முதல் பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்கும் வாக்குப்பதிவுக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

    @வியபதி

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    A.R.ராஜகோபாலன்

    தங்கள் ரசனை கண்டு மகிழ்ந்தேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  12. @ சாகம்பரி,

    வலிமை சேர்க்கும் கருத்துரைக்கு நன்றி சாகம்பரி.

    @அரசன்,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    @சங்கவி

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  13. @புலவர் சா இராமாநுசம்

    தங்களது ஊக்கமிகு வார்த்தைகள் என்னை இன்னும் உற்சாகத்துடன் எழுதவைக்கும். மிகவும் நன்றி ஐயா.

    @சத்ரியன்

    நுட்பமான அலசல் கண்டு மிகவும் மகிழ்கிறேன். நன்றி சத்ரியன்.

    @thirumathi bs sridhar

    என்ன நீங்க, இதற்கெல்லாமா மன்னிப்பு கேப்பாங்க? என்னை தொடர்பதிவுக்கு அழைக்க நினைத்ததே உங்களுக்கு என்மேலிருக்கும் நம்பிக்கையைக் காட்டுதே!!மிகவும் நன்றி ஆச்சி.

    @விச்சு,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. மனிதமாகட்டும் இயற்கையாகட்டும்,எல்லைமீறினால் தொல்லைதான் :)

    அருமையான எச்சரிக்கைக் கவிதை கீதா!

    ReplyDelete
  15. இயற்கை பேசினால்...இப்படித்தானோ !

    ReplyDelete
  16. வழக்கமாக இடது வரிசை வரிக்கவிதைகள் படிக்கும் எனக்கு தங்கள்
    வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தது. தவிர சுயத்தை பிரகடனப்படுத்தும்
    தங்களின் கவிதை அடர்வாக இருந்தது. மேலும் தன்னைத்தானே இவ்வித நியாங்கள்
    சொல்லி தேற்றிக்கொள்ளும் கழிவிரக்கமும் கவிதையில் உணரமுடிந்தது. வல்லமை
    வலிமையாக வாழ்த்துக்கள். மிக்க அன்புடன் இயற்கைசிவம், வெயில்நதி வலைப்பூ , செஞ்சி, தமிழ்நாடு.

    ReplyDelete
  17. ஆவியாய்ப் போனாலும் ஆயுள் நீடிக்கும்
    நீரைப் போன்றவனே நானும்!
    பனியாய் உறைந்திருக்கிறேன் இன்று!
    பாறையாய் அன்று!
    சபாஷ்!

    ReplyDelete
  18. @ சுந்தரா,
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுந்தரா.

    @ ஹேமா,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

    @ iyarkaisivam ,
    முதல் வருகைக்கும் அழகான ஆழ்ந்த விமர்சனத்துக்கும் மிகவும் நன்றி.

    @ ரிஷபன்,
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷபன் சார்.

    ReplyDelete
  19. அழகான வரிகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  20. தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனசேகரன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.