22 November 2011

அவர்கள் குழந்தைகள்! (தொடர்பதிவு)


குழந்தைகள் பற்றிய தொடர்பதிவெழுத என்னை அழைத்த சாகம்பரி அவர்களுக்கும், அழைக்கவிரும்பிய ஆச்சி அவர்களுக்கும் என் அன்பான நன்றி. 

குழந்தைகளின் உலகம் பற்றிப் பலரும் பல கோணங்களிலும் தங்கள் சிறப்பான பார்வையைப் பதித்து மேலான கருத்துக்களை வழங்கியபின் விடுபட்டதைச் சொல்ல எனக்கு வாய்ப்பில்லை. 

இரு வளர்ந்த குழந்தைகளின் தாய் என்னும் வகையில் குழந்தைகள் பற்றிச் சொல்ல எஞ்சியுள்ளது ஒரு வாய்ப்பு. அது என் சொந்த அனுபவம். 

குழந்தைகள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அவர்கள் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்கும் வழக்கத்தையும், குழந்தைகளுக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றாமல் நம்மால் நிறைவேற்றக்கூடியவற்றை மட்டுமே சொல்லி அவர்களுடைய மனத்தில் நம்மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும் என் மாமனாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். எங்கள் வீட்டுக் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க அவருடைய இந்த அறிவுரைகள் பெரிதும் உதவின, இன்றும் உதவுகின்றன.


தவறு செய்யும் குழந்தைகளை அடித்தும் மிரட்டியும்தான் திருத்தமுடியும் என்று பெரும்பாலான பெற்றோர் நம்புவதைப் போலவே நானும் என் ஆரம்பக் கட்டத் தாய்மையின்போது நம்பியிருந்தேன். நாளடைவில் என் தவறுணர்ந்து பிள்ளைகளை அடிக்காமலும் திருத்தமுடியும் என்ற ஞானம் பெற்றபின் குழந்தைகளை அடிப்பதை அடியோடு(?) நிறுத்திவிட்டேன். அது ஆகிறது ஒரு மாமாங்கம்!
அடியை நிறுத்தியபின்னர் எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அடிக்கும்போது  குழந்தைகளிடம் இருந்த முரட்டுக்குணம் அடியை நிறுத்தியபின் காணாமற்போனது. எப்படியெல்லாம் என் பிள்ளைகள் வளரவேண்டுமென்று விரும்பினேனோ அப்படியே என் பிள்ளைகள் வளர்ந்தார்கள்.
ஒரு பழமொழி சொல்வார்களே...நகத்தால் கிள்ளியெறிய வேண்டியதைக் கோடரி கொண்டு வெட்டுவார்களா என்று. நான் இத்தனை நாள் அதைத்தான் செய்திருக்கிறேன் என்பதை உணர்ந்து வருந்தினேன். வார்த்தைகளே போதும் என்னும் சூழலில் வன்முறைப் பிரயோகம் எதற்கு?

இந்தக் கருத்தை வைத்து சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கதை ஒன்றை இங்குப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தத் தொடர்பதிவில் நான் சொல்ல நினைத்தக் கருத்துக்களையே இக்கதை பிரதிபலிப்பதால் இக்கதையை இங்கு பதிவதில் தவறேதுமில்லையென்று கருதிப் பதிகிறேன்.

****************************

கரைப்பார் கரைத்தால்....காய்கறிகளை எடுத்துவைத்துக் கொண்டு கழுவுவதற்கு குழாயைத் திறந்தால் காற்றுதான் வந்தது.

'என்ன இது? ஏதேனும் அடைப்பு இருக்கிறதா? காலையில்தானே மோட்டர் போட்டு தண்ணீர்த்தொட்டியை முழுவதுமாய் நிரப்பினேன். அதற்குள் எப்படி காலியாகும்? வேறு ஏதாவது குழாய் திறந்திருக்கிறதா?'

"வினீத்தம்மா! கொஞ்சம் வெளியில வந்து பாருங்க, இந்த அட்டகாசத்தை!"

தெருவோடு போகிற யாரோ போகிறபோக்கில் புகார் கொடுத்துவிட்டுப் போக,வினீத்தம்மா என்றழைக்கப்பட்ட மாதவி, சிந்தனை கலைந்தவளாய்,  இந்த முறை என்ன பிரச்சனையோ என்று கலவரத்துடன் கைவேலையை அப்படியே போட்டுவிட்டு வெளியில் ஓடினாள்.

அந்தத் தெருவில் குழந்தைகள் அதிகம். அதிலும் வினீத்தின் வயதையொத்த சிறுவர்கள் நிறைய இருப்பதால் எல்லாம் சேர்ந்து விளையாடி ஏதாவது ரகளை உண்டாக்குவது நித்தமும் நடைபெறும் செயலாயிற்று. தெருவோடு போகிற நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்துவது, பின் என்றாவது அது கடிக்கவந்தால் மூச்சிரைக்க ஓடி ஒளிவது, (சிலசமயங்களில் கடிபடுவது), கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது, தெருவில் இருசக்கரவாகனங்கள் போகும்போது குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து ஓட்டுபவர்களைப் பதற்றமடையச் செய்து, பின் அவர்களிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக்கொள்வது, இவைதவிரவும்......அவர்களுக்குள்ளேயே அடிதடி, தகராறு, உன்னுடையது, என்னுடையது என்ற உரிமைப்பிரச்சனை......அப்பப்பா! எத்தனைப் பிரச்சனைகள்!

விடுமுறை நாட்களிலோ ஒருநாள் போவது ஒரு யுகம் போவது போலத்தான். எந்நேரமும் வீட்டுக்குள் முடங்கிக்கொண்டு, கணினி விளையாட்டிலும், தொலைக்காட்சியிலும் காலத்தைக் கழிக்காமல் இப்படி ஓடியாடி விளையாடினால் நல்லதுதானே என்று வெளியில் அனுப்பினால் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை யாராவது வந்து வினீத்தின் பேரில் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை எடுப்பதிலேயே அவள் பொழுது கரைந்துவிடுகிறது.

எத்தனை முறை அவனைக்  கண்டித்தாயிற்று! அடித்தும் பார்த்துவிட்டாள். அதுவும் மாதவிக்குக் கோபம் வந்துவிட்டால் கண்மண் தெரியாது. புகார் கொடுத்தவர்கள் முன்னிலையிலேயே மகனைத் துவைத்தெடுத்துவிடுவாள். மற்றவர்கள் மேலிருக்கும் கோபமெல்லாம் மகன்மேல் திரும்பிவிடும். அவனைப் பற்றிப் புகார் சொன்னவர்களே கண்கலங்கும் அளவுக்கு அவனைக் காயப்படுத்திவிட்டுதான் ஓய்வாள். ஆனாலும் அது ஒரு தொடர்கதைபோல் தினமும் நடக்கலாயிற்று.

வயது பத்து ஆகிறது. ஒருமுறை சொன்னால் புரிந்துகொள்ளவேண்டாமா? இப்படியே தான்தோன்றித்தனமாக வளர்ந்தால் பிற்காலத்தில் எப்படி உருப்படமுடியும்? ஒருநாளாவது மற்றவர்கள் மெச்சும்படி ஒரு காரியம் செய்ததுண்டா? படிப்பிலும் சராசரிதான். மற்றப் பிள்ளைகள் எல்லாம் எப்படி சாமர்த்தியமாக நடந்துகொள்கிறார்கள்! இவனுக்கு ஏனோ அந்தத் திறமையும் இல்லை.

வாசலுக்கு வந்தவளுக்கு எவரும் சொல்லாமலேயே விவரம் புரிந்துவிட்டது. காலையில் பெருக்கிக் கோலமிட்டிருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சேறும் சகதியுமாய்க் கிடந்த வாசலைப் பார்த்து அதிர்ந்தாள்.

தற்காலிகமாய் உருவாகியிருந்த செம்மண் குட்டைக்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தாள். சந்தேகமேயில்லை. அவள் வீட்டுக் கொல்லைப்புறத்துக் குழாயிலிருந்துதான் தண்ணீர் விநியோகம் ஆகிக்கொண்டு இருந்தது. பதறியவள், ஓடிச்சென்று குழாயை அடைத்தாள்.  

தோட்டத்து மலர்கள் அத்தனையும் கிளைகளோடு ஒடிக்கப்பட்டு எல்லாம் பரிதாபத்தோற்றம் காட்டின. அங்கிருந்த பல பூக்கள் தன் வீட்டில் இல்லாதவை.  யார்யார் வீட்டுத் தோட்டமெல்லாம் சூறையாடப்பட்டனவோ என்று நினைக்கையிலேயே அடுத்தடுத்தப் புகார்களுக்காக தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

அப்படியே பார்வையைத் திருப்பினால்.......வினீத், சரத், பாபு மற்றும் தெருப்பையன்கள் அத்தனைப் பேரும் தலை கலைந்து, உடை நனைந்து, மேலெல்லாம் சேற்றுச்சந்தனம் பூசி, பார்ப்பதற்கு ஏதோ காட்டுவாசிகளைப் போல் ஆளுக்கொரு கோலமாக  நின்றுகொண்டிருந்தனர்

அய்யோ! இத்தனைப் பேரின் தாய்மார்களும் வந்துவிடுவார்களே. ஏனென்றால் இந்தக் குரங்குப் பட்டாளத்திற்கு வினீத் குரங்குதானே தலைவன்.  எப்போதும் முதற்புகார் மாதவிக்கு வருவதில் வியப்பென்ன?

யாரோ சொல்லி அங்கு வந்த கமலா, தன் மகன் பாபுவை நேரடியாகவும், வினீத்தையும், அவனைப் பெற்றவளையும் மறைமுகமாகவும் சாடிக்கொண்டே அவன் காதைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றுவிட்டாள்.

மற்றக் குழந்தைகள் செய்வதறியாது திகைத்து நிற்க, வினீத் சற்றுத் துணிச்சலோடு,  “அம்மா! நாங்க கோயில் கட்டி சாமி கும்புடறோம். நல்லாயிருக்கா?"  என்றான்.

மாதவியின் கோபம் வினீத்தின் கேள்வியால் உச்சத்தை அடைந்தது. தோட்டத்தைப் பாழ் படுத்தியதோடு, தண்ணீர்த் தொட்டியையும் காலி செய்துவிட்டு ஒன்றும் அறியாத பச்சைக் குழந்தைபோல் அவளிடமே கேள்வி கேட்கிறது! அவள் கணவனோ வேலை வேலை என்று சதா வெளியூரில் சுற்றிக்கொண்டிருக்க,  இந்தக் குட்டிச்சாத்தானுடன் தான் தான் தினம் தினம் போராடவேண்டியுள்ளது. வந்த ஆத்திரத்தில் பளாரென்று அறையத் தோன்றியது. கையை ஓங்கிய அதே நொடி,

"வாவ்! " என்ற வாய்பிளந்த சத்தம் கேட்டுத் திரும்பினாள். எதிர்வீட்டு மாடிக்குப் புதிதாய்க் குடிவந்தவள் அங்கு நின்றிருந்தாள்.

"என்ன அழகு பாருங்களேன்! நமக்குக்கூட இப்படி ஒரு கலையுணர்வு இருக்காது போலிருக்கு! பையன்கள் எவ்வளவு அழகாக் கட்டியிருக்காங்க! பிரமாதம்! குழந்தைகளா! அப்படியே ஒரு நிமிஷம் நீங்க கட்டிய கோயிலுக்குப் பக்கத்தில வந்து நில்லுங்க! ஒரு போட்டோ எடுத்திடறேன்!" என்றபடியே தன் கைபேசியை எடுத்து அதிலிருந்த காமிராவினால் படம்பிடித்துக் கொண்டாள். அப்போதுதான் மாதவி, பிள்ளைகள் கட்டிய கோயிலை நிதானமாய்ப் பார்த்தாள்

அந்த செம்மண் மேடு மிகவும் நேர்த்தியாக குவிக்கப்பட்டிருந்தது. மலையின் உச்சியில் விரிந்த இதழுடன் ஒரு சிகப்புச் செம்பருத்தி செருகப்பட்டிருந்தது. சுற்றிலும் தும்பை, ஆவாரம் போன்ற காட்டுப்பூக்களும், ஜினியா, ரோஜா, பவளமல்லி போன்ற தோட்டப்பூக்களும் மாறிமாறி கலைநயத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. இடையிடையே சோழிகளும், கிளிஞ்சல்களும் பதிக்கப்பட்டு அழகுபடுத்தப் பட்டிருந்தன.

 இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அலங்கரிக்கப்பட்டிருந்த சேற்றுமலையின் அடிவாரத்தில் முருகக்கடவுளின் சிறிய படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குன்றுகளின் உச்சியில் குடியிருக்கும் முருகன் இக்குழந்தைகளுக்காக மனமிரங்கிக் கீழே இறங்கிவந்துவிட்டார் போலும் என்று நினைத்துக் கொண்டாள். பார்க்கும்போதே கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.

எதிர்வீட்டுக்காரி  வாய் ஓயாமல் சிறுவர்களையும், அவர்கள் கட்டிய கோயிலையும் புகழ்ந்துகொண்டிருந்தாள். பேச்சினூடே,
"குழந்தைகளா! விளையாடி முடிச்சதும் இந்த இடத்தைச் சுத்தம் செய்துடுவீங்கதானே? இல்லைன்னா, வினீத்துடைய அம்மாவுக்குதான் வேலை. அவங்க பாவமில்லையா? நீங்க விளையாடி முடிச்சதும் சொல்லுங்க, நானும் வந்து ஹெல்ப் பண்ணறேன். சரியா?"  என்றதும் சிறுவர்கள் கோரஸாக, "சரிங்க ஆன்ட்டி!" என்றனர்.

"வினீத்தம்மா! மன்னிச்சிடுங்க! உங்க பேர் எனக்குத் தெரியலை. அதான் எல்லார் மாதிரியும் உங்களைக் கூப்பிடறேன்! என் பேர் காவியா! இவன் என் மகன் ராம்!" என்று தன்னையும், பக்கத்தில் குறுகுறுவென்று நின்றிருந்த எட்டுவயதுச் சிறுவனையும் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

காவியாவின் நிதானப்போக்கைக்  கண்டு வியப்பு மாறாதவளாய் மாதவி நின்றுகொண்டிருந்தாள். ஒருவேளை இவள் வீட்டு வாசலில் இப்படிச் செய்திருந்தால் இதுபோல் நடந்துகொள்வாளா என்றும் எண்ணினாள்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே சிறுவர்கள் மளமளவென்று குப்பைகளைக் களைந்து சுத்தம் செய்து, தேங்கியிருந்த நீரில் மண்ணைக் கொட்டி சமப்படுத்தி, சற்றுமுன் களேபரமாய்க் காணப்பட்ட இடம் இதுதானா என்று ஆச்சரியப்படும் வகையில் சீர்படுத்தியிருந்தனர். ராமும் அவர்களுடன் இணைந்துகொண்டான்.

மாதவியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. அதிலும் வினீத் துடைப்பம் எடுத்துப் பெருக்கிச் சுத்தம் செய்ததைப் பார்த்து அவள் கண்களில் நீரே வந்துவிட்டது.

நன்றியுடன் காவியாவின் கைகளைப் பற்றியவள்,
"என்னால் நம்பவே முடியலைங்க, எப்பவும் இந்தப் பசங்க போட்டது போட்டபடி ஓடிடுவாங்க, நான் தான் புலம்பிகிட்டே சுத்தம் செய்வேன். வினீத்துக்கு ரெண்டு அடியும் கிடைக்கும். என்னவோ மந்திரம் போட்டது மாதிரி நீங்க சொன்னவுடனே எல்லாரும் சேர்ந்து எப்படி செய்யறாங்க பாருங்க! எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும் போலிருக்கு!" என்றாள்.
 காவியா சிரி சிரியெனச் சிரித்தாள்.
  
"ராசியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க, மாதவி! மந்திரம்னு சொன்னீங்களே, அதை வேணுமின்னா ஒத்துக்கறேன். குழந்தைகள் கிட்டே சொல்றவிதத்தில் சொன்னாதான் எடுபடும். நீங்க அவங்க செய்யற நல்ல விஷயங்களை மனந்திறந்து பாராட்டுங்க! பராட்டுறதையும் மற்றவங்க முன்னிலையில் செய்யுங்க, கண்டிக்கிறதை தனிமையில் செய்யுங்க, கண்டிக்கிறதுன்னு நான் சொல்றது கூட திட்டுறது இல்லை. எடுத்துச் சொல்றது.


 நீ இப்படிச் செய்யறதை விட வேறமாதிரியாய்ச் செய்திருந்தால், இன்னும் நல்லாயிருக்கும். பொருள் வீணாகாது, அப்படி உனக்குத் தெரியலைன்னா யாராவது பெரியவங்களைக் கேட்டுச் செய்! நானும் உனக்கு உதவத் தயாரா இருக்கேன்னு சொல்லிப்பாருங்க, அப்புறம் பாருங்க அவங்களுடைய முன்னேற்றத்தை.

எதையுமே ஆரம்பிக்கும்போதே தடைபோடாதீங்க! நாலுவிதமான வாய்ப்புகள் கொடுங்க, அதில எது நல்லது, எதில் என்ன பாதகங்கள் இருக்குன்னு சொல்லி அவங்களையே அலசிப்பாத்து முடிவெடுக்கச் சொல்லுங்க. நீங்களே அசந்துபோற அளவுக்கு அவங்க செயல்பாடு இருக்கும். என்னடா நேத்து வந்தவள் நமக்கு அறிவுரை சொல்றாளேன்னு நினைக்காதீங்க. என்னை ஒரு தோழியா நினைச்சுக்கங்க.

நான் இந்த வீட்டுக்குக் குடிவந்த பத்துநாளாப் பாக்கறேன், நீங்க எதற்கெடுத்தாலும் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் வினீத்தை அடிக்கிறதை. வினீத் ரொம்பவும் நல்ல பையன். அவனிடம் விட்டுக்கொடுக்கிற குணம், மற்றவர்களுக்கு உதவுற குணம், எதையும் முதல் ஆளா செய்யணும்கிற உத்வேகம், தலைமைப் பொறுப்பை தான் எடுத்துக்கிற தன்னம்பிக்கை அப்படின்னு நிறைய நல்ல குணங்கள் இருக்கு. அதையெல்லாம் ஒழுங்குபடுத்தி நல்ல விஷயங்களுக்காக செயல்படவைக்கவேண்டியது ஒரு பெற்றோரா உங்க கடமை. அதனால்தான் சொல்றேன்.  மாதவி, என்னைத் தவறா நினைக்கமாட்டீங்கதானே?"

'என் மகனிடம் இருக்கும் நல்ல குணங்கள் இன்னன்ன என்று இன்னொருத்தி பட்டியல் போடுகிறாள். நானோ அவனை எந்நேரமும் குறை சொல்லியே வாழ்கிறேன்.'

முதன்முதலாக மகனை மற்றவர் மெச்சக் கண்டு அவள் தாயுள்ளம் நெகிழ்ந்தது. காவியா சொல்வது அத்தனையும் உண்மை என்பதைக் கண்கூடாகக் கண்டுணர்ந்த மாதவி, முதலில் தன் பக்கத் தவறைச் சரிசெய்து கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

சிறு புன்னகையுடன் காவியாவிடம்,  "காவியா! உங்களைப் போல ஒரு நல்ல தோழி கிடச்சதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்! நன்றி, காவியா!" என்றவள், வினீத்தையும் அவன் நண்பர்களையும் அழைத்து,  "குழந்தைகளா! எனக்கு வேலை வைக்காமல் நீங்களே இந்த இடத்தை சுத்தம் செய்ததுக்கு ரொம்பவும் நன்றி, கண்களா! எல்லாரும் கொல்லைப்புறம் போய் கை கால் கழுவிட்டு வாங்க! எல்லாருக்கும் குடிக்க ஜூஸ் தரேன்." என்ற மாதவியைப் பார்த்து, கண் சிமிட்டி, கட்டைவிரல் உயர்த்தி வெற்றிச் சமிக்ஞை செய்தாள் காவியா.

****************************


25 comments:

 1. சிறப்பான கதையுடன் நல்ல பகிர்வு.குழந்தையிடம் அதிகம் பொறுமைகாக்க வேண்டுமென்பதும் அதுவே அன்பாகவும் உள்ளதென்றும் நானும் என் மகளிடம் கத்துக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 2. தொடர்பதிவுக்கிற்கெனவே எழுதிய கதைபோல்
  கதை மிகப் பொருத்தமாய் இருந்தது
  முன்னுரையும் மிக மிக அருமை.வாழ்த்துக்கள்
  த.ம 1

  ReplyDelete
 3. ஆகா... ஒரு நீண்ட கட்டுரையாகச் சொல்ல வேண்டியதை நறுக்கென்று சொல்லி மனம் நெகிழச் செய்தது சிறுகதை! அன்பு ஒன்றுக்கே குழந்தைகள் கட்டுப்படும் என்பது எத்தனை சத்தியமான ஒன்று. அருமை... வாழ்த்துக்களும், நன்றியும்!

  ReplyDelete
 4. சிறப்பான கருத்து கீதா. அருமையான கதை மூலம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. குழந்தைகளை புரிந்து கொண்டு பழகுவது அவர்களுக்கு தரும் ஒரு சிறந்த பரிசாகும். அவர்களுடைய எதிர்காலத்தையே பரிசளிக்கிறோம். தொடர்பதிவை அழகாக கொண்டு சென்றமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. சுய‍ அனுபவமும் அதை ஒட்டிய கதையும்
  அருமை

  த ம ஓ 2

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. அழகான அருமையான அசத்தலான பதிவு.
  பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 7. தமிழ்மணம்: 3

  என் பதிவுகளுக்கு அவ்வப்போது வருகை தந்திடும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னால் உங்கள் அனைத்துப்பதிவுகளுக்கும் வருகை தந்து பின்னூட்டமிட முடியாத சூழ்நிலைகள் ஏற்படுகிறது. முடிந்தபோது கட்டாயமாக வர முயற்சிக்கிறேன். அன்புடன் vgk

  ReplyDelete
 8. நல்லக் கட்டுரை & சிறுகதை.

  ReplyDelete
 9. அருமையான கருத்துக்கள் .அழகாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 10. @ thirumathi bs sridhar

  ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆச்சி. பல சமயங்களில் குழந்தைகள்தான் நமக்கு ஆசானாய் இருந்து புரியவைக்கிறார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  @Ramani,

  வாழ்த்தி, பாராட்டி, வாக்குப்பதிவுமிட்டு ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் அன்பான நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 11. தொடருக்கு வித்தியாசமான முறையில் பதிவு.குழந்தைப்பட்டாளங்களின் அட்டகாசங்களை அனுபவத்தோடு சொன்னமாதிரி இருக்கு சிறுகதை.குழந்தைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டேயிருக்கலாம் !

  ReplyDelete
 12. அருமையான கதை...
  அழகாக எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. நீண்ட காலம் நிறைய செலவு செய்து பெருங்கோயில் கட்டிய ஒரு சிவபக்தன் அழைத்து இறைவன் செல்லவில்லை. பூசலார் நாயனார் மனதிற்குள் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்திற்கு இறைவன் விருப்புடன் போனானாம். குழந்தைகள் கோயில் கட்டி விளையாடுவது இறைவன் தானே தன்வீட்டைக் கட்டி விளையாடுவது போல. கடவுள் குழந்தையாகத்தான் இருக்கிறார் எப்போதும். குழந்தைகள் சிரிக்கும்போது கடவுள் சிரிக்கிறார். அவை அழும்போது கடவுளும் அழுகிறார். அவை விளையாடும்போது கடவுளும் விளையாடுகிறார். குழந்தைகள் உலகத்தில்தான் கடவுள் இருக்கிறார் மலைகளிலும் கோபுரங்களிலும் கருவறைகளிலும் இல்லை. கருவறையில்தானே இருந்துதானே வருகின்றன குழந்தைகள். அருமையான கதை. எளிமையான சொற்பிரயோகம்.

  ReplyDelete
 14. சிறப்பான ஒரு மழலை உலகிற்கு அழைத்துச் சென்றமைக்கு மிக்க நன்றிகள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

  ReplyDelete
 15. @ கணேஷ்

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  @சாகம்பரி

  \\குழந்தைகளை புரிந்து கொண்டு பழகுவது அவர்களுக்கு தரும் ஒரு சிறந்த பரிசாகும். அவர்களுடைய எதிர்காலத்தையே பரிசளிக்கிறோம்.\\

  உன்னதமான வாக்கியம் சொல்லியிருக்கீங்க. பெற்றோர் அனைவரும் புரிந்துகொண்டு நடக்கவேண்டும். கருத்துக்கு நன்றி சாகம்பரி.

  @ புலவர் சா இராமாநுசம்

  கருத்துக்கும் வாக்குப்பதிவுக்கும் மிகவும் நன்றி ஐயா.

  ReplyDelete
 16. @ வை.கோபாலகிருஷ்ணன்

  வருகைக்கும் வாக்குப்பதிவுக்கும் நன்றி சார். தங்கள் சிரமம் அறிவேன். தங்களால் இயன்றபோது வருகை தாருங்கள்.

  @ வேங்கட ஸ்ரீனிவாசன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

  @ angelin

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 17. அசத்தலான அருமையான குழந்தைப்பதிவு.
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 18. அடிக்கும்போது குழந்தைகளிடம் இருந்த முரட்டுக்குணம் அடியை நிறுத்தியபின் காணாமற்போனது. எப்படியெல்லாம் என் பிள்ளைகள் வளரவேண்டுமென்று விரும்பினேனோ அப்படியே என் பிள்ளைகள் வளர்ந்தார்கள்.

  கருத்தும் கதையும் மிக அருமை. எளிமையாய் அழகாய் கதை சொல்லத் தெரிகிறது.

  ReplyDelete
 19. தினத்தந்தி போன்ற பத்திகைகளில் அடிக்கடி வரும் சம்பவங்கள் தான் இவை. சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 20. கரைப்பார் கரைத்தால் ....என்ன ஒரு அருமையான கதை. அற்புதம்


  முந்தைய பின்னூட்டம்
  வேறு ஒரு பதிவிற்காக எழுதியது. தவறுதலாக இங்கு பதிவாகிவிட்டது. மன்னிக்கவும்

  ReplyDelete
 21. மிகவும் சிறப்பான பதிவு பாராட்டுகள்

  ReplyDelete
 22. @ ஹேமா,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா. குழந்தைகள் பற்றிய உங்கள் பதிவு மனங்கலங்க வைப்பதாய் உள்ளது.

  @ ரெவெரி,
  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரெவெரி.

  @ ஹரணி,
  குழந்தைக் கடவுள்கள் பற்றி அழகானதோர் பின்னூட்டமிட்டு பதிவுக்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள். மிகவும் நன்றி சார்.

  ReplyDelete
 23. @ ♔ம.தி.சுதா♔
  முதல் வருகைக்கும் ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி மதிசுதா.

  @ அன்புடன் மலிக்கா,
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மலிக்கா.

  @ ரிஷபன்,
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரிஷபன் சார்.

  @ சிவகுமாரன்,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன்.

  \\முந்தைய பின்னூட்டம்
  வேறு ஒரு பதிவிற்காக எழுதியது. தவறுதலாக இங்கு பதிவாகிவிட்டது. மன்னிக்கவும்\\
  புரிந்துகொண்டேன்.

  @ மாலதி,
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மாலதி.

  ReplyDelete
 24. அழ‌கிய‌ ப‌திவில் அருமையான‌தொரு க‌தை! நானும் அப்போதெல்லாம் கோப‌த்தில் அதிலும் ம‌ற்ற‌வ‌ர் மேலுல்ல‌ கோப‌த்துக்கு வ‌டிகாலாக‌வும் குழ‌ந்தைக‌ளை அடித்த‌துண்டு. ஒருக‌ட்ட‌த்தில் உண‌ர்ந்து நானாக‌ அப்ப‌ழ‌க்க‌த்தை க‌ஷ்ட‌ப்ப‌ட்டு விட்டொழித்தேன். இப்போதெல்லாம் அவ‌ர்க‌ள் எதிர்த்துப் பேசினாலும், மாற்றுக் க‌ருத்தை தைரிய‌மாக‌க் கூறினாலும், ந‌ம் க‌ருத்தை அடியோடு ஏற்க‌ ம‌றுத்தாலும் நாம் பார்த்து பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ர்க‌ள் ந‌ம‌க்கு கீழ்ப்ப‌டியாம‌ல் போவ‌தா என‌ கோப‌ம் வ‌ருவ‌த‌ற்கு ப‌தில், சிந்திக்க‌வும் த‌ன் க‌ருத்தை துணிவோடு சுத‌ந்திர‌மாக‌ கூற‌வும், த‌ன‌க்கென‌ சில‌ கொள்கைக‌ள் வ‌குத்து அதிலிருந்து மாறாதிருக்கும் ம‌ன‌ வ‌லிமை பெற்றிருப்ப‌துமாக‌ வ‌ள‌ர்த்திருக்கிறோமென‌ப் பெருமித‌ப் ப‌ட‌க் க‌ற்றுக் கொண்டேன். வாத‌ங்க‌ள், த‌ர்க்க‌ங்க‌ள் எங்க‌ளுக்குள் நிக‌ழ்ந்தாலும் வ‌லிமையுள்ள‌ க‌ருத்து ஜெயிக்கிற‌து. நாங்க‌ள் தெளிவ‌டைகிறோம்.

  ReplyDelete
 25. மிகச்சரியான கருத்தைச் சொல்லியிருக்கீங்க நிலாமகள். குழந்தைகளின் வளர்ச்சி ஆரோக்கியமானதாயிருந்தால் முதலில் பெருமைப் படுவது பெற்றோர்களாகத்தானே இருக்கவேண்டும்! அழகானக் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.