11 February 2016

வணக்கமும் வாழ்த்தும்


இன்று எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் நல்லாசானும் வழிகாட்டியுமான எங்கள் மாமனார் திரு.சொ.ஞானசம்பந்தன் அவர்களுடைய 90-ஆவது பிறந்தநாள். இறகுப்பேனா காலம் தொட்டு இன்றைய கணினிக்காலம் வரை எழுத்தோடு இணக்கமாயிருப்பவர். வாசிப்பின்றி நகராது அவரது நாள் ஒவ்வொன்றும். அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரைப்பற்றிய சிறப்பான தகவல்களை இங்கு அனைவரோடும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.



11-02-1926-ல் புதுச்சேரியின் காரைக்காலில் பிறந்தவர். பிரெஞ்சு மொழிவழி மேனிலை வரை பயின்று, அரசு தொடக்கப்பள்ளியில் பிரெஞ்சு ஆசிரியராய்ப் பணியாற்றியவர். பணியாற்றும்போதே தமிழைக் கற்று, புலவர் பட்டமும் பெற்று அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளல், ஓய்வுக்குப் பிறகான உளச்சோர்வை விரட்டும் உத்திகளுள் ஒன்று என்று அறிந்த அவர், புதிதாய் இந்திமொழியைக் கற்றுத்தேர்ந்ததோடு சமஸ்கிருத மொழிபற்றிய அறிமுக வகுப்புகளுக்கும் ஆர்வமாய் சென்றுவந்தார். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ந்த ஞானம் கொண்ட அவர், தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?, லத்தீன் இலக்கிய வரலாறு, பிரெஞ்சு இலக்கிய வரலாறு, மாப்பசான் சிறுகதைகள், சிங்க வேட்டை, மறைந்த நாகரிகங்கள் என இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்குமுன் நன்கு திட்டமிடலும் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து தெளிதலும் அவசியம் என்பதை அறிவுறுத்தியவர். வரவுசெலவுகளைத் துல்லியமாய்க் கணக்கிட்டு வரவைக் கூட்டி செலவைக் குறைக்கும் உத்தியைக் கற்றுத்தந்தவர். சேமிப்பும் சிக்கனமும் சில்லறைகளுக்கு மட்டுமல்ல.. மின்சாரம், தண்ணீர், காகிதம் என்று நாம் புழங்கும் ஒவ்வொன்றுக்கும் தேவை என்பதை செயலால் உணர்த்தியவர். விஷச்செடிகளான பார்த்தீனியத்தை அழிக்க சவக்கார நீர் உதவும் என்று அறிந்த நாள்முதலாய், துணி ஊறவைத்த சோப்புநீரை வீணாக்காமல் வாளியில் சுமந்துகொண்டுசென்று தெருவோரம் மண்டிக்கிடக்கும் பார்த்தீனியச்செடிகளின் மேல் ஊற்றிவருவார்.

குழந்தைகளோடு விளையாடும்போது குழந்தையாகவே மாறிவிடுவார். பேரப்பிள்ளைகளுக்கு நிகராகசொல்லப் போனால் இன்னும் சிலபடிகள் இறங்கி விளையாடுவார். 1+1 எவ்வளவு என்பாள் பேத்தி. 11 என்பார் தாத்தா. ஐயோ தாத்தா உங்களுக்கு கணக்கே தெரியல.. இருங்க நான் சொல்லித்தரேன் என்று கணக்கு சொல்லிக்கொடுப்பாள். பேரப்பிள்ளைகளிடத்தில் பயில்வதற்காகவே தன்னை ஏதுமறியாப் பேதையாக்கிக் கொள்ளும் பெருமைமிகு தாத்தா அவர்.

நேற்று என்ன குழம்பு என்று என்னைக் கேட்டாலே பெரிதாய் யோசிப்பேன். ஆனால் பல வருடங்களுக்கு முன் தன் பால்யத்தில் நிகழ்ந்தவற்றைக்கூடத் துல்லியமாய் நினைவில் வைத்திருந்து குறிப்பிடும் எங்கள் மாமனாரின் நினைவாற்றலை வியக்காமல் இருக்கமுடியவில்லை. எங்களோடு பகிர்ந்தவை யாவும் பாழாய்ப்போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில் அவருடைய சம்மதத்துடன் அவருக்கென ஒரு வலைப்பூவைத் துவக்கினோம். ஆரம்பத்தில் தாளில் அவர் எழுதித்தர நான் தட்டச்சு செய்து பதிந்தேன். நாளடைவில் தானே தட்டச்சு செய்து பதிவை வெளியிடக் கற்றுக்கொண்டுவிட்டார். இப்போது வாரந்தவறினாலும் வலையில் அவருடைய பதிவுகள் வரத்தவறுவதில்லை.

வியட்நாம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பணியாற்றிய அனுபவங்கள், ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் மேற்கொண்ட பயண அனுபவங்கள், அந்நாளைய கப்பல் பயணம் முதல் மாட்டுவண்டிப் பயணம் வரையிலான அனுபவங்கள், அந்தக்கால வாழ்க்கை முறை, அந்நாளைய விளையாட்டுகள், அந்நாளைய திருமண முறை, தேர்தல் முறை, அந்நாளைய பழமொழிகள் இவை தவிர கதைகள், நகைச்சுவைப் பதிவுகள், தமிழ் இலக்கியப் பகிர்வுகள், ரசிக்கவைக்கும் பல சுவையான பிரஞ்சு ஆக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் என பல்சுவைப் பதிவுகளால் நிரம்பியது இவரது தளமான இலக்கியச்சாரல் 

எழுத்தயர்வு எனக்கேற்படும்போதெல்லாம் மாமாவை எண்ணிக் கொள்வேன். இந்த வயதிலும் அவர்கள் எழுதுவதையும் வாசிப்பதையும் தொய்வின்றித் தொடர்வதை நினைத்த மாத்திரத்திலேயே என் சோர்வெலாம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடும். நல்லாரோக்கியத்துடனும் நெஞ்சம்நிறை மகிழ்வுடனும் அவர் இன்னும் பலகாலம் நம்மோடு இனிதே வாழவேண்டும் என்ற பேராவலோடு என் மனம்நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.





46 comments:

  1. எங்களது வாழ்த்துகளும் வணக்கங்களும். இலக்கியச் சாரல் வலைப்பூ அறிமுகத்திற்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  3. தங்களது மாமாவிற்கு என் வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ப்ரியா.

      Delete
  4. உங்கள் மாமனார் பன்மொழி ஆசிரியர் திரு.சொ.ஞானசம்பந்தன் அவர்களுடைய 90-ஆவது பிறந்தநாளில், அவருக்கு என்னுடைய அன்பு வணக்கங்கள்! உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வணக்கத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  5. ஆசான் ஞானசம்பந்தம் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஐயாவின் ஆசிகள் வேண்டி வாழ்த்துகின்றோம்.
    நினைவலைகளோடு தொடரும் வாழ்த்தலைகள் அருமை அக்கா.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி நிஷா.

      Delete
  7. மாமா அவர்களை பற்றி அருமையான தகவல்கள் ..அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கு ..இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா அவர்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆம். அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் செய்திகள் ஏராளம். வாழ்த்துக்கு நன்றி ஏஞ்சலின்.

      Delete
  8. 1
    தங்களின் மாமனார் பற்றிய சிறப்புச் செய்திகளை நான் அவரின் வலைத்தளம் வழியே ஏற்கனவே நன்கு உணர்ந்து யூகித்திருந்தாலும், தங்கள் வழியே இந்தப்பதிவின் மூலம் கேட்கும்போது தனி ஆனந்தமாகத்தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இலக்கியச்சாரலுக்குத் தொடர்ச்சியாக வருகை தரும் தாங்கள் நிச்சயம் அவரைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  9. 2
    90 ஆண்டுகள் வாழ்ந்து தங்கள் குடும்பத்தினர் எல்லோருக்குமே மிகச்சிறந்த வழிகாட்டியாக இருந்துவரும் மாமனிதருக்கு என் நமஸ்காரங்களைத் தங்கள் மூலம் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவர் மேலும் அறிவுடனும், ஞாபக சக்தியுடனும், நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்யத்துடனும், மிகவும் சந்தோஷத்துடனும், நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து நம் எல்லோருக்குமே தன் பதிவுகளின் மூலம் வழிகாட்டிட, நாம் இறைவனைப் பிரார்த்திப்போம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய அன்பான பிரார்த்தனைகளுக்கு மனம் நிறைந்த நன்றி சார்.

      Delete
  10. 3
    //எந்த ஒரு செயலையும் செய்வதற்குமுன் நன்கு திட்டமிடலும், அதன் சாதகபாதகங்களை ஆராய்ந்து தெளிதலும், அவசியம் என்பதை அறிவுறுத்தியவர். வரவுசெலவுகளைத் துல்லியமாய்க் கணக்கிட்டு வரவைக் கூட்டி செலவைக்குறைக்கும் உத்தியைக் கற்றுத்தந்தவர். //

    இதனைக்கேட்கவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அந்தக்கால மனிதர்களில் பலரும் இப்படித்தான் இருந்துள்ளார்கள். நானும் இன்றுவரை ஓரளவு இவைகளை அப்படியே கடைபிடித்துத்தான் வருகிறேன்.

    இருப்பினும் நம் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்வதை நிறுத்திக்கொண்டுள்ளேன் .... அவர்கள் காலம் வேறு .... நம் காலம் வேறு .... என்பதை நன்கு உணர்ந்துகொண்டு விட்டதால் மட்டுமே.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மாமாவும் தங்களைப் போலத்தான். அறிவுரையோ ஆலோசனையோ கேட்டால் மட்டுமே சொல்வார்கள். தானாக பிறர் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். நாங்களாக அவரிடமிருந்து கற்றப் பாடங்கள்தாம் அனைத்தும்.

      Delete
  11. 4
    //எழுத்தயர்வு எனக்கேற்படும்போதெல்லாம் மாமாவை எண்ணிக் கொள்வேன். இந்த வயதிலும் அவர்கள் எழுதுவதையும் வாசிப்பதையும் தொய்வின்றித்தொடர்வதை நினைத்த மாத்திரத்திலேயே என் சோர்வெலாம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடும்.//

    ஆஹா, நல்ல மாமனார் ..... நல்ல மருமகள். :) இருவருக்கும் என் அன்பான இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல் இன்று அவர் பெருமையால் நானும் மகிழ்ந்து பெருமிதம் கொள்கிறேன். மிகவும் நன்றி சார்.

      Delete
  12. ஐயாவின் ஆசிகள் வேண்டி நானும்...
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் கிட்டும். தங்கள் வருகைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி.

      Delete
  13. ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்,,

    நல்ல மாமனார் ,,வாழ்த்துக்கள் சகோ,,

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி மகேஸ்வரி.

      Delete
  14. ஐயா அவர்களுக்கு எங்களது வணக்கங்களும்,வாழ்த்துக்களும்....

    மேலும் அவரது மேன்மையான வலைப்பூவை அறிமுக படுத்தியதற்கு மிகவும் நன்றி ...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி அனுராதா.

      Delete
  15. நல்ல மாமனார் தங்களுக்கு மாமனார் மட்டுமின்றி ஒரு நல்ல ஆசானாக அமைந்ததும் மிகச் சிறப்பான ஒன்று, இறைவனின் அருளும். அவரது பெருமைகளை இங்குப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ. நாங்களும் ஒரு நல்ல மனிதரை, எழுத்தாளரைக் குறித்து அறிய முடிந்ததே. மாமா அவர்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது. இலக்கியச்சாரல் தளம் சென்று வாசிக்கின்றோம் சகோ.

    அவரது ஆசிகள் வேண்டி எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! மாமா அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அழகான கருத்துக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிகவும் நன்றி கீதா & துளசி சார்.

      Delete
  16. மாமியார் மெச்சிய மருமகள் கேள்விப்பட்டதுண்டு. மருமகள் மெச்சும் மாமனாரைப் பற்றிய பதிவு அருமை, கவிதையோ மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வாழ்வியல் வழிகாட்டியாய் இருக்கும் ஒரு மாமனிதரைப் பற்றி எழுதுவதில் எனக்குத்தானே பெருமை. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete
  17. முக நூலில் பார்த்திருந்தாலும் இங்கும் உங்கள் மாமனாருக்கு வணக்கங்களையும் நல்ல உடல் நலத்திற்குப் பிரார்த்தனையும் சமர்ப்பிக்கிறேன். கலையரசி சகோதரி, நீங்கள் எல்லாம் உறவினர் என்று அறிந்து மகிழ்ச்சி. அருமையான இலக்கியக் குடும்பம் :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ். இலக்கிய ஆர்வமும் தமிழார்வமும் உள்ள குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாய் இருப்பதில் அகமகிழ்கிறேன்.

      Delete
  18. அற்புதமான மனிதரை, தமிழ் அறிஞரை
    மிக மிக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    அவருடைய பதிவுகளின் இரசிகன் நான்.
    அவர் தங்களின் மாமனார் என அறிய
    கூடுதல் சந்தோஷம்.
    அவர் பல்லாண்டு பல்லாண்டு உடல் நலத்தோடும்
    தமிழ் சுகத்தோடும் வாழ அன்னை மீனாட்சியை
    வேண்டிக் கொள்கிறோம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

      Delete
  19. உங்கள் மாமனாருக்கு முதல் என் நமஸ்காரங்கள். அப்புறம் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வணக்கத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  20. எனக்கு அன்புடன் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் அகமார்ந்த நன்றி . பதிவுக்கு மிக்க நன்றி . ஒரு சிறு தகவலையும் விட்டுவிடாமல் பதிந்தமை வியப்பளிக்கிறது . நான் இந்தி கற்றபோது என் ஐயங்களை நீ தீர்த்து வைத்தாய் என்பதை நான் சொல்லியாக வேண்டும் . சிறந்த கவிதை ; இறுதி அடிகள் அருமை , 90 முடிந்து 91 ஆம் பிறந்த நாளை நேற்று நெருங்கிய உறவுகளோடு கொண்டாடினேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. தங்களைப் பற்றி இன்னும் ஏராளமாய் எழுதலாம். ஆனால் பதிவின் நீளம் கருதியே நிறுத்தவேண்டியதாயிற்று.

      Delete
  21. அய்யாவைப் பற்றி அறிந்து வியந்தேன். எத்தனை ஞானம் மிக்கவர். அய்யாவின் ஆசியோடு அவரது தளத்தை பின் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஐயாவின் தளத்தைத் தொடர்வதற்கும் மிகவும் நன்றி செந்தில்.

      Delete
  22. வாழ்க வளமுடன் ஐயா .
    கனடா வேலா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.