26 January 2016

மானடியன்ன.. மயிலடியன்ன…


அவசரத்தில் மானாட.. மயிலாட என்று வாசித்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.. மானடி பற்றியும் மயிலடி பற்றியும்தான் இங்கு நாம் பார்க்கவிருக்கிறோம்.

மானின் குளம்பினைப் போன்று பிளவுபட்டத் தோற்றங்கொண்ட இலைகளைக் கொண்ட அடும்பங்கொடியில் மலர்ந்திருக்கும் பூக்களைப் பார்த்தால் குதிரையின் கழுத்துமணிகளைப் போன்று இருக்கிறது. ஒளிபொருந்திய அம்மலர்களைச்சூடியிருக்கும் பெண்கள் கடற்கரையில் மணல்வீடுகட்டி விளையாடுவர். பறவைகள் அங்கு பெரிதாய் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டப் பரந்தக் கடற்கரைக்கு உரிய தலைவனை நான் எந்நேரமும் நினைந்துகொண்டிருப்பதால்தான் உறக்கமிழந்து தவிக்கின்றன என் கண்கள். அவனை இனி நினைக்கமாட்டேன்.. ஆதலால்.. என் கண்களே… உறங்குங்கள் என்கிறாள் ஒரு தலைவி. ஓயாமல் தலைவனை எண்ணியபடி துயிலாதிருக்கும் தலைவியை சற்றே துயிலுமாறு வற்புறுத்தும் தோழிக்கு அவள் அளிக்கும் பதில் இது.

மானடி யன்ன கவட்டிலை யடும்பின்    
தார்மணி யன்ன வொண்பூக் கொழுதி    
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்    
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை     
உள்ளேன் றோழி படீஇயரென் கண்ணே

(நம்பி குட்டுவன்குறுந்தொகை 243)

இந்தப் பாடலில் அடும்பின் இலைக்கும் பூவுக்கும் காட்டப்பட்டிருக்கும் உவமைகள்தாம் என்னவொரு அழகு. அடம்பன் கொடியைப் பலரும் பார்த்திருக்கக்கூடும். இது கடற்கரையோரங்களில் மணற்பாங்கான பகுதிகளில் வெகுபரவலாய்ப் படர்ந்து காணப்படும். பூத்திருக்கும் நாட்களில் கத்தரிநிற மலர்க்கூட்டம் கண்களுக்கு வெகு அழகு. அதனால்தான் அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு என்கிறது ஒரு பழமொழி.




இக்கொடி அடும்பு என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் நெய்தல் திணைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. இதன் இலை ஆட்டின் பிளவுபட்டக் குளம்பின் அடித்தடத்தைப் போலிருப்பதால் ஆங்கிலத்தில்  goat’s foot என்று குறிப்பிடப்படுகிறது. சங்க கால புலவர் ஒருவருக்கு இது மானின் பிளவு பட்ட குளம்பையொத்து இருப்பதாகத் தோன்றுகிறது. இப்போது ஆடுகளை இயல்புவாழ்க்கையில் எளிதாகப் பார்க்கமுடிவது போல் இயற்கையோடு இயைந்துவாழ்ந்த அந்நாளில் மான்களையும் மிக எளிதாகப் பார்க்கமுடிந்திருக்கிறதுபோலும். அதனால் தன் பாடலில் அடும்பிலைக்கு உவமையாக மானின் காலடியைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமா?



அடும்பின் புனல் வடிவப் பூக்களைப் பார்க்கும்போது அவருக்கு என்ன தோன்றுகிறதாம்? குதிரையின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியைப் போல் இருக்கிறதாம். என்ன அழகான பொருத்தமான உவமைகள்.

மானடி பார்த்தோம். அடுத்து மயிலடி பற்றி சங்க இலக்கியப்பாடல் சொல்வதென்ன?

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே 

(கொல்லன் அழிசி – குறுந்தொகை 138)

முந்தைய இரவு, தலைவனின் வருகையை எதிர்பார்த்து தலைவியும் தோழியும் உறங்காமல் காத்திருந்தும் தலைவன் வரவில்லை. மறுநாள் தோழி தலைவனை சந்திக்கிறாள். நான் வந்தேன் ஆனால் நீங்கள் உறங்கிவிட்டீர்கள் என்று அவன் சொல்வதற்கு இடந்தராமல் தோழி சொல்கிறாள், “இந்தப் பெரிய ஊரே தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாலும் நாங்கள் நேற்றிரவு உறங்கவில்லை. எங்களுடைய வீட்டிற்கு அருகிலிருக்கும் ஏழில்குன்றின் மேலுள்ள, மயிலின் காலடியைப் போன்ற இலைகளைக் கொண்ட கரிய பூங்கொத்தை உடைய நொச்சியின் மெல்லிய காம்புகள் நீலமணி போன்ற மலர்களை உதிர்க்கும் ஓசை கூட எங்களுக்குக் கேட்டது. நீ வந்திருந்தால் எங்களுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும் “ என்று அவன் வரவில்லை என்பதை உறுதிபடக் குறிப்பிடுகிறாள்.




மேலும் சில காட்டுகள்..
மயிலடி யன்ன மாக்குர னொச்சியும்
(நற்றிணை 115)
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
(நற்றிணை – 305 – கயமனார்)

இந்தப் புலவர்களுக்கு நொச்சியிலையைப் பார்த்தால் மயிலின் காலடி நினைவுக்கு வருகிறது என்றால் இன்னொரு புலவருக்கு மயிலின் காலடியைப் பார்த்தால் நொச்சியிலை நினைவுக்கு வருகிறதாம்.

நொச்சிப்பா சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை 
(திருவிளையாடற்புராணம் -417 –பரஞ்சோதி முனிவர்)
(நொச்சியின் பசுமையான இலைகளைப் போன்ற பசிய கால்களை உடைய மயில்)

நொச்சியின் இலையும் மயிலின் காலடியும் ஒன்றுக்கொன்று உவமையாகக் காட்டப்படுவது ரசிக்கவைக்கிறது அல்லவா? எந்த அளவுக்கு இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கூர்ந்து கவனித்திருந்தால் இவற்றைப் போன்ற இயல்பான.. வெகு பொருத்தமான உவமைகளைத் தங்கள் பாடல்களில் ஏற்றிப் பாடியிருக்க முடியும்? 


&&&&&&&&&&&
(படங்கள் உதவி - இணையம்)

26 comments:

  1. அழகான விளக்கம்... மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. அடம்பன் கொடிகள் கடற்கரைஒட்டிய குளத்தில் ஓரமாய் அழகாக பூத்திருக்கும்,அப்போது அதன் அருமை தெரியவில்லை.ரசித்ததும் இல்லை.இம்மாதிரி பாடல்கள் தான் இயற்கையை ரசிக்க வைக்கும் ஆர்வத்தினை தருகின்றது.

    மானடி,மயிலடி
    மானடியன்ன, மயிலடியன்ன தலைப்பே ரசிப்புக்குரியதாய் இருக்கின்றது!விளக்கம் அருமை அக்கா!

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களைப் போலத்தான் நிஷா.. பக்கத்தில் இருக்கும்போது பெருமை தெரியவில்லை. படிக்கும்போதுதான் புரிகிறது. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி நிஷா.

      Delete
  3. என்ன ஒரு இயற்கை வர்ணனையுடன் தலைவன் வரவில்லை என்பதை அழகுறச் சொல்லியிருக்கிறார்...//மயிலின் காலடியைப் போன்ற இலைகளைக் கொண்ட கரிய பூங்கொத்தை உடைய நொச்சியின் மெல்லிய காம்புகள் நீலமணி போன்ற மலர்களை உதிர்க்கும் ஓசை கூட எங்களுக்குக் கேட்டது.// நொச்சி இலையை, செடியைப் பார்த்ததுண்டு. இலையை சளித் தொல்லைக்கு நீரிலிட்டுக் கொதிக்கவைத்து ஆவி பிடித்ததும் உண்டு. ஆனால் இப்படிப்பட்ட வர்ணனை, மயிலின் காலடி என்று நினைவுக்கு வரவில்லையே!! புலவரின் கண்களுக்கு எப்படியெல்லாம் தெரிந்து கற்பனைச் சிறகு விரித்திருக்கிறது!!

    அதே போன்று முதல் பாடலில்....//அடம்பன் கொடியைப் பலரும் பார்த்திருக்கக்கூடும்.// ஆம்! ஆனால் கற்பன?!! இப்படிச் சொல்லும் போது இனி அவற்றைக் காணும் போது இந்த உவமைகள் எல்லாம் நினைவுக்கு வரும்! இயற்கையை ரசிப்பதும் கூடும்! அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ/தோழி.

    ReplyDelete
    Replies
    1. சிறுமியாய் இருக்கையில் வீட்டருகே நொச்சி மரம் இருந்தது. ஆனால் அதன் இலைவடிவம் பற்றியெல்லாம் அப்போது கவனம் இருந்ததில்லை.. இப்போது இலக்கியங்களில் வாசிக்கும்போதுதான் நிறைய தவறவிட்டதுபோல் தோன்றுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா & துளசி சார்.

      Delete
  4. நல்ல பாடல், நல்ல விளக்கம். இரண்டாவது பாராவின் முதல் வரி ரொம்ப நீளம்!!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது பாராவை இப்போது சற்றுத் திருத்தியுள்ளேன். பாடலின் பொருள் மாறாமல் இருக்க அப்படியே தொடர்ச்சியாக எழுதிவிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  5. //எங்களுடைய வீட்டிற்கு அருகிலிருக்கும் ஏழில்குன்றின் மேலுள்ள, மயிலின் காலடியைப் போன்ற இலைகளைக் கொண்ட கரிய பூங்கொத்தை உடைய நொச்சியின் மெல்லிய காம்புகள் நீலமணி போன்ற மலர்களை உதிர்க்கும் ஓசை கூட எங்களுக்குக் கேட்டது. நீ வந்திருந்தால் எங்களுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும்//

    //அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு என்கிறது ஒரு பழமொழி.//

    மிகவும் அழகான பதிவு. விளக்கங்கள் அனைத்தும் அருமை. ரஸித்தேன். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்த வரிகளைச் சுட்டிக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  6. விளக்கமுடன் படங்களும் தந்தமை சிறப்பு! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  7. எத்தனை அழகாய் உவமை......

    சிறப்பான பாடல்களையும் அதன் விளக்கத்தினையும் இங்கே பகிர்ந்து எங்களையும் ரசிக்கச் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  8. ஒன்றுக்கு மேற்பட்ட பொருண்மைகளில் ஆர்வமும் அறிவும் இருந்தால் மட்டுமே இவ்வாறான பகிர்வுகளைத் துணிவோடு பகிர முடியும். தாங்கள் அதனைச் சிறப்பாகச்செய்கின்றீர்கள். தங்களது எழுத்துக்கு மனமுவந்த பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் மனந்திறந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. மானடியும் மயிலடியும் உங்கள் அடிகளில் அழகாக வந்துவிட்டனவே :)
    இனிய பாடல்கள், பகிர்விற்கும் அழகான விளக்கத்திற்கும் நன்றி கீதமஞ்சரி.

    இங்கு மான்கள் அதிகம் பார்க்கலாம், ஆடுகளைக் காண முடியவில்லை :)

    ReplyDelete
    Replies
    1. மான்களைப் பார்க்கமுடியும் என்றறிய மகிழ்ச்சி கிரேஸ். வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி தோழி.

      Delete
  10. அழகான விளக்கமா,,, தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி.

      Delete
  11. சுவை மிக்க விளக்கம் . பாராட்டுகிறேன் . எனக்குத் தெரீயாத சில தாவர நுட்பங்களை அறிந்தேன் , நன்றி .

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  12. சங்க இலக்கியத் தேன் சுவைக்கத் தந்தமைக்கு நன்றி தோழி...
    நொச்சிப் பூ உதிரும் சத்தம் கேட்குமளவு நித்திரை குலைந்தமை கற்பனை செய்ய வெகு வியப்பு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலாமகள்.. அந்தக் காலத்திய புலவர்களின் கற்பனையை என்னவென்று சொல்வது...

      Delete
  13. பல்லுயிர் சமநிலை கெடாமல் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்க கால மாந்தரில் துலங்கிய புலவர் பெருமக்களின் இலக்கியப் பங்களிப்பு நமக்கும் பூரிப்பளிக்கும் விதமாய். அவர்களின் ரசனையும் உற்றுநோக்கலும் மாண்புடையது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழி.. எவ்வளவு ரசனையான வாழ்க்கை... இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் வாழ்வியலில் கலந்தும், வாழ்வை இயற்கையோடு கலந்தும் என அது ஒரு அழகான காலம்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.