20 February 2016

ஆடும் குதிரை அழகுக்குதிரை..ஆடும் மரக்குதிரைகளை அறியாதவருண்டா? பணக்கார வீடுகளில் இருக்கும் அல்லது பரம்பரை பரம்பரையாய் சில வீடுகளில் இருக்கும். அதிலாடும் பாக்கியம் பெற்றோர் நம்மில் சிலரே உண்டு. அந்நாளைய திரைப்படங்களிலும் இந்த ஆடும் குதிரைகள் இடம்பெற்றதுண்டு.சில வருடங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு இயந்திரக் குதிரை பொம்மைகளைப் பரிசாக அளித்ததைப் பார்த்தபோது அட, அந்த ஆடும் மரக்குதிரைகள் இப்படி மறு உருவாக்கம் பெற்றுவிட்டதா என்று எண்ணி வியந்தேன். அதன்பிறகு இங்கு ஆஸியிலும் ஷாப்பிங் மால்களில் திடீரென இந்தப் பொம்மைக்கடைகள் முளைத்து குழந்தைகள் மாடு, குதிரைகளில் உற்சாகத்துடன் வலம்வருவதைப் பார்த்தேன். புதிய கண்டுபிடிப்பு என்றுதான் நினைத்திருந்தேன் இந்தப் பாடலை சமீபத்தில் பார்க்கும்வரை 1962-லேயே தென்னிந்திய திரைப்படமொன்றில் இடம்பெற்றிருக்கிறதே ஆடும் மரக்குதிரையும் உந்தியோடும் இயந்திரக்குதிரையும். இரண்டும் போதாதாம் அந்தச் சின்னக்குட்டிக்கு.. மாமன் முதுகில் ஆனை ஊர்வலமும் அழகு.

video


கம்பீரத்துக்கும் பாய்ச்சலுக்கும் பெயர் போன குதிரைகள், வீரத்திற்கும் சவாலுக்கும் அடையாளமாய் படைகளில் உயிரோடும், அழகுக்கும் ஒய்யாரத்துக்கும் அடையாளமாய் பொய்க்கால் குதிரையாட்டம் என கலைத்துறையில் உணர்வோடும் காலங்காலமாக இடம்பெறுவது சிறப்பென்றால் விளையாட்டுக்கும் ஏதுவாக குழந்தைகளுக்குதான் எவ்வளவு விதவிதமானக் குதிரைப்பொம்மைகள்.. பார்த்து ரசிக்கலாம் வாங்க. 
(படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவையே)

24 comments:

 1. மலர்ந்தன அந்நாளைய நினைவுகள்! முதல் படத்திலிருப்பது போன்ற குதிரை, மஞ்சள் நிறத்தில் உண்டு. இரண்டாவது குதிரை போல தம்பி மகனுக்கு வாங்கப்பட்டது. (படம் ஃப்ளிக்கரில் பகிர்ந்திருக்கிறேன்). போக சின்னக் குழந்தைகள் விழுந்து விடாமலிருக்க என் அப்பா சீட் வைத்து தானே வடிவமைத்து வாங்கிய பச்சைக் குதிரை ஒன்றும் வீட்டில் இருந்தது. நான் அதில் ஆடும் படமொன்று எப்போதோ ஒரு பதிவில் பகிர்ந்திருந்தேன் :)!

  அருமையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. அழகான மலரும் நினைவுகள்.. கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 2. இன்றைய குழந்தைகள்தான் விளையாட்டினையே மறந்துபோய் விட்டார்களே

  ReplyDelete
  Replies
  1. மெய் விளையாட்டுகள் விடுத்து பொய் விளையாட்டுகளில் மோகம் பெருகிவிட்டது. உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 3. இந்தமாதிரி குதிரை விளையாட்டெல்லாம் மொபைல் கேம்ஸில் உள்ளதா?

  ReplyDelete
  Replies
  1. ஹா.. ஹா.. விளையாடும் குழந்தைகளைத்தான் கேட்கவேண்டும் ஐயா. ஓட்டப்பந்தயத்தையும் கூட உட்கார்ந்துகொண்டே விளையாடிக்களிக்கும் காலம் இதுவாயிற்றே.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 4. மிகவும் அழகான அசத்தலான பதிவு.

  காட்டியுள்ள காணொளி பாடல் மிகவும் இனிமை.

  இந்த மரக் குதிரைகளைப் பார்க்கும் போதே நம் சிறு வயது நினைவலைகள் மனதில் பூத்து, நாமும் குழந்தையானதுபோல மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன.

  நானும் என் சிறுவயதில் வேறொருவர் வீட்டில் இந்த மரக்குதிரையில் ஏறி ஆசையாய் ஆடிய நினைவு எனக்கு வந்தது.

  என் பிள்ளைகளுக்கும் இதுபோலெல்லாம் ஏதேதோ வாங்கிக்கொடுத்துள்ளேன்.

  இன்று என் பிள்ளைகள் இன்னும் நவீனமான ஏதேதோ தங்கள் குழந்தைகளுக்கு வாங்கித்தந்து கொண்டிருகிறார்கள்.

  அழகிய பகிர்வுக்கு மீண்டும் என் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. காலத்துக்கேற்றாற்போல் பொம்மைகள் விளையாட்டுப் பொருட்கள் ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே வந்தாலும் பழைமையின் பெருமை என்றும் மாறாது. அதை அனுபவித்தவர்களால் மறக்கவும் முடியாது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு சார்.

   Delete
 5. பதிவைப் படித்ததும், எனது அப்பாவும் அம்மாவும், எனது சிறு வயதில், போட்டோ ஸ்டுடியோவில், என்னை மரக்குதிரையில் உட்கார வைத்து படம் எடுத்தது நினைவுக்கு வந்தது. அந்த போட்டோ இன்னும் எங்களிடம் உள்ளது. எனது தங்கையையும் பின்னாளில் அவ்வாறே படம் எடுத்துக் கொண்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அந்தக்காலத்தில் எல்லா வீடுகளிலும் இந்த மரக்குதிரை இருந்திருக்கவில்லை என்பதால் ஸ்டூடியோவில் வைத்திருந்து புகைப்படமாவது எடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள் போலும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 6. இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் இனிய நினைவுகளைத் தூண்டி மகிழச்செய்தமைக்காக மிகவும் மகிழ்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 7. இளமைக் கால இனிய நினைவுகள் மனதிற்கு வந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய இளமைக்கால நினைவுகளை மீளக்கொணர்ந்து மகிழச்செய்தமைக்காய் மகிழ்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 8. ஆஹா கீதா பழைய நினைவுகளை எழுப்பிவிட்டீங்க. முதலாவது குதிரை எனக்கே எனக்காக செய்து தந்தார் அப்பா.15 வயது வரை இருந்தது வீட்டில். 2வது படத்திலிருப்பது இங்கிருக்கும் ஷாப்பிங்க மால்களில் வந்திருக்கு. கடைசிபடத்திலிருக்கும் குதிரையிலும் நான் ஆடியிருக்கேன் ஆனா அது நர்ஸரியில். மகிழ்ச்சியும்,நன்றியும் கீதா பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.. அருமை. அப்பாவின் கைவண்ணத்தில் உருவான குதிரை என்றால் ஸ்பெஷல்தான். நர்ஸரியில் ஆடியது கூட நினைவிலிருப்பது வியக்கவைக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.

   Delete
 9. பாரம்பரிய விளையாட்டு குதிரையை அறிமுகப்படுத்தி அதன் நவீன வடிவத்தையும் சொன்ன விதம் அருமை!
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. அந்த திரைப்பாடலைப் பார்த்தபிறகுதான் இந்தக் குதிரை பொம்மைகளின் பாரம்பரியம் மற்றும் நவீன வடிவம் குறித்து எழுதத் தோன்றியது. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி செந்தில்.

   Delete
 10. இளமைக்குச் சென்று வந்தேன்!
  தம +1

  ReplyDelete
  Replies
  1. நானெல்லாம் இந்தக் குதிரைகளைப் பார்த்து ஏங்கியதோடு சரி.. ஒருமுறை கூட ஏறி விளையாட வாய்ப்பு அமையவில்லை.. உங்களுக்கு அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது என்பது உங்கள் பதிலால் தெரிகிறது. மிகவும் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. சிறு வயது நினைவுகளை மீட்டெடுத்தது - இப்படி மரக் குதிரை கிடைக்காமல் ஏங்கிய நினைவுகள் தான்! இது போன்ற பொம்மைகளை பார்த்ததோடு சரி. பாடல் மிக இனிமை.....

  ReplyDelete
  Replies
  1. அப்படியானால் நீங்களும் என் கட்சிதான். நானும் ஏங்கியதோடு சரி.. அனுபவித்தது இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   Delete
 12. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! என்று பாடினோம் உங்களின் இந்தப் பதிவு வாசித்து. குதிரைகளில் ஆடியதுண்டு. அருமையான பதிவு...பாடலும் அருமை

  கீதா: மேற் சொன்ன கருத்துடன்....குதிரை வண்டி (விளையாட்டுப் பொம்மை) ஓட்டியதுண்டு. நீளமாகக் கம்பில் நுனியில் குதிரை பொம்மை சக்கரத்துடன் ஓட்டியதுண்டு. இப்படிப் பல பழைய நினைவுகளை மீட்டியது உங்கள் பதிவு. மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
  Replies
  1. கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்முடைய பால்யத்தின் அழகான நினைவுகளை மீட்டெடுக்க முடிவதில்தான் எவ்வளவு சந்தோஷம். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி துளசி சார் & கீதா.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.