ஆங்கிலம் உலகளாவிய மொழியாக இருந்தாலும்
அதைப் பேசும் இடத்துக்கேற்ப உச்சரிப்பும் தொணியும் மாறுபடும் என்பதை நாம் அறிவோம். அவற்றுள் ஆஸ்திரேலிய
ஆங்கிலம் ஒரு தனிவிதம். கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய
மண்ணில் ஐரோப்பியக் குடியேற்றம் நிகழ்ந்தபோது இங்கிருந்த முற்றிலும் மாறுபட்ட
சூழலும் சுற்றுப்புறமும், புதிரான மனிதர்களும், புதிய வாழ்க்கை முறையும், இதுவரை அறிந்திராத உயிரினங்களுமாக பல
புதிய வார்த்தைகளை உருவாக்கும் அவசியத்தை உண்டாக்கின.
சென்னையில் புழங்கிய தமிழோடு ஆங்கிலம், இந்தி, உருது, கன்னடம், மார்வாரி, தெலுங்கு
இன்னபிற மொழிகள் கலந்து ஒரு புதிய பாணியை உருவாக்கியது போல் ஆஸ்திரேலியக் குடியேறிகளின் தேவை நிமித்தம்
புதிதாய் உருவாக்கப்பட்ட வார்த்தைகளும், நாடுகடத்தப்பட்டுக்
கொண்டுவரப்பட்ட கைதிகளின் கொச்சை மொழிவழக்கும், ஐரோப்பியக் குடியேறிகளின் அநேக
மொழிகளும், ஆஸ்திரேலிய சொந்த மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரின் மொழிகளும்
அவர்களால் பேசப்பட்ட கற்றுக்குட்டி ஆங்கிலமும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தானிய
ஆங்கிலத்தோடு பின்னிப்பிணைந்து ஒரு புதிய பாணியிலான ஆங்கிலம் உருவாகக் காரணமாயின. இதுவரை கிட்டத்தட்ட பத்தாயிரம் புதிய
ஆஸ்திரேலிய ஆங்கிலச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன என அறியப்பட்டுள்ளது.
புதிதாக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள், என்னதான் ஆங்கிலத்தில் புலமை
பெற்றிருந்தாலும், ஆஸ்திரேலிய ஆங்கிலத்தைப் பழகிக்கொள்ளும் வரை சற்று தடுமாற்றத்துடனேயே
எதிர்கொள்ள நேரிடும். இது
குறிப்பாக நியூ சௌத் வேல்ஸ் அல்லாத மாநிலங்களுக்குத்தான் அதிகமாகப் பொருந்தும்.
என் மகளுக்கு
நேர்ந்த அனுபவம் இது. அப்போது குவீன்ஸ்லாந்தில் அவள் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவள் படித்த பள்ளியில்
அனைவரும் ஆஸ்திரேலிய மாணவர்கள். ஒருநாள் அவள் பள்ளிவிட்டு வெளியே வரும்போது சக மாணவன், அவளிடம் ‘Hei, How (are) you going?’ என்று கேட்க, இவள் சிரத்தையாக ‘I’m
going by bus’ என்றாளாம். அவன் சற்று திகைத்துவிட்டு
மறுபடியும் அதையே கேட்க இவள் மறுபடியும் அதையே சொல்ல, அவன்
சிரித்துவிட்டுப் போய்விட்டானாம். பிறகுதான் தெரியவந்திருக்கிறது ‘How you going?’ என்றால் ‘how are
you?’ - எப்படியிருக்கிறாய்? எப்படிப்போகிறது
வாழ்க்கை? என்று கேட்போமே.. அப்படி என்பது.
ஆரம்பப்பள்ளிகளில்
ஒரு வழக்கம் இருந்தது. பிள்ளைகளுக்கு காண்டீனில் ஏதாவது உணவு தேவைப்பட்டால் பெற்றோர்
காலையிலேயே காண்டீனில் உணவுக்கு ஆர்டர் கொடுத்து பிள்ளைகளின் பெயரையும் வகுப்பையும்
குறிப்பிட்டு பணமும் கட்டிவிடவேண்டும். மதிய உணவு இடைவேளையில் உணவு சரியாக பிள்ளைகளுக்குப்
போய் சேர்ந்துவிடும். என் மகனும் ஒருநாள் காண்டீனில் சாப்பிட ஆசைப்பட்டான். சரியென்று
மகனை வகுப்பில் விட்டுவிட்டு, காண்டீனைத் தேடினேன். ‘Sports room’ ‘Tuck shop’ ‘uniform
shop’ ‘toilet’ என்றெல்லாம் பெயர்ப்பலகைகள் கண்ணில் தென்படுகின்றனவே தவிர canteen எங்குமே
இல்லை. விசாரித்தால் ‘Tuck shop’ தான் காண்டீனாம். ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் ‘Tucker’
என்றால் உணவு என்று பிறகு அறிந்துகொண்டேன்.
ஆஸ்திரேலியாவில் ஆரம்பகால நினைவுகள்
எல்லாமே வேடிக்கைதான். ஒருமுறை இந்திய நண்பர்களிடம் பேசும்போது பள்ளிவிழா அழைப்பிதழில் ‘Bring a plate’ என்றிருப்பதைக் குறிப்பிட்டேன். அப்படி சொல்லியிருந்தால் நாம்
போகும்போது ஏதாவது உணவு வகையைச் செய்து எடுத்துப் போகவேண்டும் என்றார்கள்.
நல்லவேளை, முன்கூட்டியே தெரிந்தது. இல்லையென்றால் function –இல் வெறும் தட்டுடன் போய் நின்றிருப்பேன்.
ஹென்றி லாசன்,
பேன்ஜோ பேட்டர்சன், பார்பரா பெய்ன்டன், ஜான் ஆர்தர் பெரி, லூயிஸ் பெக் போன்ற ஆஸ்திரேலிய
செவ்வியல் படைப்பாளிகளின் படைப்புகளின் வாசிப்பனுபவம்தான் எனக்கு ஆரம்பகால ஆஸ்திரேலிய
ஆங்கிலம் பற்றிய புரிதலை உண்டாக்கியது என்றால் அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி இன்னும் விசாலமாக்கியது
எனலாம். சாதாரண ஆங்கிலத்துக்கும் ஆஸ்திரேலிய
ஆங்கிலத்துக்குமான வேறுபாடு விளங்கியது. பலப்பல புதிய வார்த்தைகளின் பரிச்சயம் கிடைத்தது. பல வார்த்தைகள்
அவற்றுக்கான பொருளை விடுத்து வேறொன்றைக் குறிப்பது புரிந்தது. சாதாரண அகராதியை
விடுத்து ஆஸ்திரேலிய ஆங்கில அகராதியையும் ஆஸ்திரேலிய கொச்சைவழக்குக்கான
அகராதியையும் வாசித்துதான் முழுமையான அறிவைப் பெற முடிந்தது.
மொழிபெயர்ப்பை ஆரம்பிக்குமுன்
ஆஸ்திரேலிய வழக்குமொழிகளையும் கொச்சைமொழி வழக்கையும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியம்
ஏற்பட்டது. அதுவும் இன்றைய ஆஸ்திரேலிய மொழிவழக்கு இல்லை. இது நூற்றைம்பது இருநூறு
வருடங்களுக்கு முந்தைய மொழிவழக்கு. அப்போதுதான் ஆஸ்திரேலிய ஆங்கிலம் என்னும்
தனித்துவ ஆங்கிலம் உருவாக ஆரம்பித்த காலம். அறிந்துகொள்ள ஆரம்பித்தபிறகு
சுவாரசியம் மிகுந்துவிட்டது.
பொதுவாக Bush என்றால் புதர்
என்ற மட்டில்தான் நமக்குத் தெரியும். ஆனால் ஆஸ்திரேலியாவில் bush என்பது
புற்களும் அடர்த்தியான யூகலிப்டஸ் மரங்களும் நிறைந்த பகுதியாக இருக்கலாம், ஆங்காங்கு பரவலான குட்டையான ஆப்பிள் மரங்களைக் கொண்டிருக்கும் பகுதியாக இருக்கலாம், ஆளுயரப் புற்கள்
அதுவும் காய்ந்து மடிந்த புற்களால்
நிறைந்திருக்கலாம். இந்த இடத்தைத் தமிழில் எப்படிக்
குறிப்பது. காடு என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பச்சைப் பசேலென்று மரங்களும்
கொடிகளும் செடிகளுமான அடர்வனம். புதர் என்றால் குத்துப்புதர்கள்தாம் நினைவுக்கு
வரும். புதர்க்காடு, குறுங்காடு என்ற வார்த்தைகளை உபயோகித்தேன்.
ஆஸ்திரேலியர்களின்
ஆங்கில உச்சரிப்பும் வெகுவாக மாறுபடும்.
டே (day) என்போம் நாம். டெய் என்பார்கள் அவர்கள். Face என்பதை ஃபேஸ் என்போம் நாம்,
ஃபெய்ஸ் என்பார்கள் அவர்கள். Flour –
flower இரண்டுமே கிட்டத்தட்ட ஒரேமாதிரி ஃப்ளவர் என்று உச்சரிக்கப்படும். அதே
சமயம் பல வார்த்தைகளை சுருக்கி
நறுக்கி பேசுவதில் ஆஸ்திரேலியர்கள் கில்லாடிகள். பல ஆங்கில வார்த்தைகள்
செல்லப்பெயர்களைப் போலாகிவிட்டன.
நான் ஒரு ஆஸ்திரேலியன் என்று நீட்டி
முழக்கி சொல்வதற்கு பதில் நான் ஒரு ஆஸி (Aussie) என்று சட்டென முடித்துக்கொள்கிறார்கள்.
ஆங்கிலம் பேசும் பிற நாட்டவரை விடவும் ஆஸ்திரேலியர்தான் அதிகமாக வார்த்தைகளை
நறுக்கி உபயோகிப்பதாக 4300- க்கும் அதிகமான வார்த்தைகளின் மூலம் லெக்சிகன் அகராதி
ஆதாரப்படுத்துகிறது.
அவற்றுள் சில,
ஆஸ்திரேலியன் - ஆஸி,
காக்கி |
காக்ரோச், காக்கட்டூ – காக்கி
பிரேக்ஃபாஸ்ட் – பிரெக்கி
பிஸ்கட் – பிக்கி
லிப்ஸ்டிக் - லிப்பி
சாக்லேட்- சாக்கி
பா(ர்)பக்யூ – பா(ர்)பி
யுனிவர்சிடி – யுனி
ஆக்டோபஸ் – ஆக்கி
மஷ்ரூம் - மஷ்ஷி
பா(ர்)பி |
ஃபுட்பால் – ஃபூட்டி
போஸ்ட்மேன் – போஸ்டி
எக்ஸ்பென்சிவ் – எக்ஸி
ரிலேடிவ் – ரெல்லி
மஸ்கிடோ – மோஸி
ட்ரேட்ஸ்மேன் – ட்ரேடி
பிரிஸ்பேன் – பிரிஸ்ஸி
மோஸி |
கிறிஸ்மஸ் – கிறிஸ்ஸி
கோல்டு டிரிங்க்ஸ் – கோல்டிஸ்
அண்டர்பேண்ட்ஸ் – அண்டீஸ்
ட்ராக்சூட் பேண்ட்ஸ் – ட்ராக்கீஸ்
ஆக்வார்ட் – ஆக்ஸ்
அப்ஜெக்ஷன் - ஆப்ஸ்
மொபைல் – மோப்ஸ்
டோட்டலி – டோட்ஸ்
மெல்போர்ன் - மெல்ப்ஸ்
அவோ |
அவோகேடோ – அவோ
பிஸினஸ் – பிஸ்ஸோ
பிரதர் - ப்ரோ
டாகுமெண்டரி – டாக்கோ
ஜர்னலிஸ்ட் – ஜர்னோ
ஸ்மோக் ப்ரேக் - ஸ்மோக்கோ
ப்ராப்ளம் - ப்ராப்
கப் ஆஃப் டீ ஆர் காஃபி - கப்பா
குட் டே – கிடெய் (G’day)
கங்காரூ - ரூ
மேலே கண்டவற்றைக் கொண்டு
ஆஸ்திரேலியர்கள் வார்த்தைகளை முழுவதுமாய் உச்சரிக்கக் கூட இயலாத சோம்பேறிகள் என்ற
முடிவுக்கு வந்துவிட முடியாது. நேரடியாய் அர்த்தம் தரும் சில வார்த்தைகளை
அவற்றுக்கு மாற்றான வார்த்தைகளால் நீட்டிமுழக்கி சொல்வதும் உண்டு.
தமிழில் இடக்கரடக்கல்
கேள்விப்பட்டிருப்போம். மற்றவர் முன் கூறத்தகாத அநாகரிகமான அல்லது அமங்கலமான சில
சொற்களையும் சொற்றொடர்களையும் வேறு சொற்களாலும் சொற்றொடர்களாலும் நாசுக்காகக்
குறிப்பிடுவோம்.
கண்ணை மூடிவிட்டார் - இறந்துவிட்டார்
கயிறு - பாம்பு
பெரிய காரியம் - சாவு
விளக்கை அமர்த்து – விளக்கை அணை
கடை
கட்டிவிட்டார் - கடையை மூடிவிட்டார்
அவை தவிர நகைச்சுவையாகவும் சிலவற்றைக்
குறிப்பிடுவதுண்டு.
இந்தியன் காஃபி – வடித்த கஞ்சி
நீர் வாழைக்காய் – மீன்
நடராஜா சர்வீஸ் – நடந்து போதல்
வெஞ்சாமரம் (வெண்சாமரம்) பிஞ்சிடும் – விளக்குமாறு
பிய்ந்துவிடும்
ஆஸ்திரேலியர்களோ இடக்கரடக்கல் போன்ற
காரணம் எதுவுமில்லாமலேயே சுவாரசியத்துக்காக ரைமிங்கான வார்த்தைகளைப் போட்டு
சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கின்றனர். எளிமையாய் சொல்லக்கூடிய வார்த்தைகளையும் Australian slang எனப்படும்
ஆஸ்திரேலிய கொச்சைவழக்கில் நீட்டிமுழக்கி எப்படி சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
தக்காளி சாஸூக்கும் செத்த குதிரைக்கும்
என்ன சம்பந்தம்? ஒரு உணவுமேசையில் ‘அந்த செத்த
குதிரையை என் பக்கம் தள்ளு (Pass
me the dead horse)’ என்று யாராவது சொல்லக்கேட்டால்
பயந்துவிடாதீர்கள். அது தக்காளி சாஸைத்தான் குறிக்கிறது.
டொமேட்டோ சாஸ் (tomato sauce) - டெட் ஹார்ஸ் (dead
horse)
ஷேவ் (shave) - டாட் அண் டேவ் (Dad n’ dave)
கோல் (goal) - ஸாஸேஜ் ரோல் (sausage
roll)
வைஃப் (wife) – ட்ரபிள் அண் ஸ்ட்ரைஃப் (trouble and strife)
ஸிஸ்டர் (sister) – ப்ளட் ப்ளிஸ்டர் (blood
blister)
கிட் (kid) – டின் லிட் (tin lid)
சூட் (suit) – பேக் ஆஃப் ஃப்ரூட் (bag of fruit)
போலீஸ் (police) – டக்ஸ் அண் கீஸ் (ducks
and geese)
நியூஸ் (News) – நெய்ல் அண் ஸ்குரூஸ் (Nail and screws)
சிகரெட் (Cigarette) – ஃபர்கிவ் அண் ஃபர்கெட் (forgive and forget)
ரோட் (Road) – ஃப்ராக் அண் டோட் (frog and toad)
ட்ராம் (tram) – ப்ரெட் அண் ஜாம் (bread
and Jam)
இவை தவிர எழுத்தில் வடிக்க இயலாத அநேக
கொச்சை வார்த்தைகளும் ஆஸ்திரேலியர்களின் மத்தியில் புழக்கத்தில் உண்டு. அவற்றை
விட்டுத்தள்ளுவோம். இங்கு நான் ஆஸ்திரேலியர்கள் என்று குறிப்பிடுவது native speakers of Australia என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறேன். சுவாரசியம் கூட்டும் இன்னொரு
விஷயம் உண்டு. ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரும் அடுத்த மாநிலத்தவரை எப்படி
எப்படியெல்லாம் பட்டப்பெயர்கள் வைத்துக் கேலியாகக் குறிப்பிடுகிறார்கள் என்பதை அடுத்த
பதிவில் பார்க்கலாம்.
(தொடர்வேன்)
(படங்களுக்கு நன்றி: இணையம்)
(படங்களுக்கு நன்றி: இணையம்)
தொடர்ந்து வாசிக்க
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 4
முந்தைய பதிவு
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 1
சுவாரஸ்யம். ரொம்பச் சுவாரஸ்யம்.
ReplyDeleteஉடனடி வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டதற்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.
Deleteமிகவும் சுவாரஸ்யமாக நான் கவனித்தவற்றை
ReplyDeleteதாங்கள் எழுத்தில் வடித்தது படிக்க உற்சாகம் த்ருகிறது..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
Deleteவணக்கம்
ReplyDeleteபதிவை வாசிக்கும் போது சுவாரஸ்யமாக உள்ளது. தொடருங்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ரூபன்.
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாவ்!!! சூப்பர்!
ReplyDeleteஎங்கூரில் நம்மிடம் பேசும் ஆள் ஆஸி என்றறிய அவரை ஃபிஷ் அண்ட் சிப்ஸ் என்று சொல்லச் சொல்வோம்:-)))
ஃபீஷ் என்றால் அவர் ஆஸி. ஃபிஷ் என்றால் அவர் கிவி. :-))))
உண்மைதான் டீச்சர். நம்ம எம்.எஸ்.வி ஐயா மாதிரி ஒரு மாத்திரைக்கு இரண்டு மாத்திரை போட்டு பேசுகிறார்கள். உங்கள் அவதானிப்பு ரசிக்கவைத்தது. நன்றி டீச்சர்.
Deleteஆஸ்தி ரேலிய ஆங்கிலம் பற்றிய சுவையான தகவல்கள்.தொடரட்டும் .
ReplyDeleteபிஸ்கட் என்பதை நம்ம ஊரில் குழந்தைகள் பிக்கி என்று தான் சொல்வார்கள். அந்த எல்லோருமே அப்படித்தான் சொல்வார்கள் போலிருக்கிறது
ஆமாம் முரளிதரன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Deleteயம்மாடி...! இவ்வளவு இருக்கிறதா...?
ReplyDeleteநகைச்சுவையாக குறிப்பிட்டதும் ரசனை...!
வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.
Deleteவார்த்தைகளை நறுக்கிப் பேசும் ஆஸிக்களின் வழக்கம் சுவாரஸ்யம். இங்க நாம பேர்களைத்தான் சுருக்கி அப்டி கூப்படிறோம். (பத்மாவதி - பத்து, வரதராஜன் - வரதுங்கற மாதிரி. இதே மண்டோதரிய மண்டுன்னும பத்மாசனிண சனின்னும் சுருக்கினா உதைதான் விழும்.) உச்சரிப்பு வித்தியாசங்களை விவரித்தது (டே / டெய்) அருமை. ப்ரிங் எ ப்ளேட் என்பதற்குள்ள அர்ததமும் வெகு சுவாரஸ்யம். தொடர்கிறேன்.
ReplyDeleteஹா.. ஹா... பெயர் சுருக்கம் பத்தி அழகா சொன்னீங்க. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கணேஷ்.
Deleteசுவாரஸ்யமான பகிர்வு மிகவும் ரசித்தேன் .இந்தப் பட்டப் பெயர் வைத்துக்
ReplyDeleteகூப்பிடுவது என்பது உலகநாடு பூராவும் இருக்கும் போல :)) வாழ்த்துக்கள்
தோழி அடுத்துத் தொடரவிருக்கும் பகிர்வும் இதை விடவும் இன்னும்
சுவாரஸ்யமாக அமையட்டும் .
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteபடிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொன்றையும் அழகாக கோர்வையாகக் கொண்டுவந்து சொல்லியுள்ளது வியப்பளிக்கிறது.
ReplyDelete//நல்லவேளை, முன்கூட்டியே தெரிந்தது. இல்லையென்றால் function –இல் வெறும் தட்டுடன் போய் நின்றிருப்பேன்.//
;))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சிரித்தேன். ரஸித்தேன். ;)))))
தாங்கள் ரசித்து மகிழ்ந்தது கண்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி கோபு சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி.
Deleteமிக சுவாரஸ்யமான பகிர்வு கீதா.
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteமிக சுவாரஷ்யமாக இருந்தது. இனிமேல் ஏதாவது ஆஸ்திரேலியா சொல்போல் கேள்விப்பட்டால் உடனே உங்கள் தளத்திற்கு வந்து தேடல் வேண்டும். ஏதோ குழந்தைப் பிள்ளைகள் கதைப்பது போல் இருக்கின்றது. wife இக்கு நல்ல பெயர் வைத்திருக்கின்றார்கள்
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி சந்திரகௌரி.
Deleteஆஸி ஆங்கிலத்தை மட்டுமன்றி அவர்களது பழக்க வழக்கங்களைப் பற்றியும் உங்கள் பதிவின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் தாங்கள் எழுதும் நடையும் சலிப்பு தட்டாமல் செல்லுகிறது. தொடர்கின்றேன்!
ReplyDeleteத.ம.4
பதிவை ரசித்ததோடு எழுத்துநடையையும் பாராட்டி தாங்கள் அளித்த ஊக்கமிகு கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஓ! மிக விசித்திரமாக உள்ளது சுவையாகவும்.
ReplyDeleteநன்றி இனிய பதிவிற்கு.
vaalththudan
Vetha.Elangathilakam.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteதகவல்கள் சுவாரசியம்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.
Deleteநீங்கள் சொல்வது போல், இவர்கள் பெயர்களை அநியாயத்துக்கு சுருக்கிக்கொள்கிறார்கள். என்னுடன் பணிபுரியும் ஒரு ஆங்கிலேயரின் பெயர் "பீட்டர்" இந்த பெயரே மிகவும் சிறிய பெயர் தான். ஆனால் அதை அவர் "பி" என்று இன்னமும் சுருக்கி வைத்துக்கொண்டார். மற்றவர்கள் அவரை "பி" என்று அழைப்பதை கேட்டு கேட்டு எனக்கு "சீ" என்றாகிவிட்டது .
ReplyDeleteவருகைக்கும் உங்கள் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி சொக்கன்.
Deleteஒவ்வோரு விசயங்களும் ஆச்சர்யமாக இருக்கிறது.
ReplyDeletewww.killergee.blogspot.com
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
Deleteசாக்கி,பிக்கி என்பதெல்லாம் நம்மூர் குழந்தைகளிடம் பேசுவது போல் இருக்கிறதே!
ReplyDeleteமொழி ஒன்றானாலும் இடத்துக்குத் தக்கபடி மாறித்தான் விடுகிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குப்பு சுந்தரம்.
Deleteதெரிந்தோ தெரியாமலோ சில ஆசி வார்த்தைகள் இங்கும் புழக்கத்தில் உண்டு. பாலகணேஷின் அண்மைய பதிவில் அவர் நகைச் சுவையாக கோப்ரா என்று எழுதி இருந்தாரே. சுவாரசியமான பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமாங்க ஐயா. இப்போது உலகம் சுருங்கிக்கொண்டு வருவதால் பல வார்த்தைகளும் பல நாடுகளில் புழங்கப்படுகின்றன. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteநீங்க இத்தொடரை எழுதுவதென்று ஏன் இவ்ளோ தாமதமா முடிவு பண்ணீங்க கீத் ..(நம்மால முடிஞ்சா சுருக்கம்)அருமை ஆவலாக் காத்திருக்க வைக்கறீங்க....
ReplyDeleteஉங்கள் ஊக்கமிகு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி உமா.
Deleteஅறியாத தகவல்கள்...
ReplyDeleteதொடருங்கள் ..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனி.
Deleteவெகு சுவாரசியம். ஆஸ்திரேலியர்களின் ஆங்கிலமே இந்தப் பாடு என்றால், மற்ற நாட்டினரின் ஆங்கிலம் எப்படியோ... அதை ஆஸிகளிடம்தான் கேக்கணும்!!
ReplyDeleteஆமாம். அவங்களிடம்தான் கேக்கணும். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா...
Deleteபதிவுக்கு நன்றிகள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன்.
Deleteஆஸ்திரேலிய ஆங்கிலமும் சுவாரசியமாகவே உள்ளது. சுருக்கிய பல வார்த்தைகளை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.
Deleteநகைச்சுவை ததும்பி இருக்கிறது பதிவு முழுவதும் - bring a plate.... கேட்டிருந்தால் நானும் தட்டோடு போய் நின்றிருப்பேன்! :))))
ReplyDeleteபிக்கி, சாக்கி என்பதெல்லாம் நானும் பயன்படுத்துவேன் பெண்ணிடம் பேசும்போது!
ஹா... ஹா.. நாங்களும்தான்.. அது ஆஸி ஆங்கிலம் என்று இப்போதுதானே தெரிகிறது.
Deleteமிக அருமையான பயனுள்ள ஆராய்ச்சி Geetha! Well done !!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
Delete