18 June 2014

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 4


மறுபடி சென்னைத்தமிழுக்கு வருவோம். மதராஸப் பட்டிணம் என்றழைக்கப்பட்ட சென்னையில் ஆங்கிலம், உருது, இந்தி, சமஸ்கிருதம்தெலுங்கு போன்ற பலவித மொழிபேசும் மக்களும் கலந்துவாழ்ந்த, வாழ்கிற காரணத்தால் தமிழோடு அம்மொழி வார்த்தைகளும் கலந்து சென்னைத் தமிழ் என்றொரு தனிப்பாணி உருவானதை அறிவோம்.



சென்னையில் சாவுகிராக்கி, பேமானி, சோமாரி, கஸ்மாலம் போன்ற சில வசைச்சொற்கள் பிரசித்தமானவை. சென்னைவாழ் மக்களோடு இரண்டறக் கலந்து பழகியவர்களுக்கு அவை பரிச்சயமாகியிருக்கும். அப்படியான வாய்ப்பு அமையப் பெறாதவவர்கள் திரைப்படங்களில் பார்த்து அறிந்திருப்பார்கள். 

இந்தியில் நேர்மையற்றவன் என்ற பொருள்படும் பே-ஈமான் பேமானியாகிவிட்டது. முட்டாள் என்று பொருள்படும் பேவகூஃப் பேக்கு என்றாகிவிட்டது. கபோதி என்றால் கண்பார்வையற்றவன் என்று பொருள். அறிவுக்கண் இல்லாதவனை ஏசுவதற்கு உதவுகிறது அவ்வார்த்தை.


கஸ்மாலம்? ‘சம்ஸ்கிருதத்தில் மனநோயை கச்மலம்' என்று சொல்வார்கள். இதுவே, கஸ்மாலம் என்றாகிவிட்டது. ஒருவரைத் திட்டுவதற்கு இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் சென்னைவாசிகள்தான் கஸ்மாலம்' என்று இச்சொல்லை அதிகமாக உபயோகிப்பார்கள். இதற்கு மோசமான மனதைக் கொண்டிருப்பவன்' என்று பொருள்என்று தன்னுடைய வழக்குச் சொல் விளக்கம்நூலில் குறிப்பிடுகிறார் சி.என்.துரைராஜ் அவர்கள்.


ஜல்தி, ஜரூர், நாஷ்டா, ஜோர், தமாஷ் போன்றவை இந்தியிலிருந்தும் ரீல் (reel), ரசீது (receipt), அக்கிஸ்டு (accused), ராங் (wrong), கரீட்டு (correct), பிகிள் (bugle) போன்றவை ஆங்கிலத்திலிருந்தும் டப்பு, நைனா, துட்டு போன்றவை தெலுங்கிலிருந்தும் வந்தவை என்று அறியமுடிகிறது. ‘சோறு, மெய், வலி (இழு), கடாசு போன்ற தூயதமிழ் சொற்களோடு இஸ்கூல், இஷ்டார், கிஷ்ணாயில் போன்ற புதிய வார்த்தைகளையும் அறியமுடிகிறது. பட்டாசுதான் டப்பாசு என்பது புரிகிறது. பேஜார் என்பது தொல்லைஎன்ற பொருள்படும் இந்தி வார்த்தை என்று நான் நினைத்திருக்க badger என்னும் ஆங்கில வார்த்தை என்கிறது விக்கிபீடியா.

சரி, இவற்றையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? ஆஸி ஆங்கிலம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா? ஆஸி ஆங்கிலத்திலத்திலும் இதுபோல் கலந்துருவான வேற்றுமொழி வார்த்தைகள் நிறைய உள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம் இப்போது.



ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பிலும் அதைச் சுற்றியுள்ள தீவுகளிலுமாக கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளாக பல்வேறு குழுக்களாகவும், பல்வேறு வாழ்க்கைமுறைகளையும் கலாச்சாரங்களையும் பின்பற்றுபவர்களாகவும் வாழ்ந்திருந்த பூர்வகுடி மக்களிடையே 300-க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக ஐரோப்பியக் குடியேற்றத்தின் ஆரம்பகால ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல்வேறு பூர்வகுடி மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் கலந்துவிட்ட பல வார்த்தைகளில் சிலவற்றை இங்கு அறிந்துகொள்வோம்.

ஆஸ்திரேலிய விலங்குகள்பறவைகள்மரங்கள் பலவற்றின் பெயர்கள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மொழிகளிலிருந்தே பெறப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு


கங்காரு



ப்ரோல்கா

வாம்பேட்


பில்பி



காலா


கூக்கபரா
கங்காரூ, கோவாலா, கூக்கபரா, வாம்பேட், டிங்கோ, காலா, வல்லபி, வல்லரூ, நம்பேட், ப்ரோல்கா, பில்பி, பட்ஜரிகர், பாராமுண்டி (ஒரு வகை மீன்) போன்ற பல.

இவற்றுள் சிலவற்றைப் பற்றி ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் தொடரின் மூலம் முன்பே அறிந்திருப்பீர்கள்.

காலா (galah) என்னும் ஆஸ்திரேலிய பூர்வகுடி வார்த்தை காக்கட்டூ பறவையைக் குறிக்கும் அதே வேளையில் எதையும் எளிதில் முடிக்கும் சாமர்த்தியமற்ற அசமஞ்சங்களையும் குறிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பல இடங்கள் அவற்றுக்கான பூர்வகுடிப் பெயர்களாலேயே இன்றும் வழங்கப்படுகின்றன. உதாரணத்துக்கு

பாராமட்டா, இலவாரா, ஜீலாங், குல்காங், பல்லாரட், டூவூம்பா, வாகா வாகா, டேன்டனாங் போன்ற ஏராளமானவை...

இவை தவிர ஆஸி ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள சில பூர்வகுடி வார்த்தைகள்

பில்லபாங் 

பில்லபாங் (billabong) ஆற்றில் வெள்ளம் கரைமீறும்போது அல்லது மழை பொழியும்போது மட்டும் நீர்நிறையும் ஆற்றோர குட்டைகள்.

பூமராங்
பூமராங் (boomerang) வேட்டைக்கும் விளையாட்டுக்கும் பயன்பட்ட மரத்தாலான பல்வேறு வடிவங்களிலான உபகரணம். எல்லா வகை பூமராங்குகளும் எறிந்தவரிடம் திரும்பி வருவதில்லை. குறிப்பிட்ட வடிவத்தில் உள்ள சில பூமராங்குகள் குறிப்பிட்ட திசையில் செலுத்தப்படும்போது வட்டப்பாதையில் பயணித்து எறிந்தவரின் கரங்களை மீண்டும் வந்தடைகின்றன. பெரும்பாலானவை இலக்கைக் குறிவைத்துத் தாக்கப் பயன்படுபவை.

ஹம்ப்பி
ஹம்ப்பி (humpy) – பூர்வகுடிகள் வாழ்ந்த, மரப்பட்டைகளால் ஆன சின்னஞ்சிறு குடிசை.

வில்லி வில்லி (willy willy) – சூறாவளி புழுதிப்புயலுக்குப் பூர்வகுடிப் பெயர். (சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?)

பேன்டிகூட்
பூர்வகுடி பெயர்கள் தவிர தெலுங்கு வார்த்தை ஒன்றும் ஆஸி ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. என்ன தெரியுமா? பேன்டிகூட் என்பதுதான் அது. தெற்காசியப் பெருச்சாளிகளைப் போன்ற தோற்றத்திலிருந்தமையால் பேன்டிகூக்கூ என்னும் தெலுங்கு வார்த்தை பேன்டிகூட் ஆனதாம்.

காஸோவரி, காக்கட்டூ இவற்றின் மூலம் மலாய மொழி என்றால் ஈமு வந்தது அரபு மொழியிலிருந்தாம். அரபு மொழியில் மிகப்பெரிய பறவை என்று பொருளாம்.

காக்கட்டூ
காஸோவரி
ஈமு

ஆனால் 1800 முதல் புழங்கப்படும் ஆஸ்திரேலிய மார்சுபியல் குட்டிகளைக் குறிக்கும் வார்த்தையான ஜோயி (joey)-ன் மூலம் எதுவென்று இன்னும் அறியப்படவில்லை.

நேரடியான வசைச்சொற்களாக இல்லாவிடினும் ஒருவனது குணாதிசயங்களைக் குறிக்கும் சில புதிய வார்த்தைகள் 1800-களில் ஆஸி ஆங்கிலத்தில் இடம்பெற்றன.

போகன் (bogan) – தறுதலை

லாரிக்கின் (larrikin) – பொறுப்பிலி

சன்டோனர் (sundowner) – சோம்பேறி (காலை முதல் மாலை வரை வேலை எதுவும் செய்யாமல் போக்கு காட்டிவிட்டு மாலையில் உணவுநேரத்தில் சரியாக வந்து சேர்ந்துகொள்பவர்

ரவுஸபவுட் (Rouseabout) – கத்துக்குட்டி

ஜாக்கரூ (Jackaroo) – பண்ணைகளில் வேலைசெய்து அனுபவமில்லாத புதிய வந்தேறி இளைஞர்கள்.

ஜில்லரூ (Jillaroo) – ஜாக்கரூவுக்கு பெண்பால்.

ஃபோஸிக்கர் (Fossicker) – கைவிடப்பட்ட சுரங்கக்குழிகளில் ஏதாவது கிடைக்குமா என்று கிளறித் தேடுபவர்கள். நம் நாட்டில் நகைக்கடை இருக்கும் தெருக்களில் சாக்கடைகளில் சாக்கடை நீரை அரித்து தங்கம் தேடுபவர்களைப் போன்றவர்கள் எனலாம்.

குறுங்காட்டுப் பகுதியில் பிறந்துவளர்ந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் bush man, bush woman, bush children என்று குறிப்பிடப்பட்டனர்.

swagmen
நமக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால்உடனே உன் பெட்டி படுக்கையை சுருட்டிக்கொண்டு கிளம்புஎன்போம். இப்படித்தான் பெட்டி படுக்கையுடன் திரிந்திருக்கிறார்கள் ஆரம்பகால ஐரோப்பிய வந்தேறிகள். ஆனால் பெட்டி கிடையாது. படுக்கையினுள் தன்னுடைய அன்றாடத் தேவைக்கானப் பொருட்களையும் சில உணவுப் பொருட்களையும் வைத்து சுருட்டி ஒரு மூட்டை போல் முதுகில் சுமந்தபடி வேலை தேடி குறுங்காட்டிலும் மேட்டிலும், பாலையிலும் கால்நடையாக பயணித்திருக்கிறார்கள் அவர்கள். அந்த முதுகுப்பை அல்லது மூட்டை swag எனப்பட்டது. அதைச் சுமந்து செல்பவர்கள் swagman எனப்பட்டனர்

billy
அவர்கள் தங்களுடன் முதுகுப்பை அல்லாது billy எனப்படும் மூடியும் பிடியும் கொண்ட தகரக் குவளையையும் எடுத்துச் செல்வர். நாள்கணக்கான, வாரக்கணக்கான நடைப்பயணத்தில் தாங்கள் செல்லும் வழிகளில் கிடைக்கும் மரக்குச்சிகள் மற்றும் மரப்பட்டைகளைக் கொண்டு தீமூட்டி நெருப்புக்கு மேலாக யூகலிப்டஸ் மரக்கிளைகளை ஊன்றி அவற்றில் இந்தக் குவளையைத் தொங்கவிட்டு தேநீர் தயாரித்தனர்.

இரண்டு வழிப்போக்கர்கள் சந்தித்துக் கொண்டால் இரவு நேரங்களில் ஏதேனும் மரத்தடியில் தங்கி தங்கள் கதைகளைப் பரிமாறிக்கொள்வர். அது  Yarning எனப்பட்டது. நேரடியாக பொருள் கொண்டால் சரடு திரித்தல் எனலாம். கதை கட்டுதல், புனைதல் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் முற்கால ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் அது ஒருவருக்கொருவர் இடையிலான உரையாடலைக் குறிக்கும். அதில் புனைவுகளை விடவும் உண்மை நிகழ்வுகளே இடம்பெற்றிருந்தன.

ஆஸி ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் நாம் நினைப்பதற்கு மாறான பொருளைத் தருவதும் உண்டு.

சூதாடி என்ற பொருள்படும் Spieler என்ற ஜெர்மானிய வார்த்தை ஆஸி ஆங்கிலத்தில் மோசடிப் பேர்வழியைக் குறிக்கும்.

டிங்கோ நாய்கள்
டிங்கோ என்பது காட்டில் வேட்டையாடி உணவுண்ணும் நாயினம். This morning, I had dingo’s breakfast என்று எவராவது சொன்னால், டிங்கோ போல் வயிறு புடைக்க உணவுண்டுவிட்டு வந்திருக்கிறான் என்று நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் அது தவறு. காலையுணவாக எதுவுமே உண்ணவில்லை என்பதுதான் சரியான பொருள்.

இதை எழுதும்போது எழுகிறது பள்ளிக்கால ஞாபகம் ஒன்று. சகமாணவி ஒருத்தி தினமும் காலையில் ஐஸ் பிரியாணி சாப்பிட்டேன் என்று சொல்லும்போது தினமும் பிரியாணியா என்று பொறாமையாக இருக்கும். ஆனால் அவள் குறிப்பது பழைய சோற்றை என்று தெரியவந்தபோது பொறாமை பரிதாபமாக மாறியது.

Curly என்று வழுக்கைத் தலையரையும் bluey என்று செம்மயிர்த் தலையரையும் குறிப்பது முற்காலத்தில் வழக்கத்திலிருந்திருக்கிறது.

இதைப்போல இன்னொரு முரண்வேடிக்கை கையில் பந்தை வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டை கால்பந்து என்பது.

socceroos
இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டியை உலகமே ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதை அறிவோம். ஆஸ்திரேலியர்கள் football- ‘footy’ என்று சொல்வார்கள் என்று பார்த்தோம் அல்லவா? இரண்டும் ஒன்றுதானே என்றால் இல்லை, இல்லை அதுவேற இதுவேற என்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை football என்றால் Australian Ruels Football எனப்படும் ஆஸ்திரேலியக் கால்பந்து விளையாட்டு மட்டும்தான்.  இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு soccer என்ற பெயரால் மட்டுமே அறியப்படும். இதில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய அணியின் பெயர் Socceroos.

Aussie Rules Footy
ஆஸ்திரேலிய கால்பந்தாட்டத்தின் பந்து, ரக்பி பந்தைப் போன்று நீள்வட்டமாக இருக்கும். விளையாடப்படும் மைதானமும் நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். பதினெட்டு வீர்ர்களைக் கொண்டு விளையாடப்படும் இவ்விளையாட்டில் இரண்டு உயரமான கம்பங்களுக்கிடையில் பந்தை உதைத்து அனுப்புவதன் மூலம் வெற்றிக்கான புள்ளிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. கால்பந்தாட்டம் என்ற பெயர்தானே ஒழிய பெரும்பான்மையான நேரம் Rugby விளையாட்டைப் போல பந்தைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாதாரண கால்பந்தாட்டத்தை விடவும் ஆஸி ரூல்ஸ் ஃபூட்டிக்கும் ரக்பிக்கும் தான் இங்கு ரசிகர்கள்  அதிகம்.

ஆஸி ஆங்கிலத்தின் சுவாரசியங்களில் மாதிரிக்கு சிலவற்றை இதுவரை பகிர்ந்துகொண்டேன். அனைவரும் ரசித்தீர்கள்தானே? ஊக்கம் தரும் கருத்துக்களை உடனுக்குடன் வழங்கி சிறப்பித்த அனைவருக்கும் நன்றி

************
(படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து பெறப்பட்டவையே. உரிய தளங்களுக்கு நன்றி)

40 comments:

  1. பல தகவல்களை அறியக்கூடியாத இருந்தது,நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புத்தன்.

      Delete
  2. படித்தும் கேட்டும் அறிந்த தகவல்களை அழகாகப் பகிர்ந்து விட்டீர்கள். ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருந்தாலும் உங்களைப் போல நினைவில் வைத்துக் கொள்ளமுடியுமா என்பது ஐயமே. அருமையான தகவல் பகிர்விற்கு நன்றி கீதமஞ்சரி. ஆஸியில் இருக்கும் என் தோழியைவிட எனக்கு ஆஸி பற்றி அதிகம் தெரியும் என்று பெருமை பட்டுக்கொள்ளலாம், உங்கள் தளத்தால். :)
    சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன், இத்தளத்தில். http://sangamliteratureinenglish.blogspot.com/
    பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் தோழி. தளத்தைப் பகிர்ந்தும் கொள்ளுங்கள். நன்றி. - கிரேஸ்

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி கிரேஸ். சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் பதிவிடும் உங்களுடைய முயற்சி பெரிதும் வரவேற்கத் தக்கது. இனிய பாராட்டுகள்.

      Delete
  3. அடேங்கப்பா ! மிகப்பெரிய பதிவு !!

    ஒவ்வொரு வரியாக வார்த்தைகளாக முழுவதும் படித்து ரஸித்துக் களைத்துப்போனேன். ;)

    எழுத்துக்கள் தெளிவாக பெரிய SIZE FONT இல் இருப்பதால் படிக்க சுலபமாகவும் ஆசையாகவும் உள்ளது.

    தகவல்கள் சேகரிக்க மிகப்பெரிய உழைப்பு உழைத்துள்ளீர்கள்.

    எல்லாமே படிக்க மிகவும் சுவாரஸ்யமான தகவல்களாக இருந்தன.

    ஆங்காங்கே பொருத்தமான படங்களுடன் பதிவு அசத்தலாக உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பெரிய பதிவாயினும் பொறுமையுடன் வாசித்துப் பாராட்டி ஊக்கமிகு வார்த்தைகளால் கருத்துரைத்த தங்களுக்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  4. Curly ஆகிக் கொண்டிருக்கிறதே என் தலை என்று கொஞ்சம் வருத்தம் இருந்தது. இப்ப போயே போச். சென்னைத் தமிழ் வார்த்தைகளின் பின்ணணி ஆராய்ச்சி பிரமாதம். நான்கு பாகங்கள் வெகு சுவாரஸ்யமாக நிறையப் புதிய விஷங்கள் தெரிந்து கொள்ள முடிந்ததாய் உங்களுடன் நேரில் அரட்டையடித்த ஃபீலிங் தந்தது.

    ReplyDelete
    Replies
    1. உங்க பாணியில் நகைச்சுவையான பின்னூட்டம். மிகவும் ரசித்தேன். நன்றி கணேஷ்.

      Delete
  5. Replies
    1. பதிவை ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete
  6. Anonymous18/6/14 23:56

    Aha... Now I can call myself Curly....not baldly anymore...That sounds way better....Thanks...

    ReplyDelete
  7. மிகவும் சுவாரஸ்யமான விளக்கங்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  8. சென்னைத் தமிழுக்கு அகராதியே இருக்காது என்று சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் அந்த கூற்றை பொய்யாக்கி, சென்னைத் தமிழில் புழங்கப்படும் வார்த்தைகளுக்கு, அவை எவ்வாறு புழக்கத்தில் வந்திருக்கும் என்று சொல்லிவிட்டீர்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பல தகவல்கள் இணையத் தேடலில் கண்டெடுத்தவையே. அவற்றை முறையாகத் தொகுத்தும் அவற்றோடு என் அனுபவங்களையும் கருத்துகளையும் இணைத்தும் வெளியிட்டேன். தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சொக்கன்.

      Delete
  9. பலப்பல தகவல்களை அறிய முடிந்தது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன்.

      Delete
  10. பலரும் அறியாதத் தகவல்களைத் தேடித்தரும் உங்கள் ஆர்வமும் diligence-ம் எனக்கு மிகவும் பிடிக்கும். வலையே ஆனாலும் அதில் எழுதப் படுபவைக்காக நீங்கள் மெனக்கெடுவது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. செய்வதைத் திருந்தச் செய்யவேண்டும் அல்லவா? ஒரு பதிவை எழுதி பல முறை அதை வாசித்து திருத்தங்கள் செய்து மனத்துக்கு நிறைவு உண்டான பின்னரே பதிவிடுவது வழக்கம். தங்கள் பாராட்டு மிகவும் மகிழ்வைத் தருகிறது. நன்றி ஐயா.

      Delete
  11. வணக்கம் தோழி!..

    எத்தனை கடும் உழைப்பு இப்பதிவிற்காய்... பிரமித்துப் போனேன்.

    அறிந்திராத பல சொற்கள், வழக்கங்கள் இப்படி ஒரு தொகுப்பே பதிவாய் வழங்கியுள்ளீர்கள்.

    மிக அருமை! பேணிப் பாதுகாத்திட வேண்டிய விடயம்.

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் உங்கள் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தோழி.

      Delete
  12. அரிய தகவல்களைக் கொண்ட பயனுள்ள பதிவு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை வாசித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி முனைவரே.

      Delete
  13. அன்புள்ள கீதமஞ்சரி.

    வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் வலைப்பக்கம் வந்தால் அத்தனை நாட்களுக்கும் சேர்த்து நிறைவான பதிவைத் தந்துவிட்டீர்கள்,
    இதில் கிரேஸ் அவர்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.

    தாங்கள் தந்திருக்கும் இத்தலைப்பு ஓர் ஆய்வுப்புத்தகத்திற்கான தலைப்பு. அரிய தகவல்கள். நிறைய உழைப்பு தந்திருக்கிறீர்கள். எனவே இதனை மீண்டும் கொஞ்சகொஞ்சமாக ஒவ்வொருபிரிவாகத் தாருங்கள். நினைவில் வைத்துக்கொள்ள உதவும். எனக்கு ஞாபக மறதி அதிகம். படிக்கும்போது நினைவில் இருக்கும் அப்புறம் மறந்துபோய்விடும். எனவே இதனை மீண்டும் தொடர்க்கட்டுரையாக எழுதிப் பின் புத்தகமாக மாற்றினால் பயனுள்ள அறிவியல் தமிழுக்கும் மொழியியலுக்கும் ஒரு புத்தகம் கிடைத்துவிடும். உங்கள் வலைப்பதிற்கு வந்ததால் இன்னொரு பயன் கிரேஸ் அவர்களின் சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் படிக்கிற வாய்ப்பு. நன்றிகள். வாழ்த்துக்கள். மாணவர்களுக்குப் பெரும் பயன் விளைவிக்கும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி ஹரணி சார். இனி அடுத்தடுத்த பதிவுகளில் கவனம் வைத்து சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து தர முயற்சி செய்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  14. அறிஞர்க்கு வணக்கம்!
    தங்களின் சொல்லாய்வுக் கட்டுரைகள் சுவையாகவும் சோர்வின்றியும் அமைந்திருக்கின்றன. ஆய்வுக்கட்டுரைகளுக்கும் பொதுவாசிப்பிற்கும் ஒரு எதிர்மாறித் தொடர்பே உண்டு. வெகுசிலரால் மட்டுமே அனைவர்க்குமான தமிழில் சுவைபட ஆய்வுக் கட்டுரைகளும் தர இயலுகிறது. அவ்வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதை உங்கள் பதிவு சொல்கிறது. ஆய்வுக்கட்டுரையின் தரத்தில் அதேநேரம் என்னைப் போன்ற சாதாரணமான வாசகரும் புரிந்து கொள்ளுமாறு அமைந்த தங்கள் பதிவு கண்டு வாழ்த்துகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் ஊக்கம் தரும் கருத்துப் பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி.

      Delete
  15. அஹா.. ஆஸ்த் ரேலியா பற்றி வித்யாசமான பல தகவல்களை அறிய கொடுத்து இருக்கீங்க...மேம் போக்கா சொல்லாம சில விசயங்கள் ஆழமாகவும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி கலாகுமரன்.

      Delete
  16. ஆஹா ஒரு பதிவில் நிறைய விஷயங்கள். இதை இரு பதிவாகப் போட்டிருக்கலாமோ?... படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இருபதிவாகப் பிரித்துப் போட்டிருக்கலாம். எல்லோரும் குறிப்பிடும்போதுதான் பதிவின் நீளம் தெரிகிறது. இடையில் நிறைய படங்களையும் சேர்த்திருப்பதால் பதிவு நீண்டுவிட்டது. அடுத்தடுத்த முறைகளில் கவனமாக இருப்பேன். வருகைக்கும் பதிவை வாசித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி அதிரா.

      Delete
  17. சென்னைத் தமிழைத் திரைப்படங்களில் கேட்டிருக்கின்றேன். உங்கள் விளக்கம் அருமை. ஆஸ்திரேலிய பற்றிய விபரமும் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கௌரி.

      Delete
  18. பல தகவல்களை தேடித்தேடி தந்த உங்களுக்கு நன்றி.

    பல புதிய வார்த்தைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  19. அருமையான பகிர்வு.
    ஐஸ்பிரியாணி படிக்கும் போது வருத்தமாய் இருந்தது.
    நிறைய படித்து நிறைய செய்திகளை தரும் உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவை எழுதும்போது எனக்கும் அந்த மாணவியின் நினைவு வந்து வருத்தமளித்தது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.