சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் என்ற
தலைப்பைப் பார்த்தவுடனேயே இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
போடுகிறாள் என்று தோன்றும். முடிச்செல்லாம் போடவில்லை. என்னை மிரளவைத்த, ரசிக்கவைத்த, வியக்கவைத்த இவ்விரண்டு மொழிகளையும் பற்றி சும்மா ஒரு அலசல் பகிர்வு. அவ்வளவுதான்.
இன்னாபா, நல்லாக்கீறியா?
(என்னப்பா, நலமாக இருக்கிறாயா?)
இன்னாமே, நாஷ்டா துன்னியா?
(என்னம்மா காலைச்சிற்றுண்டி தின்றாயா?)
அவனை இட்டாரேன்.
(அவனை அழைத்துக்கொண்டு வருகிறேன்)
அல்லாம் படா பேஜாரா கீதுபா
(எல்லாம் பெரும்பிரச்சனையாய் இருக்கிறதப்பா)
இஸ்துக்கினு கெடந்து பூட்டான்
(இழுத்துக்கொண்டு கிடந்து போய்விட்டான்)
இன்னாத்துக்கு கூவினுகீற?
(எதற்கு கூவிக்கொண்டு இருக்கிறாய்?)
ஜல்ப்பு புச்சிச்சு
(ஜலதோஷம் பிடித்துக்கொண்டது)
இப்படி ஒரு புதிய பாணியிலான தமிழை
சென்னைவாசிகள் பலரும் கேட்டுப் பழகிப்போயிருப்போம். புதிதாக சென்னை வருபவர்கள்
ஆரம்பத்தில் ஏதோ மொழி தெரியாத ஊருக்கு வந்துவிட்டதைப் போலத்தான் உணர்வார்கள்.
ஆனால் போகப்போகப் பாஷை பழகிவிடும். சென்னையிலேயே பிறந்துவளர்ந்தவர்கள் இப்படி
சரளமாகப் பேசும் தமிழை சென்னைத்தமிழ் என்று பெயரிட்டு பெருமைப்படுத்துகிறோம்.
சென்னை சார்ந்த என் பழைய நினைவுகளை மீள
ஓடவிட்டுப் பார்க்கிறேன். திருச்சியில் பிறந்து வளர்ந்த நான் திருமணமாகி
சென்னைக்கு வந்த புதிதில் சென்னைத்தமிழைக் கேட்டு அரண்டுபோயிருக்கிறேன்.
திருச்சியில் எல்லோரும்
எல்லோரையும் மரியாதையுடன் பேசிப் பழகிக் கேட்டிருந்த எனக்கு ‘இந்தாம்மா, ஒத்து’ என்ற ஒற்றைச்சொல் போதும், உடலும் உள்ளமும் அவமானத்தால் குறுகிப்
போய்விடும். சென்னையில் எங்கள் வீட்டில் வேலை செய்த பெண்ணை ‘நீங்க, வாங்க, போங்க’ என்று நான் பேச, அவரோ என்னை ‘நீ, வா, போ’ என்று
பேசி அதிரவைத்தார்.
வேளச்சேரியில் குடியிருந்த சமயம்.
எதிர் வீட்டில் ‘To Let’ போர்டு போட்டிருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டில் அவ்வளவு வசதி
போதாது என்பதால் எங்கே நாங்கள் எதிர்வீட்டுக்கு மாறிவிடப்போகிறோமோ என்ற பதைப்புடன்
எங்கள் வீட்டுக்காரம்மா (வீட்டு உரிமையாளர்) என்னிடம் சொன்னார், ‘அந்தாள் வூட்டுக்கு குட்த்தனம் போனா குப்பை கொட்றது ரொம்ப கஷ்டம்’. உடனே நான் கேட்டேன், ‘அப்போ
அவங்கெல்லாம் எங்க குப்பை கொட்டுவாங்க?’
நான் கேலி செய்வதாக நினைத்தாரோ என்னவோ, அந்தம்மா என்னை
மேலும் கீழுமாகப் பார்த்தார். நான் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டிருப்பதைப்
பார்த்து, உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறேன் என்று உணர்ந்தவராய், ‘அட, அந்தாள் வூட்ல குடியிருக்குறது கஷ்டம்ங்கறேன், நொய்யி நொய்யின்னு சொம்மா எதனா சொல்லி உயிர எட்துனே
இருப்பாரு’ என்றார். என் பொது அறிவு அந்த
அளவில்தான் அப்போது இருந்தது. சில புதிய வார்த்தைகளைப் புரிந்துகொள்ள நான் பட்ட
பாடு… இப்போது நினைத்தாலும் சிரிப்புதான்.
ஒருநாள் மணி கோர்க்கும் நரம்பு வாங்க ஒரு
ஃபேன்சி ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். கடைக்காரர் அங்கு வேலை செய்யும் பையனிடம், ‘இவங்களுக்கு தங்கூசி குடுப்பா’ என்றார். நான்
உடனே, ‘ஊசி வேண்டாங்க, நரம்பு மட்டும் போதும்’ என்றேன். அவர் ‘சரிம்மா, தர சொல்றேன்’ என்று
சொல்லிவிட்டு மீண்டும் பையனிடம்,
‘எப்பா, தங்கூசி எடுத்துக்குடுன்னு சொல்றேன்ல?’ என்றார். நான்
குழப்பத்துடன் ‘என்னடா இது, நான் நரம்பு கேக்கறேன், இவர் ஊசி ஊசிங்கறாரே…’ என்று மறுபடி, ‘இல்லைங்க, ஊசி வேண்டாங்க’ என்றதும், ‘நீங்க சொல்ற
நரம்புக்குதான் தங்கூசின்னு பேரு’
என்றார் கடுப்புடன். பிறகென்ன, அசடு வழிய
வாங்கிக்கொண்டு வந்தேன்.
வட்டார மொழியோ வழக்குமொழியோ, பழகாமல் அவற்றை
எதிர்கொள்வதென்பது மிகுந்த சவாலான விஷயம். ஏழாவது
படிக்கும்போது, எனக்கும் என்னைவிட ஒன்றிரண்டு வயது மூத்த அக்காவுக்கும் (பெரியம்மா
பெண்) எதைப் பற்றியோ வாக்குவாதம். நான் சொல்வதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள்
சொல்வது எனக்கு ஏற்புடையதாயில்லை. அவள் கிராமத்துப்பெண். பள்ளிக்கூடம் பக்கமே
போகாதவள். என்னால் அவளுக்கு புரியவைக்க முடியாமல் முடிவில் ‘சரி, அவள் போக்குக்கே
போவோம்’ என்று நினைத்து, ‘சரிக்கா, உங்க அகராதியில் அதுதான் அர்த்தம் என்றால் அப்படியே வச்சுக்குவோம்’ என்றேன்.
‘டிக்ஷனரி’ என்று சொல்ல நினைத்து அப்படி சொன்னால் அவளுக்குப் புரியாது என்பதால் கஷ்டப்பட்டு யோசித்து தமிழில் ‘அகராதி’ என்று சொன்னேன்.
அவ்வளவுதான். அக்காவுக்கு வந்ததே கோபம். ‘சித்தி, உங்க மவ என்னை அகராதி புடிச்சவள்ன்னு சொல்லிட்டா’ என்று பெரிய ஆர்ப்பாட்டமே
பண்ணிவிட்டாள். மீண்டும் விளக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
கிராமப்புறங்களில் ‘அகராதி’ என்றால் ‘திமிர் பிடித்தவள்/ன்’
என்று அர்த்தமாம். அகராதி போல் எல்லாம்
தனக்குத் தெரியும் என்று நினைக்கும் மனப்பான்மையால் இப்பட்டம் வந்திருக்கும் போலும். அகராதிக்கு அப்படியொரு அர்த்தமிருப்பது அன்றுதான் தெரிந்தது.
சில வருடங்களுக்கு
முன்பு கண் பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்றிருந்தேன். அது இது என்று ஏகப்பட்ட பரிசோதனைகள். இரண்டாவது முறை கண்ணில்
மருந்துவிட்டதும் ‘எரிச்சலா இருக்கு, டாக்டர்’ என்றேன். அவர் சுபாவமே கடுகடு. இதில் நான் இப்படிச் சொல்லவும், ‘ஐ டெஸ்ட்னு
வந்துட்டா இப்படித்தான் இருக்கும்,
நான் என் வேலையத்தான் பார்க்கறேன். உங்களை
எரிச்சல்படுத்துறது என் வேலையில்ல.’
என்று அவர் படபடவென்று எரிந்துவிழுந்ததும்தான் தவறு புரிந்தது. ச்சே… எரிச்சல்
கண்ணில் என்பதை அல்லவா குறிப்பிட்டிருக்கவேண்டும். அவரிடம் மன்னிப்பு கேட்டு
விளக்கிய பின்னும் முகத்தின்
கடுகடுப்பு மாறவே இல்லை. ஹூம்…
பழகிய மொழியிலேயே இவ்வளவு பிரச்சனைகள்
என்றால் புதிய இடத்தில் புதிய மொழியில் பழகுமுன் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருக்கும்? என்னுடைய
கேரளத்தோழி சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவள் கணவருக்கும்
ஆட்டோக்காரருக்கும் வீட்டு வாசலில் வாக்குவாதம். ஆட்டோக்காரர்களின் சுபாவப்படி
ஏறும்போது சொன்னதை விடவும் இறக்கிவிட்டதும் அதிகமாக கேட்டிருக்கிறார். வாக்குவாதம்
வலுத்துவிட, அவள் கணவர் சொன்னாராம், ‘நீங்க செய்யறது நியாயம் இல்லே, உங்களுடே சம்சாரம்
சரியில்லே’. போதுமே.. இது போதுமே..
ஆட்டோக்காரர் எகிறிவிட்டாராம். ‘யோவ், நீ யாருய்யா, என்
சம்சாரத்தைப் பத்திப் பேசுறதுக்கு,
உன் சம்சாரம் யோக்கியமா? நீ யோக்கியமா?’ கட்டணம் பற்றிய
சண்டை இப்போது கட்டியவளை நோக்கிக் குறிவைக்க, நிலைமை புரிந்த அக்கம்பக்கத்தவர் முன்வந்து
இருவரிடமும் பேசி சமாதானம் செய்து வைத்தார்களாம். மலையாளத்தில் ‘சம்சாரம்’ என்றால் ‘பேச்சு’ என்று எவ்வளவோ
எடுத்துச் சொன்னாலும் ஆட்டோக்காரர் நம்பாமல் திட்டிக்கொண்டேதான் போனாராம். இது
எப்படி இருக்கு? இந்தப் பதிவு நீண்டுவிட்டதால், ஆஸி ஆங்கிலத்தின்
சுவாரசியம் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேனே.
(தொடர்வேன்)
(படங்கள் உதவி: இணையம்)
தொடர்ந்து வாசிக்க
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 2
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 4
தொடர்ந்து வாசிக்க
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 2
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3
சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 4
வணக்கம்
ReplyDeleteசகோதரி
நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊரு பேசும் வார்த்தை வித்தியாசம் உண்டு எங்களுடைய இலங்கைத் தமிழுக்கும் இந்தியாத் தமிழுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு எழுத்து வழக்கில் ஒன்றுதான் பேச்சு வழக்கில் வித்தியாசம்..
மொழி சம்மந்தமான பதிவு பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteத.ம +1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒரு கேரளத்துக் காரர் ஃப்ரான்ஸ் சென்றாராம். இவருக்கு ஃப்ரென்ச் தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எப்படி இருந்தாலும் இரு சாராருக்குமே மொழிப் பிரச்சனை. அதைத் தீர்க்க இவர் மலையாளத்திலேயே பேசத் துவங்கினார். கேட்டதற்கு அவனுக்கு ஆங்கிலம் தெரியாத போது எந்த மொழியில் பேசினால் என்ன. எனக்கு ஆங்கிலத்தைவிட மலையாளம் சௌகரியமாக இருக்கிறது என்றாரே பார்க்கலாம் ஆங்கிலம் பேசும் முறையே இடத்துக்கு இடம் மாறுபடும். சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிகழ்வுகள் வெகு சுவாரஸ்யம்
ReplyDeleteசொல்லிப்போனவிதம் அதைக் கூடுதல்
சுவாரஸ்யப்படுத்துகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteசுவாரஸ்யம்.
ReplyDelete//திருச்சியில் பிறந்து வளர்ந்த நான் //
ReplyDeleteஇதைப்படிக்கும் போதே என் மனதில் எனக்கு ஏதோவொரு இனம் புரியாத சந்தோஷம்.
கற்கண்டாக இனிக்கிறது. திருச்சி கல்கண்டார் கோட்டை என்பதாலோ ! ;)))))
நான் திருச்சியை விட்டு அதிகமாக வெளியூர் பக்கமெல்லாம் நகர விரும்பாமல் இருப்பினும், ஆபீஸில் ஆயிரக்கணக்காக பல ஊர்க்காரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததால், இந்த மதறாஸ் பாஷை + மலையாளம் + தெலுங்கு போன்ற பலவற்றையும் அவ்வப்போது கேட்க + கற்க முடிந்துள்ளது.
தாங்கள் சொல்லியுள்ள உதாரணங்கள் எல்லாமும், சம்பவங்கள் எல்லாமும் மிகவும் ரஸிக்க வைத்தன.
//கிராமப்புறங்களில் ‘அகராதி’ என்றால் ‘திமிர் பிடித்தவள்/ன்’என்று அர்த்தமாம்.//
ஆமாம். கிராமம் மட்டுமல்ல நகரத்திலும் கூட இதே அர்த்தம் தான். தமிழில் பேசும்போது அகராதித்தனமாக அகராதி என்ற சொல்லை நாம் பயன்படுத்தக்கூடாது தான். ;)))))
//மலையாளத்தில் ‘சம்சாரம்’ என்றால் ‘பேச்சு’ என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் ஆட்டோக்காரர் நம்பாமல் திட்டிக்கொண்டேதான் போனாராம்.//
மலையாளத்தில் பறைவோரிடையே [பேசுவோரிடையே] நிறைய இதுபோன்ற நகைச்சுவைகளை நானும் அனுபவித்தது உண்டு.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நகைச்சுவைக் கதைகளாகவே நாம் எழுதலாம் / சொல்லலாம்.
அழகான பதிவுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். தொடருங்கோ.
பிரியமுள்ள கோபு
1972ல் என்னுடன், வெங்கடேஸ்வர ராவ் என்பவர் புதிதாக பணியில் சேர்ந்திருந்தார். அவருக்கு நன்றாக தெலுங்கும் ஓரளவுக்கு ஆங்கிலமும் தெரியும். தமிழ் சுத்தமாகத் தெரியாது.
ReplyDeleteமதியம் சாப்பிட்டுவிட்டு, அங்குள்ள ஒரு வெற்றிலை பாக்கு பெட்டிக்கடையில், பாக்கு வேண்டும் என்று தெலுங்கில் கேட்டுள்ளார். திரும்பத்திரும்ப பாக்குக்கான அந்த ஒரே ஒரு தெலுங்குச் சொல்லையே சொல்லிக் கேட்டுள்ளார்.
கடையில் வியாபாரம் செய்தவளோ ஒரு பெண். செருப்பைக்கழட்டி இவரை அடிக்கவே வந்து விட்டாளாம். என்னிடம் வந்து அங்கு நடந்ததை அப்படியே பகிர்ந்துகொள்ள, நாங்கள் எல்லோரும் சிரி சிரி என சிரித்து ரஸித்தோம்.
மொழிகளால் இதுபோல நிறைய பிரச்சனைகள் வரக்கூடிய சம்பவங்கள் நிறையவே உள்ளன. எல்லாவற்றையும் மனம் விட்டு சொல்லவோ எழுதவோ இயலாது அல்லவா ! அதனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
சென்னைக்கு வந்த புதிதில் சாந்தி தியேட்டர் வாசலில் ஒரு பெட்டிக்கடைக்காரரிடம் ’குரோம்பேட்டைக்கு எந்த பஸ் போகும்?’ என்று கேட்க, அவர் ‘எல்லீச்சியாண்ட போய் ஏறு‘ என்றார். திருதிருவென்று விழித்து விட்டு அவர் கைகாட்டிய பக்கம் நடந்து ஒருவரிடம் மீண்டும் வழி கேட்டபோது அவர் காட்டிய பில்டிங் - எல்.ஐ.சி...! ஹா... ஹா.. ஹா... சென்னைத் தமிழின் ஷோக்கு அப்பூடி... அதேமாதிரி பஸ் கண்டக்டர்கள் ’முன்னால போ சார்’ என்று மரியாதையா அவமரியாதையா என்றே புரியாத தொனியில் பேசுவதைக் கண்டும் மிரண்டதுண்டு.... இப்போ பயகிடுச்சும்மே... ஆந்திராவுக்கு புதிதாகப் போன ஒருவர் அரைகுறையாக கற்ற தெலுங்கைக் கொண்டு மார்க்கெட்டில் காய் விறற் பெண்ணிடம் “ஐது ரூபாக்கு இஸ்தாவா?(தருவியா)’ என்று கேட்பதாக நினைத்து கேட்டதோ, ‘ஐது ரூபாக்கு ஒஸ்தாவா?(வருவியா)’ பிறகு நடந்ததை விவரிக்கணுமா என்ன...? ஹா.. ஹா... ஹா...
ReplyDeleteமொழி பற்றிய இந்த அலசல் சுவாரஸ்யமாவே இருக்குது. ‘கண்ணில் எரிச்சல்‘ என்று சொல்லாமல் ‘எரிச்சலா இருக்கு‘ன்னு நீங்க குறிப்பிட்டிருந்த விஷயம் மிகச் சரியானது. என் நெருங்கிய நட்புகள் பலரிடம் வாக்கியம் அமைப்பதில் இருக்கிற இப்படியான குறைகளை கண்ணுறும் போதெல்லாம் திருததி வருகிறேன். தொடருங்கள் இந்த சுவையான அலசலை. தொடர்கிறேன் நானும்.
ReplyDeleteinteresting...
ReplyDeleteஒரே முசுப்பாத்தியாக இருக்கு...பதிவு.
ReplyDelete(என்ன தலை சுத்துதா? - ஒரே பகிடியாக இருக்கிறது)
எழுதுங்க!...எழுதுங்க....
வாசித்து சிரிப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
எந்த பகுதியில் எந்த மொழி உண்டோ, அந்த பகுதிக்கு போகும் போதும், வாழும் போதும் அந்த பகுதியின் மொழியை அறிந்து கொள்வதே நல்லது. Left hand drive பழகி விட்டு Right Hand Drive உள்ள நாட்டுக்கு போய் நான் Left hand drive தான் செய்வேன், என அடம் பிடித்தால் சாலையில் அடிபட்டு சாவது யாரு. ஒவ்வொரு மொழியும், வழக்கும் அந்தந்த பிரதேசங்களில் இயல்பாய் உருவாபவை. சில சமயம் வழக்குகள் தனி மொழியாவதும் உண்டு. உதா. மலையாளம். தனி மொழிகள் வழக்குகள் ஆவதும் உண்டு. உதா. பிராஜ் மொழி, போஜ்புரி என்பவை இன்று இந்தியின் வழக்கு மொழிகள்.
ReplyDeleteபொதுவாகவே சென்னை தமிழ் என்றால் கேவலமானது, நகைச்சுவையானது என்ற தொனியில் வேற்று வழக்கு பேசுவோரிடம் இருந்து விமர்சனம் உண்டு. உண்மையில் சென்னை தமிழ் என தாங்கள் நினைத்துக் கொண்டிருப்பது பாமரர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த ஒரு வகை சென்னைத் தமிழே. அதன் மழுங்கல் பேச்சுக்கு பல காலம் பாமரர்களாகவே தொடர்ந்து பேசி வந்தந்தும், பிற மொழி பேசும் மக்களின் கீழ் சலவைத் தொழில், வீட்டு வேலை என பல பணிகளில் கடந்த 300 ஆண்டுகாலமாக பேசி பழகி வந்தந்தன் கலப்பும் தான் காரணம்.
பொதுவாக தொண்டை மண்டலப் பகுதிக்கு ஒரு வழக்கு மொழி இருக்கு, அதில் எண்ணற்ற செந்தமிழ் சொற்களும், ழ உச்சரிப்பு சரியாக பல இடங்களில் இருப்பதையும் காணலாம். தொண்டை மண்டலத்தின் வழக்கு மொழியின் ஒரு சிறு உட்பிரிவு தான் வடசென்னையின் ஒடுக்கப்பட்ட மக்களின் மொழி வழக்கும். ஆனால் அந்த வழக்கின் வரலாற்றை புரிந்து கொள்ளாமல் ஒட்டு மொத்த சென்னை மொழியையும், அல்லது ஒட்டு மொத்த தொண்டை மண்டலத்து மொழியையும் தவறாகவே சித்தரிப்பது தான் மிகத் தவறான ஒன்றாகும்.
இன்றுள்ள தலைமுறையினர் யாருமே கொச்சையான வழக்கையோ, வட்டார வழக்கிலோ பேசுவது இல்லை. ஒரு சில வார்த்தைகள் அனிச்சையாக வருவது மாற்ற இயலாத ஒன்றாகும்.
சென்னைத் தமிழை கொச்சை என பேசுவோருக்கு எத்தனைப் பேருக்கு முறையாக ழ, ள உச்சரிப்பு வரும். ஆனால் சென்னைத் தமிழில் பலருக்கும் ழ உச்சரிப்பு இயல்பாகவே வரும். ழ என்பதன் உச்சரிப்பை ள என்பதை அழுந்தச் சொன்னால் வரும் என்ற எண்ணத்திலேயே இன்று பலரும் செந்தமிழ் வித்தகம் செய்கின்றனர். ஆனால் உண்மையான ழ உச்சரிப்பை retroflex r என்பதாக, ர, ய ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஒலியாக வர வேண்டும். சென்னையில் பழத்தை பயம் என சொல்வதாக பலரும் எழுதுவார்கள். ஆனால் கவனமாக அவதானித்தால் அது பயம் என்றல்ல பழம் என்பதாகவே இருக்கும். ழகரம் சற்றே யகரத்தைத் தொடும். ஆனால் பிற வழக்குகள் பேசும் பலருக்கும் குறிப்பாக தென்பாண்டி, குமரி, யாழ்ப்பாணத் தமிழில் ழ என்பது முற்றாக ள ஆக மாறி ஒலிப்பது எத்தகைய அபத்தம். ஆக இங்கு எந்தவொரு வட்டார வழக்கும் உயர்வு தாழ்வல்ல, ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் தனிச்சிறப்பும் சிதைவும் கொண்டுள்ளன. தனிச்சிறப்புக்களை காக்கும் அதே சமயத்தில் சிதைவுகளை நிவர்த்தி செய்வதால் பொது தமிழ் நோக்கி நாம் நகரலாம்.
பகிர்வு வெகு ஜோர் சகோதரி...
ReplyDeleteமெட்ராஸ் நல்ல மெட்ராஸ்தான். மெட்ராஸ் பாஷை பற்றிய உங்கள் அனுபவங்கள் படா தமாஷ்! இப்போது அந்த மெட்ராஸ் தமிழும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. ஆஸ்திரேலிய அனுபவம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்? என்பதையும் படிக்கத் தொடருகின்றேன்!
ReplyDeleteத.ம.4
சகோ..
ReplyDeleteதொடருங்கள் ..
கலகலப்பாக இருந்தது..
கோவையில் மரியாதைத்தமிழில் சொகுசாக வாழ்ந்துவிட்டு சென்னை தமிழில் திகைத்து நின்றதுண்டு..
ReplyDeleteஆஸ்திரேலியாவில் ஏனோ மொழிப்பிரச்சினையே வரவில்லை..
அவர்கள் பேசும் இலங்கைத்தமிழும் , ஆங்கிலமும் நமக்குப்புரிகிறது..
தமிழிலிலேயே பேச்ச்சொல்லி ரசித்துக்கேட்டார்கள் பலமொழி பேசும் பல்கலைக்கழக மாணவ்ர்கள்..
கீதமஞ்சரி,
ReplyDeleteசென்னைத்தமிழ் எனக்குப் பிடிக்கும். யாராவது எழுதினால் கஷ்டப்பட்டாவது படித்து ரசிப்பேன். நேரில் பேசிக் கேட்டதில்லை. எங்கள் ஊர்ப் பக்கமும் இந்த 'நீ, வா, போ ' எல்லாம் உண்டு. மரியாதை கொடுக்கக் கூடாது என்றெல்லாம் இல்லை. மக்களுக்கு அப்படியே பழகிப் போச்சு.
நகைச் சுவையான சென்னை அனுபவத்துக்கு அடுத்து ஆஸ்திரேலிய ஆங்கிலத்தையும் அறியக் காத்திருக்கிறேன்.
@ரூபன்
ReplyDeleteசிலவற்றில் எழுத்துவழக்கிலும் வேறுபாடுகள் உண்டு ரூபன். பகிடி என்ற வார்த்தையையோ இதோ இப்போது தோழி வேதா குறிப்பிட்டுள்ள முசுப்பாத்தி என்ற வார்த்தையையோ இந்தியத் தமிழில் அவ்வளவாக உபயோகித்துப் பார்த்ததில்லை. பலவற்றையும் புதிதாக அறியும்போது வியப்பும் மகிழ்ச்சியும் பெருகுவது உண்மை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ரூபன்.
@G.M Balasubramaniam
ReplyDeleteபுதிய இடத்தில் பழகும்வரைதான் பிரச்சனை. தங்கள் நண்பரின் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி. எந்த மொழியில் பேசினாலும் புரியாது என்ற நிலையில் நமக்கு வசதியான மொழியைத் தேர்ந்தெடுப்பது சமயோசிதம்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
@Ramani S
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
@மாதேவி
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.
@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteபிறந்த ஊர் பாசமாச்சே... எங்கு போனாலும் தொடரும். :)
பல மொழி பேசுவோரிடம் பழகும்போது பலவித அனுபவங்கள் கிடைத்திருக்கும். அவற்றில் சொல்லக்கூடிய சில சுவையான அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் சார்.
தாங்கள் குறிப்பிட்டுள்ள நண்பரின் அனுபவம் போல் நானும் சிலரது அனுபவங்களை அறிந்துள்ளேன். சில மொழிகளில் நல்ல பொருள் தரும் வார்த்தைகள் வெறு மொழியில் தவறான பொருள் தருவதாக அமைந்துவிடுகின்றன. பழகும்வரை கஷ்டம்தான்.
தங்கள் வருகைக்கும் விளக்கமான உற்சாகம் தரும் அருமையானப் பின்னூட்டத்துக்கும் உளமார்ந்த நன்றி கோபு சார்.
@பால கணேஷ்
ReplyDeleteஉங்கள் அனுபவம் ரசிக்க வைத்தது என்றால் நண்பரின் அனுபவம் விதிர்க்க வைத்தது. அது நீங்கள் அல்ல அல்லவா? ஆரம்ப நாட்களில் மொழியைப் பழகும்வரை உண்டான சிரமமெல்லாம் பின்னாளில் நினைத்துப் பார்த்தால் சிரிக்கத்தான் வைக்கும்.
அறிந்த மொழியாக இருந்தாலும் பேசுகையில், வாக்கியம் அமைப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எழுதி முடித்தபின் ஒன்றிரண்டு முறை சரிபார்த்தாலே நம் தவறுகள் புலப்பட்டுவிடும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ்.
@கே. பி. ஜனா...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
@kovaikkavi
ReplyDeleteமுசுப்பாத்தி என்ற வார்த்தையை இன்றுதான் அறிகிறேன். விளக்கம் சொல்லவில்லை என்றால் முரண்பாடு என்று தவறாக பொருள் கொண்டிருப்பேன். புதிய வார்த்தை அறிமுகத்துக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தோழி.
சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள். மற்றதெல்லாம் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன் என்றாலும் கடைசி 'சம்சாரம்' மன்னிக்கவும் சமாச்சாரம் மட்டும் புதிது! :)))
ReplyDeleteநான் தஞ்சையிலிருந்து மதுரை வந்தபோதும் சில பிரயோகங்கள் வேடிக்கையாக இருந்தன. (ஆட்டய போட்டுட்டான், டர் ஆயிட்டான் போன்ற பிரயோகங்கள்!) மதுரையிலிருந்து சென்னை வந்ததும் அஃதே போன்று!!! :))))))))))))
@கோடங்கிச் செல்வன்
ReplyDeleteதங்களுடைய வருகைக்கும் மனந்திறந்த நீண்ட பின்னூட்டத்துக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றி.
தங்களுடைய இந்தப் பின்னூட்டத்தின் மூலம் தாங்கள் என் பதிவை சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்ற ஐயம்தான் எனக்கு ஏற்படுகிறது. புதிய இடத்தில் புதிய மொழிவழக்கை அறிந்துகொள்வதில் உண்டான சிரமங்கள் பற்றியே எடுத்துரைத்திருக்கிறேன். என் வீட்டு வேலைக்காரப்பெண் என்னை 'வாங்க, போங்க' என்றுதான் அழைக்கவேண்டும் என்று அவர்களை நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் முதலில் அதிர்ந்து பிறகு நாளடைவில் இதுதான் இந்த ஊரின் மக்களின் வழக்கம் என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன். ஆனால் மற்றவர்களை நானும் வா, போ என்று சொல்லமட்டும் பழகவில்லை. ஆனால் அதற்கும் தாங்கள் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட வரிகளுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன்.
\\Left hand drive பழகி விட்டு Right Hand Drive உள்ள நாட்டுக்கு போய் நான் Left hand drive தான் செய்வேன், என அடம் பிடித்தால் சாலையில் அடிபட்டு சாவது யாரு.\\
மேலும் தாங்கள் குறிப்பிட்டிருப்பதாவது,
\\பொதுவாகவே சென்னை தமிழ் என்றால் கேவலமானது, நகைச்சுவையானது என்ற தொனியில் வேற்று வழக்கு பேசுவோரிடம் இருந்து விமர்சனம் உண்டு.\\
\\தொண்டை மண்டலத்தின் வழக்கு மொழியின் ஒரு சிறு உட்பிரிவு தான் வடசென்னையின் ஒடுக்கப்பட்ட மக்களின் மொழி வழக்கும். ஆனால் அந்த வழக்கின் வரலாற்றை புரிந்து கொள்ளாமல் ஒட்டு மொத்த சென்னை மொழியையும், அல்லது ஒட்டு மொத்த தொண்டை மண்டலத்து மொழியையும் தவறாகவே சித்தரிப்பது தான் மிகத் தவறான ஒன்றாகும்.\\
சென்னைத்தமிழ் பற்றிய தங்கள் தகவல் பகிர்வுக்கு நன்றி. தாங்கள் ஆதங்கப்படும் அளவுக்கு என்னுடைய இந்தப் பதிவில் சென்னைத்தமிழை எந்த இடத்திலும் இழிவாகவோ, குறைத்து மதிப்பிட்டோ எழுதவில்லை என்றும் நம்புகிறேன். தாங்கள் பொதுவாகக் குறிப்பிட்டிருந்தால் வரவேற்கிறேன். ஒருவேளை என்னுடைய இந்தப் பதிவுக்கான கருத்தாக இருப்பின் அதை மறுக்கும் உரிமை எனக்குண்டு. சென்னையில் பதினாறு வருடங்கள் பலதரப்பட்ட மக்களுடன் பழகிய எனக்கு அம்மக்களின் நேசத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல் எதுவுமில்லை.
தங்களுடைய வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் என் நன்றி கோடங்கிச்செல்வன்.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.
@தி.தமிழ் இளங்கோ
ReplyDeleteதங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா. விரைவில் அடுத்த பதிவை எழுதுவேன்.
@Seeni
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சீனி.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteதாங்கள் சென்றுவந்தது சிட்னி நகரமாக இருக்குமென்று நினைக்கிறேன். அங்கு native speakers -ஐப் பார்ப்பது அரிது. பன்னாட்டு மாணவர்கள்தாம் அதிகம். அதனால் அங்கு மொழிப்பிரச்சனை வர அதிக வாய்ப்பில்லை. ஏனெனில் நாம் புரிந்துகொள்ளும் அளவில் எளிமையான ஆங்கிலமாகவே அது இருக்கும். நான் ஆஸி ஆங்கிலம் என்று குறிப்பிடுவது ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த ஆஸ்திரேலியர்கள் பேசும் மொழிவழக்கு. அதற்கும் பொது ஆங்கிலத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. நாங்கள் சிட்னிக்கு வருவதற்கு முன்பு நான்கைந்து வருடங்கள் பிரிஸ்பேனிலும் மெல்போர்னிலும் வசித்த அனுபவத்தால் சொல்கிறேன்.
தங்கள் வருகைக்கும் தங்களது அனுபவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேடம்.
@chitrasundar
ReplyDeleteபழக்கம்தான் காரணம். அதைத்தான் நானும் இங்கு குறிப்பிடுகிறேன். அந்தப் பழக்கம் நமக்குப் பழகும்வரைதான் வேறுபாடாய்த் தோன்றும். பிறகு நாமும் அந்த மக்களுள் ஒருவராகிவிடுவோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.
@ஸ்ரீராம்.
ReplyDeleteஉங்கள் மதுரை அனுபவமும் சுவாரசியம். தமிழகத்தின் பல வழக்குமொழி வார்த்தைகளை இப்போது திரைப்படங்கள் மூலமாக அறிந்துகொண்டிருப்பதால் இன்றைய காலத்தில் அவ்வளவு சிரமம் இருக்காது என்றே தோன்றுகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
சுவாரஸ்யமான பதிவு!
ReplyDeleteடாக்டரிடம் உங்கள் அனுபவம் கசப்புதான். ஆனால் அவரது ரெஸ்பான்ஸும் சரியில்லை! கண் மருத்துவரிடம் சென்று உட்கார்ந்து பரிசோதனை செய்துகொண்டிருக்கிறீங்க, கண்ணில மருந்து ஊற்றுகையில் "எரிச்சலா இருக்கு" என்று சொல்றீங்க. அந்நேரம் ஒரு நோயாளி எப்படி உணர்வார், என்ன அர்த்தத்தில் சொல்வார் என்றுதானே பெரும்பாலான மருத்துவர்கள் யோசிப்பார்கள், புரிந்தும் கொள்வார்கள்!! அப்படியல்லாத ஒரு "கடுகடு" டாக்டரிடம் மாட்டியது உங்கள் துரதிர்ஷ்டமே! இனிமே அவர்கிட்ட பரிசோதனைக்கு போகாதீங்க! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகி. மருத்துவர்கள் அமைவதற்கும் அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும் போலிருக்கிறது. இனி அவரிடம் போகாதபடிக்கு என் கண்ணைப் பார்த்துக்கொள்ளவேண்டும். ;)
Deleteஅருமையான தீம். நல்ல எழுத்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாசன்.
Deleteநல்ல நகைச்சுவை இப்போது நினைக்கும் போது.சென்னை தமிழ் அடிக்கடி பயமுறுத்தத்தான் செய்கிறது தோழி.
ReplyDeleteபுரியும்வரைதான் கஷ்டமெல்லாம் கீதா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஹைய்யோ!!!!
ReplyDeleteசெம!
உங்களுடைய உற்சாகமான குரல் இங்கே கேட்கிறது. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி டீச்சர்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete:))) ரொம்ப சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க கீதா ..மிகவும் ரசித்து சிரித்தேன் ..
ReplyDeleteஎன் நிலையம் அப்படிதான் தமிழாக இருந்தாலும் அப்பா ஒரு ஊர் மொழி ,அம்மா ஒரு ஊர் மொழி நான் பிறந்த ஊர் ஒரு மொழி ..வளர்ந்த சென்னை மொழி எல்லாம் சேர்ந்து கதம்பமாக ஒலிக்கின்றது எனது தமிழ் :)
..ஜெர்மனில இருந்தப்போ ஒரு இலங்கை தமிழர் ஒருவரை ரோட்டில் சந்தித்தேன் .. வேண்டபோறீங்களா என்றார்
நான் இல்லை அண்ணா கோயிலுக்கு போகல்லை நான் ஷாப் போறேன் என்றேன் !!(பொருள் வேண்டுவது=ஷாப்பிங் )
அவர் முழித்து பார்த்துவிட்டு போயிட்டார் ..இந்த மாதிரி நிறைய பல்பா வாங்கி குவிச்ச அனுபவம் நமக்கும் இருக்கு :))
ஆஸ்திரேலிய ஆங்கிலம் //அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் கீதா :)
உங்க அனுபவமும் வேடிக்கைதான் ஏஞ்சலின். இலங்கைத் தமிழரின் பேச்சில் நான் ஆரம்பத்தில் வியந்த ஒரு விஷயம் உண்டு. ஒரு தோழியின் வீட்டில் அழகான ஓவியத்தைப் பார்த்து 'நீங்க வரைந்ததா?' என்று கேட்டபோது 'ச்சீ.. என் அக்கா வரைந்தது' என்றார்கள். அவர்கள் ச்சீ என்று சொல்லும் அளவுக்கு என்ன தவறாகக் கேட்டுவிட்டோம் என்று குழம்பியதுண்டு. அப்படிப் பலமுறை. மற்றும் சில நண்பர்களிடம் பழகியபோதுதான் 'இல்லை' என்பதை அழகாக மறுக்கும் வார்த்தை அது என்பது புரிய இப்போது குழப்பம் இல்லை.
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.
உண்மைதான் ! பேசும் தொனி மற்றும் சூழ்நிலையை பொறுத்து ஒரே வார்த்தை பல அர்த்தங்களை கொடுத்துவிடும் !
ReplyDeleteஉடல் நலம் இல்லாதவரை " உடம்பு எப்படி இருக்கு ? " என விசாரிப்பதற்கும், ஒரு சண்டியர் யாரையாவது " என்னா ? உடம்பு எப்படியிருக்கு ?! "என வம்புக்கு இழுப்பதற்கும் எவ்வளவு வித்யாசம் ?!
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
சரியான உதாரணம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சாமானியன்.
Deleteநல்ல முஸ்பாத்தியான பதிவு,கெதியா அவுஸ்ரேலியா ஆங்கிலத்தையும் எழுதுங்கோ...குட்டே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன். இதோ இன்று பதிவிட்டுவிட்டேன்.
Deleteசென்னைக்கு வந்து 38 வருடங்கள் ஆகின்றன. இன்னும் இந்த மொழி என் மீது நல்லவேளையாகப் படியவில்லை. அதுவும் வீட்டுக்கு உதவி செய்ய வருபவர்களின் பேச்சு மிகத் தமாஷாக இருக்கும். இத்தனைக்கும் யாருக்கும் சென்னை பிறந்த ஊராக இருக்காது. திண்டிவனம்,வந்தவாசி சுற்றியுள்ள ஊர்களிலிருந்து வந்து குடியேறி இருப்பார்கள். சென்னைத்தமிழும் ஒரு அழகுதான். சிரிக்க வைத்த பதிவு கீதமஞ்சரி.
ReplyDeleteஊரோடு ஒத்துவாழ பழகிவிடுகிறார்கள் அவர்கள். நம்மால் முடியவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
Deleteடிக்ஷனரிக்கே புதிய அர்த்தத்தை கொடுப்பது சென்னைத் தமிழ் தானே. அப்ப சென்னைத் தமிழ் எம்மாம் பெருசு.
ReplyDeleteதங்களுக்கு நேரம் இருப்பின் நான் எழுதி மேடையேற்றிய "கண்ணம்மாப்பேட்டை " என்ற இந்த குறு நாடகத்தை படித்துப்பாருங்கள் -
http://unmaiyanavan.blogspot.com.au/2013/10/blog-post_17.html
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொக்கன். உங்கள் பதிவை வாசித்தேன். மொழி சரளமாக வருகிறது உங்களுக்கு. பாராட்டுகள்.
Deleteபடா சோக்கா கீதும்மே! :)
ReplyDeleteரசித்தேன். அடுத்த பகுதிக்கும் வருகிறேன் விரைவில்!
ரசித்தமைக்கு மிகவும் நன்றி வெங்கட்.
Deleteஇய்த்துன்னு பூட்டான் இல்ல
ReplyDeleteஇஸ்துகின்னு பூட்டான்
மாத்திட்டேன் ஜலீலா. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிபா.
Deleteமிக அருமையாக தொகுத்து இருக்கீங்க கீத மஞ்சரி
ReplyDelete