2 May 2014

எங்கள் தோட்டத்துப் பறவைகள்...




எங்கள் குடியிருப்பைச் சுற்றிலும் வளர்ந்திருக்கும் உயர உயரமான யூகலிப்டஸ் மரங்களில் அதிகாலை முதல் அந்தி வரை காக்கை, குருவி, மைனா, கிளி, லாரிகீட்ஸ், மேக்பை, புறா, குயில் இன்னும் சில பெயர் தெரியாத பறவைகளின் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் காகத்தின் கரையலும் ஒருவித ரிதமிக்காக பாட்டுப் பாடுவது போல் இருக்கும். புல்லாங்குழல் பறவை என்றழைக்கப்படும் மேக்பையின் பாடலோ சொக்கவைக்கும். லாரிகீட்களின் கீச்சொலி கேட்டாலே அவற்றின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். யாரோ காய்ச்சலால் அனத்துவது போன்ற சன்னலோரப் புறாவின் குனுகல் ஆரம்பத்தில் ஒருவித எரிச்சலைத் தந்தாலும் போகப் போக ரசிக்கப் பழகவிட்டது. 

இப்படி இனிமையான பறவையொலிகளைக் கேட்டு ரசித்திருந்த எனக்கு, ஒருநாள் க்ர்ர்ர்ரே…..க்ர்ர்ரே….’ என்று தொண்டையைக் கிழித்துக்கொண்டு காட்டுக்கத்தலாய் ஏதோ பறவைக்குரல் கேட்கவும், தூக்கிவாரிப்போட்டது. ஆகாயத்திலிருந்து அண்டரண்டப் பட்சிதான் வந்துவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு அசாதாரணக் கூச்சல்! இதற்கு முன்னர் எப்போதும் கேட்டிராத பறவையொலிஆக்ரோஷமாய்க் கத்துகிறதா அல்லது அதன் குரலே இப்படித்தானா.. என்று புரியவில்லை. என்ன பறவையென்று பார்க்கலாம் என்றாலோஅடர்ந்த மரக்கிளைகள் எதையும் பார்க்கவிடவில்லை. ஆனால்சத்தம் மட்டும் காதைத் துளைத்தவண்ணம் எப்போதடா ஓயும் என்றிருந்தது.

சட்டென்று அமைதி! தூரத்தில் அதே க்ர்ர்ர்ரேக்ர்ர்ர்ர்ரே….’ சத்தம்பறந்துபோய்விட்டது போலும்.. இவ்வளவு பெரிய சத்தம் தருகிறதென்றால் அது எவ்வளவு பெரிய பறவையாக இருக்கும்அதைப் பார்த்தே ஆகவேண்டுமேஎன்று உள்ளுக்குள் ஒரே தவிப்புமறுபடி எப்போது வருமோ… வருமோ, வராதா?  கொஞ்சம் வருத்தம்தான்.

மறுநாள் நூலகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். வீட்டிலிருந்து அரைமணி நேர நடைபோகும் வழி நெடுக மரங்கள்பரந்த பச்சைப்புல்வெளிகள்இரண்டு மூன்று விளையாட்டு மைதானங்கள்… அப்போது எதிர்பாராத காட்சியொன்று காணக் கிடைத்தது. பச்சைப் புல்வெளியெங்கும் அள்ளி இறைத்தாற்போல் வெண்பஞ்சுப் பறவைக்கூட்டம்என்ன செய்கின்றன என்று உற்றுக் கவனித்தால் ஒவ்வொன்றும் மூக்கால் மண்ணை உழுதுகொண்டிருக்கின்றன. 



ஒருவித எச்சரிக்கை உணர்வோடு சற்றே பார்வையை நகர்த்திப் பார்த்தால் தலைக்கு மேலே மரங்களில் கிளைகளில் காணுமிடம் எங்கெங்கும் பறவைகள்பறவைகள்… பறவைகள்!



வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கையில் பந்தயம் வைத்தாற்போல் விருட்டென்று அத்தனையும் சிறகடித்துக் கிளம்பி சாலையைக் கடந்து அடுத்த மைதானத்துக்குச் செல்கின்றன. தரையிலிருந்து படுவேகத்துடன் ஒரு விமானம் போலத் தாழ்வாகக் கிளம்பித் தலையுரசிப் போகையில் யாருக்குதான் கிலி ஏற்படாது? நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைக்க, நடைபாதையில் பாதசாரிகள் பையோ கையோ கொண்டு தலையையும் முகத்தையும் மறைத்து ஒடுங்கிநிற்கநான் செய்வதறியாது திகைத்து நடக்கிறேன்தலைக்கு மேலே க்ர்ர்ர்ரே….’என்று கத்திக்கொண்டு பறந்துபோன போதுதான் விபரம் புரிந்ததுஅட இதுதானா அது! விபரீதமும் கூடவே புரிய, நானும் சிரம் தாழ்த்திக் குறுகி நின்று, பறவைக்கூட்டம் முழுவதும் பறந்துசெல்லும்வரைக் காத்திருந்து நடையைத் தொடர்ந்தேன்.




சிறுவயதுக் காலங்களில் சர்க்கஸில் இந்தப் பறவைகள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். வெண்ணிற உடலில் மஞ்சள் நிறக்கொண்டையுடன் காணப்படும் இவை ஆஸ்திரேலியக் கிளிகள் என்ற வரையில்தான் அறிமுகம் எனக்கு. ஆர்வம் உந்த அப்பறவைகளைப் பற்றி அறிய முற்பட்டேன். காக்கட்டூ என்ற பெயர் கொண்ட இப்பறவைகளைப் பற்றி பல சுவாரசியத் தகவல்கள் கிடைத்தன. இதுபோல் உணவுக்காக அடிக்கடி இடம்பெயர்ந்து கூட்டம் கூட்டமாய் வருவது அவற்றின் இயல்பென்பதையும் அறிந்தேன்.

ஆஸ்திரேலியக் கொச்சைமொழியில் காக்கட்டூ என்பது சட்டவிரோத சூதாட்ட விடுதிகளில் போலீஸார் வருகையை முன்கூட்டி அறிவித்து எச்சரிப்பவரைக் குறிக்கும் அடைமொழியாகும். அவருக்கும் காக்கட்டூவுக்கும் என்ன தொடர்பென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, காக்கட்டூ போல் உரத்தக் குரலில் கத்தி எச்சரிப்பாரோ?

ஆஸ்திரேலியாவின் அதிசயப் பறவைகளான காக்கட்டூ பறவைகள் பற்றி மற்றுமொரு பதிவில் அறிந்துகொள்வோம். அதற்குமுன் எங்கள் தோட்டத்து மரங்களில் வந்தடையும் பறவைகளின் சங்கீதத்தைக் கேட்டு ரசிப்போமா? என்னிடமுள்ள ஒலிப்பதிவுக்கருவியின் உதவியால் பதிவு செய்தேன். சிலவற்றில் தெளிவு இருக்காது… என்றாலும் ஓரளவு கேட்டு ரசிக்கலாம். 

காது துளைக்கும் காக்கட்டூ



அண்டங்காக்கை



கச்சேரி வைக்கும் காக்கைகள்


காக்கைகளின் டூயட்


சும்மாவே லாரிகீட்கள் கும்மாளமிடும்




வசந்தகாலமென்றால் சொல்லவும் வேண்டுமோ?



புல்லாங்குழல் பறவை மேக்பை



இன்னும் கொஞ்சம் பாட்டு



மேக்பையும் புறாவும் போட்டிகானம்


குயிலின் கீதம்


இன்னும் நிறைய பறவைகளின் ஒலி கேட்டவண்ணம்தான் இருக்கின்றது. ஆனால் நேரமும் சூழலும் ஒத்துழைக்காததாலும், உயரத்தில் ஒலிப்பது சரிவர பதிவாகாததாலும் பல இனிய குரல்களைத் தவறவிட்டிருக்கிறேன். ஆனாலும் இதுவரை ஒலிப்பதிவு செய்தவற்றையாவது இணைப்போம் என்றால் வலைப்பதிவில் எப்படி இணைப்பது என்று தெரியாமல் தவித்திருந்தேன். 


என்னைப் போன்ற பலருடைய வேண்டுகோளையும் ஏற்று 
அழகாக, தெளிவாக செய்முறைகளுடன் விளக்கி வழிகாட்டிய 
சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு 
இவ்வேளையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். 



************************************************
(படங்கள்: நன்றி இணையம்)

36 comments:

  1. விசித்திரப்பறவைகளின் கீதம் ரசிக்கவைத்தது..!

    ReplyDelete
  2. மேக்பை பற்றி எழுதிய பதிவு.....

    மணிராஜ்: தபால்காரரின் எதிரி
    http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_09.html

    கிளிகள் பற்றி எழுதிய பதிவு....
    வண்ணக் கிளிகள் !!
    http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_11.html

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு உணக்ளுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .

    ReplyDelete
  4. உங்கள் வீட்டு தோட்டத்துப் பறவைகளின் ஆனந்த கீதங்கள், அவற்றைப் பற்றிய விவரங்கள் அருமை!

    ஆஸ்திரேலிய வெள்ளைக் கிளியின் (காக்கட்டூ) குரல் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அடர்ந்த தோப்பில் தனிமையில் இருக்கும் ஒருவர் இந்த குரலைக் கேட்டால் அரண்டுதான் போவார்கள்.

    நல்ல உழைப்பு. பறவைகளின் குரல்களை பதிவு செய்து இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி! நீங்கள் சுட்டிய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் நேயர் விருப்பம் பதிவினையும் சொடுக்கிப் பார்த்தேன்.
    த.ம.2

    ReplyDelete
  5. ஆஹா....காக்கட்டூவின் குரலும் மேக்பையின் அழகிய இசைக் குரலும் பிரமாதம். இவற்றை பதிவு செய்ய எத்தனை மெனக்கெட்டிருப்பீர்கள்...! அதற்கு முதலில் சல்யூட். அந்தந்தப் பறவைகளின் படங்கள் + தகவல்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்வான கைகுலுக்கல்கள். அப்புறம்... காக்கட்டூக்கள் கூட்டத்தைக் கண்டு நீங்களெல்லாம் பயந்ததை விவரித்திருப்பதைப் படிக்கையில் திகில்மன்னன் ஹிட்ச்சாக்கின் ‘பறவைகள்’ படம் நினைவில் நிழலாடியது.

    ReplyDelete
  6. பறவைகள் அவைகளுக்குள் என்ன பேசிக் கொள்கின்றனவோ... உங்கள் உழைப்பு பாராட்டத் தக்கது. ஒவ்வொன்றையும் இனம் கண்டுபிடித்து, பெயரிட்டிருப்பது சிறப்பு.

    ReplyDelete
  7. பறவைகளின் ஒலியே கேட்பதற்கு இனிமையே தரும்! படங்கள் அனைத்தும் அருமை!

    ReplyDelete
  8. Anonymous2/5/14 23:09

    வணக்கம்

    பறவைகள் பல விதம் தங்களின் பதிவும் ஒருவிதம்
    நன்றாக உள்ளதுவாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. தகவல்களுக்கும் படங்களும் அருமை..
    ஒலிப்பதிவை நான் கேட்க முடியாத தால் ஒன்றும் சொல்ல முடியவில்லை..

    ReplyDelete
  10. அழகான படங்களுடன் மிக அருமையான விளக்கங்கள். விசித்திரப்பறவைகளின் கீதம் வியப்பளிக்கிறது. பறவைகளின் குரல்களை பதிவு செய்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. கடுமையான உழைப்புடன் இந்தப்பதிவினை வெளியிட்டுள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. படங்களுடன் குரலையும் கேட்டு ரசிக்கும்படியாக
    அற்புதமான பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    இந்த அற்புதமான அழகான கோலத்திற்கு
    புள்ளி வைத்துக் கொடுத்த தனபாலன் அவர்களுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஒலிப்பதிவு வெளியீட்டில் தொழில் நுட்பம் தெரிகிறது. சென்னையில் என் மகன் வீட்டின் அருகே புறாவின் கர்ண கொடூர சப்தம் கேட்டிருக்கிறேன் ஒலிப் பதிவு செய்ய நிறையவே மெனக்கட்டு இருந்திருக்க வேண்டும் பாராட்டுக்கள்,

    ReplyDelete
  13. கொஞ்சும் குரல்களுடன் பறவைகளை கண்டு கேட்டு கொஞ்ச நஞ்சமல்ல ஆனந்தம்!

    ReplyDelete
  14. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் உடனடி வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி மேடம். தாங்கள் சுட்டிய சுட்டிகளை வாசித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  15. @அம்பாளடியாள் வலைத்தளம்

    வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  16. @துளசி கோபால்

    வாங்க டீச்சர், காக்கையின் குரலைக் கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் நீங்களும் எஸ்.ஜே.சூர்யாவும் நினைவுக்கு வந்துவிடுகிறீர்கள்.;) தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. @தி.தமிழ் இளங்கோ

    தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. காக்கட்டூவின் குரலை முதன் முதலாய்க் கேட்டபோது எனக்கும் அடிவயிற்றில் கிலி பரவியது உண்மை.

    ReplyDelete
  18. @பால கணேஷ்

    என்னிடமிருக்கும் சிறிய ரெக்கார்டரை எடுத்தவுடனேயே என் பிள்ளைகள் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.(பிரிவோம் சந்திப்போம் சிநேகா மாதிரியாம் ;))

    பறவைகள் படத்தைக் குறிப்பிடலாமா என்றுகூட நினைத்தேன். பதிவு நீண்டுவிடும் என்று குறிப்பிடவில்லை. நீங்கள் குறிப்பிட்டுவிட்டீர்கள். நன்றி கணேஷ்.

    ReplyDelete
  19. @ஸ்ரீராம்.

    இன்னும் கூட பல பறவையொலிகளை என்னால் அடையாளங்காண இயலவில்லை. நம்மூரில் காரை ரிவர்ஸில் எடுக்கும்போது கீக் கீக் கீக் கீக் என்றொரு சத்தம் கேட்குமே.. அதே சத்தம். என்ன பறவையென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடித்ததும் பதிவிடுகிறேன். வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  20. @புலவர் இராமாநுசம்

    ஓய்வுக்குப் பின்னரான தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  21. @2008rupan

    வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete
  22. @Seeni

    ஒலிப்பதிவை தங்களால் கேட்கமுடியவில்லை என்பதில் வருத்தம்தான். எனினும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனி.

    ReplyDelete
  23. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோபு சார். ஒலிப்பதிவு செய்ய மெனக்கெட்டதை விடவும் அதைப் பதிவில் இணைப்பதற்குதான் நிறைய மெனக்கெட்டேன். திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்குதான் அனைத்துப் பெருமைகளும் போய்ச்சேர வேண்டும்.

    ReplyDelete
  24. @Ramani S

    தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிக்க நன்றி ரமணி சார். தாங்கள் குறிப்பிட்டது போல் திண்டுக்கல் தனபாலன் அவர்களுடைய வழிகாட்டுதல் இல்லையென்றால் இந்தப் பதிவை என்னால் இட்டிருக்கவே இயலாது. அவருக்கு மீண்டும் என் நன்றி.

    ReplyDelete
  25. @G.M Balasubramaniam

    ஹூம்.. ஹூம்.. என்று காய்ச்சலால் அனத்துவது போன்ற புறாவின் சத்தம் எனக்கும் ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தது. போகப் போகப் பழகிவிட்டது.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  26. @கே. பி. ஜனா...

    தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஜனா சார்.

    ReplyDelete
  27. உங்கள் வீட்டு தோட்டபற்வைகளின் படமும் அழகு. அதன் கீதங்களை (ஒலிகளை) அழகாய் பதிவாக்கி தந்தமைக்கு வாழ்த்துக்கள்.
    திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
    //மரங்களில் வந்தடையும் பறவைகளின் சங்கீதத்தைக் கேட்டு ரசிப்போமா? என்னிடமுள்ள ஒலிப்பதிவுக்கருவியின் உதவியால் பதிவு செய்தேன். //
    இனி அடிக்கடி கேட்கலாம் பறவைகளின் சங்கீத கச்சேரிகளை என்று நினைக்கிறேன்.
    தமிழ்மண வாக்கு அளித்துவிட்டேன்.

    ReplyDelete
  28. அத்தனை குரல்களையும் பதிவு செய்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....

    எத்தனை எத்தனை பறவைகள். காலையில் இவற்றின் சங்கீதம் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

    ReplyDelete
  29. @கோமதி அரசு

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    \\இனி அடிக்கடி கேட்கலாம் பறவைகளின் சங்கீத கச்சேரிகளை என்று நினைக்கிறேன்\\

    நிச்சயமாகக் கேட்கலாம் மேடம். பறவைகளின் பெயர்களைத் தெரிந்துகொண்டு பதிவிடுவேன்.

    ReplyDelete
  30. @வெங்கட் நாகராஜ்

    உண்மைதான். ஒவ்வொரு நாளையும் உற்சாகமாய்க் கழிக்க உதவுபவை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

    ReplyDelete
  31. ஆஹா அருமையான பதிவுகள் குரல்களும் தான்...பறவைகளுடனான உங்கள் உரவு என்னை வியக்க வைக்கின்றது...வாழ்த்துகள்

    ReplyDelete
  32. பதிவின் தரமும் மெனக்கெடலும் நேர்த்தியும்...
    வாவ்...

    ReplyDelete
  33. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.