எழுத்தாலும் எண்ணங்களாலும்
என்னைக் கவர்ந்த பதிவர்களுள் முக்கியமான ஒருவர் ஜிஎம்பி எனப்படும் G.M.பாலசுப்ரமணியம்
ஐயா அவர்கள். அவருடைய ‘வாழ்வின் விளிம்பில்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு என்னை வந்தடைந்து
சில மாதங்கள் ஆகியிருந்தாலும் நூலை சமீபத்தில்தான் வாசித்து முடித்தேன். இத்தொகுப்பில்
இடம்பெற்றுள்ளவற்றை சிறுகதைகள் என்பதை விடவும் ஜிஎம்பி ஐயா அவர்களின் எழுபத்தைந்து
வருட வாழ்க்கை அனுபவஞ்சார்ந்த புனைவுகள், உள்ளத்தின் உள்ளாடும் எண்ணங்களின் பகிரல்கள்…
அவர் அறிந்த, சந்தித்த, பழகிய மனங்களின் விநோத வெளிப்பாடுகள்… கற்பனைகளின் கலந்துருவாக்கம்..
இப்படி பலவும் சொல்லலாம்.
வாழ்வின் விளிம்புக்குத்
தள்ளப்பட்டுள்ள ஒவ்வொருவருக்குள்ளும் எழும் மன உணர்வுகளை அழகாகப் பிரதிபலிக்கும் கதை
வாழ்வின் விளிம்பில். சராசரி மனங்களின் பிரதிநிதியாக ரங்கசாமி காட்டப்படுகிறார். எப்போதுதான்
மனித மனத்துக்குப் போதுமென்ற திருப்தி எழுந்திருக்கிறது? கடமைகளை முடிக்காமல் சாவது தர்மமா என்ற கேள்வி ஒருபக்கம்..
கடமைகள் முடிந்துவிட்டன என்றால் போய்த்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி மறுபக்கம். வாழ்க்கையை
வாழ் என்று ஒருபக்கம் ஆவல் உசுப்புகிறது. அந்த ஆவல் பூர்த்தியாகிறதா இல்லையா என்பது
நம் யூகத்துக்கே விடப்பட்டுவிடுகிறது. இக்கதையின் தொடர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவிலான
கதை விளிம்புகளில் தொடரும் கதை. தலைப்பும் அதை உறுதிப்படுத்துகிறது. ரங்கசாமியின் மனவோட்டம்
முந்தைய கதை என்றால் ஐம்பது வருடங்களுக்கு முன் அவன் காதலித்து மணந்த, அவன் மீதான காதல்
இன்றும் மாறாத மனைவியின் மனவோட்டம் இந்தக் கதையில்.
சம்பவங்களைப் பின்னிக்
கதையாக்கி வாசகரை ஈர்ப்பது ஒரு யுத்தி. இது பெரும்பாலான கதைகளில் பின்பற்றப்படும் யுத்தி.
சம்பவங்களைப் பிரதானப்படுத்தாமல் அதன் பின்னணியிலான உணர்வுகளைப் பதிவு செய்வதன் மூலம்
வாசகரை தன் உணர்வோட்டத்துக்கு இணையாக அழைத்துச்செல்வது மற்றொரு யுத்தி. ஜிஎம்பி ஐயாவின்
கதைகளில் பெரும்பாலும் இந்த இரண்டாவது யுத்தியே கையாளப்பட்டிருப்பது சிறப்பு.
திருமண உறவுக்கு
வெளியே உருவாகும் காதலையும் ஈர்ப்பையும் மையப்படுத்திய கதைகள் சிலவும் இந்தத் தொகுப்பில்
இடம்பெற்றுள்ளன. காமஞ்சார்ந்த காதல்… அதனால் உருவான விபரீதங்கள் எங்கே ஒரு தவறு
கதையில்…
உடலீர்ப்பு சார்ந்த காதல் அதனால் உருவான சமூக உதாசீனங்கள் நதிமூலம் ரிஷிமூலம் கதையில்...
தகாத உறவால் ஏற்படும் தவறான விளைவுகள்… விபரீத உறவுகள் கதையில்.
உடன்பிறந்தவளை,
அவளது உடற்குறையின் காரணமாக, அவள் உணர்வுகளைக்
கொன்றுபோடும் அண்ணனைப் பற்றி அறியும்போது மனம் வெதும்பிப் போகிறது. இப்படியும் ஒரு கதையில் கோவிந்தனின் நிலையில்தான் வாசிக்கும்
நாமும். காலங்காலமாகத் தொடரும் ஒரு முறையற்ற வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது
கோவிந்தனின் முடிவு.
கேள்விகளே பதிலாய்…
சிறுகதையில் கேள்விகள் கேட்கப்படாமையே வாழ்க்கையின் நிம்மதியைத் தீர்மானிக்கிறது. ஒருவேளை
கேள்விகள் கேட்கப்பட்டால்? நூலிழையில் பற்றிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை பந்தம். கேள்விகளைத்
தவிர்க்கலாம்.. மனசாட்சியை? முந்தைய கதையின் கருப்பொருளை மாறுபட்ட கோணத்தில் பதிவு
செய்த கதை மனசாட்சி. மனித மனத்தின் மாறுபட்ட குணாதிசயங்களை அப்பட்டமாய்க் காட்டும்
சிறுகதை. வறுமையில் தாராளமாய் ஆசைப்படும் மனம், செழிப்பில் கஞ்சத்தனம் காட்டும் முரண்
ஒரு கதையில் பதிவு செய்யப்படும் அதே வேளை, ஏறிவந்த ஏணியை மறந்துபோவதான சாத்தியத்தை
வெளிப்படுத்துகிறது மற்றொரு கதை.
பேருந்தில் தன்
இளமனைவியின் அருகில் அமரும் அடுத்த ஆண்மகனைக் காணப் பொறுக்காமல் துடிக்கும் கணவனை ஒரு
கதையிலும் வயதான தன் மனைவியினருகில் தன் பேரன் வயதொத்தவன் அமர்ந்தாலும் அதைக்கண்டு
பொங்கும் முதியவரை மற்றொரு கதையிலும் காட்டி கணவர்களின் பொசசிவ் மனப்பான்மையைக் காட்டி
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.
‘எப்பவுமே ஆண்களையே
சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின் நலனுக்காக என்னவெல்லாமோ செய்கிறார். சோமவார விரதம்,
காரடையான் நோன்பு, ரக்ஷ பந்தன், இத்தியாதி, இத்தியாதி… ஆனால் இந்த ஆண்கள்
பெண்களின் நலன் வேண்டி ஏதாவது செய்கிறார்களா என்ன?’ சௌத்வி க சாந்த் ஹோ கதையில் இப்படியொரு
கேள்வியை எழுப்பி வாசகரை யோசிக்க வைக்கிறார்.
இத்தொகுப்பில்
இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எழுத்தாளரின் மன உணர்வுகளைக் கச்சிதமாய்ப்
படம்பிடித்துக் காட்டுவதில் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. எண்ணங்களைக் கோர்வையான எழுத்தால்
வெளிப்படுத்தும் வல்லமையும் இவருக்கு வாய்த்திருக்கிறது. நம் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்
ஒருவரின் அருகில் அமர்ந்து அவருடைய வாழ்க்கையில் அவர் கண்ட கேட்ட அறிந்த பல்வேறு சம்பவங்களை...
பலதரப்பட்ட மனித குணாதிசயங்களை, முரண்பட்ட வாழ்க்கைமுறைகளை அவர் வாயால் சொல்லிக் கேட்பது
போன்ற உணர்வேற்படும் வகையில் சுவாரசியமான எழுத்தோட்டத்தால் பதிவுசெய்திருக்கும் ஜிஎம்பி
ஐயா அவர்களுக்கு என் பாராட்டுகள்.
நூலின் பெயர்
– வாழ்வின் விளிம்பில் (சிறுகதைகள்)
ஆசிரியர் – G.M.பாலசுப்ரமணியம்
வெளியீடு – மணிமேகலைப்
பிரசுரம்
விலை – ரூ.60/-
நல்லதொரு நூல் அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
Deleteவணக்ம் சகோ அழகாக விமர்சித்து இருக்கின்றீர்கள் வாழ்த்துகள் நானும் இதனைப்பற்றி எழுதி இருக்கின்றேன் நேரமிருந்தால் படித்துப்பார்க்கவும் இதோ இணைப்பு
ReplyDeletehttp://killergee.blogspot.ae/2014/11/1_21.html
நன்றி கில்லர்ஜி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.. தங்கள் பதிவையும் வாசித்துக் கருத்திட்டேன்.
Deleteதமிழ் மணம் 1
ReplyDeleteமிகவும் நன்றி.
Deleteஎனதருமை ஐயாவிற்கு வாழ்த்துகள்...
ReplyDeleteமிகவும் நன்றி தனபாலன்.
Deleteவாழ்வின் விளிம்பில் விமரிசனத்துக்கு நன்றி மேடம் திண்டுக்கல் தனபாலின் வாழ்த்துக்களுக்கு நன்றி
ReplyDeleteஇதை விமர்சனம் என்று சொல்வது தகுமா என்று தெரியவில்லை. சிறு அறிமுகம் என்று சொல்லலாம். ஒவ்வொரு கதையும் உண்டாக்கும் தாக்கம் அதிகம். தனித்தனியே விமர்சித்து எழுதினால் பதிவு நீண்டுகொண்டே போய்விடும் என்பதால் தவிர்த்தேன்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
வாழ்வின் விளிம்பில் நூல் பற்றிய அருமையான விமர்சனம்! கதைகளை நன்றாக உள்வாங்கி வாசிக்கத் தூண்டும் வகையில் விமர்சனம் செய்திருப்பதற்குப் பாராட்டுக்கள் கீதா! நூலாசிரியர் திரு ஜி,எம்.பி ஐயாவுக்குப் பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்கா.
Delete