ஆஸ்திரேலியாவின்
அடையாளச் சின்னமாக குறிக்கப்படும் இந்தக் கட்டடத்தின் பெயர் சிட்னி
ஓபெரா மாளிகை (Sydney opera house) என்று பலருக்கும் தெரிந்திருக்கும். இந்தக் கட்டடம் உருவானதற்குப் பின்னால் இழையோடும் ஒரு சோகநிகழ்வு பற்றித் தெரியுமா உங்களுக்கு?
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் வளைகுடாப் பகுதியொன்றில் அமைந்துள்ள இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,
இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், நிகழ்த்து கலைகள் போன்றவை நடைபெறும்வண்ணம் அரங்குகள்
அமைக்கப்பட்டுள்ளன. இதன் மேற்கூரைகள் சூரிய ஒளியை மிக அழகாகப் பிரதிபலிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிட்னியில் வருடாவருடம் கொண்டாடப்படும் விவித் எனப்படும் பிரமாண்ட ஒளித்திருவிழாவின்
போது இந்தக் கட்டிடம் வர்ணஜாலம் கொண்டு வசீகரிக்கும்.
ஆஸ்திரேலியாவின்
சுற்றுலாத் தளங்களுள் முக்கியமானதாகக் கருதப்படும் சிட்னி ஓபெரா மாளிகைக்கு வருடந்தோறும்
தோராயமாக 82 இலட்சம் மக்கள் வந்துபோகின்றனர். அதனால் நாட்டின் பொருளாதார வளம் எக்கச்சக்கமாக
உயர்கிறது. 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
இதன் மற்றொரு சிறப்பு. இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ஜான் ஆபெர்க் உட்ஸன் (Jørn
oberg Utzon) என்னும் டென்மார்க் கட்டிடக் கலைஞர். விஷயம் அவரைப் பற்றியதுதான்.
John Utson (படம்: நன்றி இணையம்) |
சிட்னி ஓபெரா மாளிகைக்கான
கட்டட வடிவமைப்புக்கான போட்டி வெளியிடப்பட்டபோது 32 நாடுகளிலிருந்து 233 விண்ணப்பங்கள்
வந்துகுவிந்தனவாம். அவற்றுள் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்தான் ஜான் உட்ஸன். கட்டட வடிவமைப்பிலும்
நிர்மாணிப்பிலும் தீவிரப்பற்று கொண்டிருந்த அவருக்கு சிட்னி ஓபெரா மாளிகைக்கான வடிவமைப்புக்கான
மூலம் எங்கிருந்து கிடைத்ததாம் தெரியுமா? ஒரு ஆரஞ்சின் தோலை உரித்த மாத்திரத்தில் அவர்
உள்ளுக்குள் உருவான ஐடியாவாம் அது. ஆம். சிட்னி ஓபெரா மாளிகையில் தனித்தனியாக காட்சியளிக்கும்
சிப்பி போன்ற 14 மேற்கூரைகளையும் ஒன்றுசேர்த்தால் ஒரு முழுமையான கோளம் உருவாகுமாம்.
அந்த அளவுக்கு நுணுக்கமான கட்டடத் தொழில்நுட்பமும் கலைநயமும் கொண்டது இந்த மாளிகை.
1958 இல் துவங்கிய
வேலை பதினாறு ஆண்டுகள் கழித்து 1973-இல் தான் முழுமையடைந்தது. இதற்கிடையில் ஏகப்பட்ட
பிரச்சனைகள்… குளறுபடிகள். 1965 இல் நியூ சௌத்வேல்ஸில் ஆட்சி மாறியதும் உட்ஸனுக்கு
அரசு தரப்பிலிருந்து ஆதரவு குறைந்துபோனது. போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையும்
வடிவமைப்பு குறித்த கருத்து முரண்பாடுகளும், எள்ளல் விமர்சனங்களும் 1966 இல் உட்ஸனை
இப்பணியிலிருந்து விலகச் செய்தன. அலுவலகத்தை மூடிவிட்டு இனி ஆஸ்திரேலியா பக்கமே தலைவைத்துப்
படுக்கப்போவதில்லை என்ற முடிவுடன் தாயகம் திரும்பினார் உட்ஸன். அவர் கைவிட்டபோது கட்டடத்தின்
வெளிநிர்மாண வேலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்தது. அதுவரை சுமார் 30 மில்லியன்
டாலர்கள் செலவாகியிருந்தது. ஆனால் உள்ளரங்குகள், மூல வரைபடத்திலிருந்து பல மாற்றங்கள்
செய்யப்பட்டு அமைக்கப்பட்ட பிறகான கணக்கெடுப்பின்படி ஒட்டு மொத்த கட்டடத்திற்கு ஆன
செலவு சுமார் 103 மில்லியன் டாலர்கள்.
ஒருவழியாக
1973 இல் கட்டிடம் முழுமையாக முடிக்கப்பட்டு இப்போதைய பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கையால் திறந்துவைக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு கட்டட வடிவமைப்பாளரான
ஜான் உட்ஸனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. நிகழ்ச்சிகளில் அவர் பெயர் தவறியும்கூட உச்சரிக்கப்படவில்லை.
காலம் மாறியது.
காட்சிகளும் மாறியது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு உள்ளரங்க வடிவமைப்பில்
மாறுதல் தேவைப்பட்டபோது... அதாவது உட்ஸனின் தேவை ஏற்பட்டபோது.. அவரை அணுகினார்கள். அவருக்கு உரிய மரியாதையும் மதிப்பும்
அளித்து அவரை அழைத்தார்கள். உட்ஸன் மறுக்கவில்லை. இன்னா செய்தாரை... அவரும் அக்குறள் அறிந்திருப்பார் போலும்.
ஆனால் அவர் நேரடியாகக் களமிறங்காமல்
தன் மகன் ஜேன் உட்ஸன் மூலம் சிட்னி ஓபெரா மாளிகையில் மீண்டும் தன் கைத்திறனைக் காட்டினார்.
அவரது மூல வரைபடத்தின்படி வடிவமைத்த அரங்கொன்றுக்கு அவரது பெயர் இடப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
1918 இல் பிறந்த ஜான் உட்ஸன் தனது தொண்ணூறாவது வயதில் 2008 இல் மறைந்தார். 2003-ல் சர்வதேச கட்டட நிர்மாணிப்பாளர்களுக்கான உயரிய விருதான Pritzker prize இவருக்கு வழங்கப்பட்டது.
இன்று ஆஸ்திரேலியப்
பயணம் மேற்கொள்ளும் பலரும் சிட்னி ஓபெரா மாளிகையைக் காண்பதே தங்கள் பயணத்தின் மாபெரும் லட்சியமாய்க்
கொண்டு கட்டடத்தைக் கண்ணுற்று மகிழ்ந்திருக்க, ஜான் உட்ஸன் தன் இறுதிக்காலம் வரை, தான் கொண்ட சபதத்தில் உறுதியாயிருந்து, தன்னால்
வடிவமைக்கப்பட்ட சிட்னி ஓபெரா மாளிகையைப் பார்க்க ஆஸ்திரேலிய மண்ணில் அடியெடுத்து வைக்கவே
இல்லை என்பது எவ்வளவு வேதனை தரும் செய்தி.
&&&
நாம் சாதாரணமாக தூக்கி வீசும் ஆரஞ்சுப்பழத்தை வைத்தே கட்டிடத்தை வடிவமைத்த திறமைசாலியை இப்படி அரசாங்கமே ஒதுக்கி வைத்தது எத்தனை பெரிய இழிவு .
ReplyDeleteஇன்றும் ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்டு பார்வையிடும் ஒவ்வொருவர் பார்வையிலும் அந்தக் கலைஞன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
நல்லதொரு தகவலை பகிர்ந்திருக்கிங்க தோழி.
எனக்கும் முதலில் சாதாரணமாய்த் தோன்றிய கட்டடம் அதன் வடிவமைப்பாளரைப் பற்றி அறிந்தபின் மதிப்பு கூடிவிட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி.
Deleteஎவ்வளவு பெரிய மனிதர் உட்ஸன். சுவாரஸ்ய விவரங்கள்.
ReplyDeleteபெரிய மனிதர்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteஒபேரா மாளிகையில் மறைந்துள்ள உட்சனின் சோகம் அறிந்தேன்! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
Deleteஇன்றைய உலகின் வாழ்வியல் உண்மையே இதுதான் சகோதரியாரே
ReplyDeleteமற்றவர்களுக்காக உழைக்கும் ஒவ்வொருவருமே ஒரு நாள்
சமையலுக்குப் பின் வேப்பிலையைத் தூக்கி எறிவதுபோல்
உதாசீனப் படுத்தப படுவார்கள்
இன்றைய உலகம் இதுதான்
நன்றி சகோதரியாரே
தம +1
இன்றைய உலகம் பற்றிய தங்கள் மதிப்பீடு சரியே ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஅறியாததகவல் தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன்.
Deleteதான் பெற்ற பிள்ளையை பார்க்காமலே இறக்கும் சோகத்திற்கு சற்றும் குறையாதது தான் தன் படைப்பை பார்க்காமலே போன சோகம்:((
ReplyDeleteஅழகான படங்கள் ! வழக்கம் போல பயன்னுள்ள பதிவு அக்கா!
படைப்பாளியின் மனநிலையை மிகச்சரியான உதாரணத்தோடு குறிப்பிட்டிருக்கீங்க மைதிலி. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிம்மா.
Deleteஓபரா வடிவமைப்பாளர் பற்றிய செய்தி இதுவரை அறியாதது. மீண்டும் அழைத்த போது வர மாட்டேன் என்று சொல்லாமல் தம் மகனை அனுப்பி முடித்து வைத்ததில் தான் அவர் பெருந்தன்மை தெரிகிறது. அழைப்பிதழில் பெயரும் போடாமல் அழைக்கவும் இல்லாமல் உதாசீனம் செய்யப்பட்டது மிகப்பெரிய துரோகம். இருந்தும் அவரால் மன்னிக்க முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியா என்றாலே சிட்னி ஓபரா தான் என்றாகிவிட்டது. ஓபரா ஹவுஸ் இருக்கும் வரை உட்ஸனின் பெயரும் நிலைத்து நிற்கும். பயனுள்ள பதிவு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. எனக்கும் வெகுகாலம் உட்ஸனைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இப்படி எத்தனைப் பேருக்கு அவரைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கும். நல்லவேளையாக மறுபடியும் அவரை மதித்து அழைத்து செப்பனிட வைத்தார்கள். உள்ளரங்கம் ஒன்றுக்கு அவர் பெயரை வைத்து அவரைப் பற்றி பலரும் அறியச் செய்திருக்கிறார்கள்.
Deleteஎத்தனை பெரிய திறமைசாலியாக இருந்தாலும், இந்த உலகம் அவரை மதிப்பதில்லை....
ReplyDeleteசிட்னி ஓபரா இருக்கும் வரை அவரது பெயரும் நிலைத்திருக்கும்.
நிச்சயமாக. இப்போது அவரைப் பற்றி வெளியுலகம் அறிந்துகொண்டுவிட்டது. அதனால் அவரது பெயர் ஓபெரா மாளிகை உள்ளவரை நீடித்திருக்கும். ஐயமில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteவியக்கவைக்கும் தகவல்கள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteஇப்படி ஒரு சோகமா இந்த அதிசிறந்த கட்டிடத்திற்குப் பின்னால். வேதனையாக உள்ளது. இப்பொழுது பார்க்கவும் ஆவலாக உள்ளது.
ReplyDeleteகூடிய விரைவில் செல்வேன் என நினைக்கிறேன் விபரத்திற்கு நன்றி ! வாழத்துக்கள்....!
அப்படியா? வருக.. வருக.. வாய்ப்பு அமைந்தால் அவசியம் சந்திப்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியா.
Delete