அன்பின்…
அக்கறையின்… ஆதுரத்தின் அழகான வெளிப்பாடுதான் ஆசிகளும் வாழ்த்துகளும். ஆசி என்பது மூத்தோர் இளையோர்க்கு சொல்லும் நல்வாக்கு. நிறைந்த மனத்தோடு நல்கப்படும் ஆசிகளுக்கு உண்மையாகவே ஆற்றலுண்டு என்று நம்புகிறவள் நான். பழமொழிகள் தேடலின்போது, பாரம்பரியமிக்கப் பண்டைய
அயர்லாந்து மக்களின் ஆசிகள் மற்றும் வாழ்த்துகள் பற்றி அறியும் வாய்ப்பு கிட்டியது. பல வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் இருக்கவே, நான் ரசித்தவற்றை தமிழாக்கி இங்கு பகிர்கிறேன், நீங்களும் சுவைத்து ரசிக்க.
- அயர்லாந்தின் தேவதைகள் உன் வீட்டு வாயிலில் இறங்கி இளைப்பாறட்டும்.
- அயர்லாந்தின் அதிர்ஷ்டம் உன்னை மகிழ்வின் உச்சங்களுக்கு அழைத்துச்செல்லட்டும். நீ செல்லும் சாலையெல்லாம் பச்சை விளக்குகள் ஒளிர்ந்திருக்கட்டும்.
- நரகத்தின் பாதையில் புற்கள் நெடியதாக வளரட்டும்.
- கடவுள் உன்னை உள்ளங்கையில் வைத்திருக்கட்டும். அதை என்றைக்கும் இறுக்கி மூடாதிருக்கட்டும்.
- கடவுள் உன்மேல் பிரியமாயிருப்பாராக. அதற்காக விரைந்து உன்னைத் தன்னிடம் அழைத்துக்கொள்ளாதிருப்பாராக.
- நீ இறந்துவிட்டாய் என்பதை சாத்தான்கள் அறியுமுன்பு அரைமணி நேரமாவது சொர்க்கத்தில் இருப்பாயாக.
- உன் இடர்கள் எல்லாம் என் பாட்டியின் பற்களைப் போல குறைவாகவும் பெரும் இடைவெளியோடும் இருக்கட்டும்.
- அயர்லாந்தின் எதிரிகளுக்கு ஒருபோதும் நண்பர்கள் கிடைக்காதிருக்கட்டும்.
- உனது 95-வது வயதில் பொறாமை பிடித்த உன் கணவனால் சுட்டுக் கொல்லப்படுவதாய் உன் இறப்பு அமையட்டும்.
- உன்னுடைய சவப்பெட்டி ஆறு அழகிய வெள்ளிக் கைப்பிடிகள் கொண்டதாக இருக்கட்டும். அதை ஆறு அழகிய இளம்பெண்கள் சுமந்து நடக்கட்டும். அந்த சவப்பெட்டி, நாளை நான் நடவிருக்கும் விதையிலிருந்து வளர்ந்த, நூறாண்டு வயதுடைய மரத்திலிருந்து செய்யப்பட்டதாக இருக்கட்டும்.
- உங்கள் மனைவிகளும் காதலிகளும் ஒருபோதும் சந்திக்காதிருக்கட்டும்.
- பூக்கள் மலர்கையில் நீ தும்மாதிருப்பாயாக. அரவணைக்க ஓர் அன்புள்ளம் எப்போதும் பெற்றிருப்பாயாக.
- எதிர்காலத்தில் வரக்கூடிய மிகத் துயரமான நாள், கடந்தகாலத்தின் மிக மகிழ்வான நாளை விடவும் மோசமானதாக இல்லாதிருக்கட்டும்.
- கடவுள் உன்னை கருங்கல் சாலையில் நடக்கச் செய்வாராயின், அவரே உனக்கு நல்ல உறுதியான பாதணிகளைத் தந்தருள்வாராக.
- உனது வலது கரம் எப்போதுமே நட்புக்காக மட்டுமே நீளட்டும், யாசிப்புக்காய் ஒருபோதும் நீளாதிருக்கட்டும்.
- நீ நடக்கும் பாதையெல்லாம் பசும்புல் தழைத்திருக்கட்டும். உனக்கு மேலிருக்கும் வானம் நீலமாயிருக்கட்டும். உன்னைச் சுற்றியுள்ள மகிழ்வுகள் அப்பழுக்கற்று இருக்கட்டும். உன்னை நேசிக்கும் இதயங்கள் உண்மையாயிருக்கட்டும்.
- காற்றுக்குத் தடுப்புச்சுவர்களும், மழைக்குக் கூரையும், கணப்பினருகே தேநீரும், உற்சாகப்படுத்த மகிழ்தருணங்களும், நீ நேசிக்கும் நெஞ்சங்கள் உனதருகிலும் எப்போதும் இருப்பதாக.
- உன் அனைத்து நண்பர்களையும் கொள்ளமுடியாத அளவுக்கு உன் வீடு மிகச்சிறியதாக இருக்கட்டும்.
- நேசிக்க ஒருவர், செய்ய ஒரு வேலை, கொஞ்சம் சூரிய ஒளி, கொஞ்சம் மகிழ்ச்சி, பாதுகாவலாயொரு தேவதை - இவை யாவும் உனக்கமைவதாக.
- உன் அண்டைவீட்டார் உன்னோடு இணக்கமாயிருக்கட்டும், துயரங்கள் உன்னை அலட்சியப்படுத்தட்டும், தேவதைகள் உன்னைக் காத்தருளட்டும், சொர்க்கம் உன்னை ஏற்றுக்கொள்ளட்டும்.
- நாம் அன்பு செலுத்துபவர்கள் நம்மிடம் அன்பு செலுத்தட்டும். நம்மிடம் அன்பு செலுத்தாதவர்களின் இதயங்களை கடவுள் திருப்பட்டும். இதயங்களைத் திருப்ப முடியாவிடில் அவர்களது கணுக்கால்களைத் திருப்பட்டும். கெந்தும் நடை மூலம் அவர்களை நம்மால் இனங்காண இயலும்.
- எப்போதும், துயரம் மிகுந்த சூழலிலும் கூட, வானம்பாடியின் இனிய கானம் உனக்குக் கேட்டிருக்கட்டும்.
- நீ விரும்பும் வரை வாழ்ந்திரு. நீ வாழும் வரை (சாவை) விரும்பாதிரு.
- நம்முடைய நட்பின் கீல்கள் என்றென்றும் துருப்பிடிக்காதிருக்கட்டும்.
- உன் கோப்பை எப்போதும் நிறைந்திருக்கட்டும், உன் வீட்டுக் கூரை எப்போதும் உறுதியாயிருக்கட்டும்.
- உன் உள்ளங்கால்கள் வேர்க்காதிருக்கட்டும், உன் அண்டைவீட்டார் உனக்கு விருந்தளிக்கட்டும்,
எவ்வளவு சுவாரசியமான வாழ்த்துகளும் ஆசிகளும். ஜாங்கிரி போல சுற்றிச்சுற்றி சொன்னாலும் உள்ளிருக்கும் இனிப்பின் சுவை போல உள்ளிருக்கும் ஒரே பொருள்… நீ நல்லா இரு என்பதுதான்.
நமக்கோ சொற்சிக்கனம்.
‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்’ என்ற ஒற்றை வரியில் அடங்கிவிடுகிறது அத்தனை ஆசிகளும்.
கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு,
பெருமை, இனிமை, துணிவு, நோயின்மை, நீண்ட ஆயுள் என ஒருவனது மகிழ்வான வாழ்க்கைக்குத்
தேவையான அத்தனையும் கிடைக்குமாறு வாழ்த்தப்படும் வாழ்த்தை விடவும் வேறென்ன பெரிய வாழ்த்து இருக்கப்போகிறது?
திருமணமான பெண், ‘தீர்க்க
சுமங்கலியாக இரு’ என்று வாழ்த்தப்படுகிறாள். தீர்க்கம் என்றால்
நீண்ட என்று பொருள். இவ்வாழ்த்தின்
மூலம் அவளும் அவள் கணவனும் சேர்த்தே வாழ்த்தப்படுகிறார்கள். ஆத்திரமோ, எரிச்சலோ ஆதங்கமோ
கொள்ளும் வேளையிலும். ‘நல்லா இருங்க’ என்று சலிப்போடு வெளிப்படும் வாழ்த்தும் அடையாளங்காட்டும்,
அன்பின் வழி பிறழாத சில அற்புத மனங்களை.
// மனைவிகளும் காதலிகளும் // !!!?
ReplyDeleteஇது ஒரு வேடிக்கையாக வழங்கப்படும் வாழ்த்து போலத் தோன்றுகிறது. மனைவியும் காதலியும் சந்தித்தால் என்ன நடக்குமென்பதை அறிந்துணர்ந்தவர்களின் வாழ்த்து போலும். :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteசிறப்பான பழமொழிகள். உங்கள் மூலம் நாங்களும் படித்து ரசித்தோம்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteசுவாரஸ்யமான பதிவு...
ReplyDeleteஆமாம். சுவாரசியமாய் இருக்கவேதான் பகிரத் தோன்றியது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteஅற்புதமான ஆசிகள்! தங்கள் வழி எம்மை அடைந்து மகிழ்விக்கிறது. நன்றி தோழி...
ReplyDeleteஆஹா... அன்பும் நன்றியும் தோழி.
Deleteஅருமை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteஇடர்கள் பாட்டியின் பற்கள் போல் குறைவாயும், அதிக இடைவெளியோடும் இருக்க வேண்டும் என்ற ஆசியைப் பெரிதும் ரசித்தேன். நகைச்சுவை கலந்த பொருத்தமான யதார்த்த உவமை! இது போல் ஆசிகளும் வாழ்த்துகளும் அயர்லாந்தில் உள்ளது என்பதை உன் பதிவு வாயிலாக இன்று தான் தெரிந்து கொண்டேன். புதிய செய்தி!
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி அக்கா. அயர்லாந்தின் சுவாரசியமான ஆசிகளும் வாழ்த்துகளும் எனக்கும் புதியவை. ஆகவேதான் இங்கே பகிர்ந்துகொண்டேன்.
Delete