எத்தனை முகங்களின் சாயங்களை
வெளுக்கச்செய்திருக்கிறது
இப்பெருமழை..
எத்தனைத் தூய உள்ளங்களைத்
அடையாளங்காட்டியிருக்கிறது
இந்த அடைமழை!
கர்ப்பக்கிரகத்திலும்
கட்-அவுட்டிலும்
அரசியல்வாதிகளின் காலடிமண்ணிலும்
கடவுளர்களைத் தேடியவர்
கண்களுக்கு
மனிதர்களைக் காட்டியிருக்கிறது
இம்மாமழை..
பணமே பிரதானமென்று முன்தினம்வரை
பரபரத்து ஓடிய மனங்களுக்குப்
பணத்தால் ஆவதொன்றுமில்லையென
பாடம்புகட்டியிருக்கிறது இந்தத் தொடர்மழை..
நில்லென்று மழைநிறுத்தி
சுள்ளென்று ஆதவன் ஒளிரட்டும்..
சொல்லொணா துயரிலிருந்து
மெல்ல நம் வாழ்வு மலரட்டும்..
அழைக்கும் திக்கெல்லாம்
ஓடிக்களைத்த கால்களும்
உதவிக்களைத்த கரங்களும்
சற்றே ஓய்வு கொள்ளட்டும்…
நசிந்துகிடக்கும்
நிகழ்வாழ்விலிருந்து எதிர்காலம் மீட்கச்செய்யும்
நம்பிக்கையும்
ஆன்மபலமும் நம்மைவிட்டு நீங்காதிருக்கட்டும்…
இடர்ப்பாடு களைந்து
இயல்புக்குத் திரும்பியபின்னும் நம்
அகத்திலெரியும்
அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்..
இயற்கையின் மொழியை இப்போதாவது புரிந்துகொள்வோம்..
நீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம்..
இனிவரும் சந்ததியேனும் இதுபோல் உணவுக்காய்
இருகையேந்தாவண்ணம் இன்றேயொரு வகைசெய்வோம்.
ஆழி முகந்துவந்த அளவிலா நீரெல்லாம்
ஊழிப்பெருவெள்ளமென
ஊரெல்லாம் சூழ
அல்லாடிக்கிடக்கும்
நெஞ்சங்களை
அன்பால்
தேற்றிடும் அனைவருக்கும் நன்றி…
திக்கற்றுத்
திகைத்துநிற்கும் மக்களை
பக்குவமாய்
மீட்டெடுக்கும் தாயுள்ளங்களுக்கு நன்றி…
சாணக்கிய
அரசியல்வாதிகளை எதிர்பாராது
சனம் ஒன்றுகூடி நீட்டும் உதவிக்கரங்களுக்கு நன்றி..
மகத்தான
உதவிகளை காலத்தே செய்யும்
மனிதம்
இன்னும் துறக்கா மனங்களுக்கு நன்றி…
சாதிமத
இனவேறுபாடுகளை மறந்தும் துறந்தும்
சங்கமித்துதவும்
சகோதர உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
இயல்புவாழ்வு மீள நம்மிரு கரங்களையும் தந்துதவுவோம்
இயன்றவழியிலெல்லாம்
இடர்ப்பாடு களைய முன்வருவோம்
அன்புவெள்ளத்தின்முன்
ஆழிவெள்ளம் காணாமற்போகட்டும்
சின்னாபின்னமான
வாழ்வனைத்தும் சீர்பெற்று மீண்டுவரட்டும்.
(படங்கள்: நன்றி இணையம்)
“இயற்கையின் மொழியை இப்போதாவது புரிந்துகொள்வோம்..
ReplyDeleteநீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம்..” உங்கள் வரிகளின் உண்மை நெஞ்சைச் சுடுகிறது ம்மா.
அந்தப் பிஞ்சு கையேந்தி நிற்பதைக் காணும் கண்கள் ரத்தக் கண்ணீர் சுரக்கின்றன... அந்தக் கைகளுக்கு அனந்தகோடி வணக்கங்கள்.
அந்தக் குழந்தையின் படத்தைப் பார்த்தபோது எனக்கும் நெஞ்சம் பதறிப்போனது. இப்படியொரு நிலை இனிவரும் சந்ததிக்கு வந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கமே எழுதத்தூண்டியது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Delete//அன்புவெள்ளத்தின்முன் ஆழிவெள்ளம் காணாமற்போகட்டும்//
ReplyDeleteசொல்ல வேண்டிய பாடத்தை, மனித மனங்களில் ஆழப்பதியுமாறு, அழகாகக் கோர்வையாக, விளக்கமாக படங்களுடன் சொல்லியுள்ளது அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Deleteஅன்புவெள்ளத்தின்முன் ஆழிவெள்ளம் காணாமற்போகட்டும்
ReplyDeleteசின்னாபின்னமான வாழ்வனைத்தும் சீர்பெற்று மீண்டுவரட்டும்.//
சரியாக சொன்னீர்கள். அருமையான கவிதை. இடர்பாடு சமயத்தில் கைகொடுத்த அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.குழந்தை நீரில் கையேந்தும் படம் மனதை கனக்க வைக்கிறது. இயற்கைவழியை அடைத்து விட்டோம், இனியாவது இயற்கையின் வழியை அடைக்காமல் அது அழகாய் நடந்து வர வழி விடுவோம். இயற்கையை வாழவிட்டால் நாமும் வாழ்வோம்.
நீர்மேலாண்மையை சரி செய்வோம். ஏரி, குளங்களை மீட்டு எடுப்போம், ஆறுகளில் மணல்களை அள்ளுவதை கட்டுப்படுத்துவோம், மரங்களை வளர்ப்போம் ஆற்றோங்களில் என்று உறுதி எடுத்தால் மீண்டும் இது போன்ற பேரிடர் வராது காப்பாற்றிக் கொள்ளலாம்.
வருகைக்கும் விரிவான பயன்தரும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மேடம்.
Delete// இயற்கையின் மொழியை இப்போதாவது புரிந்துகொள்வோம்..
ReplyDeleteநீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம் //
தீர்க்கமான வரிகள். இனி என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
தங்கள் வருகைக்கும் கவலை தெரிவிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteமுத்து முத்தான வரிகளுடன், படங்களும் மிக அருமை.
ReplyDelete"//அகத்திலெரியும் அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்.//" - கண்டிப்பாக அணையாமல் இருக்கும் என்று நம்புவோம்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னரான தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சியும் நன்றியும். இல்லத்தின் புதுவரவுக்கு என்னினிய வாழ்த்துகள்.
Delete"நீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம்..
ReplyDeleteஇனிவரும் சந்ததியேனும் இதுபோல் உணவுக்காய்
இருகையேந்தாவண்ணம் இன்றேயொரு வகைசெய்வோம்."
நம்மில் அனைவரும் உணரவேண்டிய வரிகள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteஅருமை சகோ இன்றைய அவலத்தை அழகாக விளக்கியது தங்களது பாமாலை
ReplyDeleteதமிழ் மணம் 3
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
DeleteYou can not undo whatever has been done already. At least let us avoid obstructions and constructions in waterways/ மனித நேயம் வெளிப்பட பேரிடர்கள் வேண்டி இருக்கிறது.
ReplyDeleteஉண்மைதான். பேரிடர் வெளிப்படுத்திய மனிதநேயத்தோடு அது தந்த அனுபவப்பாடம் அறியாத மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குமானால் நல்லது. மீண்டும் அதே தவற்றைச் செய்வோமானால் தொடர்ந்து இன்னல்களை அனுபவிக்கவேண்டியதுதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteஇயற்கைக்கு இடையூறு செய்யா
ReplyDeleteவாழ்வினை வாழ்வோம்
நன்றி சகோதரியாரே
தம +1
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஇன்றைய சோகங்களை கவிதை மூலம் சொல்லியிருப்பது அருமை கீதமஞ்சரி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
Deleteஅருமை. மீண்டு வருவோம்.... மீண்டும் வருவோம்...
ReplyDeleteநம்பிக்கையை விடாப்பிடியாய்க் கொண்டு விடாமுயற்சியுடன் செயலாற்றினால் மீண்டு வர மாட்டோமா என்ன? நிச்சயம் நடக்கும். நம்பிக்கையூட்டும் கருத்துக்கு நன்றி வெங்கட்.
Deleteஇயல்புவாழ்வு மீள நம்மிரு கரங்களையும் தந்துதவுவோம்
ReplyDeleteஇயன்றவழியிலெல்லாம் இடர்ப்பாடு களைய முன்வருவோம்
தங்கள் வருகைக்கு நன்றி ஐயா.
Delete// இயற்கையின் மொழியை இப்போதாவது புரிந்துகொள்வோம்..
ReplyDeleteநீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம்..
இனிவரும் சந்ததியேனும் இதுபோல் உணவுக்காய்
இருகையேந்தாவண்ணம் இன்றேயொரு வகைசெய்வோம்.//
மிகவும் அருமை கீதமஞ்சரி. இப்பொழுதேனும் இதைச் செய்யத்துவங்க வேண்டும்..வெயில் அடித்ததும் மறந்துவிடாமல் மக்கள் செயல்பட வேண்டும்..
அதேதான்பா... இந்த நிலை மாறியதும் மக்கள் மனநிலையும் மாறிவிடக்கூடாது. பழைய அலட்சியப்போக்கு உண்டாகிவிடக்கூடாது... நம் சந்ததியின் வருங்கால நலனை முன்னிட்டாவது விழிப்புணர்வைப் பெருக்கி செயலாற்ற முனையவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.
Deleteஅருமையான கவிதை!! ஆழமான அர்த்தம்!!
ReplyDeleteபட்டதில் தொட்டது இது!! வாழ்த்துக்கள்...
அன்புடன்
ராகவன்
My blog: www.asmalltownkid.wordpress.com
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteஅருமை அருமை சகோதரி! தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். மனித நேயத்தில் தமிழரை விஞ்சி நிற்க ஆளில்லைதான்...
ReplyDelete//கர்ப்பக்கிரகத்திலும் கட்-அவுட்டிலும்
அரசியல்வாதிகளின் காலடிமண்ணிலும்
கடவுளர்களைத் தேடியவர் கண்களுக்கு
மனிதர்களைக் காட்டியிருக்கிறது இம்மாமழை..
இயற்கையின் மொழியை இப்போதாவது புரிந்துகொள்வோம்..
நீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம்..
இனிவரும் சந்ததியேனும் இதுபோல் உணவுக்காய்
இருகையேந்தாவண்ணம் இன்றேயொரு வகைசெய்வோம்.//
நெஞ்சம் விம்முகின்றது....அந்தக் குழந்தையைப் பாருங்கள் தண்ணீரில் நின்றுகொண்டு சாப்பாடைப் பெறும் அவலம்....சகோ அழுகை வந்துவிட்டது...தாங்கவில்லை...இந்தப் படத்தை சிம்மாசனத்தில் இருப்பவர்கள் பார்ப்பார்களா? இனியேனும் திருந்துவார்களா...கடவுளே..
சிம்மாசனத்தில் இருப்பவர்கள் திருந்தாவிடில் நாம் திருத்துவோம். அதற்கு முதலில் நாமும் திருந்தவேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Deleteபெய்து தீர்த்த மாமழை நிறைய நல்ல முகங்களை அடையாளம் காட்டியது. புரிந்து கொண்டது சமூகத்தின் 90 சதவிகித முகங்கள் நேர்மையானவை, உதவும் உள்ளம் கொண்டவை. இன்றைய இளைஞர்களின் எழுச்சி புல்லரிக்க வைக்கும் அனுபவம். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அரசியல்வியாதிகளையும், குறைந்த சதவிகிதத்தில் இருந்த சில திருட்டுக் கும்பல்களையும் பற்றி நினைக்காமல் இருப்பதே நலம்.
ReplyDeleteதம +1
சக மனிதர்களைப் புரிந்துகொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த மழை உதவியுள்ளது என்றுதான் நினைக்கவேண்டியுள்ளது. நல்லமனங்களோடு கூடவே சில கள்ளமனங்களையும் காட்டிக்கொடுத்திருக்கிறதே.. அதற்காகவேனும் இப்பேரிடருக்கு நன்றி சொல்லவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteஅருமையாக விளக்கியுள்ளீர்கள். இனியாவது இயற்கையின் வலிமையை உணர்ந்து மனிதனின் பணம் பண்ணும் வெறியை குறைத்துக் கொள்ளவேண்டும்.
ReplyDeleteத ம 8
அனுபவத்தைப் பாடமாய் ஏற்று வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நன்மையுண்டு. பார்ப்போம்.. எத்தனை நாட்களுக்கு இந்தப் புரிதலும் பக்குவமும் தொடர்கிறதென்று. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி செந்தில்.
Deleteஅருமையான கவிதை கீதா! மனிதம் இன்னும் துறக்கா மனங்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். குழந்தையின் படம் கல் நெஞ்சையும் கரைய வைக்கும். இன்றைய இளைஞர்கள் முகநூலில் முகம் தொலைப்பவர்கள், பொறுப்பற்றவர்கள் என்று பேசிவந்தவர்கள் வாயடைத்துப்போகுமளவுக்கு இளைஞர்களின் எழுச்சி இருந்தது. மதத்தின் பெயரால் மனிதர்களைப் பிரிக்க நினைக்கும் சூழ்ச்சிக்காரர்களுக்கு பெரிய சவுக்கடி! இது இயற்கை பேரிடர் அல்ல; ஏரி நீர் மேலாண்மை குறித்துத் தக்க சமயத்தில் முடிவெடுக்கத் தவறிய அரசு எந்திரத்தின் தவறு தான் என்று இப்போது பத்திரிக்கைகளில் செய்தி அடிபடுகிறது. நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மனதை நெகிழ வைத்த பதிவு!
ReplyDeleteநீர்மேலாண்மை குறித்து பொதுமக்களாகிய நாம் மட்டுமல்ல... நம்மைப் பாதுகாக்கவேண்டிய அரசும் அறியாமையிலும் அலட்சியத்திலும் உழன்றுகொண்டிருக்கிறது. அதன் பாதிப்பை இன்று கண்ணாரக் கண்டுவிட்டோம்.. அனுபவித்தும்விட்டோம். இனியேனும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருங்கால இடர்களைத் தவிர்க்க முனையவேண்டும். குறைந்தபட்சம் நீர்வழித்தடங்களில் குறுக்கிடாது வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி அக்கா.
Delete