| 1. ஆஸ்திரேலியப் புதர்க்கோழி (ஆண்) |
படத்திலிருப்பது Australian brush turkey எனப்படும் ஆஸ்திரேலியப் புதர்க்கோழி. வான்கோழிகளைப் போல தாடை இருப்பதால் இது turkey என்று குறிப்பிடப்பட்டாலும் இது வான்கோழியினத்தைச் சார்ந்தது அல்ல. Megapodiidae என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. அதென்ன மெகாபோடீடே?
இப்பறவைகள் முட்டையிட கூடு கட்டாது. ஆண் பறவை தன் வலிமையான கால்களைக் கொண்டு குப்பைக்கூளங்களையும் மண்ணையும் சீய்த்து, மலைபோல் குவித்து, அதற்குள் பெண் பறவையை முட்டையிடச்செய்யும். ஆஸ்திரேலியாவைச் சார்ந்த Megapodiidae குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பறவைகளில் பெரியது இந்த ஆஸ்திரேலியப் புதர்க்கோழி.
| 2. உதிர்ந்துகிடக்கும் ஆலம்பழங்களைத் தின்னும் ஆஸ்திரேலியப் புதர்க்கோழி |
பெரும்பாலும்
மழைக்காடுகளிலும் ஈரப்பதமான புதர்ப்பகுதிகளிலும் காணப்பட்டாலும் சில சமயங்களில் வறண்ட
புதர்ப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. இன்னும் சில நகரங்களில் மக்களின் மத்தியில் வாழப் பழகிவிட்டன. செடிகொடிகள் அடர்ந்த வீட்டுக் கொல்லைப்புறங்களிலும், பூங்காக்களிலும் இவற்றைக் காணலாம். இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் யாவும் சிட்னியில் உள்ள பூங்காக்களிலும் வீடுகளை ஒட்டிய பகுதிகளிலும் என்னால் எடுக்கப்பட்டவையே.
இவை நிலத்தில் வாழும் பறவைகள் என்பதால் இவற்றுக்கான
உணவும் நிலத்தில்தான். தங்களுடைய பெரிய வலிமையான கால்களைக் கொண்டு மண்ணைக்கிளறியும்,
உளுத்துப்போன மரக்கட்டைகளை சிதைத்தும் உள்ளிருக்கும் புழு பூச்சிகளைத் தின்கின்றன.
அவை தவிர மரங்களிலிருந்து உதிர்ந்து விழுந்த பழங்கள், விதைகள் போன்றவற்றையும் உண்கின்றன.
இவை தரைவாழ் பறவைகள் என்றபோதும் இரவு நேரங்களில் தரையிலிருப்பது ஆபத்து என்பதால் ஏதேனும்
மரங்களின் கிளைகளில்தான் உறங்கிக் கழிக்கின்றன.
![]() |
| 3. மரக்கிளையில் இளைப்பாறும் ஆஸ்திரேலியப் புதர்க்கோழி |
![]() |
| 4. பகல்பொழுதிலும் பாதுகாப்பாக மரக்கிளையில் ஓய்வு |
கருப்பு
நிற இறகுகளும் கோழிகளைப் போன்ற செங்குத்தான பட்டையான வாலும், மொட்டையான சிவப்புநிறத்
தலையும் பளீரென்ற மஞ்சள் நிறத் தாடையும் கொண்ட இப்பறவையை இனங்காண்பது எளிது. வடக்குப்பகுதிவாழ்
புதர்க்கோழிகளுக்கு மஞ்சள் தாடைக்குப் பதில் நீலத்தாடை. ஆஸ்திரேலியப் புதர்க்கோழிகள் பொதுவாக
60 -75 செ.மீ. உடல்நீளமும் 80 செ.மீ. சிறகுவிரிநீளமும் கொண்டிருக்கும்.
ஆஸ்திரேலியப்
புதர்க்கோழிகள் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் விதம் அறிந்து வியக்காமலிருக்க
முடியவில்லை. அப்படி என்ன சிறப்பு என்றுதானே யோசிக்கிறீர்கள்? மற்றப் பறவைகளைப் போல கூடு கட்டி அதில் முட்டையிடும் பறவையினமல்ல இது. கூட்டுக்கு பதில் வீடே கட்டுகிறது. ஆம் மண்ணையும் குப்பைக்கூளங்களையும் கொண்டு ஒரு பெரிய மண்மேட்டைக் கட்டுகிறது. அதுதான் அதன் கூடு. மண்மேடு என்றால் சின்னதாய் குழந்தைகள் கடற்கரையில் குவித்துவிளையாடுவது போல் இல்லை. நான்கு மீட்டர் விட்டமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்ட பெரிய மேடு. குப்பைகளையும் இலைதழைகளையும் மண்ணையும் குவித்து உருவாக்கப்படும் இம்மண்மேட்டைக் கட்டிக்கொண்டிருக்கும்போது வெகு மூர்க்கமாய் செயல்படும்.
| 5. ஆண் பறவை காலால் குப்பையையும் மண்ணையும் சீய்த்து மேடு உருவாக்குகிறது |
ஆண் புதர்க்கோழியின் வாழ்க்கை இலட்சியமே அதன் இணை முட்டையிடவிருக்கும் மண்மேட்டைப் புதுப்பிப்பதும் காவலிருப்பதும்தான் என்பது போல் காலையிலிருந்து மாலை வரை அதற்காக உழைப்பதிலும் அதை சீரமைப்பதிலுமே நேரத்தைச் செலவிடுகிறது. முந்தைய வருடங்களில் பயன்படுத்திய அதே மண்மேட்டையே அடுத்தடுத்த வருடங்களிலும் பயன்படுத்துகின்றன. மேட்டை உருவாக்கும்போது வேறெந்த ஆண் புதர்க்கோழியும் அந்தப்பக்கம் வரமுடியாது. அவ்வளவு ஏன்? தன் இணைக்கோழியைக் கூட அந்த மேட்டின் அருகில் வரவிடாது.
| 6. ஆஸ்திரேலியப் புதர்க்கோழியின் மண்குப்பைமேடு |
ஒருவழியாய்
கூடு அதாவது மண்மேடானது, ஆணின் திருப்திக்கேற்ப வடிவமைக்கப்பட்டவுடன் பெண்பறவையை முட்டையிட அங்கு அனுமதிக்கும். பெண்பறவை தினமும் அந்த மண்மேட்டில் 60 முதல்
80 செ.மீ ஆழக் குழி தோண்டி அதில் முட்டையிட்டுச் செல்லும். ஒவ்வொரு முட்டைக்கும் அடுத்த
முட்டைக்குமான இடைவெளி கிட்டத்தட்ட 20 முதல் 30 செ.மீ. இருக்கும். பெண் புதர்க்கோழி போனபின்
ஆண் புதர்க்கோழி அந்த முட்டையின் மேல் குப்பைகளையும் மண்ணையும் போட்டு மூடிவைக்கும்.
| 7. ஆஸ்திரேலியப் புதர்க்கோழி (பெண்) |
சில
சமயங்களில் ஆண் புதர்க்கோழியே முட்டையிடுவதற்கான குழியைத் தோண்டி தயாராக வைத்திருக்கும்.
பெண் புதர்க்கோழி வரவேண்டும், முட்டையிடவேண்டும், திரும்பிப் பார்க்காமல் போய்விடவேண்டும். அவ்வளவுதான்.
பெண் புதர்க்கோழிகளின் முழுநேரப் பணியே முட்டையிடத் தேவையான சத்துள்ள உணவைத் தேடித்தேடி
நாள்முழுவதும் தின்றுகொண்டிருப்பதுதான்.
முட்டைகளைப்
பராமரிப்பது முழுக்க முழுக்க ஆண் பறவையின் வேலை. முட்டைகள், பறவையின் உடல் வெப்பத்தால்
அடைகாக்கப்படுவதற்குப் பதிலாக மண்மேட்டுக்குள்ளிருக்கும் வெப்பத்தால் அடைகாக்கப்படுகின்றன.
மண்ணுக்குள் உள்ள மக்கிய இலைதழைகள் நொதிக்க ஆரம்பிப்பதால் உள்ளே வெப்பம் உண்டாகும். அவ்வாறு
உண்டாகும் வெப்பம் 33 முதல் 38 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கவேண்டும். அதுதான் முட்டைகள்
பொரிய சரியான வெப்பம்.
![]() |
| 8. இனப்பெருக்கக்காலத்தில் பளீர் நிறத்துடன் ஆண் பறவை |
ஆண்
புதர்க்கோழி அவ்வப்போது தன் அலகை ஒரு வெப்பமானி போல் மேட்டுக்குள் ஆங்காங்கே நுழைத்து
வெப்பத்தை ஆராயும். ஒருவேளை வெப்பம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் மேட்டின் சில இடங்களில்
பள்ளம் பறித்து உள்ளிருக்கும் வெப்பம் வெளியேற வகை செய்யும். வெப்பம் குறைவாக இருப்பதாக
உணர்ந்தால் முட்டையிருக்கும் பகுதிகளில் சூரிய ஒளி அதிகம் படுமாறு பார்த்துக்கொள்ளும்.
வெப்பம் வெளியேறிவிடாமல் ஆண் பறவை மேலும் மேலும் மண்ணை சீய்த்து மூடி பாதுகாக்கும்.
![]() |
| 9. முட்டைகளைப் பாதுகாக்கும் ஆஸ்திரேலியப் புதர்க்கோழி (ஆண்) |
மண்
மேட்டின் வெப்பநிலை பேணுவது அல்லாமல் முட்டைகளைத் திருட வரும் பாம்பு, கோவான்னா (ஆஸ்திரேலிய
ராட்சதப் பல்லி) போன்ற ஊர்வனவற்றிடமிருந்தும் முட்டைகளைப் பாதுகாக்கவேண்டியது இதன்
பெரும்பொறுப்பு. கோவான்னாவின் வாலில் ஏதாவது காயத்தையோ வடுவையோ காணநேர்ந்தால் அது ஏதாவதொரு ஆண் புதர்க்கோழியின் முரட்டுத்தாக்குதல்தான் என்பதைக் கண்டுகொண்டுவிடலாம்.
பருவகாலம் சாதகமாக இல்லாத காலத்திலும் முட்டைகளுக்கு போதிய வெப்பம் கிடைக்காது என்று தோன்றும்
நிலையிலும் ஆண் புதர்க்கோழி எடுக்கும் முடிவு விசித்திரம். அப்போது முட்டையிட வரும்
பெண் புதர்க்கோழியை தயவு தாட்சண்யம் இல்லாமல் விரட்டித் துரத்திவிட்டுவிடும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பறவைகள் ஒரே மேட்டில் முட்டையிடுவதால் ஒரு பெண்
புதர்க்கோழி ஒரு ஈட்டுக்கு எத்தனை முட்டைகள் இடுகிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், 18 முதல் 24 வரை இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சில சமயங்களில் ஒரு மண்மேட்டிலிருந்து
கிட்டத்தட்ட ஐம்பது குஞ்சுகள் பொரிந்து வெளிவருகின்றன. எல்லாக் குஞ்சுகளும் ஒரே நாளில்
பொரிப்பதில்லை. ஒவ்வொரு நாள் ஒரு முட்டை என்ற கணக்கில் இடப்படுவதால் 50 நாட்கள் கழித்து
ஒவ்வொரு நாளும் ஒரு புதர்க்கோழிக்குஞ்சு பொரிந்து வெளிவருகிறது.
புதர்க்கோழிக்குஞ்சுகளின்
வாழ்க்கை அடுத்த விசித்திரம். கிட்டத்தட்ட ஒரு மீட்டர் ஆழத்தில் உள்ள
முட்டையிலிருந்து பொரிந்துவரும் கோழிக்குஞ்சு மண்ணை முட்டிக்கொண்டு வெளியே வருவதென்பது ஒரு
பெரும் சாதனைதான். ஆம். ஒரு புதர்க்கோழிக்குஞ்சு சுமார் நாற்பது மணிநேரம் போராடித்தான் உள்ளேயிருந்து வெளியே
வந்து மூச்சு விடுகிறது. அந்த சாதனை போதாதென்று வெளிவந்த நொடியே காட்டுக்குள் ஓடிப்போய்
தன் வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்கிறது என்பது எவ்வளவு விசித்திரம்.
இரை இன்னதென்று அறிந்து, தானே
இரைதேடி உண்டு, எதிரிகளை அறிந்து, அவற்றிடமிருந்து தப்பிக்கும் தந்திரம் கற்று, ஒரே நாளில் தானே பறக்கவும் கற்றுக்கொண்டு, இரவு நேரத்தில்
மரக்கிளைகளில் தஞ்சம் புகுந்து, பிறந்த நொடியிலிருந்தே ஒரு குழந்தை தன்னிச்சையாய் எவர் தயவுமின்றி
வாழ்வதான வாழ்வை என்னவென்று சொல்வது? நாய் நரிகளுக்கும்,
பாம்பு, பல்லிகளுக்கும் இரையாகாமல் தப்பித்து பொரித்து வளர்ந்து முழுக்கோழியாக உருவாவதென்பது நூற்றில் ஒரு முட்டைக்குதான் சாத்தியமாம். எவ்வளவு கொடுமை!
![]() |
| 11. ஆஸ்திரேலியப் புதர்க்கோழி |
1930
களில் அழிவின் விளிம்புக்குப் போன ஆஸ்திரேலியப் புதர்க்கோழிகள் இப்போது சட்டத்தால்
பாதுகாக்கப்பட்டு பரவலாய் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன என்பது பறவை ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்வான தகவல்.
******
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
தங்களால் இந்த கோழியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டதற்கும் மிக்க நன்றி சொக்கன்.
Deleteமுட்டையிடும் விதமும், பிறந்த உடனே தனி வாழ்க்கையும்... பிரமிப்பான விஷயங்கள்.
ReplyDeleteதம +1
இயற்கையில்தான் எவ்வளவு அதிசயங்கள்.. நான் அறிந்து வியந்தவற்றை இங்கு அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteமிகவும் அருமையான தகவல்கள். அழகழகான படங்கள்.
ReplyDeleteதன் துணைவியாரின் (முட்டையிடும்) பிரஸவ நேரத்தில் ஆண் கோழிகளின் பயபக்தியுடன் கூடிய பணிகளும் பொறுப்புகளும் மிகவும் வியக்க வைக்கிறது. :)
இவ்வகைக் கோழிகளிலாவது உள்ள பெண்ணாதிக்கம் வாழ்க !
//பிறந்த நொடியிலிருந்தே ஒரு குழந்தை தன்னிச்சையாய் எவர் தயவுமின்றி வாழ்வதான வாழ்வை என்னவென்று சொல்வது? நாய் நரிகளுக்கும், பாம்பு, பல்லிகளுக்கும் இரையாகாமல் தப்பித்து பொரித்து வளர்ந்து முழுக்கோழியாக உருவாவதென்பது நூற்றில் ஒரு முட்டைக்குதான் சாத்தியமாம். எவ்வளவு கொடுமை!//
ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
அற்புதமான தங்களின் தொடரினை மீண்டும் ஆரம்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும். வாழ்த்துகள்.
தங்களுடைய வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார். கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பெரும் இடைவெளி விழுந்துவிட்ட இத்தொடரை மீண்டும் ஆரம்பித்த மகிழ்வை விடவும் அதை வரவேற்று ரசிக்கும் உங்களுடைய பின்னூட்டம் கண்டு பெருமகிழ்ச்சி. நன்றி கோபு சார்.
Deleteவியக்க வைக்கும் தகவல்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteவித்தியாசமான கோழி. வித்தியாசமான அரிய செய்திகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteவித்தியாசமான கோழி இனம் பற்றிய தகவல்கள், ப்டங்களுக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteஎன்ன ஒரு அதிசயம் இல்லையா சகோ! இயற்கையே விந்தைதான். எத்தனைப் பாடங்கள் அவை கற்றுத் தருகின்றன. ஆண் கோழிகளும் பங்கெடுக்கும் குணம் நாமும் கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கின்றன. இந்தக் குணம் பெங்குவின்களிடமும் உண்டு இல்லையா. இயற்கையே இயற்கைதான்...வார்த்தைகள் இல்லை. தொடர்கின்றோம் சகோ.
ReplyDeleteகீதா: எனது மகன் கால்நடைமருத்துவன். அதனால் நானும் அவனிடமிருந்து தெரிந்து கொண்ட, உலகில், அழிந்துவரும் விலங்கு இனங்கள் பற்றித் தமிழில் எழுத நினைத்தேன். பல இனங்கள் பற்றி அறிந்திருந்தும், ஆங்கிலத்தில் வாசிப்பதால் அதைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி செய்கின்றேன். நீங்கள் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்பது தெரிகின்றது. இப்படித் தமிழில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் பல மாணவர்களுக்கும் உதவும். ஆங்கிலத்தில் படிப்பதும் புரியும் தமிழுடன் இணைந்துக் கற்கும் போது. அருமை சகோதரி. உங்கள் பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டும். வாசிக்கின்றேன்/றோம்
(நாங்கள் எங்கள் தளத்தில் இருவர் நண்பர்கள் - துளசிதரன், ஆசிரியர். - நான் கீதா சென்னையில் - எங்கள் கருத்தும் இருவருமே இடுவதாகத்தான் வரும். ஒரு சில கீதா என்று தனியே வரும். அது நான் அறிந்த விஷயங்கள் குறித்து இருக்கும்...அதுவும் இது போன்ற பதிவுகள் என்றால்...இல்லை சென்னையைக் குறித்துச் சொல்ல வேண்டும் என்றால் இப்படி..
வருகைக்கும் பதிவை ரசித்து நீண்டதொரு பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் துளசிதரன் சார் & தோழி கீதா இருவருக்கும் அன்பான நன்றி. இயற்கையில் நம்மை வியக்கவைக்கும் விஷயங்கள் ஏராளம் உண்டு. நாம் ரசித்தவற்றை மற்றவர் அறியத் தரும்போது ஏற்படும் மகிழ்வுக்கு எல்லையே இல்லை. இங்கும் உங்கள் பின்னூட்டம் கண்டு என் மகிழ்வுக்கு அளவே இல்லை. மிக மிக நன்றி சகோ.
Deleteபடிக்க படிக்க வியப்பளிக்கும் பதிவு இது. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு முறையில் வாழ்கின்றன. தாயின் உதவியில்லாமல் தானாக உயிர் வாழும் பறவையைப் பற்றி தற்போதுதான் கேள்விப்படுகிறேன். மிகவும் வியப்பான இந்த தகவலை நான் எனது தகவல் பக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.
ReplyDeleteத ம 3
நானும் முதன்முறை இப்பறவையைப் பற்றி கேள்விப்பட்டபோது நம்பவே முடியவில்லை.. இதைப் போன்று இன்னும் சில பறவைகளும் உள்ளன. அவற்றைப் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுவேன். இத்தகவலை உங்கள் தகவல் பக்கத்தில் பயன்படுத்திக்கொள்வதறிந்து மிகவும் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி செந்தில்.
Deleteஅய்யா GMB அவர்கள், எனது பதிவொன்றிற்கு அளித்த கருத்துரையில் ”பறவை பற்றிய செய்திகளுக்கு அதாரிடி கீத மஞ்சரி.” என்று பாராட்டியுள்ளது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteபறவையியலில் சற்று ஆர்வம் உண்டு.. அவ்வளவுதான் ஐயா. மற்றபடி தாங்களும் ஜிஎம்பி ஐயாவும் சொல்வது போல் அதாரிடியெல்லாம் இல்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.
Deleteபுதர்க் கோழிகளின் வாழ்க்கை பற்றிய பகிர்வுகள் யாவும் வியக்க வைக்கின்றன. படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி கீதா.
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டதற்கும் மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteஇயற்க்கை வளங்களை பாதுகாக்க சட்டங்களும் தேவையாய் இருக்கிறது மனிதரிடத்தில் மிக நல்ல தகவல் சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ReplyDeleteதம +1
வருகைக்கும் பதிவை ரசித்திட்டக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி சீராளன்.
Deleteஇக்கோழியினத்தில் ஆணின் பங்கு மிகவும் வியப்புக்குரியது. வெப்பமானி போல் வெப்பநிலையைக் கண்காணிக்கும் செயல் பற்றியறிந்து ஆச்சரியமடைந்தேன். இயற்கையில் தான் எத்தனை விந்தைகள்? அது போல் வெளிவந்த வுடனே தன்னைக் காத்துக்கொள்ளும் குஞ்சின் செயலும் இதுவரை கேள்விப்ப்டாதது. எவ்வளவு பெரிய மணல்மேடு? பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா!
ReplyDeleteஉண்மைதான் அக்கா.. எவ்வளவு விந்தையான வாழ்க்கை அப்பறவையினுடையது. நினைக்க நினைக்க வியப்புதான். வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.
Delete