30 April 2011

அன்பில்லத்தின் ஆற்றாமை



என் சுவாசம் இழையோடும் அன்பில்லமே!

அறிவாயா……

உன்னைப் பற்றிய பக்கங்கள்யாவும்

அதிகாரபூர்வமாக அகற்றப்படவிருக்கின்றன,

ன் மன ஏட்டிலிருந்து!


தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுடனும்,

தலையில் முண்டாசுக்கட்டுடனும்

வெற்றுடம்பில் வியர்வை வழிந்தோட

வீடு கட்டிய கொத்தனார்த் தாத்தாவிடம்

என் கைகள் எடுத்துதந்த அரைச்செங்கற்கள்

இங்கேதான் எங்கோ இருந்துகொண்டு

என்னைப் பார்த்து வருந்தக்கூடும்.


சூடிக்கொடுத்த ஆண்டாளின் மாலைக்கு நிகராக

என் உடல் பூசி உதிர்ந்தபின்னரே

சுவரில் பூசப்பட்ட மணற்துகள்கள் ஒவ்வொன்றும்

என் பிரிவை உணர்ந்து வாடக்கூடும்!


மஞ்சள் தடவி குங்குமப்பொட்டிட்ட

தன்னைத் தூக்கிநிறுத்திய

சுமங்கலிகளின் ஊடே நுழைந்து

சுமைதாங்கிய இரு பிஞ்சுக்கரங்களின்

ஸ்பரிச சுகத்தில் இன்றும் திளைத்திருக்கும்

அந்த நிலைவாசல்...


மற்றொரு கரம் பற்றும்பொருட்டு

அவை தன்னை நீங்கிச் செல்லவிருப்பதைக்

காணச்சகியாமல் இமைக்கதவுகளை

அடைக்கவும்கூடும்!


ஆசாரி மாமா அசந்தநேரங்களில்

அரைகுறை சன்னல்சட்டங்களில்

ஆட்டுக்குட்டிகள்போலத் தாவிக்குதித்து,

தடுமாறி விழுந்த ஞாபகங்கள்

எனக்கிருப்பதைப்போல்...

என் உதடு கிழித்த உறுத்தல்,

பொருத்தப்பட்டுவிட்ட பதினான்கு சன்னல்களில்

ஏதாவதொன்றிற்கு இருந்து சிரமப்படுத்தலாம்!


என்னைப் பெற்றவர்களைப்போலவே நீயும்

உன் துயரத்தை ஆழப்புதைத்து

சிரித்து விடைகொடுப்பாயோவென்று பயந்திருந்தேன்.

நல்லவேளை...


சிறுவிரிசலொன்றைக் காட்டி...

அதனூடே...

பிளவுபட்ட உன் இதயத்தையும் காட்டிவிட்டாய்!


புரியாதவர்கள் வியப்புடன் கேட்கின்றனர்,

திடீரென என்ன கேடு வந்தது

இந்த வீட்டுக்கு?


7 comments:

  1. திடீரென என்ன கேடு வந்தது

    இந்த வீட்டுக்கு?//

    வீடு, முதுமையடைந்து விட்டது அல்லது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது என்பதனைக் கவிதை சொல்கிறது.

    ReplyDelete
  2. மணம் முடித்து கணவன் வீடு செல்லும் பெண்ணிற்கு பிரியா விடை கொடுப்பது வீடு மட்டுமே. மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று பார்த்துகொள்ள முடியும். ஆனால் வீடு , அந்த பெண் வருகைக்காக காத்திருக்கும். கவிதை எனக்கு மிக பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  3. வீடு...

    ஒவ்வொரு செங்கல்லாய் உயரே எழும்போது அந்த தொழிலாளர்களுடன் கதைத்துக் கொண்டும், அவர்களுக்கு செங்கல், சாந்து எடுத்துக் கொடுத்தும், அந்த ஆற்றுமணலில் புரண்டாடிய பொழுதுகளையும், அந்த மணலில் இருந்து சேகரித்த களிமண்ணில் செய்த பொம்மைகளையும், சமயங்களில் கிடைத்த சந்தோஷமான காயங்களையும் மீண்டும் நினைவூட்டிச் செல்கிறது கவிதை.

    கவிதையின் முதல் பாதி, வீட்டின் மேல் நீங்கள் கொண்ட சிநேகத்தையும், இரண்டாம் பாதி வீடு உங்கள் மேல் கொண்ட பாசத்தையும் அற்புதமாய் படம் பிடித்திருக்கிறது.

    நெஞ்சம் தொட்ட கவிதை நெகிழவைக்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. //சாகம்பரி said...

    மணம் முடித்து கணவன் வீடு செல்லும் பெண்ணிற்கு பிரியா விடை கொடுப்பது வீடு மட்டுமே. மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று பார்த்துகொள்ள முடியும். ஆனால் வீடு, அந்த பெண் வருகைக்காக காத்திருக்கும்.//

    நூற்றுக்கு நூறு சரி.

    ReplyDelete
  5. நிரூபன் said...

    //வீடு, முதுமையடைந்து விட்டது அல்லது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது என்பதனைக் கவிதை சொல்கிறது.//

    நிரூபன், கவிதை சொல்வது வேறு. கவிதையை இன்னுமொருமுறை படித்தால் புரியும். சாகம்பரி சுட்டியிருக்கிறார்களே அதுதான் நான் சொல்ல விழைந்ததும். எனினும் கருத்துப்பதிவுக்கு நன்றி நிருபன். தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  6. சாகம்பரி said...
    //மணம் முடித்து கணவன் வீடு செல்லும் பெண்ணிற்கு பிரியா விடை கொடுப்பது வீடு மட்டுமே. மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று பார்த்துகொள்ள முடியும். ஆனால் வீடு , அந்த பெண் வருகைக்காக காத்திருக்கும். கவிதை எனக்கு மிக பிடித்திருக்கிறது.//

    ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் சித்திரவதை அல்லவா அது? திருமணமாகும்வரை என் வீடு என்று சொந்தம் கொண்டாடிவிட்டு திருமணமானபின் அதை அம்மா வீடு என்றல்லவா அழைக்கப் பழகுகிறோம். கருத்துக்கு நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  7. சிசு said...
    வீடு...

    //ஒவ்வொரு செங்கல்லாய் உயரே எழும்போது அந்த தொழிலாளர்களுடன் கதைத்துக் கொண்டும், அவர்களுக்கு செங்கல், சாந்து எடுத்துக் கொடுத்தும், அந்த ஆற்றுமணலில் புரண்டாடிய பொழுதுகளையும், அந்த மணலில் இருந்து சேகரித்த களிமண்ணில் செய்த பொம்மைகளையும், சமயங்களில் கிடைத்த சந்தோஷமான காயங்களையும் மீண்டும் நினைவூட்டிச் செல்கிறது கவிதை.

    கவிதையின் முதல் பாதி, வீட்டின் மேல் நீங்கள் கொண்ட சிநேகத்தையும், இரண்டாம் பாதி வீடு உங்கள் மேல் கொண்ட பாசத்தையும் அற்புதமாய் படம் பிடித்திருக்கிறது.

    நெஞ்சம் தொட்ட கவிதை நெகிழவைக்கிறது. பாராட்டுகள்.//

    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சிசு.

    ஒரு வீடு உருவாகும்போதெல்லாம் உடனிருக்கும் மனிதர்களின் உணர்வுகளையும் குழைத்தே அல்லவா உருவாகிறது. அதனின்று பிடுங்கி எறியப்படும் உரிமையை அனுபவிக்கும்போது மனம் வலிக்கத்தானே செய்யும்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.