26 April 2011

ஏதோவொரு தூண்டுதல்....



ஏனென்று தெரியவில்லையென்று
காரணம் சொல்லப்படும் துவக்கங்களின் பின்னே
ஏதோவொரு தூண்டுதல்....
எப்போதும் மறைந்தே இருக்கிறது,
துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி 
பற்பலவுருக்களில்!!

தோள் நனைக்கும் ஒரு
கண்ணீர்த்துளியாகவோ...
வாயில்கடக்குமுன் எழும்
மெல்லிய விசும்பலாகவோ....

முன்னிருக்கையிலிருந்து பின்னே தாவும் 
மழலைமுறுவலாகவோ....
நடுக்கத்துடன் தலைதடவி
ஆசிவழங்குமொரு வயோதிகக்கரமாகவோ....

இதமான அணைப்பாகவோ...
இறுக்கமான இதழ்பிணைப்பாகவோ.....
இசையாகவோ... இச்சையாகவோ...
இன்னும் பலவாகவும் இருக்கும் அதன் பேரிலேயே
ஆற்றப்படுகின்றன சில காரியங்கள்,
கைவிடப்படுகின்றன சில!

தள்ளிவைக்கப்படுகின்றன சில தற்கொலைகள்,
தயாராகின்றன சில!

நிறைவேற்றப்படுகின்றன சில சபதங்கள்,
உறுதியிழக்கின்றன சில!

அணைக்கப்படுகின்றன சில உறவுகள்,
விலக்கப்படுகின்றன சில!

விதைக்கப்படுகின்றன சில விரோதங்கள்,
மன்னிக்கப்படுகின்றன சில துரோகங்கள்!

எந்தவொரு நிகழ்வுக்கும் பின்னே

ஏதோவொரு காரணமிருப்பதுபோல்...
எந்தவொரு துவக்கத்தின் பின்னும்
ஏதோவொரு தூண்டுதல்
எந்நாளும் மறைந்தே இருக்கிறது,
துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி!

4 comments:

  1. காரணம் சொல்லப்படும் துவக்கங்களின் பின்னே
    ஏதோவொரு தூண்டுதல்....//
    அதை சரியாக கண்டுபிடிக்கும் முன்பே ஒன்றை வென்று இருப்போம் அல்லது தோற்றிருப்போம். ஆனாலும் மறுபடியும் தூண்டப்படுவோம். வாழ்க்கையின் சூத்தரம் இதுதான். சரியான கணிப்பு கீதா.

    ReplyDelete
  2. //எந்தவொரு துவக்கத்தின் பின்னும்
    ஏதோவொரு தூண்டுதல்
    எந்நாளும் மறைந்தே இருக்கிறது,
    துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி!//

    சத்திய வார்த்தைகள்...
    அருமையான கவிதை...
    பாராட்டுகள்...

    ReplyDelete
  3. \\ஏதோவொரு காரணமிருப்பதுபோல்...
    எந்தவொரு துவக்கத்தின் பின்னும்
    ஏதோவொரு தூண்டுதல்
    எந்நாளும் மறைந்தே இருக்கிறது,
    துல்லியமாய் வரையறுக்கவியலாதபடி!\\

    ஹய்யோடா..
    என்ன சொல்றதுனே தெரில..
    அவ்ளோ அருமை.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சாகம்பரி.

    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சிசு.

    தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி லோகு.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.