இன்றைக்கு ஏன் இத்தனை உற்சாகம்? நேற்றுவரை இந்தப் பரபரப்பில்லையே! திருமணத்துக்குப்பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதாலா? இருபத்திரண்டு பிறந்தநாட்களைச் சீரும் சிறப்புமாய் அம்மா, அப்பாவுடன் கொண்டாடியபின்னும் இன்று பிரபுவுடன் கொண்டாடவிருக்கும் பிறந்தநாளே தனிச்சிறப்பென்று உள்மனம் குதூகலமிடுவதாலா?
அம்மா அப்பாவின் அதிகாலை அழைப்பு அவள் உற்சாகத்தின் அளவை இன்னும் உயர்த்திவிட்டிருந்தது.
அயர்ந்து தூங்குகிறவனை எழுப்புவதா? அல்லது தானே எழும்வரை காத்திருப்பதா? அவளது ஆர்வம் முதல் கேள்விக்கு தலைசாய்த்தது.
இதமாய் மெல்ல எழுப்பினாள். என்றுமில்லாத வழக்கமாய் காலையிலேயே குளித்து, புதியபுடவையுடுத்தி புத்தம்புது மலரென தன்முன் நின்றவளை அப்படியே கட்டிக்கொள்வான் என்ற கனவு கலைந்தது, "காப்பி எங்கே?" என்ற கேள்வியில்.
காப்பி கையிலிருந்தால் அவன் கட்டிக்கொள்ளும் வேகத்தில் தளும்பி புடவையில் கறையுண்டாக்கிவிடுமே என்று பயந்து அடுப்படி மேடையிலேயே அதை விட்டுவந்ததை சொல்லவா முடியும்? ஏமாற்றத்தை மெல்ல விழுங்கியபடியே "இதோ, எடுத்திட்டு வரேன்!" என்று கூறி நகர்ந்தாள்.
அவன் கண்களைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் வாழ்த்துச் சொல்வான் என்ற எதிர்பார்ப்பில் அவளது கண்கள் அலைந்தன. அலைந்து அலைந்து களைத்ததுதான் மிச்சம். ம்ஹும்! அவன் எதையும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
இப்படி அலைகிறாளே, என்னவாக இருக்கும் என்று யோசிக்க மாட்டானா? அவளது புத்துணர்வுக்கு காரணம் என்னவென்று யூகிக்க மாட்டானா? கண்முன் ஆட்டப்படும் கிலுகிலுப்பையைக் கண்டுகொள்ளாத குழந்தை போல் அல்லவா நடந்துகொள்கிறான்? ஒருவேளை மறந்துவிட்டானோ? இரண்டுநாட்களுக்கு முன்புதானே சூசகமாக சொல்லியிருந்தாள்? அதற்குள் எப்படி......?
ஜானு தவித்தாள். தானே சொல்லிவிடலாமா? சொன்னபின்பு நினைவு வந்து வருத்தப்படுவானோ? மறந்துவிட்டதே இந்த மரமண்டை என்று குட்டிக்கொள்வானோ? வேண்டாம், தன் வாயால் சொல்லவேண்டாம். அவனாகவே புரிந்துகொள்ளட்டும்.
இட்லியுடன் பரிமாறப்பட்ட கேசரிக்கான காரணமும் கேட்கப்படவில்லை. இதென்ன சண்டித்தனம்? நானும் விடப்போவதில்லை. தான் சொல்லாமலேயே அவன் வாயால் வாழ்த்து வாங்கிவிட்டுதான் மறுவேலை. கண்ணாடி வளையல்கள் குலுங்கும் கரங்களை அவன்முன் ஆட்டி ஆட்டி பேசினாள். அணிந்திருந்த பனாரஸ் புடவையை அடிக்கொருதரம் சரி செய்தாள். எதுவும் வேண்டாம், எங்கே கிளம்பியிருக்கிறாய் என்றுகூடவா கேட்கக்கூடாது? சரியான கல்லுளிமங்கன்.
போனமாதம் அவனது அலுவலக நண்பன் ராஜேஷ் வீட்டுக்குப் போன சம்பவம் நினைவுக்கு வந்தது.
அவர் மனைவி ரேகா கேட்டாள், " உங்க ஹஸ்பெண்ட் உங்களுக்கு என்ன ட்ரீட் கொடுத்தார்?"
"எதுக்கு?" அப்பாவியாய் இவள்.
"வேறெதுக்கு? ப்ரமோஷனுக்குதான்!"
"இல்லையே! அப்படி எதுவும் இல்லையே, இருந்தா சொல்லியிருப்பாரே?"
திருமணமான இந்த ஒன்பது மாதங்களில் கணவன் தன்னிடமிருந்து எதையும் மறைக்கவில்லை என்கிற அசாத்திய நம்பிக்கை அவளுக்கு.
ரேகா சிரித்தாள்.
"சார், நீங்க பயங்கரமான ஆளுதான்! சொன்னா, உங்க ஒய்ப் பெரிசா ஏதாவது கேட்டுடப்போறாங்களோன்னு பயந்துகிட்டுதானே மறைச்சிட்டீங்க?"
பிரபு எவ்வித அலட்டலுமின்றி சொன்னான், " இதிலே மறைக்க என்ன இருக்கு? அக்கவுண்ட்டே எங்க ரெண்டுபேர் பேர்லயும்தான் இருக்கு. அவளுக்குத் தெரியாமலா போகும்? இது ஒரு பெரிய விஷயம்னு சொல்லத் தோணலை!"
ரேகா ஜானுவைப் பார்த்த பார்வையில் பரவியிருந்தது, பரிதாபமா? பரிகாசமா? புரியவில்லை.
ஜானுவுக்கு அவனுடைய உதாசீனம் உறுத்தியது. அலுவலகத்தில் பதவி உயர்வு! அதுவும் வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டதாம். இதுவரை அவளிடம் மூச்சுவிடவில்லை. கேட்டால் இது பெரிய விஷயம் இல்லையாம்.
சே! தன் மனைவி மற்றவர் முன் அவமானப்படுவாளே என்பதற்காகவாவது 'மறந்துவிட்டேன்' , ‘ஒரு சர்ப்ரைஸுடன் சொல்லலாம் என்றிருந்தேன்’ என்று ஏதாவது பொய்யைச் சொல்லியாவது பூசி மெழுகியிருக்கலாம்.
வீட்டுக்கு வந்தபிறகு விம்மலுடன் விளக்கம் கேட்க, அப்போதும் அதையே சொன்னான்.
"இது ஒரு பெரிய விஷயமா? உனக்கு என்ன வேணும்? வாங்கிக்கோ!" என்று அலட்சியமாகச் சொன்ன பிறகு என்ன செய்வது? அவளென்ன புடவை, நகைக்காகவா அவனிடம் வம்பு பிடிக்கிறாள்? தன் கணவன் மனந்திறந்து தன்னிடம் பேசவேண்டும், இன்ப துன்பங்களைப் பகிர வேண்டும் என்றுதானே? அதைக்கூடப் புரிந்துகொள்ளமுடியாதவனா, இவன்?
இப்படி எத்தனையோ நிகழ்வுகள்! வேண்டுமென்றே பொய்க்கோபம் காட்டினாலும் அதையும் பொருட்படுத்துவதில்லை.
குப்புற விழுந்த குழந்தை, முதலில் அழும்; பின் தன்னைத் தூக்கிவிட, அருகில் எவருமில்லை என்று புரிந்தவுடன் தானே எழுந்து, மண்ணைத் தட்டிவிட்டு மீண்டும் விளையாடப்போகுமே, அதுபோல்தான் அவள் ஊடலும். ஒரு கெஞ்சலோ, கொஞ்சலோ, மிஞ்சலோ எதுவுமில்லாமல் வந்த வழியிலேயே திரும்பிவிடும். கொஞ்சகாலம் அவனுடன் அப்படி இப்படி செல்லச்சண்டையிட்டுக்கொண்டிருந்தவள், இப்போது அதையும் விட்டுவிட்டாள்.
ஆனால் அது எதையும் நினையாமல் இன்று அவள் மனம் குதியாட்டம் போடுவதென்னவோ உண்மை.
ஒவ்வொரு பிறந்தநாளும் அவளுக்கு மறக்கமுடியாத நினைவுகளைத் தரும். காலையில் அவளை எழுப்புவதே அம்மா, அப்பாவின் அன்பு முத்தங்களும் வாழ்த்துகளும்தான். இருவரும் அன்று கட்டாயம் விடுப்பு எடுத்துக்கொள்வார்கள். இவளும்தான். மூவரும் சேர்ந்து கோயில், சினிமா, பீச் என்று சுற்றிவிட்டு கைக்கொள்ளாத பரிசுகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப இரவு பதினொன்றாகிவிடும். படுக்கப்போகுமுன் மீண்டும் அம்மா அப்பாவின் முத்தங்களும், வாழ்த்துகளும் விடைகொடுக்கும்.
இதுதான் முதல்முறை, இவள் வீட்டிலிருக்கிறாள், அதுவும் தனியாக!
போகட்டும்! அலுவலகவேலை அதிகமாக இருக்கலாம். அதனால் லீவு போட்டுக்கொண்டு ஊர் சுற்றுவதென்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால்....ஆசையாய் ஒரு வாழ்த்து …..வாய் திறந்து சொன்னால்தான் என்ன? என்ன குறைந்துவிடும்?
பட்டென்று உச்சியில் பல்பு ஒளிர்ந்தது. ஒருவேளை, மாலைக் கொண்டாட்டத்தை மனதில் வைத்திருக்கிறானோ? மணக்க மணக்க, மல்லிகைப்பூவுடன் வந்து மகிழ்விக்கப்போகிறானோ? திரையரங்குச் செல்லலாம் என்று திடீர் அறிவிப்பு செய்து திடுக்கிடச்செய்வானோ? அவள் ஆசைப்பட்ட பிளாஸ்மா டிவி வாங்கித்தந்து அவளை வாய் பிளக்க வைப்பானோ?
சினிமாவில் காட்டுவதுபோல், ரகசிய ஏற்பாடுகள் செய்து, கண்களை இதமாய்ப் பொத்தி, இருட்டறை அழைத்துச்சென்று, படீரென்றுவிளக்குகளை எரியச்செய்து, பர்த்டே பாட்டுப்பாடி, கேக் எடுத்து அவளுக்கு ஊட்டி…......என்னென்னவோ ஆசைகள்.......கனவுகள்!
அல்பமாய்த் தோன்றினாலும் தறிகெட்டு ஓரும் நினைவுகளை அடக்கமுடியவில்லை.இருப்புக் கொள்ளாதவளாய் தவித்தாள்.
இன்று அவனுக்குப் பிடித்த மட்டன் கறி, சிக்கன் ப்ரைடு ரைஸ், கேரட் ஹல்வா எனப் பார்த்துப் பார்த்து செய்தாள்.
ஒருபக்கம் கோபம் வந்தது. இன்று தனக்குப் பிறந்தநாள்! தனக்குப் பிடித்ததை சாப்பிடாமல்.....தான் விரும்பியதைச் செய்யாமல்…...என்ன இது பைத்தியக்காரத்தனம்?
ஆனாலும் இதமான ஓர் இன்பம் இதயத்தை வருடவே செய்தது.
மாலை நெருங்க, நெருங்க, அவள் பரவசத்துடன் காத்திருந்தாள். எதிர்பாராத பரிசுக்காக அவள் மனம் ஏங்கியது.
போன் வரவும், படபடக்கும் இதயத்துடன் "ஹாய்!" சொன்னாள்.
"ஜானு! இங்கே கொஞ்சம் வேலை அதிகம். வர லேட்டாகும். சாப்பாடு எடுத்துவைக்க வேண்டாம். நீ சாப்பிட்டு படுத்துக்கோ!"
"..........."
"ஜானு.......கேக்குதா?"
"ம்"
சுயபச்சாதாபம் பீறிட்டு கண்ணீராய் வெளிப்பட்டது. போனை வைத்துவிட்டு ஓவென்று வாய்விட்டு கதறினாள்.
சமைத்ததை எடுத்து ப்ரிட்ஜில் வைத்து மூடினாள். குமுறிய மனதுடன் சோபாவில் சாய்ந்தவள், அப்படியே உறங்கிப்போனாள்.
சத்தம் கேட்டு கண் விழித்தபோது பிரபு கைலிக்கு மாறிக்கொண்டிருந்தான்.
"எப்போ வந்தீங்க?"
"இப்பதான்! நீ சாப்பிட்டியா?"
"ம்"
"ஏன் என்னவோ போலயிருக்கே?"
கேள்வி அவளைக்கூறுபோட்டது. உண்மையிலேயே மறந்துதான் போய்விட்டான்போலும். இதற்குமேலும் வீம்பு ஆகாது என்று உணர்ந்தவள், மெல்லிய புன்னகையினூடே,
"இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்!" என்றாள்.
"அட, அப்படியா? நீ இன்னுமா பிறந்தநாள் கொண்டாடிகிட்டு இருக்கே? அதெல்லாம் எனக்குக் குழந்தைப் பருவத்தோடவே முடிஞ்சிடுச்சி!"
சொன்னபின்பாவது வாழ்த்துவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. இனி இங்கு நிற்பதில் பயனில்லை என்று படுக்கையறை போக முற்பட்டவளை, "ஜானு" என்ற குரல் தடுத்தது.
ஆவலாய் திரும்பியவளிடம்,
"குட்நைட், ஜானு! எனக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு, முடிக்கணும், நீ போய் படுத்துக்கோ!"
அவள் அசையாமல் நின்றாள்.
"என்ன, ஜானு?"
"எனக்கு 'ஹாப்பி பர்த்டே' சொல்றீங்களா?"
கேட்டேவிட்டாள். வாக்கியத்தை முடிக்குமுன் துக்கம் பெருகி தொண்டையை அடைத்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள்.
"இதென்ன பெரிய விஷயம்? ஹாப்பி பர்த்டே! போதுமா?"
அவன் சிரித்தான். அவள் மெல்ல நடந்து அவனருகில் வந்தாள். தன் கரங்களை அவன் தோளில் மாலையாக்கி, அவன் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்து, "தாங்க்ஸ்!" என்றாள். சொல்லிவிட்டு படுக்கையறை நோக்கி நடந்தவளைப் பார்த்து, சிரித்தபடியே சொன்னான்,
"நீ இன்னும் குழந்தையாவே இருக்கே, ஜானு!"
இன்றைக்கு ஏன் இத்தனை உற்சாகம்? நேற்றுவரை இந்தப் பரபரப்பில்லையே! திருமணத்துக்குப்பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதாலா? இருபத்திரண்டு பிறந்தநாட்களைச் சீரும் சிறப்புமாய் அம்மா, அப்பாவுடன் கொண்டாடியபின்னும் இன்று பிரபுவுடன் கொண்டாடவிருக்கும் பிறந்தநாளே தனிச்சிறப்பென்று உள்மனம் குதூகலமிடுவதாலா?//
ReplyDeleteவணக்கம் சகோதரம், கதையின் ஆரம்பம், பாத்திரங்களை அறிமுகம் செய்யும் பண்பு, இயற்கை வரண்ணனை என்பன தனிச் சிறப்பாக உள்ளன.. கதையின் நகர்விற்கேற்ப... அழகாக வார்த்தைகளும் தொய்வின்றி விழுகின்றது.
காப்பி கையிலிருந்தால் அவன் கட்டிக்கொள்ளும் வேகத்தில் தளும்பி புடவையில் கறையுண்டாக்கிவிடுமே என்று பயந்து அடுப்படி மேடையிலேயே அதை விட்டுவந்ததை சொல்லவா முடியும்? //
ReplyDeleteஇது கதையின் சுவாரசியத்தைக் கூட்டும் ஒரு வசனம். பேஷ்..பேஷ்.
கண்முன் ஆட்டப்படும் கிலுகிலுப்பையைக் கண்டுகொள்ளாத குழந்தை போல் அல்லவா நடந்துகொள்கிறான்? //
ReplyDeleteஇது கதையின் நாயகனின் உள்ளத்து உணர்வுகளை அழகாக வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் அணி..
ராஜேஷ் வீட்டிற்குப் போன இடத்தில்... கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது....
ReplyDelete"இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்!" என்றாள்.//
ReplyDeleteசஸ்பென்ஸாக நகர்ந்த கதையில் இங்கே தான் திருப்பு முனை வருகிறது.
எதிர்ப்பார்ப்பு, இறுதியில் ஒரு சில வார்த்தைகளினூடாக ஏமாற்றத்தில் முடிந்ததை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
"நீ இன்னும் குழந்தையாவே இருக்கே, ஜானு!" //
ReplyDeleteகதையின் முடிவில் கவனம் எடுத்துச் செதுக்கியிருந்தால் இன்னும் அழகாக கதை வந்திருக்கும். இறுதியில்.எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிய நிலையில் பெண்ணின் உள்ளத்தை, ஜானுவின் வடிவில் படம் பிடித்துக் காட்டிய நீங்கள்.. அவளின் அழுகை எல்லாம் மறந்து ஊடலுக்கு அவள் தயாராகுவதாக அடுத்த நொடியிலே கிளைமாக்ஸினை மாற்றுவது, கொஞ்சம் உதைக்கிறது.
ஆனாலும் உங்கள் பதிவில் நான் படிக்கும் முதல் கதை இது என்பதால் சுபம்.
பிறந்த நாள்.. இன்று பிறந்த நா.... குழந்தை மனதை மட்டும் காரணம் காட்டி, பெரியவர்களின் ஆசா பாசங்கள் நிராகரிக்கப்படுவதை வெளிப்படுத்தும், சொல்லி நிற்கும் ஒரு கதை.
ReplyDeleteஎதிர்பார்ப்புக்கள் யாவும் ஏமாற்றத்தில் முடிந்தாலும், பெண்ணுக்கே உரிய பணிதல் எனும் பாரதியின் பண்பினை இறுதியில் இக் கதையில் ஜானு, நாயகனுடன் ஊடலிற்காக படுக்கையறையினை நோக்கிச் செல்வதனூடாக சொல்லியிருப்பது, கதைக்கோ, இக் காலப் பெண்களுக்கோ அழகாக அமையாது என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் சகோதரம்,
இனித் தொடர்ந்து உங்களின் வலைக்கு வருவேன்.
சகோ ஒரு சின்ன வேண்டுகோள், கதையினை இரண்டு பாகங்களாகப் பிரித்துப் போட்டால் இன்னும் அழகாக இருக்கும். காரணம் இயந்திர உலகில் நீண்ட கதையினை வாசிக்கும் அளவிற்கு நேரம் போதாமல் உள்ளது. சிறிய சிறிய பகுதிகள் என்றால், இப் பகுதியினை படித்த பின்னர் அடுத்த பகுதியினைப் படிக்க வருதல் இலகுவாக இருக்கும் என்பது என் கருத்து.
ReplyDeleteபெண்ணின் மனதும், ஆணீன் மனதும் நல்ல முறையில் அலசப்பட்டு உள்ளது.. வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக நல்ல கதை. கதையில் பெண் மனம் பாடுபடுவதாய் சொல்லப் பட்டிருந்தாலும் , பெண்களிலும் இப்படி சிலர் இருக்கின்றனர்
ReplyDeleteரொம்ப பாவமா இருக்கு ,ஆனால் பெற்றோர்கள் ரொம்ப செல்லம் கொடுத்து விட்டாலும் , இப்படி சின்ன விஷியம் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
ReplyDeleteஇந்தக் கதையை வேறு ஒரு கோணத்தில் நானே அனுபவித்திருக்கிறேன் கீதா !
ReplyDelete@ நிரூபன்
ReplyDeleteகதையை நுனி முதல் அடிவரை அற்புதமாக விமர்சித்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றி நிரூபன். கதையின் முடிவில் கோபத்தை மறந்து அவள் ஊடலுக்குத் தயாராவதுபோல் நான் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஊடலுக்கு அங்கே இடமில்லை. கதையில் ஒரு இடத்தில் அவள் ஊடலைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.
இரவுநேரம் கணவன் வரும்வரை மனச்சோர்வுடன் காத்திருந்து சோபாவில் உறங்கியவள் அவன் வந்தபின்பு உறக்கம் தொடர படுக்கையறை நோக்கி நடக்கிறாள் என்பதாகவே முடிவு.
இத்தனைப் பொறுமையாக கருத்துகளைச் சொல்லி என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி நிரூபன்.
அடுத்தடுத்த முறைகளில் நெடிய கதைகளைப் பிரித்துத் தர முயல்கிறேன்.
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete//பெண்ணின் மனதும், ஆணீன் மனதும் நல்ல முறையில் அலசப்பட்டு உள்ளது.. வாழ்த்துக்கள்//
நன்றி, செந்தில் குமார். பொதுவான குணம் என்று சொல்லிவிடமுடியாதே.... சில நேரங்களில் சில மனிதர்கள்!
எல் கே said...
ReplyDelete//மிக நல்ல கதை. கதையில் பெண் மனம் பாடுபடுவதாய் சொல்லப் பட்டிருந்தாலும் , பெண்களிலும் இப்படி சிலர் இருக்கின்றனர்//
எந்த அளவுக்கு அன்பைச் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு அன்பை எதிர்பார்ப்பது மனித இயல்புதானே.... இதில் ஆண்களென்ன, பெண்களென்ன...நன்றி எல்.கே.
Jaleela Kamal said...
ReplyDelete//ரொம்ப பாவமா இருக்கு ,ஆனால் பெற்றோர்கள் ரொம்ப செல்லம் கொடுத்து விட்டாலும் , இப்படி சின்ன விஷியம் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.//
சின்னப்பெண்தானே.... வாழ்க்கையைப் புரிந்துகொண்டால் சரியாகிவிடும். கருத்துக்கு நன்றி ஜலீலா.
ஹேமா said...
ReplyDelete//இந்தக் கதையை வேறு ஒரு கோணத்தில் நானே அனுபவித்திருக்கிறேன் கீதா !//
பார்த்ததோ... கேட்டதோ... பாதித்ததோ.... அனுபவங்கள்தானே நம்மை எழுதவைக்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.
மெல்லிய உணர்வுகளை பிரதிபலிக்கிறது கதை. நல்லாருக்குதுங்க.
ReplyDeleteஅமைதிச்சாரல் said...
ReplyDelete//மெல்லிய உணர்வுகளை பிரதிபலிக்கிறது கதை. நல்லாருக்குதுங்க.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமைதிச்சாரல்.
உணர்வுப்பூர்வமான கதை.சில ஆண்கள் தங்கள் மனைவியின் சின்ன சின்ன உணர்வுகளை,ஆசைகளை புரிந்து கொள்வதில்லை,அதற்கு விளக்கம் அவர்களின் மெச்சூரிட்டி,தொழில் கவனம் என இருக்கலாம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஆச்சி.
ReplyDeleteபிறந்தவீட்டில் செல்லமாய் வாழும் பெண்கள் அதே நிலையை புகுந்த வீட்டிலும் எதிர்பார்த்து ஏமாறுவது ..இயலபானது தான்....மா...தவிப்பை நானும் உணர்ந்தேன்..
ReplyDeleteகதையை வாசித்து அழகான கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி கீதா.
Delete