18 April 2011

தூர்வாரப் போனேன்....


உன் மெளனக்கிணற்றின் ஆழமறியாமலும்
அவ்வாழத்தில் புதையுண்டிருக்கும்
பொருட்கள் பற்றிய விவரமறியாமலும்
தூர்வாரத் துணிந்தது எத்தனைத் தவறென்று
இறங்கியபின்னரே உணர்கிறேன்!

உன்னிடம் பகிரப்பட்ட என்
கனவுகளும், நம்பிக்கைகளும்
என்றாவது நிறைவேற்றுவாயென்று
ஒப்படைக்கப்பட்டிருந்த என் ஆசைகளும்
தம் வனப்பிழந்து வடிவம் குலைந்து
மேலும் மேலும் அழுத்தம் பெற்று
சேற்றுக்குள் முங்கி மூச்சுமுட்டிக்கிடக்கின்றன.

அவை எழுப்பிய அலறல்கள் யாவும்
அக்கிணற்றின் அடியாழத்திலேயே
எதிரொலிக்கப்பட்டு அவற்றையே
வந்தடைந்துவிட்டிருந்தபோதிலும்.
தம் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிடாமல்
மீட்பரின் வருகைக்காக காத்திருக்கின்ற
அவை எழுப்பிய ஈனசுரங்களைக்கொண்டு
அவற்றை அடையாளங்காண்கிறேன்!

இற்றுத் துருப்பிடித்தநிலையிலிருந்தும்
நேற்றுவரை நேசமிறைத்துக்கொண்டிருந்த,
சற்றுமுன் சகதிக்குள் அறுந்துவிழுந்துவிட்ட
நம் காதற்சகடை கண்ணில்பட்டபோதும்,
அலட்சியப்படுத்தி மேலேறுகிறேன்,
அளவிலா என் அற்புதங்களை மட்டுமேந்தி!

18 comments:

  1. தூர்வாரத் துணிந்தது எத்தனைத் தவறென்று
    இறங்கியபின்னரே உணர்கிறேன்!//

    ஆழமறியாமற் காலை விடக் கூடாது என்பது போல, காதலில் விழுந்தோரின் அனுபவங்களும் பட்ட பின்னர் தான் தெரியும் எனும் வகையில் அமைகிறது இவ் வரிகள்.

    ReplyDelete
  2. தம் வனப்பிழந்து வடிவம் குலைந்து
    மேலும் மேலும் அழுத்தம் பெற்று
    சேற்றுக்குள் முங்கி மூச்சுமுட்டிக்கிடக்கின்றன//

    நிறை வேறாத ஆசைகளை விளக்க, வர்ணிக்க கவிதையில் கையாளப்பட்டிருக்கும் மொழி நடை அருமை.

    ReplyDelete
  3. தூர்வாரப் போனேன்....//

    பட்ட பின்னர் புத்தி தெளிவது போல காதற் கிணற்றில் கால் தவறி விழுந்து எழுந்தவளின் பாடலாய் உருப் பெற்றுள்ளது.

    ReplyDelete
  4. எடுத்துக்கோண்ட உவமையை விட்டு விலகாது
    தொடர்ந்து பயணித்துச் செல்வது என்னை
    மிகவும் கவர்ந்தது
    சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கவிதைல குவாலிட்டி கூடிட்டே இருக்கு.. குட்

    ReplyDelete
  6. கவிதையும் அதில் நீங்கள் கையாண்டுள்ள வார்த்தைகளும் அருமை

    ReplyDelete
  7. சொற்கள் பாவனை அருமை .அழகான அர்த்தமுள்ள கவிதை ..வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  8. //தூர்வாரத் துணிந்தது எத்தனைத் தவறென்று
    இறங்கியபின்னரே உணர்கிறேன்//
    வாவ்... அழகான அதே சமயம் ஆழமான வரிகள்...

    //கீதமஞ்சரி//
    உங்கள் வலைப்பூவின் பெயரே கவிதை போல் தான் உள்ளது... :)

    ReplyDelete
  9. அடையாளங்களைக் கண்டுபிடித்தபின் அற்புதங்களை ஏந்தி வருவது அபாரம்.காதலில் இது முடியாத காரியம் ஆனாலும் எழுத்திலாவது கொண்டு வந்திருப்பது அருமை !

    ReplyDelete
  10. http://lksthoughts.blogspot.com/2011/04/18042011.html

    ReplyDelete
  11. @ நிரூபன்
    தலைப்பு, கரு, மொழி எல்லாவற்றையும் அலசி விமர்சித்துள்ளீர்கள்.... மிக மிக நன்றி நிரூபன்...

    @ Ramani
    ஆழமாகக் கவனித்திருக்கிறீகள் என்பது தெரிகிறது. மிகவும் நன்றிங்க ரமணி.

    @செந்தில்குமார்
    உங்க பாராட்டுக்கு நன்றி செந்தில்குமார்.

    @ S.Sudharshan
    வாழ்த்துக்கு நன்றி சுதர்ஷன்.

    ReplyDelete
  12. எல் கே said...
    //கவிதையும் அதில் நீங்கள் கையாண்டுள்ள வார்த்தைகளும் அருமை//
    பாராட்டுக்கும் என்னை உங்க வலைப்பூவில் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றிங்க எல்.கே. இத்தனைக் குறுகிய காலத்தில் உங்கள் அனைவரின் அறிமுகமும் ஆதரவும் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது.

    ReplyDelete
  13. @அப்பாவி தங்கமணி

    கவிதையைப் பாராட்டியதற்கும் வலைப்பூவின் பெயரை ரசித்ததற்கும் நன்றிங்க தங்கமணி.

    @ ஹேமா

    நன்றி ஹேமா...

    கற்பனைதான் கவிஞர்களுக்கு கைவந்த கலையாச்சே... நம்ம கற்பனையிலாவது நினைப்பதை சாதிப்போமே....

    ReplyDelete
  14. அழகான கவிதை ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இற்றுத் துருப்பிடித்தநிலையிலிருந்தும்
    நேற்றுவரை நேசமிறைத்துக்கொண்டிருந்த,
    அழகான வார்த்தை ஜாலங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது.
    வாழ்க வளமுடன் மென் மேலும் சிறப்பாக எழுத்துலகில் பிரக்சிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. நினைத்து பார்க்க முடியாத வரிகள்.

    அழுத்தமான பதிவு.

    ReplyDelete
  17. அழகான படிமங்கள் கீதா.. கவிதை உள் மனதில் இன்னும் தட்டாமாலை சுற்றிக்கொண்டிருக்கிறது.
    நிறைய எழுதுங்கள் கீதா! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கு நன்றி போளூர் தயாநிதி.

    வாழ்த்துக்கு நன்றி இன்பம் துன்பம்.

    கருத்துக்கு நன்றி லோகு.

    ஊக்குவிப்புக்கு நன்றி மோகன்ஜி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.