Showing posts with label அங்கீகாரம். Show all posts
Showing posts with label அங்கீகாரம். Show all posts

12 March 2025

ஒவ்வொரு நாளும் புதிதாய்...

வசந்தகாலம் முடிவடைவதற்கு முன்பாகவே கொளுத்தத் தொடங்கிய வெக்கையின் தாக்கத்தை எழுதிய புலம்பல் பதிவோடு போனவளுக்கு, கோடை முடிந்து இதம் தரும் இலையுதிர்காலமும் தொடங்கிய பிறகுதான் வலையில் தலை காட்ட மனம் வாய்த்திருக்கிறது. 

கோடையின் கடுந்தாக்கம், பிரியத்துக்குரிய தாய்மாமனின் இழப்பு, புத்தாண்டின் தொடக்கத்திலேயே கவித்தோழி உமா மோகன் அவர்களின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சி போன்ற சில காரணங்களால் எழுதுவதில் ஒரு வித அயர்ச்சியும் சுணக்கமும் ஏற்பட்டுவிட்டது. எழுத்தில்தான் மந்தமே தவிர வாழ்க்கை என்னவோ தன் போக்கில் படுவேகமாகவும் சுவாரசியமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

நெடும்பயணத்தில் சிறு இளைப்பாறல்

முதன்முதலாக தோழிகளோடு, சுமார் 2,000 கி.மீ. நீள சாலைவழி சாகசப் பயணம், மகளின் புதிய காரில் புதுப்புது இடங்களுக்கு சந்தோஷப் பயணம், மகளின் வளர்ப்புச் செல்லங்களும் அவற்றின் சேட்டைகளும், புதிய youtube சானல், புதிய கைத்தொழில், தோட்டச் சீரமைப்பு, தோட்டத்தின் புதுவரவுகள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களுக்குக் குறைவில்லாமல் கழிகின்றன நாட்கள்.  

பயணத்தில் சுவாரசியம் கூட்டிய இடங்களுள் ஒன்று

பச்சைப் புல்வெளியும் கரிய மாடுகளும்

இந்த வருடம் எதிர்பாராத மகிழ்ச்சியாக Australian native bees – Family planner-ல் நான் எடுத்த புகைப்படமும் சிறு இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியத் தேனீக்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவியற் தகவல்களையும் அறியத் தரும் Bee Aware of Your Native Bees  என்ற ஃபேஸ்புக் குழுமம் அதில் பதியப்பட்ட பல்லாயிரக்கணக்கான படங்களுள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து இந்த planner-ஐ உருவாக்கியுள்ளது.

நாட்காட்டியின் முன் பக்கம்

நாட்காட்டியின் கடைசிப்பக்கம்

வித்தியாசமானவை, அரியவை, தரைவாழ் தேனீக்கள், தேன் கூடு, தேனடை, தேன் சேகரிப்பு, உறக்கம், குமிழ் விடுதல், மகரந்தச் சேர்க்கை என ஒவ்வொரு மாதத்திற்குமான பிரத்தியேகத் தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியத் தேனீக்கள் படங்களுள் குமிழ் விடுதல் தலைப்பில் என்னுடைய ஒளிப்படம் தேர்வானது. காலண்டரா ப்ளானரா என்ற ஆலோசனையின்போது பலரும் ப்ளானர் என்று பரிந்துரைக்க, இறுதி வடிவம் ப்ளானர் (சரியான தமிழ்வார்த்தை இன்னும் பிடிபடவில்லை) என்று முடிவானது.


தகவல் பக்கம்

வழுவழுப்பான தாள்கள். ஒரு அடி நீளம், ஒரு அடி அகலத்தோடு பெரிய அளவிலான திட்டமிடலுடன் கூடிய நாட்காட்டி ஆஸ்திரேலியத் தேனீக்கள் மற்றும் சிறப்புத் தகவல்களோடு அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. தனி விலை 25 ஆஸ்திரேலிய டாலர்கள். மொத்தமாக வாங்கினால் குறையும். நிறைய பேர் ஐம்பது, நூறு என்று வாங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா முழுமைக்கும் விநியோகிக்கப்பட்டுள்ள இவ்வாண்டின் நாட்காட்டியில் என்னுடைய ஒளிப்படமும் இடம்பெற்றிருக்கிறது என்பது மகிழ்வும் பெருமிதமும் அளிக்கிறது.

நானும் ஒரு மூலையில்...

நான் பிறந்த ஏப்ரல் மாதத்தில் என் ஒளிப்படம் இடம்பெற்றிருப்பது தற்செயல் என்றாலும் பிறந்தநாள் பரிசாகப் பெற்றது போல் கூடுதல் மகிழ்ச்சி.

நத்துவும் மித்துவும் 

கடந்த 2022-ஆம் ஆண்டு அமேசானில் வெளியான என்னுடைய சிறுவர் நாவல் ‘நத்துவும் மித்துவும்’ தற்போது ஒலிவடிவம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வாழ்வுநல மேம்பாட்டுக்காகச் செயல்படும் ‘மெய்ப்பொருள்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சென்ற பிப்ரவரி 14-ஆம் தேதியிலிருந்து தினமொரு கதையை பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஒலி வடிவில் ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த வரிசையில் பத்தாவது கதையாக என்னுடைய ‘நத்துவும் மித்துவும்’ சிறுவர் நாவல் இடம்பெற்றிருக்கிறது. சுமார் 40 நிமிட அவகாசம் எடுக்கும் இக்கதையை Spotify-இல் கேட்கலாம்.

நத்துவும் மித்துவும் ஒலி வடிவம்

‘நத்துவும் மித்துவும்’ கதையை எளிய மொழியில் மிக அழகாகச் சொல்லியிருக்கும் அபிநயா ஸ்ரீகாந்த் அவர்கள், இந்தக் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

இணையப் படம் 1

1969-ஆம் ஆண்டு எரிக் கார்ல் என்ற அமெரிக்க சிறார் எழுத்தாளர் மற்றும் ஓவியரால் எழுதி வடிவமைக்கப்பட்டதுதான் The very hungry caterpillar என்ற உலகப் பிரசித்தி பெற்ற சிறார் படப் புத்தகம். புத்தகம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை சுமார் ஐம்பது மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. 66 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான புத்தக வடிவமைப்புக்காக எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளது. பல தொலைக்காட்சிகளில் கார்ட்டூன்களாக வெளியாகியுள்ளது. ‘உலகச் சிறார் இலக்கியத்தில் மிக முக்கியமான நூல்களுள் ஒன்று’ என்ற சிறப்பைப் பெற்றது. கதையோடு கம்பளிப்புழு ஒவ்வொரு உணவையும் துளைத்துக் கொண்டு போவது போன்ற புத்தக வடிவமைப்பு கூடுதலாகக் குழந்தைகளை ஈர்ப்பது இன்னொரு சிறப்பு. 

ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனின் வெப்பத்தால் முட்டையிலிருந்து பொரிந்து வருகிறது ஒரு குட்டிக் கம்பளிப்புழு. திங்கள் அன்று ஒரு ஆப்பிள் தின்கிறது. ஆனாலும் பசி அடங்கவில்லை. செவ்வாய்க் கிழமை இரண்டு பேரிக்காய் தின்கிறது. அப்போதும் பசியடங்கவில்லை. புதன் கிழமை மூன்று ப்ளம் பழங்களைத் தின்கிறது. அப்போதும் பசி அடங்கவில்லை. வியாழக்கிழமை நான்கு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களையும் வெள்ளிக்கிழமை ஐந்து ஆரஞ்சுப் பழங்களையும் தின்கிறது. ஆனாலும் அடங்காப் பசியுடனேயே இருக்கிறது. 

இணையப் படம் 2

சனிக்கிழமையன்று அது சாக்லேட் கேக், ஒரு ஐஸ்க்ரீம், ஊறுகாய், பாலாடைக்கட்டி, சலாமி (பன்றிக்கறியால் ஆனது), லாலிபாப், செர்ரிப்பழக் கேக், சாஸேஜ் (இறைச்சி), கப் கேக் எல்லாவற்றையும் தின்றுவிட்டு கடைசியாக ஒரு துண்டு தர்ப்பூசணியும் தின்கிறது. அன்று இரவு கடுமையான வயிற்றுவலி வந்து துடிக்கிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒரே ஒரு இலையை மட்டும் தின்கிறது. இப்போது அது குட்டிக் கம்பளிப்புழு இல்லை. குண்டுக் கம்பளிப்புழுவாக மாறியிருக்கிறது. அது தன்னைச் சுற்றி ஒரு கூட்டைப் பின்னி கூட்டுப்புழுவாக மாறுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதிலிருந்து வெளியேறி அழகிய வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கிறது. இதுதான் கதை. 

நத்துவும் மித்துவும் - கதைக் காட்சி

இந்தக் கதையை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டும் கீரைகள், மூலிகைகள் இவற்றின் நன்மைகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் சொல்ல விரும்பியும் எழுதியதுதான் நத்துவும் மித்துவும் கதை. இதில் நத்து என்கிற நத்தையும் மித்து என்கிற கம்பளிப்புழுவும் ஒரு தோட்டத்து நண்பர்கள். முட்டையிலிருந்து பொரிந்துவரும் கம்பளிப்புழுவுக்கு எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடக்கூடாது, எது எந்த ருசி, எது ஆபத்து, எங்கே, யாரிடம், எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்றுத்தருகிறது நத்தை. மெதுவாக நகரும் காரணத்தால் தோட்டத்தின் மற்ற ஜீவராசிகளால் கேலி செய்யப்படும் நத்தை பிறகு எப்படி அவற்றின் ஆருயிர் நண்பனாக மாறுகிறது என்பதைச் சொல்லி கதையை முடித்திருக்கிறேன்.  

இணையப் படம் 3
என் குழந்தைகள் சிறு வயதில் Popeye show பார்த்த பிறகுதான் கீரை சாப்பிட ஆரம்பித்தார்கள். நாம் சொல்ல நினைப்பவற்றை கதைகள் மூலம் குழந்தைகளுக்குப் புரியவைப்பது எளிது என்பதை அறிந்திருந்ததால் இந்த நாவலை முயன்றேன். அதற்கு நல்ல பலன் தற்போது கிடைத்திருப்பது அறிந்து மகிழ்கிறேன்.

ஜகரண்டா மரத்தில் காலா பறவைகள்

தோட்டத்தின் புதுவரவுகள் என்று குறிப்பிட்டேன் அல்லவா? 2025 முதல்நாள் தோழிகளோடும் புதிய பூக்கன்றுகளோடும் சிறப்பாகத் தொடங்கியது. 

புதிய வரவாக நானும் இருக்கிறேன் என்று தலைகாட்டிப் போனார் பாம்பார் ஒருவர். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு சட்டையை மட்டும் கழற்றிவைத்துவிட்டுப் போனவர் இப்போது தானே என் கண்முன் வந்து தன்னிருப்பை உறுதி செய்துவிட்டுப் போனார். கொல்லைப்புறக் கண்ணாடி வழியாக தோட்டத்தை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இவர் விருட்டென்று கடந்துபோனதைப் பார்த்தேன். பாம்பு போல் இருக்கிறதே, என்ன பாம்பாக இருக்கும் என்ற ஆர்வம் உந்த, கேமராவைத் தயார் செய்து கையில் எடுத்துக்கொண்டு கண்ணாடிக் கதவைத் திறந்து வெளியில் சென்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் படம் எடுக்கும் ஆசை (அவர் படம் எடுக்காமல் இருக்கணுமே!) உந்த, போர்டிகோவில் நின்றபடி அவர் சென்ற திசையில் தேடினேன். இல்லை. வேறெங்கோ போய்விட்டார் போலும், என்று நினைத்து திரும்பி கதவை மூடப்போகும் வேளையில் போன வழியிலேயே அவர் திரும்பி வருகிறார். அடித்தது அதிர்ஷ்டம் என்று க்ளிக்கினேன். ஆனால் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. படபடப்பு வேறு. அவரோ  விருட்டென்று செடிகளுக்குள் சென்று மறைந்துவிட்டார். 

வால் மட்டும்தான் பிடிபட்டது

கன்னங்கரேல் என்ற உடலைப் பார்த்தபோதே இது red-bellied black snake-ஆகத்தான் இருக்கவேண்டும் என்று கணித்தேன். படத்தை வைத்து இணையத்தில் தேடியபோது என் கணிப்பு உறுதியானது. ஆக, புழு, பூச்சிகள், சிலந்திகள், பறவைகள், தோட்டப்பல்லிகள், நீல நாக்கு அரணை, நத்தை, சுண்டெலி, பெருச்சாளி, பூனை இவற்றோடு தோட்டத்தின் வருகையாளராக இப்போது இவரும் இணைந்துவிட்டார். :)))

 *****

13 January 2023

புத்தகத் திருவிழாவில் 'சாத்தான்'

 வணக்கம். 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2023 ஆரம்பித்து இரண்டு வாரமாகப் போகுது, இப்போதுதான் இவளுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லத் தோணுதோ என்று நினைப்பீர்கள். என்ன செய்வது, இப்புத்தாண்டை கோவிடோடு அல்லவா கொண்டாட நேர்ந்துவிட்டது! கடந்த மூன்று வருடங்களாக அந்தா இந்தா என்று போக்குக்காட்டி அதனிடமிருந்து ஓரளவு தப்பித்து வந்திருந்தோம். அதற்கு மேலும் தப்பிக்க முடியாதபடி 2022 கடைசியில் கணவருக்கும், 2023 துவக்கத்தில் எனக்கும் வந்துவிட்டது. விலா எலும்பே விட்டுப்போவது போல கடுமையான இருமலும் காய்ச்சலும் உடம்பு வலியுமாக பாடாய்ப்படுத்திவிட்டது. மருத்துவரின் பரிந்துரையின்பேரில் antiviral மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டோம். நல்லவேளையாக தடுப்பூசிகளும் இரண்டு பூஸ்டர்களும் போட்டிருந்தோம். அப்படி இருந்துமே இவ்வளவு சிரமம் என்றால் தடுப்பூசி போடாதவர்களின் நிலையை நினைத்தாலே நடுக்கமாக உள்ளது. எப்படியோ நல்லபடியாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம். அம்மட்டில் நிம்மதி.


சரி, இப்போது மகிழ்ச்சியான விஷயத்துக்கு வருகிறேன். இந்த வருடம் 2023 சென்னை புத்தகத் திருவிழாவில் கனலி பதிப்பகம் வாயிலாக என்னுடைய அடுத்த மொழிபெயர்ப்பு நூல் வெளியாகியுள்ளது. லியோ டால்ஸ்டாயின்
‘The Devil’  என்ற குறுநாவல் ‘சாத்தான்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.



மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டுள்ள 2022-ல் கவனம் பெற்ற நூல்கள் தொகுப்பில் சென்ற வருடம் கனலி பதிப்பகம் வாயிலாய் வெளியான ‘மழைநிலாக் கதைகள்’ என்ற ஜப்பானிய மொழிபெயர்ப்பு நூலும் இடம்பெற்றிருக்கிறது. இது நான்  எதிர்பாராததொரு அங்கீகாரம்.

தற்போது நடைபெறும் சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய இந்த இரு நூல்களும் கனலி பதிப்பகத்தின் பிற நூல்களும் கிடைக்கும் அரங்குகள்:

பரிதி பதிப்பகம் - 432

பரிசல் புத்தக நிலையம் -171-172

பனுவல் புத்தக நிலையம் - 199-200

குட்டி ஆகாயம் - 533

பூவுலகின் நண்பர்கள் - 642 - 643

காக்கைக் கூடு- 589-590

 


கோதை பதிப்பகம் வாயிலாக வெளியான என்னுடைய ‘என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்’ சிறுகதைத் தொகுப்பு, ‘என்றாவது ஒரு நாள்’ மொழிபெயர்ப்பு நூல் மற்றும் கோதை பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் கிடைக்கும் இடம்:

கோதை பதிப்பகம் அரங்கு எண் - 303


நூல்களை வாங்கி ஆதரவளிக்குமாறும் வாசித்துக் கருத்தினைப் பகிர்ந்து ஊக்கமளிக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 




17 July 2019

ஒளிரும் அங்கீகாரங்கள்


எழுத்துக்கான அங்கீகாரம் ஏதோ கொஞ்சம் கிடைத்திருக்கிறது. ஒளிப்படங்களுக்கான அங்கீகாரம் புதிதாய் ஒளிரத் துவங்கியிருக்கிறது. 





தேர்ந்த எழுத்தாளர், சிறந்த இலக்கியவாதி, இலங்கையின் சாகித்ய மண்டல விருது பெற்றவர், முற்போக்கு சிந்தனையாளர், அரசியல் விமர்சகர், நேர்மையான பத்திரிகையாளர், தமிழ்ப்பற்றாளர் என எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்குப் பற்பல அடையாளங்கள் இருந்தாலும் பாசத்தையும் நட்பையும் கொண்டாடும் ஒரு அற்புதமான மனிதர் என்ற ஒற்றை அடையாளம் அத்தனையையும் வென்றுவிடும். அவருக்கு என்பால் உள்ள அன்பு மற்றும் நம்பிக்கை காரணமாக அவரது சமீபத்திய நூல்கள் சிலவற்றுக்கான அட்டைப்படங்கள் வடிவமைக்கும் பொறுப்பை என்னிடம் அளித்திருந்தார். அவற்றுள் ஒன்றுதான் ‘சொல்லத்தவறிய கதைகள்’. சமீபத்தில் சிட்னியில் நிகழ்வுற்ற அந்நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புப் பிரதியை எனக்கு வழங்கி சிறப்பித்த அன்னாருக்கு என் பணிவு கலந்த அன்பும் நன்றியும்.



  

12 Aussie Christmas Crackers of Nature  என்ற தலைப்பில் The Nature Conservancy Australia இணையதளத்தில் வெளியான பன்னிரண்டு புகைப்படங்களுள் என்னுடைய ‘Australian brush turkey’-ம் ஒன்று என்பது இன்னொரு மகிழ்வான அங்கீகாரம். வெளியாகி மாதங்கள் பலவானாலும் ஆவணப்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு. 




வல்லமை படக்கவிதைப் போட்டிகளில் சமீபத்தில் இடம்பெற்ற என் ஒளிப்படங்கள் சில மற்றுமொரு சிறப்பான அங்கீகாரம்.







அசுவாரசியமாய்க் கழியும் இவ்வாழ்வை அவ்வப்போது சுவாரசியமாக்கிவிடுகின்றன இதுபோன்ற சில எதிர்பாரா சந்தோஷங்கள். வறண்ட நிலம் எதிர்கொள்ளும் வான்மழைத் தூறலாய் சட்டென்று உள்ளம் நனைத்துக் குழைத்து உயிர்ப்பிக்கின்றன அன்பின் துளி அங்கீகாரங்கள். பாரில் எத்தனை முல்லைக்கொடிகளுக்குக் கிட்டக்கூடும் பாரியின் தேர்?

கொசுறு - வானளக்கும் அழகிய கொரெல்லா பறவைக் கூட்டத்தின் அதிஉற்சாக ஆரோகணம். 


3 October 2018

பேரன்பின் பெருமழை



தோழி கவிதா ஜெயக்குமார் வரைந்த ஓவியம்


முடிவிலாது நீளுமிந்த வனாந்திரப்பாதையில்
நம் பிணைப்பின் இறுக்கம் கண்டு
பொருமித்தீர்க்கின்றன கானகப்பட்சிகள்..
ஏங்கி சலசலக்கின்றன நெடிதுயர்ந்த மரங்கள்…
சள்ளென்று வெம்பித் தீண்டுகிறது காற்று.

வான்மழை தடுக்கும் சின்னஞ்சிறு குடைக்குள்
இடையறாது பொழிந்து பிரவாகிக்கும் உன்
பேரன்பின் பெருமழையில் ஊறிக்கிடக்கிறேன்.

இலையுதிர் வண்ணங்களைப் பிரதிபலிக்கும்
என் மனமுதிர் எண்ணங்களைக்
கொஞ்சம் கொஞ்சமாய்க் குழைத்துவைத்திருக்கிறேன்.

வா… ஈரம் காயுமுன் நாமொரு ஓவியமாகலாம்
அல்லது தூரிகை தொட்ட வண்ணங்களை
ஆடையாய்த் தரித்து அரூபமாகலாம்.

&&&&&
(ஓவியத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த தோழி கவிதாவுக்கு நன்றி)


 கொசுறாய் ஒரு சந்தோஷப்பகிர்வு

‘நடு’ பத்தாவது இதழின் கலைக்கூடத்தில் சிறப்பு அங்கீகாரமாக… நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன. நடு ஆசிரியர்க்கும் இதழ்க்குழுவினர்க்கும் மிக்க நன்றி. 



4 April 2018

கயிற்று முனையில் அதிர்ஷ்டம்

வணக்கம் வலையுறவுகளே… சுமார் மூன்று மாதகால இடைவெளிக்குப் பிறகு, சிலபல இணையச்சிக்கல்களுக்குப் பிறகு, இப்போதுதான் வலைப்பக்கம் வர முடிந்திருக்கிறது. எழுதவேண்டியவை ஏராளமாய் உள்ளன. ஊருக்குச் சென்றுவந்த உவப்பும் பிரிவும் மாறி மாறி உளம்புகுந்து எதையும் செய்யவிடாமல் அலைக்கழித்தபடியே இருக்கிறது. அடம்பிடிக்கும் மனத்தை வடம்பிடித்து இழுத்துவருவதற்குப் போதுமானவையாய் உள்ளன சில அங்கீகாரங்களும் மகிழ்வுகளும்.  


முதலாவதாக, மெல்பேர்னிலிருந்து வெளியாகும் எதிரொலி பத்திரிகையின் பிப்ரவரி மாத இதழில்.. கயிற்றுமுனையில் அதிர்ஷ்டம் என்ற மொழிபெயர்ப்புச் சிறுகதை வெளியாகியுள்ளது. வாய்ப்பளித்த தம்பி ப.தெய்வீகன் அவர்களுக்கு நன்றி.






கயிற்று முனையில் அதிர்ஷ்டம்

இன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினம். இதோ கண்முன் விரிந்துகிடக்கிறது கடல்! நானும் என்னுடைய கூட்டாளியும் ஒரு மைல் தொலைவிலுள்ள இருளும் புழுக்கமும் நிறைந்த, மூச்சுமுட்டும் பள்ளத்தாக்கிலிருந்து முண்டியடித்து வெளியேறி இங்கு வந்திருக்கிறோம். கடல் மட்டத்துக்கு வெகு உயரத்தில், பருவகால வானிலை மாற்றங்களால் சிதைந்துபோய், மலையுடனான தன் இறுக்கமானப் பிணைப்பை இழக்கும் தருவாயிலிருக்கும் அந்த ஆபத்தான மலையுச்சியை அடைந்திருந்தோம். கிட்டத்தட்ட எழுபது மைல்களுக்கு அப்பால், தொடுவானத்திலிருந்தபடி கதிரவன் தன் பிரம்மாண்டமான கதிர்க்கண்ணால் எங்களை வெறித்துக்கொண்டிருந்தான்.

என்னுடைய கூட்டாளியான ஃப்ராங்க் ஆஸ்திரேலியக் குடியேற்றத்துக்குப் புதியவன். கடினமான கிழக்கு மலைத்தொடர்களில் சுரங்கம் அமைத்து தங்கம் தேட விரும்பிய நான், குறைந்தபட்ச முதலீடு செய்யவும் என்னோடு இணைந்து பணியாற்றவும் கூடிய ஆள் தேடி விளம்பரம் செய்தபோது இவன் விண்ணப்பித்திருந்தான். இருவரும் கூட்டாளிகளானோம். கல்வியில் தேர்ச்சியும், நல்ல தோற்றமும் துடிப்பும் கொண்ட இருபத்து நான்கு வயது இளைஞன் அவன். உடல் உழைப்புக்குப் பழக்கப்படாதவன் என்பதோடு சுரங்கத் தொழில் பற்றியும் ஏதும் அறியாதவன். அவன் தென்னாப்பிரிக்காவின் கேப் பகுதியில் பிறந்து வளர்ந்தவன் என்பதைத் தவிர அவனைப் பற்றிய வேறெந்த முன்கதைச் சுருக்கமும் எனக்குத் தெரியாது, அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. எனினும் அவனுடைய நன்னடத்தையால் என்னைக் கவர்ந்துவிட்டான்.

ஃப்ராங்குக்கு சுரங்கத்தொழில் பற்றி ஓரளவு தெரியவந்து அதில் ஈடுபாடும் ஆர்வமும் வந்துவிட்டபிறகு நாங்கள் இருவரும் கடுமையாகப் பாடுபட்டோம். ஆனாலும் தங்கத்தைக் கண்ணால் பார்க்கும் அதிர்ஷ்டம் இதுவரை எங்களுக்கு வாய்க்கவில்லை. தோண்டும் இடங்களனைத்தும் உதவாக்கரைகளாக இருந்தன அல்லது நாங்கள் தேடும் அந்த அபூர்வ உலோகத்தைத் தவிர வேறு ஏதேதோ கனிமங்கள் கிடைத்தன. கடினமானதும், எரிச்சலும் சலிப்பும் ஊட்டுவதும், விரக்தி உண்டாக்குவதுமான அந்த சுரங்கப் பணியிலிருந்து விடுபட்டு இளைப்பாற இந்த மலையோரம் வீசும் தென்றலும் உப்புவாசம் நிறைந்த கடற்காற்றும் உதவின. உலகின் இன்னொரு பக்கத்தை அளாவுவது கண்ணுக்கு இதமாக இருந்தது.

நாங்கள் புகைபிடித்துக்கொண்டு வெயிலில் கிடந்தபடி பேசிக்கொண்டிருந்தோம். ஃப்ராங்க் வழக்கத்தை விடவும் அதிகமாகப் பேசிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அவனுடைய கழுத்துச் சங்கிலியிலிருந்து ஒரு வெள்ளிப் பதக்கத்தை அவிழ்த்து நெடுநேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன், என்னிடம் காட்டி சொன்னான், “தென்னாப்பிரிக்காவில் எனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண் இவள்தான். என் பொருளாதார நிலைமை மோசமாக இருந்ததால் அதிர்ஷ்டத்தைத் தேடி இங்கு வந்தேன். கூடிய விரைவில் திரும்பிப்போய் அவளைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். இதுவரை அதிர்ஷ்டத்தின் அறிகுறி இல்லைதான். ஆனாலும் எனக்குத் தெரியும், எல்லாம் நம் நேரத்தைப் பொறுத்தது. இங்கு சுரங்கத்தொழிலில் ஈடுபட்டால் எதிர்காலம் சிறப்பாய் அமையும் என்று எனக்கு சோதிடம் சொல்லப்பட்டிருக்கிறது.”

அந்தப் பெண்ணின் முகம் மிகவும் அழகாக இருந்தது. கருங்கூந்தலும் கருவிழிகளும் கொண்டு கூந்தலில் ரோஜா மலர்களைச் சூடி புன்னகையை இதழ்களில் தேக்கியிருந்தாள்.

“அவள் எனக்காக காத்திருப்பாள். ஆனால் அதிக நாட்கள் ஆகாது என்று நினைக்கிறேன். என்னுடைய அதிர்ஷ்டம் வந்துகொண்டே இருக்கிறது. முந்நூறு டாலர்களை சம்பாதித்துக் கொண்டுவந்து காட்டினால் போதும், என் மகளை உனக்குத் தருவேன் என்று அவளுடைய அப்பா எனக்கு உறுதியளித்துள்ளார்.” 

“எதனால் உன்னுடைய அதிர்ஷ்டத்தைக் குறித்து இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறாய், ஃப்ராங்க்?” நான் கேட்டேன்.

“நான் சிறுவனாயிருந்தபோது சுவாசியில் மிகப்பிரபலமான தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார். எங்களைப் போன்ற பழங்குடி இனத்தவர்க்கு மட்டுமல்ல, வெள்ளைக்காரர்களுக்கும் அவர் சோதிடம் கணிப்பார். அவருடைய தீர்க்கதரிசனம் எப்போதும் பலிக்கும். என்னுடைய இருபத்தி நான்காவது வயதில் முற்றிலும் புதியதொரு நாட்டுக்குப் போவேன் என்றும் அங்கு மிகுந்த துயரங்களை அனுபவித்தாலும் கயிற்றின் முனையில் என் அதிர்ஷ்டத்தைக் கண்டடைவேன் என்றும் அவர் சொன்னார்.” 

“அவருடைய அந்த வாக்குக்கு பல அர்த்தம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்த மந்திரவாதி இன்னும் தெளிவாக தன் கணிப்பை சொல்லியிருக்கலாம்.” நான் சிரித்தேன்.

“இவ்வளவு சொன்னது போதாதென்று நினைக்கிறாயா? இன்னும் வேறென்ன சொல்லியிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? தெளிவாகத்தானே சொல்லியிருக்கிறார். இது ஒரு புதிய நாடு. அவர் கயிறு என்று குறிப்பிட்டது நாம் சுரங்கக்குழிக்குள் இறங்கும் கயிற்றைக் குறிக்காது என்று எப்படி சொல்லமுடியும்? ஆனால்… அடுத்த வாரம் எனக்கு இருபத்தைந்து வயது ஆகிவிடுமே. என் நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே என்னுடைய அதிர்ஷ்டத்தை தங்கச்சுரங்கத்தில் தேடுவதுதான் சரி என்றார்கள். அதனால்தான் நான் ஆஸ்திரேலியாவுக்கே வந்தேன்.” அவன் படபடத்தான்.

“சரி, சரி.” நான் அவனை அமைதிப்படுத்தினேன். “அந்த மாந்திரீகரின் வார்த்தைகள் புதிர் நிரம்பியதாய் எனக்குத் தோன்றினாலும், உனக்கு அவர் சொன்னபடியே அதிர்ஷ்டம் விரைவிலேயே வாய்க்கும் என்று நம்புவோம்.”

ராட்சஸ பெரணிகள் சூழ்ந்த இருண்ட பள்ளத்தாக்கில் உள்ள எங்களுடைய இருப்பிடத்துக்குத் திரும்ப ஆயத்தமானோம். பெரிய பெரிய முட்களுடைய கொடிகளும் மரங்களும் அடர்ந்த புதர் சூழ்ந்த மலையடிவாரத்தை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தோம். கயிற்றின் முனையில் கிடைக்கவிருக்கும் அதிர்ஷ்டம் குறித்த ஃப்ராங்க்கின் உறுதியான நம்பிக்கையைக் குலைக்க விரும்பாமல் விலகியிருந்தேன். என்னுடைய ஆர்வக்கோளாறுகள் பிறருடைய பரிகாசத்துக்கு ஆளான சந்தர்ப்பங்களிலிருந்து, அடுத்தவருடைய எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவேண்டுமென்பதை நான் கற்றிருந்தேன். ஒரு விஷயம், முழு மூடத்தனம் என்று தெரிந்தாலும் கூட அதைக் கண்டு ஒருபோதும் கெக்கலிப்பதில்லை. 

கடைசியாக நாங்கள் இறக்கிய சுரங்க ஏற்றங்கால் கிட்டத்தட்ட இருபத்தைந்து அடி ஆழத்திற்கு இறக்கப்பட்டிருந்தது. கடினமான படிகப்பாறை என்பதால் உளிகள் கொண்டு பிளந்தும் அங்கும் இங்கும் வெடிவைத்துத் தகர்த்தும்தான் சுரங்கப் பள்ளத்தைத் தோண்ட வேண்டியிருந்தது. இயற்கை சீற்றங்களும், போதுமான கையிருப்பு இல்லாமையும் எங்கள் பணியில் பின்னடைவு ஏற்படுத்தின. இதற்குமேலும் அந்த இடத்தைத் தோண்டிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லையெனத் தோன்றியது. தோண்டுமிடம் எல்லாம் தாமிரம், துத்தநாகம், செம்பு, இரும்பு, கோபால்ட், கரி போன்ற அரை டஜன் கனிமங்களின் இருப்புதான் கண்டறியப்பட்டது. சொல்லப்போனால் சமவெளிப் பிரதேசத்துக்கும் கடற்பகுதிக்கும் இடைப்பட்ட அந்த இடத்தில் தங்கம் தவிர்த்த ஏராளமான கனிமவளங்கள் நிறைந்திருந்தன. எதிர்கால நிச்சயத்தன்மையற்ற சூழலில் பணியாற்றவேண்டிய நிர்ப்பந்தம்!

திங்கட்கிழமையன்று மாலை சுரங்கப்பள்ளத்துள் மிகவும் கடினமாயிருந்த ஓரத்தில் வெடி வைத்தோம். பிறகு உள்ளிறங்கிய ஃப்ராங்க் கத்துவது மேலே எனக்குக் கேட்டது. “எனக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. எனக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது.. எனக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது!” மின்னற்பொழுதில் நானும் கயிற்றைப் பிடித்து சுரங்கப்பள்ளத்தின் உள்ளே இறங்கினேன். ஒரு நிமிடம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. ஃப்ராங்கின் கூச்சலுக்கான காரணம் விளங்கியது. வெடியால் தகர்க்கப்பட்டு சிதறிக் கிடந்த மஞ்சள் நிற உலோகக் கட்டிகளும் துகள்களும் மெழுகுவர்த்தியின் மங்கிய ஒளியில் தகதகவென்று மின்னிக்கொண்டிருந்தன.

அனுபவமிக்க சுரங்கத்தொழிலாளியான எனக்கு சட்டென்று ஒரு சந்தேகம் எழுந்தது. ‘கத்துக்குட்டிகளின் தங்கம்’ என்று குறிப்பிடப்படும் ஆர்சனோபைரைட்டாக இருக்குமோ என்ற ஐயத்துடன் ஒரு கட்டியைக் கையிலெடுத்துப் பார்த்தேன். சந்தேகம் உறுதியானது. இரும்பு, உள்ளியம், கந்தகம் கலந்த மஞ்சள் நிற கனிமம் அது. கடினமாகவும் கனமாகவும் சூரிய வெளிச்சத்தில் பித்தளை போன்றதுமான அந்த உலோகம் அனுபவமில்லாத பல புதிய சுரங்கப்பணியாளர்களை ஏமாற்றியிருக்கிறது. பளபளக்கும் கனச்சதுர, முப்பட்டக வடிவங்களிலான அவ்வுலோகக் கட்டிகள், ஃப்ராங்கின் காலடியில் ஒரு பெருங்குவியலாய்க் குவித்துவைக்கப்பட்டிருந்தன. இவ்வளவு அதிக அளவிலான ஆர்சனோபைரைட் உலோகத்தை… வேறெந்த உலோகக் கலப்புமில்லாத தூய நிலையில் இதுவரை நான் கண்டதே இல்லை. மிகச்சரியாக அவ்வுலோகத்தின் இருப்பு ஏராளமாய் இருந்த இடத்தில் வெடிவைத்துப் பிளந்திருக்கிறோம்.

இதை எடுத்துச்சொல்லி விளக்கலாம் என்று நான் ஃப்ராங்க்கைப் பார்த்தேன். அவனிருந்த நிலையைக் கண்டு மவுனித்து அமைதியானேன். அவன் முழந்தாளிட்டு, பசித்த நாய் எலும்புத்துண்டைக் கவ்வுவது போல், பரபரத்தபடி, தனக்குத்தானே பிதற்றிக்கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் வெறியுடனும் வேகவேகமாகவும், தான் அணிந்திருந்த கால்சட்டை மற்றும் மேற்சட்டையின் பாக்கெட்டுகளை அந்த உபயோகமற்ற குப்பைக்கற்களால் நிரப்பிக்கொண்டிருந்தான்.

“இது எல்லாம் என்னுடையது. எனக்கே எனக்கு!” அவன் சொன்னது எனக்குக் கேட்டது. “இனி யாரும் என்னைப் பார்த்து சிரிப்பார்களா என்ன? இவை எல்லாம் என்னுடையது. எல்லாமே என்னுடையது… டன் கணக்கில் தங்கம்..தங்கம்… தங்கம்!”

நான் மெதுவாக அவனுடைய தோளைத் தொட்டேன்.

“இது என்னுடையது” அவன் பயங்கரமாய் என்னை வெறித்தபடி கத்தினான்.

“எல்லாமே என்னுடையது. நான் மட்டும் உன்னுடன் சேர்ந்து வேலை செய்யாதிருந்தால் உன்னால் இந்த தங்கத்தை எந்த ஜென்மத்திலும் கண்டுபிடித்திருக்க முடியாது. நேற்று என்னுடைய அதிர்ஷ்டத்தைப் பற்றி சொல்லும்போது நீ என்னைக் கேலி செய்தாய்.. எனக்குத் தெரியும். இப்போது யார் என்னைப் பார்த்து சிரிக்கப்போகிறார்கள்?”

“சந்தேகமில்லாமல் இவை எல்லாமே உன்னுடையவைதான். தாராளமாக நீயே எடுத்துக்கொள் நண்பனே. ஆனால் இந்தப் பொருள் கிடைத்ததற்காக அளவுகடந்த மகிழ்வில் உணர்ச்சிவசப்படாதே.”

சட்டென்று பலமாய்ச் சிரித்துவிட்டு எழுந்தான். கையில் இருந்த சிலவற்றைக் கீழே போட்டுவிட்டு என்னருகில் வந்து சொன்னான், “இவ்வளவு தங்கத்தையும் ஒரே இடத்தில் பார்க்கவும் எனக்கு தலைகால் புரியவில்லை. திடீரென்று என்னவோ ஆகிவிட்டது. ஆனால் உன்னால் எப்படி இவ்வளவு நிதானமாக இருக்கமுடிகிறது என்று எனக்கு வியப்பாக உள்ளது. எனக்கு இந்தப்பள்ளத்தை விட்டு மேலே சென்று கொஞ்சம் சுத்தமான வெளிக்காற்றை சுவாசித்துவரவேண்டும் போல் உள்ளது.”

சட்டைப்பைகளின் கனத்த பாரம் தாங்காமல் தள்ளாடியபடி கவட்டுநடை நடந்துவந்தான். நான் அவனுக்குக் கை கொடுத்து வாளியில் உட்கார உதவினேன். அவன் வெளிறித் தளர்ந்துபோயிருந்தான். அவனுடைய பார்வையில் தெரிந்த வெறியும், குரூரமும் அவன் இன்னும் என்னை நம்பவில்லை என்று உணர்த்தியது. இப்போது அவனிருக்கும் மனநிலையில் என்னை நம்புவது கடினம் என்று எனக்கும் உறுதியாகத் தோன்றியது. தள்ளாடிக்கொண்டே அவனுடைய கூடாரத்துக்குச் செல்லும் வழியில் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு கட்டியை எடுத்து, தன் உதட்டருகில் வைத்து ஏதோ முணுமுணுத்துவிட்டு அவநம்பிக்கையும் அதீத சந்தேகமுமாக என்மீது தன் பார்வையைப் பதித்தான். 

இருட்டியபிறகு இரவுணவுக்கென்று வெளியே வந்தவன், எதுவும் உண்ணவில்லை. அவனை இந்த இருட்டில் மறுபடியும் சுரங்கப் பள்ளத்துக்குள் போகவேண்டாம் என்று வலியுறுத்திச்சொல்ல சங்கடமாக இருந்தது. கொஞ்சநேரம் அவன் நிலையற்றுத் தவித்தபடியிருந்தான். பிறகு அவனுடைய எதிர்காலம் பற்றியும் இந்தப்பணத்தைக் கொண்டு அவன் என்னென்ன செய்யவிருக்கிறான் என்பதையும் சொல்லி மனக்கோட்டைகள் கட்டிக்கொண்டிருந்தான். அவற்றைக் கேட்கையில் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இப்போதாவது அவனிடம் உண்மையைச் சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவன் கண்களில் இதுவரை என்னிடம் தென்படாத அந்தக் கள்ளப்பார்வையையும் மஞ்சள் உலோகம் நிறைந்த சட்டைப்பையை மார்போடு இறுக்கி அணைத்திருக்கும் நடுங்கும் கரங்களையும் பார்த்த பிறகு, இதைப்பற்றி காலையில் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். தங்கக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டது மட்டுமல்லாது, கூடவே பேராசையும் வஞ்சகமும் நெஞ்சத்தில் புகுந்து அவனை சீரழிவுக்கு இட்டுச் செல்வதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. 

அவன் விரைவாகவே அவனுடைய கூடாரத்துக்குத் திரும்பிவிட்டான். நான் என் கூடாரத்துக்கு வெளியே அணைந்துகொண்டிருக்கும் கணப்பின் அருகில் தனியே அமர்ந்திருந்தேன். பலநாட்களுக்குப் பிறகு முதன்முறையாக என்னுடைய கற்பனாத்திறன் பலமாக விரிந்து என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. இதுபோன்ற மனநிலைகளின் போது இருப்பதைப் போலவே அன்றைய இரவுப் பொழுதும் மிக அமைதியாக நிச்சலனத்துடன் இருந்தது. நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து ஃப்ராங்கின் கூடாரத்தைப் பார்க்கமுடியவில்லை. ஆனால் எனக்குத் தெரியும், அவன் அங்குதான் இருப்பான். தன்னுடைய பொக்கிஷத்தைப் பேரார்வத்துடன் பார்வையிட்டபடி, அந்த போலி தங்கத்தைக் கொண்டு புதிய புதிய திட்டங்களை வகுத்தபடி, பேராசை, வஞ்சகப் பேய்களை உள்ளுக்குள் உலவவிட்டபடி அவன் அங்குதான் அமர்ந்திருப்பான் என்று எனக்குத் தெரியும். விண்ணோக்கி செங்குத்தாய் எழும்பியிருந்த மலைச்சரிவுகளின் இடையிலிருந்த இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்கிலும் அதில் காணுமிடமெங்கும் காட்சியளிக்கும் நசநசப்பான அடர்வனத்திலும் நிலவிய நிசப்தம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்வதற்கான அறிகுறியை எனக்குள் தோற்றுவித்தது.

மலையுச்சிகளுக்கு மேலே ஒளிர்ந்துகொண்டிருந்த தேய்பிறை நிலவின் ஒளியில் நிழல்கள் யாவும் விசித்திரமாகவும் விநோதமாகவும் காட்சியளித்துக் கொண்டிருந்தன. சவ ஊர்வலத்தைப் போல் தோற்றமளித்த பெரணி மரங்களின் நிழல்கள் என்னைப் பார்த்து அர்த்தத்துடன் தலையசைப்பதைப் போன்றிருந்தது. தூரத்தில் தெரிந்த எங்கள் சுரங்கப்பள்ளத்து மண்மேடையும், பளபளக்கும் ஏற்றங்காலும் அருகிலிருந்த குத்துமுட்புதர்களும் நிலவொளியில் சவப்பெட்டியை சில மனிதர்கள் கல்லறைக்குழிக்குள் இறக்குவதைப் போன்றிருந்தது. அந்த இரவுநேரக் காற்றில் கலந்துவந்த அழுகிய இலைதழைகளின் நாற்றம் பிணநாற்றத்தைப் போல் துர்வாடை வீசியது. இப்படியே போனால் நானும் கூடியவிரைவில் என் நண்பனைப் போல மோசமான மனநிலையை அடைந்துவிடுவேன் என்று தோன்ற, நான் எழுந்து கணப்பை அணைத்துவிட்டு உள்ளே சென்றேன். ஃப்ராங்க்கின் பார்வையில் தெரிந்த கபடமும் வெறியும் நினைவுக்கு வந்ததும் மறக்காமல் என்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து என் தலையணைக்கடியில் வைத்துக்கொண்டேன்.

விடியலின் அறிகுறி தெரியவும் கெட்டிலில் தண்ணீரை சூடுபடுத்திவிட்டு ஃப்ராங்கை அழைத்தேன். எப்போதும் அவன்தான் முதலில் எழுவான். அன்று அவனிடமிருந்து பதில் எதுவும் வராமல் போகவே அவனுடைய கூடாரத்தை நோக்கிச் சென்றேன். அவன் அங்கு இல்லை. நான் சுரங்கப் பள்ளத்தை நோக்கி ஓடினேன். மண்மேட்டில் நேற்று நான் வைத்த இடத்திலேயே தோல்வாளி இருந்தது. ஆனால் நீள்சகடையிலிருந்து கயிறு சுரங்கப்பள்ளத்துள் கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு அடி ஆழத்துக்கு விறைப்பாய்த் தொங்கிக்கொண்டிருந்தது. சகடை உருளாமலிருக்கும்பொருட்டு கைப்பிடிக்கு கொடுக்கப்பட்டிருந்த முட்டுக்கட்டை இடத்தை விட்டு பிசகியிருப்பதிலிருந்தே அதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. உள்ளே கூர்ந்து நோக்கி உரத்தக் குரல் கொடுத்தேன். அதிகாலையின் இருள் இன்னும் விலகவில்லை என்பதால் உள்ளே எதையும் என்னால் பார்க்க இயலவில்லை. என் குரல் மட்டும் எதிரொலித்துத் திரும்பி வந்தது. நான் கைப்பிடியை எதிர்த்திசையில் சுழற்றி கயிற்றை மேலே இழுக்க முயன்றேன். முடியவில்லை. அங்குலமும் நகர முடியாதபடிக்கு கனமான எதனோடோ கட்டப்பட்டிருந்தது அது. பாரத்தை மேலே இழுக்க முயன்று தோற்றுக் களைத்துச் சோர்ந்தேன்.

பொழுது நன்றாக விடியும்வரையில் காத்திருக்கலானேன். லேசாக புலர்ந்து மங்கலான வெளிச்சம் பரவிய நிலையில் உள்ளே ஒரு மனிதனின் தோள்கள் கண்ணுக்குப் புலனாயின. ஒருபக்கமாய்  சாய்ந்த நிலையில் நிலைகுத்திய விழிகளுடன் பயங்கரமான கோரமுகம் ஒன்றும் தென்பட்டது. கயிற்றின் நுனியிலிருந்த இரும்புக் கொக்கி அவனது கழுத்தில் ஆழமாய்க் குத்தி வெளிப்பட்டிருந்தது.  

அடப்பாவமே! ஃப்ராங்க்கின் அதிர்ஷ்டம் அளவுகடந்து தன்னை நிரூபித்துக்கொண்டுவிட்டது. எனக்கு அடிக்கடி அந்த புதிரான தீர்க்கதரிசனம் பற்றிய சிந்தனை எழுந்தவாறே இருந்தது. ஒருவேளை மரணம்தான் அவனது அதிர்ஷ்டமா? ஆதாயமற்ற உழைப்பும் கடுமையான இடர்ப்பாடுகளும் நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவது மரணம் மட்டும்தானோ? அந்த முதிய தீர்க்கதரிசி சொன்னது சரிதானோ?

*****
மூலக்கதை (ஆங்கிலம்) – Frank’s Fortune
மூலக்கதையாசிரியர் – John Arthur Barry (1850 - 1911)
தமிழாக்கம் – கீதா மதிவாணன்