4 April 2018

கயிற்று முனையில் அதிர்ஷ்டம்

வணக்கம் வலையுறவுகளே… சுமார் மூன்று மாதகால இடைவெளிக்குப் பிறகு, சிலபல இணையச்சிக்கல்களுக்குப் பிறகு, இப்போதுதான் வலைப்பக்கம் வர முடிந்திருக்கிறது. எழுதவேண்டியவை ஏராளமாய் உள்ளன. ஊருக்குச் சென்றுவந்த உவப்பும் பிரிவும் மாறி மாறி உளம்புகுந்து எதையும் செய்யவிடாமல் அலைக்கழித்தபடியே இருக்கிறது. அடம்பிடிக்கும் மனத்தை வடம்பிடித்து இழுத்துவருவதற்குப் போதுமானவையாய் உள்ளன சில அங்கீகாரங்களும் மகிழ்வுகளும்.  


முதலாவதாக, மெல்பேர்னிலிருந்து வெளியாகும் எதிரொலி பத்திரிகையின் பிப்ரவரி மாத இதழில்.. கயிற்றுமுனையில் அதிர்ஷ்டம் என்ற மொழிபெயர்ப்புச் சிறுகதை வெளியாகியுள்ளது. வாய்ப்பளித்த தம்பி ப.தெய்வீகன் அவர்களுக்கு நன்றி.






கயிற்று முனையில் அதிர்ஷ்டம்

இன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினம். இதோ கண்முன் விரிந்துகிடக்கிறது கடல்! நானும் என்னுடைய கூட்டாளியும் ஒரு மைல் தொலைவிலுள்ள இருளும் புழுக்கமும் நிறைந்த, மூச்சுமுட்டும் பள்ளத்தாக்கிலிருந்து முண்டியடித்து வெளியேறி இங்கு வந்திருக்கிறோம். கடல் மட்டத்துக்கு வெகு உயரத்தில், பருவகால வானிலை மாற்றங்களால் சிதைந்துபோய், மலையுடனான தன் இறுக்கமானப் பிணைப்பை இழக்கும் தருவாயிலிருக்கும் அந்த ஆபத்தான மலையுச்சியை அடைந்திருந்தோம். கிட்டத்தட்ட எழுபது மைல்களுக்கு அப்பால், தொடுவானத்திலிருந்தபடி கதிரவன் தன் பிரம்மாண்டமான கதிர்க்கண்ணால் எங்களை வெறித்துக்கொண்டிருந்தான்.

என்னுடைய கூட்டாளியான ஃப்ராங்க் ஆஸ்திரேலியக் குடியேற்றத்துக்குப் புதியவன். கடினமான கிழக்கு மலைத்தொடர்களில் சுரங்கம் அமைத்து தங்கம் தேட விரும்பிய நான், குறைந்தபட்ச முதலீடு செய்யவும் என்னோடு இணைந்து பணியாற்றவும் கூடிய ஆள் தேடி விளம்பரம் செய்தபோது இவன் விண்ணப்பித்திருந்தான். இருவரும் கூட்டாளிகளானோம். கல்வியில் தேர்ச்சியும், நல்ல தோற்றமும் துடிப்பும் கொண்ட இருபத்து நான்கு வயது இளைஞன் அவன். உடல் உழைப்புக்குப் பழக்கப்படாதவன் என்பதோடு சுரங்கத் தொழில் பற்றியும் ஏதும் அறியாதவன். அவன் தென்னாப்பிரிக்காவின் கேப் பகுதியில் பிறந்து வளர்ந்தவன் என்பதைத் தவிர அவனைப் பற்றிய வேறெந்த முன்கதைச் சுருக்கமும் எனக்குத் தெரியாது, அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. எனினும் அவனுடைய நன்னடத்தையால் என்னைக் கவர்ந்துவிட்டான்.

ஃப்ராங்குக்கு சுரங்கத்தொழில் பற்றி ஓரளவு தெரியவந்து அதில் ஈடுபாடும் ஆர்வமும் வந்துவிட்டபிறகு நாங்கள் இருவரும் கடுமையாகப் பாடுபட்டோம். ஆனாலும் தங்கத்தைக் கண்ணால் பார்க்கும் அதிர்ஷ்டம் இதுவரை எங்களுக்கு வாய்க்கவில்லை. தோண்டும் இடங்களனைத்தும் உதவாக்கரைகளாக இருந்தன அல்லது நாங்கள் தேடும் அந்த அபூர்வ உலோகத்தைத் தவிர வேறு ஏதேதோ கனிமங்கள் கிடைத்தன. கடினமானதும், எரிச்சலும் சலிப்பும் ஊட்டுவதும், விரக்தி உண்டாக்குவதுமான அந்த சுரங்கப் பணியிலிருந்து விடுபட்டு இளைப்பாற இந்த மலையோரம் வீசும் தென்றலும் உப்புவாசம் நிறைந்த கடற்காற்றும் உதவின. உலகின் இன்னொரு பக்கத்தை அளாவுவது கண்ணுக்கு இதமாக இருந்தது.

நாங்கள் புகைபிடித்துக்கொண்டு வெயிலில் கிடந்தபடி பேசிக்கொண்டிருந்தோம். ஃப்ராங்க் வழக்கத்தை விடவும் அதிகமாகப் பேசிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அவனுடைய கழுத்துச் சங்கிலியிலிருந்து ஒரு வெள்ளிப் பதக்கத்தை அவிழ்த்து நெடுநேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன், என்னிடம் காட்டி சொன்னான், “தென்னாப்பிரிக்காவில் எனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண் இவள்தான். என் பொருளாதார நிலைமை மோசமாக இருந்ததால் அதிர்ஷ்டத்தைத் தேடி இங்கு வந்தேன். கூடிய விரைவில் திரும்பிப்போய் அவளைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். இதுவரை அதிர்ஷ்டத்தின் அறிகுறி இல்லைதான். ஆனாலும் எனக்குத் தெரியும், எல்லாம் நம் நேரத்தைப் பொறுத்தது. இங்கு சுரங்கத்தொழிலில் ஈடுபட்டால் எதிர்காலம் சிறப்பாய் அமையும் என்று எனக்கு சோதிடம் சொல்லப்பட்டிருக்கிறது.”

அந்தப் பெண்ணின் முகம் மிகவும் அழகாக இருந்தது. கருங்கூந்தலும் கருவிழிகளும் கொண்டு கூந்தலில் ரோஜா மலர்களைச் சூடி புன்னகையை இதழ்களில் தேக்கியிருந்தாள்.

அவள் எனக்காக காத்திருப்பாள். ஆனால் அதிக நாட்கள் ஆகாது என்று நினைக்கிறேன். என்னுடைய அதிர்ஷ்டம் வந்துகொண்டே இருக்கிறது. முந்நூறு டாலர்களை சம்பாதித்துக் கொண்டுவந்து காட்டினால் போதும், என் மகளை உனக்குத் தருவேன் என்று அவளுடைய அப்பா எனக்கு உறுதியளித்துள்ளார்.” 

எதனால் உன்னுடைய அதிர்ஷ்டத்தைக் குறித்து இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறாய், ஃப்ராங்க்?” நான் கேட்டேன்.

நான் சிறுவனாயிருந்தபோது சுவாசியில் மிகப்பிரபலமான தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார். எங்களைப் போன்ற பழங்குடி இனத்தவர்க்கு மட்டுமல்ல, வெள்ளைக்காரர்களுக்கும் அவர் சோதிடம் கணிப்பார். அவருடைய தீர்க்கதரிசனம் எப்போதும் பலிக்கும். என்னுடைய இருபத்தி நான்காவது வயதில் முற்றிலும் புதியதொரு நாட்டுக்குப் போவேன் என்றும் அங்கு மிகுந்த துயரங்களை அனுபவித்தாலும் கயிற்றின் முனையில் என் அதிர்ஷ்டத்தைக் கண்டடைவேன் என்றும் அவர் சொன்னார்.” 

அவருடைய அந்த வாக்குக்கு பல அர்த்தம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்த மந்திரவாதி இன்னும் தெளிவாக தன் கணிப்பை சொல்லியிருக்கலாம்.” நான் சிரித்தேன்.

இவ்வளவு சொன்னது போதாதென்று நினைக்கிறாயா? இன்னும் வேறென்ன சொல்லியிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? தெளிவாகத்தானே சொல்லியிருக்கிறார். இது ஒரு புதிய நாடு. அவர் கயிறு என்று குறிப்பிட்டது நாம் சுரங்கக்குழிக்குள் இறங்கும் கயிற்றைக் குறிக்காது என்று எப்படி சொல்லமுடியும்? ஆனால்அடுத்த வாரம் எனக்கு இருபத்தைந்து வயது ஆகிவிடுமே. என் நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே என்னுடைய அதிர்ஷ்டத்தை தங்கச்சுரங்கத்தில் தேடுவதுதான் சரி என்றார்கள். அதனால்தான் நான் ஆஸ்திரேலியாவுக்கே வந்தேன்.” அவன் படபடத்தான்.

சரி, சரி.” நான் அவனை அமைதிப்படுத்தினேன். “அந்த மாந்திரீகரின் வார்த்தைகள் புதிர் நிரம்பியதாய் எனக்குத் தோன்றினாலும், உனக்கு அவர் சொன்னபடியே அதிர்ஷ்டம் விரைவிலேயே வாய்க்கும் என்று நம்புவோம்.

ராட்சஸ பெரணிகள் சூழ்ந்த இருண்ட பள்ளத்தாக்கில் உள்ள எங்களுடைய இருப்பிடத்துக்குத் திரும்ப ஆயத்தமானோம். பெரிய பெரிய முட்களுடைய கொடிகளும் மரங்களும் அடர்ந்த புதர் சூழ்ந்த மலையடிவாரத்தை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தோம். கயிற்றின் முனையில் கிடைக்கவிருக்கும் அதிர்ஷ்டம் குறித்த ஃப்ராங்க்கின் உறுதியான நம்பிக்கையைக் குலைக்க விரும்பாமல் விலகியிருந்தேன். என்னுடைய ஆர்வக்கோளாறுகள் பிறருடைய பரிகாசத்துக்கு ஆளான சந்தர்ப்பங்களிலிருந்து, அடுத்தவருடைய எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவேண்டுமென்பதை நான் கற்றிருந்தேன். ஒரு விஷயம், முழு மூடத்தனம் என்று தெரிந்தாலும் கூட அதைக் கண்டு ஒருபோதும் கெக்கலிப்பதில்லை

கடைசியாக நாங்கள் இறக்கிய சுரங்க ஏற்றங்கால் கிட்டத்தட்ட இருபத்தைந்து அடி ஆழத்திற்கு இறக்கப்பட்டிருந்தது. கடினமான படிகப்பாறை என்பதால் உளிகள் கொண்டு பிளந்தும் அங்கும் இங்கும் வெடிவைத்துத் தகர்த்தும்தான் சுரங்கப் பள்ளத்தைத் தோண்ட வேண்டியிருந்தது. இயற்கை சீற்றங்களும், போதுமான கையிருப்பு இல்லாமையும் எங்கள் பணியில் பின்னடைவு ஏற்படுத்தின. இதற்குமேலும் அந்த இடத்தைத் தோண்டிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லையெனத் தோன்றியது. தோண்டுமிடம் எல்லாம் தாமிரம், துத்தநாகம், செம்பு, இரும்பு, கோபால்ட், கரி போன்ற அரை டஜன் கனிமங்களின் இருப்புதான் கண்டறியப்பட்டது. சொல்லப்போனால் சமவெளிப் பிரதேசத்துக்கும் கடற்பகுதிக்கும் இடைப்பட்ட அந்த இடத்தில் தங்கம் தவிர்த்த ஏராளமான கனிமவளங்கள் நிறைந்திருந்தன. எதிர்கால நிச்சயத்தன்மையற்ற சூழலில் பணியாற்றவேண்டிய நிர்ப்பந்தம்!

திங்கட்கிழமையன்று மாலை சுரங்கப்பள்ளத்துள் மிகவும் கடினமாயிருந்த ஓரத்தில் வெடி வைத்தோம். பிறகு உள்ளிறங்கிய ஃப்ராங்க் கத்துவது மேலே எனக்குக் கேட்டது. “எனக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. எனக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது.. எனக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது!” மின்னற்பொழுதில் நானும் கயிற்றைப் பிடித்து சுரங்கப்பள்ளத்தின் உள்ளே இறங்கினேன். ஒரு நிமிடம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. ஃப்ராங்கின் கூச்சலுக்கான காரணம் விளங்கியது. வெடியால் தகர்க்கப்பட்டு சிதறிக் கிடந்த மஞ்சள் நிற உலோகக் கட்டிகளும் துகள்களும் மெழுகுவர்த்தியின் மங்கிய ஒளியில் தகதகவென்று மின்னிக்கொண்டிருந்தன.

அனுபவமிக்க சுரங்கத்தொழிலாளியான எனக்கு சட்டென்று ஒரு சந்தேகம் எழுந்தது. ‘கத்துக்குட்டிகளின் தங்கம்என்று குறிப்பிடப்படும் ஆர்சனோபைரைட்டாக இருக்குமோ என்ற ஐயத்துடன் ஒரு கட்டியைக் கையிலெடுத்துப் பார்த்தேன். சந்தேகம் உறுதியானது. இரும்பு, உள்ளியம், கந்தகம் கலந்த மஞ்சள் நிற கனிமம் அது. கடினமாகவும் கனமாகவும் சூரிய வெளிச்சத்தில் பித்தளை போன்றதுமான அந்த உலோகம் அனுபவமில்லாத பல புதிய சுரங்கப்பணியாளர்களை ஏமாற்றியிருக்கிறது. பளபளக்கும் கனச்சதுர, முப்பட்டக வடிவங்களிலான அவ்வுலோகக் கட்டிகள், ஃப்ராங்கின் காலடியில் ஒரு பெருங்குவியலாய்க் குவித்துவைக்கப்பட்டிருந்தன. இவ்வளவு அதிக அளவிலான ஆர்சனோபைரைட் உலோகத்தைவேறெந்த உலோகக் கலப்புமில்லாத தூய நிலையில் இதுவரை நான் கண்டதே இல்லை. மிகச்சரியாக அவ்வுலோகத்தின் இருப்பு ஏராளமாய் இருந்த இடத்தில் வெடிவைத்துப் பிளந்திருக்கிறோம்.

இதை எடுத்துச்சொல்லி விளக்கலாம் என்று நான் ஃப்ராங்க்கைப் பார்த்தேன். அவனிருந்த நிலையைக் கண்டு மவுனித்து அமைதியானேன். அவன் முழந்தாளிட்டு, பசித்த நாய் எலும்புத்துண்டைக் கவ்வுவது போல், பரபரத்தபடி, தனக்குத்தானே பிதற்றிக்கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் வெறியுடனும் வேகவேகமாகவும், தான் அணிந்திருந்த கால்சட்டை மற்றும் மேற்சட்டையின் பாக்கெட்டுகளை அந்த உபயோகமற்ற குப்பைக்கற்களால் நிரப்பிக்கொண்டிருந்தான்.

இது எல்லாம் என்னுடையது. எனக்கே எனக்கு!” அவன் சொன்னது எனக்குக் கேட்டது. “இனி யாரும் என்னைப் பார்த்து சிரிப்பார்களா என்ன? இவை எல்லாம் என்னுடையது. எல்லாமே என்னுடையதுடன் கணக்கில் தங்கம்..தங்கம்தங்கம்!”

நான் மெதுவாக அவனுடைய தோளைத் தொட்டேன்.

இது என்னுடையதுஅவன் பயங்கரமாய் என்னை வெறித்தபடி கத்தினான்.

எல்லாமே என்னுடையது. நான் மட்டும் உன்னுடன் சேர்ந்து வேலை செய்யாதிருந்தால் உன்னால் இந்த தங்கத்தை எந்த ஜென்மத்திலும் கண்டுபிடித்திருக்க முடியாது. நேற்று என்னுடைய அதிர்ஷ்டத்தைப் பற்றி சொல்லும்போது நீ என்னைக் கேலி செய்தாய்.. எனக்குத் தெரியும். இப்போது யார் என்னைப் பார்த்து சிரிக்கப்போகிறார்கள்?”

சந்தேகமில்லாமல் இவை எல்லாமே உன்னுடையவைதான். தாராளமாக நீயே எடுத்துக்கொள் நண்பனே. ஆனால் இந்தப் பொருள் கிடைத்ததற்காக அளவுகடந்த மகிழ்வில் உணர்ச்சிவசப்படாதே.”

சட்டென்று பலமாய்ச் சிரித்துவிட்டு எழுந்தான். கையில் இருந்த சிலவற்றைக் கீழே போட்டுவிட்டு என்னருகில் வந்து சொன்னான், “இவ்வளவு தங்கத்தையும் ஒரே இடத்தில் பார்க்கவும் எனக்கு தலைகால் புரியவில்லை. திடீரென்று என்னவோ ஆகிவிட்டது. ஆனால் உன்னால் எப்படி இவ்வளவு நிதானமாக இருக்கமுடிகிறது என்று எனக்கு வியப்பாக உள்ளது. எனக்கு இந்தப்பள்ளத்தை விட்டு மேலே சென்று கொஞ்சம் சுத்தமான வெளிக்காற்றை சுவாசித்துவரவேண்டும் போல் உள்ளது.”

சட்டைப்பைகளின் கனத்த பாரம் தாங்காமல் தள்ளாடியபடி கவட்டுநடை நடந்துவந்தான். நான் அவனுக்குக் கை கொடுத்து வாளியில் உட்கார உதவினேன். அவன் வெளிறித் தளர்ந்துபோயிருந்தான். அவனுடைய பார்வையில் தெரிந்த வெறியும், குரூரமும் அவன் இன்னும் என்னை நம்பவில்லை என்று உணர்த்தியது. இப்போது அவனிருக்கும் மனநிலையில் என்னை நம்புவது கடினம் என்று எனக்கும் உறுதியாகத் தோன்றியது. தள்ளாடிக்கொண்டே அவனுடைய கூடாரத்துக்குச் செல்லும் வழியில் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு கட்டியை எடுத்து, தன் உதட்டருகில் வைத்து ஏதோ முணுமுணுத்துவிட்டு அவநம்பிக்கையும் அதீத சந்தேகமுமாக என்மீது தன் பார்வையைப் பதித்தான்

இருட்டியபிறகு இரவுணவுக்கென்று வெளியே வந்தவன், எதுவும் உண்ணவில்லை. அவனை இந்த இருட்டில் மறுபடியும் சுரங்கப் பள்ளத்துக்குள் போகவேண்டாம் என்று வலியுறுத்திச்சொல்ல சங்கடமாக இருந்தது. கொஞ்சநேரம் அவன் நிலையற்றுத் தவித்தபடியிருந்தான். பிறகு அவனுடைய எதிர்காலம் பற்றியும் இந்தப்பணத்தைக் கொண்டு அவன் என்னென்ன செய்யவிருக்கிறான் என்பதையும் சொல்லி மனக்கோட்டைகள் கட்டிக்கொண்டிருந்தான். அவற்றைக் கேட்கையில் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இப்போதாவது அவனிடம் உண்மையைச் சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவன் கண்களில் இதுவரை என்னிடம் தென்படாத அந்தக் கள்ளப்பார்வையையும் மஞ்சள் உலோகம் நிறைந்த சட்டைப்பையை மார்போடு இறுக்கி அணைத்திருக்கும் நடுங்கும் கரங்களையும் பார்த்த பிறகு, இதைப்பற்றி காலையில் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். தங்கக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டது மட்டுமல்லாது, கூடவே பேராசையும் வஞ்சகமும் நெஞ்சத்தில் புகுந்து அவனை சீரழிவுக்கு இட்டுச் செல்வதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது

அவன் விரைவாகவே அவனுடைய கூடாரத்துக்குத் திரும்பிவிட்டான். நான் என் கூடாரத்துக்கு வெளியே அணைந்துகொண்டிருக்கும் கணப்பின் அருகில் தனியே அமர்ந்திருந்தேன். பலநாட்களுக்குப் பிறகு முதன்முறையாக என்னுடைய கற்பனாத்திறன் பலமாக விரிந்து என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. இதுபோன்ற மனநிலைகளின் போது இருப்பதைப் போலவே அன்றைய இரவுப் பொழுதும் மிக அமைதியாக நிச்சலனத்துடன் இருந்தது. நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து ஃப்ராங்கின் கூடாரத்தைப் பார்க்கமுடியவில்லை. ஆனால் எனக்குத் தெரியும், அவன் அங்குதான் இருப்பான். தன்னுடைய பொக்கிஷத்தைப் பேரார்வத்துடன் பார்வையிட்டபடி, அந்த போலி தங்கத்தைக் கொண்டு புதிய புதிய திட்டங்களை வகுத்தபடி, பேராசை, வஞ்சகப் பேய்களை உள்ளுக்குள் உலவவிட்டபடி அவன் அங்குதான் அமர்ந்திருப்பான் என்று எனக்குத் தெரியும். விண்ணோக்கி செங்குத்தாய் எழும்பியிருந்த மலைச்சரிவுகளின் இடையிலிருந்த இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்கிலும் அதில் காணுமிடமெங்கும் காட்சியளிக்கும் நசநசப்பான அடர்வனத்திலும் நிலவிய நிசப்தம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்வதற்கான அறிகுறியை எனக்குள் தோற்றுவித்தது.

மலையுச்சிகளுக்கு மேலே ஒளிர்ந்துகொண்டிருந்த தேய்பிறை நிலவின் ஒளியில் நிழல்கள் யாவும் விசித்திரமாகவும் விநோதமாகவும் காட்சியளித்துக் கொண்டிருந்தன. சவ ஊர்வலத்தைப் போல் தோற்றமளித்த பெரணி மரங்களின் நிழல்கள் என்னைப் பார்த்து அர்த்தத்துடன் தலையசைப்பதைப் போன்றிருந்தது. தூரத்தில் தெரிந்த எங்கள் சுரங்கப்பள்ளத்து மண்மேடையும், பளபளக்கும் ஏற்றங்காலும் அருகிலிருந்த குத்துமுட்புதர்களும் நிலவொளியில் சவப்பெட்டியை சில மனிதர்கள் கல்லறைக்குழிக்குள் இறக்குவதைப் போன்றிருந்தது. அந்த இரவுநேரக் காற்றில் கலந்துவந்த அழுகிய இலைதழைகளின் நாற்றம் பிணநாற்றத்தைப் போல் துர்வாடை வீசியது. இப்படியே போனால் நானும் கூடியவிரைவில் என் நண்பனைப் போல மோசமான மனநிலையை அடைந்துவிடுவேன் என்று தோன்ற, நான் எழுந்து கணப்பை அணைத்துவிட்டு உள்ளே சென்றேன். ஃப்ராங்க்கின் பார்வையில் தெரிந்த கபடமும் வெறியும் நினைவுக்கு வந்ததும் மறக்காமல் என்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து என் தலையணைக்கடியில் வைத்துக்கொண்டேன்.

விடியலின் அறிகுறி தெரியவும் கெட்டிலில் தண்ணீரை சூடுபடுத்திவிட்டு ஃப்ராங்கை அழைத்தேன். எப்போதும் அவன்தான் முதலில் எழுவான். அன்று அவனிடமிருந்து பதில் எதுவும் வராமல் போகவே அவனுடைய கூடாரத்தை நோக்கிச் சென்றேன். அவன் அங்கு இல்லை. நான் சுரங்கப் பள்ளத்தை நோக்கி ஓடினேன். மண்மேட்டில் நேற்று நான் வைத்த இடத்திலேயே தோல்வாளி இருந்தது. ஆனால் நீள்சகடையிலிருந்து கயிறு சுரங்கப்பள்ளத்துள் கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு அடி ஆழத்துக்கு விறைப்பாய்த் தொங்கிக்கொண்டிருந்தது. சகடை உருளாமலிருக்கும்பொருட்டு கைப்பிடிக்கு கொடுக்கப்பட்டிருந்த முட்டுக்கட்டை இடத்தை விட்டு பிசகியிருப்பதிலிருந்தே அதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. உள்ளே கூர்ந்து நோக்கி உரத்தக் குரல் கொடுத்தேன். அதிகாலையின் இருள் இன்னும் விலகவில்லை என்பதால் உள்ளே எதையும் என்னால் பார்க்க இயலவில்லை. என் குரல் மட்டும் எதிரொலித்துத் திரும்பி வந்தது. நான் கைப்பிடியை எதிர்த்திசையில் சுழற்றி கயிற்றை மேலே இழுக்க முயன்றேன். முடியவில்லை. அங்குலமும் நகர முடியாதபடிக்கு கனமான எதனோடோ கட்டப்பட்டிருந்தது அது. பாரத்தை மேலே இழுக்க முயன்று தோற்றுக் களைத்துச் சோர்ந்தேன்.

பொழுது நன்றாக விடியும்வரையில் காத்திருக்கலானேன். லேசாக புலர்ந்து மங்கலான வெளிச்சம் பரவிய நிலையில் உள்ளே ஒரு மனிதனின் தோள்கள் கண்ணுக்குப் புலனாயின. ஒருபக்கமாய்  சாய்ந்த நிலையில் நிலைகுத்திய விழிகளுடன் பயங்கரமான கோரமுகம் ஒன்றும் தென்பட்டது. கயிற்றின் நுனியிலிருந்த இரும்புக் கொக்கி அவனது கழுத்தில் ஆழமாய்க் குத்தி வெளிப்பட்டிருந்தது.  

அடப்பாவமே! ஃப்ராங்க்கின் அதிர்ஷ்டம் அளவுகடந்து தன்னை நிரூபித்துக்கொண்டுவிட்டது. எனக்கு அடிக்கடி அந்த புதிரான தீர்க்கதரிசனம் பற்றிய சிந்தனை எழுந்தவாறே இருந்தது. ஒருவேளை மரணம்தான் அவனது அதிர்ஷ்டமா? ஆதாயமற்ற உழைப்பும் கடுமையான இடர்ப்பாடுகளும் நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவது மரணம் மட்டும்தானோ? அந்த முதிய தீர்க்கதரிசி சொன்னது சரிதானோ?

*****
மூலக்கதை (ஆங்கிலம்) – Frank’s Fortune
மூலக்கதையாசிரியர் – John Arthur Barry (1850 - 1911)
தமிழாக்கம்கீதா மதிவாணன்



20 comments:

  1. சிறந்த கதை தேர்வு. அழகான மொழியாக்கம்

    வாழ்த்துகள் கீதாக்கா

    ReplyDelete
    Replies
    1. கதையை வாசித்துக் கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி ராஜி.

      Delete
  2. //என்னுடைய ஆர்வக்கோளாறுகள் பிறருடைய பரிகாசத்துக்கு ஆளான சந்தர்ப்பங்களிலிருந்து, அடுத்தவருடைய எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவேண்டுமென்பதை நான் கற்றிருந்தேன்//

    //தங்கக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டது மட்டுமல்லாது, கூடவே பேராசையும் வஞ்சகமும் நெஞ்சத்தில் புகுந்து அவனை சீரழிவுக்கு இட்டுச் செல்வதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.//

    ஒரு சிறுகதையில் எத்தனை உயர்ந்த படிப்பினைகள்.
    ஃப்ராங்க்கின் மேல் அனுதாப உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
    வசீகரிக்கும் மொழியாக்கம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்த வரிகளை மேற்கோள் காட்டிக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  4. பேராசை உயிர் நஷ்டம்! தோழனைக் கொலை செய்யத் துணிவான் ஃபிராங்க் என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. முதன்முறை வாசித்தபோது எனக்கும் அவ்வெண்ணம்தான் தோன்றியது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  5. வாழ்த்துகள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா.

      Delete
  6. கயிற்றின் முனையில் என் அதிர்ஷ்டத்தைக் கண்டடைவேன் என்றும் அவர் சொன்னார்.” //

    தீர்க்கதரிசி சொன்னது சரியாகி விட்டதே!


    கயிற்றின் நுனியிலிருந்த இரும்புக் கொக்கி அவனது கழுத்தில் ஆழமாய்க் குத்தி வெளிப்பட்டிருந்தது.

    பேராசை உயிரை போக்கி விட்ட்தே!

    நல்ல கதையை மொழியக்கம் செய்து தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். பேராசையாலும் நண்பன் மீதான அவநம்பிக்கையாலும் தன் உயிரைத் தானே பலியாக்கிக் கொண்டான் ஃப்ராங்க். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  7. அருமையான கதை சகோதரி/கீதா நல்ல மொழியாக்கம். பேராசை ஃப்ராங்கின் உயிரையே பலிவாங்கிவிட்டதே. முதலில் ஃப்ராங்க் நண்பனைக் கொன்றுவிடுவானோ என்று தோன்றியது.

    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நண்பன்தானே இங்கு கதைசொல்லி. அதனால் அவன் உயிருக்கு ஆபத்து வராது என்று தெரியும். ஆனால் நண்பனைக் கொல்லும் முயற்சியில் ஃப்ராங்க் ஈடுபடுவான் என்று கணிக்கத் தோன்றியது உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா & துளசி சார்.

      Delete
  8. கயிற்று முனையில் காத்திருந்த அதிர்ஷ்டம் சற்றும் எதிர்பாராதது. அருமையான கதையை அழகான தமிழாக்கத்தில் எங்களுக்கும் அறிமுகம் செய்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும், கீதா.

    ReplyDelete
    Replies
    1. Frank's fortune என்பதுதான் மூலக்கதையின் பெயர் என்றாலும் ஒரு சுவாரசியத்துக்காக கயிற்றுமுனையில் அதிர்ஷ்டம் என்று பெயர் தந்தேன். கதையை ரசித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  9. very nice story nice translate thankyou geetha

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீரா.

      Delete
  10. அருமையான கதை, அழகான மொழிபெயர்ப்பில்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கதையை வாசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.