பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்த நூல்கள் |
விழா
நிகழ்வதற்கேற்ற
அரங்கு ஏற்பாடு, அழைப்பிதழ், பேனர் அச்சடிப்பு, இலக்கிய ஆர்வலர்களை நேரில் சென்று அழைத்தல், இதற்கு இன்னாரென்று தலைமை
ஏற்க, திறனாய்வு செய்ய, வாழ்த்துரை வழங்க, நிகழ்ச்சியைத் தொகுத்து சிறப்பிக்க, நூல் வெளியிட, முதற்பிரதி பெற எனப் பொருத்தமான தகைமைகளைத் தெரிவு செய்தது, பொன்னாடைகள் மற்றும் நினைவுப்பரிசுகளுக்கான ஏற்பாடு, விழாவுக்கு வருகைதரும் அனைவருக்கும் இரவுணவு, இயலாதோர்க்கு வாகன ஏற்பாடு என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்ததெல்லாம் புதிய வேர்கள் நூலாசிரியர் திருமதி ஞா.கலையரசி அவர்களே. அவரை என் கணவரின் தமக்கை என்பதை விடவும் என் நலம்விரும்பி, நல்லதொரு நட்பு, இலக்கியத்தோழமை என்று அறிமுகப்படுத்துவதில்தான் எனக்கு விருப்பம்.
விழா துவங்குவதற்கு சற்று
முன்னதாக நட்பார்ந்த முறையில் எனக்கும் கலையரசி அக்காவுக்கும் பிரபஞ்சன் சிறுகதைகள்
தொகுப்புகளை கவிஞர் உமா மோகன் அவர்கள் தம்பதி சமேதரராக வழங்கி வாழ்த்தினார். புதுவையின்
தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே துவங்கியது. பாரதிதாசனின்
எழுச்சிமிக்க வரிகளாலான தமிழ்த்தாய்
வாழ்த்தை நான் கேட்பது அதுவே முதல்முறை. என் கணவரின் மற்றொரு தமக்கை திருமதி ஞா.குமுதம்
அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்வை மிக அழகாகவும் சுவையாகவும் தொகுத்து வழங்கினார்
கவிஞர் உமா மோகன் அவர்கள். இருவாரங்களாக உடல்நிலை சரியில்லாதபோதும் இவ்விழாவை தம் இல்ல
விழாவாகவே ஏற்றுப் பெருமை சேர்த்தார். மீண்டும் என் குழந்தைக்கு சீராட்டு என்ற பதிவில்
நான்கு வயதாகியும் இன்னும் என் புத்தகக் குழந்தை எழுந்து நடக்காமல் இடுப்பிலேறிக் கொண்டிருக்கிறது
என்ற என் ஆதங்கத்தைப் பற்றிச் சொல்லிய தோழி உமா மோகன் உங்கள் குழந்தை மட்டுமல்ல.. எங்கள்
புத்தகக் குழந்தைகளும் அப்படிதான் என்றார். அரங்கம் அதை ரசித்து ஆமோதித்தது.
தொடர்ந்து விழாவின்
மைய நிகழ்வான நூல் வெளியீடு நடைபெற்றது. திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதிய வேர்கள்’
சிறுகதைத் தொகுப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் திரு.சோ.கோவிந்தராஜ் அவர்கள் வெளியிட, கோ பதிப்பகத்தின் உரிமையாளர் திருமதி மு.வி. நந்தினி அவர்கள் முன்னிலையில்
பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் சங்க உதவிப் பொதுச்செயலாளர் திரு. எஸ். முரளிதரன்
அவர்கள் முதற்பிரதி பெற்றுக்கொண்டார்.
என்னுடைய ‘என்றாவது
ஒரு நாள்’ நூலை கவிஞரும் தோழியுமான கவிஞர் உமா மோகன் அவர்கள் வெளியிட, பன்முகமேடை இலக்கிய மேடையின் நிறுவனர் தேனி திரு. விசாகன் அவர்கள் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார். முதல்நாள் தேனியில் பெரியதொரு இலக்கிய விழாவை நடத்தி முடித்திருந்தார். சூழ்நிலை காரணமாக நாங்கள் அதில் பங்கேற்றிராதபோதும் துளியும் மனக்கிலேசமில்லாது பலமணி நேரம் பயணித்துவந்து இந்நிகழ்வில் பங்கேற்ற அவரது பெருந்தன்மை போற்றுதற்குரியது.
புதிய வேர்கள்
நூலைப் பெற்றுக்கொண்ட கையோடு திரு.எஸ் முரளிதரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இதுவே
தன்னுடைய முதல் இலக்கியக்கூட்டம் என்றார். இந்த மேடையில் தான் கட்டாயம் பேசவேண்டும்
என்று நேரத்தைக் கேட்டு வாங்கியதைச் சொல்லி உரையைத் துவக்கினார். திருமதி ஞா.
கலையரசி அவர்களை அவருடைய செறிவான ஆங்கிலப் புலமைக்காகவும் தேர்ந்த நிர்வாகத்திறனுக்காகவும். நேர மேலாண்மைக்காகவும் மேடையில் மனமாரப் பாராட்டினார். திருமதி கலையரசி அவர்களுடைய பணி அழுத்தம், கணவரின் உடல்நலப் பிரச்சனைகள், குடும்பச்சுமை, இதர கடமைகள் என எல்லாவற்றையும் தாண்டி அவருக்கு எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று வியந்தார். தனக்குக் கீழே பணிபுரிந்துகொண்டிருக்கும் ஒரு ஊழியரை அரங்கில் பலர்முன் பாராட்டவும் ஒரு திறந்த மனம் வேண்டும் அல்லவா?
அடுத்து திறனாய்வு
நேரம். ஒரு நூலின் திறனாய்வு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான உதாரணமாக அமைந்தது புதிய
வேர்கள் குறித்துப் பேசிய முனைவர் க. பஞ்சாங்கம் அவர்களுடைய திறனாய்வுரை. நூல் வெளியீட்டு
விழாக்களின் அவசியம் பற்றி சொன்னார். பெண்கள் எழுத்துவெளியில், இதழியலில், ஊடகவியலில் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு
வரவேண்டுமென்றார். பெண்களுக்கானக் கட்டுப்பாடுகள் இன்னும் முழுவதுமாக விலகவில்லை என்றும் சமூகமோ, அரசியலோ குடும்ப விவகாரமோ, காதலோ காமமோ எதை
எடுத்தாலும் ஆண் தன் வாசகர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதிவிட முடிகிறது. அதே
விஷயத்தைப் பெண் எழுதும்போது அவளுக்கு குடும்பத்திலும் சுற்றத்திலும் சமூகத்திலும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து சிந்தித்து அதற்கேற்றாற்போல படைப்புகளில் சுய கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதன் நிர்ப்பந்தம் பற்றிப் பேசினார்.
புதிய வேர்கள் சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினெட்டு கதைகளையும் பற்றி மிகச் சுவையாகவும் ஆழமான ரசனையோடும் விவரித்தார். திருமதி கலையரசி அவர்களுடைய எழுத்துநடை
தமிழ்ப்பேராசிரியர்களுக்குக்கூட கைவராத சரளமான நடை என்றார். நிகழ்வுகளை சித்தரிக்கும்
விதம், கதையின் நுட்பமான
விஷயங்கள் என பலவற்றையும் பாராட்டினார். மனித உணர்வுகளை
ஆட்டிப்படைக்கும் எட்டுவகை உணர்வுகளையும் எழுத்தால் ஒழுங்குபடுத்தும் திறமையே எழுத்தாளர்களின்
அடிப்படைத் திறமை என்று கூறிய அவர், அந்த எண்வகை உணர்வுகளின் அடிப்படையில் இந்நூலின்
ஒவ்வொரு கதையையும் வகைப்படுத்தி அழகாய் விமர்சித்தார். புதிய வேர்கள் என்கிற சிறுகதை
பற்றி சொல்லும்போது அக்கதையின் நாயகி திருமணமாகிப் புகுந்த வீட்டுக்கு சென்றபின் தன் பிறந்த
வீட்டைப் பிரிந்து வருந்தும் தருணத்தில் ஆணான தன் கண்களிலும் நீர் துளிர்த்தது என்றார். அந்த அளவுக்கு கதாசிரியர் அந்தப் பாத்திரப்படைப்புக்கும் அது சார்ந்த சம்பவங்களுக்கும் நியாயம் வழங்கியுள்ளார் என்றார்.
என்றாவது
ஒரு நாள் குறித்து முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் பேசினார். பிரெஞ்சிலிருந்து
தமிழுக்கும் தமிழிலிலிருந்து பிரெஞ்சுக்கும் பல மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ள அவரது
திறனாய்வு என்னைப் பொறுத்தவரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திறனாய்வுக்காக
அவரைத் தெரிவுசெய்த கலையரசி அக்காவுக்கு இவ்வேளையில் என் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
மொழிபெயர்ப்புப் படைப்புகளின் அவசியத்தையும் சிக்கல்களையும் எடுத்துரைத்தார். மொழிபெயர்ப்பை
Thankless job என்பார்கள். இதென்ன பெரிய விஷயமா என்பவர்களிடம் பத்து வரிகளைக் கொடுத்து
மொழிபெயர்க்கச் சொன்னால் போதும், முழிபெயர்ந்துவிடும் என்று நகைச்சுவையோடு மொழிபெயர்ப்பிலுள்ள
சவால்களை விளக்கினார். மொழிபெயர்ப்பவன் மூல ஆசிரியருக்கு விசுவாசமாக இருக்கும் அதே
சமயம், வாசகர்களிடம் பரிவோடும் இருக்கவேண்டும். அந்த அளவுக்கு மொழிபெயர்ப்பு எளிமையாக
இருக்கவேண்டும் என்றார். மொழிவளம் மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்தே பெருகுகிறது என்றார். நூலில் நான் பயன்படுத்தியிருந்த தனியள், போதையூக்கி,
கேளிக்கையூட்டி, கணப்படுப்பு போன்ற வார்த்தைப் பிரயோகங்களை சிலாகித்தார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக மொத்தமிருந்த 22 கதைகளுள்
மந்தையோட்டியின் மனைவி மற்றும் பிரம்மியின் நண்பன் ஆகிய இரு கதைகளை எடுத்துக்கொண்டு
திறனாய்வினை முன்வைத்தார். பிரம்மியின் நண்பன் கதையின் மூலம் தனிமையின்
வேதனைகளையும் அதனால் உண்டாகும் மன உளைச்சல்களையும் தனிமைப்படுத்தப்பட்ட மனிதனின்
செயல்பாடுகளையும் பற்றிச் சொல்லி, வாழ்வில் தனிமை கண்ட ஒருவன் சாவில் தனிமை காணத் துணியாது தனக்குத்தானே மலர்வளையம் ஏற்பாடு செய்யும்
பிரெஞ்சுக் கதையொன்றை ஒப்பிட்டுப் பேசினார். மந்தையோட்டியின்
மனைவி கதையில் பாம்பை தான் ஒரு குறியீடாகப் பார்ப்பதாகச் சொன்னார். வாழ்வின் பிரச்சனைகளை
ஒரு பெண் தனியளாய் நான்கு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் எதிர்கொள்ளும் அக்கதை தன்னைப்
பெரிதும் கவர்ந்தது என்றார்.
ஹென்றி லாஸனின் கதைகள் யாவுமே எதிர்கால நம்பிக்கையூட்டும் வண்ணம் எழுதப்பட்டவை.
எதிலுமே அவநம்பிக்கையோ சோர்வோ காணவில்லை என்றார். ஹென்றி லாஸனின் வாழ்க்கை வரலாறு எந்த
அளவுக்கு அவரைப் பாதித்திருக்கிறது என்பதை அவருடைய நெடிய வரிகளிலிருந்தே உணரமுடிந்தது.
அந்த பாதிப்புதானே என்னை அவர் கதைகளை மொழிபெயர்க்கவே தூண்டியது.
திறனாய்வுகள் வழங்கப்பட்ட கையோடு முனைவர் பஞ்சாங்கம் அவர்களுடைய
எழுபதாவது பிறந்தநாள் விழா சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு மேடையிலேயே
கொண்டாடப்பட்டது. தொடர்ந்து விழாவை சிறப்பித்த ஆளுமைகளுக்கு நினைவுப்பரிசுகள்
வழங்கப்பட்டன.
முந்தைய ஏற்பாட்டின்படி நிகழ்வுக்குத் தலைமை
ஏற்றிருக்கவேண்டிய பேராசிரியர் மா.லெ. தங்கப்பா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சையிலிருந்த காரணத்தால் வரவியலாத சூழ்நிலை. எனவே எங்கள் இல்லத்தலைமை சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்களையே நிகழ்வுக்கும் தலைமையேற்குமாறு வேண்டிக்கொண்டோம். அவர் ஒப்புக்கொண்டதில்
எங்களுக்கு மகிழ்வும் பெருமையும். அவர் பேசுகையில் பெண்கள் சுதந்திரம் என்பது இன்னும் பேச்சளவில் மட்டுமே உள்ளது என்றும் இன்னும் பெண்கள் முயன்று வெளியில் வரவேண்டும் என்றும் பேசினார். தமிழன் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர் தற்போது அது போல பெண்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது ஏற்கவியலாத ஒன்று என்றார்.
கோ பதிப்பக உரிமையாளர்
திருமதி மு.வி.நந்தினி அவர்கள் தமது உரையில் தன் நோக்கம் மிகச்சரியான பாதையில்தான்
சென்று கொண்டிருக்கிறது என்று கூறி அகமகிழ்ந்தார். கலையரசி மேடம் என் தாய் போல என்று
நெகிழ்வோடு கூறிய அவர், பல இக்கட்டான சமயங்களில் அவருடைய நம்பிக்கை தரும் சொற்கள் ஆதரவாகவும்
உறுதுணையாகவும் இருந்தன என்றார். என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில் நல்ல புகைப்பட ஆர்வலர்
என்றார். ஆஸ்திரேலியாவின் உயிரினங்கள் பற்றிய பதிவுகளை வெகுவாகப் பாராட்டினார்.
திட்டமிட்ட நேரம்
தாண்டிப்போனக் காரணத்தால் எங்கள் ஏற்புரைகளை சுருக்கமாகவே வழங்கினோம். கலையரசி அக்கா
புதிய வேர்கள் நூல் உருவாகப் பெரும் உத்வேகமளித்த குடும்பத்தார்க்கும் ஆரம்பகால எழுத்துகளை
ஊக்குவித்த தமிழ்மன்ற நட்புகளுக்கும் நன்றி பாராட்டினார். சமூக சிந்தனையுடனும் துணிவுடனும்
தம் கருத்துகளை முன்வைக்கும் காத்திரமான இளைய தலைமுறையான மு.வி.நந்தினியின் பதிப்பகம்
வாயிலாக தன் முதல் நூல் வெளியிடப்படுவதற்கான காரணத்தை விளக்கினார். இந்நூலுக்கு லே
அவுட் செய்த நண்பர் தேனி விசாகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்லி உரையை முடித்தார்.
என் ஏற்புரையில் என்னுடைய எழுத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட கலையரசி அக்காவுக்கு என் நன்றியைச் சொல்லி உரையைத் துவக்கினேன்.
ஹென்றிலாஸனின் எழுத்துகளை மொழிபெயர்க்கத் தூண்டிய சூழல் குறித்துப் பகிர்ந்தேன். எந்தக்
கவலையுமற்று, எவ்விதப்
பொறுப்புமற்று, விழா
ஏற்பாடு குறித்த எந்தப் பதற்றமுமின்றி ஜோராக மாப்பிள்ளை கணக்காகத்தான் நான் அன்று
அரங்கிலிருக்கிறேன் என்றேன். அன்றைய நாளை வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக்கித் தந்த அனைவருக்கும்
நன்றி கூறி உரையை முடித்தேன்.
சக்கும்மாவும் எங்க அம்மாவும் |
தமிழ்மன்ற உறவுகளோடு... |
நிகழ்வுக்கு புதுவையின் பல இலக்கிய ஆளுமைகளும் ஆர்வலர்களும்
பங்கேற்று சிறப்பித்தனர். நானும் கலையரசி அக்காவும் எழுதப் பழகியது தமிழ்மன்றம்
என்னும் இணையதளத்தில்தான். எங்கள் எழுத்துகளை சீராக்கி செம்மைப்படுத்திய ஏராளமான
எழுத்தாளுமைகளால்தான் இன்று ஒரு நூலை வெளியிடும் அளவுக்கு எங்களுள்
தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகியிருக்கிறது. தமிழ்மன்றத்தின் சார்பாக
கிருஷ்ணகிரியிலிருந்து சிவாஜி அண்ணாவும் புதுவையைச் சேர்ந்த
மன்றத்தின் மூத்த உறுப்பினர் திரு.பூ அவர்களும் பங்கேற்று சிறப்பித்தது எங்களுக்கு
மிகப்பெரிய பெருமை. ஃபேஸ்புக்கில் அறிமுகமான அன்புத்தோழமை சக்கும்மா எனப்படும் திருமதி
சகுந்தலா கேசவன் அவர்கள் என் அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்தது மகிழ்வளித்தது.
நிகழ்வின் இறுதியாக
கணவரின் அண்ணன் திரு.ஞா.மனோகரன் அவர்கள் நன்றியுரை வாசித்தார். நாட்டுப்பண் இசைக்கப்பட்டு
விழா இனிதே நிறைவுற்றது. அரங்கம் அமைந்திருந்த ஹோட்டல் ராம் இன்டர்நேஷனலிலேயே வந்திருந்த அனைவருக்கும் இரவுணவுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவையான உணவுக்குப் பின் அன்றைய நிகழ்வை சுவையாக அசைபோட்டபடி இல்லந்திரும்பினோம்
யாவரும்.
படங்கள் மற்றும் காணொளி எடுத்துதவியவர் புதுவை இளவேனில் அவர்கள். விரைவில் காணொளியை youtube-ல் ஏற்றிவிட்டு இணைப்பினை இங்கே சேர்க்கிறேன்.
வாழ்த்துகள் சகோதரியாரே
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteமிகவும் மகிழ்ச்சி சகோதரி... மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
ReplyDeleteமிகவும் நன்றி தனபாலன்.
Deleteவிழா சிறப்பாக நடைபெற்றிருக்கின்றது. மிக்க மகிழ்ச்சி கீதா. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் நன்றி ப்ரியா.
Deleteவாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
ReplyDeleteவிழாவை அழகாய் தொகுத்து வழங்கி விட்டீர்கள்.
நேரில் பார்த்தமாதிரி இருக்கிறது.
படங்கள் அருமை.
மிகவும் நன்றி கோமதி மேடம்.
Delete